search icon
என் மலர்tooltip icon

  ஈரோடு

  • அ.தி.மு.க.வுக்கு நல்ல பெயர் வந்து விடும் என்ற எண்ணத்தில் தி.மு.க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
  • மாறாக தி.மு.க பிரமுகர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர்.

  ஈரோடு:

  கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த சம்பவத்தில் தமிழக அரசின் மெத்தன போக்கை கண்டித்து இன்று ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

  ஆர்ப்பாட்டத்தில் கே.சி. கருப்பண்ணன் எம்.எல்.ஏ பேசியதாவது:-

  கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. சட்டமன்றத் உறுப்பினர் செந்தில்குமார் கடந்த பட்ஜெட் சட்டசபை கூட்டத்தொடர் போது கவனம் ஈர்ப்பு தீர்மானம் கொடுத்த போது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

  அன்றைய தினமே நடவடிக்கை எடுத்து வந்திருந்தால் தற்போது கள்ளச்சாராயம் காரணமாக உயிரிழப்பு நிகழ்ந்திருக்காது. அ.தி.மு.க.வுக்கு நல்ல பெயர் வந்து விடும் என்ற எண்ணத்தில் தி.மு.க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எம்.எல்.ஏ., பஞ்சாயத்து தலைவர்கள், எஸ்.பி.யிடம் சொன்ன போதும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக தி.மு.க பிரமுகர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர்.

  கள்ளச்சாராயம் மூலம் இவ்வளவு உயிரிழப்புக்கு தி.மு.க அரசு தான் காரணம். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதற்கு பொறுப்பு ஏற்று ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  சட்ட ஒழுங்கு பிரச்சனை காப்பாற்ற சாராயம் தயாரித்த நபர்கள் மீது நிறைய வழக்குகள் இருப்பதால் அவர்களை என்கவுண்டரில் போடுங்கள். அப்போதுதான் மற்றவர்களுக்கு பயம் இருக்கும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • குட்கா-புகையிலைப் பொருட்கள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
  • வீரப்பன்சத்திரம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

  ஈரோடு:

  தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

  அதனடிப்படையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இதேப்போல் கடைகளிலும் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சமீப காலமாக ஈரோடு மாநகராட்சி பகுதியில் குட்கா-புகையிலைப் பொருட்கள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.

  இந்நிலையில் ஈரோடு சத்தி ரோட்டில், சி.என்.சி. கல்லூரி எதிரில் வீரப்பன்சத்திரம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

  அப்போது அங்குள்ள பேக்கரி ஒன்றில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களான பான் மசாலா, குட்கா, புகையிலை ஆகியவை விற்பனைக்கு வைத்திருப்பது தெரிய வந்தது.

  இதையடுத்து போலீசார் அங்கு மேற்கொண்ட சோதனையில் ரூ.3 லட்சத்து 3 ஆயிரத்து 480 மதிப்பிலான பான்மசாலா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட 305 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

  இதுகுறித்து பவானி மெயின்ரோடு, அசோகபுரம், லட்சுமி நகரை சேர்ந்த பாலச்சந்தர் (37) மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

  • குட்கா, போதை பாக்குகள் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
  • போதை புகையிலை பொருட்கள் கடத்தி வந்த புனாமா ராம் சவுத்ரியை போலீசார் கைது செய்தனர்.

  பெருந்துறை:

  ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் டோல்கேட் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் எஸ்.எஸ்.ஐ. கருப்புசாமி உள்ளிட்ட பெருந்துறை போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

  அப்பொழுது அந்த வழியாக திருப்பூர் நோக்கி வந்த ஒரு சொகுசு காரை போலீ சார் மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, போதை பாக்குகள் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

  இதில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த புனாமா ராம் சவுத்ரி (வயது 39) என்பதும், தற்போது இவர் திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் தங்கி இருப்பதும் தெரிய வந்தது. மேலும் அவர் அவினாசி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், பெட்டி கடைகளுக்கு நேரடியாக போதை புகையிலை மற்றும் போதை பாக்கு பொட்டலங்களை விநியோகம் செய்து வருவதை தொழிலாக வைத்திருப்பதும் தெரிய வந்தது.

  இதையடுத்து அவர் கொண்டு வந்த 400 கிலோ எடையுள்ள ரூ.3.22 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் போதை புகையிலை பொருட்களையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போதை புகையிலை பொருட்கள் கடத்தி வந்த புனாமா ராம் சவுத்ரியை போலீசார் கைது செய்தனர்.

  இதை தொடர்ந்து பெருந்துறை போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  ஈரோடு:

  கள்ளக்குறிச்சி மாவ ட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுச்சேரி போன்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போலீ சார் உஷார் படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடு பட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் மதுவிலக்கு டி.எஸ்.பி சண்முகம் தலைமையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

  மதுவிலக்கு அமலாக்க துறை டி.எஸ்.பி சண்முகம் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் டாஸ்மாக் கடைகளை சோத னையிட்டனர். ஈரோடு மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் இரவு முதல் காலை வரை விடிய விடிய வாகன சோதனை நடைபெற்றது. வெளியூர் ஊரிலிருந்து ஈரோடுக்கு வரும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு அதன் பிறகே உள்ளே அனு மதிக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் மூலப்பட்டறை, பஸ் நிலையம், வீரப்பன்ச த்திரம் போன்ற பகுதிகளிலும் வாகன சோதனை நடைபெற்றது.

  இதேபோல் கோபி, அந்தியூர், பவானி, சத்தியம ங்கலம், பெருந்துறை, மொட க்குறிச்சி, கொடுமுடி போன்ற பகுதிகளிலும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விடிய விடிய நடந்த சோதனை இன்று காலையிலும் தொடர்ந்து நடந்து வருகிறது. 

  • பலரும் அவர்கள் பணி புரியும் நிறுவனங்களில் ஆதார் அட்டையை கொடுத்து தான் பணியில் சேர்ந்துள்ளனர்.
  • தொடர்ந்து விசாரணை சென்று கொண்டிருப்பதால் முழு தகவலையும் இப்போது வெளியிட முடியாது.

  பெருந்துறை:

  ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் மற்றும் விஜயமங்கலம், வாய்ப்பாடி, திங்களூர், காஞ்சிகோவில், பெத்தாம்பாளையம், நல்லாம்பட்டி என பெருந்துறை தாலுகா முழுவதும் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

  அனைத்து வகை தொழில் நிறுவனங்கள், ஓட்டல், கடைகள், தறிப்பட்டறை மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்கள் என எல்லா பகுதியிலும் வட மாநில தொழிலாளர்களே அதிக அளவில் பணிபுரிகின்றனர். பின்னலாடை, ஸ்பின்னிங், டையிங், விசைத்தறி மற்றும் நாடா இல்லாத தறி பட்டறைகளிலும், விவசாய தொழிலுக்கும் ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறையை வட மாநிலத் தொழிலாளர்களே பூர்த்தி செய்து வருகின்றனர்.

  மேற்குவங்கம், பீகார், உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா என வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பெருந்துறை தாலுகாவில் மட்டும் 2 லட்சம் பேருக்கு மேல் இருப்பார்கள் என கூறப்படுகிறது. இவர்களில் பலரும் அவர்கள் பணி புரியும் நிறுவனங்களில் ஆதார் அட்டையை கொடுத்து தான் பணியில் சேர்ந்துள்ளனர்.

  மற்றபடி பணியில் சேருபவர்களின் பின்னணி அவர்களுடைய சொந்த மாநிலத்தில் ஏதேனும் குற்ற வழக்கில் தொடர்புடையவர்களா? தேடப்படும் குற்றவாளியா? என்பன உள்ளிட்ட எந்த பின்னணி தகவல்களும் இருப்பதில்லை. அவர்கள் அளிக்கும் ஆதார் அட்டையும் போலியானதா என்பதும் உறுதிப்படுத்தப் படுவதில்லை.

  குறிப்பாக வங்காள தேசத்தில் இருந்து பாஸ்போர்ட், விசா இல்லாமல் மேற்கு வங்காளம் வழியாக ஊடுருவி தமிழகத்தின் பல பகுதிகளில் கூலித் தொழிலாளர்கள் என்ற பெயரில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை பற்றிய முழு தகவல்களையும் போலீஸ் நிலையங்கள் மூலமாக சேகரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாலைமலர் நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.

  இதன் எதிரொலியாக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் பெருந்துறை போலீசார், பெருந்துறை பணிக்கம்பாளையம், கிருஷ்ணாம்பாளையம், காடபாளையம் பகுதிகளில் தங்கி உள்ள வட மாநில தொழிலாளர்களின் பின்னணி குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

  நேற்று இரவு நடைபெற்ற இந்த விசாரணையில் பெருந்துறை பணிக்கம்பாளையம் பகுதியில் தங்கி சிப்காட்டில் பணி புரிந்து வந்த வங்காளதேசத்தை 9 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதன் முதற்கட்ட விசாரணையில் இந்திய நாட்டில் வசிப்பதற்கான பாஸ்போர்ட், விசா எதுவும் இல்லாத 5 பேர் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.

  தற்போது அவர்கள் அளித்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் வங்காள தேசத்தில் இருந்து மேற்கு வங்காளத்திற்கு எப்படி ஊடுருவி வந்தார்கள் என்பது குறித்தும், அவர்கள் கொடுத்துள்ள ஆதார் அட்டையின் உண்மைத் தன்மை குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இதுகுறித்து பெருந்துறை போலீசார் கூறுகையில், வங்காளதேசத்தில் இருந்து வந்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 9 பேரை பிடித்து விசாரித்ததில் முதல் கட்டமாக 5 பேர் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள்தான் என்பது உறுதியாகி உள்ளது. இவர்களிடம் முறையான பாஸ்போர்ட், விசா எதுவும் இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

  தொடர்ந்து விசாரணை சென்று கொண்டிருப்பதால் முழு தகவலையும் இப்போது வெளியிட முடியாது. முழுமையான விசாரணைக்கு பிறகே வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் பற்றிய முழுவிவரத்தையும் வெளியிட முடியும் என்று தெரிவித்தனர்.

  • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூர் உள்பட 7 வனச்சரகங்களும் உள்ளன.
  • வனக்கோட்ட வாரியாக யானைகளின் இருப்பு எவ்வளவு என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை மத்திய அரசு வெளியிடும்.

  பெருந்துறை:

  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணி கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்றது.

  ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் சத்தியமங்கலம், டி.என்.பாளையம், கடம்பூர், தாளவாடி, ஆசனூர், ஜீரகள்ளி கேர்மாளம், விளாமுண்டி, தலமலை, பவானிசாகர் ஆகிய 10 வனச்சரகங்கள் உள்ளன.

  ஈரோடு வனக்கோட்டத்திற்குள்பட்ட தந்தை பெரியார் வனச்சரணாலயத்தில் ஈரோடு, அந்தியூர், பர்கூர், சென்னம்பட்டி, தட்டக்கரை ஆகிய 5 வனச்சரகங்களும், சேலம் மாவட்டத்தில் மேட்டூர், கொளத்தூர் உள்ளிட்ட 20 வனச்சரகங்களும், தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம் உள்ளிட்ட 8 வனச்சரகங்களும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூர் உள்பட 7 வனச்சரகங்களும் உள்ளன.

  இந்த வனச்சரணாலய பகுதிகளில் ஆயிரக்கணக்கான யானைகள் வசித்து வருகின்றன. வனச்சூழலையும், சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதில் யானைகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. எனவே யானைகளின் வாழ்விடங்களை மேம்படுத்தும் வகையில் தமிழக வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வனச்சரணாலயப் பகுதிகளில் ஒவ்வொரு வனச்சரகத்திலும் வசிக்கும் யானைகள் எவ்வளவு என்பது குறித்து கணக்கெடுக்கும் பணிகள் நிறைவடைந்து விட்டன.

  தற்போது வனச்சரகங்களில் எடுக்கப்பட்ட யானைகளின் கணக்கெடுப்பு தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இந்தப் பகுதிகளில் வசிக்கும் யானைகளின் எண்ணிக்கை எவ்வளவு என்ற தகவல்களை மத்திய வனத்துறை மூலம் அரசு வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பாதுகாப்பாளர் ராஜ்குமார் கூறியதாவது:-

  தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தொடங்கி அதன் தொடர்ச்சியாக உள்ள மோயாறு பள்ளத்தாக்கு, சத்தியமங்கலம், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஒசூர் வனக்கோட்டம் வரையிலான பகுதிகளில் இந்த ஆண்டுக்கான யானைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது.

  சத்தியமங்கலம் வனக்கோட்டத்தை பொறுத்த வரை கடந்த ஆண்டில் 720-க்கும் மேற்பட்ட யானைகள் இருந்தது கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்தது. தமிழகத்தில் நடைபெற்றதை போலவே அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் யானைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றது.

  ஒவ்வொரு பகுதியிலும் எடுக்கப்பட்ட யானைகளின் கணக்கெடுப்பு புள்ளி விவரங்களை சேகரித்து இறுதியாக வனக்கோட்ட வாரியாக யானைகளின் இருப்பு எவ்வளவு என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை மத்திய அரசு வெளியிடும்.

  சத்தியமங்கலம் வனக்கோட்டத்தைப் பொருத்த வரை யானைகள் வேட்டையாடுவது தடுக்கப்பட்டுள்ளதால் யானைகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்பில்லை. யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா என்பதை யானைகளின் வழித்தடங்களில் எடுக்கப்பட்ட ஒட்டு மொத்தமாக கணக்கீட்டின் அடிப்படையிலேயே தெரிய வரும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • அணையில் நீர்மட்டம் சரிந்ததால் கீழ் பவானி பாசனத்தின் இரண்டாம் போகத்துக்கே தண்ணீர் வழங்க இயலாத நிலை ஏற்பட்டது.
  • குடிநீர் சேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது.

  ஈரோடு:

  ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரால் காளிங்கராயன் வாய்க்கால் மூலம் 15,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆண்டுக்கு 10 மாதங்கள் காளிங்கராயன் வாய்க்காலில் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். பாசனப்பகுதியில் கரும்பு, வாழை, நெல், மக்காச்சோளம், மஞ்சள், எள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படும். ஆண்டுக்கு மூன்று போகம் விளைய கூடிய இப்பாசனத்திற்கு அட்டவணைப்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 16-ந் தேதி கண்ணீர் திறக்கப்பட்டு, ஏப்ரல் 30-ம் தேதி தண்ணீர் நிறுத்தப்பட வேண்டும்.

  இந்த ஆண்டு பவானிசாகர் அணைக்கான நீர் பிடிப்பு பகுதியில் மழை இன்மையாலும், பிற பகுதி மழைநீர் வரத்து இன்றியும், அணை நீர் மட்டம் தொடர்ந்து சரிந்தது. குடிநீர் சேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. அணையில் நீர்மட்டம் சரிந்ததால் கீழ் பவானி பாசனத்தின் இரண்டாம் போகத்துக்கே தண்ணீர் வழங்க இயலாத நிலை ஏற்பட்டது.

  இதற்கிடையே நீலகிரி மாவட்டம் உட்பட அணை நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அணைக்கு குறைந்த அளவு நீர் வரத்தாகி வருகிறது. கடந்த மே மாதம் 15-ந் தேதி அணையின் நீர்மட்டம் 44.35 அடியாக இருந்தது. இன்று காலை நிலவரப்படி 57.71 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்தாலும் சில நாட்களாக நீர் வரத்து மீண்டும் குறைந்து விட்டது.

  வழக்கமாக இந்த மாதத்தில் அணையின் நீர்மட்டம் 80 அடிக்கு மேல் இருக்கும். அதனால் காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு 57.71 அடியாக நீர் திறப்பு உள்ளதாலும் அணைக்கான நீர் வரத்து 600 கன அடியாக உள்ளதுடன் தினமும் குடிநீர் தேவைக்கு 150 கன அடி நீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்படுவதால் கவலை அளிக்கும் படியே உள்ளது.

  இந்த சூழலால் பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறக்க இயலாத நிலை உள்ளதால் காளிங்கராயன் பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்தால் மட்டுமே அடுத்த சில நாட்களில் காளிங்கராயன் பாசனத்திற்கும் ஆகஸ்ட் 15-ந் தேதி கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தில் உள்ள 1 லட்சத்து 3,500 ஏக்கர் நிலங்களுக்கும் தண்ணீர் வழங்க இயலும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

  • தமிழகத்தில் நீட் தேர்வை நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும்.
  • வனத்துறையில் பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

  ஈரோடு:

  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  குவைத்தில் நடந்த தீ விபத்தில் இறந்தவர்களுக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் வழங்கிய நிலையில், மத்திய அரசு ரூ.2 லட்சம் மட்டுமே வழங்கியுள்ளது. அதனை ரூ.25 லட்சமாக உயர்த்தி கொடுக்க வேண்டும்.

  நீட் தேர்வில் நடைபெற்ற ஏராளமான குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வை நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும். விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக ஆதரிக்கும். தி.மு.க. வெற்றிக்காக பாடுபடுவோம்.

  வனத்துறையில் பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வனத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்து, தற்பொழுது பட்டுப்போன மூங்கில் மரங்களை வனப்பகுதியில் வாழும் பழங்குடியினரே அதனை எடுத்துச்செல்ல வனத்துறை அனுமதிக்க வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • தோட்டத்துக்குள் புகுந்த யானை அங்கு படுத்து தூங்கிக் கொண்டிருந்த வெங்கடாசலத்தை மிதித்தது.
  • யானை கிராமத்துக்குள் புகுந்து வாலிபரை மிதித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

  சத்தியமங்கலம்:

  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை, புலி, மான் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக ஈரோடு வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

  கடந்த சில மாதங்களாகவே யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகில் இருக்கும் கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. சில சமயம் மனித உயிர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. யானைகள் தோட்டத்துக்குள் புகுவதை தடுக்கும் வகையில் விவசாயிகள் இரவு நேரங்களில் தங்கள் தோட்டங்களில் காவலில் இருப்பது வழக்கம்.

  இந்நிலையில் நேற்று நள்ளிரவில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று தோட்டத்தில் இரவு நேர காவலில் இருந்த வாலிபரை மிதித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  இந்த சம்பவம் பற்றி விவரம் வருமாறு:- ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பவானிசாகர் வனச்சரகத்தில் சுஜில் குட்டை என்னும் இடத்தில் முனியப்பன் கோவில் அருகில் உள்ள தோட்டத்தில் நம்பியூரைச் சேர்ந்த வெங்கடாசலம் (வயது 25) என்ற வாலிபர் தோட்டத்தில் இரவு நேர காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

  தோட்டத்தில் பூசணிக்காய் பயிரிடப்பட்டிருந்தது. இதனால் இவர் தினமும் இரவில் வந்து இங்கு படுத்து தூங்குவது வழக்கம். நேற்று இரவும் வழக்கம் போல் வெங்கடாசலம் தோட்டத்தில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு ஒரு மணி அளவில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று வெங்கடாசலம் தோட்டத்திற்குள் புகுந்தது. நள்ளிரவு என்பதால் வெங்கடாசலம் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.

  இதனால் யானை வருவதை அவர் கவனிக்கவில்லை. தோட்டத்துக்குள் புகுந்த யானை அங்கு படுத்து தூங்கிக் கொண்டிருந்த வெங்கடாசலத்தை மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே வெங்கடாசலம் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

  சத்தம் கேட்டு அருகில் தோட்டத்தில் இருந்தவர்கள் எழுந்து வந்து பார்த்தபோது வெங்கடாசலம் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தோட்டத்தில் யானை நிற்பதையும் பார்த்தனர். பின்னர் பட்டாசு வெடித்தும், தீபந்தத்தை காட்டியும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

  இதுகுறித்து வனத்துறையினருக்கும், சத்தியமங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வெங்கடாசலம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். யானை கிராமத்துக்குள் புகுந்து வாலிபரை மிதித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் அச்சத்துடன் உள்ளனர்.