என் மலர்
நீங்கள் தேடியது "அமைச்சர் பெரியசாமி"
- 9 லட்சம் பேரின் முதியோர் உதவித் தொகையை நிறுத்திய பெருமை அ.தி.மு.க.வை சேரும்.
- டி.என்.பி.எஸ்.சி.-2 தேர்வு நடைபெறாததற்கு நிர்வாகத்திறமை இல்லை என சொல்வதை ஏற்க முடியாது.
திண்டுக்கல்லில் அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டி.என்.பி.எஸ்.சி.-2 தேர்வு நடைபெறாததற்கு நிர்வாகத்திறமை இல்லை என சொல்வதை ஏற்க முடியாது. இந்தியாவிலேயே நிர்வாகத்திற்கு பெயர்போன இயக்கம் தி.மு.க.தான். தமிழ்நாடு தலைசிறந்த நிர்வாகமும், மாநில வளர்ச்சியிலும் முதலிடம் என மத்திய அரசே ஒப்புக் கொண்டுள்ளது. எல்லாத்துறையிலும் தமிழ்நாடு வளர்ந்துள்ளது. தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்று உள்ளது.
காங்கிரஸ் கட்சி கூட்டணிக்காக குழு அமைத்து 36 நாட்கள் ஆகிவிட்டது. தி.மு.க. பதில் சொல்லவில்லை என மாணிக்கம் தாகூர் எம்.பி கூறி உள்ளார். நான் ஒரு கட்சியின் அமைச்சராக இருக்கிறேன். நாங்கள் கட்டுப்பாடுடன் வளர்ந்தவர்கள். கருத்து என்பது கட்சிக்கு உடன்பாடு உள்ளதாக இருக்க வேண்டும். மாணிக்கம் தாகூர் எம்.பி. தினமும் அறிக்கை விடுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இயக்கத்தின் தலைவர்கள் சொன்னால் அதற்கு பதில் சொல்லலாம்.
தமிழ்நாடு அரசு அதிகமாக கடன் வாங்குவதாக எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். ஏற்கனவே இருந்த அ.தி.மு.க. அரசு ரூ.5½ லட்சம் கோடி கடனை வைத்து விட்டு சென்றார்கள். அதற்கு ஓராண்டிற்கு வட்டி எவ்வளவு என கணக்கீட வேண்டும். 36,000 முதல் 40,000 கோடி தோராயமாக வரும். புள்ளிவிபரம் என்னிடம் இல்லை.
மாநில அரசு நிர்வாகத்தில் மூலதனங்களை உருவாக்குவதற்கும், விவசாயிகளுக்கு நன்மை செய்வதற்கும், ஏழை எளிய மக்களுக்கு சமூக நலத்திட்டங்களை நிறைவேற்றுவது அவசியம். முதியோர் ஓய்வூதியம் திண்டுக்கல்லில் மட்டும் கடந்த வாரம் 10 ஆயிரம் நபர்களுக்கு கொடுத்துள்ளோம்.
தி.மு.க. ஆட்சி காலத்தில் திண்டுக்கல் முழுவதும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேருக்கும், தொகுதிக்கு 20 ஆயிரம் பேருக்கும் முதியோர் உதவித்தொகை கொடுத்து இருந்தோம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அனைத்தையும் நிறுத்திவிட்டார். 9 லட்சம் பேரின் முதியோர் உதவித் தொகையை நிறுத்திய பெருமை அ.தி.மு.க.வை சேரும். தற்போது தான் அதனை சரி செய்து 1 லட்சத்து 10 ஆயிரம் நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை கொடுத்து வருகிறோம்." என தெரிவித்தார்.
- நிலைப்பாட்டை வி.சி.க. மாற்றிக் கொள்ளும் என்கிற தோற்றத்தை திணிப்பது நாகரீகமற்ற அரசியல் அணுகுமுறை.
- கூட்டணியில் யார் யார் இருக்க வேண்டும் என்பதை தி.மு.க.தான் முடிவு செய்யும்
தி.மு.க. கூட்டணியில் டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.வையும் இணைப்பதற்கான முயற்சிகள் நடப்பதாக நீண்ட நாட்களாகவே பேச்சு எழுந்துவருகிறது. ஆனால் பா.ம.க. இருக்கும் அணியில் இடம் பெற மாட்டோம் என்பது எங்கள் நிலைப்பாடு. தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வந்தால் நாங்கள் வெளியேறுவோம் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். திருமாவளவனின் இந்த நிலைப்பாட்டால், நீண்ட நாட்களாக இந்த கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்துவருகிறது.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை,
"அரசியலில் நிரந்தரப் பகைவர்களும் இல்லை, நிரந்தர நண்பர்களும் இல்லை. டாக்டர் ராமதாசும், திருமாவளவனும் ஒரு காலத்தில் மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள்தான். இருவரும் பரஸ்பரம் ஆதரவாக நின்றவர்கள். வன்னியர் சங்கக் கொடியை திருமாவளவன் ஏற்றி வைத்திருக்கிறார்.
அதேபோல் வி.சி.க கொடியை டாக்டர். ராமதாஸ் ஏற்றி வைத்திருக்கிறார். எனவே அவர்கள் நேரில் சந்தித்துப் பேசினால், அவர்களுக்கு இடையேயான இடைவெளி குறைந்துவிடும். தேவைப்பட்டால், அவர்கள் சந்தித்து பேசி பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கூட்டணியின் அச்சாணியாக தி.மு.க தான் உள்ளது. தி.மு.க கூட்டணியில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இணைவதற்கான முடிவை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் எடுப்பார். அவரது முடிவே இறுதியானது." என தெரிவித்திருந்தார்.
தி.மு.க கூட்டணியில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இணைவதை ஆதரிக்கும் வகையில் பேசிய செல்வப்பெருந்தகை, இரு தலைவர்களுக்கும் இடையே இருந்த பழைய இணக்கமான சூழலை நினைவுகூர்ந்தார். இதன் மூலம், பா.ம.க, வி.சி.க கட்சிகளும் ஒரே கூட்டணியில் பயணிப்பதில் பெரிய சிக்கல்கள் இருக்காது என்பதை அவர் சூசகமாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் செல்வப்பெருந்தகையின் இந்த கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், கட்சியின் துணை பொதுச்செயலாளருமான எஸ்.எஸ். பாலாஜி வெளியிட்டுள்ள வலைத்தள பதிவில்,
கூட்டணியில் யார் யார் இருக்க வேண்டும் என்பதை தி.மு.க.தான் முடிவு செய்யும் என்பதை தான் நாங்களும் சொல்லி விட்டோமே. சாதியவாத, மதவாத சக்திகள் இருக்கும் இடத்தில் இருக்க மாட்டோம் எனும் நிலைப்பாட்டை வி.சி.க. மாற்றிக் கொள்ளும் என்கிற தோற்றத்தை திணிப்பது நாகரீகமற்ற அரசியல் அணுகுமுறை. எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே செல்வப்பெருந்தகையின் கருத்து குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,
இதுவரை அதுபோன்ற ஒன்று நடைபெறவில்லை. ராமதாஸ் தரப்பும் எங்களிடம் பேசவில்லை. முதலமைச்சர் ஸ்டாலினும் அவர்களிடம் பேசவில்லை. இது அவரது கருத்து. சேர்வது என்பது அவரவர் கருத்து. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சி காலத்தில் இருந்து தமிழ்நாட்டில் எல்லா எதிர் கட்சிகளையும் சேர்த்து தேர்தலை சந்தித்து உள்ளோம். 2006-ல் அப்படி தான் தேர்தலை சந்தித்து ஆட்சிக்கு வந்தோம். நல்லாட்சியும் கொடுத்தோம். தற்போது தி.மு.க. கூட்டணி பலமாக உள்ளது.
இடதுசாரி இயக்கம், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி என எல்லா கட்சியும் நம்முடன் உள்ளது. யார் கூட்டணிக்கு வந்தாலும் அவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறுக்கப் போவதில்லை." என தெரிவித்துள்ளார்.
- அ.தி.மு.க. என்பது முடிந்து போன கதை. அது இனிமேல் ஆட்சிக்கு வரவே வராது.
- எடப்பாடி பழனிசாமியின் வாக்குறுதிகளை அவரது கட்சியினரே நம்ப மாட்டார்கள்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி மகளிர் உரிமையைத் தொகையை ரூ.2000 மாக உயர்த்தி வழங்கப்படும். கல்விக்கடனை அரசே ஏற்கும். வருடத்துக்கு 3 சிலிண்டர் இலவசமாக தரப்படும் என தேர்தல் வாக்குறுதியாக தெரிவித்துள்ளார்.
அவர் உருட்டுகளை மக்கள் நம்ப மாட்டார்கள். தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி வருபவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். அ.தி.மு.க. ஆட்சிக்கு வரப்போவதுமில்லை. வருகிற தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்கட்சி தலைவராக கூட வருவதற்கான வாய்ப்பு இல்லை. இதனால் அவர் வாக்குறுதிகளை அள்ளி விட்டு செல்லலாம். ரூ.2000 கொடுப்பதாக கூறினாலும் மக்கள் நம்ப மாட்டார்கள்.
தனது 10 ஆண்டு ஆட்சி காலத்தில் கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட எதையும் செய்யாமல் இப்போது வாக்குறுதி அளிக்க வேண்டிய அவசியம் என்ன? அ.தி.மு.க. என்பது முடிந்து போன கதை. அது இனிமேல் ஆட்சிக்கு வரவே வராது.
எடப்பாடி பழனிசாமியின் வாக்குறுதிகளை அவரது கட்சியினரே நம்ப மாட்டார்கள். அவ்வாறு உள்ள நிலையில் மக்கள் எவ்வாறு நம்புவார்கள். கடந்த தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்றவர் தற்போது எதற்காக கூட்டணிக்கு சென்றுள்ளார். தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காகவே பா.ஜ.க. கூட்டணியில் இணைந்துள்ளார். அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.விடம் அடகு வைத்து விட்டார். 24 லட்சம் பேருக்கு வழங்கப்பட்ட முதியோர் உதவித் தொகை அ.தி.மு.க. ஆட்சியில் 9 லட்சமாக குறைக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தற்போது பொருளாதார நிபுணர் போல பேசுகிறார். அவர் எப்படி பொருளாதாரத்தை உயர்த்துவார். டாஸ்மாக்கில் இருந்து அரசுக்கு கட்ட வேண்டிய பணத்தை அ.தி.மு.க. காலத்தில் கட்டவில்லை. அந்த பணம் எங்கே போனது. எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டியது ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகம்தான். அவருக்கு தேர்தலில் வெற்றி பெற வேண்டும். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை.
ஏற்கனவே அவர் அறிவித்த 5 வாக்குறுதிகள் மக்களிடம் எடுபடாமல் புஸ்வானமாக போய் விட்டதால் தற்போது மேலும் 5 வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். இதுவும் புஸ்வானமாகவே போய் விடும் என்றார்.
- எங்களை பொறுத்தவரை விஜய் அரசியல்வாதியே கிடையாது.
- 4 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி எங்கே சென்றார் என தெரியவில்லை.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் பேரறிஞர் அண்ணா நினைவுதினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக மீண்டும் அமர்வார். பனையூரில் இருந்து அரசியல் செய்யும் விஜய் வெளியே வர வேண்டும். இந்த அரசியல் வெகு நாட்களுக்கு எடுபடாது. சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் அரசியல் செய்ய முடியாது. எல்லா அரசியலையும் பார்த்து விட்டோம். இந்தியாவிலேயே தலைசிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார். தி.மு.க.வுக்கு 70 சதவீத மக்கள் ஆதரவு உள்ளது. திருக்குறளை மாற்றிக்கூறி விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது.
அரசியல் ரீதியாக விமர்சனம் செய்தால் நாங்களும் விமர்சனம் செய்வோம். தி.மு.க.வை முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி வளர்த்ததைப் போல தற்போது மு.க.ஸ்டாலினும் வளர்த்து வருகிறார். எங்களை பொறுத்தவரை விஜய் அரசியல்வாதியே கிடையாது. அவரை மக்கள் தூக்கி எறிந்து விட்டார்கள்.
கரூரில் 41 பேர் கூட்ட நெரிசலில் தண்ணீர் இல்லாமல் இறந்து விட்டனர். அவர்கள் துக்கத்தில் கலந்துகொள்ள மனமில்லை. இவர் எவ்வாறு 7 கோடி மக்களை காப்பாற்றுவார்? ஏதோ நடித்துப்பார்க்கிறார். டான்ஸ் ஆடிப்பார்க்கிறார். இந்த டான்ஸ், டப்பாங்குத்து நம்ம ஊரிலும் ஆடலாம். இது எப்படி அரசியல் தலைவருக்கு அழகாகும்.
கூட்டணி கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்பது அவர்களின் உரிமை. வெற்றி வாய்ப்பை பொறுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதிகளை ஜனநாயக ரீதியில் வழங்குவார். கனிமொழி எம்.பி. ராகுல் காந்தியிடம் கெஞ்சுவதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். நாங்கள் பல ஆண்டுகளாக ஒரே அணியில் நீடித்து வருகிறோம். இந்த கூட்டணிதான் வருகிற தேர்தலில் மாபெரும் வெற்றி பெறப் போகிறது. சட்டமன்ற தேர்தலைத் தொடர்ந்து நடைபெறும் பஞ்சாயத்து தேர்தல், பாராளுமன்ற தேர்தல் ஆகிய அனைத்திலும் தி.மு.க. கூட்டணியே வெற்றிபெறும். 4 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி எங்கே சென்றார் என தெரியவில்லை. தற்போதுதான் அவர் மக்களை சந்தித்து வருகிறார். ஆனால் மக்கள் அவரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைவாரா என்பது குறித்து எனக்கு தெரியாது. அவர் தி.மு.க.வுக்கு வந்தால் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார்.
அண்ணாமலை திடீர் திடீர் என ஏதாவது ஒரு கருத்தை வெளியிடுவார். தற்போது பழனியில் மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக கூறியுள்ளார். பழனிக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 100 நாள் வேலைத் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மத்திய அரசு தமிழகத்தைப் புறக்கணிக்கிறது.
- தமிழக முதலமைச்சர் மேற்கொண்ட தொடர் அழுத்தம் மற்றும் போராட்டத்தின் விளைவாக குறைவான தொகை தற்போது பெறப்பட்டுள்ளது.
வத்தலகுண்டு:
திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் அருகே உள்ள மருதாநதி அணையில் இருந்து விவசாய பாசனம் மற்றும் குடிநீருக்காக, அய்யம்பாளையம், சித்தரேவு, தேவரப்பன்பட்டி, சேவுகம்பட்டி, கோம்பைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளுக்கு 17-ம் தேதி வரை 5 நாட்களுக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
நிகழ்ச்சியில் அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைத்தார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஆட்சியில் பங்கு கேட்பது தொடர்பாக நான் ஏற்கனவே எனது விளக்கத்தை முழுமையாகக் கூறிவிட்டேன். இதுபோன்ற கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கே உள்ளது. அவர்தான் இதுகுறித்து இறுதி முடிவை அறிவிப்பார். 100 நாள் வேலைத் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மத்திய அரசு தமிழகத்தைப் புறக்கணிக்கிறது. மத்திய அரசு வழங்க வேண்டிய சுமார் 4,000 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது. தமிழக முதலமைச்சர் மேற்கொண்ட தொடர் அழுத்தம் மற்றும் போராட்டத்தின் விளைவாக குறைவான தொகை தற்போது பெறப்பட்டுள்ளது. ஏழைகளுக்காக உருவாக்கப்பட்ட 100 நாள் வேலை திட்டத்தில் 'மகாத்மா காந்தி' என்ற பெயரை மத்திய அரசு நீக்கியிருப்பது கண்டனத்திற்குரியது.
ஆண்டு முழுவதும் விவசாய வேலைகள் இல்லாத சூழலில், ஏழை மக்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கும் இத்திட்டத்தில் 240 நாட்கள் கூட வேலை வழங்கப்படுவதில்லை. கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்த இத்திட்டம் முறையாகச் செயல்படுத்தப்பட வேண்டும்.
அமைச்சர்கள் மீது தொடரப்பட்டுள்ள சொத்துக் குவிப்பு வழக்குகள் குறித்து கேள்விக்கு, நாங்கள் அடிமட்டத்திலிருந்து வந்தவர்கள். 15 முதல் 20 முறை சிறைச்சாலைக்குச் சென்று போராடிப் பக்குவப்பட்டுத்தான் ஒன்றியச் செயலாளர், எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர் நிலைக்கு உயர்ந்துள்ளோம். பதவிக் காலத்தில் நாங்கள் சேர்த்ததாகச் சொல்லப்படும் சொத்துக்களை அவர்களே எடுத்துக்கொள்ளட்டும். இதுபோன்ற வழக்குகளால் எங்களது தேர்தல் பணி மற்றும் மக்கள் பணியில் எந்தச் சுணக்கமும் பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்தார்.
- தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் புறக்கணித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசை தமிழ்நாட்டு மக்கள் என்றும் புறக்கணிப்பார்கள்.
- வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிற்கும் அதனை ஆதரிக்கும் அடிமைகளுக்கும் மக்கள் வாக்குச்சாவடியில் பதில் தருவார்கள்.
சென்னை:
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை விக்ஷித் பாரத் ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிசன் என்று ஒன்றிய பாஜக அரசு மாற்றப் போவதாகவும் அதற்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டிருப்பதாகவும், அது தொடர்பாக பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்ய சட்டத்திருத்த மசோதாவை ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வர போகிறது. இதன்படி ஒவ்வொரு நிதியாண்டிலும் 125 நாட்கள் ஊதிய வேலை வாய்ப்பு, ஒன்றிய அரசு 60 சதவிகிதம் மாநிலங்கள் 40 சதவிகிதம் என நிதிப் பகிர்வு முறை, தினசரி ஊதியம் வாராந்திர அடிப்படையில் வழங்கல், விவசாயப் பருவத்தில் விவசாயத் தொழிலாளர்கள் கிடைப்பதை எளிதாக்கும் வகையில், ஒரு நிதியாண்டில் 60 நாட்களுக்கு வேலை வழங்கப்படாது போன்ற திருத்தங்கள் மேற்கொள்ளப் போகிறார்கள்.
இவை அத்தனையும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தையே முடக்கும் செயல்பாடுகள்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடக்கும் தில்லு முல்லுகளை பற்றி எடப்பாடி பழனிசாமி கள்ள மவுனம் காக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்படக் கூடிய சட்டத் திருத்தத்தை உடனடியாகக் கைவிட வேண்டும்.
தொடர்ந்து தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் புறக்கணித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசை தமிழ்நாட்டு மக்கள் என்றும் புறக்கணிப்பார்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிற்கும் அதனை ஆதரிக்கும் அடிமைகளுக்கும் மக்கள் வாக்குச்சாவடியில் பதில் தருவார்கள்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- வரலாற்றில் இல்லாத அளவிற்கு தி.மு.க. அரசு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
- கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகளில் சாலை இல்லாத கிராமங்களுக்கு 23 ஆயிரம் கி.மீ. கிராமச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் 2-ம் கட்டமாக விடுபட்ட மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு அவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றபோது கொரோனா தொற்று பரவல் காரணமாக கடும் நெருக்கடி இருந்தது. வருவாய் பற்றாக்குறையாக ரூ.60 ஆயிரம் கோடியை அ.தி.மு.க.வினர் விட்டுச் சென்றனர். அதன் காரணமாகவே மகளிர் உரிமைத்தொகை வழங்க சில மாதங்கள் தாமதமானது. இருந்தபோதும் ஒரு கோடிக்கும் அதிகமான மகளிர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டது. மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் கூட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு முறையாக வழங்கப்படவில்லை. ஆனால் தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றாமல் சொன்னதை சொன்னபடி நிறைவேற்றி வருகிறோம்.
வரலாற்றில் இல்லாத அளவிற்கு தி.மு.க. அரசு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் எந்த திட்டத்தையும் ஒழுங்காக செயல்படுத்தவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வதை மக்கள் நம்புவார்கள். ஆனால் பா.ஜ.க. குறைகூறுவதை அவர்கள் ஏற்கமாட்டார்கள். கடந்த 1½ ஆண்டுகளில் 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டது எந்த ஆட்சியிலாவது நடந்ததுண்டா. ரூ.2 ஆயிரம் கோடி செலவில் ஒருலட்சம் வீடுகள் பழுது நீக்கம் மற்றும் 25 ஆயிரம் புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகளில் சாலை இல்லாத கிராமங்களுக்கு 23 ஆயிரம் கி.மீ. கிராமச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
வன்னியர் இட ஒதுக்கீடு1989-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் தீர்மானமாக வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அறிவித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. தற்போது வன்னியர்கள் 10.5 சதவீத இடஒதுக்கீடு கேட்டு வருகின்றனர். ஆனால் 20 சதவீத இடஒதுக்கீட்டில் 13 சதவீதம் பேர் பயன் அடைந்து வருகின்றனர். என்னிடம் புள்ளி விவரம் உள்ளது. இதில் தென்மாவட்டங்களில் முக்குலத்தோர், பிரமலைக்கள்ளர், மறவர் என 20 சதவீதம் இட ஒதுக்கீட்டில் உள்ளனர். அவர்களுக்கு பெரிய அளவில் ஒதுக்கீடு போவதில்லை.
வன்னியர் சமுதாயத்திற்கே கேட்கும் அளவை விட கூடுதலாக இருக்கிறது. கேட்பது அவர்களின் உரிமை. தனியாக பிரித்து வன்னியர்களுக்கு என கேட்கின்றனர். பொதுவாகத்தான் அரசு முடிவு எடுக்க முடியும். கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் கொடுத்த இடஒதுக்கீட்டில் கன்னியாகுமரி கிறிஸ்தவர்கள் இடஒதுக்கீடு வேண்டாம் என பாதிரியாளர்கள் முதலமைச்சரிடம் கேட்டார்கள். அதனை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். 69 சதவீத இடஒதுக்கீட்டில் அனைத்து சமுதாயத்திற்கும் எவ்வளவு கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் முடிவு செய்வார்.
பா.ஜ.க.விற்கு இருக்கும் ஆயுதம் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, தேர்தல் ஆணையம் போன்றவை. வழக்கு போட்டு ஜனநாயக நாட்டில் ஒரு அரசை முடக்கலாம் என்று நினைத்தால் நடக்காது. எத்தனை வழக்கு போட்டாலும் நீதிமன்றத்தில் நிற்காது. பா.ஜ.க.விடம் உள்ள ஆயுதங்கள் பழுதடைந்தவை. ஆனால் எங்களின் ஆயுதம் வலிமையானவை.
இவ்வாறு அவர் கூறினார்.
- அ.தி.மு.க.வில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு 210 தொகுதிகள் போக 24 தொகுதிகளில்தான் அ.தி.மு.க. போட்டியிடும் நிலை உள்ளது.
- அ.தி.மு.க.வில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு 210 தொகுதிகள் போக 24 தொகுதிகளில்தான் அ.தி.மு.க. போட்டியிடும் நிலை உள்ளது.
சின்னாளபட்டி:
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் புதிய ரேசன் கடைகளை அமைச்சர் இ.பெரியசாமி திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பொங்கல் பண்டிகைக்கு ஒவ்வொரு ரேசன் கார்டுதாரருக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார். மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் சரியான நேரத்தில் அறிவித்து வருகிறார். குறை எதுவும் இல்லாத ஆட்சியை அவர் நடத்தி வருகிறார்.
2026 தேர்தலில் 210 தொகுதிகளில் பெற்றி பெறுவோம் என அ.தி.மு.க.வினர் கூறி வருகின்றனர். அந்த அளவுக்கு போட்டியிடுவதற்கு அவர்களுக்கு இடம் இல்லை. அ.தி.மு.க.வில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு 210 தொகுதிகள் போக 24 தொகுதிகளில்தான் அ.தி.மு.க. போட்டியிடும் நிலை உள்ளது. அவ்வாறு உள்ள நிலையில் இவர்கள் எப்படி 210 தொகுதிகளில் வெற்றி பெற முடியும்? தி.மு.க. ஆட்சி காலத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு ஊராட்சி துறையில் அதிக நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முழுவதும் 22 ஆயிரம் கி.மீ. தூரத்திற்கு கிராமச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சுமார் 2 லட்சம் புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. பழைய வீடுகளுக்கு பதிலாக 25 ஆயிரம் புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் ஆட்சி செய்த அ.தி.மு.க. எதுவும் செய்யவில்லை. 20 ஆண்டு காலமாக பழுது நீக்காமல் இருந்த வீடுகள் எல்லாம் ரூ.2 ஆயிரம் கோடியில் பழுது நீக்கப்பட்டுள்ளது. இதனால் பழைய வீட்டில் வசித்த மக்கள் தற்போது மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு காலனியிலும் எவ்வளவு வீடு பழுது பார்க்கப்பட்டுள்ளது, மக்கள் எப்படி வாழ்ந்து வருகின்றனர் என்பதை அ.தி.மு.க.வினர் விசாரிக்க வேண்டும். நாங்கள் எந்த திட்டத்துக்கும் ஸ்டிக்கர் ஒட்டும் வேலை பார்க்கவில்லை. தேர்தலுக்காக லேப்டாப் திட்டத்தை செயல்படுத்துவதாக கூறுகின்றனர். சட்டமன்றத்தில் அறிவித்த அறிவிப்பைத்தான் நிறைவேற்றி வருகிறோம். விடுபட்ட மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது. தகுதியுள்ள அனைவருக்கும் பணம் வீடு தேடி வரும். விடுபட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட முதலமைச்சர் தயாராக உள்ளார் என்றார்.
- தமிழக வெற்றிக்கழகத்தில் செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் இணைவதால் எங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.
- வாக்காளர் பட்டியல் தீவிர சுருக்க திருத்த பணி என கூறி ஒரே இரவில் என்னுடைய தொகுதியில் 22,000 பேரை நீக்கி விட்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் இன்று அம்பேத்கார் நினைவுதினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு அமைச்சர் இ.பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மேயர் இளமதி, காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் துரைமணிகண்டன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக வெற்றிக்கழகத்தில் செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் இணைவதால் எங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. த.வெ.க. இன்னும் மக்கள் மன்றத்தில் அங்கீகாரம் பெறவே இல்லை. இந்த சூழ்நிலையில் அந்தக் கட்சியுடன் யார் சேர்ந்தாலும், பிரிந்தாலும் எங்களுக்கு எந்த கவலையுமில்லை.
திருப்பரங்குன்றம் விஷயத்தில் தி.மு.க. அரசு சரியான பாதையில் செல்கிறது. தமிழகத்தில் மதத்தை வைத்து அரசியல் செய்ய யார் நினைத்தாலும் அது மக்கள் மத்தியில் எடுபடாது. நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது சட்டமில்லை. எங்கள் உரிமையை பெறுவதற்காக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாக்காளர் பட்டியல் தீவிர சுருக்க திருத்த பணி என கூறி ஒரே இரவில் என்னுடைய தொகுதியில் 22,000 பேரை நீக்கி விட்டனர். இது சம்பந்தமாக தேர்தல் ஆணையத்துக்கு நான் புகார் அனுப்பியுள்ளேன். பி.எல்.ஓ. எனப்படும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் எந்த வீடுகளுக்கும் நேரடியாக சென்று படிவங்களை வழங்கி கையெழுத்து பெறவில்லை. ஒரே அறையில் உட்கார்ந்து கொண்டு கணக்கு காண்பிக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையத்துக்கு வேலை பார்த்துக் கொண்டு வருகிறார்கள். இதனால் எஸ்.ஐ.ஆர். படிவத்தில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன. எனவே மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தேர்தலை நடத்துங்கள், வாக்காளர்கள் அவர்களாக வாக்களிக்கட்டும். திண்டுக்கல்லில் உயிருடன் உள்ள தி.மு.க. நிர்வாகியை இறந்ததாக கூறி பட்டியலில் இருந்து நீக்கி விட்டனர். ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட நரிக்கல்பட்டி, நீலமலைக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் வாக்காளர் குளறுபடி நடந்துள்ளது. பி.எல்.ஓ. அலுவலர்கள் இடமாற்றம் செய்து விட்டதாக பல படிவங்களை தள்ளுபடி செய்து விட்டனர். இது போன்று பல்வேறு தொகுதிகளிலும் குளறுபடி நடந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜிஎஸ்டி முறைகேடுகள் மூலம் வரி ஏய்ப்பு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் சோதனை
- மூன்று மாதங்களுக்கு முன்பு அமைச்சர் பெரியசாமி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சரும், திமுக துணைப்பொதுச்செயலாளர்களில் ஒருவருமான ஐ. பெரியசாமியின் மகள் இந்திரா வீட்டில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திராவும், அவரது துவாரகநாதனும் குடும்பத்துடன் திண்டுக்கல் ஆர்.எம். காலனி அருகே உள்ள செவாலியே சிவாஜி நகரில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மதியம் 1.30 மணியளவில் இந்திராவின் வீட்டில் திடீரென கோவை ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். 1 மணிநேரத்திற்கு மேலாக சோதனை நீடித்த நிலையில், திமுக தொண்டர்கள் அவர் வீட்டின் முன்பு குவிந்தனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வீடு மட்டுமின்றி துவாரகநாதனுக்கு சொந்தமான பின்னலாடை நிறுவனத்திலும் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நிறுவனத்தில் ஜிஎஸ்டி முறைகேடுகள் மூலம் வரி ஏய்ப்பு நடந்ததாக கிடைத்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அமைச்சர் ஐ. பெரியசாமியின் இல்லம், அவரது மகன் செந்தில் குமார் வீடு, இந்திரா வீடு மற்றும் 3 வர்த்தக நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
- திண்டுக்கல் நீதிமன்றம், அமைச்சர் ஐ பெரியசாமியை விடுவித்து உத்தரவிட்டிருந்தது
- உயர்நீதிமன்ற நீதிபதி, திண்டுக்கல் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தார்.
2006 - 2010 வரை அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக அமைச்சர் ஐ. பெரியசாமி, அவரது மனைவி மற்றும் மகன்கள் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம், அமைச்சர் ஐ பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி, திண்டுக்கல் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தார்.
மேலும், அடுத்த 6 மாதங்களின் விசாரணையை முடிக்க வேண்டும் என்று தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக் காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் பதில் அளிக்கவும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
- கடந்த 6 முறை ஆட்சிக்கு வந்துள்ளோம். 7 வது முறையும் தி.மு.க.வில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வருவார்.
- தமிழகத்தில் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெறப்போகிறது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு பணி ஆணைகளை அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
கேள்வி : தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் கூறியதற்கு?
பதில் : திட்டங்கள் அத்தனையும் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சட்டமன்றத்தில் ஒவ்வொரு துறையிலும் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சண்முகம் இதை கூறினாரா? என்று எனக்குத் தெரியவில்லை. அவர் கூட்டணியில் அதிக இடங்கள் வேண்டும் என கூறியுள்ளார். அது அவரின் உரிமை. 7 ஆண்டு காலமாக ஒரு தூசி கூடப்படாமல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணியை பார்த்து வருகிறார்.
இந்தியாவில் வலதுசாரிகள் ஒரு பக்கமும் இடதுசாரிகள் ஒரு பக்கமும் உள்ளனர். தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையில் ஜனநாயக கூட்டணி மிக சிறப்பாக உள்ளது. மக்களுக்கான கூட்டணி இது. எந்த பிரச்சனையும் இல்லை. எந்த திட்டங்கள் எனக்கூறினால் அதனையும் நிறைவேற்றித் தர எங்களது முதல்வர் தயாராக உள்ளார்.
கேள்வி : தி.மு.க. கூட்டணியில் இருந்து முக்கிய கட்சிகள் விலக உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியது பற்றி?
பதில் : அது பகல் கனவு. யாரும் போக மாட்டார்கள். கண்கள் தெரியும் போதே தண்ணீர் இல்லாத பாறை கிணற்றில் எப்படி விழுவார்கள். தண்ணீர் இருந்தால் குதிக்கலாம். தண்ணீர் இல்லாமல் எப்படி குதிக்க முடியும்.
இந்தியாவில் தலைசிறந்த அரசாக தலைசிறந்த மாநிலமாக தலை சிறந்த முதலமைச்சராக தமிழ்நாட்டில் திட்டங்கள் வளர்ச்சியிலிருந்து எல்லோரிடத்திலும் முதன்மையான அரசாங்கம் எல்லாத்துறைகளும் உயர்ந்துள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 100க்கு 100 சதவீதம் வந்துள்ளது என்றால் படிப்பதற்கு ஆர்வமாக வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் போகாத பள்ளிக்கூடங்களிலும் மாணவர்கள் நிரம்பி வழிகின்றனர். கல்லூரிக்கு சென்றால் பணம், பள்ளிகளில் காலை உணவு, மதிய உணவு உள்ளது. படிப்பதற்கு இலவசம், கல்லூரி வரை இலவசம் எல்லாமே இலவசம். ஆனால் இதனை இலவசம் என கூற மாட்டேன். கட்டணமில்லா கல்வி பெறுவதற்கு முதலமைச்சர் வலியுறுத்தி வருகிறார்.
கேள்வி : ஆட்சி, அதிகாரத்தில் பங்கு குறித்து?
பதில் : ஆட்சியில் யாரும் இதுவரை பங்கு கேட்டது இல்லை. கடந்த 6 முறை ஆட்சிக்கு வந்துள்ளோம். 7 வது முறையும் தி.மு.க.வில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வருவார்.
தமிழகத்தில் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெறப்போகிறது.
கேள்வி : கூட்டணி கட்சிகள் அதிக இடங்கள் கேட்பது குறித்து?
பதில் : நான் சாப்பிட வேண்டும் என்றால் எனக்கு மூன்று புரோட்டாக்கள் வைத்தால் சாப்பிட முடியாது. 2 அல்லது 3 இட்லிகள் தான் சாப்பிட முடியும். அவரவர் தகுதிக்கு ஏற்றாற் போல் கடந்த காலங்களில் எந்தெந்த இயக்கங்களுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதோ அந்த அடிப்படையில் முதலமைச்சர் முடிவு செய்து வழங்குவார். எந்தக் கூட்டணியும் எங்களை விட்டு போகாது.
இவ்வாறு அவர் கூறினார்.






