search icon
என் மலர்tooltip icon
    • 400 சீட் கிடைக்காவிட்டால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெற மாட்டீர்களா?
    • ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டது பற்றி அமித் ஷா ஏன் கவலைப்படுகிறார்?

    புதுடெல்லி:

    மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வக்கீலுமான கபில் சிபில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நாங்கள் 400 இடங்களை வென்றால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெறுவோம் என உள்துறை மந்திரி அமித் ஷா கூறுகிறார். இவ்வளவு சீட் கிடைக்காவிட்டால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப்பெற மாட்டீர்களா? நீங்கள் அதை திரும்பப்பெற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ஆனால், முதலில் சீனா எடுத்துச்சென்ற அந்த 4,000 கி.மீ. தூரத்தை நீங்கள் திரும்பப்பெற வேண்டும்.

    ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு பற்றி அமித் ஷா ஏன் கவலைப்படுகிறார்? இது ஆம் ஆத்மி கட்சியின் உள் விவகாரம்.

    பிரஜ்வலைப் பற்றி யோசிக்கிறீர்களே, அதுபற்றி நீங்கள் ஏன் அறிக்கை கொடுக்கக் கூடாது. இது மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் உள் விவகாரம் என தெரிவித்தார்.

    • காயமடைந்த சிறுவன் ஹரீஷ் குமாருக்கு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • நாயின் உரிமையாளர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை புளியந்தோப்பு பகுதியில் வீட்டின் கீழே விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுவனை பக்கத்து வீட்டு வளர்ப்பு நாய் கடித்துக் குதறியது.

    கே.பி. பார்க் பகுதியில் நடைபயிற்சிக்கு நாயை அழைத்து சென்றபோது சிறுவனை கடித்துக் குதறியது.

    காயமடைந்த சிறுவன் ஹரீஷ் குமாருக்கு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்றபோது நாய் கடித்த சம்பவம் சென்னையில் மீண்டும் அரங்கேறியதால் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக நாயின் உரிமையாளர் ஸ்டெல்லா உட்பட 3 பேர் மீது பேசின் பிரிட்ஜ் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை 2 நாய்கள் கடித்ததில் பலத்த காயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இயர்போன் போன்றவற்றை பயன்படுத்துவதால் என்ன பாதிப்பு ஏற்படும் தெரியுமா?
    • இயர்போன்கள் நேரடியாக காதில் வைக்கப்படுவது காற்றுப்பாதையைத் தடுக்கிறது.

    வளர்ந்து வரும் நவீன காலத்தில் செல்போன் இல்லாமல் இருக்கவே முடியாது என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்துகின்றனர். அதில் தற்போது பலரும் ஹெட்போன் அல்லது இயர்போன் அணிந்து எப்போதும் செல்போனில் மூழ்கியிருக்கிறார்கள். அதை வசதியாக மட்டுமின்றி, ஸ்டைலாகவும் கருதுகிறார்கள்.

    இருசக்கர வாகனம், பஸ், ரெயிலில் பயணிக்கும் பல பெண்களையும் இயர் போனும் காதுமாய் காண முடிகிறது. தொடர்ந்து இயர் போன் போன்றவற்றை பயன்படுத்துவதால் என்ன பாதிப்பு ஏற்படும் தெரியுமா?

    இயர்போன் அல்லது ஹெட்போன் மூலம் உரத்த இசையைக் கேட்பது, கேட்கும் திறனைப் பாதிக்கும். இயர்போன் மூலம் ஒலியலைகள் தொடர்ந்து செவிப் பறையைத் தாக்குவது நாளடைவில் பாதிப்பை ஏற்படுத்தும்.


    நிபுணர்களின் கூற்றுப்படி, இயர்போன்களை மணிக்கணக்கில் அணிந்துகொண்டு இசை கேட்பது காதுகளுக்கும் மட்டுமல்ல. இதயத்துக்கும் நல்லதல்ல. இதனால் இதயம் வேகமாக துடிப்பதுடன், படிப்படியாக பாதிப்புக்கு உள்ளாகும். இயர்போன்களில் இருந்து

    வெளிப்படும் மின்காந்த அலைகள் மூளையில் மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன. இதனால் தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி பிரச்சினைகள் உண்டாகின்றன. பலர் தூக்கமின்மை அல்லது தூக்கத்தில் மூச்சுத்திணறல் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

    இயர்போன்கள் நேரடியாக காதில் வைக்கப்படுவது காற்றுப்பாதையைத் தடுக்கிறது. இந்த அடைப்பு. பாக்டீரியாவின் வளர்ச்சி உட்பட பல்வேறு வகையான காது நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும்.

    இயர்போன்களை நீண்டகாலமாக பயன்படுத்துவது ஒரு நபரின் சமூக வாழ்க்கை மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும். சில சமயங்களில் அதிகப்படியான பதற்றத்தையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். இயர்போன்களில் தொடர்ந்து பாடல்களைக் கேட்பதால், கவனம் செலுத்துவதில் குறைபாடு ஏற்படுகிறது. இது படிப்பு, வேலை அல்லது பிற செயல்பாடுகளில் தவறுகளுக்கு வழிவகுக்கிறது.

    இயர்போன்களை காதுகளில் பொருத்தி இசை. பேச்சு என கேட்டு ரசிப்பது சுகமாக இருக்கும்தான். ஆனால் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகளையும் மனதில்கொள்ள வேண்டும். விவேகமாகவும், குறைந்த நேரத்துக்கும் இயர்போன்களை பயன்படுத்துவது எப்போதுமே பாதுகாப்பு.

    • நான் சைவ உணவு மட்டும் சாப்பிடுபவன். இது என் மனதை பாதித்தது என பதிவிட்டிருந்தார்.
    • புகார்தாரரின் பில், போன் நம்பர் போன்றவற்றை சரிபார்க்க விரும்புகிறோம் என ஜொமோட்டோ கேட்டுக்கொண்டது.

    ஆன்-லைன் மூலம் வினியோகம் செய்யப்படும் பொருட்களில் சில நேரங்களில் பொருட்கள் மாற்றி வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.

    இந்நிலையில் புனேவை சேர்ந்த பங்கஜ் சுக்லா என்பவர் ஆன்-லைன் மூலம் ஜொமோட்டோவில் சைவ உணவு ஆர்டர் செய்த நிலையில் அவருக்கு சிக்கன் பிரியாணி வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பங்கஜ் சுக்லா தனது பதிவில் கூறி இருப்பதாவது:-

    புனேவின் கார்வே நகரில் உள்ள ஒரு கடையில் பன்னீர் பிரியாணி ஆர்டர் செய்தேன். ஆனால் எனக்கு வினியோகம் செய்யப்பட்ட அந்த பிரியாணியில் சிக்கன் துண்டு இருந்தது. நான் சைவ உணவு மட்டும் சாப்பிடுபவன். இது என் மனதை பாதித்தது என பதிவிட்டிருந்தார். அவரது இந்த பதிவு இணையத்தில் வைரலான நிலையில், அவரது பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து ஜொமோட்டோவுக்கு எதிராக விமர்சனங்களை பதிவிட்டனர்.

    இதைத்தொடர்ந்து ஜொமோட்டோ அவரது பதிவுக்கு பதில் அளித்தது. அதில், புகார்தாரரின் பில், போன் நம்பர் போன்றவற்றை சரிபார்க்க விரும்புகிறோம் என கேட்டுக்கொண்டது. இந்த விவகாரம் இணையதளத்தில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.

    • தங்கம் விலை கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 795 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • வெள்ளி விலை உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடனேயே நீடித்து வருகிறது. அந்த வகையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து 53 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து 54 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 795 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து 92 ரூபாய் 50 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

    • ஷாம்பெயின் ஸ்லோஷி என்ற பயனர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள அந்த வீடியோ 57 வினாடிகள் உள்ளது.
    • வைரலான வீடியோவை பார்த்த பயனர்கள் வாலிபரின் செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    ரெயில்களுக்குள் குழந்தைகளுக்காக தொட்டில் கட்டுவதை பார்த்திருப்போம். ஆனால் சமீபகாலமாக ரெயில்களில் கடும் கூட்ட நெரிசலால் இருக்கை கிடைக்காத சில பெரியவர்கள் கூட போர்வையால் தொட்டில் கட்டி படுத்து உறங்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி இருந்தன.

    இந்நிலையில் தற்போது எக்ஸ் தளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் ஓடும் பஸ்சுக்குள் வாலிபர் ஒருவர் தொட்டில் கட்டி படுத்து உறங்கிய காட்சிகளும், அதனை அகற்றுமாறு கூறிய டிரைவருடன் அந்த பயணி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகளும் உள்ளது.

    ஷாம்பெயின் ஸ்லோஷி என்ற பயனர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள அந்த வீடியோ 57 வினாடிகள் உள்ளது. அதில், பஸ் இருக்கைகளுக்கு நடுவே குறுக்காக பெரிய கயிறுகள் மூலம் தொட்டில் கட்டிய வாலிபர் ஒருவர் அதில் படுத்துக் கொள்கிறார். இதைப்பார்த்த டிரைவரும், கண்டக்டரும் அந்த பயணியிடம் தொட்டிலை அகற்றுமாறு கூறிய போது அவர் மறுப்பு தெரிவிக்கிறார். இதனால் ஆவேசம் அடைந்த டிரைவர், நான் பஸ் ஓட்ட மாட்டேன் என கூறும் காட்சிகள் உள்ளது.

    வைரலான இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் வாலிபரின் செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


    • சூரிய உதயத்துக்கும், சூரிய அஸ்தமனத்துக்கும் இடைப்பட்ட 8-வது முகூர்த்தமான அபிஜித் முகூர்த்தத்தில் செய்யப்படும் மங்கள செயல்கள் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது.
    • கங்கா தேவி பூமிக்கு வந்ததை நினைவு கூரும் கங்கா சப்தமியுடன் இணைந்திருப்பதால் மே 14-ந் தேதி அதிக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.

    உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசி பாராளுமன்ற தொகுதியில், போட்டியிட பிரதமர் மோடி நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    அதற்கு முன்பாக, அவர் கங்கை நதியில் உள்ள தஷ்வமேத் படித்துறையில் பிரார்த்தனை செய்தார். பிரதமர் மோடி சாஸ்திர, சம்பிரதாயங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்.

    இதனால் அவர் மிகவும் நல்ல நேரமாக கருதப்படும் 11.40 முதல் 12 மணிக்குள் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    ஜோதிட சாஸ்திரத்தில் 'அபிஜித் முகூர்த்தம்' மற்றும் 'ஆனந்த் யோகம்' ஆகியவற்றை இணைத்து, பிரதமர் மோடி தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்கு நல்ல நேரத்தை தேர்ந்தெடுத்ததாக ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.

    சூரிய உதயத்துக்கும், சூரிய அஸ்தமனத்துக்கும் இடைப்பட்ட 8-வது முகூர்த்தமான அபிஜித் முகூர்த்தத்தில் செய்யப்படும் மங்கள செயல்கள் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது.

    பூசம் (புஷ்ய) நட்சத்திரம், மே 13-ந்தேதி அன்று காலை 11.23 மணிக்கு தொடங்கி மே 14-ந்தேதி பிற்பகல் 1.05 மணி வரை நீடித்தது. இந்த நேரத்தில் செய்யப்படும் செயலானது மங்களத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டது.

    ஏனெனில், இந்த காலம் அதிர்ஷ்டத்தையும், ஆசீர்வாதங்களையும் அள்ளித் தருவதாக நம்பப்படுகிறது.

    மேலும், கங்கா தேவி பூமிக்கு வந்ததை நினைவு கூரும் கங்கா சப்தமியுடன் இணைந்திருப்பதால் மே 14-ந் தேதி அதிக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.

    இந்த நேரத்தில் மனு தாக்கல் செய்திருப்பது அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் என தெரிவித்துள்ளனர்.

    • ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் பிகோவை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.
    • ராபர்ட் பிகோ சுடப்பட்டதற்கு அந்நாட்டு அதிபர் ஜுஜானா கேபுடோவா கண்டனம் தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    ஸ்லோவாக்கியா பிரதமராக ராபர்ட் பிகோ இருந்து வருகிறார். 59 வயதான இவர் தலைநகரில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹேண்ட்லோவா நகரத்தில் உள்ள கலாச்சார மாளிகைக்கு வெளியில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது சந்தேகத்திற்குரிய நபர் ராபர்ட் பிகோ நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

    துப்பாக்கியால் சுட்டதில் ராபர்ட் பிகோ வயிற்றில் குண்டு பாய்ந்தது. இதனால் சுருண்டு விழுந்த அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். துப்பாக்கியால் சுட்ட மர்ம நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பிரதமர் ராபர்ட் பிகோ தாக்கப்பட்டதற்கு அந்நாட்டு அதிபர் ஜுஜானா கேபுடோவா கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ராபர்ட் பிகோ கட்சி கடந்த செப்டம்பர் மாதம் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் 3-வது முறையாக பிரதமர் ஆனார். ரஷியாவுக்கு ஆதரவான மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்டு வெற்றி பெற்றார்.

    இந்நிலையில், ஸ்லோவாக்கியா பிரதமர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஸ்லோவாக்கியாவின் பிரதமர் ராபர்ட் பிகோ மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கோழைத்தனமான மற்றும் கொடூரமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன். பிரதமர் பிகோ விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். ஸ்லோவாக்கியா மக்களுடன் இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது என பதிவிட்டுள்ளார்.

    இதேபோல், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    • தமிழ்நாட்டில் வரும் 18-ந் தேதியிலிருந்து 20-ந் தேதி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
    • இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாட்டில் வரும் 18-ந் தேதியிலிருந்து 20-ந் தேதி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 18-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 12 செ.மீ. முதல் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    கனமழைக்கு வாய்ப்புள்ளதால் அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை 8.30 மணி வரையிலான நிலவரப்படி, அதிகபட்சமாக தஞ்சை அதிராம்பட்டினத்தில் 10 செ.மீ மழைப்பதிவாகி உள்ளது. மயிலாடுதுறை, அருப்புக்கோட்டையில் தலா 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. மதுரையில் 4.7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    • தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் இன்று காலையில் இருந்து மழை பெய்து வருகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கோடை மழை பரவலாக பெய்யத் தொடங்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு இலங்கை கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று முதல் 19-ந் தேதி வரை தொடர்ந்து 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தில் மிக அதிக அளவாக தஞ்சை அதிராம்பட்டினத்தில் 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. மயிலாடுதுறை, அருப்புக்கோட்டையில் தலா 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. மதுரையில் 4.7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் இன்று காலையில் இருந்து மழை பெய்து வருகிறது.

    காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    ×