என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக சட்டசபை தேர்தல் 2026"

    • தேர்தல் கமிஷனர் குழு முதல் முதலாக அசாமில் ஆய்வை மேற்கொண்டது.
    • 5 மாநிலங்களிலும் நடத்தப்பட்ட ஆய்வை மறு ஆய்வு செய்து தேர்தல் தேதிகளை முடிவு செய்வார்.

    தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் கேரளா ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் மே மற்றும் ஜூன் மாதத்தில் முடிவடைகிறது.

    மேற்கு வங்காளம் மாநிலத்தின் சட்டசபை மே 7-ந் தேதியும், தமிழக சட்டசபை மே 10-ந்தேதியும், அசாம் மாநில சட்டசபை மே 20-ந் தேதியும், கேரள சட்டசபை மே 23-ந்தேதியும் நிறைவு பெறுகிறது. புதுச்சேரி சட்டசபையில் பதவிக்காலம் ஜூன் மாதம் 15-ந் தேதி முடிவடைகிறது.

    இதனால் இந்த 5 மாநிலங்களுக்கும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்தலை நடத்தி முடித்திட தேர்தல் கமிஷன் முனைப்போடு பணியாற்றி வருகிறது.

    மாநில பொதுத்தேர்தல்களை முன்னிட்டு இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் தனது குழுவினரோடு சென்று அந்தந்த மாநிலங்களில் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை, தேர்தல் நடத்துவதற்கு தகுந்த நாட்களை ஆய்வு செய்வது வழக்கம்.

    அங்கு தேர்தல் நடத்தும் சமயத்தில் உள்ளூர் விடுமுறைகள், பாரம்பரிய கலாசார விழாக்கள் ஏதேனும் இருக்கிறதா?, தேர்வுகள் ஏதேனும் பாதிக்கப்படுமா? என்பதை எல்லாம் அவர்கள் ஆய்வு செய்வார்கள்.

    இதன்படி மேற்கண்ட 5 மாநில தேர்தல் தேர்தலை முன்னிட்டு தேர்தல் கமிஷனர் குழு முதல் முதலாக அசாமில் ஆய்வை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆய்வு நடத்தியது.

    இந்தநிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் கேரளாவிலும், 9 மற்றும் 10-ந் தேதிகளில் மேற்கு வங்காளத்திலும் ஆய்வை நடத்துகிறது.

    இந்த ஆய்வுகளில் தேர்தல் கமிஷன் குழுவினரோடு பதிவு பெற்ற அரசியல் கட்சிகள், அமலாக்க நிறுவனத் தலைவர்கள், போலீஸ் உயரதிகாரிகள், மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர் மற்றும் பாதுகாப்பு அதிகாரியான போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள்.

    இவர்களுடனான கலந்தாலோசனைக்குப் பிறகு தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் டெல்லி சென்று, 5 மாநிலங்களிலும் நடத்தப்பட்ட ஆய்வை மறு ஆய்வு செய்து தேர்தல் தேதிகளை முடிவு செய்வார்.

    இதனால் தேர்தல் தேதி அறிவிப்பு 10-ந்தேதிக்கு பிறகு எந்த நேரத்திலும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக வருகிற 13-ந் தேதி தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

    • தமிழ்நாட்டில் 2.87 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர்.
    • ஒரு கோடி வாக்காளர்கள் 22-29 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

    சென்னை:

    தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தொடர்பாக சென்னையில் 2 நாட்கள் ஆலோசனை நடத்திய நிலையில், சென்னையில் தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா, ஜனநாயகத்தின் தாய்.

    * தமிழ்நாட்டில் நடைபெற உள்ள ஜனநாயகத் திருவிழாவை மக்கள் கொண்டாட வேண்டும்.

    * தமிழ்நாட்டில் SIR பணியை சிறப்பாக மேற்கொண்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டு.

    * தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் சிறப்பான முறையில் நடைபெற்றது.

    * தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் இருக்கின்றனர்.

    * தமிழ்நாட்டில் 2.87 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர்.

    * ஒரு கோடி வாக்காளர்கள் 22-29 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

    * 18 முதல் 19 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் தமிழ்நாட்டில் 12.5 லட்சம் பேர் இருக்கிறார்கள்.

    * 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

    * வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ண புகைப்படம் இருக்கும் என்பதால் வாக்களிக்க எளிது.

    * 2 மணிநேரத்திற்கு ஒரு முறை வாக்குப்பதிவு நிலவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.

    * தபால் வாக்குகள் இரண்டு கட்டங்களாக எண்ணப்படும் என்றார்.

    * இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகிற்கே முன்னுதாரணமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் என்றார். 

    • தமிழ்நாடுதான் விஜய், விஜய்தான் தமிழ்நாடு!
    • தூயசக்தி தவெக-வுக்கும், தீய சக்தி திமுக-வுக்கும்தான் போர்!

    வேலூரில் நடைபெற்ற தவகெ கூட்டத்தில், திமுக-வையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் நேரடியாக தாக்கிப்பேசிய விஜய், உண்மையில் இந்த தேர்தல் எதுக்கான தேர்தல் என்று சொல்லட்டுமா..? எனக் கேள்வி எழுப்பி தொடர்ச்சியாக உரையாற்றினார்.

    இந்த தேர்தல் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழலுக்கும் நடக்கும் போர். தமிழ்நாட்டு மக்களுக்கும் லஞ்சத்துக்கும் நடக்கும் போர். தமிழ்நாட்டு மக்களுக்கும் சரியாக நிர்வாகம் செய்யத் தெரியாத திமுக-வுக்கும் நடக்கும் போர். அதாவது தமிழ்நாட்டு மக்களுக்கும் உங்க ஆட்சிக்கும் நடக்கும் போர். தமிழ்நாட்டு மக்களுக்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் போர். இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் போர். இதற்கு நடுவில் டெல்லி, என்டிஏ.. போன்றவை என்ன லாஜிக் என்றே புரியவில்லை சார். தமிழ்நாடுதான் விஜய், விஜய்தான் தமிழ்நாடு. தூயசக்தி தவெக-வுக்கும், தீய சக்தி திமுக-வுக்கும் தான் இந்த போர் என்று தவெக தலைவர் விஜய் ஆக்ரோஷமாக பேசினார்.

    விஜய்யின் உரையை கேட்ட தவெக தொண்டர்கள், கைதட்டி ஆர்ப்பரித்தனர்.

    • பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில குழு
    • தலைவராக முன்னாள் எம்பியும், மாநில துணைத் தலைவருமான துரைசாமி நியமனம்

    தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் கட்சிகளை இணைக்க குழு அமைத்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    "வருகின்ற சட்டமன்ற தேர்தல்-2026-ஐ சிறப்பாக எதிர்கொண்டு, மகத்தான வெற்றியினை பெற்றிடும் வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் பல அமைப்புகள் இணைய விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அமைப்பு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வலுசேர்த்திட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில குழு அமைக்கப்படுகிறது." என தெரிவித்துள்ளார்.

    இக்குழுவிற்கு தலைவராக முன்னாள் எம்பியும், மாநில துணைத் தலைவருமான துரைசாமியும், துணைத்தலைவராக முன்னாள் டிஜிபி பாலச்சந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

    • தேர்தலுக்கு முன் அரசியல் கட்சிகள் இலவச வாக்குறுதிகளை அறிவிக்கின்றன.
    • இதுபோன்ற அறிவிப்புகளால் மாநில அரசுக்கு அதிக நிதிச்சுமை ஏற்படுகிறது.

    சென்னை:

    நாடு முழுவதும் வாக்காளர்களைக் கவரும் நோக்கில் பல்வேறு அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு கவர்ச்சிகரமான திட்டங்களையும், இலவச அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றன. இதனால் ஏற்படும் தாக்கம் குறித்து ஏற்கனவே பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் சார்பில் வக்கீல் ஜெயசுகின், நரேந்தர்குமார் வர்மா ஆகியோர் தாக்கல் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், அரசியல் கட்சிகள் வெளியிடும் இலவச அறிவிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:

    தேர்தலுக்கு முன் இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதால் மாநில அரசுக்கு நிதிச்சுமை ஏற்படுகிறது.

    அறிவிக்கப்படும் இலவச வாக்குறுதி திட்டங்களால் ஏற்படும் நிதிசார் பாதிப்புகள், அதற்கான நிதி முதலீடு குறித்து அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும்.

    எனவே, தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன் இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு தடை விதிக்க மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும்.

    தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன் இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதை தடுக்க தேர்தல் நடத்தை விதிகளைத் திருத்தவேண்டும்.

    இலவச வாக்குறுதி திட்டங்களின் சாத்தியக் கூறுகளை ஆராய நிதி ஆயோக், ரிசர்வ் வங்கி போன்றவற்றின் நிபுணர்களைக் கொண்ட சுதந்திரமான குழுவை கொண்டு ஆராய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள இதே கோரிக்கைகள் கொண்ட வழக்குகளுடன் இந்த மனுவை இணைத்து விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிகிறது.

    • இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7, 2026 அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் மே 10, 2026 அன்று முடிவடைகிறது.

    தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் திருத்தப் பணிகள் (Special Intensive Revision) தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7, 2026 அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இறுதிப் பட்டியல் வெளியான பிறகு, பிப்ரவரி மாதத்தின் இரண்டாம் பாதியில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக் குழு தமிழகம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் பாதுகாப்பு மற்றும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவார்கள்.

    சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் தமிழகம் வரும் தேர்தல் ஆணைய அதிகாரிகள்

    மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் மே 10, 2026 அன்று முடிவடைகிறது. அதற்கு முன்பாக புதிய அரசு அமைய வேண்டும்.

    பொதுவாக ஏப்ரல் மாதக் கோடை விடுமுறை மற்றும் தேர்வுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தேதிகள் நிர்ணயிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் மீண்டும் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் போட்டியிடவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்துள்ளார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, கட்சியில் பணியாற்றும் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் தேர்தலில் போட்டியிடவும், சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் மீண்டும் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் போட்டியிடவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் செந்தில் பாலாஜி தனது தொகுதியை மட்டுமல்லாமல், தான் போட்டியிடும் மாவட்டத்தையே மாற்றத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, அவர் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் போட்டியிடுவதற்கான வியூகங்களை வகுத்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

     

    மேற்கு மண்டலத்திற்கான தி.மு.க. பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி கோவையில் தி.மு.க.வின் "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" போன்ற கட்சி நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். எதிர்வரும் தேர்தல்களில் தி.மு.க.வின் பலத்தை மேற்கு மண்டலத்தில் வலுப்படுத்தும் பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.

    2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராகவும், பின்னர் தி.மு.க. ஆட்சியில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராகவும் செந்தில் பாலாஜி பதவி வகித்துள்ளார். தற்போது கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ள செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியே வந்த நிலையில், ஏப்ரல் மாதம் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், உட்கட்சி பூசல்களை தவிர்ப்பது மிக மிக அவசியம்.
    • பாஜக ஆலோசனை கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கவில்லை.

    டெல்லியில் தமிழக பாஜக உயர்மட்டக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். கூட்டணியை வலுப்படுத்துவது, தேர்தலுக்கு தயாராவது, கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

    அப்போது, உட்கட்சி பூசல்களை களைய வேண்டும் என்று நயினார் நாகேந்திரன், எல் முருகன், பொன், ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோருக்கு அமித் ஷா அறிவுரை வழங்கினார்.

    இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், " தமிழக பாஜக நிர்வாகிகளிடையே கருத்து வேறுபாடு, உட்கட்சி பூசல்கள் அதிகரிப்பது கட்சியின் வளர்ச்சிக்கு நல்லதல்ல.

    தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், உட்கட்சி பூசல்களை தவிர்ப்பது மிக மிக அவசியம்.

    கருத்து வேறுபாடு, உட்கட்சி பூசல்களை தவிர்ப்பது மிகமிக நல்லது" என்றார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
    • கூட்டணி, பிரச்சாரம் என அனைத்து அரசியல் கட்சிகளும் வேலை செய்து வருகின்றன.

    சென்னை:

    தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையடுத்து, கூட்டணிகள், பிரச்சாரங்கள் என அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக வேலை செய்து வருகின்றன.

    ஏற்கனவே, அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. சார்பில் அன்புமணி ராமதாஸ், தே.மு.தி.க சார்பில் பிரேமலதா ஆகியோர் தங்களது சுற்றுப்பயணங்களை செய்து வருகின்றனர்.

    தமிழக பா.ஜ.க. தலைவரான நயினார் நாகேந்திரன் ஆகஸ்ட் 17-ம் தேதி நெல்லையில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். நேரடியாக மக்களை களத்தில் சந்தித்து பா.ஜ.க. சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை எடுத்துரைக்க உள்ளார்.

    இதற்கிடையே, சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக 4777 என்ற எண் கொண்ட பிரசார வாகனத்தை நயினார் நாகேந்திரனுக்காக தயார் செய்துள்ளார்

    இந்நிலையில், பிரசார வாகனத்தின் எண் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய காரின் எண் என்பதை அறிந்த நயினார் நாகேந்திரன் ஆர்வமாக அதில் பா.ஜ.க. கொடியை பொருத்தி வாகனத்தை இயக்கிப் பார்த்தார்.

    • கட்சி பெயர் முடிவாகி விட்ட நிலையில் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் தெளிவுப்படுத்த விஜய் விரும்புகிறார்.
    • 2026-ம் ஆண்டு தேர்தல்தான் இலக்கு என்பதால் ஒவ்வொரு நடவடிக்கையையும் பொறுமையாக செய்வதற்கு நடிகர் விஜய் திட்டமிட்டு இருக்கிறார்.

    சென்னை:

    தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக திகழும் விஜய் மக்கள் நலப்பணிகளில் தனது ரசிகர்களை ஈடுபடுத்தி வந்தார். இதற்காக அவர் "விஜய் மக்கள் இயக்கம்" என்ற பெயரில் ஏற்கனவே அமைப்பு ஒன்றை நடத்தி வந்தார்.

    தமிழ்நாடு விஜய் ரசிகர்கள் இந்த அமைப்பு மூலம் மக்கள் நலப்பணிகளை செய்து வந்தனர். இந்த இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற அவர் முடிவு செய்தார்.

    கடந்த சில மாதங்களாக இதற்காக அவர் பல்வேறு பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தினார். தமிழக அரசியல் கள நிலவரம் பற்றிய ஆய்வு ஒன்றையும் அவர் மேற்கொண்டார். பிறகு தனது விஜய் மக்கள் இயக்கத்தை பலப்படுத்தினார்.

    அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து நேற்று அவர் புதிய அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார். அவர் தொடங்கிய கட்சிக்கு "தமிழக வெற்றி கழகம்" என்று பெயரிட்டுள்ளார். நேற்று மதியம் தேர்தல் ஆணையத்திலும் இந்த புதிய கட்சியை பதிவு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின.

    பாராளுமன்றத்துக்கு வருகிற ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. நடிகர் விஜய் தொடங்கி உள்ள கட்சி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவது இல்லை என்று நடிகர் விஜய் தனது திட்டத்தை வெளியிட்டுள்ளார்.

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலே தனது இலக்கு என்றும் அவர் தெளிவுப்படுத்தி உள்ளார். பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு புதிய கட்சியின் நடவடிக்கைகள் செயல்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் விஜய் சுட்டிக்காட்டி உள்ளார்.

    கட்சியின் கொள்கைகள், கொடி, சின்னம் மற்றும் செயல் திட்டங்களை முன் வைத்து அரசியல் பயணம் தொடங்கும் என்றும் நேற்று நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருந்தார்.


    அரசியலில் ஈடுபட போவதாகவும் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும் விஜய் கூறியிருக்கிறார். தற்போது அவர் கைவசம் உள்ள படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் முடிவடைய உள்ளன. அதன் பிறகு நடிகர் விஜய் தீவிரமாக தேர்தல் களத்துக்கு வருவார் என்று தெரியவந்துள்ளது.

    கட்சி பெயர் முடிவாகி விட்ட நிலையில் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் தெளிவுப்படுத்த விஜய் விரும்புகிறார். மேலும் கட்சிக்காக வலுவான சட்ட விதிகளை உருவாக்கும் முயற்சிகளிலும் மேற்கொண்டு உள்ளார். திராவிட கழகங்கள், இஸ்லாமிய கட்சிகள், தலித் கட்சிகளின் கொள்கைகளின் அடிப்படையில் விஜய் கட்சியின் கொள்கைகள் அமையும் என்று தெரியவந்துள்ளது.

    இதற்கிடையே கட்சி கொடியை வடிவமைத்து மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் திட்டத்தையும் நடிகர் விஜய் வைத்துள்ளார். கட்சி கொடியை வடிவமைக்கும் விஷயத்தில் மற்றவர்களின் கருத்துகளை கேட்டாலும் விஜய்யின் முடிவுதான் இறுதி முடிவாக இருக்கும் என்று அவரது கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

    கட்சி கொள்கை, கட்சி கொடி போன்றவற்றை வெளியிட்ட பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்லும் திட்டத்தையும் நடிகர் விஜய் வைத்துள்ளார். வருகிற ஜூலை அல்லது ஆகஸ்டு மாதம் நடிகர் விஜய் சுற்றுப்பயணம் தொடங்குவார் என்று தெரிகிறது. நடிகர் விஜய்யின் சுற்றுப்பயணத்தை வரையறுத்து வருகிறார்கள். 234 தொகுதிகளுக்கும் செல்லும் வகையில் விஜய்யின் சுற்றுப்பயணம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 2011-ம் ஆண்டு நாகப்பட்டினத்தில் விஜய் தனது ரசிகர்கள் கூட்டத்தை திரட்டினார். மீனவர்களுக்கு ஆதரவாக நடந்த அந்த கூட்டம் திராவிட கட்சிகளை அதிர்ச்சி அடைய செய்யும் வகையில் இருந்தது. அதன் பிறகு விஜய் அந்த அளவுக்கு தனது ரசிகர்களை எந்த இடத்திலும் கூட்டவில்லை.

    தற்போது அரசியலுக்கு வந்து இருப்பதால் ரசிகர்கள், பொதுமக்களை ஒரே இடத்தில் திரட்டி மிக பிரமாண்டமான பொதுக்கூட்டத்தை நடத்த விஜய் திட்டமிட்டு இருக்கிறார். அந்த முதல் பொதுக்கூட்டம் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று நடிகர் விஜய் கருதுகிறார். இதற்காக தனி குழு ஒன்று திட்டமிட்டு வருகிறது.

    ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை திரட்டும் அந்த மாநாடு வழக்கமாக திராவிட கட்சிகள் நடத்தும் மாநாடு போல அமையாமல் மாறுபட்ட வகையில் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று விஜய் கருதுகிறார். குறிப்பாக இளைஞர்களை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்று திட்டமிடுகிறார்.

    அந்த வகையில் திருச்சி அல்லது கடலூரில் முதல் மாநாட்டை நடத்த நடிகர் விஜய் விரும்புகிறார். இந்த 2 நகரங்கள் தவிர வேறு ஏதாவது இடத்தில் முதல் மாநாட்டை நடத்தலாமா? என்றும் ஆலோசனை நடந்து வருகிறது.

    முதல் மாநாட்டுக்கான தேதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. 2026-ம் ஆண்டு தேர்தல்தான் இலக்கு என்பதால் ஒவ்வொரு நடவடிக்கையையும் பொறுமையாக செய்வதற்கு நடிகர் விஜய் திட்டமிட்டு இருக்கிறார்.

    அரசியலில் அவரது ஒவ்வொரு நகர்வும் "கப்பு முக்கியம் பிகிலு" என்று அவர் ஒரு படத்தில் உச்சரிக்கும் வசனத்தை பிரதிபலிப்பது போல அமைந்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நாம் தமிழர் கட்சிக்கு மிகவும் முக்கியமான தேர்தலாகும்.
    • கொள்கைகளோடு ஒத்துப்போகும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும் நாம் தமிழர் கட்சி தயாராக உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பரபரப்பு இப்போதே ஏற்பட தொடங்கி இருக்கிறது.

    அந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும், நேருக்கு நேர் மோதுவதற்கு தயாராகி வரும் நிலையில் பாரதிய ஜனதா தலைமையிலான அணியும் களம் காண உள்ளது.

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் களமிறங்கப் போவதாக அறிவித்துள்ளார். அவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் கைகோர்க்க இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது.

    இது தொடர்பாக ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் கூட்டணி தொடர்பான இறுதி அறிவிப்புகள் வெளியாக இருப்பதாகவும் கூறப்பட்டது.

    இந்த நிலையில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் முதல் தேர்தல் என்பதால் விஜய் தனித்தே களமிறங்க முடிவு செய்து இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. தேர்தலில் தனித்து போட்டியிட்டு தனது பலம் என்ன? என்பதை பார்த்து விட்டு அதன் பிறகு கூட்டணி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தலாம் என்றே விஜய் முடிவு செய்திருப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுடன் நல்ல நட்பில் இருக்கும் விஜய், கூட்டணி அமைக்கும் விஷயத்தில் போதிய ஆர்வம் காட்டாமல் நழுவி சென்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறும்போது, 8 சதவீத வாக்குகளை பெற்றுள்ள நாம் தமிழர் கட்சி 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எத்தனை சதவீத ஓட்டுகளை பெறப்போகிறது? என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

    தற்போதைய நிலையில் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நாம் தமிழர் கட்சிக்கு மிகவும் முக்கியமான தேர்தலாகும்.

    எங்களோடு கூட்டணி அமைப்பதற்கு பல கட்சிகள் இப்போதே ஆர்வம் காட்டி உள்ளன. எங்கள் கொள்கைகளோடு ஒத்துப்போகும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும் நாம் தமிழர் கட்சி தயாராக உள்ளது.

    அதே நேரத்தில் கூட்டணிக்கு யாரும் வராவிட்டாலும் எப்போதும் போல தனித்து களம் காணவும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்றார்.

    விஜயுடனான கூட்டணி பற்றி அவர் மேலும் கூறும்போது, தி.மு.க. அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளையும் வீழ்த்துவதற்கு புதிதாக ஒரு அணி உருவானால் அதனுடன் விஜயும் கைகோர்த்தால் நன்றாக இருக்கும் என்பதே அனைவரது எண்ணமாகவும் உள்ளது. அதையே நாங்களும் விரும்புகிறோம் என்றும் தெரிவித்தார். இருப்பினும் விஜய் எங்களோடு சேரப் போகிறாரா? இல்லையா? என்பது அவர் எடுக்க வேண்டிய முடிவு என்றும் கூறினார்.

    2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தனது ரசிகர் பட்டாளங்கள் மற்றும் புதிய வாக்காளர்களின் ஆதரவோடு களம் காண்பது உறுதியாகி இருப்பதால் தேர்தல் களம் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    விஜயின் அரசியல் பயணம் தமிழக அரசியலில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது? என்பது அனைவரது மத்தியிலும் பேசு பொருளாகவும் மாறி உள்ளது.

    விஜய் தனித்து களம் காணும் பட்சத்தில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் பல முனை போட்டி நிலவி வாக்குகள் சிதறும் சூழல் உருவாகி உள்ளது. இது யாருக்கு சாதகமாக அமையப் போகிறது? என்பதும் மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்து உள்ளது. முதல் தேர்தலிலேயே விஜய் முத்திரை பதிப்பாரா? என்பதும் புதிய வாக்காளர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விஜய் எனது தம்பி, பல முறை அவருக்கு ஆதரவாக நான் பேசியுள்ளேன்.
    • நல்ல தலைவர்கள் இல்லை என்று விஜய் கூறவில்லை. போதிய தலைவர்கள் இல்லை என்றுதான் கூறியுள்ளார்.

    சென்னை:

    நடிகர் விஜய் வழங்கி வரும் கல்வி ஊக்கத் தொகையை பாராட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை இன்று வெளியிட்டிருந்தார். அதில் குறிப்பிட்டிருப்பதாவது:-

    கல்வி என்பது மானுட உரிமை! அதைக் கொடுக்க மறுப்பது மாபெரும் கொடுமை; கல்வியை அனைவருக்கும் தரமாக, சரியாக, சமமாக வழங்க வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயக் கடமை!

    ஆனால், தற்காலச்சூழலில் கல்வி என்பது தனியார் மயமாக்கப்பட்டு, மதிப்புக் கூட்டப்பட்ட விற்பனை பண்டம்போல, கல்விக் கட்டணம் என்ற பெயரில் பெரும் பகற்கொள்ளை நடக்கின்றது;

    'பணம் படைத்தவர்களால் மட்டுமே தரமான கல்வியைப் பெற முடியும், ஏழைகளுக்கு நல்ல கல்வி என்பது எட்டாக்கனி' எனும் ஏற்றத்தாழ்வு மிகுந்த சமகாலத்தில், ஏழை - பணக்காரர் என்ற எவ்வித பாகுபாடுமின்றி, தமிழ்நாடு முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ - மாணவியரை அழைத்து, பாராட்டுச்சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித் தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப் பணியைச் செய்யும், என்னுயிர் இளவல், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், என் அன்புத்தளபதி விஜய்க்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த பாராட்டு தொடர்பாக சீமான் அளித்துள்ள பேட்டியில், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் விஜயுடன் கூட்டணி அமைப்பதற்கான அஸ்திவாரமாக இதனை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். இதுபற்றி சீமான் மேலும் கூறியிருப்பதாவது:-

    கல்வியில் சிறந்த மாணவர்களை அழைத்து விஜய் பாராட்டி வருவது உன்னதமான பணியாகும்.

    2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜயுடனான கூட்டணிக்கு அஸ்திவாரமாக தான் அவரை பாராட்டியதை எடுத்துக் கொள்ளலாமா? என்று கேட்கிறீர்கள். அப்படியும் எடுத்துக் கொள்வதில் தவறு எதுவுமில்லையே, நிச்சயமாக எடுத்துக் கொள்ளலாம்.

    இருப்பினும் விஜய் எனது தம்பி, பல முறை அவருக்கு ஆதரவாக நான் பேசியுள்ளேன். அவரது பெயரில் தபால் தலை வெளியிட்ட போது பலரும் எதிர்த்தனர். ஆனால் நான்தான் அதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தேன். 'கத்தி', 'தலைவா' படங்களுக்கு எதிர்ப்பு வந்தபோதும் அவருக்கு ஆதரவாக நின்றேன். தமிழகத்தில் நல்ல தலைவர்கள் இல்லை என்று விஜய் கூறவில்லை. போதிய தலைவர்கள் இல்லை என்றுதான் கூறியுள்ளார்.

    போதை பொருள் தொடர்பான அவரது பேச்சு மாணவர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

    இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

    பின்னர் அவரிடம் 2026-ம் ஆண்டு தேர்தலில் விஜயுடன் கூட்டணி... என்று கூறி இருப்பதை கூட்டணி உறுதி என்று எடுத்துக் கொள்ளலாமா? என்று கேட்டபோது அதுபற்றி இதற்கு மேலும் கூற முடியாது. தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளன. அப்போது தான் பேசி முடிவெடுப்போம் என்றார்.

    விஜயுடனான கூட்டணி பற்றி சீமான் தெரிவித்துள்ள இந்த கருத்து அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×