search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Video viral"

    • வண்டியை நான் எடுத்துச் செல்லாவிட்டால், என் வேலை போய்விடும் என்று அந்த ஊழியர் பேசும் குரலும் பதிவாகி உள்ளது.
    • வலைத்தளவாசிகள் இந்த வீடியோவை சிரித்தபடி ரசித்து செல்கிறார்கள்.

    நிதி நிறுவன ஊழியர்களிடம் இருந்து டிராக்டரை காப்பாற்ற போலியாக சாமியாடும் பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

    ஒரு ஏழை விவசாய குடும்பத்தினர், கடனாக டிராக்டர் வாங்கியதாக தெரிகிறது. கடன் தொகையை சரிவர கட்டாததால் நிதி நிறுவன ஊழியர்கள் சிலர் டிராக்டரை எடுத்துச் செல்ல வந்துள்ளனர். இதை அறிந்த விவசாயி குடும்பத்து இளம்பெண் திடீரென சாமி வந்ததுபோல ஆடத் தொடங்கினார். அவர் கைகளில் குங்குமத்தை பூசிக் கொண்டு, நிதி நிறுவன ஊழியர்களை நோக்கி, வண்டியை எடுக்காதே, எடுத்தால் மோசமான விளைவுகளை சந்திப்பாய் என்று சாபமிட்டாள்.

    வண்டியை நான் எடுத்துச் செல்லாவிட்டால், என் வேலை போய்விடும் என்று அந்த ஊழியர் பேசும் குரலும் பதிவாகி உள்ளது. வலைத்தளவாசிகள் இந்த வீடியோவை சிரித்தபடி ரசித்து செல்கிறார்கள். இதுவரை 43 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இதை ரசித்துள்ளனர்.

    • பொதுமக்கள் சிலர் கடை உரிமையாளரையும், அங்கு வேலை பார்ப்பவர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
    • கடையில் இருந்த சுமார் ஒரு லிட்டர் சிறுநீரையும் பறிமுதல் செய்தனர்.

    உத்தரபிரதேச மாநிலம் காசியாத் இந்திரபுரி பகுதியில் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட ஜூஸில் சிறுநீர் கலந்து வழங்கப்பட்டது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    கடந்த வியாழக்கிழமை அன்று வாடிக்கையாளர் ஒருவருக்கு ஜூஸ் வழங்கப்பட்டுள்ளது. அதன் சுவை வேறுவிதமாக இருந்ததால் வாடிக்கையாளர் விசாரித்துள்ளார். அப்போதுதான், ஜூஸில் சிறுநீர் கலந்து கொடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனை அறிந்த அங்கிருந்த பொதுமக்கள் சிலர் கடை உரிமையாளரையும், அங்கு வேலை பார்ப்பவர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கடை உரிமையாளர் மற்றும் ஊழியர் இருவரையும் கைது செய்தனர். மேலும் கடையில் இருந்த சுமார் ஒரு லிட்டர் சிறுநீரையும் பறிமுதல் செய்தனர்.

    • ஆட்டோவில் அமர்ந்திருந்த 20 வயதுடைய நபர் ஆபாசமான வார்த்தைகளால் திட்டத் தொடங்கினார்.
    • குற்றவாளிக்கு அதிகபட்ச சட்ட தண்டனைகளை வழங்க வேண்டும் என்று பலரும் தெரிவித்துள்ளனர்.

    பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் சமூக வலைத்தளமான ரெட்டிட்டில் வெளியிட்டுள்ள வீடியோ பயனர்களின் கடும் கோபத்தையும், சமூக கவலையும் ஏற்படுத்தியுள்ளது.

    கத்ரிகுப்பே சாலையில் காரில் அப்பெண்ணும், தாயாரும் சென்றுக் கொண்டிருந்த போது ஒரு ஆட்டோ திடீரென இடமிருந்து வலமாகச் சென்றதால் மற்ற வாகனங்கள் மீது மோதாமல் தவிர்க்கப்பட்டது. ஆட்டோ குறுக்கே வந்தது குறித்து கேட்ட போது, ஆட்டோ ஓட்டுநர் அமைதியாக இருக்க ஆனால் ஆட்டோவில் அமர்ந்திருந்த 20 வயதுடைய நபர் ஆபாசமான வார்த்தைகளால் திட்டத் தொடங்கினார்.

    மேலும் கொலை மற்றும் கற்பழிப்பு மிரட்டல் விடுத்து, அருகில் இருந்தவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அந்த நபர் பெண்ணின் கார் கண்ணாடியை உடைத்து, கதவை வலுக்கட்டாயமாக திறக்க முயன்றுள்ளார். சம்பவம் நடந்து கொண்டிருக்கும் போதே அப்பெண் தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார். அதனால் வீடியோ வெளிவந்தால் பெண்ணையும், முழு குடும்பத்தையும் கற்பழித்த பிறகு கொலை செய்து விடுவதாக அந்த வாலிபர் மிரட்டியுள்ளார்.

    அந்த பெண் தனது காருக்குள் இருந்து மோதலை பதிவு செய்து, சம்பவத்தின் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, பெங்களூரு போலீசார் ஆட்டோ டிரைவரை கவனக்குறைவாக ஓட்டி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியதற்காக கைது செய்தனர். ஆனால் மிரட்டல் விடுத்த நபரை இதுவரை கைது செய்யவில்லை.

    இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், பயனர்கள் பலரின் சமூக கவலையையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிக்கு அதிகபட்ச சட்ட தண்டனைகளை வழங்க வேண்டும் என்று பலரும் தெரிவித்துள்ளனர்.

    • வலைத்தளவாசிகள் இது நடிப்பு என ரசித்துப் பார்த்ததுடன், வேடிக்கையான கருத்துகளை பதிவிட்டனர்.
    • வீடியோவை 3 நாட்களில் 4.5 கோடி பேர் பார்வையிட்டு உள்ளனர்.

    ரோபோ நாய் ஒன்று சோதனை முயற்சியின்போது பிரபல யூடியூபரை நெருப்புத் துப்பாக்கியால் சுட்ட காட்சி வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. 'ஸ்பீடு' என்று அறியப்படும் பிரபல அமெரிக்க யூடியூபர் (அவரது உண்மையான பெயர் டாரன் ஜாசன்), சமீபத்தில் 1 லட்சம் டாலருக்கு (ரூ.84 லட்சம்) ஒரு ரோபோ நாய்க்குட்டியை வாங்கினார். அதை நேரடியாக ஆன்லைன் வீடியோவில் பரிசோதித்துப் பார்த்தார்.

    முதலில் ரோபோ நாய்க்கு அவர் கைகொடுக்கிறார், நாயும் முன்னங்காலை தூக்கி கைகொடுத்தது. பின்னர் அவர் பின்னோக்கி பல்டி அடிக்கிறார். நாயும் துள்ளிக்குதித்தது.

    பிறகு ரோபோ நாயில் இணைக்கப்பட்டு உள்ள துப்பாக்கி பொத்தானை ஆன் செய்துவிட்டு, குரைக்கும்படி கட்டளையிட்டார். ஆனால் ரோபோ நாய் எதிர்பாராதவிதமாக, துப்பாக்கியை இயக்கி எஜமானரை எதிரியாக நினைத்து சுடத் தொடங்கியது. துப்பாக்கியில் இருந்து நெருப்பு பிழம்பு வெளியேறி யூடியூபரை தாக்கியது.

    இதை எதிர்பாராத அவர் அருகில் இருந்த நீச்சல் குளத்தில் குதித்தார். அப்போதும் ரோபோ நாய் அவரை நோக்கி தொடர்ந்து சுட்டுக் கொண்டிருந்தது. ஒருவழியாக அதன் பார்வையில் இருந்து தப்பி, பின்புறமாக வந்து அதன் துப்பாக்கி பொத்தானை நிறுத்தியபிறகுதான் ரோபோநாய் சுடுவதை நிறுத்தியது.

    அதிர்ஷ்டவசமாக அவர் காயம் அடையாமல் தப்பினார். நேரலையாக வெளியான இந்த வீடியோ அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. வலைத்தளவாசிகள் இது நடிப்பு என ரசித்துப் பார்த்ததுடன், வேடிக்கையான கருத்துகளை பதிவிட்டனர். வீடியோவை 3 நாட்களில் 4.5 கோடி பேர் பார்வையிட்டு உள்ளனர்.


    • மதுரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவின்பேரில் கொட்டாம்பட்டி வட்டார கல்வி அதிகாரி மற்றும் தொடக்கக்கல்வி அதிகாரி உள்ளிட்டோர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
    • தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் பட்டூர் என்ற கிராமம் உள்ளது. இந்த நிலையில் பள்ளியின் கழிவறையை அங்கு படிக்கும் மாணவிகள் சுத்தம் செய்வது போன்ற வீடியோ ஒன்று வலைத்தளங்களில் பரவியது.

    அந்த ஊரை சேர்ந்த பெண் ஒருவரின் தூண்டுதலின் பேரில் மாணவிகள் சிலரை நடிக்க வைத்து இந்த வீடியோ எடுத்ததாகவும் பரபரப்பானது. இதுகுறித்து தெரியவந்ததும் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கார்த்திகா உத்தரவின்பேரில் கொட்டாம்பட்டி வட்டார கல்வி அதிகாரி சாந்தி மற்றும் தொடக்கக்கல்வி அதிகாரி உள்ளிட்டோர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இதுதொடர்பாக முதன்மை கல்வி அதிகாரி கார்த்திகா கூறுகையில், "இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. தொடக்கக்கல்வி அதிகாரிகளின் அறிக்கையை தொடர்ந்து, தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கூறப்படும் பிற குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது" என்றார்.

    • இளம்பெண் சூட்கேசின் ஒரு முனைப்பகுதியை பிய்த்து சாப்பிட தொடங்குகிறார்.
    • வீடியோவை இதுவரை 2½ கோடிக்கும் அதிகமான பயனர்கள் பார்த்து இளம்பெண்ணின் குறும்புத்தனத்தை ரசித்து வருகிறார்கள்.

    சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ காட்டுத்தீப்போல பரவி வருகிறது. அதில் ஒரு இளம்பெண் விமான நிலையத்தில் தனது வெள்ளைநிற சூட்கேசுடன் சுற்றித்திரிகிறார்.

    திடீரென விமான நிலையத்தில் உள்ள இருக்கையில் அமரும் அந்த இளம்பெண் சூட்கேசின் ஒரு முனைப்பகுதியை பிய்த்து சாப்பிட தொடங்குகிறார். இதை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சியில் திளைக்கிறார்கள்.

    பின்னர் அந்த சூட்கேசை கொஞ்சம் கொஞ்சமாக அந்த இளம்பெண் பிய்த்து ருசித்து சாப்பிடுகிறார். அந்த இளம்பெண் சூட்கேஸ் வடிவிலான கேக்கை கடித்து சாப்பிட்டது வீடியோவின் இறுதியில் தெரிய வருகிறது.

    இந்த வீடியோவை இதுவரை 2½ கோடிக்கும் அதிகமான பயனர்கள் பார்த்து இளம்பெண்ணின் குறும்புத்தனத்தை ரசித்து வருகிறார்கள்.

    • சம்பவம் கடந்த 29-ந்தேதி நடந்ததாக கூறப்படுகிறது.
    • இருதரப்பை சேர்ந்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    குஜராத்தில் திருடியதற்காக வாலிபர் ஒருவரை காரின் முன்பக்க பகுதியில் கட்டிவைத்து தாக்குவது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    கோத்ரா தாலுகா கன்கு தம்பலா பகுதியில் உள்ள ஷாப்பிங் சென்டரில் வாலிபர் ஒருவர் பொருட்களை திருட முயன்றுள்ளார். இதுகுறித்து அறிந்த கடை உரிமையாளர் மற்றும் உடன் இருந்தவர்கள் அந்த வாலிபரை பிடித்து அடித்து காரின் பானெட்டில் கட்டி வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்தை அங்கு கூடியிருந்தவர்களில் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளனர். இச்சம்பவம் கடந்த 29-ந்தேதி நடந்ததாக கூறப்படுகிறது. போலீசாரின் கவனத்திற்கு சென்ற வீடியோ குறித்து விசாரணை நடத்தி இருதரப்பை சேர்ந்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    குற்றவாளிகளை ஒப்படைக்காமல், சட்டத்தை கையில் எடுத்து கொடூரமான முறையை கையாளும் சம்பவங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வருவதால் இதுகுறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

    • வீடியோ வைரலான நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சொகுசு கார் மீது ஓலா கேப் மோதியதால் ஆத்திரமடைந்த சொகுசு காரின் உரிமையாளர் கால் டாக்சி டிரைவரை திரைப்பட பாணியில் தூக்கி விசி தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    வைரலாகும் 30 வினாடிகள் கொண்ட வீடியோவில், குடியிருப்பு வளாக பகுதியில் ஆடி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. பின்னால் ஓலா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இயங்கும் கார் ஒன்று வருகிறது. முன்னால் சென்ற ஆடி காரின் உரிமையாளர் திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த டாக்சி டிரைவரின் கார் லேசாக பம்பரில் மோதியுள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த ஆடி காரில் இருந்தவர்கள், இறங்கி வந்த ஒருவர் ஓலா கார் ஓட்டுநரை அப்படியே தூக்கி வீசி தாக்குகிறார். இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி இரவு 11:20 மணியளவில் மும்பையில் உள்ள காட்கோபரில் உள்ள ஒரு மாலுக்கு எதிரே உள்ள கட்டிடத்தின் நுழைவாயிலில் நடந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். அதில் ஒரு பயனர், "இந்த திமிர்பிடித்த ஆடி பையன் மீது UAPA சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்" என்றார்.

    மற்றொரு பயனர், "இப்போதெல்லாம் சிலர் சக்தி வாய்ந்தவர்களாக மாற விரும்புகிறார்கள். அவர்கள் பலவீனமான நபர் மீது தங்கள் சக்தியைக் காட்டத் தொடங்குகிறார்கள்" என்றார்.

    • வீடியோ 6 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் விருப்பத்தை பெற்றுள்ளது.
    • வீடியோவை பார்த்த பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    ரெயில்களில் உள்ள கழிப்பறையில் வாளி திருட்டை தடுக்க அது இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருக்கும். அதேபோன்று ஒரு ஹோட்டலில் சோப்பை யாரும் எடுத்து போகாமல் இருக்க அதன் நடுவே ஒரு துளையிடப்பட்டு உள்ளது.

    பின்னர் கயிற்றால் கட்டப்பட்டு அங்கு தொங்க விடப்பட்டு இருக்கிறது. இதனை பார்த்த வாடிக்கையாளர் ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டார்.

    இந்த வீடியோ 6 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் விருப்பத்தை பெற்றுள்ளது. மேலும் சிலர் இந்த தொழில்நுட்பம் இந்தியாவை விட்டு வெளியேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என கிண்டலாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • நடனம் அல்லது நிகழ்ச்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவம் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன.
    • சகோதரரியின் திருமணத்தில் நடனமாடிக்கொண்டிருந்த 18 வயது இளம்பெண் ஒருவர் சுருண்டு விழுந்து இறந்தார்.

    டெல்லியில் பிரியாவிடை விழாவில் நடனமாடிக்கொண்டிருந்த இளம் போலீஸ் அதிகாரி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    டெல்லி காவல்துறையில் தலைமைக் காவலராக பணிபுரியும் ரவிக்குமார், நேற்று முன்தினம் நடைபெற்ற சக ஊழியரின் பிரியாவிடை விருந்தில் கலந்து கொண்டு மகிழ்ச்சியில் நடனம் ஆடிக்கொண்டிருந்தபோது, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு கீழே விழுந்தார். இதையடுத்து ரவிக்குமார் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

    ரவிக்குமாரின் இறுதித் தருணங்கள் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் அவரும் மற்றொரு நபரும் பாடல் ஒன்றுக்கு காலை அசைத்தபடி நடனம் ஆடுகின்றனர். சிறிது நேரம் கழித்து, ரவி சிரித்துக்கொண்டே ஒதுங்குவதைக் காணமுடிகிறது. இதையடுத்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

    உயிரிழந்த ரவிக்குமாருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர் 2010-ம் ஆண்டு முதல் டெல்லி போலீஸ் படையில் சேர்ந்து பணியாற்றி வருகிறார். 45 நாட்களுக்கு முன்புதான் அவருக்கு ஆஞ்சியோகிராபி செய்யப்பட்டது.

    நடனம் அல்லது நிகழ்ச்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவம் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் தனது சகோதரரியின் திருமணத்தில் நடனமாடிக்கொண்டிருந்த 18 வயது இளம்பெண் ஒருவர் சுருண்டு விழுந்து இறந்தார்.

    இந்தூரில் நடந்த ஒரு யோகா நிகழ்வில் தேசபக்தி பாடலில் உற்சாகமான நிகழ்ச்சியை வழங்கிக்கொண்டிருந்த போது, இந்தியக்கொடியைப் பிடித்தபடி ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மேடையில் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

    கடந்த ஆண்டு அக்டோபரில், கடந்த 24 மணி நேரத்தில் குஜராத் முழுவதும் கர்பா நிகழ்வுகளில் குறைந்தது 10 மாரடைப்பு இறப்புகள் பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் இளையவர் 17 வயது மட்டுமே.

    • சீருடை அணியாத மற்றொரு ஆண், அந்த பெண்ணின் தலைமுடியை இழுத்து, தலையை பக்கவாட்டில் ஆட்டுவதைக் காணலாம்.
    • சம்பவம் மத்திய பிரதேசம் தலித்துகளுக்கு பாதுகாப்பற்ற நிலைமை குறித்து காட்டுவதாக முன்னாள் முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

    போபால்:

    மத்தியப் பிரதேச மாநிலம் கட்னியில் உள்ள ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் பெண் மற்றும் அவரது பாட்டியை சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அரசு ரெயில்வே காவல்துறையைச் (GRP) சேர்ந்தவர்கள் பாட்டி மற்றும் அவரது பேரன் (15 வயது) ஆகியோரை திருட்டு வழக்கு குறித்து விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் அந்த பெண்ணை தாக்கியவர்கள், பின்னர் அவரது பேரனை நோக்கி தாக்க திரும்பியதாக கூறப்படுகிறது.

    ''அப்பா எங்கே என்று போலீஸ் கேட்டது... எங்கே என்று தெரியவில்லை. போலீசார் என்னை டிராபிக் இன்ஸ்பெக்டர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது என்னை அடித்தார்கள். அப்போது என் பாட்டியையும் அடித்தார்கள். என் அப்பா கூலித் தொழிலாளிதான்" என்று சிறுவன் கூறினான்.

    வீடியோவில், GRP போலீசார் அவரை பெல்ட்டால் அடிக்கும்போது அந்த அப்பெண் தரையில் கிடப்பதை காண முடிகிறது. சீருடை அணியாத மற்றொரு ஆண், அந்த பெண்ணின் தலைமுடியை இழுத்து, தலையை பக்கவாட்டில் ஆட்டுவதைக் காணலாம்.

    வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, இந்த வீடியோ குறித்து ஏஎஸ்பி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்று கட்னி எஸ்பி அபிஜீத் குமார் ரஞ்சன் தெரிவித்தார். மேலும், இது திருடப்பட்ட நகைகளை மீட்பது தொடர்பான பழைய சம்பவம் இது என தெரிவித்த போலீசார், வீடியோவில் காணப்படும் GRP ஆட்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.

    இதனிடையே, இந்த சம்பவம் மத்திய பிரதேசம் தலித்துகளுக்கு பாதுகாப்பற்ற நிலைமை குறித்து காட்டுவதாக முன்னாள் முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

    • பலத்த மழை மற்றும் காற்றுக்கு மத்தியில் ஸ்கை ஸ்க்ரீமர் சவாரியில் நடுவானில் 243 அடி உயரத்தில் மக்கள் சிக்கியுள்ளனர்.
    • சிறிது நேரத்துக்குப் பிறகு சவாரி வழக்கமான செயல்பாடுகளுக்குத் திரும்பியதாக பொழுதுபோக்கு பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வீடியோக்களை பார்க்கும்போது நம்மை நாமே அறியாமல் திகைப்பில் ஆழ்ந்துபோவோம்... அதுபோல் ஒரு வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    மெக்சிகோவில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் ஸ்கை ஸ்க்ரீமர் சவாரியில் நடுவானில் 243 அடி உயரத்தில் மக்கள் சிக்கிக் கொண்டு இருக்கும் வீடியோ அனைவரையும் ஒரு நொடி உறைய வைத்துள்ளது.

    35 வினாடிகள் ஓடும் வீடியோவில் பலத்த மழை மற்றும் காற்றுக்கு மத்தியில் ஸ்கை ஸ்க்ரீமர் சவாரியில் நடுவானில் 243 அடி உயரத்தில் மக்கள் சிக்கியுள்ளனர். பயத்தில் அவர்கள் குரல் எழுப்புகின்றனர்.

    சம்பவம் நடந்த சிறிது நேரத்துக்குப் பிறகு சவாரி வழக்கமான செயல்பாடுகளுக்குத் திரும்பியதாக பொழுதுபோக்கு பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ×