என் மலர்
இந்தியா
- ஒடிசாவின் சந்திப்பூரில் இரண்டு பிரளய் ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி சோதனை செய்தது.
- அவை திட்டமிடப்பட்ட பாதையைப் பின்பற்றி அனைத்து இலக்குகளையும் துல்லியமாக அடைந்தன.
புவனேஸ்வர்:
இந்திய ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் பணியில் டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஈடுபட்டு வருகிறது.
அவ்வாறு தயாரிக்கப்படும் ஆயுதங்களும், ஏவுகணைகளும், டி.ஆர்.டி.ஓ.வால் சோதனை செய்யப்பட்டு ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும்.
இதற்கிடையே, போர்க்கள பயன்பாட்டிற்காக பிரளய் என்ற குறுகிய தூர ஏவுகணை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பிரளய், அதன் உயர் துல்லியம் மற்றும் அதிநவீன வழிகாட்டுதல் அமைப்புகளுக்கு பெயர் பெற்ற, ஒரு திடமான உந்துசக்தி கொண்ட ஏவுகணையாகும். பல்வேறு வகையான ஆயுதங்களை தாங்கிச் செல்லக்கூடிய இந்த ஏவுகணை 150 முதல் 500 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக அழிக்கும்.
இந்நிலையில், ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் இருந்து டி.ஆர்.டி.ஓ. இரண்டு பிரளய் ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி சோதித்தது.
இரு ஏவுகணைகளும் திட்டமிடப்பட்ட பாதையைப் பின்பற்றி அனைத்து இலக்குகளையும் துல்லியமாக அடைந்தன.
இந்த வெற்றி ஏவுகணையின் நம்பகத்தன்மையை நிரூபித்துள்ளது என ராணுவ மந்திரியான ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.
- புதிய ஆண்டு புதுப்பிக்கப்பட்ட ஆற்றலையும், நேர்மறையான மாற்றத்தையும் குறிக்கிறது.
- இது சுய பிரதிபலிப்பு மற்றும் புதிய தீர்மானங்களுக்கான ஒரு வாய்ப்பாகும் என்றார்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. தலைநகர் டெல்லி உள்பட பல்வேறு நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டன.
புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பானதாகவும், ஏற்றமிகு வாழ்க்கையை அளிப்பதாகவும் அமைய வேண்டும் என அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய குடிமக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது:
புத்தாண்டின் மகிழ்ச்சியான தருணத்தில் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய ஆண்டு புதுப்பிக்கப்பட்ட ஆற்றலையும், நேர்மறையான மாற்றத்தையும் குறிக்கிறது.
இது சுய பிரதிபலிப்பு மற்றும் புதிய தீர்மானங்களுக்கான ஒரு வாய்ப்பாகும். இந்த சந்தர்ப்பத்தில், நாட்டின் வளர்ச்சி, சமூக நல்லிணக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான நமது உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துவோம்.
2026-ம் ஆண்டு நமது வாழ்வில் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பைக் கொண்டு வந்து, வலுவான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்க புதிய ஆற்றலை புகுத்தட்டும் என தெரிவித்துள்ளது.
- அணிவகுப்பில் இரண்டு பாக்ட்ரியன் ஒட்டகங்கள், நான்கு ஜான்ஸ்கர் குதிரைகள், நான்கு வேட்டையாடும் பறவைகள், பத்து இந்திய இன ராணுவ நாய்கள் கலந்துகொள்ளும்
- மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பும் நடைபெறும்.
மத்திய அரசு சார்பில் டெல்லி செங்கோட்டையில் ஆண்டுதோறும் சுதந்திர குடியரசு தினங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த விழாவில், முப்படைகளின் அணிவகுப்பு, மத்திய ஆயுதப் படைகள், மாநில படைகள், மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் உள்ளிட்ட அணிவகுப்புகள் நடைபெறும்.
இந்த நிலையில், வருகின்ற ஜன. 26 ஆம் தேதி செங்கோட்டையில் நடைபெறும் குடியரசுதின அணிவகுப்பில், இந்திய ராணுவத்தின் மறுசீரமைப்பு மற்றும் கால்நடைப் படைப் பிரிவைச் சேர்ந்த குதிரைகள், ஒட்டகங்கள், பறவைகள், மோப்ப நாய்கள் கலந்துகொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணிவகுப்பில் இரண்டு பாக்ட்ரியன் ஒட்டகங்கள், நான்கு ஜான்ஸ்கர் குதிரைகள், நான்கு வேட்டையாடும் பறவைகள், பத்து இந்திய இன ராணுவ நாய்கள், அத்துடன் ஏற்கனவே சேவையில் உள்ள ஆறு வழக்கமான ராணுவ நாய்களும் இடம்பெறும் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
தற்போது தில்லி செங்கோட்டைப் பகுதியில் நடைபெற்று வரும் குடியரசு நாள் ஒத்திகை நிகழ்வில் இந்த விலங்குகளும், பறவைகளும் கலந்துகொண்ட காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
- 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- நேற்றுவரை மூன்று பேர் உயிரிழந்தநிலையில், இன்று இறப்பு எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பகீரத்புராவில், கழிவுநீர் கலந்த குடிநீரைப் பருகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டிசம்பர் 25 அன்று இந்தூர் நகராட்சி மூலம் விநியோகிக்கப்பட்ட தண்ணீரின் சுவை வித்தியாசமாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் பகீரத்புரா குடியிருப்பாளர்கள் புகார் அளித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அதனைத் தொடர்ந்து, பலரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் நேற்றுவரை மூன்று பேர் உயிரிழந்தநிலையில், இன்று இறப்பு எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.
மூன்றுபேர் உயிரிழந்ததை அடுத்து நேற்று நள்ளிரவில் முதலமைச்சர் மோகன் யாதவ் நகராட்சி மற்றும் பொதுச் சுகாதாரத் துறை அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுத்தார். இதன்படி, மண்டல அதிகாரி சாலிகிராம் சித்தோலே மற்றும் உதவிப் பொறியாளர் யோகேஷ் ஜோஷி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பொதுச் சுகாதாரப் பொறியியல் துறை கண்காணிப்புப் பொறியாளர் சுபம் ஸ்ரீவஸ்தவாவும் உடனடியாகப் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
இது ஒரு சோகமான நிகழ்வு எனக்குறிப்பிட்டுள்ள அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார். சிகிச்சையில் இருப்பவர்களின் முழு மருத்துவச் செலவையும் அரசே ஏற்கும் எனவும் தெரிவித்தார். இதனிடையே இச்சம்பவத்திற்கு அம்மாநில காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
- பெண்ணின் முகத்தில் 10 முதல் 12 தையல்கள் வரை போடப்பட்டுள்ளது
- சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும் கைது
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் ஓடும் வேனில் பெண் ஒருவர் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, சாலையில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் திருமணமான 28 வயது பெண் வீட்டிற்கு செல்வதற்காக நின்றுள்ளார். அப்போது இரண்டு இளைஞர்கள் லிஃப்ட் கொடுப்பதாக கூறி வேனில் ஏற்றியுள்ளனர். தொடர்ந்து ஓடும் வாகனத்திலேயே இரண்டு பேரும் அப்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அப்பெண் கத்தி கூச்சலிட்டும், வேனை நிறுத்தாமல் மிரட்டி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பின்னர் அதிகாலை 3 மணியளவில், எஸ்.ஜி.எம் நகரில் உள்ள ராஜா சௌக் அருகே, ஓடும் வேனில் இருந்து அந்தப் பெண்ணை தூக்கி வீசியுள்ளனர். இதில் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் தனது தங்கைக்கு ஃபோன் செய்து நடந்தவற்றைக் கூறியுள்ளார். பின்னர் அவரது குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆபத்தான நிலையில் இருந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் முகத்தில் 10 முதல் 12 தையல்கள் வரை போடப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அப்பெண்ணின் உடல்நிலை தற்போது சீராக இருந்தாலும் வாக்குமூலம் எதுவும் வாங்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
மூன்று குழந்தைகளுக்கு தாயான இப்பெண் குடும்பத் தகராறு காரணமாக கணவரிடமிருந்து பிரிந்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திங்கள்கிழமையன்று தனது தாயுடன் ஏற்ட்ட தகராறில் தோழியின் வீட்டிற்கு செல்வதாகவும், மூன்று மணிநேரத்தில் வீட்டிற்கு திரும்பி வந்துவிடுவதாகவும் தனது சகோதரியிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
- இன்று 3-வது நாளாக நடந்த விசாரணைக்கு த.வெ.க. நிர்வாகிகள், கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆஜரானார்கள்.
- சி.பி.ஐ. விசாரணைக்கு த.வெ.க. நிர்வாகிகள் குழு முழு ஒத்துழைப்பு வழங்கியது.
கரூரில் நடந்த த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின்போது 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
முதற்கட்ட விசாரணை கரூரில் நடந்தது. விசாரணை யில் த.வெ.க. பொதுச் செயலாளர் என்.ஆனந்த், சி.டி.நிர்மல்குமார் மற்றும் த.வெ.க. நிர்வாகிகளிடமும் போலீஸ் அதிகாரிகளிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர். அடுத்தகட்ட விசாரணைக்காக த.வெ.க. நிர்வாகிகள் புதுடெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து கடந்த 2 நாட்கள் நடந்த விசாரணையில் த.வெ.க. பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, சி.டி.நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் கரூர் கலெக்டர் தங்கவேலு, போலீஸ் சூப்பி ரண்டு ஜோஸ் தங்கையா மற்றும் போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடந்தது.
தொடர்ந்து இன்று 3-வது நாளாக நடந்த விசாரணைக்கு த.வெ.க. நிர்வாகிகள், கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆஜரானார்கள். அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் த.வெ.க. நிர்வாகிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய விசாரணை நிறைவு பெற்றது.
இதையடுத்து த.வெ.க. இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* டெல்லியில் 3 நாட்களாக நடந்து வந்த விசாரணை நிறைவடைந்தது.
* சி.பி.ஐ. விசாரணைக்கு த.வெ.க. நிர்வாகிகள் குழு முழு ஒத்துழைப்பு வழங்கியது.
* எங்களிடம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் முறையாக பதில் அளித்துள்ளோம்.
* தேவைப்பட்டால் விசாரணைக்கு மீண்டும் அழைப்பதாக சி.பி.ஐ. அதிகாரிகள் கூறி உள்ளனர்.
* 41 பேரின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2026-ம் ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள பயணங்களின் வெற்றி எதிர்கால மனித விண்வெளிப் பயணத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைக்கும்.
- எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஒரு சிறிய செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது.
சென்னை:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெற்றிகரமான விண்வெளி சோதனைகளுடன் முன்னேறி வருகிறது. 2025-ம் ஆண்டில் பல முக்கிய திட்டங்களை மேற்கொண்டுள்ள இஸ்ரோ, 2026-ம் ஆண்டிலும் பல அற்புதங்களை சாதிக்கத் தயாராகி வருகிறது. எனவே இந்த ஆண்டு இஸ்ரோவிற்கு மிக முக்கியமான ஆண்டாக பார்க்கப்படுகிறது.
இந்திய விண்வெளிப் பயணத்திற்கு ஒரு முக்கிய ஆண்டு 2025 நிறைவடையும் நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் புத்தாண்டில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகின்றனர். 2026-ம் ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள பயணங்களின் வெற்றி எதிர்கால மனித விண்வெளிப் பயணத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைக்கும். அதனால்தான் இந்த ஆண்டை இஸ்ரோ மிகவும் முக்கியமானதாக கருதுகிறது என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார்.
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-
புத்தாண்டில் இஸ்ரோவின் மற்றொரு முக்கிய மைல்கல் பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ்.-என்-1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. தொடர்ந்து, இஸ்ரோவின் வடிவமைப்பின் அடிப்படையில் எச்.ஏ.எல் மற்றும் 'எல் அண்ட் டி'யால் தயாரிக்கப்பட்ட பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் ஓசோன்சாட்-3ஏ செயற்கைக்கோள் முதல் காலாண்டில் விண்ணில் ஏவப்படுகிறது. நிலம் மற்றும் கடல் கண்காணிப்புக்காக வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள், வானிலை ஆய்வுகள் மற்றும் மீன்வளத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். வருகிற 2027-ம் ஆண்டு 3 விண்வெளி வீரர்களை சுற்றுப்பாதைக்கு அனுப்பி மீண்டும் பத்திரமாக பூமிக்கு அழைத்து வரும் ககன்யான் திட்டத்துக்காக 3 ஆள் இல்லாத ராக்கெட்டை விண்ணில் ஏவி பரிசோதனை செய்ய இஸ்ரோ தயாராகி வருகிறது.
இதற்கான முதல் ராக்கெட்டை புத்தாண்டில் இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது. இதில் வியோமித்ரா என்ற பெண் ரோபோவும் பயணிக்கிறது. இந்த ரோபோ, விண்வெளி வீரர்களுக்கான பாதுகாப்பை முழுமையாக சோதிக்கும். தொடர்ந்து, எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஒரு சிறிய செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது.
தொடர்ந்து ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-03 (ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1எல்) என்ற வழி செலுத்தும் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. இவை முதல் காலாண்டில் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- இந்தச் சலுகை 2026 ஜனவரி 14 முதல் 2026 ஜூலை 14 வரை ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும்.
- 'R-Wallet' மூலம் டிக்கெட் எடுப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3 சதவீத கேஷ்பேக் சலுகையும் தொடரும்.
இந்திய ரெயில்வேயின் 'RailOne' செயலி மூலம் முன்பதிவுவில்லாத டிக்கெட்டுகளை வாங்குபவர்களுக்கு 3 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
ரெயில்வே வெளியிட்ட அறிவிப்பின்படி, ரயில்ஒன் செயலி மூலம் யுபிஐ, டெபிட் கார்டு உள்ளிட்டவற்றின் மூலம் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி டிக்கெட் வாங்குபவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் 3 சதவீதம் தள்ளுபடி நேரடியாக வழங்கப்படும்.
இந்தச் சலுகை 2026 ஜனவரி 14 முதல் 2026 ஜூலை 14 வரை ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும்.
பயணிகள் டிஜிட்டல் முறையில் டிக்கெட் எடுப்பதை ஊக்குவிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் சலுகை RailOne செயலியில் மட்டுமே கிடைக்கும். மற்ற ஆன்லைன் தளங்களுக்கு இது பொருந்தாது.
ஏற்கனவே 'R-Wallet' மூலம் டிக்கெட் எடுப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3 சதவீத கேஷ்பேக் சலுகையும் இதனுடன் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடைசி படம் என்று கூறப்படுவதால் இப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
- மலேசியாவில் கோலாகலமாக நடந்து முடிந்தது.
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.
விஜய் நடிப்பில் வெளியாக உள்ள 'ஜன நாயகன்' தான் விஜயின் கடைசி படம் என்று கூறப்படுவதால் இப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
அண்மையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் கோலாகலமாக நடந்து முடிந்தது.
இந்நிலையில் இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சி ஜீ 5 தொலைக்காட்சியில் வரும் ஜனவரி 4ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- 2002-ம் ஆண்டிலிருந்து வாக்காளர் பட்டியலில் இருந்துள்ளார். ஆனால் தற்போது பெயர் நீக்கப்பட்டதால், விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டது.
- இதுவரை சுமார் 60 பேர் இதனால் உயிரிழந்துள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடந்து முடிந்துள்ளது. அங்கு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 58 லட்சம் பேர் வரை நீக்கப்பட்டனர்.
இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லாததால் கவலையடைந்த 82 வயது முதியவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
உயிரிழந்தவர் புருலியா மாவட்டத்தைச் சேர்ந்த துர்ஜன் மாஜி ஆவார். இவர் சாந்தால் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்.
திங்களன்று ஓடும் ரெயிலின் முன்பு குதித்து அவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை. 1943-ல் பிறந்த அவர், 2002-ம் ஆண்டிலிருந்து வாக்காளர் பட்டியலில் இருந்துள்ளார்.
ஆனால் தற்போது பெயர் நீக்கப்பட்டதால், விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டது.
விசாரணைக்குச் செல்ல வாகன வசதி கிடைக்காததாலும், தனது குடியுரிமை மற்றும் வாக்களிக்கும் உரிமை பறிபோய்விடுமோ என்ற அச்சத்தாலும் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்திற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த SIR நடைமுறை ஏழை மக்களைத் துன்புறுத்துவதாகவும், இதுவரை சுமார் 60 பேர் இதனால் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளை நேரடி விசாரணைக்கு அழைக்க வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
- தனது வாகனத்தின் பேட்டரி மைலேஜ் தராதது குறித்து பலமுறை ஷோரூமில் புகார் அளித்துள்ளார்.
- அவர் ஆத்திரத்துடன் கத்துவதும், தீயை அணைக்க முயன்றவர்களிடம் வாக்குவாதம் செய்வதும் பதிவாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், தனது மின்சார ஆட்டோவின் மைலேஜ் மற்றும் பேட்டரி பிரச்சினையால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் ஒருவர் ஷோரூம் வாசலிலேயே அதற்கு தீ வைத்த வீடியோ வைரலாகி வருகிறது.
மோகன் என்ற அந்த முன்சார ஆட்டோ ஓட்டுநர், தனது வாகனத்தின் பேட்டரி, மைலேஜ் தராதது குறித்து பலமுறை ஷோரூமில் புகார் அளித்துள்ளார்.
ஆனால், பலமுறை அலைந்தும் தீர்வு கிடைக்காததால் விரக்தியடைந்த அவர் கடந்த திங்கள்கிழமை, ஜோத்ப்பூரில் உள்ள ஷோரூம் முன் தனது வாகனத்தின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.
அங்கிருந்தவர்கள் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா இன்று காலமானார்.
- அவரது மறைவுக்கு அவாமி லீக் கட்சி தலைவரான ஷேக் ஹசீனா இரங்கல் தெரிவித்தார்.
புதுடெல்லி:
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா (80), இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 13-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறப்பு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இதற்கிடையே, கலிதா ஜியா சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். கலிதா ஜியா கடந்த 1991-96 மற்றும் 2001-06 என இரு முறை வங்கதேச பிரதமராக இருந்தவர். கலிதா ஜியாவின் இறுதிச்சடங்கு டாக்காவில் நாளை நடைபெற உள்ளது.
இந்நிலையில், கலிதா ஜியாவின் இறுதிச்சடங்கில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்கிறார். இதற்காக ஜெய்சங்கர் நாளை வங்கதேச தலைநகர் டாக்கா செல்கிறார்.
வங்கதேசம் உடனான உறவில் விரிசல் நிலவி வரும் சூழ்நிலையில், வெளியுறவுத்துறை மந்திரியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.






