என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய ஜனநாயக கூட்டணி"

    • தேர்தல் நேரத்தில் இந்த மாதிரி பல யூகங்கள், பேச்சுக்கள் வரத்தான் செய்யும்.
    • தி.மு.க.வுடன் கூட்டணி இருக்குமா என்பதை தற்போதைய நிலையில் உறுதிப்படுத்த முடியாது.

    சென்னை:

    டாக்டர் அன்புமணி தரப்பு பா.ம.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணியை உறுதிப்படுத்தி உள்ளது. எனவே டாக்டர் ராமதாஸ் தரப்பு பா.ம.க. எந்த பக்கம் செல்லும் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் உள்ளது.

    தி.மு.க.வுடனும், த.வெ.க.வுடனும் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் அ.தி.மு.க. அணியில் இணைப்பதற்கான முயற்சியும் நடைபெறுகிறது என்ற பேச்சு அடிபடுகிறது.

    இது பற்றி சென்னையில் முகாமிட்டு உள்ள டாக்டர் ராமதாசிடம் இன்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் கூறியதாவது:-

    தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? என்கிறீர்கள். தேர்தல் நேரத்தில் இந்த மாதிரி பல யூகங்கள், பேச்சுக்கள் வரத்தான் செய்யும். இதில் உண்மையும் இருக்கும். பொய்யும் இருக்கும். தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் இல்லை என்று இன்னும் நான் முடிவு எடுக்கவில்லை.

    விரைவில் முடிவு எடுப்போம். நாட்களும் போய்க்கொண்டுதான் இருக்கிறது. புதிய கூட்டணிக்கு செல்வோமா என்பதை பொறுத்தவரை தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம். நடக்காமலும் போகலாம். புதிய கூட்டணி ஏற்படுமா என்பதற்கு பொறுத்து இருந்து பதில் சொல்கிறேன்.

    தி.மு.க.வுடன் கூட்டணி இருக்குமா என்பதை தற்போதைய நிலையில் உறுதிப்படுத்த முடியாது என்றார்.

    டாக்டர் ராமதாஸ் சென்னையில் முகாமிட்டு உள்ளார். அவரை கூட்டணியில் இழுப்பதற்கு பல கட்சிகளை சேர்ந்தவர்களும் ரகசியமாக பேசி வருவதாக கூறப்படுகிறது.

    • தமிழக அரசு அறிவித்துள்ள ஓய்வூதிய திட்டம் என்பது ஏமாற்று வேலை.
    • திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் 5.5 லட்சம் கோடி கடன் அதிகரித்துள்ளது.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

    * அமித்ஷாவை சந்தித்து தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து பேசினேன்.

    * தமிழகத்தில் தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பதற்காக வலுவாக கூட்டணி அமைத்துள்ளோம்.

    * தி.மு.க. வை வீழ்த்தி 2026-ல் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்.

    * தமிழக அரசு அறிவித்துள்ள புதிய பென்சன் திட்டத்தில் அரசு ஊழியர்களின் பங்களிப்பு உள்ளது.

    * மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை மாற்றி அமல்படுத்துகின்றனர்.

    * தமிழக அரசு அறிவித்துள்ள ஓய்வூதிய திட்டம் என்பது ஏமாற்று வேலை.

    * பழைய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களின் பங்களிப்பு கிடையாது.

    * திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் பல மடங்கு அதிகரித்து விட்டது.

    * திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் 5.5 லட்சம் கோடி கடன் அதிகரித்துள்ளது.

    * அதிமுகவில் மீண்டும் சசிகலாவை இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை.

    * ஓ.பன்னீர்செல்வத்தையும் அதிமுகவில் இணைக்கும் பேச்சிற்கு இடமில்லை.

    * சசிகலா, ஓபிஎஸ் இல்லாமலே அதிமுக வலுவாக உள்ளது.

    * அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக ஒரு போதும் தலையிடாது.

    * அனைத்து கட்சிகளும் கூட்டணியில் இணைந்த பின்னர் தொகுதி பங்கீடு குறித்து அறிவிக்கப்படும்.

    * தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால் அதிமுக தலைமையில் தான் ஆட்சி.

    * தமிழகத்தில் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை என்பதில் மாற்றமில்லை.

    * யாருடன் பேச்சுவார்த்தை என்ற கேள்விகளுக்கு தற்போது பதிலளிக்க முடியாது.

    * பேச்சுவார்த்தை முடிந்து ஒப்பந்தம் ஏற்பட்டதும் முறையாக அறிவிக்கப்படும் என்றார். 



    • எங்கள் வீட்டு பிள்ளைக்கு பெண் பார்க்கும் மேட்ரிமோனியல் வேலையை யாரும் பார்க்க வேண்டாம்.
    • ஆண்டிபட்டி தொகுதியில் கண்டிப்பாக அ.ம.மு.க. போட்டியிட்டு வெற்றி பெறும்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

    தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.ம.மு.க.வுக்கு 6 இடங்கள் ஒதுக்கீடு செய்து போட்டியிட போவதாக வெளியாகும் செய்தி உண்மையானதல்ல. நான் ஏற்கனவே கூட்டணி குறித்து பிப்.24ம் தேதிக்கு பிறகு அறிவிப்பதாக தெரிவித்துள்ளேன். கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு வெற்றி, தோல்விகளை இந்த இயக்கம் சந்தித்துள்ளது. கடந்த தேர்தலில் யார் ஆட்சிக்கு வரக்கூடாது என முடிவு செய்து களப்பணி ஆற்றினோம். அதேபோல் வருகிற தேர்தலிலும் அ.ம.மு.க. அங்கம் வகிக்கும் கூட்டணியே மாபெரும் வெற்றி பெறும்.

    இதை நான் விளையாட்டுக்காக சொல்லவில்லை. 234 தொகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்கு நிர்வாகிகள் தயாராக உள்ளனர். வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. எங்கள் வீட்டு பிள்ளைக்கு பெண் பார்க்கும் மேட்ரிமோனியல் வேலையை யாரும் பார்க்க வேண்டாம்.

    நான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் 23 வயதில் இருந்து அரசியல் பாடம் கற்றவன். எனவே தேர்தலில் யாருடன் கூட்டணி வைத்து வெற்றி வியூகம் வகுக்க வேண்டும் என தெரியும். திருவிழா போல ஒரே மாதத்தில் மறந்து முடிவதில்லை. ஒரு கட்சி தேர்தலுக்குப் பிறகும் களத்தில் நிற்க வேண்டும். அதனை மனதில் வைத்து எங்கள் பயணம் தொடரும். லட்சியம், கொள்ளைக்காக உருவாக்கப்பட்ட இயக்கமாகும். ஆண்டிபட்டி தொகுதியில் கண்டிப்பாக அ.ம.மு.க. போட்டியிட்டு வெற்றி பெறும் என்றார். 

    • 2026 தேர்தலை பிரதமர் மோடியின் வழிகாட்டுதலுடன் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள உள்ளோம்.
    • அதிமுக தலைமையில் ஆட்சி அமையும்

    தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இன்று சென்னை கிண்டியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பின் கோயல், இபிஎஸ் இருவரும் கூட்டாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். 

    அப்போது பேசிய பியூஷ் கோயல், "சென்னைக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது நண்பரும், சகோதரருமான எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்த சந்திப்பு சிறப்பாக நடந்தது. 2026 தேர்தலை எதிர்கொள்வது குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினோம். மக்கள் பணிகள் குறித்தும் ஆலோசித்தோம். மக்களுக்கு வளர்ச்சி ஏற்படுத்தும் வகையில் செயல்படுவோம். வளர்ச்சி, வேலைவாய்ப்பே பாஜகவின் இலக்கு.

    2026 தேர்தலை பிரதமர் மோடியின் வழிகாட்டுதலுடன் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள உள்ளோம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை எதிர்கொள்வோம். வருகிற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றிபெறும். ஊழல் திமுக கூட்டணியை தோற்கடிப்போம்" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, "வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி எப்படி செயல்பட வேண்டும் என்று ஆலோசனை செய்தோம். வரும் 2026 தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறும். அதிமுக தலைமையில் ஆட்சி அமையும்" என்று தெரிவித்தார்.

    • தமிழக அரசு ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கழித்து பள்ளி மாணவ - மாணவிகளுக்கு லேப்டாப் வழங்குவது அரசியல்.
    • அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம் குறித்து அரசு கவலைப்படுவதில்லை.

    ஈரோடு:

    ஈரோடு வில்லரசம்பட்டி நால்ரோட்டில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொங்கு மண்டல மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே வாசன் தலைமை தாங்கினார்.

    பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    டிசம்பர் 20-ம் தேதி காமராஜர் மக்கள் கட்சி த.மா.கா.வுடன் இணைகிறது. காமராஜர் மக்கள் கட்சியில் மரியாதைக்குரியவர்கள் உள்ளனர். அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு தமிழருவி மணியன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் சேர்ப்பது என்ற முடிவை எடுத்துள்ளார். இதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

    20-ம் தேதி காலை திண்டலில் உள்ள லட்சுமி துரைசாமி திருமண மண்டபத்தில் இணைப்பு விழா நடைபெற உள்ளது. 3000 நபர்களுக்கு மேல் கலந்துகொள்ளும் கூட்டம் நடைபெறவுள்ளது.

    த.மா.கா மாவட்ட மாநில மற்றும் கொங்கு மண்டல நிர்வாகிகள் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

    இதனை குடும்ப விழாவாக தேர்தலில் த.மா.கா.வுக்கு பலத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக அமையும்.

    திருப்பரங்குன்றத்தில் தி.மு.க. சிறுபான்மை மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறது. நீதிமன்றத்தை தி.மு.க. அரசியல் களமாக்க நினைக்கிறது. தி.மு.க கூட்டணி கட்சிகள் பேசி வைத்து கொண்டு செய்கிறது. இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது.

    தமிழக அரசு ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கழித்து பள்ளி மாணவ - மாணவிகளுக்கு லேப்டாப் வழங்குவது அரசியல்.

    தேர்தலுக்கான அரசியல் ஆதாயத்திற்காக மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது வாக்கு வங்கி அரசியல்.

    ஜி.ஆர். சாமிநாதன் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் நிறைவேற்றியது குறித்த கேள்விக்கு "சட்டத்திற்கு உட்பட்ட நாடு. தி.மு.க நீதிமன்றத்தை அரசியல் களமாக்க நினைக்கிறது. இது தவறான செய்கையை காட்டுகிறது.

    தி.மு.க. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படுகிறது. மக்களுக்கான திட்டங்களுக்கு தி.மு.க அரசு தடையாக உள்ளது.

    அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம் குறித்து அரசு கவலைப்படுவதில்லை.

    மகளிர் உரிமைத் தொகை திட்டம் எதிர்மறை வாக்குகளை தடுப்பதற்கான சூழ்ச்சி வாக்கு வங்கியை வாங்கிக்கொண்டு 5 ஆண்டுகள் மக்களின் பணத்தை சுரண்டுவது வழக்கமாகிவிட்டது. பெண்கள் விழித்துக் கொள்ளவேண்டும்.

    தோல்வி பயத்தால் மக்களை ஏமாற்ற நினைக்கும் தமிழக அரசு மீது வாக்காளர் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

    தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அ.தி.மு.க தலைமையில் வலுவாக உள்ளது.

    தேசிய ஜனநாயகக்கூட்டணி வெல்வதற்காக காலம் கனிந்து கொண்டிருக்கிறது.

    கூட்டணி கட்சிகள் கூட்டுவதற்காக நேரம் காலம் உள்ளது. ஆளும்கடசியினர் எங்கள் கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளது.

    நல்ல அறிவிப்புகள் வரும் எதிர்பார்க்கிறோம்.

    கூட்டணியில் இருப்பதால் எங்களின் வெற்றி பிரகாசமாக உள்ளது. பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் கைது செய்ததை கண்டிக்கிறது என்றார்.

    பேட்டியின் போது பொதுச்செயலாளர் யுவராஜா, மாநிலத் துணைத் தலைவர் விடியல் சேகர், மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • எஸ்.ஐ.ஆரில் எந்தவிதமான குளறுபடியும் இல்லை.
    • எந்த தனிநபரை வைத்தும் எந்த கட்சியும் இல்லை.

    தென்காசி:

    ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற நோக்கத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் இடையிலான கலாச்சாரம் மற்றும் ஆன்மீக பிணைப்பை வலுப்படுத்தும் விதமாக காசி தமிழ் சங்கமம் 4.0 என்ற நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது.

    இதையொட்டி தெற்கே உள்ள காசியாம் தென்காசியில் இருந்து வடக்கே உள்ள காசி நோக்கி அகத்திய முனிவர் வாகன பயணம் இன்று தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இருந்து தொடங்கி வைக்கப்பட்டது. மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் காணொலி காட்சி மூலம் வாகன பயணத்தை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஜோகோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு, தென்காசி பா.ஜ.க. மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யா சாமி, தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கிருஷ்ண முரளி என்கிற குட்டியப்பா எம்.எல்.ஏ., செல்வ மோகன்தாஸ் பாண்டியன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று வாரணாசிக்கு புறப்பட்ட 15 வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியை தொடர்ந்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு எங்கு சென்றாலும் தமிழ் மொழி பற்றியும் அதன் கலாச்சாரத்தை பற்றியும் பெருமையாக பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். வாழும் பாண்டிய மன்னராக பாரத பிரதமர் செயல்பட்டு காசியில் தமிழ் சங்கம் மாநாட்டினை 4 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

    எஸ்.ஐ.ஆரில் எந்த விதமான குளறுபடியும் இல்லை. இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருக்கும் நிலையில், அவர்களை நீக்கி விடக்கூடாது என்பதற்காக தான் தி.மு.க. போராடுகிறது.

    மேலும், 50 வருட கால அ.தி.மு.க. ஆட்சியில் இருந்து விட்டு, அப்போது நல்லாட்சி இல்லாதது போல் தற்போது த.வெ.க.வின் மூலம் நல்லாட்சி கொடுப்பேன் என்று செங்கோட்டையன் கூறியுள்ளது வருத்தமாக உள்ளது.

    பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி மக்கள் சக்தியோடு உள்ளதால், பொங்கலுக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணையும். அ.தி.மு.க.வில் இருந்து தற்போது செங்கோட்டையன் த.வெ.க.விற்கு சென்று உள்ள நிலையில், அங்கிருந்து எங்கு செல்வார் என்று தெரியாது.

    எந்த தனிநபரை வைத்தும் எந்த கட்சியும் இல்லை. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 100 நாட்கள் உள்ள நிலையில், தேர்தலுக்கு முந்தைய நாள் கூட அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் சக்தி கை ஓங்கி தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

    • காங்கிரஸ் இல்லாத கர்நாடகா, மாநிலத்திற்கு நல்லது.
    • நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து காங்கிரஸ் போய்விட்டது.

    பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக- நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 243 இடங்களில் 202 இடங்களில் அமோக வெற்றி பெற்றது.

    இதைப்போன்று கர்நாடகாவிலும் பாஜக கூட்டணிக்கு மக்கள் அதிகாரம் வழங்க காத்திருக்கிறார்கள் என பாஜக தலைவர் ஆர். அசோகா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஆர். அசோகா கூறியதாவது:-

    காங்கிரஸ் இல்லாத கர்நாடகா, மாநிலத்திற்கு நல்லது. இந்த மோசமான காங்கிரஸ் போக வேண்டும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து அது போய்விட்டது. பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் அதிகாரம் வழங்கியதுபோன்று, கர்நாடகாவிலும் அதிகாரம் வழங்க மக்கள் தயாராகிவிட்டனர். கர்நாடக மாநில மக்கள் பட்டனை அழுத்த தயாரிவிட்டனர். தேர்தலுக்காக காத்திருக்கிறார்கள்.

    இவ்வாறு அசோகா தெரிவித்தார்.

    கர்நாடகாவில் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையா முதலமைச்சராக இருந்துள்ள நிலையில், அடுத்த இரண்டரை ஆண்டுகள் டி.கே. சிவக்குமார் முதலமைச்சராக வேண்டும் என்ற குரல் வலுத்துள்ளது.

    • ஐக்கிய ஜனதா தளம் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
    • அதன்பின் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.-க்களின் தலைவராக தேர்வு செய்யப்பட இருக்கிறார்.

    பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 243 இடங்களில் 202 இடங்களை கைப்பற்றியது. பாஜக 89 இடங்களில் வெற்றி பெற்றது. ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களில் வெற்றி பெற்றது.

    நாளை மறுதினம் நிதிஷ் குமார் 10-வது முறையாக முதல்வராக பதவி ஏற்க உள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்க இருக்கிறார்கள். இலாகா பிரிப்பதில் பாஜக- நிதிஷ் குமார் கட்சி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் ஐக்கிய ஜனதா தள சட்டமன்ற கட்சித் தலைவராக நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட இருக்கிறார். அதன்பின் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டதில் தலைவராக தேர்வு செய்யப்படுவார். பின்னர் ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரி, தனக்கு ஆதரவு அளித்த எம்.எல்.ஏ.-க்களின் கடிதத்தை வழங்குவார்.

    நிதிஷ் குமார் முதல்வராக பதவி ஏற்றும் விழாவில பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். பதவி ஏற்பு விழா நடைபெறும் காந்தி மைதானத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • தேசிய ஜனநாய கூட்டணி 202 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது.
    • இந்தியா கூட்டணி வெறும் 35 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

    பாட்னா:

    பீகார் மாநில சட்டசபைக்கு இரு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு கடந்த 6-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு கடந்த 11-ம் தேதியும் தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின.

    ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், பிற கட்சிகள் இடம்பெற்றன.

    இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், பிற கட்சிகள் இடம்பெற்றன.

    இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் தேசிய ஜனநாய கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று 202 தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது.

    இந்தியா கூட்டணி 35 தொகுதிகளில் வெற்றிபெற்றது. பிற கட்சிகள், சுயேட்சைகள் 6 தொகுதிகளை கைப்பற்றின.

    தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து விரைவில் நிதிஷ்குமார் பீகார் முதல் மந்திரியாக மீண்டும் பதவியேற்கிறார்.

    • காங்கிரஸ் கூட்டணிக்கு சரியான பதிலடியை பொதுமக்கள் கொடுத்துள்ளனர்.
    • பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு வாழ்த்துகள்.

    சேலம் விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சரித்திர சாதனை வெற்றி பெற்றுள்ளது.

    பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு சரியான பதிலடியை பொதுமக்கள் கொடுத்துள்ளனர்.

    பீகார் தேர்தல் வெற்றி பாஜக கூட்டணி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை உறுதி செய்துள்ளது.

    பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு வாழ்த்துகள்.

    பாஜக கூட்டணி பீகார் மாநிலத்தின் முன்னேற்றத்தையும், பொது நலனையும் துரிதப்படுத்தும் என நம்புகிறேன்.

    பல்வேறு விமர்சனங்கள், எஸ்ஐஆர் முறைகேடுகள் என கூறப்பட்ட பொய்களையும் தாண்டி பீகாரில் சிரத்திர வெற்றிப் பெற்றுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
    • நிதிஷ் குமார் கட்சி கடந்த தேர்தலை விட இரண்டு மடங்கு இடங்களை பிடிக்க இருக்கிறது.

    பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. 200-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இதனால் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக தொடர இருக்கிறார்.

    இந்த நிலையில் பீகார் தேர்தலில் என்டிஏ-யின் அமோக வெற்றி குறித்து சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-

    பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் மிகப்பெரிய மற்றும் வரலாற்று பெற்றி, முற்போக்கு நிர்வாகத்தை தொடர்ந்து பீகார அரசால் கொடுக்க முடியும். மற்றும் பிரதமர் மோடியின் விக்ஷித் பாரத்தின் மீதான தொலைநோக்கு பார்வை ஆகியவற்றின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.

    நிதிஷ் குமார் மற்றும் வெற்றி பெற்ற பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினருக்கு வாழ்த்துகள்.

    இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

    துணை முதல்வர் பவன் கல்யாண் "பீகார் தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.

    • வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது.
    • காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் 82 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.

    பீகாரில் இரு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பெரும்பாலான இடங்களில் NDA கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

    மொத்தமுள்ள 243 இடங்களில் பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை என்ற நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி 130-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மேலும் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் 24 தொகுதிகளைக் கொண்ட சீமாஞ்சல் பகுதியில் 10 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்கிறது

    காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் 82 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். 

    ×