என் மலர்
சமையல்
- முட்டைக்கோஸைத் துருவி நன்றாக வதக்கி, மிளகாய், உப்பு, புளியுடன் சேர்த்து அரைத்தால் சுவையான தேங்காய்த் துவையல்ரெடி.
- பூரிக்கிழங்கு செய்யும்போது அதில் பொட்டுக்கடலையுடன் சோம்பு சேர்த்து அரைத்து கலந்தால் சுவையாக இருக்கும்.
* வத்தக்குழம்பு மற்றும் காரக்குழம்பு போன்றவற்றில் காரம் அதிகமாகி விட்டால், சிறிது தேங்காய் பால் விட்டு இறக்குங்கள். காரம் குறைவதோடு சுவையாகவும் இருக்கும்.
* சாம்பாருக்கு போடும் துவரம் பருப்பை லேசாக வறுத்து வேக வைத்தால் சாம்பார் சீக்கிரம் கெட்டுப் போகாது.
* கேரட்டை நீரில் போட்டு வேக வைப்பதை விட இட்லி போல் ஆவியில் வேக வைத்தால் கேரட்டில் உள்ள சத்துக்கள் அழியாமல் இருக்கும்.
* அவல் கேசரி செய்யும்போது ஒரு ஸ்பூன் நெய் விட்டு வாசனை வரும் வரை லேசாக வறுத்து, பின்பு மிக்சியில் லேசாக அரைத்து கேசரி செய்தால் ரவா கேசரி போல் இருக்கும்.
* அடைக்கு ஊற வைக்கும்போது அரிசி, பருப்பு வகைகளுடன், ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயமும் ஊற வைத்து அரைத்தால் அடை மிருதுவாகவும், வாசனையாகவும் இருக்கும்.
* ரவா தோசை செய்யும்போது இரண்டு ஸ்பூன் கடலைமாவு சேர்த்து செய்து பாருங்கள். தோசை நன்கு சிவந்து மொறுமொறுவென நன்றாக இருக்கும்.
* சர்க்கரை பொங்கல் செய்யும் போது பாலுக்கு பதில் பால் பவுடர் சேர்த்து செய்தால் பொங்கலின் சுவை கூடும்.
* எலுமிச்சைப்பழ ரசம் செய்வது போல நார்த்தங்காய் சாறு பிழிந்து பருப்பு ரசம் செய்யலாம். சுவையாக இருக்கும்.
* காய்கறிகள், கீரை போன்றவற்றை வேக வைத்த நீரைக் கீழே கொட்டாமல் ரசத்தில் சேர்த்தால் சத்து மிகுந்த ரசம் தயார்.
* சூப் செய்ய நல்ல கிரேவி பதம் வருவதற்கு சோள மாவு கிடைக்காத பட்சத்தில் ஒரு ஸ்பூன் ஜவ்வரிசியை வறுத்து மிக்ஸியில் பொடி செய்து சேர்த்தால் அடர்த்தியாக இருக்கும். சத்தும் அதிகம்.
* பீட்ரூட்டைத்துருவி ஆவியில் வேக வைத்து, கெட்டியான தயிரில் போடவும். மிளகாய், தேங்காய், சீரகம் சேர்த்து விழுதாக அரைத்து பீட்ரூட் கலவையில் கலந்தால் சுவை மிகுந்த பீட்ரூட் பச்சடி தயார்.
* நீர் மோரில் சிறிது ரசப்பொடி சேர்த்து பருகினால் சுவையாக இருக்கும்.
* நீள மிளகாயை கிள்ளி, பிளாஸ்டிக் டப்பாவில் வைத்துக்கொண்டால், தாளிக்கும் போதும், மற்ற உபயோகத்துக்கும் சுலபமாக இருக்கும்.
* இஞ்சியை துருவி, வெயிலில் காயவைத்துப் பொடித்து வைத்துக்கொண்டால், டீ, குருமா, பொங்கல் போன்றவற்றில் சேர்க்க மணத்துக்கு மணம், உடலுக்கும் நல்லது.
* சப்பாத்தியின் மேல் சிறிது எண்ணெய்யைத் தடவி ஒரு டப்பாவில் போட்டு மூடி பிரிட்ஜில் வைத்தால் மூன்று நாட்கள் வரை பிரெஷ்ஷாக இருக்கும்.
* ஆப்பத்துக்கு மாவு அரைக்கும்போது தேங்காய்த்துருவல் மற்றும் வாழைப்பழத்தைச் சேர்த்து அரைத்து வைத்து ஆப்பம் வார்த்தால் ஆப்பம் சுவை மிகுந்து இருக்கும்.
* மாங்காய்த்தொக்கு, இஞ்சித் தொக்கு என்று எதை செய்தாலும் அதில் கொஞ்சம் எலுமிச்சை சாறு பிழிந்தால் அந்த தொக்குகள் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
* முட்டைக்கோஸைத் துருவி நன்றாக வதக்கி, மிளகாய், உப்பு, புளியுடன் சேர்த்து அரைத்தால் சுவையான தேங்காய்த் துவையல்ரெடி.
* பூரிக்கிழங்கு செய்யும்போது அதில் பொட்டுக்கடலையுடன் சோம்பு சேர்த்து அரைத்து கலந்தால் சுவையாக இருக்கும்.
* இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஊற வைத்த அரிசியையும், உளுந்தையும் முப்பது நிமிடங்கள் பிரிட்ஜில் வைத்திருந்து அரைத்தால் மிக்சி சூடாவதை தவிர்க்கலாம்.
- பழத்துண்டுகளின் மீதும், ஐஸ்கிரீம்களின் மீதும் சீவிய இஞ்சியைத் தூவிச் சாப்பிட்டால் சுவை அதிகரிக்கும்.
- எந்த வகை கேசரி செய்தாலும், மூன்று டீஸ்பூன் தேங்காய்ப்பால் சேர்த்தால், அதன் சுவையே அலாதிதான்.
சமையல் டிப்ஸ் உங்களுக்காக...
* குருமா, சட்னி போன்றவற்றிற்கு அவசரமாக அரைக்கும் நேரத்தில் ஜார் சூடாகி விடும். இதைத் தவிர்க்க ஐஸ் வாட்டர் சேர்த்து அரைக்கலாம்.
* ஜாம், ஊறுகாய் பாட்டில்களின் மூடியைத் திறக்க கஷ்டமாக இருந்தால், கையில் கிளவுஸ் அணிந்து கொண்டால் எளிதாக திறந்து விடலாம்.
* பழத்துண்டுகளின் மீதும், ஐஸ்கிரீம்களின் மீதும் சீவிய இஞ்சியைத் தூவிச் சாப்பிட்டால் சுவை அதிகரிக்கும்.
* தேங்காய்க்கு பதில், வெங்காயத்துடன் பீர்க்கங்காயையும் வதக்கி அரைத்து சேர்த்தால் குழம்பு கெட்டியாகவும், சுவையாகவும் இருக்கும். இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்தும் கிடைக்கும்.
* சாம்பார், ரசம், கூட்டு போன்றவற்றைத் தயாரித்து முடித்து தாளிக்கும்போது கடுகு வெடித்துச் சிதறும். இதைத் தவிர்க்க வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சிறிது மஞ்சள் தூள் போட்டு பிறகு கடுகு தாளித்தால் வெடித்துச் சிதறாது.
* ஊறுகாய்களை வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை தயார் செய்து பிரிட்ஜில் வைத்து உபயோகித்தால் குறைந்த அளவு உப்பு சேர்த்தாலே போதும்.

* எலுமிச்சைப் பழங்கள் அதிகமாக இருந்தால், ஒவ்வொரு பழத்தையும் தனித்தனியாக டிஷ்யூ பேப்பரால் சுற்றி, எல்லாவற்றையும் சேர்த்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் அவை நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
* கரைத்த பஜ்ஜிமாவை மிக்ஸியில் அடித்து பஜ்ஜி போட்டால் பஜ்ஜியின் சுவையே அலாதி தான்.
* பருப்பு சாம்பாரை சீரகம் தாளித்து இறக்கும் முன்பு, சிறிதளவு புதினாவைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து இறக்கினால் சாம்பாரின் சுவை கூடும்.
* கடலைப்பருப்பு போளி செய்யும்போது, பொடித்த சர்க்கரையைச்சேர்த்தால் போளி நிறமாகவும், சுவையாகவும், மெல்லியதாகவும் இருக்கும்.
* இன்ஸ்டன்ட் மாவில் குலோப் ஜாமூன் செய்யப்போறீங்களா? மாவைக் கலக்கும்போது சிறிது வெண்ணெய் சேர்த்தால் ஜாமூன் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.
* எந்த வகை கேசரி செய்தாலும், மூன்று டீஸ்பூன் தேங்காய்ப்பால் சேர்த்தால், அதன் சுவையே அலாதிதான். ரவையை மாவாகத் திரித்து, அதில் வெல்லப்பாகு விட்டு, தேங்காய்த்துருவல் சேர்த்துப் பிசைந்து பிடித்து வேகவைத்தால் வித்தியாசமான, சுவையான கொழுக்கட்டை ரெடி.
* ரவா லட்டு செய்யும்போது அத்துடன் மிக்சியில் அவலையும் ரவைபோல் பொடித்து, நெய்யில் வறுத்துச் சேர்த்து, மூன்று டேபிள் ஸ்பூன் பால் பவுடரையும் கலந்து சுவையான ரவா லட்டு பிடிக்கலாம்.
* அரிசியையும், பருப்பையும் கலந்து வாசனை வரும் வரை வறுத்து, சர்க்கரைப் பொங்கல் செய்தால், பொங்கல் சீக்கிரமாக வெந்துவிடும். வாசனையாகவும் இருக்கும்.
* இனிப்பு பணியாரம் மிருதுவாக இருக்க, அரிசி மாவை ஒரு துணியில் கட்டி, இட்லிப்பாத்திரத்தில் வைத்து ஆவியில் ஐந்து நிமிடம் வேக வைத்து எடுத்து, நன்றாக அவித்த பிறகு பணியாரம் செய்தால் பஞ்சுபோல இருக்கும்.
* ஜவ்வரிசி பாயசம் செய்யும்போது இரண்டு டீஸ்பூன் வறுத்த கோதுமை மாவைப் பாலில் கரைத்து ஊற்றிச் செய்தால், பாயசம் கெட்டியாகவும், ருசியாகவும் இருக்கும்.
* பாயசம் செய்யும்போது, ஜவ்வரிசியை வெறும் வாணலியில் வறுத்துப் பின் நெய் சேர்த்து வறுத்தால் ஜவ்வரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்.
* தோல் சீவிய கேரட்டுகளை குக்கரில் வேக விட்டு கூழாக மசிக்கவும். பிறகு கடாயில் நெய் விட்டு சர்க்கரை மசித்த கலவையை சேர்த்து, கிளறினால் சுவையான அல்வா தயார்.
* எலுமிச்சைப்பழ ரசம் செய்வது போல நார்த்தங்காய் சாறு பிழிந்தும் ரசம் வைக்கலாம். வாய்க்கசப்பும் நீங்கி விடும்.
நாம் தினந்தோறும் அன்றாட வேலைகளை செய்ய நம்மை சுறுசுறுப்பாகவும், புத்துணர்வோடும் வைப்பதற்கு நம் உடலில் உள்ள சத்துகளின் நிலை முக்கிய பங்கு வகிக்கிறது.
அந்த வகையில், நம் உடலில் சத்து குறைபாடு ஏற்படுவதை தடுக்க நாம் உண்ணும் உணவில் தினமும் காய்கறிகளுடன் கீரை சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.
ஆம்.. அப்படி கீரைகளில் அதிக சத்து உள்ள பருப்பு கீரை பற்றி தான் இன்று பார்க்கப் போகிறோம்..!
கிராமங்களில் சாதாரணமாக வீட்டைச்சுற்றி பருப்பு கீரை வளர்ந்து கிடப்பதை பார்க்கலாம். இதற்கு கங்கா வள்ளி என்ற பெயரும் உண்டு. ஏராளமான சத்துக்கள் இந்த கீரையில் உள்ளன.
இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ஒமேகா-3 சத்தானது பருப்பு கீரையில் ஏராளம். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஒமேகா-3 தேவை. இது, ஆட்டிசம் போன்ற வளர்ச்சி குறைபாடுகளை தடுக்க உதவுகிறது. இது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைப்பதுடன், இதயத்தை சுற்றி படியும் கொழுப்பையும் தடுக்கிறது.
வைட்டமின்-ஏ சத்தும் இருப்பதால் தோல் எப்போதும் பொலிவுடன் இருக்கவும், சருமம் தொடர்பான பிரச்சினைகளை குணப்படுத்தவும், கண் பார்வை தெளிவாக இருக்கவும் இந்த கீரை உதவுகிறது.
வைட்டமின்-சி, இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம் போன்ற முக்கிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த கீரையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் தீரும். உடல் எடையை குறைக்கும் மற்றும் குடல் நோய்களை தடுக்கும் ஆற்றல் உள்ளது.
ஆஸ்டியோபோரோசிஸ், சொரியாசிஸ் போன்ற நோய்களுக்கு பருப்பு கீரை அருமருந்தாக உள்ளது, என்று நாட்டு மருத்துவ நூல்கள் கூறுகின்றன. எலும்புகள் மற்றும் தசைகளுக்கு வலிமை தரும் கால்சியமும் இந்த கீரையில் ஏராளம்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், நீண்ட நேரம் பசி உணர்வு இல்லாமல் தவிர்க்க இந்த கீரை உதவுகிறது. தமிழ்நாட்டில் சாதாரணமாக எங்கும் முளைத்து கிடக்கும் இந்த கீரை இந்த மண்ணின் பொக்கிஷம் என்றே உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்..!
- ஆலப்புழாவில் கிடைக்கும் மீன் உணவுகளின் சுவை, அங்கிருக்கும் இயற்கையின் அழகை விட ஒரு படி மேலானது!
- புளிக்கு பதில் மாங்காயின் புளிப்புச் சுவை சேர்க்கப்படுவது இதன் தனிச் சிறப்பு.
கேரள மாநிலத்தின் ஆலப்புழா அதாவது அலப்பி நகரம் என்றால் நம் நினைவுக்கு வருவது அதன் எழில் கொஞ்சும் படகு வீடுகளும், கால்வாய்களும்தான். ஆனால், அங்கே கிடைக்கும் மீன் உணவுகளின் சுவையோ, அந்த இயற்கையின் அழகை விட ஒரு படி மேலானது. குறிப்பாக, தேங்காய் பாலில் தயாரிக்கப்படும் ஆலப்புழா மீன் குழம்பு அதன் தனித்துவமான சுவைக்காகவே மிகவும் புகழ் பெற்றது. ஆப்பம், சாதம், இடியாப்பம் என எதனுடன் சேர்த்து சாப்பிட்டாலும் தனித்துவமான ருசி கொண்ட இந்த குழம்பு ரெசிபியை செஃப் கதிர்வேல் நமக்காக செய்து காட்டியுள்ளார். அந்த வகையில் இந்த தொகுப்பில் 'ஆலப்புழா மீன் குழம்பு' ரெசிபியை எப்படி செய்வது என விரிவாக காணலாம்.

ஆலப்புழா மீன் குழம்பு செய்முறை
* ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
* எண்ணெய் சூடானதும், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
* அடுப்பை சிம்மில் வைத்து, சிவப்பு மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை ஒரு நிமிடம் வதக்கவும். (மிளகாய் தூள் கருகிவிடாமல் பார்த்துக்கொள்ளவும்.)
* பிறகு நறுக்கிய மாங்காய் துண்டுகள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து, சிறிது வதக்கிய பின், சுத்தம் செய்த மீன் துண்டுகளை மெதுவாகச் சேர்க்கவும்.(எலுமிச்சை சாறு, சிறிதளவு உப்பு சேர்த்து சுத்தம் செய்த மீன்).
* மீன் மற்றும் மாங்காயை வேகவைக்க தேவையான தண்ணீரை ஊற்றி, குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, மீன் 10 நிமிடங்கள் வேகும்வரை மூடி வைக்கவும்.
* மீன் வெந்த பிறகு, அடுப்பை முற்றிலுமாக அணைத்துவிடமால் மிக மிகக் குறைந்த தீயில் வைத்து, திக்கான தேங்காய் பாலை சேர்க்கவும்.
* தேங்காய் பால் சேர்த்த பின் அதிகம் கொதிக்க விடக்கூடாது (அதிக நேரம் கொதித்தால் குழம்பு திரிந்து போக வாய்ப்புள்ளது). சுவையை சரி பார்த்து, உடனடியாக மூடி வைக்கவும்.
* இப்போது அட்டகாசமான ஆலப்புழா மீன் குழம்பு தயார்!

சுவையான, சத்து நிறைந்த ஆலப்புழா மீன்குழம்பு
ஆலப்புழாவின் உணவுச் சிறப்பு
* கேரளாவின் பல மீன் குழம்புகளில் கொடம் புளி எனப்படும் கருப்பு புளி பயன்படுத்தப்படும். ஆனால், இந்த ஆலப்புழா ஸ்டைலில், மாங்காயின் புளிப்புச் சுவை சேர்க்கப்படுவது இதன் தனிச் சிறப்பாகும்.
* இந்த குழம்புக்கு வஞ்சரம் அல்லது வவ்வால் மீன் பயன்படுத்துவது வழக்கம். இந்த மீனின் உறுதியான சதை, குழம்பில் உடையாமல், குழம்பின் சுவையை உள்வாங்கி சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
* இந்தக் குழம்பின் தனி சிறப்பே, தேங்காய் எண்ணெயின் நறுமணமும், தேங்காய் பாலின் தனித்துவமான சுவையும்தான். இது குழம்பிற்கு ஒரு அசல் கேரளச் சுவையை வழங்குகிறது.
உணவில் உள்ள நன்மைகள்
* மீன் ஒரு முழுமையான புரத மூலமாகும். இதில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்கள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி, அழற்சியை குறைக்கும் ஆற்றல் கொண்டது.
* மஞ்சள் தூள் ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
* தேங்காய் பாலில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இது உடலுக்கு ஆற்றலை வழங்கவும், சில வைட்டமின்களை (A, D, E, K) உறிஞ்சவும் உதவுகிறது.
* இதில் பயன்படுத்தப்படும் வெங்காயம் மற்றும் இஞ்சி செரிமானத்திற்கு மிகவும் உதவியாக இருக்கிறது. மேலும் உணவிற்கும் தனித்துவமான சுவையை கொடுக்கிறது.
இப்படி மீன், மாங்காய் மற்றும் தேங்காய் பாலின் ஆரோக்கியமான கலவையுடன் விரைவாகச் சமைக்கக்கூடிய இந்த அற்புதமான கேரள உணவை நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்
- சர்க்கரைக்கு பதில் பனங்கற்கண்டு போட்டு ஆரோக்கியமான பாயாசம் செய்யலாம்!
- பால், நட்ஸ்கள் சேர்க்கப்படுவதால், புரதம், கால்சியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உடலுக்குக் கிடைக்கும்.
நம்ம ஊர் திருவிழாக்களிலும், விருந்துகளிலும், விசேஷ நாட்களிலும் தவறாமல் இடம் பிடிக்கும் ஓர் இனிப்பு பலகாரம் என்றால் அது பாயாசம் தான். அதிலும், பால் பாயாசத்தின் தனித்துவமான சுவையும், கிரீமிப் பதமும் யாருக்குத்தான் பிடிக்காது? சமைப்பதற்கு எளிதான அதேவேளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கட்டிப்போடும் இந்த பால் பாயாசத்தை, பாரம்பரிய முறையிலும் ஆரோக்கியமான மாற்றுகளுடனும் தயாரிக்கும் செய்முறையை சமையல் கலைஞர் வனிதா நமக்காக செய்து காட்டியுள்ளார். பொதுவாக, பாயாசம் என்றால் அதில் சர்க்கரையின் பங்கு அதிகம் இருக்கும் என்ற எண்ணம் உண்டு. ஆனால், இங்கு நாம் பார்க்கப் போகும் செய்முறையில், வெள்ளைச் சர்க்கரையைத் தவிர்த்து, ஆரோக்கியம் நிறைந்த பனங்கற்கண்டு சேர்த்து, கூடுதல் நன்மையுடன் சுவையான பால் பாயாசம் எப்படித் தயாரிப்பது என்று பார்க்கலாம்.

கிரீமி பால் பாயாசம் செய்முறை
* அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, 4 கப் கொழுப்புடன் கூடிய பாலைச் சேர்க்கவும்.
* பால் ஊற்றியவுடன் லேசாக ஒருமுறை மட்டும் கிண்டி விடவும். இது அடி பிடிக்காமல் இருக்க உதவும். அதேவேளை பாலில் ஒரு துளிகூட தண்ணீர் சேர்க்கக்கூடாது. இதுவே பாயாசத்துக்குக் கெட்டியான, கிரீமி சுவையைக் கொடுக்கும்.
* பால் கொதித்து நுரைத்து பொங்கும் தருவாயில், சுவையைச் சமநிலைப்படுத்த ஒரு சிட்டிகை உப்பைச் சேர்க்கவும்.
* பால் கொதித்துக் கொண்டு இருக்கும்போது, 4 ஸ்பூன் பால் பவுடருடன் கொஞ்சம் பாலைக் கலந்து, கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
* பிறகு வறுத்து வைத்திருக்கும் 4 ஸ்பூன் சேமியாவைக் கொதிக்கும் பாலில் சேர்க்கவும். சேமியா சேர்த்த உடனேயே, 1 ஸ்பூன் நெய்யைச் சேர்க்கவும். இது சேமியா ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல், கட்டி முட்டியாகாமல் இருக்க உதவும்.
* இந்த நேரம் கரைத்து வைத்த பால் பவுடர் கலவையையும், 1 ஸ்பூன் கண்டென்ஸ்டு மில்க்கையும் (மில்க் மேட்) பாலில் ஊற்றி நன்றாகக் கலக்கவும்.
* இப்போது பாதாம், பிஸ்தா, முந்திரி உள்ளிட்ட நட்ஸ் வகைகளைச் சேர்க்கவும். இந்த பாயாசத்திற்கு நட்ஸ்களை வறுக்கத் தேவையில்லை.
* கலவை கொதி வந்த பிறகு, அடுப்பைச் சிம்மில் வைத்து, குறைந்தது 10 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும். அப்போதுதான் சேமியா முழுமையாக வெந்து பால் பவுடர், கண்டென்ஸ் மில்க் ஆகியவை நன்கு கிரீமியாக மாறும்.
* சேமியா நன்றாக வெந்து, பால் திக்கான பிறகு, பொடித்து சலித்து வைத்த 4 ஸ்பூன் பனங்கற்கண்டு தூளைச் சேர்க்கவும். (சேமியா வேகும் முன் சர்க்கரை சேர்த்தால், சேமியா வேகாமல் போக வாய்ப்புள்ளது)
* பனங்கற்கண்டு சேர்த்த பிறகு, ஏலக்காய்த்தூளைச் சேர்க்கவும். பின் இனிப்பு நன்கு கரைந்து, பாயாசம் இன்னும் 10 நிமிடங்கள் கொதித்து கிரீமியாக, திக்கான பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
இப்போது கிரீமியான, சுவையான பால் பாயாசம் தயார்!

பரிமாற தயார் நிலையில் கிரீமி பால் பாயாசம்
பால் பாயாசத்தின் நன்மைகள்
* இந்தப் பால் பாயாசத்தில் ஆரோக்கியமான பனங்கற்கண்டு சேர்க்கப்பட்டுள்ளது. இது வெள்ளை சர்க்கரையை விட சிறந்த ஆரோக்கிய மாற்று. இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. மேலும், இது உடலைக் குளிர்ச்சிப்படுத்தவும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
* பால் மற்றும் நட்ஸ்கள் சேர்க்கப்படுவதால், புரதம், கால்சியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உடலுக்குக் கிடைக்கின்றன.
* இது ஒரு சிறந்த ஆற்றல் மூலமாகும். விசேஷ நாட்களில் உடனடியாகப் புத்துணர்ச்சி அளிக்க உதவுகிறது.
* இனிப்புச் சுவை இயற்கையாகவே மனதிற்கு மகிழ்ச்சியையும், ஆறுதலையும் தரக்கூடியது.
இந்த கிரமி பால் பாயாசம், சுவைக்காக மட்டும் அல்லாமல், ஆரோக்கியமான நன்மைகளையும் கொண்டுள்ளதால், இந்த இனிய உணவைத் தயாரித்து உங்கள் வீட்டில் உள்ளவர்களை மட்டும் அல்ல விருந்தினர்களையும் அசத்துங்கள்!
- உயர்தரப் புரதத்தின் சிறந்த சைவ மூலமாக பனீர் உள்ளது.
- 'மீன் பொளிச்சது' பாணியில், சைவப் பிரியர்களுக்காக பிரத்யேகமாக செய்யப்படுவதுதான் 'பனீர் பொளிச்சது'.
இந்திய சைவ உணவுகளில், பனீரின் முக்கியத்துவத்தை யாராலும் மறுக்க முடியாது. புரதச்சத்தின் இருப்பிடமான இந்தப் பாலாடைக்கட்டி, பலவகை குழம்புகள் மற்றும் வறுவல்களில் சுவையைக் கூட்டுகிறது. அந்த வரிசையில் கேரளாவின் பிரபலமான 'மீன் பொளிச்சது' பாணியில், சைவப் பிரியர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்படுவதுதான் 'பனீர் பொளிச்சது' என்கிற வித்யாசமான சைவ உணவு. வாழை இலையின் தனித்துவமான நறுமணம், சின்ன வெங்காயம் மற்றும் பாரம்பரிய மசாலாப் பொருட்களின் கலவையில், பனீர் மென்மையாக வேகவைக்கப்பட்டுப் பரிமாறப்படும் இந்த உணவு, சுவை மற்றும் ஆரோக்கியத்தின் சரியான கலவையாகும். 'பனீர் பொளிச்சது' செய்முறையை, பிரபல செஃப் கதிர்வேல் நமக்காக செய்து காட்டியுள்ளார்.

மசாலா தயாரித்தல்
* ஒரு தவாவில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உடைத்த உளுந்து, வெந்தயம் சேர்த்து வெடிக்க விடவும். வெடித்ததும், நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து, பொன்னிறமாக மாறாமல் ஓரளவுக்கு வேக வைக்கவும்.
* நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து, சீக்கிரம் வதங்க உப்பு சேர்த்து, மூடிபோட்டு 30-40 வினாடிகள் வேக வைக்கவும். சின்ன வெங்காயம் வதங்கியதும், 2 டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து, மசாலா பைண்டிங் கன்சிஸ்டன்சிக்கு வர நன்கு கிளறவும்.
* இந்த நிலையில், நறுக்கிய கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். கருவேப்பிலையை முழுதாகப் போடாமல் நறுக்கிச் சேர்ப்பது நல்லது.
* பிறகு தனியா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, ஒரு எலுமிச்சம்பழம் பிழிந்து மசாலாவை மீண்டும் மூடிபோட்டு 30 வினாடிகள் வேக வைக்கவும்.
* மசாலா ரெடி ஆனதும், அடுப்பை அணைத்து, சிறிது சூடு ஆறிய பிறகு, வாசனைக்காக ஒரு சிட்டிகை சீரகப்பொடி மற்றும் காரத்துக்காக ஒரு சிட்டிகை மிளகுப் பொடி சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
பனீர் பொளிச்சது செய்முறை
* வாழை இலையைச் சுத்தம் செய்து, இலையின் மேல் சிறிதளவு ஏற்கனவே நாம் தயாரித்து வைத்துள்ள மசாலாவைத் தடவவும்.
* பிறகு வாழை இலையின் மேல், 2 மி.மீ தடிமனில் நறுக்கிய பனீர் துண்டை வைத்து, அதன் இருபுறமும் மசாலாவை மீண்டும் நன்றாகத் தடவவும்.
* மசாலா தடவிய பனீரை வாழை இலையில் வைத்துப் பொட்டலமாகச் சுற்றவும்.
* பிறகு ஒரு தவா அல்லது தோசைக் கல்லைச் சூடாக்கி, அதில் சற்றே எண்ணெய் விட்டு, வாழை இலையால் சுற்றப்பட்ட பனீரை வேக வைக்கவும்.
* மடிப்புப் பகுதி முதலில் கீழே இருக்கும்படி வைத்து, இலை ஒட்டிப் பிடிப்பதற்காக, மூடி போட்டு ஒரு பக்கம் 2 நிமிடங்கள் வேக வைக்கவும்.
* பின்பு திருப்பிப் போட்டு, அடுத்த பக்கமும் 2 நிமிடங்கள் வேக வைக்கவும். இப்போது வாழை இலை கிரிஸ்பியாக மாறி பனீர் பொளிச்சது தயாராகி விடும்.
* பனீர் பொளிச்சதைச் சூடாகப் பரிமாறவும். வாழை இலையைத் திறந்து சாப்பிடும் போது வரும் வாசம் கூடுதல் சுவையைக் கொடுக்கும். கூடவே, ஆனியன் ரிங்ஸ் மற்றும் தேவைப்பட்டால் எலுமிச்சை சாறு சேர்த்துச் சாப்பிடலாம்.

ப்ளேட்டிங் செய்யப்பட்டுள்ள பனீர் பொளிச்சது
ஆரோக்கிய நன்மைகள்
* பனீர் உயர்தரப் புரதத்தின் சிறந்த சைவ மூலமாகும். தசை வளர்ச்சி, திசுக்கள் பழுது பார்த்தல் மற்றும் ஒட்டுமொத்த உடல் பராமரிப்புக்கு இது சிறந்தது. குறிப்பாக இதில் கால்சியம் நிறைந்துள்ளதால், எலும்புகள் மற்றும் பற்களுக்கு வலு சேர்க்கும். மேலும், இது பசியைக் குறைத்து, உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் இதில் உள்ளதாகவும் அறியப்படுகிறது.
* சின்ன வெங்காயத்தில் உள்ள சத்துக்கள் இதயம் மற்றும் நோயெதிர்ப்புச் சக்திக்கு நன்மை பயக்கும். இது உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பை வழங்குவதோடு, மூளையின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லது. குறிப்பாக தக்காளி சேர்க்காமல் சின்ன வெங்காயத்தை மட்டும் பயன்படுத்துவது இந்த உணவின் பாரம்பரிய முறையையும், ஆரோக்கியத்தையும் கூட்டுகிறது.
* வாழை இலையில் சமைத்துச் சாப்பிடும்போது, அதில் உள்ள பாலிஃபீனால் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உணவில் கலந்து, அதன் மூலம் ஆரோக்கியப் பலன்கள் கிடைப்பதாக நம்பப்படுகிறது. மேலும், இலையின் வாசம் உணவுக்குச் சிறந்த நறுமணத்தையும் சுவையையும் சேர்க்கிறது.
இந்த சுவையான மற்றும் ஆரோக்கியமான 'பனீர் பொளிச்சது' நிச்சயம் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு, குறிப்பாகக் குழந்தைகளுக்கு பிடித்தமான ஒரு உணவாக அமையும்.
- பன்னீரை கடையில் வாங்காமல், வீட்டில் நாமே செய்தால் கலாகண்ட் நன்றாக வரும்.
- 1947-ல் பாபா தாக்கூர் தாஸ் என்பவரால் கலாகண்ட் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்!
தீபாவளிக்கு முறுக்கு, அதிரசம், குலாப் ஜாமூன், லட்டு என எண்ணெய் பலகாரங்கள் நிறைய செய்திருப்போம், சாப்பிடிருப்போம். ஆனால் பலரும் இந்தியாவின் பிரபலமான இந்த இனிப்பை மறந்திருப்போம். அப்படி தீபாவளிக்கு கலாகண்ட் செய்ய மறந்தவர்களுக்கான பதிவுதான் இது. சுவையான கலாகண்ட் செய்வது எப்படி என பார்ப்போம். கலாகண்ட் செய்வதற்கு பால், பன்னீர், நெய், சர்க்கரை, ஏலக்காய் உள்ளிட்டவை அவசியம். இதில் பன்னீரை கடையில் வாங்கமல், வீட்டில் இருக்கும் பாலை வைத்து நாமே செய்தால் கலாகண்ட் நன்றாக வரும்.
தேவையான பொருட்கள்...
பால் - 1 லிட்டர்
நெய் - 1/2 கப்
சர்க்கரை - 1 கப்
குங்குமப்பூ - (வேண்டுமென்றால்)
ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
பிஸ்தா - (வேண்டுமென்றால்)
பாதாம் - (வேண்டுமென்றால்)
எலுமிச்சை பழச்சாறு - 1 பழம்

ருசிக்க தயாராக கலாகண்ட் இனிப்பு
செய்முறை
முதலில் பன்னீர் செய்வது எப்படி என பார்ப்போம். பன்னீர் செய்வதற்கு 500மிலி பால் எடுத்துக்கொள்வோம். பாலை நன்கு காய்ச்சவேண்டும். பால் நன்கு கொதித்தபின்பு, அதில் ஒரு எலுமிச்சைப்பழத்தை பிழிந்து விடவேண்டும். பால் முழுவதுமாக திரிந்து வரும்வரையில் அடுப்பை நிறுத்தவேண்டாம். பின்னர் தண்ணீர் தனியாக பிரிந்த உடன், அதனை எடுத்து வடிகட்டி கொள்ளலாம். பின்னர் பன்னீர் மீது தண்ணீர் ஊற்றவேண்டும். அப்போதுதான் பன்னீரில் எலுமிச்சைப் பழத்தின் புளிப்பு தெரியாது.
பின்னர் ஒரு லிட்டர் பால் எடுத்துக்கொண்டு, அதனை நன்கு கொதிக்கவிடவேண்டும். கொதிக்கும்போது கிண்டிவிட்டுக்கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் பாத்திரத்தில் அடிபிடிக்காது. பால் நன்கு வற்றி, க்ரீம் பதத்திற்கு வரும்வரை கிண்டவேண்டும். இந்தப்பதம் வரும்போதே பாலில், செய்துவைத்த பன்னீரை எடுத்துக்கொட்டி கிண்டுங்கள். தொடர்ந்து கிண்டியபிறகு பாலில் உள்ள ஈரம் வற்றியபிறகு, அதில் அரை கப் நெய் ஊற்றவேண்டும். நெய் ஊற்றி 5 நிமிடம் நன்றாக கிண்டியபின், 1 கப் வெள்ளை சர்க்கரையை சேர்க்கவேண்டும். இனிப்பு கூடுதலாக வேண்டுமென்றால், கூடுதல் சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்.
கடைசியில் ஏலக்காய்தூள் போட்டு கிண்டவேண்டும். பின்னர் கலாகண்ட் நன்கு கெட்டி பதத்திற்கு வந்தபின் இறக்கிக்கொள்ளலாம். நன்கு நிறம்வேண்டும் என்பவர்கள் கூடுதல் நேரம்வைத்து கிண்டலாம். பின்னர் ஒரு பாத்திரத்தில் நெய்தடவி, கலாகண்ட் கலவை சூடாக இருக்கும்போதே அதனை கொட்டி அழுத்திவிடவேண்டும். வேண்டுமானால் அதன்மேல் முந்திரி, பாதாம், என உங்களுக்கு பிடித்த பருப்பு வகைகளை சேர்த்துக்கொள்ளலாம். ஒரு இரண்டுமணிநேரம் கழித்து கலாகண்ட் கலவையை எடுத்துப்பார்த்தால் நன்கு ஆறி, கெட்டியாக இருக்கும். அருமையான கலாகண்ட் இனிப்பு தயார்.
- சீன, மேற்கத்திய சமையல் முறைகளின் கலவையில் பிறந்த உணவுதான் 'பட்டர் கார்லிக் பிரான்'!
- இறாலை நீண்ட நேரம் வேகவைத்தால் ரப்பர் போன்று இறுகிவிடும் என்பதால் கவனமாக சமையுங்கள்!
சமையல் என்பது ஒரு கலை. அதுவும் புதுப்புது உணவு கலவைகளை உருவாக்கி, சுவைகளில் புரட்சி செய்வதென்பது ஒரு அசாத்தியமான திறன். அப்படி, சீன, மேற்கத்திய சமையல் முறைகளின் கலவையில் பிறந்த ஒரு உணவுதான் 'பட்டர் கார்லிக் பிரான்' (Butter Garlic Prawn). உணவகங்களில் மட்டுமே கிடைத்துவந்த இந்த சுவையான இறாலை, வீட்டிலேயே எளிதாகவும், குழந்தைகள் விரும்பும் வகையிலும் எப்படிச் செய்வது என்பதை ஃபரோஸ் ஹோட்டலின் செஃப் தியாகு செய்து காட்டுகிறார்.
செய்முறை
* முதலில் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சூடாக்கவும்.
* வாணலி சூடானதும், வெண்ணெயைச் சேர்த்து உருக விடவும். வெண்ணெய் அதிகம் சேர்த்தால் சுவை இன்னும் சிறப்பாக இருக்கும்.
* வெண்ணெய் உருகியதும், பொடியாக நறுக்கிய பூண்டுத் துண்டுகளைச் சேர்க்கவும். வெண்ணெய் மற்றும் பூண்டின் கலவை சேர்ந்து சமைக்கும்போது, சுவை பல மடங்கு அதிகரிக்கும்.
* பூண்டு பொன்னிறமாக வந்தவுடன், முழு சின்ன வெங்காயம் மற்றும் நறுக்கிய குடைமிளகாயைச் சேர்த்து வதக்க வேண்டும். வெண்ணெயில் சமைக்கும்போது அடுப்பின் தீயைக் குறைத்துக்கொள்வது முக்கியம், இல்லையென்றால் வெண்ணெய் கருகிவிடும்.
* இப்போது சுத்தம் செய்து வைத்திருக்கும் இறால்களைச் சேர்க்கவும். இறால்களைச் சேர்த்த உடனேயே, தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்கு கிளறவும். உப்பு சேர்த்த பின்னர்தான் இறால், சுவையை நன்கு உறிஞ்சும்.
* காரத்துக்கு மிளகாய் தூளைச் சேர்க்கவும். இந்த உணவு தயாராக 5 முதல் 10 நிமிடங்களே ஆகும். இறாலை நீண்ட நேரம் சமைத்தால் ரப்பர் போன்று இறுகிவிடும் என்பதால் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* இப்போது சிறிதளவு தண்ணீர் சேர்த்து, அதனுடன் சோயா சாஸ் மற்றும் கூடுதல் காரத்துக்குத் தேவையான மிளகாய் தூளையும் சேர்க்கவும். வெண்ணெய் மற்றும் பூண்டுடன் சேர்ந்து சோயா சாஸ் ஒரு அற்புதமான குழம்புப் பக்குவத்தைக் கொடுக்கும்.
* இறுதியாக, பொடியாக நறுக்கிய வெங்காயத் தாளைத் தூவி அடுப்பை அணைக்கவும். இது உணவின் சுவையை மேலும் அதிகரிக்கும்.
இந்த உணவில் உள்ள நன்மைகள்
* இறாலில் புரதம் அதிக அளவில் உள்ளது. இது உடலின் திசுக்கள் மற்றும் தசைகளின் வளர்ச்சிக்கு அவசியமானது. மேலும், இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளை மற்றும் கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது இதய நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுகிறது.
* பூண்டு ஒரு இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவு. இதில் உள்ள அல்லிசின் என்ற கலவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. இது செரிமானத்திற்கும் துணைபுரிகிறது.
* வெங்காயத்தில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதில் உள்ள குவெர்செடின் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட், உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. இது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
இப்படி ஆரோக்கியமான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் 'பட்டர் கார்லிக் பிரான்', சுவையுடன் சேர்த்து உங்கள் உடலுக்கும் பல நன்மைகளை வழங்குகிறது. அதோடு இன்றைய வேகமான உலகில், வெளியில் கிடைக்கும் ஆரோக்கியமற்ற உணவுகளை தேடிச் செல்வதற்குப் பதிலாக, உணவகங்களில் சாப்பிடும் அதே சுவையை வீட்டிலேயே அனுபவிக்க இந்த ரெசிபி சிறந்த தேர்வாக இருக்கும். இது குடும்பத்தினருக்கும், குறிப்பாக குழந்தைகளுக்கும் பிடித்தமான ஒரு உணவாக நிச்சயம் அமையும். இதை நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சி செய்து சுவைத்து மகிழுங்கள்.
- ஆரோக்கியத்தையும், சுவையையும் விரும்பும் அசைவப் பிரியர்களுக்கான ஸ்பெஷல் டிஷ்!
- கறிவேப்பிலைப் பொடியை, சிக்கன் முழுமையாக வெந்த பிறகு கடைசியில் சேர்க்க வேண்டும்.
சிக்கன் பிரியர்களுக்காகவே தனித்துவமான சுவையுடன், ஆரோக்கியம் நிறைந்த ஓர் உணவுதான் ''கறிவேப்பிலை சிக்கன் ரோஸ்ட்''. கலப்படமற்ற, இயற்கையான சுவையுடன் கூடிய உணவுகளை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வு. வழக்கமான சிக்கன் உணவுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, இதன் தனித்துவமான மணமும், கறிவேப்பிலையின் ஆரோக்கியமும் இணைந்து ஒரு புதுமையான சுவையை வழங்குகிறது. ஆரோக்கியத்தையும், சுவையையும் விரும்பும் அசைவப் பிரியர்களுக்கென்றே பிரத்யேகமான இந்த உணவை, செயற்கை நிறமூட்டிகள் இல்லாமல், முற்றிலும் இயற்கையான முறையில் ஃபெரோஸ் ஹோட்டலின் செஃப் சாந்தம் செய்து காட்டுகிறார்.
கறிவேப்பிலை கோழி ரோஸ்ட் செய்முறை
* முதலில் கறிவேப்பிலை மசாலாவைத் தயார் செய்ய வேண்டும். ஒரு வாணலியில் சிறிது உளுந்தை வறுக்கவும். பின்னர், அதே வாணலியில் கறிவேப்பிலையைச் சேர்த்து, அதன் நிறம் மாறாமல் மொறுமொறுப்பாகும்வரை வறுத்து எடுக்கவும். அதனை ஆறவைத்த பிறகு, மிக்ஸியில் போட்டுப் பொடி செய்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
* அடுத்து சமைக்கத் தொடங்குவோம். ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சோம்பு மற்றும் வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும்.
* தாளித்ததும், காய்ந்த மிளகாயை இரண்டாகக் கிள்ளிப் போடவும். பிறகு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
* இஞ்சி பூண்டு விழுது மற்றும் கீறிய பச்சை மிளகாயைச் சேர்த்து நன்றாக வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனதும், சுத்தம் செய்து வைத்திருக்கும் எலும்பு இல்லாத சிக்கன் துண்டுகளைச் சேர்க்கவும்.
* சிக்கன் துண்டுகளை நன்றாக வதக்கி, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, மூடி போட்டு வேகவிடவும். சிக்கன் முழுமையாக வெந்த பிறகு, தண்ணீர் வற்றி, எண்ணெய் தனியாகப் பிரியும்.
* இந்த சமயத்தில், நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் கறிவேப்பிலை பொடியைச் சேர்த்து, சிக்கனுடன் நன்றாகக் கலக்கவும். பொடியை சேர்த்தவுடன் அதிக நேரம் வேகவிட வேண்டாம். வெகு நேரம் வேகவிட்டால், கறிவேப்பிலையின் நிறம் மாறி கருப்பாகிவிடும்.
* கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையைத் தூவி இறக்கவும்.
சிறப்பு குறிப்பு: கறிவேப்பிலைப் பொடியை, சிக்கன் முழுமையாக வெந்த பிறகு கடைசியில்தான் சேர்க்க வேண்டும். முதலில் சேர்த்தால், சமைக்கும்போது கறிவேப்பிலையின் நிறம் மாறிவிடும்.
- வழக்கமான மீன் வறுவலை விட முற்றிலும் மாறுபட்ட மீன் சமையல்!
- செட்டிநாடு உணவுக்கு சின்ன வெங்காயம் தனிச்சுவை தரும்.
செட்டிநாடு சமையல் தனித்துவமான நறுமணமும், காரசாரமான சுவையும் கொண்ட உணவுகளுக்குப் பெயர் போனது. அந்த சிறப்பு மிக்க பட்டியலில், செட்டிநாடு ஸ்டைல் மீன் பூண்டு வறுவல் ஒரு தனி இடத்தைப் பிடிக்கிறது. இது வழக்கமான மீன் வறுவலை விட முற்றிலும் மாறுபட்டு, பூண்டின் தனித்துவமான சுவையையும், அற்புதமான வாசனையையும் தாங்கி நிற்பதால், இதனைச் சுவைப்பவர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை தரும். சாதத்துக்குத் துணையாகவோ அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவோ பரிமாற ஏற்ற இந்த உணவு, சுவை மிகுந்தது மட்டுமல்லாமல் ஆரோக்கியமானதும்கூட. இந்த ரெசிபியை நமக்கு செய்துகாட்டுகிறார் ஃபெரோஸ் ஹோட்டலின் செஃப் சதீஷ் தாமு.

செய்முறை
* முள் இல்லாத மீனை 65 மசாலா சேர்த்து நன்றாக ஊற வைத்து பொரித்து எடுத்து வைக்கவும். (பொரித்த மீனை கையால் லேசாக மசிக்கவும்.)
* ஒரு கனமான கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
* எண்ணெய் சூடானதும், முதலில் சோம்பு சேர்த்து பொரிய விடவும். சோம்பு நல்ல மணம் வந்ததும், கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.
* பிறகு, குண்டு வரமிளகாயை சேர்த்து வறுக்கவும்.
* அடுத்ததாக, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். செட்டிநாடு உணவுக்கு சின்ன வெங்காயம் தனிச்சுவை தரும். வெங்காயம் நல்ல பொன்னிறமாக வரும்வரை வதக்க வேண்டும்.
* வெங்காயம் வதங்கியதும், நசுக்கி வைத்த பூண்டை போட்டு, அதன் பச்சை வாசனை போகும்வரை நன்றாக வறுக்கவும். இந்த டிஷ்ஷுக்கு பூண்டின் சுவை மிக முக்கியம். நல்ல பிரவுன் கலராகும்வரை பூண்டை வறுக்க வேண்டும்.
* வதக்கிய பூண்டு மற்றும் வெங்காய கலவையில், மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
* அடுப்பை குறைத்து வைத்து, மிளகாய் தூள், சீரகத் தூள், தனியா தூள், சோம்புத் தூள், சுவைக்காக செட்டிநாடு மசாலா ஆகியவற்றைச் சேர்க்கவும்.
* இந்த மசாலாக்கள் எண்ணெயிலேயே ஸ்லோ குக் (மெதுவாக வறுக்கப்படுவது) ஆகி, நல்ல மணம் வரும் வரை கிளறவும்.
* சிறிது உப்பு சேர்த்து கிளறவும்.
* மசாலா வேக, சிறிதளவு தண்ணீர் மட்டும் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். மசாலா பச்சை வாசனை நீங்கி, நன்கு குக் ஆனதும் அடுத்த கட்டத்திற்கு செல்லலாம்.
* மசாலா தயாரானதும், முன்னரே பொரித்து, மசித்து வைத்த மீன் துண்டுகளை அதில் சேர்த்து, மசாலா, மீன் துண்டுகளுடன் நன்றாகக் கலக்கும்படி மெதுவாக புரட்டவும்.
* இறுதியில், தேங்காய்த் தூளைச் சிறிதளவு தூவி, மீண்டும் ஒருமுறை கிளறி இறக்கினால், செட்டிநாடு ஸ்டைல் மீன் பூண்டு வறுவல் தயார்.
* கொத்தமல்லித் தழை, வறுத்த சின்ன வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் குண்டு மிளகாய் ஆகியவற்றால் அலங்கரித்துப் பரிமாறவும்.

ப்ளேட்டிங் செய்யப்பட்டுள்ள மீன் பூண்டு வறுவல்
ஆரோக்கிய நன்மைகள்
1. மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடலின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகின்றன.
2. மீனில் உள்ள வைட்டமின் D மற்றும் செலினியம் போன்ற சத்துக்கள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகின்றன.
3. இந்த உணவில் பூண்டு அதிக அளவில் சேர்க்கப்படுவதால், செரிமானத்தை மேம்படுத்துவதுடன், பூண்டில் உள்ள சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கின்றன.
4. செட்டிநாடு சமையலில் பயன்படுத்தப்படும் சின்ன வெங்காயம் உடலுக்கு ஆரோக்கியம் தருவதுடன், உணவுக்கு நல்ல சுவையையும் தரும்.
- பாகு சூடாக இருக்கும்வரை லட்டு பிடிக்கக்கூடாது.
- 10 - 15 நாட்கள்வரை ரவா லட்டுவை வைத்து சாப்பிடலாம்.
அரைமணி நேரத்தில் ஈஸியாக செய்யக்கூடிய தீபாவளி பலகாரம் குறித்துதான் பார்க்கப் போகிறோம். அது வேறு ஒன்றும் இல்லை, ரவா லட்டுதான். பலரும் ரவா லட்டு செய்ய ஜவ்வரிசி, கடலை, பால் பயன்படுத்துவார்கள். ஆனால் இவை எதுவும் இல்லாமல், அரைமணி நேரத்தில் எளிமையான, இரண்டு வாரத்திற்கு வைத்து சாப்பிடக்கூடிய ரவா லட்டு செய்வது எப்படி என பார்ப்போம்.

முதலில் கடாயில் நெய்யை ஊற்றி, அது லேசாக சூடானவுடன் முந்திரி மற்றும் திராட்சையை சேர்க்கவேண்டும். முந்திரி, திராட்சை பொரிந்தவுடன் அதனை தனியாக எடுத்து வைக்காமல், அதிலேயே ரவையை கொட்டி வறுக்கவேண்டும். நீண்டநேரம் ரவையை வறுக்கக்கூடாது. பொன் நிறம் வந்தவுடன் எடுத்துவிடவேண்டும். அதன்பிறகு சர்க்கரை பாகு காய்ச்ச வேண்டும். அரைகிலோ சர்க்கரை என்றால் அதில் முக்கால் பங்கு தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் ரவா லட்டுக்கு பாகு கெட்டியாக இருந்தால்தான் நன்றாக இருக்கும். ஒருவேளை சர்க்கரையில் அழுக்கு இருந்தால் பாகு கொதிக்கும்போது அதில் கொஞ்சம் பால்சேர்த்து கொள்ளுங்கள். அப்போது அழுக்கு முழுவதும் மேலே வந்துவிடும். அதனை நாம் எடுத்துவிட்டால் பாகு சுத்தமாகிவிடும். பின்னர் குலாப் ஜாமுனுக்கு எப்படி பாகு பதம் எடுப்போமோ, அதைவிட கொஞ்சம் கெட்டியாக வரும்வரை பாகை கொதிக்கவைக்க வேண்டும். பாகு, பதத்திற்கு வந்தபின் அதனை இறக்கி, வறுத்து வைத்துள்ள ரவையில் ஊற்றி கிளறிவிட வேண்டும். பாகை முழுவதும் ஊற்றியபின் அதில் ஏலக்காய் தூளை சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் அந்த கலவையை லட்டு வடிவத்தில் பிடிக்கவேண்டும். பாகு சூடாக இருக்கும்வரை லட்டு பிடிக்கக்கூடாது. சூடாக லட்டு பிடித்தால், ஆறியவுடன் அது கடினமாகிவிடும். அதற்காக மிகவும் ஆறவிட்டும் லட்டு பிடிக்கக்கூடாது. மிதமான சூட்டில் ரவை லட்டுவை பிடிக்கவேண்டும். அவ்வளவுதான் எளிமையான ரவா லட்டு ரெடி. இதனை தாராளமாக 10 - 15 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.
- எத்தனை இனிப்பு வகைகள் இருந்தாலும் கடித்துக்கொள்ள முறுக்கு வேண்டும்!
- நல்ல எண்ணெயில் சுட்டால் முறுக்கை 2 மாதத்திற்குக் கூட வைத்து சாப்பிடலாம்.
தீபாவளி நெருங்கிவிட்டது. அனைவரது வீட்டிலும் அதிரசம், முறுக்கு உள்ளிட்ட பலகாரங்கள் சுடும் வாசம் வீசத்தொடங்கியிருக்கும். நாம் எத்தனை இனிப்பு வகைகள் சாப்பிட்டிருந்தாலும், அத்துடன் கடித்துக்கொள்ள முறுக்கு வேண்டும் என நாவின் சவை அரும்புகள் கேட்கும். அப்படிப்பட்ட முறுக்கில் பலவகைகள் உள்ளன. வெவ்வேறு பொருட்களை பயன்படுத்தி முறுக்கு சுடலாம். அந்தவகையில் பாசிப்பருப்பு முறுக்கு எப்படி சுடலாம் என பார்ப்போம்.

செய்முறை
பாசிப்பருப்பு முறுக்கு சுடுவதற்கு அரை கப் வெள்ளை உளுந்து, கால் கப் பாசிப்பருப்பு எடுத்துக்கொள்ளுங்கள். இவை இரண்டையும் சேர்த்து நன்றாக கழுவ வேண்டும். பின்னர் இவை இரண்டையும் பத்து நிமிடம் தண்ணீரில் ஊறவைத்துவிட்டு, அவை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேகவைக்க வேண்டும். நன்றாக வெந்ததும், சிறிதுநேரம் ஆறவிடவேண்டும். பின்னர் தண்ணீர் இல்லாமல் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். கூடவே 4 கப் அரிசிமாவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் அரைத்த பாசிப்பருப்பு கலவை, கருப்பு எள் அல்லது வெள்ளை எள், கொஞ்சமாக உப்பு மற்றும் மிதமான சூட்டில் 2 கரண்டி எண்ணெய் சேர்க்கவேண்டும். எந்த எண்ணெய் வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். அப்படி எண்ணெய் வேண்டாம் என நினைப்பவர்கள் நெய் அல்லது வெண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் பெருங்காயத்தூளையும் இதனுடன் சேர்த்துக்கொள்ளலாம்.
அனைத்தையும் ஒன்றாக கலந்து பிசைந்துக்கொள்ள வேண்டும். மாவு கெட்டியாக இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். அதிகமாக ஊற்றிவிடக்கூடாது. மாவு கெட்டியாக இல்லாமல் நல்ல மென்மையான பதத்தில் இருக்கவேண்டும். அப்போதுதான் முறுக்கு நன்றாக வரும். மொறுமொறுவெனவும் இருக்கும். அந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து முறுக்கு உரலில் நிரப்பவேண்டும். பின்னர் வாழை இலை அல்லது தட்டு எடுத்து, அதில் கொஞ்சம் எண்ணெய் அல்லது நெய்தடவி அதன்மீது உங்களுக்கு என்ன வடிவத்தில் வேண்டுமோ அதற்கேற்றவாறு பிழிந்து கொள்ளலாம். அதனை சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவேண்டும். வெள்ளை நிறத்திலேயே வேண்டும் என்றால் கொஞ்ச நேரத்திலேயே எடுத்துவிடவேண்டும். நன்கு சிவப்பான நிறத்தில் வேண்டும் என்றால் கொஞ்சநேரம் எண்ணெயில் விட்டு எடுக்கவேண்டும். முறுக்கு நன்கு ஆறியபின் காற்று புகாத பாத்திரத்தில் போட்டு வைத்து கொள்ளவும்.






