என் மலர்
இந்தியா

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: 2வது கட்ட அமர்வு இன்று தொடக்கம் #Parliment
- பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமா்வு இன்று தொடங்குகிறது.
- இதில் பல்வேறு பிரச்சனைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
புதுடெல்லி:
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் கடந்த ஜனவரி 28-ம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. கடந்த 13-ம் தேதியுடன் முதல் கட்ட அமா்வு முடிவடைந்தது.
முதல் கட்ட அமர்வின்போது ராகுல் காந்தியைப் பேச அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுடன் மக்களவையில் எதிா்க்கட்சிகள் அமளியை தொடங்கின. கடந்த 3-ம் தேதி மக்களவையில் காகிதங்களைக் கிழித்து அவைத்தலைவா் இருக்கையை நோக்கி வீசியதற்காக எதிா்க்கட்சி எம்.பி.க்கள் 8 போ் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.
சபாநாயகர் ஓம் பிா்லா முற்றிலும் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, அவரைப் பதவிநீக்கம் செய்யக்கோரி தீா்மானம் கொண்டுவர காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தரப்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் கட்ட அமா்வு இன்று தொடங்கி ஏப்ரல் 2-ம் தேதி வரை நடக்கிறது.
முதல் நாளிலேயே மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா மீதான பதவி நீக்க தீர்மான விவாதம் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றே தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என தெரிகிறது.
இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சனைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மேற்கு ஆசியா நிலவரம் குறித்தும், இந்திய பெருங்கடலில் ஈரான் கப்பல் தாக்கப்பட்டது குறித்தும், ரஷிய கச்சா எண்ணெய் விவாதத்தில் அமெரிக்காவின் மிரட்டல் குறித்தும் விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சியினர் பிரச்சனையை கிளப்புவார்கள்.
மத்திய அரசு இந்த விவகாரங்கள் குறித்து பாராளுமன்றத்தில் விளக்கம் அளிக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்ட அமர்விலும் கடும் அமளி நிலவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.






