என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழனி கோவில்"

    • பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சாதாரண நாட்களிலும் அதிகரித்து காணப்படுகிறது.
    • தினமும் பிற்பகல் 3 மணிமுதல் 4 மணிவரை 1 மணிநேரம் ஒதுக்கப்படும்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். முக்கிய விஷேச நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம்.

    இங்கு இலவச தரிசனம் மட்டுமின்றி ரூ.10 மற்றும் ரூ.100 கட்டண தரிசன வசதியும் உள்ளது. இவை தவிர பிரபலமானவர்கள், அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள் ஆகிய பிரமுகர்களுக்கு வி.ஐ.பி. தரிசனம் எனப்படும் சிறப்பு தரிசன வசதிக்கு கோவில் நிர்வாகம் அனுமதி வழங்குகிறது. சமீப காலமாக பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சாதாரண நாட்களிலும் அதிகரித்து காணப்படுகிறது.

    இந்நிலையில் அதிக பக்தர்கள் வரும் முக்கிய கோவில்களில் பிரேக் தரிசனம் எனப்படும் இடைநிறுத்த தரிசன வசதி ஏற்படுத்தப்படும் என்று சட்டப்பேரவை கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். இதனையடுத்து பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் விரைவில் இந்த வசதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தில் விரைவாக சுவாமி தரிசனம் செய்யும் வகையில் தினமும் பிற்பகல் 3 மணிமுதல் 4 மணிவரை 1 மணிநேரம் ஒதுக்கப்படும். இந்த சேவை தைப்பூசம், பங்குனி உத்தரம் உள்ளிட்ட திருவிழாக்கள் நடைபெறும் 10 நாட்கள், மாத கார்த்திகை, தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு உள்பட முக்கிய விஷேசங்கள் வரும் 44 நாட்கள் செயல்படுத்தப்படமாட்டாது.

    இந்த தரிசன சேவைக்கு பக்தர் ஒருவருக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படும்.

    பிரேக் தரிசன சேவையை பயன்படுத்தும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பஞ்சாமிர்த டப்பா, தேங்காய், பழம், விபூதி, மஞ்சள் பை அடங்கிய தொகுப்பு பிரசாதமாக வழங்கப்படும். இந்த தரிசன வசதி குறித்து பக்தர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை அல்லது ஆலோசனைகள் இருந்தால் எழுத்துப்பூர்வமாக வருகிற 29ம் தேதிக்குள் பழனி தேவஸ்தான அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ கோவில் நிர்வாகத்திடம் தெரிவிக்கலாம்.

    • நடிகர் சூர்யா உள்ளிட்டோரை பழனி கோவில் அதிகாரிகள் வரவேற்றனர்.
    • கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    தமிழ் கடவுள் முருகபெருமானின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். மேலும் வெளிமாநில முதல்-மந்திரிகள், நடிகர்கள் உள்பட பல்வேறு பிரபலங்கள் வந்து செல்கின்றனர்.

    நடிகர் சூர்யாவின் புதிய படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதனையொட்டி அவர் இன்று பழனிக்கு வந்தார். அவருடன் அவரது சகோதரி பிருந்தா மற்றும் லக்கி பாஸ்கர் பட டைரக்டர் வெங்கட் அட்லூரி ஆகியோரும் வந்தனர்.

    அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு சென்ற நடிகர் சூர்யா உள்ளிட்டோரை பழனி கோவில் அதிகாரிகள் வரவேற்றனர். இன்று காலை 8 மணிக்கு நடைபெற்ற கால பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் இன்ப அதிர்ச்சியாக நடிகர் சூர்யாவை பார்த்து அவருடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    • பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • முக்கிய நிகழ்வாக திருக்கல்யாணம் ஜூன் மாதம் 8-ந் தேதி நடைபெறுகிறது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன் வரிசையில் வைகாசி விசாகத் திருவிழாவும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த வருடத்துக்கான திருவிழா ஜூன் 3-ந் தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

    திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி சப்பரம், தந்தப்பல்லக்கு, தோளுக்கினியாள், தங்ககுதிரை, வெள்ளியானை, காமதேனு, ஆட்டுக்கிடா, வெள்ளிமயில், தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    முக்கிய நிகழ்வாக திருக்கல்யாணம் ஜூன் மாதம் 8-ந் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 7 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும். அதனைத் தொடர்ந்து வைகாசி விசாகத் தேரோட்டம், மறுநாள் 9-ந் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறும்.

    திருவிழா நடக்கும் 10 நாட்களும் பெரியநாயகி அம்மன் கோவிலில் பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம், இன்னிசை, வீணை இசை, நாட்டுப்புற பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் ஆணையர் மாரிமுத்து தலைமையில் கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    • மதுரை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்து பழனிக்கு வந்ததால் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
    • நீண்ட வரிசையில் காத்திருந்து மலைக்கோவிலில் தண்டாயுதபாணி சாமியை தரிசனம் செய்தனர்.

    பழனி:

    தமிழ்கடவுள் முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். முக்கிய திருவிழாக்களான பங்குனி உத்திரம், தைப்பூசத்தையொட்டி பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

    தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்து பழனிக்கு வந்ததால் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கேரளாவில் இருந்தும் அதிக அளவு பக்தர்கள் வந்திருந்ததால் பஸ் நிலையம், அடிவாரம், கிரிவீதி, யானைப்பாதை, படிப்பாதை, ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில் நிலையம் ஆகியவற்றில் அதிக அளவில் பக்தர்கள் திரண்டனர். நீண்ட வரிசையில் காத்திருந்து மலைக்கோவிலில் தண்டாயுதபாணி சாமியை தரிசனம் செய்தனர்.

    இதனால் பஸ்நிலையம், அடிவாரம் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போலீசார் சீரமைத்தனர். 

    • பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழனி கோவிலில் 10 நாட்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
    • சென்னிமலையில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதால் அந்த வழியாக பக்தர்களை அனுமதிக்காமல் உள்ளனர்.

    சென்னை:

    தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய, சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, தைப்பூசத்திற்கு முருகன் கோவில்களில் 3 நாட்கள் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு இலவச தரிசனம் அனுமதி அளிக்கப்பட்டது போல், பங்குனி உத்திரத்திற்கு இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளுமா? என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழனி கோவிலில் 10, 11, 12 ஆகிய 3 நாட்கள் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு இலவசமாக தரிசனம் செய்யலாம் என்று அறிவித்தார்.

    பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழனி கோவிலில் 10 நாட்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

    இதேபோல் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி பேசும்போது பங்குனி உற்சவத்தையொட்டி எங்கள் பகுதியில் இருந்து நிறைய பேர் சாலை மார்க்கமாக செல்கிறார்கள். ஆனால் சென்னிமலையில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதால் அந்த வழியாக பக்தர்களை அனுமதிக்காமல் உள்ளனர்.

    இதை அமைச்சர் கவனத்தில் கொண்டு அந்த பகுதியில் இன்றும் நாளையும் 2 நாட்கள் பக்தர்கள் சென்று வர அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.

    இதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு அப்பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணி நடந்து கொண்டிருந்தாலும் துறை செயலாளர் மற்றும் கலெக்டர் இடம் கலந்து பேசி இரண்டு நாட்கள் அங்கு சாலை பணிகளை நிறுத்த ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.

    • பழனி முருகப்பெருமான் சிலை நவபாஷாணத்தால் ஆனது.
    • ஓதுவார்கள் திருமுறை பாடியதை அடுத்து கொடிமரம், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை நடைபெற்றது.

    பழனி:

    தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தைப்பூச திருவிழாவில் பாதயாத்திரையாகவும், பங்குனி உத்திர திருவிழாவில் தீர்த்தக்காவடி எடுத்தும் பக்தர்கள் பழனிக்கு வருவது சிறப்பு அம்சமாகும்.

    பழனி முருகப்பெருமான் சிலை நவபாஷாணத்தால் ஆனது. எனவே கோடைகாலமான பங்குனி, சித்திரை மாதங்களில் முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு, காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து பக்தர்கள் பழனியாண்டவருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள்.

    இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா, பழனி உபகோவிலான திருஆவினன்குடியில் கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதையொட்டி நேற்று இரவு கிராம சாந்தி, வாஸ்து சாந்தி பூஜை, அஸ்திரதேவர் உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று காலை திருஆவினன்குடி கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம் நடந்தது.

    பின்னர் சேவல், மயில் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிப்படம் கொடிமரம் முன்பு வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. மேலும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் என 16 வகை பொருட்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து முத்துக்கு மாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சப்பரத்தில் எழுந்தருளினார்.

    அதையடுத்து அஸ்திரதேவர், விநாயகர் சிலை முன்பு மயூர யாகம், வாத்திய பூஜைகள் நடைபெற்றது. பின்னர் காலை 11 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... வீரவேல் முருகனுக்கு அரோகரா என சரண கோஷம் எழுப்பினர்.

    பின்னர் ஓதுவார்கள் திருமுறை பாடியதை அடுத்து கொடிமரம், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை நடைபெற்றது.

    திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் உச்சிக்கால பூஜையில் மூலவருக்கு 16 வகை அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னர் மூலவர் சன்னதியில் உள்ள விநாயகருக்கு காப்புக்கட்டு நடந்தது. அதைத்தொடர்ந்து சண்முகர், உற்சவர், துவார பாலகர்கள், மயில்வாகனம் மற்றும் பெரியநாயகி அம்மன் கோவிலில் சோமாஸ்கந்தர், சிவன், பெரியநாயகிஅம்மன், நடராஜர், சிவகாமி அம்மன் ஆகியோருக்கு காப்புக்கட்டு நடைபெற்றது.

    பழனி பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் வருகிற 10-ம் தேதி இரவு 5.30 மணிக்கு மேல் நடைபெறுகிறது. அடுத்த நாள் 11-ம் தேதி பங்குனி உத்திரம் அன்று பழனி கிரிவீதியில் தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்துடன் கோவில் தேவஸ்தானம் இணைந்து செய்து வருகின்றனர்.

    பழனி முருகன் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களின் போது தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி உத்திர விழாவையொட்டி வருகிற 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை 5 நாட்கள் தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தப்படுகிறது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, சித்தனாதன் சன்ஸ் உரிமையாளர்கள் சிவனேசன், பழனிவேலு, ராகவன், கந்தவிலாஸ் உரிமையாளர்கள் செல்வக்குமார், நவீன், நரேஷ், சரவணப்பொய்கை கந்தவிலாஸ் உரிமையாளர் பாஸ்கரன், கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிஹரமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபாலு, ஸ்ரீபெரியநாயகி அம்மன் கல்வி அறக்கட்டளை தலைவர் சுந்தரம் மற்றும் நகர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக இன்று காலையில் பழனி மலைக்கோவிலில் வள்ளிதெய்வானை சமேத சண்முகருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
    • சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சாமிக்கு பூஜைகள் நடத்தப்பட்டு சோடஷதீபாராதனை காட்டப்பட்டு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25ந் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது. இதற்காக பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து வள்ளி தெய்வானையுடன் முத்துக்குமாரசாமி மலைக்கோவிலில் இருந்து சின்னகுமாரசாமி மலை அடிவாரத்தில் எழுந்தருளினார். பராசக்திவேல் மலையில் இருந்து இறங்கி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் வந்து அடிவாரம் சென்றடைந்தது.

    அதன்பின் இரவு 7.15 மணி அளவில் கிரிவீதியில் தாரகாசூரன், பானுகோபன், சிங்கமுகசூரன், சூரபத்மன் ஆகியோரை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோஷம் முழங்க முருகனை வழிபட்டனர். மேலும் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு விரதம் மேற்கொண்டிருந்த பக்தர்களும் சூரசம்ஹாரத்தை கண்டு தங்கள் விரதத்தை நிறைவு செய்தனர்.

    கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக இன்று காலையில் பழனி மலைக்கோவிலில் வள்ளிதெய்வானை சமேத சண்முகருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

    இதற்காக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சாமிக்கு பூஜைகள் நடத்தப்பட்டு சோடஷதீபாராதனை காட்டப்பட்டு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு 7 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் வள்ளி தெய்வானை, முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    • வழக்கமாக வருடத்திற்கு ஒருமாதமும், மாதத்திற்கு ஒருநாளும் பராமரிப்பு பணிக்காக ரோப்கார் நிறுத்தப்படுகின்றது.
    • வடகயிறுகள் சீரமைக்கப்பட்டு இழுவைக்காக புதிய ஆயில் மாற்றப்படுகிறது.

    பழனி:

    தமிழ்கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அடிவாரத்தில் இருந்து படிப்பாதை, யானைப்பாதை, மின்இழுவை ரெயில், ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு செல்கின்றனர். இதில் பக்தர்கள் ரோப்காரில் செல்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    3 நிமிடத்தில் மலைக்கோவிலை எட்டிவிடலாம். மேலும் இயற்கை எழில்கொஞ்சும் பழனி மலையை கண்டு ரசித்தவாறு செல்லலாம் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். வழக்கமாக வருடத்திற்கு ஒருமாதமும், மாதத்திற்கு ஒருநாளும் பராமரிப்பு பணிக்காக ரோப்கார் நிறுத்தப்படுகின்றது. அப்போது வடகயிறுகள் சீரமைக்கப்பட்டு இழுவைக்காக புதிய ஆயில் மாற்றப்படுகிறது.

    அதன்படி இன்று மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப்கார் நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்தது. பக்தர்கள் மாற்றுப்பாதையிலும், மின்இழுவை ரெயிலையும் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டனர். இன்று கோவிலுக்கு பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது. தொடர்ந்து மழை பெய்ததால் குறைந்த அளவு பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்றனர்.

    மேலும் பஸ்நிலையம், அடிவாரம் பகுதியிலும் பக்தர்கள் வருகை குறைவாகவே காணப்பட்டது.

    • மூலவர் சன்னதியில் உள்ள நவபாஷான சிலை குறித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு தகவல்கள் வெளியாகின.
    • எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மூலவர் சிலை ஆய்வுக்கு ஸ்தபதி குழுவினர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் 14 ஆண்டுகளுக்கு மேலாக கும்பாபிஷேகம் நடைபெறாததால் விரைந்து இப்பணியை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு இதற்கான பாலாயபணிகள் தொடங்கியது. ஆனால் அதன்பிறகு கொரோனா ஊரடங்கால் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    இதனால் கும்பாபிஷேகத்திற்கான பணிகளும் தொடங்காமல் இருந்தது. இதனைதொடர்ந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையிலான குழுவினர் கோவிலில் ஆய்வு செய்து பழனி முருகன் கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவித்தார். இதனைதொடர்ந்து அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    இதற்கான கும்பாபிஷேக குழுவும் அமைக்கப்பட்டது. மூலவர் சன்னதியில் உள்ள நவபாஷான சிலை குறித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு தகவல்கள் வெளியாகின. இந்த சிலை அமைத்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதனைதொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது வருகிற ஜனவரி 17-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து மலைக்கோவில் கருவறையில் உள்ள நவபாஷான சிலையை ஆய்வு செய்ய இன்று ஸ்தபதி தட்சிணாமூர்த்தி தலைமையிலான குழுவினர் வந்தனர். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு உள்ளே சென்ற அவர்கள் நவபாஷான சிலையின் எடை, உயரம் மற்றும் அதன் தன்மை குறித்து ஆய்வு செய்தனர்.

    15 ஆண்டுகளுக்கு பிறகு மூலவர் சிலை ஆய்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. ஆனால் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மூலவர் சிலை ஆய்வுக்கு ஸ்தபதி குழுவினர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஐயப்ப பக்தர்கள் மட்டுமின்றி விடுமுறை நாட்களில் வரும் பக்தர்களும் கூடியதால் சுமார் 3 மணிநேரம் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.
    • பழனியில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனியில் வருடம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் இருக்கும். கார்த்திகை மாதம் பிறந்தது முதல் பல்வேறு ஊர்களில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் பழனி கோவிலுக்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர்.

    இதனால் இன்று காலை முதல் அடிவாரம், மலைக்கோவில், கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக ஐயப்ப பக்தர்கள் கூட்டமே அதிகளவில் தென்பட்டது. இவர்கள் மலைக்கோவிலில் நீண்டவரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ஐயப்ப பக்தர்கள் மட்டுமின்றி விடுமுறை நாட்களில் வரும் பக்தர்களும் கூடியதால் சுமார் 3 மணிநேரம் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில் நிலையம் பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சபரிமலையில் தற்போது பக்தர்கள் வருகை அதிகரித்து வரும் நிலையில் அங்கு தரிசனம் முடித்த பக்தர்கள் பெரும்பாலும் பழனிக்கு வருகின்றனர். இதனால் பழனியில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


    • படிப்பாதை, யானைப்பாதை வழியாகவும், ரோப்கார், மின் இழுவை ரெயில் மூலமாகவும் பக்தர்கள் கூட்டம் அலை மோதி வருகிறது.
    • பக்தர்கள் பசியோடு மலையேறும் போது அவர்களுக்கு களைப்பு தெரியாமல் இருக்க கோவில் நிர்வாகம் சார்பில் சுக்கு காபி இலவசமாக வழங்கப்படுகிறது.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தற்போது பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சபரிமலை சீசனாக உள்ளதால் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் அதிகாலையிலேயே வந்து விடுகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாது அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்படும் போது, பழனி முருகனை தரிசனம் செய்து செல்கின்றனர்.

    இதனால் படிப்பாதை, யானைப்பாதை வழியாகவும், ரோப்கார், மின் இழுவை ரெயில் மூலமாகவும் பக்தர்கள் கூட்டம் அலை மோதி வருகிறது. இவ்வாறு வரும் பக்தர்கள் பசியோடு மலையேறும் போது அவர்களுக்கு களைப்பு தெரியாமல் இருக்க கோவில் நிர்வாகம் சார்பில் சுக்கு காபி இலவசமாக வழங்கப்படுகிறது.

    இடும்பன் கோவில் அருகே காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை ஒருவருக்கு 100 மில்லி சுக்கு காபி வீதம் தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளனர். பக்தர்கள் வருகை அதிகரிக்கும் சமயம் கூடுதலாக வழங்கப்படும் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வியாபாரிகள் அனைவரும் இணை ஆணையர் லட்சுமியை முற்றுகையிட்டனர்.
    • சாலையோர வியாபாரி பூவாயி என்பவரை இணை ஆணையர் தாக்கியதாக கூறப்போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை சமரசம் செய்ய முயன்றும் கேட்கவில்லை.

    பழனி:

    பழனி கோவிலுக்கு தற்போது சபரிமலை சீசனாக இருப்பதால் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களுக்கு இடையூறாக அடிவாரம், கிரிவீதி, சன்னதிவீதி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரக் கடைகள் அதிக அளவில் முளைத்து வருகின்றன.

    அவர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களை மிரட்டி பல்வேறு பொருட்களை வாங்க வற்புறுத்துவதாக புகார் எழுந்து வந்தது. இதனையடுத்து அடிவாரம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்து வருகிறது. குறிப்பிட்ட எல்லைக்கு மேல் கடை வைத்திருப்பவர்களை கோவில் நிர்வாகம் சார்பில் அகற்றி அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

    இன்று காலை ஆக்கிரமிப்பு அகற்றம் நடைபெற்றபோது கோவில் இணை ஆணையர் லட்சுமி பார்வையிட்டார். அவரிடம் ஆக்கிரமிப்பை அகற்ற விடாமல் வியாபாரிகள் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர். இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது சாலையோர வியாபாரி பூவாயி என்பவரை இணை ஆணையர் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதனால் வியாபாரிகள் அனைவரும் இணை ஆணையர் லட்சுமியை முற்றுகையிட்டனர். அவரை போலீசார் பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இணை ஆணையர் தனது அலுவலகத்திற்கு வந்துவிட்ட போதிலும் வியாபாரிகள் அவரை பின்தொடர்ந்து வந்து அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவரிடம் கேட்டபோது தான் யாரையும் தாக்கவில்லை என்று விளக்கம் அளித்தார். இருந்தபோதிலும் பூவாயி என்பவர் கூறுகையில், தனது கழுத்தில் அணிந்திருந்த கயிரை பிடித்து இழுத்து இணை ஆணையர் கன்னத்தில் அறைந்ததாக கூறினார். இதனால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை சமரசம் செய்ய முயன்றும் கேட்கவில்லை.

    இதனால் கோவில் இணை ஆணையர் அலுவலகத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

    ×