search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல்நலம்"

    • ஆப்பிளை விட கடினமான தோல் பகுதியை கொண்டது.
    • பேரிக்காய் நரம்புத்தளர்ச்சி நோய்க்கு நல்லது.

    தமிழ்நாட்டில் பேரிக்காய்தான் அதிக அளவில் பயிராகும் குளிர்மண்டல பழப்பயிராகும். இது மலைப்பகுதிகளில் சுமார் 1500 முதல் 2500 மீட்டர் உயரமுள்ள இடங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. 10 முதல் 12 ஆண்டு வயதுடைய மரங்களில் இருந்து 100 முதல் 120 கிலோ பழங்கள் கிடைக்கும்.

    மே-ஜூன் மாதங்களில் வால்பேரியும், ஆகஸ்டு முதல் செப்டம்பர் வரை இதர பேரி வகைகள் மற்றும் நாட்டுப்பேரி வகைகள் அறுவடைக்கு வருகின்றன. பேரிக்காய் மரத்தின் தாவரவியல் பெயர் 'பைரஸ் கம்யூனிஸ்' என்பதாகும்.

    பேரிக்காய் வடிவத்தில் ஆப்பிள் போல் தோற்றமளிக்கும். ஆனால், ஆப்பிளை விட கடினமான தோல் பகுதியை கொண்டது. இதன் மேல் தோல் கடினமாகவும், கசப்பாகவும் இருக்கும். எனவே மேல்தோல் நீக்கி உண்ணுவது வழக்கம். 100 கிராம் பேரிக்காயில் புரதம், நார்ப்பொருள், மாவுப் பொருள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, தயமின், ரைபோபிளோவின், நியாசின், மெக்னீஷியம், சோடியம், பொட்டாஷியம், தாமிரம், கந்தகம், குளோரின், ஆக்சாலிக் அமிலம், பைட்டின் பாஸ்பரஸ், கரோட்டின் உள்ளிட்ட சத்துக்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    பேரிக்காய் நரம்புத்தளர்ச்சி நோய்க்கு நல்லது. இதயத்தை பலப்படுத்தும். சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் கீல்வாதத்திற்கும் சிறந்தது. கல் அடைப்பை நீக்கும் குணங்கள் பேரிக்காயில் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள்.

    • அன்றாட வாழ்வில் உடல் சோர்வு இன்றி இயக்க இரும்புச்சத்து அவசியம்.
    • இரும்புச்சத்து குறைபாட்டால் கடுமையான மறதி மற்றும் தூக்கத்தன்மை இருந்து கொண்டே இருக்கும்.

    இரும்புச்சத்து குறைபாடு என்பது உலகம் முழுவதும் மிகவும் பொதுவான ஊட்டச்சத்து குறைபாடாக கருதப்படுகிறது. உலக மக்கள்தொகையில் 30 சதவீதம் பேர் இரும்புச்சத்து குறைபாட்டினால் ரத்தசோகை பாதிப்பு ஏற்பட்டு அதன் காரணமாக பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது. ரத்தத்தில் பிராணவாயுவை கடத்துவதற்கு இரும்புச்சத்து முக்கிய தேவை ஆகும். அன்றாட வாழ்வில் உடல் சோர்வு இன்றி இயக்க இரும்புச்சத்து அவசியம்.

    உண்ணும் உணவில் போதிய அளவு இரும்புச்சத்து இல்லாதபோது உடலில் உள்ள இரும்புச்சத்து குறைந்து விடும். இது உடலை சோர்வடைய செய்து, நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, ரத்த சோகைக்கு வழிவகுக்கும். உடலில் இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள் ரத்த பரிசோதனை செய்யும் வரை பெரும்பாலான மக்களுக்கு தெரிவதில்லை.

     

    பொதுவாக, மிகுந்த சோர்வு, கண்ணுக்கு கீழ் கருவளையம், மூச்சுத்திணறல், முடி உதிர்தல், வெளிர் தோல், கால்களில் ஒரு கூச்ச உணர்வு, தலைவலி, தலைச்சுற்றல், கை கால்களில் குளிர்ந்த உணர்வு, வேகமான இதயத்துடிப்பு, கவலை உணர்வு, நாக்கு, வாய் வீக்கம், எளிதாக உடையும் நகங்கள் ஆகிய அறிகுறிகள் உடலில் இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படுகிறது.

    இரும்புச்சத்து குறைபாட்டால் கடுமையான மறதி மற்றும் தூக்கத்தன்மை இருந்து கொண்டே இருக்கும். படி ஏற முடியாது. மூச்சு திணறல் ஏற்படும். இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டு தீவிரமான நிலைகளில் இதய தாக்குதல் வரை ஏற்படும். எனவே இரும்புச்சத்தை கவனியுங்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தினமும் ஒரு கையளவு நட்ஸ்களை சாப்பிடுவதால் ஆயுள் அதிகமாவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
    • நட்ஸ்கள் சாப்பிடுபவர்கள் அதிகம் புகைப்பதில்லை, கூடுதலாக உடற்பயிற்சி செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.

    பாதாம், வால்நட் போன்றவற்றை சாப்பிடுவது, இதய நோய் மற்றும் புற்றுநோய் தாக்கும் ஆபத்தைக் கணிசமாகக் குறைப்பதாக ஒரு புதிய ஆய்வு சொல்கிறது. எவ்வளவுக்கு எவ்வளவு நட்ஸ் வகைகளை சாப்பிடுகிறோமோ அந்த அளவுக்கு அதிக காலம் நாம் வாழலாம் என்று 'நியூ இங்கிலாந்து மருத்துவ இதழ்' வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை கூறுகிறது.

    அமெரிக்காவில் 30 ஆண்டு காலகட்டத்தில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தினமும் ஒரு கையளவு நட்ஸ்களை சாப்பிடுவதால் ஆயுள் அதிகமாவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    நட்ஸ்களை உண்பவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் கூடுதலாக உடல்நலன் குறித்து அக்கறையுடன் இருக்கிறார்கள் என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    நட்ஸ்கள் சாப்பிடுபவர்கள் அதிகம் புகைப்பதில்லை, கூடுதலாக உடற்பயிற்சி செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுபவர்களாக இருக்கிறார்கள். இவை எல்லாம் இந்த ஆய்வு முடிவுகளில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    • இசையை கேட்கும்போது உடலும், மனமும் தளர்வடையும், மன ஆரோக்கியமும் மேம்படும்.
    • தியானத்தில் மூழ்க தொடங்கும்போது சுற்றுப்புறப்பகுதியில் இருந்து எழும் ஓசையும், இரைச்சலும் தொந்தரவை தரும்.

    மனநிலையை அமைதிப்படுத்தி ஆழ்மனதை சாந்தப்படுத்தும் அசாத்திய சக்தி கொண்டது தியானம். எந்தவொரு தொந்தரவும் இல்லாமல் அமைதி தவழும் இடத்தில் அமர்ந்து தியானம் செய்வது மனதை இதமாக்கும். அமைதியே தியானத்தின் பிரதானமாக இருக்கும்போது இசை கேட்டுக்கொண்டே தியானம் செய்யலாமா என்ற கேள்வி பலருக்கும் எழுவதுண்டு. மனதுக்கு பிடித்தமான இனிய இசையை கேட்டுக்கொண்டே தியானம் செய்பவர்களும் இருக்கிறார்கள்.

    தியானம் செய்யும்போது இசை கேட்பது தவறல்ல என்பதை ஆய்வுகளும் உறுதிபடுத்தி இருக்கின்றன. தியானத்தின்போது இசைக்கப்படும் அமைதியான இசை அதில் கவனம் செலுத்தவும், மனதுக்கு ஓய்வளிக்கவும் உதவும் என்று பலர் குறிப்பிடுகிறார்கள். அதேவேளையில் அமைதியான மற்றும் கவனத்தை சிதறடிக்காத இசையை தேர்ந்தெடுப்பது முக்கியம். இசை தியான பயிற்சிக்கு உதவுவதாக இருக்க வேண்டுமே தவிர அதை சீர்குலைப்பதற்கு காரணமாக அமைந்துவிடக்கூடாது.

    மனதை வருடும் மெல்லிசையாக அது ஒலிக்க வேண்டும். அந்த இசையை கேட்கும்போது உடலும், மனமும் தளர்வடையும், மன ஆரோக்கியமும் மேம்படும்.

    அதேவேளையில் ஆக்ரோஷமான வார்த்தை உச்சரிப்பை கொண்ட பாடல்கள், குத்துப் பாடல்கள், ஹிப்-ஹாப் பாடல்கள் போன்றவற்றை ஒலிக்க விட்டு தியானம் செய்வதால் எந்த பயனும் இல்லை. மனதை ஒருமுகப்படுத்தும், இனிமையான இசையை உள்வாங்கியபடி தியானிக்கும்போது மன அமைதிக்கு கூடுதல் பலம் சேர்க்கும். மென்மையான இசை இதமான சூழலை உருவாக்கிக்கொடுக்கும்.

    இசை ஏன் கேட்க வேண்டும்?

    * தியானம் செய்ய தொடங்கும்போது மனதை ஒருமுகப்படுத்துவதற்கு கூடுதல் நேரம் செலவிட வேண்டியிருக்கும். தியானத்தில் மூழ்க தொடங்கும்போது சுற்றுப்புறப்பகுதியில் இருந்து எழும் ஓசையும், இரைச்சலும் தொந்தரவை தரும்.

    அந்த சமயத்தில் மென்மையான இசையை கேட்கும்போது கவனம் ஒரே புள்ளியில் குவிந்து மனம் ஒருநிலைப்படும். அத்துடன் மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் குறைப்பதற்கு இசை உதவிடும்.



    * ஆரம்ப நிலையில் தியானம் மேற்கொள்ளும்போது எண்ணங்கள் திசை திரும்பக்கூடும், கவனச்சிதறலும் உண்டாகும். தியானத்தில் அதிக நேரம் ஆழ்ந்திருக்க மென்மையான இசை உதவி புரியும். தியானத்தின் மீது கவனத்தை அதிகரிக்கவும் செய்யும்.

    * அறுவை சிகிச்சை போன்ற கடினமான சிகிச்சைகளுக்கு பிறகு இசையுடன் கூடிய தியானத்தில் ஈடுபடுவது உடலுக்கும், மனதுக்கும் நலம் சேர்க்கும். குறிப்பாக உடல் இயக்க செயல்பாட்டை மேம்படுத்தும். பதற்றமின்றி நிதானமுடன் செயல்பட வைக்கும்.

    * தியானம் செய்யும்போது இசை கேட்பது உணர்ச்சிகளை சம நிலைப்படுத்தவும் உதவும். மனதளவில் பாதிப்புக்குள்ளாகியோ, நீண்ட நாட்களாக மன அழுத்தத்திற்கு உள்ளாகியோ இருந்தால் அதிலிருந்து விடுபட இசையுடன் கூடிய தியானம் உதவி செய்திடும்.

    * பயணங்களின் போது இசையை கேட்க பலர் விரும்புவார்கள். அது மனதை அமைதியாகவும், பயணத்தை இனிமையாகவும் மாற்ற உதவும். அப்போது தியானத்துடன் கூடிய இசையை மேற்கொள்வது மனதை சாந்தப்படுத்தும்.

    • நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பது பழமொழி.
    • இதன்மூலம் சாப்பிடும் முறையை வலியுறுத்தியுள்ளனர்.

    சென்னை:

    உணவும் மருந்தும் ஒன்றே... படுக்கை காப்பி படுக்கையில் தள்ளும்... பசிக்காக சாப்பிடு ருசிக்காக சாப்பிடாதே... இதுபோன்ற பழமொழிகளை சும்மாவா சொன்னார்கள்...

    சத்தான உணவு உள்பட எந்த உணவாக இருந்தாலும் சாப்பிடும் முறையில் ஆரோக்கியம் உள்ளது என்பது முன்னோர் வாக்கு.

    காலையில் அரசனைப் போன்றும், நண்பகலில் சாதாரண மனிதனைப் போன்றும், இரவில் பிச்சைக்காரனைப் போன்றும் சாப்பிட வேண்டும் என பெரியோர் சொல்வது வழக்கம்.

    காலை மடக்கி மடித்து சம்மணமிட்டு (சுக ஆசனம்) சாப் பிடும்போது இரத்த ஓட்டம் வயிற்றுப்பகுதிக்குள் சீராக செல்வதால் செரிமானம் எளிதாகிறது.

    நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பது பழமொழி. இதன்மூலம் சாப்பிடும் முறையை வலியுறுத்தியிருக்கிறார்கள்.

    உணவை நன்றாக மென்று சாப்பிட்டால் நோயின்றி நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழலாம்.

    சாப்பிடும் போது பேசக்கூடாது என சொல்வார்கள். சாப்பிடும்போது வெளியில் இருந்து காற்று வாய் வழியே உள்ளே செல்லும். எனவே பேசாமல் உதடுகளை மூடியபடி சாப்பிட்டால் உடல் நன்கு ஆரோக்கியம் அடையும்.

    மனதில் எந்த உணர்வும் இன்றி உணவை ரசித்து உமிழ்நீரோடு கலந்து மென்று சாப்பிட்டால் நூறு வயது வரை வாழலாம். அப்படி இல்லையெனில் ஆரோக்கியத்தோடு வாழலாம்.

    சாப்பிடுவது குறித்துசாஸ்திரம் சொல்வது என்ன?

    இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்.

    ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக் கூடாது.

    குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு சாப்பிடக் கூடாது.

    சாப்பிடும்போது முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு அதன்பின் நீர் அருந்தவேண்டும்.

    சாப்பிடும் வேளை தவிர மற்ற நேரங்களில் இடது கையால் தண்ணீரை அருந்தக் கூடாது.

    இருட்டில் சாப்பிடக் கூடாது.

    சாப்பிடும்போது விளக்கு அணைந்து விட்டால் சூரியனை தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிடவேண்டும் என தெரிவிக்கிறது.

    • பொதுவாக 7 முதல் 8 மணிநேர தூக்கம் என்பது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பொருந்தும்.
    • அவரவர் வயதுக்கு ஏற்ப உடலுக்கும் மனதிற்கும் தேவையான ஓய்வை கொடுப்பது, நீண்ட நாள் ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

    ஒவ்வொரு மனிதனுக்கும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் நீண்ட ஆயுளுக்கும் போதுமான தூக்கம் தேவை என்பதை மறுக்க முடியாது. ஆனால் எத்தனை மணி நேர தூக்கம் போதுமானதாக கருதப்படுகிறது..? வயதுக்கு ஏற்ப தூக்க நேரம் என்ன?

    அதிகமான தூக்கம் அல்லது மிகக் குறைந்த தூக்கம் பெரும்பாலும் உடல் நோய்க்கான அறிகுறியாகும். நீங்கள் இவை இரண்டையும் செய்வதில்லை என்றாலும் உங்கள் வயதுக்கு எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்வது அவசியம். பொதுவாக 7 முதல் 8 மணிநேர தூக்கம் என்பது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பொருந்தும்.

    இந்த நிலையில், ஒரு நபருக்கு 4 மணி நேரம் தூக்கம் போதும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக டாக்டர் மனன் வோரா கூறியுள்ளார்.

    சமீபத்திய, போட்காஸ்ட் நிகழ்ச்சியில் மருத்துவர் டாக்டர் மனன் வோரா உடல்நலம், தூக்கம், ஊட்டச்சத்து உள்ளிட்ட பலவற்றைப் பற்றிப் பேசினார். அப்போது, நான்கு மணிநேர தூக்கம் கூட ஒரு நபருக்கு போதுமானது என்பதை நிரூபிக்கும் ஆராய்ச்சி ஆய்வுகள் உள்ளதாக கூறினார்.

    தூக்கம் வருவதில்லை, இரவு முழுக்க விழித்தே இருக்கிறேன் என புலம்பி தள்ளும் 90-ஸ் மற்றும் 2K கிட்ஸ்களுக்கு இந்த ஆய்வு முடிவு ஓரளவுக்கு நிம்மதியை கொடுக்கலாம். எனினும், அவரவர் வயதுக்கு ஏற்ப உடலுக்கும் மனதிற்கும் தேவையான ஓய்வை கொடுப்பது, நீண்ட நாள் ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

    • பொதுவாக தேநீர் என்று சொல்லும் போது இந்தியாவில் பால் சேர்த்து தயாரிக்கப்படும் டீயை மட்டுமே குறிக்கிறோம்.
    • அதிகப்படியான டீ அல்லது காபி குடிப்பது தலைவலியை ஏற்படுத்தலாம்.

    டீ....

    உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சியை தரக்கூடியது தேநீர் அல்லது டீ.

    உலகின் மிகவும் பிரபலமான பானங்களில் ஒன்றாக கருதப்படும் டீயில் ஏராளமான வகைகள் உள்ளன. அவற்றில் சில வகையான தேநீர் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. இந்தியாவிலும் அனைத்து குடும்பங்களிலும் பிரதான பானமாக விளங்கும் டீயை குடித்தால் பலருக்கும் தலைவலி தீருவதாக கூறுகிறார்கள்.

    இதைப்போல தினசரி வழக்கமான நேரத்திற்கு டீ குடிக்காவிட்டால் தலைவலி வருகிறது என சிலர் கூறுவதையும் காணமுடிகிறது. தேநீருக்கும், தலைவலிக்கும் சம்பந்தம் இருக்கிறதா என நிபுணர்கள் கூறியதாவது:-

    டீயில் கிரீன் டீ, இஞ்சி டீ, எலுமிச்சை டீ என பல்வேறு வகைகள் உள்ளன. அவற்றில் சில உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை செய்திருக்கலாம். அல்லது இல்லாமலும் இருக்கலாம்.


    பொதுவாக தேநீர் என்று சொல்லும் போது இந்தியாவில் பால் சேர்த்து தயாரிக்கப்படும் டீயை மட்டுமே குறிக்கிறோம். ஆனால் இந்த வகையான தேநீர் தலைவலியை தீர்க்க நேரடியாக உதவாது.

    தலைவலி பிரச்சனைக்கும், தேநீர் அருந்துவதற்கும் இடையே நேரடி ஆதாரம் இல்லை. ஆனால் நீரிழப்பு தலைவலியை தூண்டும் என்பதால், நீரேற்றத்திற்கு தேநீர் உதவும் என்று நினைப்பதில் பயன் உள்ளது.

    தேநீர் நாசி சைனசை குறைக்கும். மேலும் சைனசிடிசால் ஏற்படும் தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். இதே போல சிலவகையான தேநீரில் காபின் உள்ளது. இது தலைவலிக்கு தீர்வாக அமையும். காபின் ரத்த நாளங்களை சுருக்கி தலைவலி அறிகுறிகளை குறைக்கும். தேநீர் அருந்துவதால் கிடைக்கும் பயன்கள் நபருக்கு, நபர் மாறுபடும். இஞ்சி டீ ஒற்றைத்தலைவலி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.

    பொதுவாக தேநீரில் பயன்படுத்தப்படும் இஞ்சி, ஏலக்காய் மற்றும் இலவங்க பட்டை போன்ற மசாலா பொருட்களில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை வலி மற்றும் அசவுகரியத்தை குறைக்கும். 2020-ன் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இஞ்சி ஒற்றைத்தலைவலி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பயன் உள்ளதாக இருக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

    ஆனால் தேநீரில் உள்ள நறுமணம் தலைவலியை குணப்படுத்தும் என்பதை நிரூபிக்க போதுமான அறிவியல் சான்றுகள் இல்லை. தேநீரில் உள்ள மசாலா பொருட்கள் ஒரு இனிமையான விளைவை கொண்டிருக்கும். இது மன அழுத்தம் தொடர்பான தலைவலியை குறைக்கும் என்று சிலர் நம்புகிறார்கள்.

    அதே நேரம் தேநீர் தலைவலியை தூண்டும் என்றும் கருதுபவர்களும் இருக்கிறார்கள். அதிகப்படியான டீ அல்லது காபி குடிப்பது தலைவலியை ஏற்படுத்தலாம். ஏனெனில் அவற்றை சீரான இடைவெளியில் அருந்தும் போது, அவை மூளையில் உள்ள ரத்த நாளங்களை சுருக்கி தலைவலியை ஏற்படுத்துகின்றன. இது தொடர்பாக ஏராளமான மாறுபட்ட தகவல்கள் உள்ளன. ஆனால் அதற்கு அறிவியல் ஆதாரம் இல்லை என்றனர்.

    உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும், பின்பும் தேநீர் அல்லது காபி சாப்பிடுவதை தவிர்க்குமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தி உள்ளது.

    • ஏற்கனவே வாரத்துக்கு 55 மணி நேரம் வேலை செய்பவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு 35 சதவீதம் அதிகம் உள்ளது
    • வாரத்துக்கு 55 மணி நேர வேலை வருடத்துக்கு சராசரியாக 8 லட்சம் பேரின் உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைத்துள்ளது

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபல ஐடி நிறுவனமான இன்ஸ்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி வயது குறைந்த ஊழியர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் [ ஒரு நாளைக்கு சுமார் 14 மணி நேரம் வேலை] என்று கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். உடனே இதற்கு பல்வேறு நிறுவனங்களின் முதலாளிகள் மத்தியில் பெரும் ஆதரவு கிளம்பியது.

     

    ஆனால் ஊழியர்களின் உடல்நலன், மனநலன் ஆகியவற்றைக் குறித்து கிஞ்சித்தும் கவலைப்படாமல் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஊழியர்களை அடிமைகளைப் போல் நடத்துவதற்கு இது ஒப்பாகும் என்று எதிர்ப்புக்குரல்கள் எழத் தொடங்கின. இந்த விவகாரம் இபப்டியாக புகைந்து கொண்டிருந்த நிலையில் தற்போது இந்தியாவில் கார் வாடகை சர்வீஸ் துறையில் கோலோச்சி வரும் பிரபல ஓலா நிறுவனத்தின் சிஇஓ பாவிஸ் அகர்வால் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஓலா நிறுவன ஊழியர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

     

     

    ஆனால் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்வது என்பது மரணத்துக்கு கூட வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதுகுறித்து ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் பணியாற்றி வரும் பிரபல நரம்பியல் நிபுணர் சுதிர் குமார் கூறுவதாவது, ஏற்கனவே வாரத்துக்கு 55 மணி நேரம் வேலை செய்பவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு 35 சதவீதம் அதிகம் உள்ளது , இதய நோய் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் 17 சதவீதம் அதிகம் உள்ளது.

    வாரத்துக்கு 55 மணி நேர வேலை வருடத்துக்கு சராசரியாக 8 லட்சம் பேரின் உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைத்துள்ளது. மேலும், அதீத மன அழுத்தம், உடல் பருமன், பிரீ சர்க்கரை நோய், டைப் 2 சர்க்கரை நோய் ஆகிய இணை நோய்கள் மூலம் மரணம் ஏற்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

    முதலாளிகள் தங்களின் சொத்துமதிப்பை அதிகரித்துக்கொள்ள ஊழியர்களை ஆபத்தில் தள்ளுவது ஏற்புடையது அல்ல. அதிக வேலை நேரத்தால் ஊழியர் நோய்வாய்ப்படும் அவர்களை நீக்கிவிட்டு அவர்களின் இடத்தை குறைந்த சம்பளத்தில் வேறொருவரை நியமித்து அதன்மூலமும் முதலாளிகள் லாபம் சமபாதிக்க முயல்கின்றனர் என்று அவர் கண்டித்துள்ளார். 

    • உங்கள் உடல் படுக்கைக்கு முன் ஒரு கனமான உணவை ஜீரணிக்காது.
    • தாமதமான இரவு உணவு செரிமானத்தை பாதிக்கும் மற்றும் எடை அதிகரிப்புக்கு பங்களிக்கும்.

    உணவும் மருந்தும் ஒன்றே... படுக்கை காப்பி படுக்கையில் தள்ளும்... பசிக்காக சாப்பிடு ருசிக்காக சாப்பிடாதே... இதுபோன்ற பழமொழிகளை சும்மாவா சொன்னார்கள்...

    இன்றைய அவசரமான உலகில் சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள முடியாத நிலை உள்ளது. வீட்டு வேலை, பணி சுமை போன்ற காரணங்களால் நேரம் தவறி உணவு சாப்பிடுவதால் பலர் ஆரோக்கிய சீர்கேடுக்கு உள்ளாகி வருகின்றனர்.

    இன்னும் சொல்லப்போனால் இரவு நேரத்தில் 9.30 மணிக்கு மேலாகவும் பலர் உணவு உண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது தவறான பழக்கம் என்றும் மாலை 6 மணிக்கு முன்னதாகவே உணவை உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இது தொடர்பாக நியூட்ரியண்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின் முடிவுகளில், "இரவு உணவை தாமதமாக சாப்பிடுவது போது, வளர்சிதை செயல்பாட்டில் மாற்றம், குளுகோஸ் வளர்சிதை செயலிழப்புகளை ஊக்குவிக்கிறது.

    இதற்கு நேர்மாறாக, ஒருநாளின் கடைசி உணவை முன்கூட்டியே சாப்பிடும் போது, இரத்த குளுக்கோஸ், இன்சுலின் உணர்திறன், இரத்தத்தில் நேர்மறையான விளைவைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இது அதிக எடை கொண்டவர்கள் அல்லது உடல்பருமன் கொண்டவர்களிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்."


    பெங்களூரில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையின் ஆலோசகர் இரைப்பை குடல் மருத்துவ நிபுணரான டாக்டர் பிரணவ் ஹொன்னவரா சீனிவாசன் உணவு நேரத்தை மாற்றும் போது ஏற்படும் உடனடி உடலியல் மாற்றங்கள் குறித்து கூறியதாவது:-

    "இரவு உணவை இரவு 9 மணிக்கு முன்னதாக மாலை 6 மணிக்கு மாற்றுவது உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களின் அடுக்கை அமைக்கிறது. உங்கள் உடல் படுக்கைக்கு முன் ஒரு கனமான உணவை ஜீரணிக்காது. அதுவே மாலையில் உடனடி ஆற்றல் அதிகரிப்பதை நீங்கள் கவனிக்கலாம். இந்த மாற்றம் இரவுநேர நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணம் போன்ற பொதுவான செரிமான அசௌகரியங்களைத் தணிக்கும். ஏனெனில் நீங்கள் படுப்பதற்கு முன் உங்கள் வயிறு காலியாகிவிடும்."

    "மேலும், இது ஆரம்ப இரவு உணவுகள் இரவு முழுவதும் நிலையான இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுக்கும், தூக்கத்தின் தரம் மற்றும் காலை விழிப்புணர்வை மேம்படுத்தும். தாமதமான இரவு உணவு செரிமானத்தை பாதிக்கும் மற்றும் எடை அதிகரிப்புக்கு பங்களிக்கும்," என்கிறார்.

    • பார்ஸ்லியில் இருக்கும் சத்துக்கள் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கிறது.
    • சமையலில் சேர்க்கப்படும் சில மூலிகைகள், உடல் ஆரோக்கியத்துக்கும் நன்மை அளிப்பவையாக இருக்கின்றன.

    சமையலில் உணவுக்கு சுவை கூட்டுவதற்காகவும், நிறத்துக்காகவும், வாசனைக்காகவும் சேர்க்கப்படும் சில மூலிகைகள், உடல் ஆரோக்கியத்துக்கும் நன்மை அளிப்பவையாக இருக்கின்றன. அவற்றைப் பற்றிய தொகுப்பு இங்கே…

    பார்ஸ்லி: பார்ஸ்லி தோற்றத்தில் கொத்தமல்லி போன்று இருக்கும். இதன் இலை, விதை, வேர் என அனைத்தும் உணவுக்கு சுவை கூட்டுவதற்காக உபயோகப்படுத்தப்படுகிறது. பார்ஸ்லி விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், அழகு சாதனப் பொருட்கள், சோப், ஷாம்பு, வாசனைத் திரவியங்கள் தயாரிப்பில் பயன்படுகிறது. இதில், ஆன்டி-ஆக்ஸிடண்டுகள், கரோட்டினாய்டுகள், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. பார்ஸ்லியில் இருக்கும் சத்துக்கள் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கிறது. உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்துகிறது. செரிமானத்தை சீராக்குகிறது. சிறுநீர் உற்பத்தியை பெருக்குகிறது. மேலும் ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.

    பிரிஞ்சி இலை: பிரிஞ்சி இலை எனப்படும் பிரியாணி இலையை, பச்சையாக எடுத்து தேநீர் தயாரித்து பருகி வரலாம். இதனால் ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும். சர்க்கரை நோயாளிகளுக்கு பிரிஞ்சி இலை மிகவும் பயனுள்ளது. இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடண்டுகள், வைட்டமின் ஏ, சி, இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன.

    லெமன் கிராஸ்: லெமன் கிராசில் போலிக் அமிலம், பொட்டாசியம், தாமிரம், தயாமின், இரும்புச்சத்து, துத்தநாகம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதைக்கொண்டு தேநீர் தயாரித்துக் குடிக்கலாம். இதனால், உயர் ரத்த அழுத்தம் குறையும். புற்றுநோய் செல்கள் அழியும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். கல்லீரல் சுத்தமாகும். பூஞ்சைத் தொற்று குறையும். இந்த புல்லில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்யைத் தோல் பாதிப்புகளுக்குத் தடவலாம். பொடுகு பிரச்சினை இருப்பவர்கள் லெமன் கிராஸ் எண்ணெய்யை தினமும் தடவி வந்தால் நாளடைவில் பொடுகுத் தொல்லை குறைவதுடன், முடி வளர்ச்சி அதிகரிக்கும். இந்த எண்ணெய்யில் விளக்கேற்றும்போது, கொசு தொல்லை நீங்கும்.

    ஓரிகானோ: இது ஒரு சுவையூட்டி. இந்த மூலிகையைப் பசுமையாக மட்டுமின்றி, காய்ந்த நிலையிலும் பயன்படுத்தலாம். ஓரிகானோவை உணவில் சேர்த்துவந்தால் இருமல், பதற்றம், தலைவலி, ஒழுங்கற்ற மாதவிடாய், பல் வலி ஆகியவை நீங்கும். வயிறு மற்றும் சிறுநீரக பிரச்சினைகள் தீரும்.

    ரோஸ்மேரி: புதினா குடும்பத்தைச் சேர்ந்த ரோஸ்மேரி, வாசனை மூலிகைகளில் ஒன்று. இதை தேநீராகத் தயாரித்துக் குடிக்கும்போது மனச்சோர்வு நீங்கி, புத்துணர்வு கிடைக்கும். தூக்கமின்மை பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். இதில், வைட்டமின் பி6 நிறைந்துள்ளது. இதனால் நினைவாற்றல் மேம்படும். தசை வலி நீங்கும். குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் அதிகரிக்கும். மூளையின் உணர்ச்சிகள் சமநிலை அடையும்.

    • பெண்களுக்கு (நீரிழிவு உள்ள) ஆண்களை விட அதிகமாக இதயநோய் வரும்
    • இதய நோய் வராமல் தடுக்க நீரிழிவு நோயாளிகள் கீழ்கண்டவற்றை பின்பற்றலாம்

    நீரிழிவு நோயாளிகள் தங்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கா விட்டால் அது இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்பு (ஹார்ட் அட்டாக்) மற்றும் இதயத்தின் பம்ப் செய்யும் திறனை குறைத்து இதய செயலிழப்பையும் (ஹார்ட் பெயிலியர்) ஏற்படுத்துகிறது.

    நீரிழிவு நோயாளிகளுக்கு இதய பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு நீரிழிவு நோய் இல்லாதவர்களை ஒப்பிட்டு பார்க்கும்போது 2 மடங்கு அதிகம்.

    1. டைப் – 2 நோயாளிகளுக்கு உயிராபத்து அதிகம் வருவது இதய நோய்களால்

    2. மற்றவர்களை விட நீரிழிவு உள்ளவர்களுக்கு 3 – 4 மடங்கு அதிகம் வரும்

    3. பெண்களுக்கு (நீரிழிவு உள்ள) ஆண்களை விட அதிகமாக இதயநோய் வரும்.

    மார்பு வலி, மாரடைப்பு, இரத்தக்குழாய் அடைப்பு, இதனால் உடலின் பல பாகங்கள் இரணமாகி, காயப்பட்டு, பயனற்று போதல் இவையெல்லாம் நீரிழிவு ஏற்படுத்தும் அபாயங்கள்.

    இதய நோய் வராமல் தடுக்க நீரிழிவு நோயாளிகள் கீழ்கண்டவற்றை பின்பற்றலாம்:

    1) புகைப்பிடிக்கும் பழக்கம் மற்றும் மது அருந்துதல் பழக்கம் இருந்தால் அதை உடனே நிறுத்துதல்,

    2) ரத்தக் கொதிப்பு மற்றும் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருத்தல்,

    3) அதிக உடல் எடை இருந்தால், அதைக்குறைத்தல்,

    4) உங்கள் மூன்று மாத ரத்த சர்க்கரையின் சராசரியான எச்.பி.ஏ1 சி யை 7 சதவீதத்திற்கும் குறைவாக வைத்திருத்தல்,

    5) மன அழுத்தத்தை குறைத்துக்கொள்ளுதல்,

    6) தினமும் உடற்பயிற்சி செய்தல்,

    7) நார்ச்சத்து நிறைந்த உணவுகள், காய்கறிகள், கீரைகள், பழங்கள், புரதம் நிறைந்த பால், முட்டையின் வெள்ளை, கோழி இறைச்சி ஆகியவற்றை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளுதல்.

    நீரிழிவு வியாதி உள்ளவர்கள் மேல்மூச்சு, தலைச்சுற்றல், மயக்கம், தடுமாற்றம், கிறுகிறுப்பு, நெஞ்சில் பார உணர்வு, பளு அழுத்துவது போல் உணர்வு இவை இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும். இவை மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம். உடனடி இ.சி.ஜி மற்றும் சிகிச்சை தேவைப்படலாம்.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்ட பழங்களுள் ஒன்று வாழைப்பழம்.
    • ஒரு வாழைப்பழத்தில் சுமார் 100 கலோரிகள் உள்ளன.

    நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்ட பழங்களுள் ஒன்று வாழைப்பழம். இதனை உட்கொள்வது உடலுக்கு உடனடி ஆற்றலை கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்கவும் உதவும்.

    வாழைப்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், சர்க்கரை, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. மேலும் செரிமானத்துக்கு முக்கிய பங்கு வகிக்கும் நார்ப்பொருளை கொண்டுள்ளது. இது குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்த உதவும்.

    ஆனால் வாழைப்பழத்தை அதிகமாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

    ஒரு வாழைப்பழத்தில் சுமார் 100 கலோரிகள் உள்ளன. தினமும் இரண்டு வாழைப்பழங்களுக்கு மேல் சாப்பிட்டால், உங்கள் உடல் எடை வேகமாக அதிகரிக்கும். மேலும் பொட்டாசியத்தின் அளவும் மிக அதிகமாக இருப்பதால், வாழைப்பழத்தை அதிகமாக உட்கொண்டால், தலைசுற்றல், வாந்தி, நாடித் துடிப்பு அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.

    வாழைப்பழம் சாப்பிடுவதால் பல்லில் துவாரம் ஏற்படும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. ஏனெனில் இதில் நிறைய மாவுச்சத்து உள்ளது. அது பற்களுக்கு இடையில் எளிதில் ஒட்டிக்கொள்ளும். எனவே வாழைப்பழத்தை சாப்பிட்டதும் பற்களை சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதில் இருக்கும் மாவுச்சத்து பற்களில் படிந்து பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

    வாழைப்பழத்தில், வைட்டமின் பி6 அதிக அளவில் காணப்படுகிறது. அதனை அதிகம் உட்கொள்வது நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும். 'பாடிபில்டிங்' பயிற்சி செய்து கட்டுடல் அழகை பேணுவதற்காக வாழைப்பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு இந்த பிரச்சினை ஏற்படலாம். ஒவ்வாமை உள்ளவர்களுக்கும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

    பச்சை வாழைப்பழத்தில் ஸ்டார்ச் அதிக அளவில் காணப்படுகிறது. அதனை சமையலில் சேர்த்து தினமும் உட்கொண்டால், வாயு தொந்தரவு, வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும். பழுத்த வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் கலந்திருக்கும். இது செரிமானத்திற்கு நல்லது. எனினும் வாழைப்பழத்தில் தண்ணீர் குறைவாக இருப்பதால் மலச்சிக்கலை ஏற்படுத்தும். எனவே அதிகம் உட்கொள்ளக்கூடாது.

    வாழைப்பழத்தில் கிளைசெமிக் கூறுகள் உள்ளன. அவை ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச்செய்யும். நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால் வாழைப்பழங்களை குறைந்த அளவுஉட்கொள்ளுங்கள். மருத்துவரிடம் ஆலோசனை பெற்று உட்கொள்வதுதான் சரியானது.

    சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைஉள்ளவர்கள் பொட்டாசியம் நிறைந்த உணவைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவர்கள் குறைந்த அளவே வாழைப்பழம் உட்கொள்ள வேண்டும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    ×