என் மலர்
நீங்கள் தேடியது "தேரோட்டம்"
- இந்த ஆண்டு கடந்த டிசம்பர் மாதம் 25-ந் தேதி மார்கழி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- பெண் பக்தர்கள் நடராஜர் தேர் முன்பு கோலமிட்டும், மேளதாளங்களுக்கு நடனமாடியும் நடராஜரை வரவேற்றனர்.
உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனமும் ஆகிய 2 திருவிழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கடந்த டிசம்பர் மாதம் 25-ந் தேதி மார்கழி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனையடுத்து முக்கிய திருவிழாவான தேர்த்திருவிழா இன்று அதிகாலை சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான் சித் சபையில் இருந்து புறப்பட்டு மேளதாளம் முழங்க கீழ ரத வீதியில் உள்ள தேர்நிலைக்கு வந்தடைந்தது. பின்னர் நடராஜர், சிவகாமசுந்தரி அம்மன், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் தனித்தனி தேரில் வீற்றிருக்க தேர் நிலையான கீழ ரத வீதியில் இருந்து சிவ கோஷத்துடன் கைலாய வாத்தியங்கள் முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
தேரானது கீழ ரத வீதி, தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக மீண்டும் இன்று மாலை 6 மணி அளவில் தேர் நிலையான கீழ ரத வீதியை வந்தடையும். தேர் திருவிழாவை முன்னிட்டு தில்லை திருமுறை கழகம் சார்பில் ஏராளமான பக்தர்கள் தேவாரம் திருவாசகம் பாடி தேர் முன் சென்றனர். பெண் பக்தர்கள் நடராஜர் தேர் முன்பு கோலமிட்டும், மேளதாளங்களுக்கு நடனமாடியும் நடராஜரை வரவேற்றனர். தேர் நிலையில் இருந்து இரவு 8 மணிக்கு மேல் ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தி கொண்டு செல்லப்பட்டு அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைகள், ஏககால லட்சார்ச்சனை, புஷ்பாஞ்சலி சொர்ணாபிஷேகம் நடைபெறுகிறது.
தொடர்ந்து நாளை (3-ந் தேதி) அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், மதியம் பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பின்னர் மாலை 3 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடக்கிறது.
நாளைமறுநாள் (4-ந் தேதி) பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவும், 5-ந் தேதி ஞானப்பிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர்.
- விரதம் மேற்கொண்ட பக்தர்கள் தங்களது காப்புகளை கழற்றி விரதத்தை முடித்துக்கொண்டனர்.
- காய்கறிகள், அப்பம், இளநீர், வடை, வெற்றிலை பாக்கு வைத்து, பாவாடை தரிசனம் நடைபெறுகிறது.
திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 22-ந்தேதி கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி கோவில் வளாகத்திலேயே தங்கி விரதம் மேற்கொண்டு வந்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டன.
விழாவினை முன்னிட்டு தினமும் காலையிலும் மாலையிலும் சண்முகர் சன்னதியில் சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சண்முகா அர்ச்சனை நடைபெற்றது. இதனை காண உள்ளூர், வெளியூர்களில் இருந்து திரளான பக்தர்கள் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை சொக்கநாதர் கோவில் முன்பு சன்னதி தெருவில் சூரசம்கார லீலை நடைபெற்றது. கந்த சஷ்டியின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக இன்று காலை 8 மணி அளவில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் தங்கமயில் வாகனத்தில் சிறிய சட்ட தேரில் எழுந்தருளினார்.
இதில் காப்பு கட்டி சஷ்டி விரதம் இருந்த பக்தர்கள் தேரை ரத வீதிகள் மற்றும் கிரிவல பாதையில் வடம் பிடித்து இழுத்தனர். இதனைத் தொடர்ந்து தேர் நிலைக்கு வந்தவுடன் கோவில் கம்பத்தடி மண்டபத்தில் உள்ள மயிலுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது.
அப்போது விரதம் மேற்கொண்ட பக்தர்கள் தங்களது காப்புகளை கழற்றி விரதத்தை முடித்துக்கொண்டனர். மாலை 3 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவசம் சாற்றப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 108 படி அரிசியினால் தயிர் சாதம் படைக்கப்பட்டு, அதன் மேல் காய்கறிகள், அப்பம், இளநீர், வடை, வெற்றிலை பாக்கு வைத்து, பாவாடை தரிசனம் நடைபெறுகிறது.
இரவு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா பாலாஜி, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணிச் செல்வம், பொம்மதேவன், ராமையா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- தேரோட்டத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
- 11-ம் திருவிழா நாளை நடைபெறுகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடந்து வந்தது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5-ம் திருவிழாவில் குடவருவாயில் தீபாராதனையும், 7-ம் திருவிழாவில் சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பர பவனியும், மாலையில் சுவாமி சண்முகர் சிகப்பு சாத்தி கோலத்தில் சிவன் அம்சமாக சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது.
8-ம் திருவிழாவில் சுவாமி சண்முகர் காலையில் வெள்ளை சாத்தி கோலத்தில் பிரம்மன் அம்சமாக வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலாவும், மதியம் விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் பச்சை கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து கோவில் சேர்தல் நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா தேரோட்டம் இன்று காலையில் நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூபம் 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.
காலை 7.20 மணிக்கு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கோஷம் விண்அதிர திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
11-ம் திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. நாளை மறுநாள் 12-ம் திருவிழாவில் இரவு சுவாமி, அம்பாள் தனித்தனி பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
- இன்று இரவு புஷ்பப் பல்லக்கு, சந்தனம் சாத்துபடி நிகழ்ச்சியும் நடைபெறும்.
- 11-ந் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று போற்றி புகழ்ந்து அழைக்கப்படும் 108 திவ்யதேசங்களில் ஒன்றானது, மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் ஆகும். இங்கு நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை மற்றும் ஆடி பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான ஆடி திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் அன்னம், சிம்மம், அனுமன், கருடன், யானை, வாகனங்களிலும், மறவர் மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. தேவியருடன் அழகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர். இன்று இரவு புஷ்பப் பல்லக்கு, சந்தனம் சாத்துபடி நிகழ்ச்சியும் நடைபெறும்.
பாதுகாப்பு பணிக்காக 1000 போலீசாரும், 40 முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன. நாளை தீர்த்தவாரியும், 11-ந் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
- பக்தர்கள் தேரை இழுத்தபோது சக்கரத்தின் அச்சு முறிந்து தேர் சாய்ந்தது.
- அருகில் இருந்த தேர் மீது சாய்ந்து நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு.
பெரம்பலூர் மாவட்டம் தேனூரில் உள்ள கருப்பசாமி கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரோட்டத்தை பார்க்க ஆயிரகணக்கான மக்கள் திரண்டிருந்தனர். போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். அவர் தேரோட்டத்தை தொடங்கி வைத்ததும், பக்தர்கள் தேரை இழுக்க முயன்றனர். அப்போது ஒரு சக்கரத்தின் அச்சு முறிந்து தேர் சாய்ந்தது.
இதனால் தேர் அருகில் பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் மற்றும் பக்தர்கள் பீதி அடைந்தனர். சாய்ந்த தேர் அருகில் உள்ள தேர் மீது மோதி அப்படியோ நின்றதால் தரையில் விழவில்லை. தரையில் விழுந்திருந்தால் மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.
அருகில் உள்ள தேரில் சாய்ந்து நின்றதும் தேர் அருகில் இருந்து போலீசார் மற்றும் பக்தர்கள் அவசர அவசரமாக அப்புறப்படுத்தப்பட்டனர்.
- நெல்லையப்பர் கோவில் திருவிழா இந்த ஆண்டு வருகின்ற ஜூலை 8-ந் தேதி நடைபெற உள்ளது.
- ஜாதி மோதல்களை உருவாக்க மூல காரணியாக உள்ள செயல்களுக்கு தடை விதிக்க வேண்டும்.
மதுரை:
நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் மாதவன் உயர்நீதிமன்ற மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சாதி ரீதியான படுகொலை திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகமாக நடைபெற்று வருகிறது. பொது இடங்களில் சாதி ரீதியான அடையாளங்களை வெளிப்படுத்துவது இதற்குமூல காரணமாக இருந்து வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் தேர் திருவிழா வருடம் தோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு திருவிழா வருகின்ற ஜூலை 8-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகம் முழுவதும் இருந்தும் கலந்து கொள்கின்றனர்.
இந்த திருவிழாவில் வருடம் வருடம் சாதி ரீதியான கலர் வண்ணங்களை கொண்ட பட்டாசுகள் வெடிக்க செய்வது, பல்வேறு சமுதாய தலைவர்களை வாழ்க வாழ்க என கோஷமிடுவது, ஒரு சிலர் ஒழிக கோஷம் போடுவது, மேலும் திருவிழாவிற்கு வரும் இளைஞர்கள் தங்கள் சாதி ரீதியான டி-சர்டுகளை அணிந்து வந்து சாதி ரீதியான ரிப்பன்கள் அணிந்து வருவது போன்ற கலாச்சாரத்தை கையில் எடுத்துள்ளனர். இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதில் மிகுந்த சிரமமும் ஏற்படுகிறது. எனவே ஜாதி மோதல்களை உருவாக்க மூல காரணியாக உள்ள இந்த செயல்களுக்கு தடை விதிக்க வேண்டும். திருவிழாவிற்கு வரும் இளைஞர்கள் கலர் கலராக பட்டாசுகள் வெடிப்பதற்கும் சாதி ரீதியான படமோ பெயரோ கொடியோ காண்பிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியம், நீதிபதி மரியா கிளாட் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில், ஏற்கனவே சாதிய ரீதியான அடையாளங்கள் பயன்பாடு குறித்த விதிகள் உள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை தலைவர் மற்றும் இந்து சமய அறநிலை துறை ஆணையாளர் இணைந்து இந்த திருவிழாவின் போது எந்தவித சாதிய அடையாளங்கள் இல்லாத வகையில் தேர் திருவிழாவை அமைதியான முறையில் நடத்த வேண்டும்
என்ன உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்கள்.
- பூந்தேர் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராயபுரம்:
பாரிமுனை தம்பு செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த மே மாதம் 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 7-ம் நாளான நேற்று முக்கிய நிகழ்வான மிதுன லக்னத்தில் பூந்தேர் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
தேர்த் திருவிழாவை முன்னிட்டு காளிதாஸ் சிவாச்சாரியார் சாமிக்கு அபிஷேக, அலங்காரம் செய்து இருந்தார். அதை தொடர்ந்து காலை 7.05 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. விழாவில் அறங்காவலர் குழு தலைவர் இ.எம்.எஸ்.மோகன், அறங்காவலர்கள் எஸ்.சர்வேஸ்வரன், வி.சீனிவாசன், இரா.இராஜேந்திர குமார், ஜெ.ரமேஷ் மற்றும் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக காளிகாம்பாள் கோவிலில் இருந்து 5 வண்ண குடைகளுடன் புறப்பட்ட தேர், 108 கைலாய வாத்தியம், தாரை தப்பட்டை, மேளதாளங்கள் முழங்க, 4 மாட வீதிகளை சுற்றி வந்தது.
பின்னர், மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தை காண வந்த பக்தர்களுக்கு நீர்மோர், குளிர்பானங்கள், பழங்கள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து நாளை (ஞாயிற்று கிழமை) மாலை 7 மணிக்கு வரலாற்று சிறப்புமிக்க கின் =னித்தேர் தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
- காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் வைகாசி பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
- வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 20-ந்தேதி வரை நடக்கிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் உலக புகழ் பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜ பெருமாள் கோவில் 24 ஏக்கர் பரப்பளவில் கிழக்கு மேற்கு பகுதிகளில் 2 ராஜ கோபுரங்களுடன், அனந்த சரஸ் திருக்குளம், பொற்றாமரை திருக்குளம், என இரு திருக்குளங்களுடன், வேணுகோபாலன் சன்னதி, பூவராகவர் சன்னதி, ரங்கநாதர் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, நம்மாழ்வார் சன்னதி, மணவாள மாமுனிகள் சன்னதி, உடையவர் மற்றும் ஆழ்வார்கள் சன்னதி, வேதாந்த தேசிகர், தாத தேசிகன் சன்னதி, ராமர் சன்னதி, திருப்பனந்தாள்வான் சன்னதி, கரிய மாணிக்க பெருமாள் சன்னதி, பெருந்தேவி தாயார் சன்னதி, லட்சுமி நரசிம்ம சாமி சன்னதி, ஆண்டாள் சன்னதி, சேனை முதன்மையார் சன்னதி, தன்வந்திரி சன்னதி, வலம்புரி விநாயகர் சன்னதி, மலையாள நாச்சியார் சன்னதி, உள்ளிட்ட சன்னதிகளுடன் விளங்குகிறது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் வைகாசி பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 20-ந்தேதி வரை நடக்கிறது.
நாள்தோறும் வரதராஜ பெருமாள், காலை, மாலை, என இரு வேலைகளிலும் தங்க சப்பரம், சிம்ம வாகனம், ஹம்ச வாகனம், சூரிய பிரபை வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், சந்திர பிரபை வாகனம், தங்கப் பல்லக்கு, யாளி வாகனம், யானை வாகனம், திருத்தேர், குதிரை வாகனம், புண்ணியகோட்டி விமானம் ஆகிய வாகனங்களில் சிறப்பு அலங்காரங்களில் காஞ்சிபுரம் நகரின் ராஜ வீதிகளில் வீதி உலா வந்தார்.
இந்த நிலையில் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.
7-வது நாள் விழாவை முன்னிட்டு 100 டன் எடையுள்ள 63 அடி உயரமும் 30 அடி அகலமும் 5 நிலைகளும் கொண்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாள் எழுந்தருளி காஞ்சிபுரம் நகரின் ராஜ வீதிகளில் பவனி வந்தார்.
பக்தி முழக்கத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். திரளான பக்தர்கள் திரண்டு வந்த சாமி தரிசனம் செய்தனர்.
- செங்கோதை, பூங்கோதைத் தாயார்களுடன் பெருமாளுக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்தனர்.
கவுண்டம்பாளையம்:
கோவை பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பாலமலை ஸ்ரீ அரங்கநாதர் கோவில் சித்திரைத் தேர்த்திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதில் பெருமாள் 7-ந் தேதி அன்ன வாகனத்திலும், 8-ந் தேதி அனுமந்த வாகனத்திலும், 9-ந் தேதி கருட வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிந்தார். 10-ந் தேதி செங்கோதையம்மன் அழைப்பு விழாவும், 11-ந் தேதி செங்கோதை, பூங்கோதைத் தாயார்களுடன் பெருமாளுக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வைபவம் நேற்று மாலை 3 மணிக்கு தொடங்கியது. இதில் முதலில் யானை வாகன உற்சவம், சின்னத்தேர் உற்சவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலை 6 மணி அளவில் பெருமாள் தேரில் எழுந்தருளி கோவிலின் மாட வீதிகளில் வலம் வந்தார். நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்தனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என விண்ணை பிளக்கும் அளவிற்கு கோஷங்களை எழுப்பினர். அதன் பிறகு அரங்கநாதர் சிறப்பு அலங்காலத்தில் அருள் புரிந்தார். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று பரிவேட்டை, குதிரை வாகன உற்சவமும், 14-ந் தேதி சேஷவாகன உற்சவம், 15-ந் தேதி சந்தன சேவை சாற்றுமுறை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ப.ஜெகதீசன் செய்திருந்தார்.
- கடந்த 5-ந்தேதி ஓலைச்சப்பரத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது.
- உற்சவர் சாரங்கபாணி, ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார்.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்தலம் 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுகிறது.
இத்தலம் நாலாயிர திவ்ய பிரபந்தம் விளைந்த தலமாக கருதப்படும் பெருமையுடையது. ஆழ்வார்கள் தம் பிரபந்தங்களில் இப்பெருமானை 'குடந்தைக் கிடந்தான்' என அழகுற அழைக்கின்றனர். இக்கோவிலில் ஆராவமுதன் எனும் சார்ங்கபாணி பெருமாள் எழுந்தருளி உள்ளார். திருவரங்கனின் புகழை கூறும் பஞ்சரங்க திருத்தலங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது.
மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெற்று வந்தது. கடந்த 5-ந்தேதி ஓலைச்சப்பரத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (சனிக்கிழமை) காலை நடைபெற்றது. இந்த தேர் தமிழகத்திலேயே 3-வது பெரிய தேர் என்ற பெருமை உடையதாகும். முன்னதாக உற்சவர் சாரங்கபாணி, ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டு, தேரோட்டம் தொடங்கியது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது 4 ரதவீதிகளில் அசைந்தாடியபடி வலம் வந்து நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பாதுகாப்பு பணியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர். நடமாடும் மருத்துவ குழுவினரும், தீயணைப்பு வாகனமும் தேரை பின்தொடர்ந்தவாறு சென்றது. தேரோட்டத்தை காண ஏராளமான பக்தர்கள் திரண்டதால் கும்பகோணம் மாநகரமே விழாக்கோலம் பூண்டது.
- திருத்தேரில் சோமஸ்கந்தர்- உமாமகேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
- தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அவினாசி:
கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், காசிக்கு நிகரான சிறப்பும் பெற்ற திருப்பூர் மாவட்டம் அவினாசி அவிநாசிலிங்கேசுவரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா நடைபெறும்.
அதேபோல் இந்த ஆண்டு கடந்த 1-ந்தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தேர் திருவிழா தொடங்கியது. திருவிழாவையொட்டி 5-ந்தேதி இரவு பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தனர்.
நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகளும் பெருமாளும் திருத்தேருக்கு எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது. இதையடுத்து தேரில் எழுந்தருளிய சுவாமியை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
இன்று (வியாழக்கிழமை ) காலை 8 மணிக்கு தேரின் மேல் வீற்றிருந்த சாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் 9 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. சிவாச்சார்யர்கள், ஆன்மீக பெருமக்கள், பக்தர்கள் 'அவிநாசியப்பா', 'அரோகரா', 'நமசிவாயா', சிவ... சிவ... என பக்தி கோஷமிட, சிவனடியார்கள் கைலாய வாத்தியம் முழங்க திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. திருத்தேரில் சோமஸ்கந்தர்- உமாமகேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி கோவை, ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கோவில் முகப்பில் இருந்து புறப்பட்ட தேரானது சிறிது தொலைவு இழுத்து செல்லப்பட்டு நிறுத்தப்படுகிறது. தேரின் 2 பின் சக்கரங்களிலும் ராயம்பாளையம் மற்றும் புதுப்பாளையம் சன்னை மிராசுகள் சன்னை போட்டு தேரை நகர்த்தி கொடுத்தனர்.
நாளை 9-ந்தேதி மீண்டும் காலை 9 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து மாலை 4 மணி அளவில் நிலை வந்து சேர உள்ளது. 10-ந் தேதி அம்மன் தேரோட்டம் நடக்கிறது. 11-ந்தேதி மாலை வண்டித்தாரை, பரிவேட்டையும் 12-ந்தேதி தெப்ப தேர் உற்சவமும் நடக்கிறது. 13-ந்தேதி மகா தரிசன விழாவும், 14-ந்தேதி மஞ்சள் நீர் விழாவும் நடக்கிறது.
தேரோட்டத்தில் கூட்ட நெரிசலை சமாளிக்க போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வெயிலின் தாக்கத்தால் ரத வீதிகளில் ஆங்காங்கே நீர்-மோர் வழங்கப்பட்டது.
அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் கோவில் முகப்பில் உள்ள தேர் நிலையில் தொடங்கி ரத வீதிகள் வழியாக மீண்டும் நிலை வந்து சேரும் வகையில் இன்று முதல் 3 நாட்கள் நடத்தப்படுகிறது.
92 அடி உயரம், 400 டன் எடை கொண்ட இந்த தேர் திருவாரூர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தேருக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் 3-வது பெரிய தேர் ஆகும்.
- உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.
- பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
தஞ்சாவூர்:
உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. கட்டிட கலையில் சிறந்து விளங்கும் இக்கோவிலுக்கு தினமும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். தொடர்ந்து, கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று, கொடியேற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி புறப்பாடும், பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் அடுத்த மாதம் (மே) 7-ந்தேதி நடைபெற உள்ளது.
இதனையொட்டி தஞ்சை மேல வீதியில் உள்ள பெரிய கோவில் தேர் நிலையில் பந்தக்கால் முகூர்த்தம் இன்று (புதன்கிழமை) காலை நடைபெற்றது. முன்னதாக பந்தக்காலுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரில் பந்தக்கால் நடப்பட்டது. இதில் கோவில் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா, கோவில் செயல் அலுவலர் சத்யராஜ், கண்காணி ப்பாளர் ரவி, ஆய்வாளர் பாபு மற்றும் பணியாளர்கள், பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.






