search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாமக"

    • டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு தோல்வி அடைந்துவிட்டது.
    • ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறிய தமிழக அரசும் இத்தேர்வை திணித்த மத்திய அரசும்தான் இதற்கு காரணம்.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரேஷன் கடை பணியாளர்களை போட்டித்தேர்வின் மூலம் நியமிக்கவேண்டும். இதில் விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணிக்கு சுமார் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் நியமிக்கப்பட உள்ளனர். முதல் ஒரு ஆண்டுக்கு தொகுப்பு ஊதியத்திலும் பின் பணி நியமனம் செய்யபட்டு கூடுதல் ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எந்த பணி நியமனத்திலும் நேர்காணலில் முறைகேடு நடைபெறுகிறது. போட்டித்தேர்வின் அடிப்படையில் இப்பணி நியமிக்கப்பட வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் விற்பனையாளர் பணி நியமனத்தில் நேர்மையாக இருந்த கூட்டுறவு அலுவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழத்தின் துணை வேந்தர் கதிரேசன் ஓய்வுபெற உள்ளார். ஏற்கனவே சென்னை, காமராசர், பாரதியார், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. சில பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பதவி நீடிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக துணை வேந்தர் பணி நியமனத்தில் தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் ஏற்பட்ட மோதலால் துணை வேந்தர் பணி நியமிக்கப்படவில்லை.

    தக்காளி, வெங்காயத்தின் விளைச்சல் குறைந்துள்ளதால் அதன் விலை உயர்ந்துள்ளது. தக்காளி கிலோ 120-க்கும், வெங்காயம் ரூ. 80-க்கும் உயர்ந்துள்ளது. தீபாவளியையொட்டி இதன் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு மொத்தமாக கொள்முதல் செய்து ரேஷன் கடை மூலம் குறைந்த விலையில் விற்க வேண்டும்.

    மின்வாரியத்தில் ஆள் குறைப்பு செய்ய உள்ள திட்டத்தை கைவிட வேண்டும். மின் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 95 விழுக்காடு பயனாளிகள் ஆன்லைனில் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். ரூ.5 ஆயிரம் வரை ஆன்லைனில் செலுத்த வேண்டும் என்ற நிலையை திரும்ப பெற வேண்டும். இத்திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.

    டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு தோல்வி அடைந்துவிட்டது. வரும் 15-ந் தேதி 1000 இடங்களில் மருத்துவ முகாம் நடத்துவது போதுமானதல்ல. 5 ஆயிரம் முகாம்கள் நடத்தவேண்டும். இந்நோய்குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சாம்சங் ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. தொழிற்சங்கம் அமைக்க அரசும், நிறுவனமும் அங்கீகரிக்க வேண்டும். கட்சிகள் சார்ந்த தொழிற் சங்கம் அமைக்க அனுமதிக்க முடியாது என்று துணை முதல்-அமைச்சர் கூறியிருப்பது சரியல்ல. தொழிலாளர்களை விட சாம்சங் நிறுவனத்தின் நலனே பெரிது என அமைச்சர் உதயநிதி கூறியிருப்பது சரியல்ல.

    சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே கீழ்முகம் கிராமத்தில் புனிதா என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார். ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறிய தமிழக அரசும் இத்தேர்வை திணித்த மத்திய அரசும்தான் இதற்கு காரணம்.

    சிதம்பரம் நடராசர் கோவில் கிரிக்கெட் விளையாடுவதை அனுமதிக்க முடியாது. அதை வீடியோ எடுத்த விடுதலை சிறுத்தைகள் நிர்வாகியை தாக்கியது கண்டிக்கதக்கது. கோவில்களில் தீட்ஷிதர்கள் கிரிக்கெட் விளையாட தனி மைதானத்தை அரசு அமைத்து கொடுக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சாதி ரீதியான அடக்குமுறைகளையும், அவமதிப்புகளையும் தாங்கிக் கொள்ள முடியாமல் பதவி விலகியிருக்கிறார்.
    • அவர்களுக்கு அதிகாரம் பெற்றுத் தர திராவிட மாடல் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவராக பணியாற்றி வந்த பட்டியலினத்தைச் சேர்ந்த தி.மு.க. உறுப்பினரான பூங்கோதை அதே ஒன்றியத்தின் துணைத் தலைவராக பணியாற்றி வரும் தி.மு.க. ஒன்றியச் செயலாளர் மாரிவண்ண முத்து என்பவரால் தமக்கு இழைக்கப்படும் சாதி ரீதியான அடக்குமுறைகளையும், அவமதிப்புகளையும் தாங்கிக் கொள்ள முடியாமல் பதவி விலகியிருக்கிறார். இது அதிர்ச்சியளிக்கிறது.

    ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும் பூங்கோதைக்கு முறையான நாற்காலி, மேசை கூட வழங்கப்படவில்லை என்றும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே அவர் பதவி விலகியிருப்பதாகவும் அவரது கணவர் சசிக்குமார் கூறியிருக்கிறார்.

    தமிழ்நாட்டில் பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட பெரும்பான்மையான உள்ளாட்சிகளில் பட்டியலினத்தவருக்கு உண்மையான அதிகாரம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு அதிகாரம் பெற்றுத் தர திராவிட மாடல் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    உள்ளாட்சிகளில் சமூகநீதியை நிலைநிறுத்த முடியாத தி.மு.க.வுக்கு சமூகநீதி குறித்து பேசுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை. பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகளில் அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதை தி.மு.க. அரசு உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

    • தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக தேர்ந்தெடுக்கப்படவில்லை.
    • அரசு பள்ளிகளில் ஆயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கு 3192 பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் வெளியிடப்பட்டு 80 நாட்களாகியும் அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்காமல் பள்ளிக்கல்வித்துறை தாமதப்படுத்தி வருகிறது. பணி ஆணைகள் வழங்கப்படாததால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. ஆசிரியர்களுக்கு பணி வழங்குவதில் அரசு காட்டும் தாமதம் கண்டிக்கத்தக்கது.

    பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25-ஆம் நாள் வெளியிடப்பட்டது. அதன்படி விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் மே மாதம் 18-ஆம் நாள் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் ஜூலை 18-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அவர்களுக்கான பணியிட ஒதுக்கீட்டு கலந்தாய்வை ஒரே நாளில் நடத்தி பணி நியமன ஆணைகளை வழங்கியிருக்க முடியும். ஆனால், 80 நாட்களாகியும் இன்று வரை அதை தமிழக அரசு செய்யாததற்கான காரணம் தெரியவில்லை.

    தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதனால், அரசு பள்ளிகளில் ஆயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இத்தகைய சூழலில் மின்னல் வேகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஆசிரியர் நியமன பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. ஆசிரியர்கள் நியமனத்திற்கான நடைமுறை தொடங்கபட்டு ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில், இன்னும் அது முடிவடையாதது மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.

    தமிழ்நாடு அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் ஆசிரியர்கள் நியமனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், ஆசிரியர் பணிக்கு தேந்தெடுக்கப்பட்டும் தங்களுக்கு வேலை கிடைக்குமா, கிடைக்காதா? என்ற மன உளைச்சலில் 3192 பேரும் தவித்து வருகின்றனர். அவர்களின் மன உளைச்சலைப் போக்கி நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை ஆகும். எனவே, போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 3192 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் உடனடியாக பணி நியமன ஆணைகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    • ஒப்பந்தப் பணியாளர்களாக பணியாற்றி வரும் பலர் மிகக் குறைந்த ஊதியம் பெறுபவர்கள்.
    • பணம் இல்லை என்று பள்ளிகளின் செயல்பாடுகள் முடங்கினால் கல்வித்துறையில் அதை விட பேரவலம் இருக்க முடியாது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் ஓர் அங்கமாக திகழும் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தில் பணியாற்றும் நிரந்தர ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் 15,000 பேர், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 17,500 பேர் என மொத்தம் 32,500 பேருக்கு செப்டம்பர் மாதத்திற்கான ஊதியம் இன்று வரை வழங்கப்படவில்லை. கல்வித்துறை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் செய்யப்படும் தாமதமும், காட்டப்படும் அலட்சியமும் கண்டிக்கத்தக்கவை.

    ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் 2024-25ஆம் கல்வியாண்டுக்கான முதல் காலாண்டில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய ரூ.573 கோடியை மத்திய அரசு இன்று வரை வழங்காதது தான் ஊதியம் வழங்கப்படாததற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிதியை வழங்குவதற்கு மத்திய அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

    கல்வி வளர்ச்சிக்காக வழங்கப்பட வேண்டிய நிதியே கல்வித்துறை முடங்குவதற்கு காரணமாக அமைந்து விடக் கூடாது. கல்வித்துறைக்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு காட்டும் பிடிவாதம் நியாயமானதல்ல.

    அதே நேரத்தில் மத்திய அரசின் நிதி வரவில்லை என்பதையே காரணமாகக் காட்டி, ஒருங்கிணைந்த கல்வித் திட்ட ஆசிரியர்களுக்கும், பிற பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்குவதை தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பது மனிதநேய மற்ற செயலாகும்.

    மத்திய அரசிடமிருந்து நிதி வராவிட்டாலும் கூட, தமிழக அரசு நினைத்திருந்தால் தன்னிடமுள்ள பிற துறைகளுக்கான நிதியை விதிகளுக்கு உட்பட்டு பள்ளிக்கல்வித்துறைக்கு மாற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊதியம் வழங்கியிருக்க முடியும். ஆண்டுக்கு ரூ.3.5 லட்சம் கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் தமிழக அரசுக்கு ஒருங்கிணைந்த கல்வித் திட்டப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க ரூ.25 கோடியை ஏற்பாடு செய்வது இயலாத ஒன்றல்ல.

    ஆனாலும், ஒருங்கிணைந்த கல்வித்திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காமல் அவர்களை தவிக்கவிட்டிருப்பதை வைத்துப் பார்க்கும் போது, இந்த சிக்கலைத் தீர்ப்பதற்கு பதிலாக, பெரிதுபடுத்தி அரசியல் லாபம் தேடவே தமிழக அரசு முயல்கிறது என்பது உறுதியாகிறது.

    இந்தத் திட்டத்தில் ஒப்பந்தப் பணியாளர்களாக பணியாற்றி வரும் பலர் மிகக் குறைந்த ஊதியம் பெறுபவர்கள். மாதத்தின் இறுதி நாட்களையே கடன் வாங்கிக் கழிக்கும் அவர்களால் மாதத்தின் முதல் நாளில் ஊதியம் வராமல் வாழவே முடியாது. அவர்களின் துயரத்தை மத்திய மாநில அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

    ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி வராததால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக , தமிழ்நாட்டில் 400-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் தொழில் பயிற்றுநர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை. இப்போது பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கும், பிற பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்கப்படாததன் மூலம் பள்ளிக்கல்வித் திட்டத்தின் செயல்பாடுகளே முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

    பணம் இல்லை என்று பள்ளிகளின் செயல்பாடுகள் முடங்கினால் கல்வித்துறையில் அதை விட பேரவலம் இருக்க முடியாது.

    நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டும் முடிவடைந்து விட்ட நிலையில், மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்படி வழங்கப்பட வேண்டிய நிதியை தமிழகத்திற்கு வழங்க வேண்டும். தமிழக அரசும் அந்த நிதிக்காக காத்திருக்காமல் சொந்த நிதியில் ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அணுக்கனிம சுரங்கம் அமைக்கப்பட்டால், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்கும்.
    • தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் தீங்கை ஏற்படுத்தும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும் நோக்குடன் கிள்ளியூர் பகுதியில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. கிள்ளியூரையடுத்த கீழ்மிடாலம், மிடாலம், இனையம், புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய கிராமங்களில் 1144 ஏக்கர் பரப்பளவில் இந்த சுரங்கம் அமைக்கப்படவுள்ளது. இச்சுரங்கத்தில் இருந்து மொத்தம் 59.88 மில்லியன் டன் அளவுக்கு மோனசைட் உள்ளிட்ட பல்வேறு அணுக்கனிமங்களை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதைக் கொண்டு 40 ஆண்டுகளுக்கு ஆலையை இயக்க முடியும்.

    கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசின் சுரங்கத்துறையும், தமிழக அரசும் ஒப்புதல் அளித்துள்ளன.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கப்படவுள்ள கிள்ளியூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் அதிக அளவில் அணுக்கதிர்வீச்சு நிலவும் பகுதிகள் ஆகும். மணவாளக்குறிச்சி பகுதியில் இயங்கும் இந்திய அருமணல் ஆலையால் ஏற்படும் கதிர்வீச்சு காரணமாக அங்குள்ள மக்கள், புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்பு, தோல்நோய், ஆஸ்துமா, கருச்சிதைவு உள்ளிட்ட பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். அண்மைக் காலங்களில் இந்த வகை பாதிப்புகள் அச்சுறுத்தும் அளவுக்கு அதிகரித்துள்ளன.

    இந்தநிலையில் அங்கு அணுக்கனிம சுரங்கம் அமைக்கப்பட்டால், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்கும். அணுக்க திர்வீச்சு தொடர்பான தீயவிளைவுகளும் ஏற்படும்.

    தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் தீங்கை ஏற்படுத்தும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். இத்திட்டத்திற்காக ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதியை தமிழக அரசு ரத்து செய்வதுடன், சுற்றுச்சூழல் அனுமதிக்காக நடத்தப்பட விருக்கும் கருத்துக்கேட்புக் கூட்டத்தையும் நிரந்தரமாக கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஜனநாயகத்தில் மக்கள் தான் இறுதி எஜமானர்கள்.
    • இல்லாவிட்டால் தொழில் முதலீடுகள் ஈர்ப்பதில் தனது தோல்வியை தமிழக அரசு ஒப்புக்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த மூன்றாண்டுகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட ரூ.10 லட்சம் கோடி முதலீடுகளில் 60 சதவீத பணிகள் நிறைவேறியிருக்கின்றன; மீதமுள்ள 40 சதவீத பணிகளை நிறைவேற்ற ஆணையிட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டுக்கு வந்த முதலீடுகள் குறித்த குழப்பங்களைத் தீர்க்கும்படி பா.ம.க. வலியுறுத்தி வரும் நிலையில், திமுக அரசு ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக வெளியிட்டு வரும் புள்ளிவிவரங்கள் குழப்பத்தை அதிகரித்திருக்கின்றன.

    ஜனநாயகத்தில் மக்கள் தான் இறுதி எஜமானர்கள். தமிழகத்திற்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளன. அதை மதித்து தமிழகத்திற்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்து தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் தொழில் முதலீடுகள் ஈர்ப்பதில் தனது தோல்வியை தமிழக அரசு ஒப்புக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை.
    • தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில் எந்த செய்தியும் இல்லை.

    சென்னை:

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்நாடு அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் இடைநிலை ஆசிரியர்கள் தொடங்கி கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர்கள் வரை அனைத்து நிலை ஆசிரியர் நியமனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தந்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்த செய்தி உண்மையாக இருந்தால் தமிழக அரசின் முடிவு கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் ஆசிரியர்களை நியமிப்பதில் செய்யப்படும் காலதாமதத்தையும், அலட்சியத்தையும் வைத்துப் பார்க்கும்போது இந்த செய்திகள் உண்மை தானோ? என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டு, நடப்பாண்டின் தொடக்கத்தில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் கடந்த மாதமே வெளியிடப்பட்ட பிறகும் அவர்களுக்கு பணியமர்த்தல் ஆணைகள் இன்னும் வழங்கப்படவில்லை.

    அரசு பள்ளிகளுக்கு 2768 இடைநிலை ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஜூலை 21-ஆம் நாள் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், அத்தேர்வுக்கான விடைக்குறிப்புகள் கூட இன்னும் வெளியிடப்படவில்லை. அரசு கல்லூரிகளுக்கு 4000 உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிக்கை கடந்த மார்ச் 14-ஆம் தேதி வெளியிடப்பட்டு ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடத்தப்படவிருந்த போட்டித்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விட்டன. அந்தத் தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில் எந்த செய்தியும் இல்லை.

    கடந்த மே மாதம் வெளியாவதாக இருந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான அறிவிக்கையும், கடந்த ஏப்ரல் மாதம் வெளியாவதாக இருந்த ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கையும் செப்டம்பர் மாதம் முடிவடையப் போகும் நிலையிலும் வெளியாகவில்லை. அதேபோல், தமிழ்நாட்டில் 13 ஆயிரத்திற்கும் கூடுதலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், குறைந்த எண்ணிக்கையிலான பணியிடங்களை மட்டுமே நிரப்பப்போவதாகவும், மீதமுள்ள பணியிடங்களை நிரப்ப நிதியமைச்சகம் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் பள்ளிக் கல்வித்துறை தரப்பில் அளிக்கப்பட்டுள்ள தகவல்கள் நிதிநெருக்கடி ஐயத்தை உறுதி செய்கின்றன.

    ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கான முதன்மைத் தேவை கல்வி தான். தமிழ்நாட்டில் கல்வித்துறைக்கு மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.எஸ்.டி.பி) 6 % செலவிட வேண்டியுள்ள நிலையில், ஒன்றரை விழுக்காட்டுக்கும் குறைவான தொகை தான் செலவிடப்படுகிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். பள்ளிக்கல்வித்துறைக்காக ஆண்டுக்கு குறைந்தது ஒரு லட்சம் கோடி ரூபாயாவது ஒதுக்கப்பட வேண்டும். இதுவும் கூட மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் சுமார் 3% என்ற அளவில் தான் இருக்கும். முதற்கட்டமாக இந்த அளவு நிதியை ஒதுக்கீடு செய்து விட்டு, படிப்படியாக இதை அதிகரிக்க வேண்டும். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் மார்ச் மாதத்திற்குள் நிரப்பவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் அழிக்கப்பட்டதன் பின்னணி குறித்த முழு விவரங்களை அரசு வெளியிட்டிருந்தால் இந்த சிக்கலே எழுந்திருக்காது.
    • தமிழக அரசு, கிளி ஜோசியர்களையும், சமூக ஊடகங்களில் பேசுபவர்களையும் கைது செய்து வீரத்தைக் காட்டக்கூடாது.

    சென்னை:

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஜி.மோகன் எந்தவித குற்றமும் செய்யாத நிலையில் சென்னை காசிமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் எதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பதை காவல்துறை இதுவரை தெரிவிக்கவில்லை. எந்த ஒரு வழக்கிலும் ஒருவரை கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் பல்வேறு வழிமுறைகளை வகுத்திருக்கும் நிலையில், அவை எதையும் கடைபிடிக்காமல், ஒரு பயங்கரவாதியை பிடிப்பது போல மோகனை காவல்துறை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

    பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் பஞ்சாமிர்தம் சில வாரங்களுக்கு முன் பெருமளவில் அழிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, அது தொடர்பாக பல்வேறு தரப்பிலும் எழுப்பப்பட்ட ஐயங்களைத் தான் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் இது தொடர்பான செய்திகள் பரவாமல் தடுக்கும் வகையில் அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தான் அவர் கூறியிருந்தார். இதில் எந்தத் தவறும் இல்லை. பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் அழிக்கப்பட்டதன் பின்னணி குறித்த முழு விவரங்களை அரசு வெளியிட்டிருந்தால் இந்த சிக்கலே எழுந்திருக்காது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோயில் சிக்கல் தொடர்பாக சமயபுரம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அங்கிருந்து தனிப்படை காவலர்கள் விரைந்து வந்து மோகனை கைது செய்திருப்பதன் பின்னணியில் திட்டமிட்டு பின்னப்பட்ட சதிவலை இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பவர்களை கைது செய்யாத தமிழக அரசு, கிளி ஜோசியர்களையும், சமூக ஊடகங்களில் பேசுபவர்களையும் கைது செய்து வீரத்தைக் காட்டக்கூடாது. இயக்குனர் மோகனை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • மீனவர்கள் மீதான தாக்குதலையும், கைது நடவடிக்கைகளையும் கைவிடும்படி அவரிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும்.
    • மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இரு நாட்டு அதிகாரிகள் அடங்கிய கூட்டுப் பணிக்குழுவை அமைத்து பேச்சுகளைத் தொடங்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வங்கக்கடலில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 37 பேரை சிங்களக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அவர்களின் 3 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    கடந்த 7-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அடுத்த இரு வாரங்களுக்குள் ஒரே நேரத்தில் 37 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் 51 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து நடப்பாண்டில் கைது செய்யப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை 387 ஆக அதிகரித்துள்ளது.

    இலங்கையில் தேர்தல் முடிவடைந்து புதிய அதிபர் பதவியேற்கவுள்ள நிலையில், மீனவர்கள் மீதான தாக்குதலையும், கைது நடவடிக்கைகளையும் கைவிடும்படி அவரிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இரு நாட்டு அதிகாரிகள் அடங்கிய கூட்டுப் பணிக்குழுவை அமைத்து பேச்சுகளைத் தொடங்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அந்த நிறுவனத்தை மூடுவதற்கு தமிழக அரசு இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • மருத்துவக் கழிவுகள் முறையாக கையாளப்படாததால் பல்வேறு வகையான சுகாதாரக்கேடுகள் ஏற்படுகின்றன.

    மருத்துவக் கழிவுசென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்களாக உருவெடுத்துள்ள சிக்கல்களில் முதன்மையானது மருத்துவக் கழிவுகள் முறையாக கையாளப்படாதது ஆகும். தமிழகத்தின் பல மாவட்டங்களில் மருத்துவக் கழிவுகள் பொது இடங்களில் கொட்டப்படுவது பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ள நிலையில், அதைத் தடுக்க தமிழ்நாடு அரசு இதுவரை தெளிவான திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தாதது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டின் இயற்கை வளத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சியும், பசுமைத்தாயகம் உள்ளிட்ட அதன் இணை அமைப்புகளும் போராடி வருகின்றன. அதன் ஒரு கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகில் உள்ள பர்கூர் சிப்காட்டில் கடந்த ஓராண்டாக செயல்பட்டு வரும் மருத்துவ கழிவுகளை மேலாண்மை செய்யும் தனியார் நிறுவனத்தை மூட ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த 10-ம் தேதி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

    ஆனாலும் பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அந்த நிறுவனத்தை மூடுவதற்கு தமிழக அரசு இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மருத்துவக் கழிவுகள் முறையாக கையாளப்படாததால் பல்வேறு வகையான சுகாதாரக்கேடுகள் ஏற்படுகின்றன. மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படுவது குறித்தும், மருத்துவக் கழிவுகள் முறையாக அழிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

    அந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றமும், தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயமும் மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும், அதற்கேற்ற வகையில் சட்டத்திருத்தம் செய்யும் படியும் தமிழக அரசுக்கு ஆணையிட்டுள்ளன.

    எனவே, தமிழ்நாட்டில் போச்சம்பள்ளி உள்ளிட்ட இடங்களில் போதிய கட்டமைப்புகள் இல்லாமல் இயங்கி வரும் மருத்துவக் கழிவு மேலாண்மை நிலையங்களை உடனடியாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல், மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவோரையும், முறையாக கையாளத் தவறுபவர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்குத் தேவையான சட்டத் திருத்தத்தை விரைவில் நடைபெறவிருக்கும் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் நடமாட்டமும், பயன்பாடும் அச்சமூட்டும் வகையில் அதிகரித்து வருகிறது.
    • தமிழக அரசும், காவல் துறையும், போதைப் பொருட்களின் விற்பனைக்கு மறைமுகமாக ஆதரவளித்துக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் நடமாட்டமும், பயன்பாடும் அச்சமூட்டும் வகையில் அதிகரித்து வருகிறது. இளைஞர்களிடமிருந்த கஞ்சா போதைப் பழக்கம் இப்போது பள்ளிக் குழந்தைகளுக்கும் தொற்றிக் கொண்டுவிட்ட நிலையில் அதைத் தடுக்க வேண்டிய தமிழக அரசும், காவல் துறையும், போதைப் பொருட்களின் விற்பனைக்கு மறைமுகமாக ஆதரவளித்துக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

    தமிழ்நாட்டை கஞ்சா போதை எனும் பெரும் ஆபத்து சுற்றி வளைத்திருக்கும் நிலையில், காவல்துறையும், அரசும் இப்போதாவது விழித்துக் கொள்ள வேண்டும். காவல்துறை தலைமை இயக்குனர் தலைமையில் சிறப்புப் படை ஒன்றை அமைத்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்; அதன் மூலம் தமிழ்நாட்டை கஞ்சா போதை இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழ்நாட்டின் இன்றைய இன்றியமையாத் தேவைகள் சமூக நீதியும், சுயமரியாதையும் தான்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியாரின் 146-வது பிறந்தநாள் இன்று. சமூகநீதி வரலாற்றில் மிகவும் முக்கியமான இந்த நாளில் தான் வன்னிய மக்களுக்கு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான தொடர் சாலை மறியல் போராட்டம் தொடங்கியது.

    தமிழ்நாட்டின் இன்றைய இன்றியமையாத் தேவைகள் சமூக நீதியும், சுயமரியாதையும் தான். அவற்றை போதித்தவர் தந்தைப் பெரியார் தான். அவரது பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குவதுடன் சமூக நீதியையும், சுயமரியாதையையும் வென்றெடுக்க இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×