என் மலர்
திண்டுக்கல்
- நாளை காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.
- கிரியம்பட்டி, சத்திரப்பட்டி, இன்னாசிபுரம், பிரகரை, உண்டார்பட்டி
தாடிக்கொம்பு:
தாடிக்கொம்பு துணை மின்நிலையத்தில் நாளை (7ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாளை காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை தாடிக்கொம்பு, கிரியம்பட்டி, சத்திரப்பட்டி, இன்னாசிபுரம், பிரகரை, உண்டார்பட்டி, தவசிகுளம், திருகம்பட்டி, மறவபட்டி, அகரம், சுக்காம்பட்டி, உலகம்பட்டி, மல்லனம்பட்டி, கோட்டூர் ஆவாரம்பட்டி, அழகுபட்டி, விட்டல் நாயக்கன்பட்டி, தாதங்கோட்டை, கொத்தப்புளி, அழகர்நாயக்கன்பட்டி ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதனை சார்ந்த தொழிற்சாலைகளுக்கும் மின்வினியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த சில நாட்களாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
- ஏப்ரல் முதல் வாரம் வரை சுற்றுலா பயணிகள் வருகை குறைந்த அளிவிலேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானல் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்கு ஆண்டின் அனைத்து மாதங்களும் சுற்றுலா பயணிகள் வருகை இருந்து கொண்டே காணப்படும். குறிப்பாக கோடை காலங்களிலும், வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும்.
கொடைக்கானலில் தற்போது பனி சீசன் நிறைவடைந்து கோடைசீசன் தொடங்க உள்ளது. இதற்காக பிரையண்ட் பூங்காவில் நடத்தப்படும் மலர் கண்காட்சிக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது பள்ளிகளில் தேர்வுகள் தொடங்கி இருப்பதால் கடந்த சில நாட்களாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
இதனால் குணாகுகை, பைன்பாரஸ்ட், மோயர்பாயிண்ட், பசுமை பள்ளத்தாக்கு, கோக்கர்ஸ் வாக், பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. நட்சத்திர ஏரியிலும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் ஒருசில படகுகளே இயக்கப்படுகின்றன. அரசு பொதுத்தேர்வுகள் தொடங்கி உள்ள நிலையில் அடுத்தடுத்து மற்ற பள்ளி மாணவர்களுக்கும் தேர்வுகள் நடைபெற உள்ளது. இதனால் ஏப்ரல் முதல் வாரம் வரை சுற்றுலா பயணிகள் வருகை குறைந்த அளிவிலேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள ஓட்டல் உரிமையாளர்கள், டாக்சி ஓட்டுனர்கள், கடை வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.
- தமிழகத்தில் புதிய மாற்றாக தொடங்கப்பட்ட ம.தி.மு.க. தற்போது தி.மு.க.வின் காலடியில் கிடக்கிறது.
- 12% லட்சம் புதிய வாக்காளர்களின் ஆதரவு த.வெ.க.வுக்கு இருக்கிறது.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட த.வெ.க. சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில், த.வெ.க. பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டு பேசியதாவது:-
த.வெ.க. அணைக்க முடியாத நெருப்பாக திகழ்கிறது.
தமிழகத்தில் புதிய மாற்றாக தொடங்கப்பட்ட ம.தி.மு.க. தற்போது தி.மு.க.வின் காலடியில் கிடக்கிறது. கேப்டன் விஜயகாந்த் தொடங்கிய தே.மு.தி.க., தி.மு.க.விடம் அடகு வைக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் 'டார்ச் லைட் அடித்து தனது கட்சி உயிரோடு இருக்கிறதா என்று அறிவாலயத்தில் தேடுகிறார். ஒருவர் தேர்தல் அறிவிக்கும் முன்பே வேட்பாளர்களை அறிவித்துவிட்டு வீதியில் நிற்கிறார்.
ஒரு தேசிய கட்சியும், ஒரு மாநில கட்சியும் த.வெ.க.வுடன் கூட்டணிக்கு வரத்தயாராக உள்ளது. எனவே தனியாக மட்டுமின்றி அணியாகவும் வருவதற்கு தகுதி படைத்தது த.வெ.க. ஆகும். 12% லட்சம் புதிய வாக்காளர்களின் ஆதரவு த.வெ.க.வுக்கு இருக்கிறது. முதலமைச்சரின் வீட்டிலும் கூட விஜய்க்கு ஒரு ஓட்டு இருக்கிறது. எனவே எத்தனை கூட்டணி வந்தாலும் த.வெ.க.வை வீழ்த்த முடியாது. விஜய் ஆகாயம் போன்றவர். அதனால் அண்டங்காக்கைகள் அசுத்தம் செய்ய முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.4 லட்சத்து 66 ஆயிரம் கடன் உள்ளது.
- அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்தவர்கள் கரைவேட்டியை கூட கட்ட முடியாமல் போய்விட்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடந்தது. இதற்கு ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் பாரதிமுருகன் தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-
தி.மு.க. அரசு அனைத்து வரிகளையும் உயர்த்தியது. அதேபோல் விலைவாசியும் கடுமையாக உயர்ந்துவிட்டன. இதன்மூலம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை கூடுதல் செலவு ஏற்படுகிறது. அதை மறைக்க தி.மு.க. அரசு ரூ.1,000 வழங்குகிறது. அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மக்களின் சுமையை குறைக்க ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதனால் தமிழக மக்களிடம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு பெருகிறது. அதை சகித்து கொள்ள முடியாமல் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி குறித்து தி.மு.க. அவதூறு பரப்புகிறது. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மூழ்கும் கப்பல் என்று கூறுகின்றனர். அ.தி.மு.க. நீர்மூழ்கி கப்பலாக இருந்து தமிழக மக்களை பாதுகாப்பாற்றும். தி.மு.க. ஆட்சியால் தமிழகத்தின் கடன்சுமை ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது. ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.4 லட்சத்து 66 ஆயிரம் கடன் உள்ளது.
கரூரில் 41 பேர் உயிரிழப்புக்கு காரணமானவர் யார்? என்று சி.பி.ஐ. அறிக்கை வெளியாக இருக்கிறது. ஆனால் விஜய் செய்த தவறால் உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறுகின்றனர். ஆனால் கரூர் சம்பவத்தில் தன் ரசிகர்கள் இறந்ததற்கு பொறுப்பேற்காமல் நான் தான் காரணமா? என விஜய் கேட்கிறார்.
அரசியல் கட்சிகள் நடத்தும் ரோட்ஷோக்களை முறைப்படுத்தும் அரசின் நெறிமுறைகளால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கிறது. நான் கூறிய பிறகு தான் வேலூரில் நடைபெற்ற த.வெ.க. கூட்டத்தில் கூடாரம் அமைத்து விஜய் பேசியுள்ளார்.
அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்தவர்கள் கரைவேட்டியை கூட கட்ட முடியாமல் போய்விட்டனர். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நல்லாட்சி அமையும் என்று பேசினார்.
- அமாவாசை, பவுர்ணமி போன்ற விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
- பால்குடம் எடுத்து கிரிவீதி, சன்னதி வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் பழனி அடிவாரம் கிரி வீதியில் உள்ள புலிப்பாணி சித்தர் ஆசிரமத்துக்கும் சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இங்கு அமாவாசை, பவுர்ணமி போன்ற விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்நிலையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் பழனி கோவிலுக்கு வந்தனர். அவர்கள் புலிப்பாணி ஆசிரமத்தில் நடந்த சிறப்பு யாகத்தில் பங்கேற்றனர். 25 ஆண்கள், 25 பெண்கள் என அவர்கள் அனைவரும் தமிழ் பாரம்பரியப்படி வேட்டி சட்டை அணிந்து புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமையில் நடந்த யாகத்தில் பங்கேற்றனர்.
தொடர்ந்து பால்குடம் எடுத்து கிரிவீதி, சன்னதி வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். அதன் பின் திருஆவினன்குடி கோவில், குழந்தை வேலாயுத சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். அதன் பின் பழனி மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா தேரோட்டத்தில் கலந்து கொண்டு அக்னி சட்டி ஏந்தி ஓம் சக்தி, பராசக்தி கோஷத்துடன் ஊர்வலமாக சென்று வழிபட்டனர்.
இதனை உள்ளூர் பக்தர்கள் மிகுந்த வியப்புடன் பார்த்தனர். தொடர்ந்து இக்குழுவினர் அறுபடை வீடுகளுக்கும் சென்று வழிபாடு நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.
- வாகனத்தில் சார்ஜ் குறையும் போது காலால் பெடலை இயக்கி ஓட்டிச் செல்லலாம்.
- இரவில் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து இருக்கையை விரித்து மூவரும் தூங்கி விடுகின்றனர்.
நத்தம்:
கேரளா மாநிலம் வயநாடு-சுல்தான் பத்தேரியைச் சேர்ந்தவர் ரெனீஸ் (வயது 36). இவர் தனது மனைவி ரஷினி (31), மகன் ரியோ ஆகியோருடன் இணைந்து தயாரித்த சைக்கிள் கேரவனில் கேரளாவில் இருந்து காஷ்மீர் வரை பயணம் மேற்கொண்டுள்ளார்.
சூரிய ஒளி மின் சக்தியில் இயங்கும் இந்த கேரவன் ஒரு நாளைக்கு 20 முதல் 30 கி.மீ வரை இயங்குகிறது. மேலும் இந்த வாகனத்தில் சமையல் எரிவாயு அடுப்பு, படுக்கை அறைகள் அமைக்கபட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நோக்கத்தில் கடந்த ஜனவரி 6-ம் தேதி பத்தினம்திட்டாவில் பயணத்தை தொடங்கிய அவர் கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர் வழியாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வழியாக சென்றார். மேலும் வித்தியாசமாக உள்ள இந்த சைக்கிள் கேரவனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். இவரது பயணத்தை கேரள மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமார் தொடங்கி வைத்தார்.
இந்த வாகனம் செயல்படும் விதம் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார். வாகனத்தில் சார்ஜ் குறையும் போது காலால் பெடலை இயக்கி ஓட்டிச் செல்லலாம். இரவில் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து இருக்கையை விரித்து மூவரும் தூங்கி விடுகின்றனர். வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்திய பாரம்பரியத்தின் அடையாளம். ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்களின் வாழ்க்கை முறை வெவ்வேறாக இருக்கும். இவ்வாறு வாழும் மக்களின் நிலைகளை அறிந்து கொள்வதுடன் மாற்றுத்திறனாளிகளுக்கும் தங்களால் இயன்றதை உதவும் நோக்கில் இந்த பயணத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
- மலைப்பாதைகளில் சாலையோரங்களில் உள்ள தோட்டங்களிலும் வேலிக்காக சங்கு பூச்செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
- பூச்செடிகளில் இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறங்களில் சங்கு பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.
பெரும்பாறை:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் ஒவ்வொரு காலநிலைக்கு ஏற்ப மரம், செடிகளில் பல்வேறு வண்ணப்பூக்கள் பூத்து கவர்ந்திழுப்பது வழக்கம். அதன்படி, தற்போது கொடைக்கானல் நகர்ப்பகுதி, மலைப்பாதைகள் மற்றும் கிராமங்களில் சங்கு பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.
குறிப்பாக கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பெரும்பாறை. தாண்டிக்குடி, பண்ணைக்காடு, மங்களம்கொம்பு, புல்லாவெளி, கே.சி. பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காபி, வாழை, மிளகு போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் தோட்டங்களுக்குள் யாரும் செல்லாமல் இருக்க வேலிக்காக சங்கு பூச்செடிகளை விவசாயிகள் நடவு செய்துள்ளனர். அதேபோல் மலைப்பாதைகளில் சாலையோரங்களில் உள்ள தோட்டங்களிலும் வேலிக்காக சங்கு பூச்செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அந்த பூச்செடிகளில் இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறங்களில் சங்கு பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. இவை சாலையோரங்களில் மின் விளக்குகளை தோரணங்களாக கட்டிவிடப்பட்டது போன்று சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளன. இதனால் அவற்றை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பதுடன், தங்களது கேமரா, செல்போனில் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
- சால்வையை வீராசாமிநாதனுக்கு அணிவித்து விட்டு திடீரென கத்தியால் அவரை வயிற்றில் குத்தினார்.
- பிடிபட்டவரை வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் தொழிலாளர்கள் ஒப்படைத்தனர்.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் வீராசாமிநாதன் (வயது 55). இவர் சொந்தமாக கல்வி நிறுவனங்கள் நடத்தி வருவதுடன், பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார். மேலும் தமிழகம், பாண்டிச்சேரியில் பர்னிச்சர் டீலராகவும் இருந்து வருகிறார்.
இவர் வேடசந்தூர் கோவிலூர் பிரிவில் உள்ள தோட்டத்தில் தனது மனைவி தாமரைசெல்வியுடன் வசித்து வருகிறார். இவரது 2 மகன்கள் ஸ்ரீகாந்த், சச்சின் ஆகியோருக்கு திருமணம் முடிந்துவிட்ட நிலையில் அவர்கள் தந்தையின் தொழிலையே கவனித்து வருகின்றனர். இவரது தோட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். வருகிற சட்டமன்ற தேர்தலில் வேடசந்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக தொடர்ந்து கட்சி பணிகள் ஆற்றி வந்தார். தினந்தோறும் தொகுதிக்குட்பட்ட பல கிராமங்களுக்கு சென்று முகாம்கள் நடத்தி நலத்திட்ட உதவிகளும் வழங்கி வந்தார்.
இதனால் அவரை பார்க்க தினந்தோறும் காலையிலேயே கட்சியினர் தோட்டத்து வீட்டிற்கு வருவது வழக்கம். இன்று காலை அவரது உறவினரான குளத்தூர் காளனம்பட்டியை சேர்ந்த நாச்சிமுத்து என்பவர் தனது மகள் திருமணத்திற்காக அழைப்பிதழ் கொடுக்க வந்தார். அழைப்பிதழை வீராசாமிநாதனிடம் கொடுத்து விட்டு வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் அவருக்கு சால்வை அணிவிக்க வந்தார். சால்வையை வீராசாமிநாதனுக்கு அணிவித்து விட்டு திடீரென கத்தியால் அவரை வயிற்றில் குத்தினார். இதனை சற்றும் எதிர்பாராத அவர் அந்த வாலிபரை தள்ளிவிட்டு சத்தம் போட்டார். இருந்த போதும் வீராசாமிநாதனின் பின் தலையிலும் குத்தினார். உடனே அருகில் இருந்த நாச்சிமுத்து அந்த வாலிபரை பிடிக்க முயன்றார். அப்போது நாச்சிமுத்துவையும் அவர் கத்தியால் குத்தினார்.
இதனை தொடர்ந்து அவர் சத்தம் போடவே அங்கிருந்த தொழிலாளர்கள் ஓடிவந்து அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
கத்திக்குத்து சம்பவத்தில் காயமடைந்த வீராசாமிநாதன், நாச்சிமுத்து ஆகியோர் உடனடியாக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து வீராசாமிநாதன் திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிடிபட்டவரை வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் தொழிலாளர்கள் ஒப்படைத்தனர். போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியதில் எரியோடு பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்த சின்னச்சாமி மகன் மணிகண்டன் (27) என தெரியவந்துள்ளது. அவர் எதற்காக கத்தியால் குத்தினார். தேர்தல் முன்விரோதம் காரணமாக குத்தினாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வீராசாமிநாதனை கத்தியால் குத்திய சம்பவம் அறிந்ததும் ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான தி.மு.க.வினர் அங்கு குவிந்தனர். பிடிபட்ட வாலிபரின் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோடையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- பல இடங்களில் தற்போதே மக்கள் விலை கொடுத்து தண்ணீரை வாங்கி வருகின்றனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் மற்றும் பேரூராட்சி பகுதிக்கும் அணைப்பட்டி வைகை ஆற்றுப்படுகையில் குடிநீர் கிணறுகள் அமைக்கப்பட்டு கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மழை போதிய அளவு பெய்யாத காரணத்தால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் முறையாக ஆங்காங்கே பழுது ஏற்படும் குழாய்களை சரி செய்யாததால் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி செல்லும் சம்பவமும் நடந்து வருகிறது.
இதனை சரி செய்வதற்கு அதிகாரிகளும், பணியாளர்களும் கடுமையாக முயன்றாலும் மற்றொரு இடத்தில் உடைப்பு ஏற்பட்டு விடுகிறது. இது போன்ற காரணங்களால் கோடையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்படும் பகுதிகளை ஆராய்ந்து அதனை சரி செய்ய ஊராட்சி, பேரூராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும். பல இடங்களில் தற்போதே மக்கள் விலை கொடுத்து தண்ணீரை வாங்கி வருகின்றனர். பழுதடைந்த சாலைகளில் குழாய் உடைப்பு ஏற்படுவதால் குடிநீர் வீணாவதோடு சாலைகளும் சேதமடைகிறது. மாவட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் முறையான ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.
- விராலிபட்டி, நொக்கியோடைபட்டி, வடகாட்டுப்பட்டி, குரும்பபட்டி,
திண்டுக்கல்:
திண்டுக்கல் துணை மின்நிலையத்தில் நாளை (21ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழைக்காய்பட்டி, சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், தோமையார்புரம், மேட்டுப்பட்டி, தொழில்பேட்டை, என்.ஜி.ஓ. காலனி, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து, ஆர்.எம்.டி.சி. காலனி, அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, உத்தனம்பட்டி, காப்பிளியபட்டி, நாகல்புதூர், பாரதிபுரம், ரெயில்நிலையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும்.
இதேபோல் கொசவபட்டி துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கொசவபட்டி, செம்மடைப்பட்டி கொழிஞ்சிபட்டி, தொட்டியபட்டி, சட்டக்காரன்பட்டி, எமக்கலாபுரம், கைலாசம்பட்டி, வேலாம்பட்டி, சாணார்பட்டி, ராமன் செட்டியபட்டி, கோணப்பட்டி, நத்தமாடிபட்டி, பஞ்சம்பட்டி, ராகலாபுரம், வீரசின்னம்பட்டி, கல்லுப்பட்டி, தவசிமடை, விராலிபட்டி, நொக்கியோடைபட்டி, வடகாட்டுப்பட்டி, குரும்பபட்டி, கவராயபட்டி, கூவனூத்து மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என திண்டுக்கல் மின்பகிர்மான செயற்பொறியாளர் பிரகதீஸ் கண்ணன் தெரிவித்துள்ளார்.
- வீடியோ வைரலான நிலையில் கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
- வீடியோவை பதிவிட்டவர் மேல்மலை கிராமம் பூம்பாறையைச் சேர்ந்த செல்வக்குமார் என தெரிய வந்தது.
கொடைக்கானல்:
சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு வரும் இளைஞர்கள் ஆர்வ மிகுதியில் பல்வேறு வீடியோக்களை எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகளில் அதிவேகத்தில் மோட்டார் சைக்கிளில் செல்வது, தடை செய்யப்பட்ட அருவிகள், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு சென்று அதன் அனுபவங்களை தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இது போல கடந்த சில நாட்களாக கையில் மிகப்பெரிய வாளுடன் திரைப்பட பாடல் பின்னணியில் வாகனங்களில் அமர்ந்தவாறு வீடியோ எடுத்து வாலிபர் சமூக வலைதள பக்கத்தில் வீடியோ பதிவிட்டு இருந்தார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் இது குறித்து கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் அபினேஷ் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் வீடியோவை பதிவிட்டவர் மேல்மலை கிராமம் பூம்பாறையைச் சேர்ந்த செல்வக்குமார் (25) என தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். வீடியோவில் பதிவு செய்த வாள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களையும் கைப்பற்றினர். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் இது போன்று வீடியோ பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- விரைவாக செல்லவும், இயற்கை அழகை ரசித்தபடி செல்லவும் ரோப் காரில் பயணம் மேற்கொள்கின்றனர்.
- ரோப்கார் சேவை வழக்கம் போல் இயக்கப்படும் என பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக ரோப் கார் சேவை மற்றும் மின் இழுவை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான பக்தர்கள் ரோப் காரில் பயணம் செய்வதையே விரும்புகின்றனர். விரைவாக செல்லவும், இயற்கை அழகை ரசித்தபடி செல்லவும் ரோப் காரில் பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில் ரோப் கார் பராமரிப்பு பணிக்காக தினமும் ஒரு மணி நேரமும், மாதத்துக்கு ஒரு நாளும், வருடத்திற்கு ஒரு மாதமும் நிறுத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் இன்று காலை ரோப்கார் சேவை வழக்கம் போல் இயக்கப்படும் என பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். ஆனால் திடீரென மின்னணு பழுது ஏற்பட்டதால் ரோப் கார் இன்று காலை இயக்கப்படவில்லை. இதனால் ரோப் கார் ஊழியர்கள் தொடர்ந்து பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
நீண்ட நேரம் காத்திருந்தும் ரோப்கார் இயக்க முடியாததால் பக்தர்கள் படிப்பாதை மற்றும் மின் இழுவை ரெயில் மூலமாக மலைக்கோவில் சென்று முருகனை தரிசனம் செய்யுமாறு கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. முன்னறிவிப்பு இன்றி திடீரென ரோப்கார் நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.






