search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    • சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.

    சென்னை:

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது .

    இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலையில் பரவலாக மழை பெய்தது.

    சென்னை சென்ட்ரல், எழும்பூர், வேப்பேரி, அமைந்தகரை, நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு மற்றும் தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்து வருகிறது.

    • தமிழகத்தில் 2026-ல் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும்.
    • தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அமரும் என்றார்.

    மதுரை:

    மதுரையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    த.வெ.க. தலைவர் விஜய்யை சமீபத்தில் திராவிட கட்சித்தலைவர் ஒருவர் கூட்டணிக்கு அழைத்தார்.

    தற்போது செல்வப்பெருந்தகை இந்தியா கூட்டணியில் சேருங்கள் என அழைத்துள்ளார்.

    அவர் விஜய் மீது வைக்கும் நம்பிக்கையை தயவுசெய்து ராகுல் காந்தி மீது வையுங்கள் என அறிவுரை கூறுவது எனது கடமை.

    பா.ஜ.க. யாரையும் கூப்பிட வேண்டிய அவசியமில்லை. பா.ஜ.க. தமிழகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது.

    திமுக பிறக்கும் முன்பே திருவள்ளுவர் திருக்குறளில் ஆன்மிக கருத்துகள் சொல்லி வந்திருக்கிறார். அதனை வள்ளுவர் ஆரிய கைக்கூலியாக இருந்துகொண்டு திருவள்ளுவர் கருத்துகளை திணித்துள்ளார் என பெரியார் கடுமையாக சாடினார். அவரது வழியில் வந்த திமுகவினர் வள்ளுவரை பற்றி பேச அருகதை இல்லை. குறிப்பாக முரசொலிக்கு அருகதை இல்லை.

    திருப்பரங்குன்றம் மலை மீது நடக்கும் பிரச்சனைக்கு தி.மு.க. அரசு பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் செயலை செய்கிறது. அதற்கு கண்டனங்களைத் தெரிவித்து கொள்கிறேன்.

    2026-ல் தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் வரும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அமரும் என தெரிவித்தார்.

    • ரேஷன் கடையில் தற்போது பொருள் கிடைப்பதில்லை. திருநெல்வேலி அல்வா கொடுக்கிறார்கள்.
    • தேர்தல் வாக்குறுதிகளில் 20 சதவீதத்தை கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றார்.

    சென்னை:

    சென்னையில் நடைபெற்ற எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் விழாவில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    எம்.ஜி.ஆர். பெயரை உச்சரிக்காமல் தமிழகத்தில் யாராலும் ஆட்சி நடத்த முடியாது.

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் இல்லை. நாம் தாம் வாரிசு.

    நான் என்ன மிட்டா மிராசா, தொழிலதிபரா? சாதாரண தொண்டன்.

    கட்சிக்கு உழைத்து, விஸ்வாசமா இருந்தா கதவ தட்டி பதவி கொடுக்குற கட்சிதான் அ.தி.மு.க.

    சட்டசபை தேர்தலில் 522 அறிவிப்பை வெளியிட்ட தி.மு.க. அரசு, அதில் 20 சதவீத அறிவிப்பை கூட நிறைவேற்றவில்லை.

    ரேஷன் கடையில் தற்போது பொருள் கிடைப்பதில்லை. திருநெல்வேலி அல்வா கொடுக்கிறார்கள்.

    மகனை துணை முதலமைச்சர் ஆக்கியதுதான் தி.மு.க. அரசின் சாதனை.

    மகளிர் உரிமைத் தொகையை தி.மு.க. தரவில்லை. நாங்கள் வாதாடி, போராடி பெற்றுத் தந்தோம். ஆட்சிக்கு வந்து 28 மாதங்கள் கழித்துதான் மகளிர் உரிமைத் தொகை தரப்பட்டது.

    வர்தா புயல் மாதிரி ஒரு புயல் வந்தா போதும்... புயலோடு புயலா போயிடும். தி.மு.க. ஆட்சிக்கு இன்னும் 13 அமாவாசைதான் இருக்கிறது.

    மின்சார கட்டணம், வீட்டு வரி, தொழிற்சாலை வரி, தொழில் வரி உயர்ந்துள்ளது.

    மக்கள் மீது வரி மேல் வரி போடும் ஆட்சிதான் ஸ்டாலின் அரசு.

    இந்தியாவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. அந்த சாதனையைதான் ஸ்டாலின் படைத்துள்ளார் என தெரிவித்தார்.

    • டெல்லி சட்டசபை தேர்தல் களத்தில் 981 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
    • வேட்பு மனுக்களை வாபஸ் பெற 20-ம் தேதி கடைசி நாளாகும்.

    புதுடெல்லி:

    டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. பிப்ரவரி 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு இதுவரை 981 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர் என டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதன்படி, மொத்தம் 1,521 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    வேட்பு மனுக்களை வாபஸ் பெற 20-ம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய இறுதி நாளான நேற்று ஒரே நாளில் 680 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. புதுடெல்லி தொகுதியில் அதிக அளவாக மொத்தம் 29 வேட்பாளர்கள் 40 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

    இந்த தொகுதியில், ஆம் ஆத்மி கட்சி தலைவர் மற்றும் முன்னாள் முதல் மந்திரியான கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக பா.ஜ.க. சார்பில், முன்னாள் எம்.பி. பர்வேஷ் வர்மாவும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித் மகன் சந்தீப் தீட்சித்தும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    • அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்கிறார்.
    • இதில் இந்தியா சார்பில் வெளியுறவு மந்திரி பங்கேற்க உள்ளார்.

    புதுடெல்லி:

    அமெரிக்க அதிபராக உள்ள ஜோ பைடன் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து, புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கடந்த ஆண்டு இறுதியில் நடந்தது.

    இதில் குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அபார வெற்றி பெற்றார். இதையடுத்து அமெரிக்காவின் 47-வது அதிபராக வரும் 20-ம் தேதி டிரம்ப் பதவியேற்க உள்ளார். அவருக்கு அந்நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

    டிரம்ப் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளார் என வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

    மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, அர்ஜென்டினா அதிபர் ஜாவியர் மிலேய், எல் சல்வேடார் தலைவர் நயீப் புகேல், பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ உள்ளிட்ட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானி, நீடா அம்பானி தம்பதிக்கும் டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அம்பானி தம்பதியினர் அமெரிக்கா செல்கின்றனர்.

    • பெண் காவலர், சீருடையில் இருக்கும்போதே அவரது கழுத்தில் இருந்த தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு சென்றிருக்கின்றனர்.
    • திமுக அரசு, இனியும் காவல்துறையினரை, அரசியல் பழிவாங்குதலுக்குப் பயன்படுத்துவதை விட வேண்டும்.

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    சென்னை தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட எட்டு இடங்களில், ஒரே நாளில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியையும், பொது மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    குறிப்பாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் காவலர், சீருடையில் இருக்கும்போதே அவரது கழுத்தில் இருந்த தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு சென்றிருக்கின்றனர்.

    திமுக அரசு, சமூக வலைத்தளத்தில் இயங்கும் பாஜக தொண்டர்களைப் பின்தொடர்வதையே காவல்துறையின் முழுநேரப் பணியாக மாற்றியதன் விளைவு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, பெண் காவலரிடமே செயின் பறிப்புச் சம்பவம் நடக்கும் அளவுக்கு, தமிழக மக்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.

    திமுக அரசு, இனியும் காவல்துறையினரை, அரசியல் பழிவாங்குதலுக்குப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு, சமூக விரோதிகளுக்கு எதிராக, காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும். காவல்துறையினரும், திமுகவின் அதிகார துஷ்பிரயோகங்களைப் புறக்கணித்துவிட்டு, தங்கள் முதற்கடமையான சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பு என புகார்.
    • பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 9 நாட்கள் வரை தொடர் விடுமுறை கிடைத்ததால் சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் தென்மாவட்டங்களில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.

    இந்நிலையில் விடுமுறை முடிந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் நேற்று முதல் சென்னை உள்ளிட்ட தாங்கள் பணிபுரியும் இடங்களுக்கு திரும்பி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் சிரமமின்றி செல்வதற்காக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    மேலும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான பஸ்கள் மற்றும் ரெயில்கள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. ரெயில்களில் காத்திருப்பு பட்டியலில் ஏராளமான பயணிகள் காத்திருக்கின்றனர்.

    இந்நிலையில் அரசு பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் முழுவதுமாக நிரம்பிவிட்டதால் பொதுமக்கள் தனியார் பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். இதனை பயன்படுத்தி தனியார் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் டிக்கெட் விலையை கடுமையாக உயர்த்தி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்நிலையில், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    அதன்படி, 1800 425 6151, 044- 24749002, 044-26280445, 044-26281611 என்ற எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

    • பெரியார் என்பது தனி மனிதனல்ல. சமூக இழுவுகளை எதிர்த்த பெரிய போராட்டம் ஒரு இயக்கம்.
    • இன்றும் சமூக இழிவுகளை எதிர்ப்பது தான் பெரியார் கொள்கை.

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு பிப்ரவரி 5-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார்.

    பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தேர்தலை புறக்கணித்து உள்ளது. பா.ஜ.க,, தே.மு.தி.க. ஆகிய கட்சிகளும் போட்டியிடாமல் விலகி உள்ளன. நாம் தமிழர் சார்பில் மா.கி. சீதாலட்சுமி (முதுகலை ஆய்வியல் திறைஞர் (M.A, M.Phil.,) போட்டியிடுகிறார்.

    இதனால் தற்போது முதல் முறையாக நாம் தமிழர் கட்சி ஆளும் கட்சியான தி.மு.க.வை நேரடியாக தேர்தல் களத்தில் சந்திக்கிறது.

    இந்நிலையில், "ஈரோடு கிழக்கில் பெரியாரை விமர்சித்து வாக்கு கேட்டால் தெரியும்.. பெரியார் யார் என தெரியும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "பெரியார் காலத்தில் இப்போது இருக்கக்கூடிய மத்திய அரசின் விதிகள் இருந்தால், இன்று காவல்துறை நடந்து கொள்வது போல அன்று நடந்திருந்தால் காலம் முழுவதும் பெரியார் சிறையில் இருந்திருப்பார்.

    பெரியார் என்பது தனி மனிதனல்ல. சமூக இழுவுகளை எதிர்த்த பெரிய போராட்டம் ஒரு இயக்கம். அப்படிப்பட்ட ஒரு இயக்கத்தை நாம் இப்போது களங்கப்படுத்த வேண்டுமா? பெரியார் சமூக இழிவுகளை எதிர்த்து வெற்றி கண்டார். இன்றும் சமூக இழிவுகளை எதிர்ப்பது தான் பெரியார் கொள்கை.

    பெரியார் பிறந்த ஊரில் ஈரோடு கிழக்கில் பெரியாரை விமர்சித்து வாக்கு கேட்டு பாருங்கள். எத்தனை மக்கள் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று தெரிந்து விடும். திராவிடர்கள் என்பது ஆரியர்கள் அல்லாதவர்களை குறிக்கிறது. திராவிடம் என்பது தமிழ்நாடு அல்ல தென்னிந்திய மாநிலங்களை குறிப்பது தான் திராவிடம்" என்று பேசியுள்ளார்.

    • பொங்கலுக்கு சொந்த ஊருக்கு சென்று விட்டதால் ரேசனில் பொருள் வாங்காமல் உள்ளனர்.
    • பொங்கல் தொகுப்பு வாங்காதவர்கள் 25ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு.

    பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு ரேசன் கடைகளில் வழங்கப்பட்டு வந்தது. இலவச வேட்டி-சேலைகளும் ரேசனில் வழங்கப்படுகிறது.

    சிலர் பொங்கலுக்கு சொந்த ஊருக்கு சென்று விட்டதால் ரேசனில் பொருள் வாங்காமல் உள்ளனர்.

    இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி நியாய விலைக் கடடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காதவர்கள் வரும் 25ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ஒட்டி 85 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மீதமுள்ள பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதனால், விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு பெற்று பயன்பெறுமாறு அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

    • இணையத்தில் ட்ரெண்டாகும் மீம்களை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் போலீசார் பகிர்ந்து வருகின்றனர்.
    • கிரீடம் படத்தில் வரும் ராஜ்கிரணை வைத்து நெட்டிசன்கள் நிறைய மீம்களை பகிர்ந்து வந்தனர்.

    கிரீடம் படத்தில் வரும் 'கனவெல்லாம் பலிக்குதே கண் முன்னே நடக்குதே' என்ற பாடலை வைத்து நெட்டிசன்கள் அண்மையில் நிறைய மீம்களை பகிர்ந்து வந்தனர்.

    அந்த பாடலில் தன மகனை நினைத்து அப்பா ராஜ்கிரண் பெருமைப்படுவார். அதனை மீமாக மாற்றி நெட்டிசன்கள் பகிர்ந்து வந்தனர்.

    அவ்வகையில் இந்த மீமை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையும் கோவை போலீசார் தங்களது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், 'அனைத்து கோவை மக்களும் போக்குவரத்து விதிகளை பின்பற்றி, ஹெல்மெட் அணிகின்றனர்.' அதனை நினைத்து கோவை போக்குவரத்து போலீசார் பெருமைப்படுவதாக கிண்டலாக தெரிவித்துள்ளனர்.

    சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகும் மீம்களை காவல்துறையினர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழ் இனத்தை காக்கும் அரணாக, திமுக சட்டத்துறை திகழ்கிறது.
    • எமர்ஜென்சி காலத்தில் நான் உள்பட பலரும் சிறையில் அடைக்கப்பட்டோம்.

    திமுக சட்டத்துறை 3வது மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    திமுகவில் உள்ள அணிகளில் தனித்துவமான அணி சட்டத்துறை அணி. பொய்களை தகர்த்தெறிந்து 75 ஆண்டு காலம் திமுக நிமிர்ந்து நிற்கிறது. இதற்கு தொண்டர்களின் தியாகம் தான் காரணம்.

    தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழ் இனத்தை காக்கும் அரணாக, திமுக சட்டத்துறை திகழ்கிறது. இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ததும் திமுகவின் சட்டத்துறை தான்.

    எமர்ஜென்சி காலத்தில் நான் உள்பட பலரும் சிறையில் அடைக்கப்பட்டோம். எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்களுக்கான போராட்டங்களை நடத்தியபோது வழக்குகளை சந்தித்தோம்.

    திமுகவின் சட்டத்துறை, சாதனை துறையாக விளங்கி வருகிறது. ஒரே நாடு ஒரே தேர்தலை இறுதி வரை எதிர்த்து போராட வேண்டும். நீட் தேர்வு, ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக திமுக சட்டத்துறை மூலம் சட்டப் போராட்டம் நடத்துகிறது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் என்று ஒரே பண்பாட்டிற்குள் நகர்த்துவதற்கு பாஜக முயற்க்கிறது. இந்த முறை பாஜகவுக்கும் நல்லது அல்ல, பிரதமர் மோடியை சர்வாதிகாரியாக மாற்ற தான் பயன்படும்.

    நான் ஆளுநரை விமர்சிக்கிறேன் என்பதற்காக அவரை மாற்றிவிட வேண்டாம். இந்திய நாட்டையும், அரசியலைப்பு சட்டத்தையும் பாதுகக்க நாம் போராடி வருகிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நோயைப் பரப்பக்கூடிய நுண்ணுயிரிகள் அந்த மாட்டின் சிறுநீரில் இருக்கும்.
    • தான் பேசியது அறிவியல்படி தவறு என்று காமகோடி பொதுவெளியில் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

    மாட்டுப் பொங்கலையொட்டி, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் நடைபெற்ற கோ பூஜையில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கலந்துகொண்டார்.

    அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், "எனது தந்தை ஒரு சந்நியாசியிடம் சென்று எனக்கு ஜுரம் அடிக்கிறது. நான் மருத்துவரை சென்று பார்க்கவா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த சந்நியாசி அதெல்லாம் வேண்டாம், பசுமாட்டு கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகி விடும் என்று கூறியுள்ளார். உடனடியாக அவர் கோமியத்தை பருகியுள்ளார். அடுத்த 15 நிமிடத்தில் அவருக்கு ஜுரம் சரியாகி விட்டது.

    கோமியம் மிகப்பெரிய மருந்து, பிணிகளை நீக்கும். உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தி கோமியத்தில் இருப்பதால், அவ்வப்போது கோமியத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

    மாணவர்களுக்கு அறிவியலை போதிக்கும் இந்தியாவின் உச்சபட்ச கல்வி நிறுவனத்தின் இயக்குநரே அறிவியலுக்கு புறம்பாக பேசியுள்ளது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. காமக்கொடியின் இந்த கருத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கோமியம் (மாட்டு சிறுநீர்) குடித்தால் ஜுரம் சரியாகுமென அறிவியலுக்குப் புரம்பான கருத்தை பேசிய சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடிக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு மாணவர் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில், "சென்னை, மேற்கு மாம்பலத்திலுள்ள கோசாலையில் 15.01.25 அன்று மாட்டுப்பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய சென்னை ஐ.ஐ.டி இயக்குனரான திரு.காமகோடி, கோமியம் (மாட்டின் சிறுநீர்) குடித்தால் ஜூரம் சரியாகுமென அறிவியலுக்கு எதிரான, ஆதாரங்கள் இல்லாத பிற்போக்கு கருத்தை பேசியிருக்கிறார்.

    அறிவியல்படி கோமியம் (மாட்டின் சிறுநீர்) என்பது மாட்டின் கழிவு, மேலும் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருக்கும் மாடாக இருந்தால் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய. நோயைப் பரப்பக்கூடிய நுண்ணுயிரிகள் அந்த மாட்டின் சிறுநீரில் இருக்கும். இதை மனிதர்கள் அருந்தினால் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கும் நிலையில், அறிவியலை ஊக்குவிக்கவேண்டிய இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர் அறிவியலுக்கு எதிராக பேசியிருப்பதை தமிழ்நாடு மாணவர் கழகம் கண்டிக்கிறது.

    மேலும் தன் பேச்சுக்கான ஆதாரத்தை அவர் வெளியிட வேண்டும். தவறும் பட்சத்தில் தான் பேசியது தன்னுடைய சொந்த கருத்து என்றும், அறிவியல்படி தவறு என்றும் பொதுவெளியில் வருத்தம் தெரிவிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×