என் மலர்
நீங்கள் தேடியது "தமிழக சட்டசபை தேர்தல்"
- தொண்டர்களை நினைத்து நினைத்து நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
- சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை ஆரம்பித்துவிட்டோம்.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூரில் பா.ம.க. செயற்குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுவெளியில் டாக்டர் ராமதாஸ் பேச்சுக்கு அன்புமணி கட்டுப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. இதனால் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது செயலுக்கு அன்புமணி வருத்தம் தெரிவிக்க வேண்டும். கட்சியை பலவீனப்படுத்தும் நபர்மீது நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டணி முடிவை எடுக்க ராமதாசுக்கு அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:-
* பா.ம.க. செயற்குழு கூட்டத்திற்கு வந்த நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் என் வலி புரியும்.
* தொண்டர்களை நினைத்து நினைத்து நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
* சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை ஆரம்பித்துவிட்டோம்.
* 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் தான் தேர்தலை சந்திக்க முடிவு.
* சட்டமன்ற தேர்தலில் ஏ, பி, பார்ம்களில் கையெழுத்து போடும் உரிமை எனக்கே உள்ளது.
* வெற்றி பெறும் வாய்ப்புள்ளவர்கள் விருப்ப மனுவை கொடுக்க ஆயத்தமாகுங்கள் என்றார்.
- பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் சொந்தமாகவே கள ஆய்வு செய்து முடிவுகள் மேற்கொள்கின்றன.
- ராபின் சர்மா தலைமையிலான குழு ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் வெற்றிக்கு கை கொடுத்த அமைப்பாகும்.
சென்னை:
2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் புதிய வியூகங்கள் வகுத்து வாக்காளர்களை சந்திக்க வேண்டும் என்பதில் முன்னணி கட்சிகள் தீவிரமாக உள்ளன.
பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகள் சொந்தமாகவே கள ஆய்வு செய்து முடிவுகள் மேற்கொள்கின்றன. தி.மு.க. "பென்" எனும் அமைப்பு மூலம் கள ஆய்வு செய்து முடிவுகளை எடுத்து வருகிறது.
இது தவிர ஐபேக் மற்றும் ராபின்சர்மா தலைமையிலான இரு குழுக்கள் மூலம் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் கள ஆய்வை தி.மு.க. மேற்கொண்டு வருகிறது. ராபின் சர்மா தலைமையிலான குழு ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் வெற்றிக்கு கை கொடுத்த அமைப்பாகும்.
அ.தி.மு.க.வும் சர்வந்த் தேவபக்தினி மற்றும் ஹரி கசவுல்யா ஆகியோர் கொண்ட குழு மூலம் 234 தொகுதிகளிலும் ஆய்வை நடத்தி வருகிறது. இந்த குழு அ.தி.மு.க.வுக்காக 200 பேரை களம் இறக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
2011-ம் ஆண்டு முதல் 11 மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் இந்த குழுவின் ஆய்வுகள் மற்றும் வகுத்து கொடுத்த வியூகங்கள் வெற்றி தேடி கொடுத்து இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தேர்தல் வியூகத்துக்காக குழு வைத்து இருப்பது போல புதியதாக கட்சி தொடங்கிய விஜய்யும் பிரபல அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோரை தேர்தல் வியூக வகுப்பாளராக சேர்த்துக் கொண்டார். சமீபத்தில் விஜய்யை பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசினார்.
இதையடுத்து 234 தொகுதிகளிலும் விஜய்க்காக பிரசாந்த் கிஷோர் தலைமையிலான குழு ஆய்வு செய்து வந்தது. பீகாரை சேர்ந்த பிரசாந்த் கிஷோர் அந்த மாநில தேர்தலில் களம் இறங்க முடிவு செய்துள்ளார்.
ஜன் சுராஜ் கட்சி என்ற அரசியல் கட்சியை தொடங்கி உள்ள பிரசாந்த் கிஷோர் பீகார் தேர்தலில் தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறார். எனவே தமிழகத்தில் விஜய்க்காக முழுமையாக செயல்படாத நிலையில் அவர் உள்ளார்.
வருகிற நவம்பர் மாதம் வரை அவர் பீகார் அரசியலில் கவனம் செலுத்துவார் என்று தெரிய வந்துள்ளது. எனவே விஜய்க்காக ஆலோசனை வழங்கும் பணிகளில் இருந்து அவர் தற்காலிகமாக விலகி உள்ளார்.
நவம்பர் மாதத்துக்கு பிறகு அவர் மீண்டும் விஜய்க்கு ஆலோசனை வழங்க வருவார் என்று தெரிகிறது.
- 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் விஜய்யின் தவெக கட்சியும் இணையலாம் என்று பேசப்பட்டது.
- தவெக தலைமையில் கூட்டணி உருவாகும் என்று அக்கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக எதிரெதிர் துருவங்களாக களம் காண்கின்றன. தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணியில் விரிசல் இல்லை. எனினும், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தேர்தல் கூட்டணி தொடர்பாக மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றன.
மறுப்பக்கம் அதிமுக தலைமையில் தேர்தல் கூட்டணி உருவாகி இருக்கிறது. அதில் தற்போது பாஜக இடம்பெற்றுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக மட்டுமின்றி அமமுக இடம்பெற்றுள்ளது. இதுதவிர தேமுதிக கட்சி இன்னும் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தவில்லை. சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி அறிவிக்கப்படும் என்று தேமுதிக தெரிவித்து இருக்கிறது.
இதனிடையே 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் விஜய்யின் தவெக கட்சியும் இணையலாம் என்று பேசப்பட்டது. தவெக தலைவர் விஜய் தனது கட்சி தொடங்கியது முதலே திமுக மற்றும் பாஜக கட்சிகளை மட்டும் கடுமையாக சாடி வந்தார். மேலும், தவெக-வின் அரசியல் எதிரி திமுக என்றும் கொள்கை எதிரி பாஜக என்றும் குறிப்பிட்டார்.
அரசியலில் களமிறங்கியதுமே மாநிலத்தில் திமுக, மத்தியில் பாஜக-வை எதிர்த்து அரசியல் செய்யப்போவதை தவெக தலைவர் விஜய் உறுதிப்பட தெரிவித்துவிட்டார். இதன் காரணமாக 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக கட்சி அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடலாம் என்ற பேச்சு எழுந்தது. வரவிருக்கும் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக அங்கம் வகிக்கும் நிலையில், தவெக அதில் இணையுமா என்ற கேள்வியும் ஒருபக்கம் எழுந்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக தலைமையில் கூட்டணி உருவாகும் என்று அக்கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி எதிர்கொள்ளும் முதல் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி அல்லது தன் தலைமையிலான கூட்டணியுடன் தான் போட்டி என்ற நிலைப்பாட்டில் இருப்பதை தெளிவுப்படுத்தி உள்ளார்.
மேலும், இன்றைய செயற்குழு கூட்டத்தில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய், பாஜக-வுடன் கூட்டணி அமைக்க தவெக ஒன்றும் அதிமுக, திமுக கிடையாது. திமுக மற்றும் பாஜக உடன் கூட்டணி இல்லை என்பதில் ஒருபோதும் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று உறுதிப்பட தெரிவித்தார். இதுவரை தவெக தலைமையிலான கூட்டணியில் வேறு கட்சிகள் இணைந்துள்ளது பற்றி எந்த தகவலும் இல்லை.
தமிழ் திரையுலகில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் கொண்ட உச்ச நடிகராக கட்சி தொடங்கியிருக்கும் விஜய், முதல் சட்டமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்ள போகிறார், தேர்தலில் அவரது தவெக கட்சிக்கு மக்கள் ஆதரவு கிடைக்குமா என்பதை காலம் தான் சொல்லும்.
- 200 தொகுதிகளை குறி வைத்து தி.மு.க. ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கிவிட்டது.
- எடப்பாடி பழனிசாமி வருகிற 7-ந்தேதி கோவை மேட்டுப்பாளையத்தில் பிரசாரத்தை தொடங்க இருக்கிறார்.
சென்னை:
2026 சட்டசபை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராக தொடங்கி உள்ளன.
ஆளும் தி.மு.க. 200 தொகுதிகளை குறி வைத்து ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கிவிட்டது. மேலும், 2 கோடி உறுப்பினர் சேர்க்கை பணிகளையும் தி.மு.க. தீவிரப்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி தலைவர்களும் மக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்ட தயாராகி வருகிறார்கள். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 7-ந்தேதி கோவை மேட்டுப்பாளையத்தில் பிரசாரத்தை தொடங்க இருக்கிறார்.
இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமா..? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், அமித்ஷா, தேர்தலுக்கு இன்னும் போதுமான காலஅவகாசம் இருக்கிறது. எனவே இன்னும் சில காலம் காத்திருங்கள். அனைத்தும் தெளிவாகிவிடும் என்றார்.
இதனை தொடர்ந்து, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தேசிய ஜனநாயக கூட்டணியில் த.வெ.க இணைவதற்கு வாய்ப்புள்ளது. அதற்கான நகர்வுகள் நடைபெறுகிறது என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே, இன்று செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், எங்கள் கூட்டணியில் விஜய் சேருவாரா? என்பதை பொறுத்திருந்து பாருங்கள். தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளது. நல்லதே நடக்கும் என்றார்.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற த.வெ.க. செயற்குழு கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. தலைமையில் கூட்டணி, விஜயே முதலமைச்சர் வேட்பாளர் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனால், விஜய் வருகிற சட்டசபை தேர்தலில் தனித்தே போட்டியிடக்கூடும் என்றும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக என நான்கு முனை போட்டி ஏற்படும் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
- தமிழகம் முழுவதும் நடைபெற இருக்கும் இந்த பொதுக்கூட்டங்கள் த.வெ.க.வின் தேர்தல் களத்துக்கு அடித்தளமாக இருக்கும்.
- த.வெ.க. செயற்குழு கூட்டம் நாளை சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜய் தலைமையில் நடைபெற இருக்கிறது.
சென்னை:
தமிழக அரசியல் களத்தில் தேர்தல் பலப்பரீட்சையில் வென்று கோட்டையை பிடிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் மல்லு கட்ட தொடங்கி உள்ளன.
2026 சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை விஜய் அரசியலுக்கு வந்திருப்பதால் இதுவரை நடந்த தேர்தல்களை விட மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்த தேர்தல் ஏற்படுத்தி இருக்கிறது.
எல்லா கட்சிகளும் எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது? வாக்குகளை எப்படி அறுவடை செய்வது என்பது பற்றி திட்டம் தீட்டி வருகின்றனர். இவை எதையும் கண்டு கொள்ளாமல் கோட்டையை பிடிக்க போவது நான்தான் என்று விஜய் துணிச்சலோடு பயணித்து வருகிறார்.
அவர் எந்த நம்பிக்கையில் இப்படி சொல்கிறார். தேர்தலை சந்திப்பதற்கு அவர் கையில் எடுக்க போகும் வியூகங்கள் என்ன என்பது பற்றி யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அதிரடியாக ஒவ்வொரு கட்டத்திலும் அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மக்களின் பார்வையை அவரது பக்கம் இழுத்து வருகிறது.
திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கி இறந்தது தமிழகத்தையே உலுக்கி இருக்கிறது. இதற்காக எல்லா கட்சிகளும் கண்டனத்தை பதிவு செய்து உள்ளன. த.வெ.க. தலைவர் விஜய் இப்படி திடீரென்று காவலாளி அஜித்குமார் வீட்டில் போய் நிற்பார் என்பதை எந்த அரசியல் தலைவரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
பொதுவாக மக்கள் ஆதரவை பெறுவதற்காக இந்த மாதிரி நேரங்களில் முன்கூட்டியே தெரிவித்து விட்டு செல்வது தான் அரசியல் கட்சிகளின் வாடிக்கை. அதே பாணியில் விஜய்யும் முன் கூட்டியே தெரிவித்து அங்கு சென்றிருந்தால் மிகப்பெரிய அளவில் ஊடக வெளிச்சம் கிடைத்திருக்கும். ஆனால் அதைப் பற்றி அவர் கண்டு கொள்ளவில்லை.
தனது வீட்டில் இருந்து எங்கே கிளம்புகிறார் என்று யாருக்கும் தெரியாத அளவிற்கு முகத்தைக் கூட வெளிக்காட்டாமல் புறப்பட்டு சென்றுள்ளார். பொதுச்செயலாளர் என்.ஆனந்தை மட்டும் உடன் அழைத்து சென்றுள்ளார்.
திடுதிப்பென்று திருப்புவனம் சென்று அஜித்குமார் வீட்டில் போய் நின்று குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிதி உதவி அளித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இதே போல் தேர்தல் களத்தை சந்திப்பதற்கு விஜய் பல வியூகங்கள் வகுப்பார் என்று நம்பப்படுகிறது.
அந்த வகையில் த.வெ.க. கொள்கைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்காக தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் கிராமங்களில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் த.வெ.க. சார்பில் நடைபெற இருக்கிறது.
த.வெ.க.வில் கட்சி ரீதியாக பிரிக்கப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மண்டல வாரியாக நகரங்கள், கிராமங்கள் என முக்கிய இடங்களில் பொதுக்கூட்டம், தெருமுனை பிரசார கூட்டங்கள் நடத்தி அதன் வாயிலாக த.வெ.க. திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல த.வெ.க. தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார்.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை விஜய் உத்தரவின் பேரில் கட்சி பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். கூட்டத்தில் 2026 தேர்தலில் த.வெ.க.வின் கொள்கைகள், மக்கள் பணியில் கட்சியின் முழு ஈடுபாடு, மற்ற அரசியல் கட்சிகளில் இருந்து வேறுபட்டு த.வெ.க. செயல்படுவது, ஆளுங்கட்சியினரின் குறைபாடுகளை மக்களுக்கு எடுத்து சொல்லி ஆதரவு பெறுவது, தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கு விஜய்யின் தனது தொலை நோக்கு திட்டங்கள் குறித்து விளக்குகிறார்கள். த.வெ.க.வை பொறுத்தவரை 2026 தேர்தலுக்கான முதற்கட்ட பிரசார மேடையாக இந்த பொதுக்கூட் டங்கள் அமைய இருக்கிறது. தமிழகம் முழுவதும் நடைபெற இருக்கும் இந்த பொதுக்கூட்டங்கள் த.வெ.க.வின் தேர்தல் களத்துக்கு அடித்தளமாக இருக்கும்.
இந்நிலையில் த.வெ.க. செயற்குழு கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜய் தலைமையில் நடைபெற இருக்கிறது. கூட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் பங்கேற்க இருக்கின்றனர். மேலும் 2026 தேர்தல் திட்டங்கள், சுற்றுப் பயணம், மக்கள் நல பணிகள் மற்றும் அடிப்படை பிரச்சனைகள், தொகுதி பிரச்சனைகள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட இருக்கிறது. தொடர்ந்து கூட்டத்தில் விஜய் அதிரடி அரசியல் பேசுவார் என்பதால் கூட்டத்திற்கு நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
- பல கட்டங்களாக பிரசார சுற்றுப் பயணங்களை மேற்கொள்வதற்கு திட்டங்கள் தயாராகி வருகிறது.
- விஜய் சுற்றுப்பயணத்திற்காக பிரச்சார வேன் தயார் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை:
த.வெ.க. தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு கட்சியின் அடுத்தடுத்த திட்டங்களை அதிரடியாக அறிவித்து வருகிறார்.
விஜய் நடித்து வந்த 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து முழுநேர அரசியலில் ஈடுபட்டு உள்ளார். பொதுக்குழு, செயற்குழு, கோவையில் பூத்கமிட்டி மாநாடு ஆகியவை த.வெ.க. சார்பில் அடுத்தடுத்து நடந்து முடிந்தது. கோவை பூத் கமிட்டி மாநாட்டை தொடர்ந்து கோவையில் விஜய் ரோடுஷோ நடத்தினார். நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அடுத்ததாக மதுரையில் நடந்த ரோடுஷோவிலும் ஏராளமானோர் திரண்டு வந்து விஜய்யை உற்சாகப்படுத்தினர்.
234 தொகுதிகளிலும் அடுத்ததாக 10,12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. அடுத்த கட்டமாக விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செல்ல திட்டமிட்டு உள்ளார்.
சுற்றுப் பயணம் குறித்து கட்சி பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
முதற்கட்ட சுற்றுப் பயணத்தை வருகிற ஆகஸ்டு மாதம் டெல்டா மாவட்டத்தில் இருந்து விஜய் தொடங்க இருக்கிறார். நாகப்பட்டினத்தில் முதல் சுற்றுப் பயணத்தை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விஜய் ஏற்கனவே இலங்கையில் தமிழக மீனவர்கள் தாக்குதலை கண்டித்து நாகப்பட்டினத்தில் மக்கள் இயக்கம் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார். இதைத் தொடர்ந்து அவரது அரசியல் சுற்றுப் பயணமும் நாகப்பட்டினத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து பல கட்டங்களாக பிரசார சுற்றுப் பயணங்களை மேற்கொள்வதற்கு திட்டங்கள் தயாராகி வருகிறது. விஜய் சுற்றுப்பயணத்திற்காக பிரச்சார வேன் தயார் செய்யப்பட்டு உள்ளது. பிரசாரத்தின் போது முக்கிய இடங்களில் பொதுக்கூட்டம் மற்றும் ரோடுஷோ மூலமும் மக்களை சந்திக்க இருக்கிறார்.
முதற்கட்ட சுற்றுப் பயணம் டெல்டா மாவட்டத்திலும் அடுத்த கட்டமாக கொங்கு மண்டலத்திலும் அதற்கடுத்ததாக தென்மாவட்டங்களிலும் விஜய் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார்.
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி பலமாக இருந்து வருகிறது.
இருகட்சிகளும் பணபலத்துடனும், பதவி பலத்துடனும் 2026 தேர்தலை சந்திக்க இருக்கிற நிலையில் விஜய் தனது முகத்தை மூலதனமாக கொண்டு மக்களை சந்திக்க இருப்பது அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
- தி.மு.க. கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி.
- தி.மு.க. கூட்டணியை உடைத்து அவர்கள் கூட்டணிக்கு சில கட்சிகள் வருவார்கள் என பா.ஜ.க. கூறிக்கொண்டிருக்கிறது.
சேலம்:
சேலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 26-வது மாநில மாநாடு ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி தொடங்கி 18-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.
இதில் கட்சியின் அகில இந்திய தலைவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இதையொட்டி சேலத்தில் அதன் லோகோவை அறிமுகப்படுத்திய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் லோகோவை வெளியிட்டு பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது,
அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் முக்கியமான தேர்தல். தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவோம் என்று திரும்ப திரும்ப உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பல தலைவர்களும் கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். கூட்டணியை பலப்படுத்தவும் முயற்சி மேற்கொள்கிறார்கள்.
பா.ஜ.க. விரும்பும் கூட்டணி பலமான கூட்டணியாக அமையும், எதிரிகளால் எதிர்கொள்ள முடியாத கூட்டணியாக அமையும் என்று கற்பனையாக பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர பாரதிய ஜனதா கூட்டணி கருவே உருவாகவில்லை. ஆனால் நாங்கள் ஆட்சி அமைப்போம் என்று கூறி வருகிறார்கள்.
தி.மு.க. கூட்டணி கட்சிகளை உடைத்து அங்கிருந்து பல கட்சிகள் எங்களுக்கு வருவார்கள் என்று பா.ஜ.க. தலைவர்களும் சொல்கிறார்கள்.
தி.மு.க. கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி. தமிழக அரசியல் வரலாற்றில் எந்த கூட்டணியும் இவ்வளவு நாள் நீடித்தது கிடையாது.
இந்த கூட்டணி தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல, கொள்கைக்காக அமைந்த கூட்டணி. 2 பாராளுமன்றத் தேர்தலை வெற்றிகரமாக சந்தித்து வெற்றி பெற்றுள்ளோம். தி.மு.க. கூட்டணி ஒரு போதும் உடையாது.
தி.மு.க. கூட்டணியை உடைத்து அவர்கள் கூட்டணிக்கு சில கட்சிகள் வருவார்கள் என பா.ஜ.க. கூறிக்கொண்டிருக்கிறது.
முருகனை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது பா.ஜ.க. முருகன் மாநாட்டால் பா.ஜ.க. வெற்றிபெற முடியாது. நெருக்கடி நிர்பந்தத்தின் பேரில் அ.தி.மு.க. வலுக்கட்டாயமாக கூட்டணியில் சேர்க்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. மடியில் கனம் இருந்ததால் பா.ஜ.க.வின் நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் தி.மு.க. கூட்டணிக்கு எதிரான மனநிலையில் உள்ள அனைத்து கட்சிகளையும் அ.தி.மு.க. அணியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
- அ.தி.மு.க. கூட்டணியை விரைவாக வலுப்படுத்திவிட வேண்டும் என்பதே எடப்பாடி பழனிசாமியின் எண்ணமாக உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக தயாராகி வருகிறார்.
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பா.ஜ.க. வுடன் மீண்டும் கூட்டணி அமைத்து உள்ள அ.தி.மு.க., இந்த கூட்டணியில் மேலும் பல கட்சிகளை சேர்த்து பலமான கூட்டணியாக உருவாவதற்கு வியூகம் வகுத்து உள்ளது.
இதைத் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பதற்காக ரகசிய பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விஜய், திருமாவளவன் இருவரும் கூட்டணிக்கு வந்து விட்டால் அ.தி.மு.க. அணி வலுவானதாக மாறி விடும் என்கிற எண்ணத்தில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அ.தி.மு.க.வினர் தெரிவித்து உள்ளனர்.
இதற்காக விஜய், திருமாவளவன் இருவருக்கும் கூட்டணியில் உரிய முக்கியத்துவத்தை கொடுப்பதற்கு அ.தி.மு.க. தலைவர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2 துணை முதலமைச்சர் பதவியை உருவாக்கி இருவருக்கும் பிரித்து கொடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரட்டை இலக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தொகுதி கொடுப்பதற்கு அ.தி.மு.க. தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருப்பதால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதற்கு திருமாவளவன் தயக்கம் காட்டி வருகிறார். இருப்பினும் அவரை சமாதானப்படுத்தி கூட்டணியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் சத்தமில்லாமல் நடைபெற்று வருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்து உள்ளனர்.
அதே நேரத்தில் தி.மு.க.வுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் விடுதலை சிறுத்தைகளை எப்படியாவது கூட்டணியில் சேர்த்து விட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியுடன் உள்ளார்.
முக்கிய பிரமுகர்கள், அ.தி.மு.க. ஆதரவு அதிகாரிகள் ஆகியோர் மூலமாக விஜய்யுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக அ.தி.மு.க. மூத்த நிர்வாகி கூறியதாவது:-
தமிழகத்தில் தி.மு.க. கூட்டணிக்கு எதிரான மனநிலையில் உள்ள அனைத்து கட்சிகளையும் அ.தி.மு.க. அணியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக பல்வேறு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் அ.தி.மு.க. கூட்டணியை விரைவாக வலுப்படுத்திவிட வேண்டும் என்பதே பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் எண்ணமாக உள்ளது. வருகிற தேர்தலில் அது நிச்சயம் நிறைவேறி அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- வரும் காலத்தில் இவரால் தான் தமிழகம் தலை சிறக்கும் என நீங்கள் நம்புகிற இளம் தலைவர் யார்?
- நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுவோம் என்று 6 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை:
சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் என்கிற அமைப்பு 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் தொடர்பாக கருத்து கணிப்புகளை நடத்தி உள்ளது.
234 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த பிப்ரவரி 5-ந்தேதி முதல் கடந்த 17 -ந்தேதி வரை 150 நாட்கள் நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பில் 70,922 பேர் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். இந்த கருத்து கணிப்பு முடிவுகளை இந்திய அரசியல் ஜனநாயக யுத்திகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு மற்றும் அவரது குழுவினர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வைத்து வெளியிட்டனர். அதன் விவரம் வருமாறு:-
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வாய்ப்பு இருப்பதாக 77.83 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இவருக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார் என்று 73.30 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்வராக 67.99 சதவீதம் பேரும், பா.ஜ.க. முன்னாள் தலைவரான அண்ணாமலை முதல்வராக 64.58 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் புதிதாக அரசியல் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவரான நடிகர் விஜய் முதலமைச்சராக 60.58 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இவர்களுக்கு அடுத்த படியாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் முதல்வராக 30.80 சதவீதம் பேரும், டாக்டர் அன்புமணி ராமதாஸ் முதல்வராக 19.97 சதவீதம் பேரும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு 17.38 சதவீதம் பேரும், டி.டி.வி. தினகரனுக்கு 16.29 சதவீதம் பேரும், திருமாவளவனுக்கு 14.71 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
வருகிற தேர்தலில் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ள அரசியல் கட்சி எது என்கிற கேள்விக்கு தி.மு.க. அல்லது அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்று 80.74 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

வரும் காலத்தில் இவரால் தான் தமிழகம் தலை சிறக்கும் என நீங்கள் நம்புகிற இளம் தலைவர் யார்? என்கிற கேள்விக்கு அண்ணாமலை முதலிடத்தில் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 2-வது இடத்தில் விஜய், 3-வது இடத்தில் உதயநிதி, 4-வது இடத்தில் சீமான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தற்போதைய அரசியல் சூழலில் யாருக்கு உங்கள் ஓட்டு என்று கேட்கப்பட்ட கேள்விக்கு தி.மு.க.வுக்கு ஓட்டு போடுவோம் என்று 17.7 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள். அ.தி.மு.க.வுக்கு ஓட்ட போடுவாம் என்று 17.3 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களிப்போம் என்று 12.20 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
பா.ஜ.க.வுக்கு 5 சதவீதம் பேரும், காங்கிரசுக்கு 3.10 சதவீதம் பேரும், பா.ம.க.வுக்கு 4.9 சதவீதம் பேரும், கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு 1.4 சதவீதம் பேரும், தே.மு.தி.க.வுக்கு 2.5 சதவீதம் பேரும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுவோம் என்று 6 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பிற கட்சிகளுக்கு ஓட்டு போடுவோம் என 10.16 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
யாருக்கும் ஓட்டு போடப்போவது இல்லை என 6 சதவீதம் பேரும், நோட்டாவுக்கு வாக்களிக்கப் போவதாக 3.3 சதவீதம் பேரும் கூறியுள்ள நிலையில் யாருக்கு ஓட்டு போடுவது என்று இன்னும் தீர்மானிக்கவில்லை என 8.3 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்கிற யூகத்தின்படி நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வலுவான கூட்டணியாக அமைந்தால் தி.மு.க. அணியை விட சிறிதளவு முன்னிலை பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது எனவும் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக 33.60 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க.-பா.ஜ.க., பா.ம.க. கூட்டணிக்கு 28.70 சதவீதம் பேரும் இருவேறு கூட்டணியில் இடம்பெறும் பட்சத்தில் தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சிகளுக்கு 25.3 சதவீதம் பேரும், பிற கட்சிகளுக்கு 12.40 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
- 50 இடங்கள் போக மீதமுள்ள 174 இடங்களிலும் அ.தி.மு.க. களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தமிழகத்தை பொறுத்தவரையில் தனிக்கட்சி ஆட்சி தான் எப்போதுமே நடந்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க. களம் காண்கிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட பா.ஜ.க. நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இந்த முறை அதைவிட கூடுதல் தொகுதிகளில் போட்டியிட அந்தக் கட்சி விரும்புகிறது. குறிப்பாக அ.தி.மு.க. கூட்டணியில் 50 தொகுதிகளை பெறுவதற்கு அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் காய் நகர்த்தி வருகிறார்கள்.
இந்த 50 இடங்களில் சுமார் 40 தொகுதிகளில் பா.ஜ.க. வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மீதமுள்ள 10 தொகுதிகளையும் கூட்டணி கட்சிகளுக்கு ஒன்று, இரண்டு என பிரித்து கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்த 50 இடங்கள் போக மீதமுள்ள 174 இடங்களிலும் அ.தி.மு.க. களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 117 இடங்களில் பா.ஜ.க. போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி அந்தக் கட்சியின் முன்னாள் தலைவரான அண்ணாமலை கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதனை அண்ணாமலையே மறுத்துள்ளார்.
தொகுதி பங்கீடு தொடர்பாக நான் எந்தவிதமான கடிதத்தையும் டெல்லி தலைமைக்கு அனுப்பவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் அ.தி.மு.க. கூட்டணியில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டுப் பெற்று போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியோடு உள்ளனர்.
அ.தி.மு.க. கூட்டணியில் பெறும் 50 இடங்களில் கச்சிதமான தொகுதிகளில் வெற்றி பெற்று விட வேண்டும் என்பதும் அவர்களின் இலக்காக உள்ளது.
அப்போதுதான் கூட்டணி ஆட்சி என்கிற கோஷத்தை தமிழகத்தில் முன்னெடுக்க முடியும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் இதனை அ.தி.மு.க. நிர்வாகிகள் மறுத்துள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரையில் தனிக்கட்சி ஆட்சி தான் எப்போதுமே நடந்துள்ளது.
அ.தி.மு.க.வும் கூட்டணி ஆட்சிக்கு எக்காலத்திலும் சம்மதிக்காது என்று அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். வருகிற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. அதிக இடங்களில் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
- ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தொடங்கியது.
- எந்த கட்சியாக இருந்தாலும் அதிகாரம்தானே இலக்கு.
சென்னை:
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - தி.மு.க.வுக்கு மாற்றாக மக்கள் நலக்கூட்டணி என்ற 3-வது அணி வலுவாக உருவானது. இந்த கூட்டணியில் தே.மு.தி.க., கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்று இருந்தன. மேலும் இந்த கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார்.
ஆனால் இந்த கூட்டணியால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. அதோடு வெறும் 6.1 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று மண்ணை கவ்வியது. அ.தி.மு.க. 136 இடங்களிலும், தி.மு.க. 98 இடங்களிலும் வெற்றி பெற்றது.
ஆனால் இந்த கூட்டணியால் வெற்றி பெற வேண்டிய தி.மு.க தோல்வி அடைந்து, அது ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு உறுதுணையாக இருந்தது என்று இன்றும் தேர்தல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்த படுதோல்விக்கு பிறகு, மக்கள் நல கூட்டணி அடியோடு கலைக்கப்பட்டது. அதன்பின் தே.மு.தி.க. தவிர இந்த கூட்டணியில் இருந்த கட்சிகள் எல்லாம் தி.மு.க.வுடன் இணைந்து தேர்தலை சந்தித்து வருகின்றன. அதனால் கடந்த 2019-ம் ஆண்டு முதல் நடைபெற்ற பாராளுமன்ற, உள்ளாட்சி மற்றும் சட்டசபை தேர்தல் என அனைத்திலும் வெற்றி மகுடம் சூட்டி வருகிறது.
சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கூட்டணி வலுவான வெற்றி கூட்டணியாக இருக்கிறது. கடந்த காலங்களில் இந்த கூட்டணியை உடைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் தவிடு பொடியாக்கப்பட்டது.
ஆனால் பழக, பழக பாலும் புளிக்கும் என்பதுபோல இப்போது தி.மு.க. கூட்டணியிலும் திரைக்கு பின் இருந்த சலசலப்புகள் பொது வெளியில் வெடிக்க தொடங்கி இருக்கிறது. ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் சண்முகம், தி.மு.க.வுக்கு எதிரான கருத்துகளை பொது வெளியில் வைத்து வருகிறார். தி.மு.க. வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், கூட்டணி கட்சிகளால் தி.மு.க. வெற்றி பெறுகிறது என்றும் பகிரங்கமாக கூறினார். இது தி.மு.க.வுக்கு சற்று ஆத்திரத்தை கிளப்பி உள்ளது.
இதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தான், 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பாக 2015-ம் ஆண்டு மக்கள் நலக்கூட்டணி தொடங்க அச்சாரமிட்டது. இப்போது, அதேபோல மீண்டும் மக்கள் நலக்கூட்டணி உருவாக அந்த கட்சி விரும்புகிறது என்று பரபரப்பாக பேசப்படுகிறது. ஏனென்றால் கடந்த 4 ஆண்டுகளாக இந்த கட்சி கூட்டணியில் இருக்கிறது. மக்கள் பிரச்சனைகளை எப்போது வேண்டுமானாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்து கொள்ளலாம். ஆனால் இதுவரை மவுனமாக இருந்து விட்டு, இப்போது தேர்தல் நெருங்கும் வேளையில் ஏன் இப்படி பேச தொடங்குகிறார்கள்? என்ற கேள்வி எழுந்து உள்ளது.
மேலும் சிறிய கட்சிகளை பொறுத்தவரை தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. - தி.மு.க. ஆகிய கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்கு தாங்கள்தான் காரணம் என்று எண்ணுகின்றனர். மேலும் அவர்கள் அதிகாரத்தை ருசிக்கிறார்கள். நமக்கு ஒன்றும் இல்லையே என்று ஏங்குகின்றனர். இது சராசரியாக ஒவ்வொரு கட்சியின் ஏக்கம் தானே? தேன் எடுப்பவன் அதனை ருசிக்க கூடாது என்றால் எப்படி? அதுபோலத்தான் இதுவும்.
எந்த கட்சியாக இருந்தாலும் அதிகாரம்தானே இலக்கு. அந்த அடிப்படையில்தான் மக்கள் நலக்கூட்டணி மீண்டும் உருவாக வாய்ப்பு இருக்கிறது என்று அரசியலை உற்று நோக்குபவர்கள் கூறுகின்றனர். அதாவது ஆட்சியில் பங்கு என்று கோஷமிடும் திருமாவளவன், வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குறை சொல்லும் கம்யூனிஸ்டு, கமல்ஹாசனுக்கு கொடுத்த மேல்சபை எம்.பி. சீட்டை வைகோவுக்கு கொடுத்து இருக்கலாமே என்று ஏக்கப்படும் ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் மீண்டும் ஒன்றிணைத்து மக்கள் நலக்கூட்டணி உருவாக்கும் வாய்ப்பு இருக்கிறது.
அதில் இந்த முறை சீமானின் நாம் தமிழர் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க. ஆகியவற்றையும் சேர்த்து, அதில் த.வெ.க. தலைவர் விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கும் வாய்ப்பும் இருக்கிறது என்று கூறுகின்றனர். இப்படி ஒரு கூட்டணி அமைந்தால், அதற்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதா? என்று விஜய் கட்சியில் இருக்கும் ஒரு முக்கிய பிரமுகர் சர்வே எடுத்துள்ளார்.
அதில் வெற்றி உறுதி என்ற தகவல் அவர்களை மகிழ்ச்சி அடைய செய்து இருக்கிறது. எனவே இது தொடர்பாக அனைத்து கட்சிகளுடன் திரைக்கு பின்னால் பேசப்பட்டு வருகிறது. அதாவது கூட்டணி அமைத்து போட்டியிடலாம், வெற்றிக்கு பிறகு அதிகாரத்தையும் ருசிக்கலாம் என்று ஆசை வலை வீசப்படுகிறது.
மேலும், தி.முக., அ.தி.மு.க. ஆட்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம். அதற்கு இதுவே சரியான தருணம் என்று பேசப்படுகிறது. மக்கள் நலக்கூட்டணி மீண்டும் சாத்தியமா? என்றால், அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதே இதற்கான பதில்.
- திருச்சி மாநகர் மாவட்ட தொண்டர் அணி சார்பில் புத்தூர் நால்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.
- கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகத்தின் செல்வாக்கு தொடர்பான சர்வே நடத்தப்பட்டது.
தமிழக அரசியல் களத்தில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி உள்ளது. நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்த வருகின்றனர்.
தமிழக வெற்றிக்கழக முதல் மாநாடு பிற அரசியல் கட்சிகளை மிரள வைத்தது. சமீபத்தில் அதிமுக மற்றும் திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள், ஐ.ஆர்.எஸ். அதிகாரி போன்ற பிரபலங்கள் கட்சியில் இணைந்தது அக்கட்சியினருக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் வருகிற 22-ந் தேதி விஜய் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட தமிழகம் முழுவதும் தொண்டர்கள் தயாராகி வருகின்றனர். திருச்சியிலும் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. வருகிற சட்டமன்றத் தேர்தலில் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருச்சி மாநகர் மாவட்ட தொண்டர் அணி சார்பில் புத்தூர் நால்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. அதில் ஜூன் 22-ந்தேதி பிறந்தநாள் காணும் திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி மக்களின் மனம் கவர்ந்த வேட்பாளரே வாழ்க பல்லாண்டு என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
இதனால் விஜய் ஸ்ரீரங்கத்தில் போட்டியிடுகிறாரா என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. ஆனால் நிர்வாகிகள் தரப்பில் கேட்டபோது, மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டால் விஜய்யை வெற்றி பெற வைப்போம் என நம்பிக்கை தெரிவித்தனர்.
கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகத்தின் செல்வாக்கு தொடர்பான சர்வே நடத்தப்பட்டது. இதில் திருச்சி கிழக்கு, கடலூர், சிதம்பரம், கன்னியாகுமரி உள்ளிட்ட சில தொகுதிகள் அக்கட்சிக்கு பெரும் சாதகமாக இருப்பது தெரிய வந்தது.
குறிப்பாக சென்னை, வடதமிழகம், கொங்கு மண்டலத்திலும் செல்வாக்கு அதிகம் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவித்தன. ஆகவே விஜய் திருச்சியை தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையே திருச்சியை போன்று கடலூர், மதுரை போன்ற மாவட்டங்களிலும் விஜய் போட்டியிட வலியுறுத்தி அக்கட்சியினர்கள் சுவரொட்டி ஒட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என இதுவரை உறுதியாகவில்லை என கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.