என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய்"

    • விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியாக மாற்றப்பட்டுள்ளது.
    • சுமார் 33 ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதானத்தில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா அடுத்த அகரம்சேரி பகுதியில் தவெக சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி பிப். 23-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தவெக நிர்வாகிகள் செய்து வருகின்றனர். சுமார் 33 ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதானத்தில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இதற்கிடையில், தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியாக மாற்றப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, தவெக தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தலைமையில் வருகிற 23-ந் தேதி அன்று நடைபெறவிருந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது, தற்போது நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியாக மாற்றப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்வில் பங்கேற்க 4,900 நிர்வாகிகளுக்கு க்யூ ஆர் கோடு வசதியுடன் கூடிய நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த சீட்டுகள் ஸ்கேன் செய்யப்பட்ட பின்னரே நிர்வாகிகள் அரங்குக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    இது முற்றிலும் கட்சி நிர்வாகிகளுக்கான சந்திப்பு என்பதால், குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், உடல்நலக்குறைவு உள்ள வர்கள் மற்றும் நுழைவுச்சீட்டு இல்லாதவர்கள் நேரில் வருவதை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    கட்சியின் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை கருதி அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அமலாக்கத் துறை தந்த ஊழலுக்கான ஆதாரங்களைக் கண்டுகொள்ளவே இல்லை.
    • வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

    தமிழ் நாடு அமைச்சரவையில் இருந்து கே.என். நேரு நீக்கப்பட வேண்டும் என்று த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கபட நாடகத் தி.மு.க. அரசின் நகராட்சித் துறை அமைச்சரின் ரூ.1020 கோடி ஊழலை அமலாக்கத் துறை எப்போதோ வெளிக்கொண்டு வந்தது. அப்போதே சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது வழக்கு தொடுக்கவும் சொன்னது.

    ஆனால், ஊழலின் ஊற்றுக்கண்ணை விசாலப்படுத்திக்கொண்டே செல்வதில் இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு கைதேர்ந்தது. ஆகவே, அமலாக்கத் துறை தந்த ஊழலுக்கான ஆதாரங்களைக் கண்டுகொள்ளவே இல்லை.

    2026 தேர்தலில் வெல்லவே முடியாது என்று தெரிந்தும் தேர்தலுக்காக ஏதாவது தில்லுமுல்லுகளையும் கூட்டணிக்காகத் தகிடுதத்தங்களையும் தாராளமாகவும் ஏராளமாகவும் செய்வதில் மட்டுமே முனைப்பாக இருக்கும் தி.மு.க. அரசின் உச்சியைப் பிடித்து உயர்நீதிமன்றம் உலுக்கியுள்ளது.

    நகராட்சித் துறை அமைச்சரின் ஊழல் குறித்து அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகளுக்காகத் தந்துள்ள ஆதாரங்களில் முகாந்திரம் உள்ளது. எனவே, உடனடியாக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

    ஊழல் மலிந்த திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசுக்கு நேர்ந்து வரும் துடைக்கவே முடியாத ஆகப் பெரிய அவமானங்களில் இதுவும் ஒன்று. இதுவரை தனது அரசின் ஊழல்களுக்குப் பரிகாரமே தேடாத தி.மு.க. அரசு, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ள நகராட்சித் துறை அமைச்சரைத் தானாகவே ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும். இல்லையேல் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

    ஏற்கெனவே டாஸ்மாக்கில் 1000 கோடி அளவிலான ஊழல். இப்போது நகராட்சித் துறையில் 1020 கோடி ஊழல். அமலாக்கத் துறை அவிழ்த்துவிடும் தி.மு.க. அரசின் ஊழல்கள் எல்லாமே ஆயிரக்கணக்கான கோடிகளிலேயே உள்ளன. மன்னிக்க முடியாத அளவிற்கு ஊழல் மலிந்த தி.மு.க. அரசை, வருகிற தேர்தலில் தூக்கி எறிந்து விசிலடித்துக் கொண்டாட மக்கள் காத்திருக்கின்றனர்," என குறிப்பிட்டுள்ளார்.

    • ஒரு மொழியை அழித்தால் அந்த மாநில கலாச்சாரம், பண்பாட்டை அழிக்க முடியும்.
    • உங்கள் கையில் உள்ள ஒரு வாக்கை அளித்து மீண்டும் திமுக ஆட்சி மலர வைக்க வேண்டும்.

    ஈரோடு மாவட்டம் கோபியில் ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் "தமிழ்நாடு தலைகுனியாது" பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும், மாநில விளையாட்டு அணி செயலாளருமான தயாநிதி மாறன் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    இந்திய அளவில் வளர்ச்சி சதவீதம் 5.6 சதவீதமாக உள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தின் வளர்ச்சி 11.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    குறுக்கு வழியில் மட்டுமே ஆட்சியை பிடிக்க பாஜ முயற்சி செய்து வருகிறது. பாஜவிற்கு அடிமையாக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் துரோகம் செய்து வருகிறார்.

    அதனால் தான் கடந்த தேர்தலில் துரோகத்திற்கும், குறுக்கு வழிக்கும் தமிழகத்தில் இடமில்லை என்ற ஒற்றை கருத்தோடு தி.மு.க.வை வெற்றி பெற வைத்து மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக பொறுப்பேற்க வைத்தீர்கள்.

    இன்று புதியதாக வந்த ஒருவர்(விஜய்) மீது இளைஞர்கள் மோகத்தில் உள்ளனர். அம்மாக்கள் சொன்னால் தான் அவர்கள் கேட்பார்கள். படத்தை பார்க்க சொல்லுங்கள், விசிலை அடிக்க சொல்லுங்கள். ஆனால் வாக்குகளை தி.மு.க.விற்கு போட சொல்லுங்கள்.

    மகளிர் உரிமைத் தொகையை நிறுத்த முயற்சி செய்தார்கள். ஆனால், ஆயிரம் ரூபாயை தடுக்க பார்த்தவர்களுக்கு சவுக்கடியாக 5,000 ரூபாயை மகளிர் உரிமைத்தொகையாக கொடுத்தவர் தான் தமிழக முதலமைச்சர். அதை அடுத்த முறை ஆட்சி பொறுப்பேற்றதும் 2,000 ரூபாயாக தருவதாக உறுதி அளித்துள்ளார்.

    கர்ப்பப்பை புற்றுநோய்க்கு தடுப்பூசி 16,000 ரூபாயாக உள்ள நிலையில் அதை இந்திய அளவில் இலவசமாக கொடுத்து வருபவர் நம் முதலமைச்சர். எந்த மொழிக்கும் நாம் எதிரிகள் இல்லை.

    தேவைப்பட்டால் நாங்கள் கற்றுக் கொள்கிறோம். ஆனால் திணிக்காதீர்கள் என்று தான் கூறுகிறோம். ஒரு மொழியை அழித்தால் அந்த மாநில கலாச்சாரம், பண்பாட்டை அழிக்க முடியும். ராஜஸ்தான் மாநிலத்தில் சுதந்திரம் கிடைத்தபோது அவர்கள் மொழியை 97 சதவீதம் பேர் பேசி வந்தனர். ஆனால் இன்று 3 சதவீதம் பேர் தான் அவர்கள் தாய் மொழியை பேசி வருகின்றனர். அந்த அளவிற்கு இந்தி திணிப்பால் ஒரு மொழியே அழிந்து வருகிறது.

    உங்கள் கையில் உள்ள ஒரு வாக்கை அளித்து மீண்டும் திமுக ஆட்சி மலர வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் 1967, 1977-ல் நடந்த மாற்றம் 2026-ல் நடக்கும் என த.வெ.க. தலைவர் விஜய் கூறி வருகிறார்.
    • சிறிய மாநிலமான புதுச்சேரியில் தொகுதி தோறும் மக்கள் செல்வாக்குள்ள பிரபலங்கள் உள்ளனர்.

    புதுச்சேரி:

    தமிழகத்தில் நடிகர் விஜய்யின் த.வெ.க. கூட்டணிக்காக காத்திருக்கிறது. த.வெ.க.வை காட்டி காங்கிரஸ் தி.மு.க.வுடன் தனது பேரத்தை வலிமைப்படுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தில் தனித்து விடப்பட்ட நிலையில் த.வெ.க. உள்ளது.

    புதுச்சேரியை பொறுத்தவரை ஆளும் என்.ஆர்.காங்கிரசுக்கும், த.வெ.க.வுக்கும் கூட்டணி ஏற்படும் என எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கு ஏற்ப த.வெ.க. பொதுச்செயலளர் புஸ்சி ஆனந்த் மூலம் முதல்-அமைச்சர் ரங்கசாமி, நடிகர் விஜய் இடையே நட்புறவு இருந்தது.

    ஆனாலும் யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மத்திய அரசின் உதவியின்றி நிர்வாகத்தை செயல்படுத்துவது கடினம். இதையெல்லாம் உணர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, பா.ஜ.க.வுடன் கூட்டணியை உறுதி செய்துவிட்டார்.

    இந்த நிலையில் தமிழகத்தை போல புதுச்சேரியிலும் விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் அளித்துள்ளது. இதையடுத்து புதுவைக்கு 30 பேர் கொண்ட நிர்வாக குழு அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கட்சிகள் த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்கலாம்.

    சிறிய மாநிலமான புதுச்சேரியில் தொகுதி தோறும் மக்கள் செல்வாக்குள்ள பிரபலங்கள் உள்ளனர். புதுச்சேரி மக்களும் அரசியல் கட்சிகளை தாண்டி அவர்களுக்கு வாக்களிப்பது வழக்கம். இதனால் தமிழகத்தை போல புதுச்சேரியில் விஜய்யை மட்டும் முன்னிறுத்தி அரசியல் கட்சியாக த.வெ.க. காலூன்றுவது கடினம்.

    தமிழகத்தில் 1967, 1977-ல் நடந்த மாற்றம் 2026-ல் நடக்கும் என த.வெ.க. தலைவர் விஜய் கூறி வருகிறார். தமிழகத்தில் 1967-ல் தி.மு.க. முதலமைச்சராக அண்ணா துரையும், 1977-ல் அ.தி.மு.க. முதலமைச்சராக எம்.ஜி.ஆரும் ஆட்சியில் அமர்ந்தனர். எம்.ஜி.ஆர். தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் முன்பே 1972, 1974 என 2 முறை புதுச்சேரியில் அ.தி.மு.க. ஆட்சி மலர்ந்தது.

    அதுபோன்ற மாற்றம் ஏற்பட புதுச்சேரியிலும் த.வெ.க. காலூன்ற விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் புதுச்சேரியிலும் விசில் சத்தம் ஒலிக்கும்.

    • தற்போதைய நிலவரப்படி 234 தொகுதிகளுக்கும் தலா 3 வேட்பாளர்களை தேர்வு செய்து வைத்துள்ளது.
    • கொளத்தூர் தொகுதியில் பிரபல தொழிலதிபர் வேட்பாளராக களம் காண இருக்கிறார்.

    சட்டசபை தேர்தலை சந்திக்க த.வெ.க. தீவிரமாகியுள்ளது. இதையடுத்து வரும் 27-ந்தேதி தேர்தல் அறிக்கையை வெளியிடவும் திட்டமிட்டுள்ளது. தற்போது அதற்கான முன்னெடுப்புகளை அந்த கட்சி தொடங்கியுள்ளது. மறுபக்கம் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் தேர்வும் மும்முரமாக நடந்து வருகிறது.

    தற்போதைய நிலவரப்படி 234 தொகுதிகளுக்கும் தலா 3 வேட்பாளர்களை தேர்வு செய்து வைத்துள்ளது. இதில் 80 சதவீதம் பேர் மாவட்ட செயலாளர்கள் என்று கூறப்படுகிறது. இதுதவிர மாநில நிர்வாகிகள், முக்கிய நிர்வாகிகளின் பெயர்களும் இடம் பெற்று இருப்பதாகவும் தெரிகிறது.

    இதில் வில்லிவாக்கம் தொகுதியில் சமீபத்தில் த.வெ.க.வில் இணைந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரின் மகன் வேட்பாளராக அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கொளத்தூர் தொகுதியில் பிரபல தொழிலதிபர் வேட்பாளராக களம் காண இருக்கிறார்.

    இதேபோல், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் பிரபல தியேட்டர் அதிபரின் மகனும், வாசுதேவநல்லூர் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரும், த.வெ.க. வேட்பாளர்களாக களம் இறங்க அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

    அதேநேரத்தில், கட்சியின் தலைவரான விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று ஒரு விவாதமே தமிழக அரசியல் களத்தில் நிலவி வருகிறது. தற்போது விஜய் போட்டியிடும் தொகுதி குறித்து நம்பகமான தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி விஜய் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தொகுதியில் களம் காண இருக்கிறார்.

    வேதாரண்யம் தொகுதியில் அ.தி.மு.க.வை சேர்ந்த ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். இவர் முன்னாள் அமைச்சர் ஆவார். இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருந்தார்.

    வேதாரண்யம் தொகுதி மீனவர்கள், விவசாயிகள் நிறைந்த தொகுதி. இந்த தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விஜய் இந்த தொகுதியில் உறுதியாக களம் காண்பார் என்றே அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    • மற்ற கட்சிகள் மாநாடு போன்று எங்கள் மாநாடு இருக்காது.
    • தமிழகத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடி வரப்போகிறது.

    திருச்சி:

    திருச்சி திண்டுக்கல் ரோடு ஆலம்பட்டி புதூரில் வருகிற 21-ந்தேதி நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டு பணிகளை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்வையிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த மாநாடு மாற்றத்தை விரும்பும் மக்களுக்கான மாநாடாக நடத்தப்பட உள்ளது. இது தமிழக இன அரசியல் வரலாற்றில் ஒரு பாய்ச்சலாகவும், ஒரு படிநிலை முன்னேற்றமாகவும், மாறுதலாகவும் அமையும். உயிரினங்கள் வாழ்வதற்கு ஐந்து பஞ்சபூதங்களும் அவசியம் வேண்டும். ஆனால் இன்றைக்கு உலக நாடுகள் நீரற்ற நிலமாக மாறி வருகின்றன.

    தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் நிலத்தடியில் நீர் இல்லை என இந்த அரசாங்கம் சொல்கிறது. செய்தி சொல்வதற்கு இந்த அரசு தேவையில்லை. அதனை சீர் செய்வதற்கு இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. பீகாரில் சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் ஆறு மாவட்டங்களில் தண்ணீரில் யுரேனியம் கலந்து தாய்ப்பாலில் அது கலந்து விட்டதாக கூறியுள்ளனர்.

    ஆகவே தான் நாங்கள் இந்த நிலம், நீர், மரம் போன்றவற்றின் முக்கியத்துவத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் வகையில் மாநாடு நடத்தியுள்ளோம். நாம் வழிபடுவதற்கு இங்கு ஒரு கோடி தெய்வங்கள் உள்ளன. ஆனால் நாம் வாழ்வதற்கு ஒரே ஒரு பூமி மட்டும் தான் இருக்கிறது. வருகிற 21-ந்தேதி நடைபெறும் மாநாட்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்ய உள்ளோம். 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். நான் போட்டியிடும் தொகுதியையும் அன்று அறிவிப்பேன்.

    இடைக்கால பட்ஜெட் குறித்து கேட்கிறீர்கள். தமிழ்நாட்டில் 10¼ லட்சம் கோடி கடனை வாங்கியுள்ளார்கள். இங்கு கடன் வளர்ச்சி தான் ஏற்பட்டுள்ளது. ஆகவே தான் இந்த ஆட்சி முறையை மாற்ற வேண்டும் எனச் சொல்கிறோம்.

    மற்ற கட்சிகள் மாநாடு போன்று எங்கள் மாநாடு இருக்காது. எங்கள் மாநாட்டில் தேர்தல் அறிக்கை என்பது கிடையாது. எங்கள் ஆட்சி எப்படி இருக்கப் போகிறது என்பதற்கான மாநாடாக தான் இருக்கப்போகிறது. மாற்றத்தை விரும்பும் மாநாடாக இருக்கப்போகிறது. இந்த பூமியை காக்க போவது யார் என்பதை உணர்த்துவதற்கான மாநாடாக இருக்கப் போகிறது.

    அன்று முதல் எங்கள் தேர்தல் பயணத்தை தொடங்க போகிறோம். தமிழகத்தில் கடுமையான நிதி நெருக்கடி இருக்கும்போது ஒரே நாளில் ரூ.6,500 கோடி நிதி ஒதுக்கி மகளிர் உரிமை தொகை மற்றும் கூடுதலாக கோடைகால தொகை கொடுத்தது மிக பெரிய கொடுமையாக பார்க்கிறேன். தமிழகத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடி வரப்போகிறது. மக்கள் சந்திப்பு பயணத்தை தற்போது நிர்வாகிகள் சந்திப்பு பயணம் என்று விஜய் மாற்றி உள்ளார் என்பதை எப்படி பார்க்கிறீர்கள்? என கேட்கிறீர்கள்.

    தம்பியை குறை சொல்வது என் வேலையில்லை. என்னுடைய வேலையை நான் செய்து கொண்டிருக்கிறேன். அதை நீங்கள் என் தம்பியிடம் தான் கேட்க வேண்டும். இந்தியா கூட்டணி வலிமையாக இருப்பதற்கு முக்கிய காரணம் ஸ்டாலின்தான். அவர் இல்லை என்றால் இந்தியா கூட்டணி இல்லை. அவர் கொடுத்தது தான் காங்கிரஸ் 10 தொகுதி. அவர் விலகிவிட்டால் இந்தியா கூட்டணி கிடையாது. அதனால் தான் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஸ்டாலினை ஆதரித்து வருகிறார்கள் என்றார். 

    • வேலூர் அடுத்த அகரம்சேரியில் வருகிற 23-ந்தேதி த.வெ.க. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
    • அகரம்சேரியில் 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    வேலூர்:

    வேலூர் அடுத்த அகரம்சேரியில் வருகிற 23-ந்தேதி த.வெ.க. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக அகரம்சேரியில் 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இதையொட்டி அணைக்கட்டு தாலுகா அகரம்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கும்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையிலான நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதனை பரிசீலனை செய்து அனுமதி வழங்குவதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள், பாதுகாப்பு மற்றும் அனுமதி வழங்குவது தொடர்பாக 20 நிபந்தனைகள் அடங்கிய விண்ணப்பத்தை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் நேற்று த.வெ.க. நிர்வாகிகளிடம் வழங்கினார்.

    அதனை பூர்த்தி செய்து துணை போலீஸ் சூப்பிரண்டிடம் வழங்கும்படி கூறினார்.

    இந்த கூட்டத்தில் வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 25 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சிக்கு வரும் அனைவருக்கும் குடிநீர், கழிப்பறை, மருத்துவம், வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறோம். சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக காரில் விஜய் வேலூருக்கு வருகை தருகிறார்.

    அவரை வாகனத்தில் யாரும் பின்தொடர வேண்டாம், முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வர வேண்டாம், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும், பாதிப்பும் இன்றி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என த.வெ.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
    • இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராக உள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் விஜயின் கடைசி படம் என கூறப்படுவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. மேலும் இப்படம் ஜனவரி மாதம் 9-ந்தேதி வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால் இதுவரை வெளியாகாமல் உள்ளது.

    'ஜன நாயகன்' படத்தில் பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, பூஜா ஹெக்டே, மமிதா பைஜு மற்றும் நரேன் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை ஜெகதீஷ் பழனிசாமி மற்றும் லோஹித் என்.கே ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

    இதனிடையே, 'ஜன நாயகன்' படத்தில் நடித்துள்ள மமிதா பைஜு, விஜயுடன் பணிபுரிந்த அனுபவத்தை நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளார். மமிதா பைஜு கூறியதாவது:- விஜய் சார் படப்பிடிப்பு தளத்திற்கு மிகவும் சரியான நேரத்தில் வருபவர். மிகவும் நிதானமான இயல்புடையவராக இருந்தாலும், அவர் மிகவும் இனிமையானவர். நாம் அவரிடம் சிறிய சிறிய விஷயங்களைச் சொன்னாலும், அவர் அவற்றை நினைவில் வைத்திருப்பார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு நான் அவரைச் சந்தித்தாலும், அவர் திடீரென்று என்னிடம் அதைப் பற்றிக் கேட்பார்.

    அவருக்குப் பிடித்த உணவுகள் பற்றியும் நான் தெரிந்துக்கொண்டேன். அவர் எப்போதும் மதிய உணவாக சால்மன் (மீன்) சாப்பிடுவார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு நான் எப்போதும் அவரிடம், "சார், நீங்கள் சால்மன் (மீன்) சாப்பிட்டீர்களா?" என்று கேட்பேன், அவர் ஒவ்வொரு முறையும் புன்னகையுடன் கூறுவார்" என்றார்.

    • தெறி படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
    • அட்லீ இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார்.

    விஜய் நடிப்பில் வெளியான படம் 'தெறி'. அட்லி இயக்கத்தில் உருவான இப்படத்தில் எமி ஜாக்சன், சமந்தா என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். இதில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

    இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது. இப்படம் இந்தியிலும் வருண் தவான் நடிப்பில் பேபி ஜான் என்ற பெயரில் கடந்த வருடம் ரிலீஸ் ஆனது.

    இந்த நிலையில், தெறி படம் பொங்கலை ஒட்டி ஜனவரி 15 அன்று ரீ ரிலீஸ் ஆக உள்ளதாக தயாரிப்பாளர் தாணு அறிவித்தார். சென்சார் பிரச்சனையால் ஜன நாயகன் வெளியாகாத நிலையில், தெறி படம் பொங்கலை ஒட்டி ரீரிலீஸ் ஆவது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

    இதையடுத்து புதிய படங்களின் வெளியீடால் தெறி படத்தின் ரீரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், 'தெறி' படம் வரும் 27ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது என்று தயாரிப்பாளர் தாணு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார்.

    • எம்.ஜி.ஆரின் இதயக்கனி படம் வெற்றிகரமாக 225வது நாளை எட்டியுள்ளது
    • எடப்பாடி பழனிசாமி ரசிகர்களுடன் இதயக்கனி படம் பார்த்தார்.

    சென்னையில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் இதயக்கனி படம் வெற்றிகரமாக 225வது நாளை எட்டியுள்ளது.

    ஆல்பர்ட் தியேட்டரில் MGR-ன் இதயக்கனி படத்தின் 225வது நாள் வெற்றி விழாவில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ரசிகர்களுடன் படம் பார்த்தார்.

    அப்போது முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, செல்லூர் ராஜு, வேலுமணி ஆகியோர் எடப்பாடி பழனிசாமியுடன் படத்தை பார்த்தனர்.

    படம் பார்த்த பின்பு பேசிய எடப்பாடி பழனிசாமி, "எம்.ஜி.ஆர். பெயரை சொல்பவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது" என்று தெரிவித்தார்.

    எம்.ஜி.ஆர். குறித்து தவெக தலைவர் விஜய் அண்மையில் அடிக்கடி பேசிவரும் நிலையில், இதயக்கனி பட வெற்றி விழாவில் விஜயை மறைமுகமாக தாக்கி எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

    • கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வாசுதேவநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
    • கட்சி நிகழ்ச்சிகளில் அதிக அளவில் பங்கு பெறாமல் இருந்து வந்தார்.

    சென்னை:

    த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலையில் சமீப காலமாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் த.வெ.க.வில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில், தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன் த.வெ.க. தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து, தன்னை த.வெ.க.வில் இணைத்துக் கொண்டுள்ளார்.

    த.வெ.க.வில் இணைந்துள்ள மனோகரன் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வாசுதேவநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அவர் தோல்வியை தழுவினார். அதனை தொடர்ந்து, கட்சி நிகழ்ச்சிகளில் அதிக அளவில் பங்கு பெறாமல் இருந்து வந்த மனோகரன் தற்போது த.வெ.க.வில் இணைந்துள்ளார்.

    அதேபோல், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் த.வெ.க.வில் இணைந்தார். இவர் 2006- 2011 வரை சட்டமன்ற உறுப்பினராகவும், 2011-2016 வரை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராகவும் இருந்தார்.

    வரும் தேர்தலில் த.வெ.க. சார்பில் இவர்கள் அவரவர்கள் போட்டியிட்ட தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    • தேர்தல் அறிக்கையை மக்கள் மத்தியில் வெளியிடுவதா? அல்லது கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் வெளியிடுவதா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
    • பொள்ளாச்சி, வேலூரில் அடுத்தடுத்து மக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சட்டசபை தேர்தலை சந்திக்க த.வெ.க. முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதையொட்டி தேர்தல் அறிக்கை தயார் செய்யும் பணியில் தற்போது த.வெ.க. ஈடுபட்டுள்ளது. இதற்காக மாநில நிர்வாகிகளை கொண்ட குழுவும் அறிவிக்கப்பட்டது. பொது மக்கள் கருத்து தெரிவிக்க புதிய இணையதளமும் தொடங்கப்பட்டது.

    தேர்தல் அறிக்கை குழுவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. இணையதளத்திலும் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த கருத்துகளை தேர்தல் அறிக்கையில் இணைக்கும் பணியை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் செய்து வருகின்றனர்.

    கடந்த கால தேர்தல்களிலும், தற்போதும், தி.மு.க., அ.தி.மு.க.. தேர்தல் அறிக்கைகளில் இலவசங்கள் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், த.வெ.க தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் இடம் பெறுமா? அல்லது இலவசங்கள் இல்லாத மாற்று திட்டங்கள் இடம் பெறுமா? என்பது மிகுந்த எதிர்பார்ப்புமிக்கதாக மாறியுள்ளது.

    இந்தநிலையில் த.வெ.க. தேர்தல் அறிக்கை பொதுமக்கள் விரும்பும் வகையில் பல முக்கிய அம்சங்களுடன் வருகிற 27-ந்தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் அறிக்கையை மக்கள் மத்தியில் வெளியிடுவதா? அல்லது கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் வெளியிடுவதா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, பொள்ளாச்சி, வேலூரில் அடுத்தடுத்து மக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக போலீஸ் அனுமதி பெறுவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக த.வெ.க. நிர்வாகிகள் தெரிவித்தனர். 

    ×