என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nellaiappar Temple"

    • நெல்லையப்பர் கோவிலில் சமபந்தி விருந்தில் சுமார் 900 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.
    • என்னுடன் அமர்ந்திருந்த பெண் வீட்டிற்கு உணவு வேண்டும் என கேட்டார்.

    நெல்லையப்பர் கோவில் சமபந்தியில் நரிக்குறவர் சிறுவர்கள் அனுமதிக்கப்படவில்லை என புகார் எழுந்ததையடுத்து, தவறான தகவலை திட்டமிட்டு பரப்புவதாக நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

    * அண்ணா நினைவு நாள் சமபந்தியில் நரிக்குறவரின சிறுவர்கள் விரட்டியடிப்பு என திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுகிறது.

    * நெல்லையப்பர் கோவிலில் சமபந்தி விருந்தில் சுமார் 900 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. நானே நேரில் ஆய்வு செய்தேன்.

    * பிற்பகல் 1.20 மணிக்கு அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

    * சமூக நீதி கடைபிடிக்கப்பட்டு அனைவருக்கும் சமமான உணவு வழங்கப்பட்டது.

    * தானும் சபாநாயகரும் அங்கு இருந்தவர்களுடன் அமர்ந்து சமபந்தி உணவை அருந்தினோம்.

    * என்னுடன் அமர்ந்திருந்த பெண் வீட்டிற்கு உணவு வேண்டும் என கேட்டார். அவருக்கும் பார்சல் செய்து கொடுத்தோம்.

    * வதந்தி பரப்பும் நபர் உணவு தீர்ந்த பின்னர் குழந்தைகளை அழைத்து வந்தார்.

    * முறையாக கோவில் ஊழியர் அவரிடம் உணவு இல்லை என்பதை எடுத்துரைத்தார்.

    * அரசியல் தூண்டுதலின் பேரில் குறிப்பிட்ட நபர் வேண்டுமென்றே வதந்தி பரப்பு வருகிறார்.

    * சமூக நீதிக்கு இழுக்கு ஏற்படுத்தும் எந்த செயலும் நெல்லையப்பர் கோவிலில் நடக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. ஆட்சியில் தீண்டாமை தலைவிரித்தாடுவது இது முதல்முறையல்ல.
    • நரிக்குறவ மக்களிடம் முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவுநாளையொட்டி திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் நேற்று நடைபெற்ற சமபந்தி விருந்தில் பங்கேற்க வந்த நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த 5 சிறுவர்கள் அதிகாரிகளால் விரட்டியடிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. சமூகநீதி பேசும் தி.மு.க. அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்நநாள் விருந்தில் கூட தீண்டாமையை கடைபிடித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

    நெல்லையப்பர் கோவிலில் நடந்த விருந்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, நெல்லை மாநகர மேயர் இராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றிருந்த நிலையில், பசியுடன் அங்கு உணவருந்த வந்த சிறுவர்களை அதிகாரி ஒருவர் மிரட்டி, விரட்டியடிப்பதும், அதன்பின் அந்த சிறுவர்களை இன்னொருவர் அருகில் உள்ள உணவகத்துக்கு அழைத்துச் சென்று உணவு வாங்கித் தருவதும் சமூக வலைத்தளங்களில் காணொலியாக பரவி வருகின்றன.

    சமூக ஏற்றத்தாழ்வுகளை களைந்து சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் முக்கிய நாள்களில் ஆலயங்களில் சமபந்தி விருந்துகள் நடத்தப்படுகின்றன. ஆனால், சமபந்தி விருந்துகளிலேயே சமத்துவம் மறுக்கப்பட்டு தீண்டாமை தலைவிரித்தாடுகிறது என்றால் தி.மு.க. ஆட்சியில் சமூகநீதி எந்த அளவுக்கு சீரழிக்கப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

    தி.மு.க. ஆட்சியில் தீண்டாமை தலைவிரித்தாடுவது இது முதல்முறையல்ல. 2021-ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள ஸ்ரீதலசயன பெருமாள் கோவிலில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த அஸ்வினி என்ற பெண் உள்ளிட்டவர்கள் உணவு சாப்பிடச் சென்றபோது விரட்டியடிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த அநீதிக்கு எதிராக அஸ்வினி வினா எழுப்பியது வைரலான நிலையில், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அந்த கோவிலுக்கு சென்று அஸ்வினியுடன் உணவருந்தினார்; பின்னர் அஸ்வினியின் வீட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மன்னிப்பு கேட்டு சமாளித்தார்.

    ஆனால், அதன் பின் நான்கரை ஆண்டுகள் ஆகும் நிலையில் தி.மு.க. ஆட்சியில் நரிக்குறவ மக்களுக்கு இன்னும் சமூகநீதியும், சமத்துவமும் கிடைக்கவில்லை என்பதையே நெல்லையப்பர் கோவில் நிகழ்வு காட்டுகிறது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், இதற்காக நரிக்குறவ மக்களிடம் முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சிக்கு புராண வரலாறு உண்டு.
    • வருகிற 1-ந்தேதி 10-ம் திருநாளன்று தைப்பூச மண்டபத்தில் இறங்கி சுவாமி-அம்பாள் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் தைப்பூச திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 4-ம் நாளான இன்று பகல் 12 மணிக்கு நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடந்தது.

    இதையொட்டி வேத பட்டர்கள் வீதி, வீதியாக சென்று நெல் சேகரித்தனர். அந்த நெல், நெல்லையப்பர் கோவில் சன்னதி முன்பு வைக்கப்பட்டது.

    அங்கு பகல் 12 மணிக்கு நெல்லுக்கு வேலியிட்ட வைபவம் அதாவது நெல் இருந்த இடத்தை சுற்றி மழை பெய்ததற்கு அடையாளமாக தண்ணீர் தெளிக்கப்பட்டது.

    நெல் இருந்த மேடையில் மட்டும் தண்ணீர் படாமல் இருந்தது. அப்போது அந்த நெல் மேடைக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து நெல்லையப்பர், காந்திமதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவில் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில், பஞ்ச மூர்த்திகளுடன் வீதி உலா வருதல் நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் பேஸ்கார் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சிக்கு புராண வரலாறு உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்பு நெல்லையப்பர் கோவில் பட்டர்கள் வீடு, வீடாக சென்று நெல் யாசகமாக பெற்றனர்.

    அந்த நெல்லை, நெல்லையப்பர் கோவில் முன்பு காய வைத்து விட்டு, தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க சென்றனர். அப்போது திடீரென்று பலத்த மழை பெய்து, வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால் பதறிய பட்டர்கள் தாங்கள் காயவைத்த நெல் மழையில் நனைந்து தங்களுக்கு சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் போய்விடுமோ என்ற மனவேதனையுடன் நெல்லையப்பர் கோவிலுக்கு வந்தனர். அங்கு அவர்கள் பார்த்த காட்சி மெய்சிலிர்க்க வைத்தது.

    தங்கள் காயவைத்த பகுதியில் மட்டும் மழை பெய்யாமல், அதை சுற்றி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதாக புராண வரலாறுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதை நினைவு படுத்தும் வகையில் ஆண்டு தோறும் நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    வருகிற 1-ந்தேதி 10-ம் திருநாளன்று தைப்பூச மண்டபத்தில் இறங்கி சுவாமி-அம்பாள் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. மறுநாள் (2-ந்தேதி) சந்தி விநாயகர் கோவில் அருகே திருக்காட்சி வைபவமும், வருகிற 3-ந்தேதி நெல்லையப்பர் கோவில் வெளி தெப்பத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் தெப்பத்திருவிழாவும் நடக்கிறது.

    • அம்பாள் மற்றும் சுவாமி சன்னதிகளில் சாமி தரிசனம் செய்த நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனருக்கு கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
    • கோவிலில் இருந்த பக்தர்கள் நடிகர் தனுஷ் உடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    நடிகர் தனுஷ் நடிப்பில் போர்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் டி-54 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

    பெரும் பொருட்செலவில் பரபரப்பான கதை களத்தில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நெல்லை, தென்காசி மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வந்தது.

    திரைப்படத்தின் பெரும் பகுதி முடிக்கப்பட்ட நிலையில் இயக்குனர் விக்னேஷ் ராஜா மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோர் நெல்லை நெல்லையப்பர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக இன்று அதிகாலை கோவிலுக்கு வருகை தந்தனர்.

    அம்பாள் மற்றும் சுவாமி சன்னதிகளில் சாமி தரிசனம் செய்த நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனருக்கு கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அப்போது கோவிலில் இருந்த பக்தர்கள் நடிகர் தனுஷ் உடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    பின்னர் அதிகாலையில் நடைபெற்ற திருவனந்தல் வழிபாட்டு பூஜையில் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் விக்னேஷ் ராஜா கலந்து கொண்டனர்.

    • வேத மந்திரங்கள் முழங்க அம்பாள் சன்னதி கொடிமரத்தில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
    • கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. கொடியேற்றத்தையொட்டி இன்று காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கஜ பூஜை, கோ பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து சப்பரத்தில் காந்திமதி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து கொடிப்பட்டம் கோவில் பிரகாரத்தில் எடுத்து வரப்பட்டது.

    பின்னர் வேத மந்திரங்கள் முழங்க அம்பாள் சன்னதி கொடிமரத்தில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

    அப்போது அங்கிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினார்கள். பெண்கள் குலவையிட்டனர்.

    இதைத்தொடர்ந்து மஞ்சள், பால், தயிர், இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வருகிற 18-ந்தேதி வரையில் தினமும் காலையிலும், மாலையிலும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை மற்றும் பல்வேறு வாகனங்களில் காந்திமதி அம்பாள் எழுந்தருளி வீதி உலாவும் நடக்கிறது. வருகிற 13-ந் தேதி இரவு 1 மணிக்கு காந்திமதி அம்பாள் தங்க முலாம் சப்பரத்தில் கீழரதவீதி வழியாக கம்பாநதி காமாட்சி அம்மன் கோவிலை சென்றடைகிறார்.

    14-ந் தேதி பகல் 12 மணிக்கு கம்பாநதி அருகே உள்ள காட்சி மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு, சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், மாலை மாற்றும் நிகழ்ச்சியும், சிறப்பு தீபாராதனையும் நடக்கிறது. இதைத்தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது.15-ந் தேதி அதிகாலை 4:30 மணி முதல் 5.30 மணிக்குள் நெல்லையப்பர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    இரவு 9.30 மணிக்கு சுவாமி-அம்பாள் பட்டினப்பிரவேச வீதி உலா நடக்கிறது. 15-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் விழா நடக்கிறது. 18-ந் தேதி சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப்பிரவேச வீதி உலா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வெங்கடேஸ்வரன் மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர். 

    • ஆடிப்பூர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப்படும்.
    • அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, சுவாமி சன்னதிக்கு சென்றடைவார்.

    நெல்லை:

    தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அதில் ஆடிப்பூர திருவிழா சிறப்பு வாய்ந்தது. இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி நாளை மறுநாள் காலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாள் சன்னதி முன்பு ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. 4-ம் திருவிழாவான 21-ந் தேதி (திங்கட்கிழமை) பிற்பகல் 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம், இரவு 8 மணிக்கு காந்திமதி அம்மன் திருவீதி உலா நடக்கிறது.

    10-ம் திருநாளான வருகிற 27-ந் தேதி( ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணிக்கு கோவில் ஊஞ்சல் மண்டபத்தில் ஆடிப்பூரம் முளைக்கட்டு திருவிழா நடக்கிறது. அப்போது காந்திமதி அம்மனை அலங்கரித்து, மடியில் முளைகட்டிய சிறுபயரை கட்டிவைத்து, வளையல்கள் அணிவித்து, அனைத்து பலகாரங்களும் அம்மனுக்கு படைக்கப்படும்.

    தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, சுவாமி சன்னதிக்கு சென்றடைவார். அங்கு அம்மன் மடியில் கட்டி வைக்கப்படும் முளைகட்டிய சிறுபயரை பிரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    • நெல்லையப்பர் கோவில் திருவிழா இந்த ஆண்டு வருகின்ற ஜூலை 8-ந் தேதி நடைபெற உள்ளது.
    • ஜாதி மோதல்களை உருவாக்க மூல காரணியாக உள்ள செயல்களுக்கு தடை விதிக்க வேண்டும்.

    மதுரை:

    நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் மாதவன் உயர்நீதிமன்ற மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    சாதி ரீதியான படுகொலை திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகமாக நடைபெற்று வருகிறது. பொது இடங்களில் சாதி ரீதியான அடையாளங்களை வெளிப்படுத்துவது இதற்குமூல காரணமாக இருந்து வருகிறது.

    திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் தேர் திருவிழா வருடம் தோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு திருவிழா வருகின்ற ஜூலை 8-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகம் முழுவதும் இருந்தும் கலந்து கொள்கின்றனர்.

    இந்த திருவிழாவில் வருடம் வருடம் சாதி ரீதியான கலர் வண்ணங்களை கொண்ட பட்டாசுகள் வெடிக்க செய்வது, பல்வேறு சமுதாய தலைவர்களை வாழ்க வாழ்க என கோஷமிடுவது, ஒரு சிலர் ஒழிக கோஷம் போடுவது, மேலும் திருவிழாவிற்கு வரும் இளைஞர்கள் தங்கள் சாதி ரீதியான டி-சர்டுகளை அணிந்து வந்து சாதி ரீதியான ரிப்பன்கள் அணிந்து வருவது போன்ற கலாச்சாரத்தை கையில் எடுத்துள்ளனர். இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதில் மிகுந்த சிரமமும் ஏற்படுகிறது. எனவே ஜாதி மோதல்களை உருவாக்க மூல காரணியாக உள்ள இந்த செயல்களுக்கு தடை விதிக்க வேண்டும். திருவிழாவிற்கு வரும் இளைஞர்கள் கலர் கலராக பட்டாசுகள் வெடிப்பதற்கும் சாதி ரீதியான படமோ பெயரோ கொடியோ காண்பிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும்.

    இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியம், நீதிபதி மரியா கிளாட் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில், ஏற்கனவே சாதிய ரீதியான அடையாளங்கள் பயன்பாடு குறித்த விதிகள் உள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை தலைவர் மற்றும் இந்து சமய அறநிலை துறை ஆணையாளர் இணைந்து இந்த திருவிழாவின் போது எந்தவித சாதிய அடையாளங்கள் இல்லாத வகையில் தேர் திருவிழாவை அமைதியான முறையில் நடத்த வேண்டும்

    என்ன உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்கள்.

    • நெல்லையப்பர் கோவிலில் இன்று முதல் பக்தர்களுக்கு செல்போன் தடை குறித்த அறிவுறுத்தலை பணியாளர்கள் தெரிவித்தனர்.
    • கோவிலுக்குள் சென்று புகைப்படம் எடுக்கவோ, செல்போனில் பேசவோ செய்ய வேண்டாம் என பணியாளர்கள் கூறினர்.

    நெல்லை:

    கோவில்களில் தூய்மை மற்றும் புனிதத்தை காக்கும் வகையில் செல்போன் தடை, ஆடை கட்டுப்பாடுகளை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அமல்படுத்த வேண்டும் என்று சமீபத்தில் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

    இதனை ஒட்டி இந்து சமய அறநிலைய துறையின் நெல்லை மண்டல இணை ஆணையர் கவிதா அறிவுறுத்தலின் பேரில் நெல்லை மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு கீழ் வரும் கோவில்களில் வழிபட வரும் பக்தர்களுக்கு செல்போன் தடை குறித்து கோவில் பணியாளர்கள் அறிவுறுத்தினர்.

    டவுன் நெல்லையப்பர் கோவிலில் இன்று காலை முதல் பக்தர்களுக்கு செல்போன் தடை குறித்த அறிவுறுத்தலை பணியாளர்கள் தெரிவித்தனர்.

    விரைவில் டோக்கன் வழங்கி பக்தர்களின் செல்போன்கள் பத்திரமாக பாதுகாக்கப்படும் என்றும், இனி கோவிலுக்குள் சென்று புகைப்படம் எடுக்கவோ, செல்போனில் பேசவோ செய்ய வேண்டாம் என்று அவர்கள் பக்தர்களிடம் அறிவுறுத்தினர்.

    • பக்தர்கள் விடிய, விடிய நெல்லையப்பர் கோவில் வளாகத்தில் கூடியிருந்தனர்.
    • ஆருத்ரா தரிசன திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலில், ஆருத்ரா தரிசன திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் நெல்லையப்பர் கோவிலில் உள்ள பெரிய சபாபதி சன்னதியில் தினமும் காலை திருவெண்பாவை பாடல்கள் பாடப்பெற்று நடன தீபாராதனை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதற்காக தாமிர சபை மண்டபத்தில் நேற்று இரவு சுவாமி எழுந்தருளிய நிலையில், அங்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் நடன தீபாராதனை நடைபெற்றது.

    இந்த ஆருத்ரா தரிசனத்தை காண்பதற்காக பக்தர்கள் விடிய, விடிய நெல்லையப்பர் கோவில் வளாகத்தில் கூடியிருந்தனர். தொடர்ந்து அதிகாலையில் அதிக அளவிலான பக்தர்கள் வருகை தந்தனர். அங்கு வேத மந்திரங்கள் முழங்க, சுவாமியின் நடன தீபாராதானை காட்சியை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    • தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் மார்கழி மாதம் நடைபெறும் திருவாதிரை திருவிழாவும் ஒன்று.
    • மார்கழி திருவாதிரை நட்சத்திர நாளில் சிவபெருமான் நடனமாடிய 5 சபைகளில் ஒன்றான தாமிரசபையில் நடராஜரின் திருநடன நிகழ்ச்சி நடைபெறும்.

     நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் மார்கழி மாதம் நடைபெறும் திருவாதிரை திருவிழாவும் ஒன்று.

    திருவாதிரை திருவிழா

    மார்கழி திருவாதிரை நட்சத்திர நாளில் சிவபெருமான் நடனமாடிய 5 சபைகளில் ஒன்றான தாமிரசபையில் நடராஜரின் திருநடன நிகழ்ச்சி நடைபெறும்.

    இந்தாண்டு திருவாதிரை திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.

    சுவாமி வீதி உலா

    தினமும் சிறப்பு அலங்கா ரத்தில் பல்வேறு வாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி வீதி உலா வந்தனர். 4-ம் நாளான 31-ந் தேதி சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் வீதி உலா வந்து அருள்பாலித்தனர்.

    சுவாமி சன்னதி 2-ம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய சபாபதி சன்னதி முன்பாக கடந்த 29-ந் தேதி முதல் இன்று வரை அதிகாலையில் திருவெம்பாவை வழிபாடு நடைபெற்றது. 9-ம் திருவிழாவான நேற்று சுவாமி சந்திரசேகரர் பவனி, அம்பாள் செப்புத்தேரில் எழுந்தருளி ரதவீதிகளில் உலா வந்தனர்.

    ஆருத்ரா தரிசனம்

    தொடர்ந்து 2-ம் பிரகாரத்தில் அமைந்துள்ள தாமிரசபையில் நடராஜ பெருமானுக்கு நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்ட திருநீராட்டு மற்றும் சிறப்பு தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் இன்று அதிகாலை நடைபெற்றது. இதற்காக நள்ளிரவு 12 மணி முதல் தாமிரசபை மண்டபத்தில் சுவாமி நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், அதனைத்தொடர்ந்து கோபூஜையும், சிறப்பு அலங்கார நடன தீபாராதனையும் நடைபெற்றது.

    அதன்பின்னர் திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து நடராஜ பெருமான், காந்திமதி அம்பாளுக்கு திருதாண்டவ காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவாயநம கோஷத்தோடு சுவாமியின் திருநடன காட்சியை கண்டு தரிசனம் செய்தனர்.

    • சுவாமிருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
    • பக்தர்கள், கோவில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தை மாதம் கரிநாளில் நெல்லையப்பர், வெள்ளிக் குதிரை வாகனத்தில் பரிவேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

    இவ்வாறு நெல்லையப்பர் குதிரையில் வேட்டைக்கு செல்லும் போது, காந்திமதி அம்பாள், "கரிநாளில் வேட்டைக்கு செல்லக் கூடாது" எனத் தடுக்கிறார். ஆனால் தடையை மீறி, நெல்லையப்பர் பரி வேட்டைக்கு சென்றுவிடுகிறார். இதனால் கோபம் அடைந்த அம்பாள், நெல்லையப்பர் வேட்டை முடித்து திரும்பும் போது, கோவில் கதவை மூடியதாகவும், அதன் பின் சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப்பட்ட, "திருமுருகன் பூண்டி பதிகம்" பாடிய பின் கோவில் நடை திறந்துள்ளதாக நிகழ்வு அமைந்துள்ளது.

    அதன்படி நேற்று மதியம் 12 மணிக்கு நெல்லையப்பர் கோவிலில் இருந்து சுவாமி நெல்லையப்பர், சந்திரசேகரர் உற்சவ மூர்த்தியாக வெள்ளிக் குதிரை வாகனத்தில், கண்ணப்ப நாயனாருடன், கோவிலில் இருந்து புறப்பட்டு பழைய பேட்டையில் அமைந்துள்ள பரிவேட்டை மண்டபத்தில் எழுந்தருளினர்.

    அங்கு சுவாமிருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் வெள்ளிக் குதிரை வாகனத்தில் சுவாமி கோவிலுக்கு திரும்பினார்.

    சுவாமி கோவிலுக்கு வந்த போது, அம்பாளின் ஊடலினால், சுவாமி சன்னதி கதவு பூட்டப்பட்டிருந்தது. அதன்பின் சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச்செய்த "பதிகம்" பாடி, ஊடல் தீர்த்து வைத்தப் பின், கோவில் கதவு திறந்து சுவாமி கோவிலுக்குள் நுழைந்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள், கோவில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தை அமாவாசையையொட்டி இன்று பத்ர தீபம் ஏற்றப்படுகிறது.
    • 63 நாயன்மார்கள் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று பத்ர தீப (10 ஆயிரம் தீபம்) திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பத்ர தீப திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. அன்று காலையில் கணபதி ஹோமம், சுவாமி வேணு வனநாதர் (மேட்டுலிங்கம்) மூலஸ்தானத்தில் ருத்ர வழிபாடு மற்றும் அபிஷேக தீபாராதனைகளும், திருமூல மகாலிங்கம், காந்திமதி அம்பாளுக்கு அபிஷேக தீபாராதனைகளும், அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமி-அம்பாள், உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக தீபாராதனைகளும் நடைபெற்றது.

    நேற்று மாலை 6.45 மணிக்கு சுவாமி சன்னதி மண்டபத்தில் தங்க விளக்கு தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.

    பின்னர் மேளதாளம் முழங்க மூலஸ்தானத்தில் இருந்து தீபம் எடுத்து வரப்பட்டு அந்த தீபத்திலிருந்து தங்க விளக்கு தீபம் ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து தங்க விளக்குக்கு சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான பத்ர தீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை 8 மணிக்கு பால்குட ஊர்வலமும், 11 மணிக்கு ஊஞ்சல்மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள், உற்சவர்கள் எழுந்தருளளும், 308 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு கோவில் மேல் பிரகாரத்தில் மகேசுவர பூஜை நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு சுவாமி நெல்லையப்பர் உள் சன்னதி, வெளிப்பிரகாரங்கள், காந்திமதி அம்பாள் கோவிலில் உள் சன்னதி, வெளிப்பிரகாரங்கள் ஆகிய இடங்களில் தங்க விளக்கில் இருந்து தீபம் எடுத்து வரப்பட்டு பத்தாயிரம் தீபங்கள் ஏற்றப்படுகின்றன.

    இரவு 9 மணிக்கு சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சண்முகர் தங்க சப்பரத்திலும் சுவாமி சன்னதி வெளிப்பிரகாரத்தில் உலா வருகின்றனர். அதை தொடர்ந்து இரவு 10 மணிக்கு நெல்லை டவுன் 4 ரத வீதிகளிலும் பஞ்ச மூர்த்திகள், 63 நாயன்மார்கள் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பத்ர தீப விழாவையொட்டி நெல்லையப்பர் கோவில் நின்ற சீர் நெடுமாறன் கலையரங்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    ×