என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tomato"

    • தென்னம்பாளையம் மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைக்கு திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது.
    • கடந்த மாதம் கிலோ ரூ.50 வரை தக்காளி விற்பனையானது.

    திருப்பூர்:

    சைவம், அசைவம் என எந்த வகை உணவுகள் தயாரித்தாலும் முதன்மை இடத்தை தக்காளிகள் பெறுகின்றன. இதனால் தக்காளியின் தேவை எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கும்.

    இதைக்கருத்தில் கொண்டு தக்காளி பயிரிடுவதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சில நேரங்களில் விளைச்சல் அதிகரிப்பு காரணமாக தக்காளி விலை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு ஒரு கிலோ தக்காளி ரூ.100 வரை விற்பனையானது. மேலும் விலை வீழ்ச்சி ஏற்பட்டு சாலையோரங்களில் வீசும் அவலமும் ஏற்பட்டு வந்தது.

    தற்போது திருப்பூரில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து வீதிகளில் வீசப்படுகிற நிலை ஏற்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது.

    திருப்பூரை பொறுத்தவரை தென்னம்பாளையம் மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைக்கு திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது. கடந்த மாதம் கிலோ ரூ.50 வரை தக்காளி விற்பனையானது. ஆனால் கடந்த சில நாட்களாக தக்காளி விலை வீழ்ச்சியடைந்து வருகிறது. தரத்துக்கு ஏற்ப 5 கிலோ முதல் 10 கிலோ வரை ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. வரத்து அதிகரிப்பு காரணமாக தக்காளி விற்பனையாகாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தக்காளி அழுகி விடுகின்றன.

    விலை வீழ்ச்சியை சந்தித்ததால் அந்த தக்காளிகளை கூடை, கூடையாக மார்க்கெட் அருகே உள்ள ஜம்மனை ஓடையில் வியாபாரிகள் கொட்டி வருகின்றனர். இன்னும் விலை வீழ்ச்சி அடைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

    • வெங்காயத்தில் அதிக ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், அவற்றை இரவில் சாப்பிடுவது நல்லதல்ல.
    • இரவில் நீங்கள் பருகும் ஒரு கப் காபி மற்றும் டீயின் விளைவு 8 முதல் 14 மணி நேரம் வரை நீடிக்கலாம்.

    இரவு நேரத்தில் மிக எளிதில் ஜீரணிக்கும் உணவைச் சாப்பிட்டால்தான் நமது ஜீரண உறுப்புக்கள் ஆரோக்கியமாகச் செயல்பட்டு அஜீரணக்கோளாறு, அசிடிட்டி, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து நம்மைக் காக்கும்.

    பகல் நேரத்தில் நாம் எப்படிச் சாப்பிட்டாலும் நாம் செய்யும் வேலைக்கு அவை ஜீரணித்துவிடும். ஆனால், இரவு நேரத்தில் நாம் சாப்பிடும் உணவுகள் ஜீரணிக்க நீண்ட நேரம் எடுக்கும்.

    இரவில் சாப்பிடக்கூடாத சில உணவுகள் இருக்கின்றன. கீரை, நெல்லிக்காய், கட்டித்தயிர், கஞ்சி, பாகற்காய், இஞ்சி ஆகியவற்றை இரவில் தவிர்த்து விடுவது நல்லது. அதையும் மீறி சாப்பிட்டால், அந்த வீட்டில் மகாலட்சுமி தாயார் வாசம் செய்ய மாட்டார், செல்வம் தங்காது என்பது ஐதீகம். இரவில் பால் சோறு சாப்பிடலாம். இதனால் செல்வம் பெருகும்.

    தக்காளியில் அசிடிட்டியை ஏற்படுத்தக்கூடிய அமிலங்கள் அதிகமாக இருப்பதால், இவற்றை இரவில் தவிர்ப்பது நல்லது. நடு ராத்திரியில் ஐஸ்கிரீம் உட்கொள்வது மன அழுத்த ஹார்மோன்களை அதிகரிக்கும். இதனால், இரவில் தூங்குவதற்கு சிரமம் ஏற்படும்.

    கிரீன் டீயில் காபி மற்றும் டீயை விட அதிக அமிலம் உள்ளது. இதை, இரவில் குடிக்கும் போது அதிக இதயத் துடிப்பு, பதட்டம் மற்றும் கவலை ஆகியவை ஏற்படலாம். எனவே, கிரீன் டீயை பகல் நேரத்தில் குடிப்பது நல்லது. ஆரஞ்சு மற்றும் திராட்சைப்பழம் போன்ற சிட்ரஸ் நிறைந்த பழங்கள் நெஞ்செரிச்சலை அதிகரிக்கும். எனவே, இரவு நேரத்தில் சிட்ரஸ் நிறைந்த பழங்களை தவிர்ப்பது நல்லது.

    வெங்காயத்தில் அதிக ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், அவற்றை இரவில் சாப்பிடுவது நல்லதல்ல. இரவு நேரத்தில் வெங்காயம் சேர்த்த சாலட் சாப்பிடுவதால் வயிற்றில் வாயு உருவாகும். இதனால், உங்கள் தொண்டை பகுதியில் ரிப்ளக்ஸ் அமிலம் சுரக்கப்படும்.

    இரவில் நீங்கள் பருகும் ஒரு கப் காபி மற்றும் டீயின் விளைவு 8 முதல் 14 மணி நேரம் வரை நீடிக்கலாம். அதுமட்டும் அல்ல, இது உங்கள் தூக்கத்தை கட்டுப்படுத்தும். எனவே, இவற்றை காலையில் பருகுவது நல்லது. காரமான பொருட்களை சாப்பிடுவது நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தும். அல்லது அஜீரண கோளாறுகளை ஏற்படுத்தும். இதனால், தூக்கம் பாதிக்கப்படும். அதேபோல, கொழுப்பு சத்துக்கள் நிறைந்த பீட்சா, பர்க்கர், எண்ணெயில் பொறிக்கப்பட்ட ஸ்னாக்ஸ்கள் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது. இந்த உணவுகள் அசவுகரியத்தை ஏற்படுத்துவதோடு, நெஞ்சு எரிச்சல், வயிற்று வலியை ஏற்படுத்தக்கூடும். 

    • வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 வரை விற்கப்பட்டது.
    • இன்று 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்தது.

    கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினசரி தக்காளி விற்பனைக்கு வருகிறது. பரவலாக அவ்வப்போது பெய்த மழை மற்றும் வெளி மாநில வியாபாரிகளின் கொள்முதல் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து தினசரி 30 லாரிகளாக குறைந்துபோனது.

    இதனால் வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 வரை விற்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே தக்காளியின் வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது. இன்று 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்தது. இதையடுத்து மொத்த விற்பனையில் தக்காளியின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.6-க்கு விற்கப்பட்டது.

    கடந்த வாரம் வரை மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.40-வரை விற்கப்பட்ட தக்காளி இன்று ரூ.15 ஆக குறைந்து உள்ளது. வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை கடந்த 3 மாதங்களுக்கு பிறகு வீழ்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்து உள்ளனர். 

    • எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகமாகவே இருக்கும்.
    • 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பின் முகத்தைக் கழுவலாம்.

    அன்றாட சமையலில் தவிர்க்க முடியாத தக்காளியை, சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். அதற்கேற்ற தன்மைகள் இதில் நிறைந்திருக்கின்றன.

    தக்காளியில் மிக அதிக அளவில் உள்ள வைட்டமின்கள் சி, இ மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை நம்முடைய சருமத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை அளிக்கின்றன.

    மேலும், சருமத்தின் இறந்த செல்களை நீக்கி, சரும அழுக்குகளையும் முற்றிலும் சரிசெய்வதால் மாசுகள் நீங்கி முகம் பொலிவாக மாறும்.

    தக்காளியில் உள்ள லைக்கோபீன் போன்ற பொருள்கள் கொலாஜன் உற்பத்தியைத் தூண்டுவதால் சருமம் மென்மையாகவும் பளபளப்பாகவும் ஆகும். சருமத்தின் நிறமும் மேம்படும்.

    சருமத்தின் செல்கள் அதிக எண்ணெய்த் தன்மை மற்றும் அதிக அளவில் வறட்சி அடையும்போது சரும செல்கள் பாதிப்புக்கு உள்ளாகும்.

    சரும வறட்சி அதிகமாகும்போது இறந்த செல்கள் சருமத்தில் அப்படியே தேங்கி, அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்துவதோடு வயதான தோற்றத்தையும் உண்டாக்கும்.

    தக்காளியில் அதிக அளவில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் லைக்கோபீன் போன்ற ஆன்டி ஆக்சிடென்டுகள், சரும செல்களின் சேதத்தைத் தடுப்பதோடு, இறந்த செல்களை நீக்கி சருமத்தைப் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகின்றன.

    இதற்கு, தக்காளியை சாறாகவோ அல்லது கூழ் போன்று மசித்தோ நேரடியாக முகத்தில் தடவலாம்.

    அதன் பின் 15 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் நன்கு கழுவினால் போதும்.

    வளரிளம் பருவம் தொடங்கியதுமே ஆண், பெண் இரு பாலரும் சந்திக்கும் சருமப் பிரச்சனை, முகப்பரு. குறிப்பாக எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகமாகவே இருக்கும்.

    அதிகப்படியான சீபம் சுரப்பது, சருமத் துளைகளுக்குள் அழுக்குகள் நுழைவது, பாக்டீரியா போன்றவற்றின் தொற்றுகள் காரணமாக பருக்கள் உண்டாகின்றன. இந்தப் பிரச்சனையைச் சரிசெய்து, சருமத்தின் பி.எச். அளவை சீராக வைத்திருக்கவும், முகப்பருக்களை விரட்டவும் தக்காளி பயனுள்ளதாக இருக்கும்.

    முகப்பருக்களை போக்குவதற்கு தக்காளியை பயன்படுத்தும்போது, 4 ஸ்பூன் தக்காளிச் சாறுடன் ஒரு ஸ்பூன் டீ டிரீ ஆயில் சேர்த்து கலந்து முகத்தில் தடவ வேண்டும்.

    20 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பின் முகத்தைக் கழுவலாம். இதை வாரத்தில் மூன்று நாட்கள் பயன்படுத்தினாலே போதும். முகப்பருக்களை காணாமல் ஆக்கிவிடலாம்.

    சிலருக்கு முகத்தில் பருக்கள், அழற்சி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு சருமத்தின் துளைகள் திறந்துகொள்ளும். பெரிய பெரிய சருமத் துளைகள் இருக்கும். அப்படி இருப்பதால் அதன் வழியே மாசுகள் உள் நுழைந்து சருமத்தில் வலியுடன் கூடிய பருக்கள், கட்டிகள் ஆகியவற்றை உண்டாக்கலாம். இதைச் சரிசெய்ய தக்காளி நல்ல மருந்தாக இருக்கும்.

    சருமத்தின் பெரிய துளைகளைச் சுருக்க, தக்காளிச் சாறுடன் எலுமிச்சைச் சாறைக் கலந்துகொள்ள வேண்டும். இதை பஞ்சில் தொட்டு முகத்தில் தடவ வேண்டும். அப்படி தடவுவதற்கு முன் முகத்தை வெதுவெதுப்பான நீரில் சுத்தமாக கழுவிக்கொள்வது அவசியம்.

    • பருவகால பாதிப்புகள் இல்லாத நிலையில் தக்காளியை பயிரிடும்போது ஏக்கருக்கு 9-10 டன்கள் வரை சாகுபடி கிடைக்கும்.
    • தக்காளியின் விற்பனை விலை தற்போது ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து வருவதால் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவு கூட கிடைக்காத நிலை உள்ளது.

    பேரூர்:

    கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. இதில் குறைந்த காலத்தில் அதிக லாபம் பார்க்க முடியும்.

    இதன்காரணமாக அங்குள்ள விவசாயிகள் தங்களின் விளைநிலங்களில் தக்காளி,வெண்டை, காலிபிளவர், முட்டைக்கோஸ், கத்தரி போன்றவற்றை நடவு செய்து உள்ளனர். காய்கறி விளைச்சலுக்கு போதிய தட்பவெப்பநிலை மற்றும் சீதோஷ்ண சூழ்நிலை இருந்தால் மட்டுமே விளைச்சல் நல்ல முறையில் இருக்கும்.

    ஆனால் கடந்த 2-3 ஆண்டுகளாகவே தொண்டாமுத்தூர் பகுதிகளில் காலநிலை மாற்றம் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக தீத்திபாளையம், மாதம்பட்டி, குப்பனூர், சென்னனூர், வடிவேலாம்பாளையம், செம்மேடு, தென்னமநல்லூர், தேவராயபுரம் பகுதிகளில் சின்ன வெங்காயத்தை நடவு செய்து இருப்பு வைத்து கிட்டத்தட்ட 70 சதவீதத்துக்கும் மேல் விவசாயிகள் விற்பனை செய்து விட்டனர்.

    இதற்கு விவசாயிகள் எதிர்பார்த்த அளவுக்கு போதிய விலை கிடைக்க இயலாததால் அங்கு தற்போதுஅதிக அளவில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. அவற்றில் 50 சதவீதம் தக்காளிகளை விவசாயிகள் பறித்து சந்தைப்படுத்தி வருகின்றனர். விவசாய தோட்டங்களில் மீதம் உள்ள தக்காளி பயிர்கள் பூக்கும் தருவாயில் இருந்து வருகிறது. ஆனால் கடந்த ஒரு வாரமாக அதிகப்படியான பனி மற்றும் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால், பூக்கும்-காய்க்கும் தருவாயில் உள்ள தக்காளி செடிகளுக்கு பூஞ்சாண நோய் தாக்குதல் ஏற்பட்டு விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் காய்ப்புழு தாக்குதல், செம்பேன், இழைப்புள்ளி நோய், வேர்வாடல் நோய் போன்ற நோய்களின் தாக்குதல் தக்காளி விளைச்சலை பெருமளவில் பாதித்து உள்ளது. பருவகால பாதிப்புகள் இல்லாத நிலையில் தக்காளியை பயிரிடும்போது ஏக்கருக்கு 9-10 டன்கள் வரை சாகுபடி கிடைக்கும். ஆனால் தற்போது 4-5 டன்கள் வரை அறுவடை செய்ய முடிகிறது.

    இதனால் விவசாயிகள் பெரும் பொருளாதார பின்னடைவை சந்திக்க நேரிடுகிறது. விவசாய தோட்டங்களில் தக்காளி பயிரிட ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1.10 லட்சம் முதல் 1 1/4 லட்சம் வரை செலவாகிறது.

    ஆனால் தக்காளியின் விற்பனை விலை தற்போது ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து வருவதால் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவு கூட கிடைக்காத நிலை உள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    தொண்டாமுத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளிக்கு போதியவிலை கிடைக்காததால் அங்குள்ள விவசாயிகள் தற்போது பாக்கு, வாழை போன்ற பயிர்களை விளைவிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    எனவே கோவை மாவட்ட விவசாயிகளுக்கு பருவநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு தக்காளி உள்ளிட்ட பயிர் வகைகளுக்கு தோட்டக்கலை, வேளாண் அதிகாரிகள் கால சூழலுக்கு ஏற்ப தக்க அறிவுரைகளை வழங்க வேண்டும். மேலும் பருவநிலை மாற்றத்தை பாதிக்கப்படும் தக்காளி பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • தினமும் சுமார் 500 கொள்கலன் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.
    • பாகிஸ்தானுக்கு பெரும்பாலான தக்காளி விநியோகம் ஆப்கானிஸ்தானிலிருந்து சென்றுகொண்டிருந்தது.

    ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. அண்மையில் இரு நாடுகளுக்கும் எல்லையில் ஏற்பட்ட சண்டையில் பலர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து கத்தாரின் மத்யஸ்தத்தால் அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.

    இந்த மோதலால் அக்டோபர் 11 முதல் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லை மூடப்பட்டிருப்பதால் இரு நாடுகளிலும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் தடைபட்டுள்ளது.

    இதனால் பாகிஸ்தானில் தக்காளியின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. எல்லை மூடப்படுவதற்கு முன் ஆப்கானிஸ்தானில் இருந்து தினமும் சுமார் 500 கொள்கலன் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. மேலும் பாகிஸ்தானுக்கு பெரும்பாலான தக்காளி விநியோகம் ஆப்கானிஸ்தானிலிருந்து சென்றுகொண்டிருந்தது.

    இந்நிலையில் எல்லை மூடப்பட்டு விநியோகம் நின்றதால் தக்காளியின் விலை பாகிஸ்தானில் 400 சதவீதம் உயர்ந்து 1 கிலோ தக்காளி 600 ரூபாயாக்கு விற்கப்படுகிறது. பாகிஸ்தான் உணவில் தக்காளி முக்கிய பங்காற்றும் நிலையில் இந்த விலை உயர்வு மக்களை அதிகம் பாதித்து வருகிறது.

    எல்லை மூடப்பட்டதால் போக்குவரத்து தடைபட்டு அத்தியாவசிய பொருட்கள் விநோயோகம் நின்றதால் இரு நாடுகளும் ஒவ்வொரு நாளும் 1 மில்லியன் டாலர்களை இழந்து வருவதாக பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் வர்த்தக சபையின் தலைவர் கான் ஜான் அலோகோசி கூறினார்.   

    • சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்துவதோடு, சருமத்தின் pH அளவையும் பராமரிக்க தக்காளி உதவும்.
    • ஒவ்வாமை இருந்தால் அல்லது முகத்தில் ஏதேனும் காயம் இருந்தால் தக்காளி பயன்படுத்துவது பாதிப்பை ஏற்படுத்தும்.

    சமையலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் பயன்படுகிறது தக்காளி. உங்களின் செயற்கை அழகு சாதனப் பொருட்களை தள்ளிவைத்துவிட்டு தக்காளியை போட்டாலே போதும். சரும அழகை மெருகூட்டலாம். தக்காளி சருமத்திற்கு எப்படி நன்மை பயக்கிறது என்பது குறித்து பார்க்கலாம். 

    இறந்த செல்களை நீக்கும்...

    தக்காளியை தொடர்ந்து முகத்தில் தடவினால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றும். தக்காளியில் இயற்கையான நொதிகள் உள்ளன. அவை சருமத்தை உரிப்பதற்கு (exfoliating) உதவுகின்றன. இந்த நொதிகள் இறந்த சரும செல்களை நீக்கி, சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்ற உதவுகின்றன. தக்காளியில் உள்ள வைட்டமின் சி மற்றும் லைகோபீன் போன்றவற்றில் ஆன்டி - ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கின்றன. இது சரும செல்களில் ஏற்படும் சேதத்தைத் தடுத்து இறந்த செல்களை நீக்குவதோடு மட்டுமல்லாமல் சருமத்தைப் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

    முகப்பரு

    தக்காளியில் வைட்டமின் சி மற்றும் ஏ நிறைந்துள்ளன. மேலும், இது அமிலத்தன்மை கொண்டது. இது உங்கள் சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்துவதோடு, சருமத்தின் pH அளவையும் பராமரிக்க உதவுகிறது. முகப்பரு பாதிப்புள்ள சருமத்தில் தக்காளியைத் தொடர்ந்து தடவுவது, அதன் இயற்கையான பண்புகளால் முகப்பரு வெடிப்புகளைக் கட்டுப்படுத்த உதவும். 

    எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது

    தக்காளியில் சாலிசிலிக் அமிலம் நிறைந்துள்ளதால் அது சருமத்தில் எண்ணெய் பசை உருவாவதை தடுக்கிறது. தக்காளியை இரண்டாக வெட்டி, அந்தத் துண்டை முகத்தில் தேய்த்து, 10-15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் பச்சை தண்ணீரில் முகத்தை கழுவவும். எண்ணெய் பசை இல்லாத மென்மையான சருமத்திற்கு இதை தொடர்ந்து செய்யுங்கள். வாரத்திற்கு மூன்று முறை பச்சை தக்காளியை முகத்தில் தேய்க்கலாம்.

    வெயில் பாதிப்பு

    சூரியனின் புறஊதா கதிர்களால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை குணப்படுத்துவதிலும், முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை நீக்குவதிலும் தக்காளி சிறந்தது. சருமத்தின் பழுப்பு நிறத்தை நீக்கவும் உதவுகிறது. 


    தக்காளியை தேன், மஞ்சள், சர்க்கரையுடனும் பயன்படுத்தலாம்

    சருமத்தை ஆற்றும்

    சருமத்திற்கு அவசியமான பீட்டா கரோட்டின், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை தக்காளியில் உள்ளன. இது தோல் அழற்சியை தணிக்க உதவுகிறது. தக்காளியில் உள்ள அழற்சி எதிர்ப்பு கலவை எரிச்சலூட்டும் சருமத்திற்கு நல்லது.

    வயதான அறிகுறியைக் குறைக்கும் தக்காளி

    சுற்றுசூழல் மாசு, நமது உணவுமுறைகள், நாம் பயன்படுத்தும் செயற்கை அழகு சாதனப்பொருட்கள் இளமையிலேயே சருமத்திற்கு வயதான தோற்றத்தை ஏற்படுத்திவிடும். இதை சரிசெய்ய தக்காளி மிகவும் உதவியாக இருக்கும். வயதானதற்கான பொதுவான அறிகுறிகளில் கருவளையங்கள், சுருக்கங்கள், புள்ளிகள் போன்றவை அடங்கும். தக்காளியில் உள்ள வைட்டமின் டி இவற்றை குறைக்க உதவுகிறது. 

    விளைவுகள்

    தக்காளி சருமத்திற்கு நல்லது என்றாலும், சிலருக்கு சில பாதிப்புகள் ஏற்படலாம். உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால் அல்லது முகத்தில் ஏதேனும் காயம் இருந்தால் தக்காளி பயன்படுத்துவது பாதிப்பை ஏற்படுத்தும். தக்காளி அமிலத்தன்மை கொண்டது, எனவே அதிகமாக தக்காளி உங்கள் சருமத்தை எரிச்சலடையச் செய்யலாம். தக்காளியை முகத்தில் தடவும்போது எரிச்சல் ஏற்பட்டால் தடவுவதை நிறுத்துங்கள். தக்காளியைப் பயன்படுத்திய பிறகு முகம் சிவத்தல், அரித்தல் அல்லது தோல் எரிச்சல் ஏற்பட்டால், பயன்படுத்துவதை தவிர்க்கவும். 

    • மழையால் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி கிலோ ரூ.70 முதல் 80க்கு விற்பனையாகிறது.

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு பல மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கோயம்பேட்டிற்கு கொண்டு வரப்படும் காய்கறிகளை வியாபாரிகள் கொள்முதல் செய்து சில்லரை விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில், கடந்த சில தினங்களாகவே தக்காளி விலை உயர்ந்து காணப்படுகிறது. அந்த வகையில், இன்றும் கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை உயர்ந்துள்ளது. ஒரே நாளில் தக்காளியின் விலை மேலும் ரூ.10 உயர்ந்து ரூ.60க்கு விற்பனையாகிறது. சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி கிலோ ரூ.70 முதல் 80க்கு விற்பனையாகிறது.

    ஊட்டி உள்ளிட்ட மலை பகுதிகளில் பெய்து வரும் மழையால் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

    • கடந்த சில வாரங்களாக தக்காளி வரத்து குறைந்து வருகிறது.
    • தமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடந்த மாதம் முதலே உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி, 50 ரூபாய் வரை உயர்ந்தது.

    தக்காளி விலை உயர்வு தொடர்பாக கோயம்பேடு சந்தை காய்கறி வியாபாரிகளிடம் கேட்டபோது, "கடந்த சில வாரங்களாக தக்காளி வரத்து குறைந்து வருகிறது. தமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

    இந்நிலையில், வரத்து குறைவு காரணமாக சென்னையில் ஒரே நாளில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.45-க்கு விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனையாகிறது.

    மொத்த விற்பனை:

    ஒரு கிலோ தக்காளி விலை: ரூ. 45

    முந்தைய விலையுடன் ஒப்பிடுகையில் உயர்வு: ரூ. 10

    சில்லறை விற்பனை:

    ஒரு கிலோ தக்காளி விலை: ரூ. 60

    விலை உயர்வுக்குக் காரணம்: தக்காளி வரத்து குறைவு

    தக்காளி விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    • மெக்சிகோவுடனான தக்காளி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
    • தற்போது அமெரிக்க தக்காளி சந்தையில் சுமார் 70 சதவீதத்தை மெக்சிகோ வழங்குகிறது.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்து வருகிறார். இதில் அண்டை நாடான மெக்சிகோ மீதும் வரி விதிப்பு நடவடிக்கையை எடுத்துள்ளார்.

    இந்த நிலையில் மெக்சிகோவுடனான தக்காளி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. மேலும் மெக்சிகோ தக்காளிக்கு 17 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், உள்ளூர் தக்காளி விவசாயிகளின் நலனுக்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது அமெரிக்க தக்காளி சந்தையில் சுமார் 70 சதவீதத்தை மெக்சிகோ வழங்குகிறது.

    மெக்சிகோ மீதான வரி விதிப்பு அமெரிக்க தக்காளித் தொழிலை மீண்டும் கட்டியெழுப்பவும், அமெரிக்காவில் உண்ணப்படும் விளைபொருட்களும் அங்கு பயிரிடப்படுவதை உறுதி செய்யவும் உதவும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    • 30 கிலோ எடையுள்ள ஒரு பெட்டியை ரூ.100-க்கு மேல் விற்க முடியவில்லை.
    • ஆந்திர மாநிலத்திலும் தக்காளி விலை மிகவும் குறைந்துள்ளது.

    தெலுங்கானா மாநிலம் நரசிம்ஹுலு ரங்காரெட்டி மாவட்டத்தில் அதிக அளவில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது.

    தற்போது அறுவடை செய்யப்படும் தக்காளிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அதிக அளவில் தக்காளி வரத்து ஏற்பட்டதால் அதன் விலை வெகுவாக குறைந்துள்ளது.

    மஹபூப்நகர் உழவர் சந்தைக்கு பெட்டிகளில் தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. 30 கிலோ எடையுள்ள ஒரு பெட்டியை ரூ.100-க்கு மேல் விற்க முடியவில்லை.

    இதனால் விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த தக்காளி பழங்களை சாலையோரம் கொட்டி விட்டு சென்றனர். இதனை கால்நடைகள் சாப்பிட்டு வருகின்றன.

    இதே போல ஆந்திர மாநிலத்திலும் தக்காளி விலை மிகவும் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்யாமல் நிலத்திலேயே அப்படியே விட்டுள்ளனர்.

    ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் கடந்த 2 ஆண்டுகளாக தக்காளி ஒரு கிலோ ரூ.200 வரை எட்டியது. இதனால் ஏராளமான விவசாயிகள் கோடீஸ்வரர்களாக மாறினர்.

    தற்போது அனைத்து விவசாயிகளும் தக்காளிகளை பயிரிட்டுள்ளனர். இதனால் தக்காளி அதிக அளவில் வரத்து ஏற்பட்டு விலை குறைந்துள்ளது. விவசாயிகள் பலர் நஷ்டம் அடைந்துள்ளனர். 

    • கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டியின் விலை ரூ.350 முதல் ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    • தக்காளி வரத்து அதிகரிப்பால் போதிய விலை கிடைக்கவில்லை.

    ஒட்டன்சத்திரம்:

    தென்தமிழகத்தின் பிரசித்தி பெற்ற காந்தி காய்கறி மார்க்கெட் ஒட்டன்சத்திரத்தில் செயல்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த மார்க்கெட்டில் இருந்து தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களுக்கும் மற்றும் கேரள மாநிலத்துக்கும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டியின் விலை ரூ.350 முதல் ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    அப்போது கிலோ ரூ.25 முதல் ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது தக்காளி வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் விலை வீழ்ச்சி அடைந்து 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.70 முதல் ரூ.150 வரை விற்பனையானது. சில்லரை விற்பனையில் கிலோ ரூ.10 முதல் ரூ.9 வரை விற்பனை செய்யப்பட்டது.

    இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, தக்காளி வரத்து அதிகரிப்பால் போதிய விலை கிடைக்கவில்லை. மேலும் ஒரு பெட்டிக்கு 4 கிலோ தக்காளி அழுகி விடுவதால் குப்பையில் கொட்டும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் நஷ்டம் ஏற்படுகிறது. இந்த விலை வீழ்ச்சி இன்னும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் என்றனர்.

    ×