என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முட்டை"

    • கர்ப்பிணிப் பெண்களின் கரு வளர்ச்சிக்கு முட்டை சிறந்த தேர்வாகும்
    • முட்டையில் உள்ள ஊட்டச்சத்துகள் மூளை வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

    சிறியதாக இருந்தாலும் ஒரு சக்திவாய்ந்த ஊட்டச்சத்தாக இருப்பதுதான் முட்டை. ஒவ்வொரு நாளும் 27% அமெரிக்கர்கள் முட்டையை வேகவைத்தோ, ஆம்லெட்டாகவோ அல்லது சாண்ட்விச்சின் ஒரு பகுதியாகவோ எடுத்துக்கொள்கிறார்கள். காரணம் முட்டை ஒரு முழுமையான ஊட்டச்சத்து மிகுந்த உணவாகக் கருதப்படுகிறது. ஆனால் முட்டையை தினமும் சாப்பிடுவது ஆரோக்கியமானதா? ஒவ்வொரு நாளும் ஒரு முட்டை சாப்பிடும்போது உடலில் நிகழும்  மாற்றம் என்ன? என்பது குறித்து பார்ப்போம். 

    ஒரு முட்டையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துகள்

    கலோரிகள்: 71

    மொத்த கொழுப்பு: 5 கிராம்

    புரதம்: 6.24 கிராம்

    வைட்டமின் பி12: 0.5 மைக்ரோகிராம்

    வைட்டமின் டி: 1.24 மைக்ரோகிராம்

    கால்சியம்: 24 மி.கி.

    கோலின்: 169 மி.கி. 


    கர்ப்பிணிப் பெண்களின் கரு வளர்ச்சிக்கு முட்டை சிறந்த தேர்வாகும்

    முட்டையில் உள்ள ஊட்டச்சத்து நன்மைகள்

    புரதம்

    முட்டையில் அதிகளவு புரதம் உள்ளது. இது செரிமானத்தை மெதுவாக்கும். மேலும் பசியை கட்டுப்படுத்தும். முட்டைகள் தசைகளைப் பராமரிக்கவும், திசுக்களைச் சரிசெய்யவும் உதவுகின்றன. மேலும், முட்டையின் மஞ்சள் கரு மற்றும் வெள்ளைப் பகுதியில் ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன.

    வைட்டமின் டி

    முட்டையில் நிறைந்துள்ள பலவிதமான வைட்டமின்கள் பல நன்மைகளைத் தருகின்றன. இதில் வைட்டமின் டி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி2, வைட்டமின் பி12, பயோட்டின் (Biotin), மற்றும் ஃபோலேட் ஆகியவை அடங்கும். இவை நோய் எதிர்ப்பு சக்தி, எலும்புகள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகின்றன.

    கோலின்

    செல் வளர்ச்சி, வளர்சிதை மாற்றம் மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கு அத்தியாவசியமான கோலின், முட்டையில் உள்ளது. கல்லீரலின் செயல்பாட்டை அதிகரிப்பதைத் தவிர, கோலின் கொழுப்பைக் கடத்துவதற்கும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் பயனுள்ளதாக இருக்கிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு, முட்டைகள் கருவின் வளர்ச்சிக்கு சிறந்த தேர்வாகும். ஏனெனில் அவை மூளை வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

    வைட்டமின் பி12

    இரண்டு முட்டைகள் ஒரு நாளைக்குத் தேவையான பி12- ல் மூன்றில் ஒரு பங்கை கொடுக்கின்றன. இந்த வைட்டமின் "சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்குவதற்கும், நரம்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும், ஆற்றல் வளர்சிதை மாற்றத்தை ஆதரிப்பதற்கும் அவசியம்.

    ஆக்ஸிஜனேற்றிகள்

    முட்டையில் உள்ள லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் போன்ற கரோட்டினாய்டு ஆக்ஸிஜனேற்றிகள் கண் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.   

    தினசரி முட்டை எடுத்துக்கொள்ளலாமா?

    ஒரு நாளைக்கு ஒரு முட்டை எடுத்துக் கொள்வது அனைவருக்கும் நல்லது. வயதானவர்கள், அதிக புரதத் தேவைகள் உள்ளவர்கள் ஒருநாளைக்கு இரண்டு முட்டை எடுத்துக்கொள்ளலாம். எப்போதாவது அதிகமாக சாப்பிடுவது பிரச்சனையில்லை. ஆனால் தொடர்ந்து ஒரு நாளைக்கு நான்கு அல்லது அதற்கும்மேல் சாப்பிடுவது நீரிழிவு, அதிக கொழுப்பு அல்லது இதய நோய் உள்ளவர்களுக்கு உகந்ததாக இருக்காது. அவர்கள் மருத்துவரின் ஆலோசனையை கேட்டுக்கொள்ளலாம். புரதச்சத்துக்கு வெறும் முட்டையை மட்டும் நம்பியில்லாமல், மீன் போன்ற மற்ற புரதச்சத்து நிறைந்தவைகளையும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.   

    • வீடுகளில் கொலு வைத்து ஒன்பது நாட்களும் நவராத்தி விழா கொண்டாடப்படுகிறது.
    • விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் காவல்துறையில் மனு அளித்துள்ளனர்.

    நாடு முழுவதும் நவராத்திரி விழா தொடங்கி உள்ளது. வீடுகளில் கொலு வைத்து ஒன்பது நாட்களும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில்,மத்தியப் பிரதேச மாநில தலைநகர் போபாலில் நவராத்திரி பண்டிகையை ஒட்டி அக்டோபர் 2ம் தேதி வரை இறைச்சி, மீன், முட்டை விற்கத் தடை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அரியானா மாநிலம் குருகிராமிலும் இதே போன்ற தடையை விதிக்க வேண்டும் என அப்பகுதியின் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் காவல்துறையில் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 1-ந்தேதி முதல் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீத வரி விதித்தது.
    • அமெரிக்காவில் ஒரு முட்டை ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் தினமும் சுமார் 7 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், மற்ற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இது தவிர அரபு நாடுகளுக்கு தினமும் 80 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவுக்கு கடந்த ஜூன் மாதம் இறுதியில் முதன் முதலாக கப்பலில் 1.20 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி முதல் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீத வரி விதித்தது. இதையடுத்து நாமக்கல்லில் இருந்து அமெரிக்காவுக்கு முட்டை ஏற்றுமதி நிறுத்தப்பட்டது. இதனால் 1.20 கோடி முட்டைகள் அனுப்ப முடியாத நிலை உருவாகி உள்ளது.

    நாமக்கல்லில் இருந்து ஒரு முட்டையை ரூ.4.50க்கு கொள்முதல் செய்து அமெரிக்காவுக்கு கொண்டு செல்ல ஒரு முட்டைக்கு ரூ.7.50 செலவாகிறது. இதையடுத்து அமெரிக்காவில் ஒரு முட்டை ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாமக்கல்லில் இருந்து முட்டைகள் அனுப்ப முடியாததால் அமெரிக்காவில் ரூ.20 கோடி மதிப்பிலான முட்டை விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து முட்டை ஏற்றுமதியாளர் சங்க தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறுகையில், தினசரி நாமக்கல் மண்டலத்தில் இருந்து 7 கோடி முட்டைகள் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறோம். இதில் ஒருமுறை மட்டும் அமெரிக்காவுக்கு அனுப்பிய 1 கோடியே 20 லட்சம் முட்டைகள் பெரிய விஷயமல்ல. இந்த முட்டைகளை இந்தியாவிலேயே வேறு பகுதியில் விற்பதற்கு நடவடிக்கை எடுப்போம். இதனால் முட்டைகள் பெரிய அளவில் தேக்கம் அடையாது.

    • நாம் உண்ணும் பல உணவுகளில் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் நிறைவுறா கொழுப்பு இரண்டுமே இருக்கின்றன.
    • வயதானவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முழு அவித்த முட்டை சாப்பிடலாம்.

    உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான சத்துக்கள் அவித்த முட்டையில் அடங்கியுள்ளன. நாம் உண்ணும் பல உணவுகளில் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் நிறைவுறா கொழுப்பு இரண்டுமே இருக்கின்றன.

    கொழுப்பு நீக்கப்படாத முழுமையான பால், வெண்ணெய், பாலாடைக்கட்டி, தேங்காய் எண்ணெய், சில தாவர எண்ணெய்கள், சிவப்பு இறைச்சி, வறுத்த வேர்க்கடலை, சாக்லெட், எண்ணெய்யில் முக்கி தயாரிக்கப்பட்ட அனைத்து வறுத்த உணவுகள், இன்னும் பல உணவுகளில் நிறைவுற்ற கொழுப்பு அதாவது கெட்ட கொழுப்பு அதிக அளவில் இருக்கின்றது. அதனால் நல்ல கொழுப்பு இந்த உணவுகளில் இல்லை என்று அர்த்தமில்லை.

    வால்நட் அதாவது அக்ரூட் பருப்பு, கடலை எண்ணெய், ஆலிவ் எண்ணெய், அவகேடோ பழம், பாதாம் பருப்பு, பூசணி விதை, எள், முட்டை, சால்மன் மீன், டூனா மீன், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய், இன்னும் பல உணவுகளில் நிறைவுறா கொழுப்பு அதாவது நல்ல கொழுப்பு அதிக அளவில் இருக்கின்றது. அதனால் கெட்ட கொழுப்பு இந்த உணவுகளில் இல்லை என்று அர்த்தமில்லை.

    முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், செலினியம், பாஸ்பரம், கொலின், லூட்டின், ஆன்டிஆக்ஸிடன்ட் என்று சொல்லப்படும் ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள் மற்றும் உடலுக்குத் தேவையான முக்கிய சத்துக்கள் உள்ளன.

    நாம் அன்றாடம் சாப்பிடும் வழக்கமான உணவுகளில் என்ன கொழுப்புச் சத்துள்ள உணவை எடுத்துக் கொள்கிறோமோ அதே அளவு கொழுப்புதான் முட்டையின் மஞ்சள் கருவிலும் இருக்கின்றது. ஆனால் உங்களுக்கு இதயப் பிரச்சனை, அதிக ரத்த அழுத்தம் எதுவும் இல்லையென்றால், அதிக புரதச்சத்து உங்கள் உடலுக்கு வேண்டுமென்றால் 2 முட்டையின் வெள்ளைப் பகுதியுடன் ஒரு முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து சாப்பிடலாம். வயதானவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முழு அவித்த முட்டை சாப்பிடலாம்.

    இதயப் பிரச்சனை, அதிக ரத்தக் கொழுப்பு, சர்க்கரை நோய் இருப்பவர்கள் வாரத்துக்கு 3 அல்லது 4 முட்டைகள் சாப்பிடலாம். ஏனென்றால் மஞ்சள் கருவில் நிறைவுற்ற கொழுப்பு அதாவது கெட்ட கொழுப்பு அதிகமாக இருக்கிறது. இது ரத்தக் கெட்ட கொழுப்பு அளவைக் கூட்டும். வயது அதிகம், நடமாட்டம் குறைவு என்றால் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் செரிமானப் பிரச்சனை ஏற்படலாம். தினமும் உடற்பயிற்சி செய்தால் சேர்த்துக் கொள்ளலாம்.

    • முட்டை ஒருங்கிணைப்புக்குழு நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலையை நிர்ணயம் செய்கிறது.
    • வெயில் காலங்களில் முட்டையின் நுகர்வு குறையும்.

    நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 1000-த்திற்கும் மேற்பட்ட முட்டை கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் 9 கோடிக்கும் அதிகமான கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தற்போது தினசரி 7 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலையை நிர்ணயம் செய்கிறது.

    கடந்த 5-ந் தேதி 500 காசுகளாக இருந்த முட்டை விலை படிப்படியாக அதிகரித்து நேற்று முன்தினம் 545 காசுகளாக இருந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயர்த்தி 550 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது. 8 கோடியாக இருந்த முட்டை உற்பத்தி கோடை காலமான தற்போது 7 கோடியாக சரிந்ததால் தொடர்ந்து விலை உயர்ந்து வருவதாக பண்ணையாளர்கள் கூறி உள்ளனர்.

    இது குறித்து கோழிப்பண்ணையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    குறிப்பாக கோடை காலங்களில் முட்டை கோழிகள் தீவனத்தை சரியாக எடுத்து கொள்ளாததால் முட்டை உற்பத்தி குறைவது வழக்கம். மேலும் தற்போது வெயில் சுட்டெரித்து வருவதால் கோழிகள் சரியாக உணவு எடுத்து கொள்ளாததால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி வழக்கத்தை விட 1 கோடிக்கும் மேல் சரிந்துள்ளது.

    மேலும் வழக்கமாக குளிர் காலங்களில் முட்டையின் நுகர்வு அதிகரிக்கும். வெயில் காலங்களில் முட்டையின் நுகர்வு குறையும். ஆனால் தற்போது தமிழகம் மற்றும் கேரளாவில் வெயில் காலத்திலும் முட்டையின் நுகர்வு வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. இதனால் முட்டையின் தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.

    முட்டையின் உற்பத்தி குறைந்த நிலையில் அதன் தேவை அதிகரித்துள்ளதால் முட்டையின் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது . இதனால் ஒருங்கிணைப்புக்குழு நிர்ணயிக்கும் விலைக்கே வியாபாரிகள் முட்டைகளை பண்ணைகளில் ஒவ்வொரு நாளும் எடுத்து செல்கிறார்கள். இதனால் பண்ணைகளில் முட்டைகள் தேக்கம் தவிர்க்கப் பட்டுள்ளது. இனி வரும் நாட்களிலும் முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி விலை 97 ரூபாய்க்கும், கறிக்கோழி விலை 105 ரூபாயில் இருந்து 100 ரூபாயாகவும் நேற்று குறைந்துள்ளது.

    • தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயிக்கும் விலைக்கு பணியாளர்களிடமிருந்து வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்கின்றனர்.
    • முட்டை கொள்முதல் விலையானது தற்போது திருவிழா பண்டிகை காலங்களில் தேவையை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது.

    நாமக்கல்:

    தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் முட்டை தொழிலுக்கு பெயர் பெற்று திகழ்கிறது நாமக்கல். இங்கிருந்து வெளி மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் முட்டை விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன. நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 4½ கோடிக்கும் மேற்பட்ட முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3½ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயிக்கும் விலைக்கு பணியாளர்களிடமிருந்து வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்கின்றனர். இந்த முட்டை கொள்முதல் விலையானது தற்போது திருவிழா பண்டிகை காலங்களில் தேவையை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த மாதம் 1-ந் தேதி ரூ.4.10-க்கு முட்டை கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

    இது படிப்படியாக உயர்ந்து நேற்று முன்தினம் கொள்முதல் விலை 510 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் துணைத் தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:-

    தமிழகத்தில் முட்டை கொள்முதல் விலை 510 காசாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும் நாமக்கல் முட்டை விற்பனையை நிர்ணய ஆலோசனை குழு 30 காசு குறைத்து விற்க பரிந்துரைக்கிறது. அதன்படி ஒரு முட்டையை 480 காசுக்கே வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். ஆனால் ஹைதராபாத் மண்டலத்தில் கொள்முதல் விலை 500 காசாக நிர்ணயம் செய்யப்பட்ட அதே விலைக்கு வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர்.

    இதனால் விலை குறைவாக உள்ள தமிழக முட்டைக்கு அதிக அளவில் ஆர்டர் வழங்குகின்றனர் .தினமும் 10 லோடு என 35 லட்சம் முட்டைகள் இங்கிருந்து மும்பை, கல்கத்தா போன்ற வடமாநிலங்களில் உள்ள முக்கிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. வட மாநிலங்களில் கொள்முதல் விலையை உயர்த்தும்போது தமிழகத்திலும் முட்டை விலை உயர்த்தப்படுகிறது. இனிவரும் நாட்களிலும் முட்டை விலை உயர வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகம், கேரளாவில் 510 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை மேலும் 5 காசுகளை உயர்த்தி 515 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.
    • முட்டை கோழி 95 ரூபாய்க்கும், கறிக்கோழி 115 ரூபாய்க்கும் என விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில் முட்டை உற்பத்தி மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதில் தமிழகம், கேரளாவில் 510 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை மேலும் 5 காசுகளை உயர்த்தி 515 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    நாட்டின் பிற மண்டல முட்டை விலை நிலவரம் வருமாறு, சென்னை-530 காசு, ஹைதராபாத்-499 காசு, விஜயவாடா-509, பார்வலா-504, மும்பை-556, மைசூர்-520, பெங்களூரு-520, கொல்கத்த-580, டெல்லி-530 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    அதேபோல முட்டை கோழி 95 ரூபாய்க்கும், கறிக்கோழி 115 ரூபாய்க்கும் என விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

    • கத்தாரில் உலக கோப்பை கால்பந்து போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு ஏற்றுமதி செய்யப்படும் முட்டையின் எண்ணிக்கை 3 மடங்கு உயர்ந்துள்ளது.

    நாமக்கல் :

    நாமக்கல் மண்டலத்தில் தினமும் 4.50 கோடி முட்டை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கிருந்து தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், கத்தார் நாட்டில் உலக கோப்பை கால்பந்து போட்டி தொடங்கியுள்ள நிலையில், நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு முட்டை ஏற்றுமதி 3 மடங்கு அதிகரித்துள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் இருந்து அதிகளவில் முட்டை ஏற்றுமதியாகும் நாடுகளில் கத்தாரும் ஒன்று. கத்தாருக்கு மட்டும் 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், கால்பந்து போட்டி காரணமாக 1.50 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன என ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.

    • வெளிநாட்டுக்கு முட்டை ஏற்றுமதி உயர்ந்துள்ளதாலும், நுகர்வு அதிகரித்துள்ளதாலும் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.
    • ரூ.102-க்கு விற்கப்பட்ட முட்டை கோழி விலை, ரூ.5 உயர்த்தி ரூ.107 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில் முட்டை உற்பத்தி மற்றும் மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதை அடுத்து முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டது.

    இதனால் 535 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை 540 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. வெளிநாட்டுக்கு முட்டை ஏற்றுமதி உயர்ந்துள்ளதாலும், நுகர்வு அதிகரித்துள்ளதாலும் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

    நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:-

    சென்னை-575, ஹைதராபாத்-530, விஜயவாடா-529, பார்வாலா-538, மும்பை-590, மைசூர்-550, பெங்களூரு-550, கொல்கத்தா-593, டெல்லி-560 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    நாமக்கல்லில் நடந்த பண்ணையாளர்கள் வியாபாரிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை கோழி உற்பத்தி விலை நிர்ணயம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    ரூ.102-க்கு விற்கப்பட்ட முட்டை கோழி விலை, ரூ.5 உயர்த்தி ரூ.107 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. கறிக்கோழியில் எவ்வித மாற்றமும் செய்யாமல் ஒரு கிலோ ரூ.98 என நிர்ணயம் செய்யப்பட்டது.

    • முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு 545 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது.
    • பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ.98 ஆகவும், முட்டை கோழி விலை ரூ.107 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் மண்டல ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் முட்டை விலை நிர்ணயம் குறித்து பண்ணையாளரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. பிற மண்டலங்களில் தொடர்ந்து விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருவதால் இங்கும் மாற்றம் செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

    இதை அடுத்து முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு 545 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது. இதற்கிடையே பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ.98 ஆகவும், முட்டை கோழி விலை ரூ.107 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

    • மத்திய சமையல் கூடத்தில் முட்டை அவிக்கப்பட்டு 293 பள்ளிகளில் உள்ள 50 ஆயிரம் மாணவர்களுக்கு ஒரு லட்சம் முட்டை அனுப்பும் பணி இன்று மீண்டும் தொடங்கியது.
    • அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பஸ்களில் இலவச பயணம் செய்யலாம்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வாரத்திற்கு 2 முட்டை மதிய உணவில் வழங்கப்பட்டு வந்தது.

    கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பதிலாக அரிசியும், பணமும் வழங்கப்பட்டது. கொரோனாவுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் முட்டை வழங்கப்படவில்லை.

    இதனிடையே பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை அக்சயா என்ற தன்னார்வ நிறுவனம் ஏற்றுக்கொண்டது. இந்த தன்னார்வ நிறுவனம் சைவ உணவை மட்டும்தான் வழங்கி வருகிறது. இதனால் மாணவர்களுக்கு முட்டை கிடைக்கவில்லை. அதேநேரத்தில் பள்ளி மாணவர்களுக்கு முட்டையுடன் மதிய உணவு வழங்க அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர்.

    இதையடுத்து இன்று முதல் மாணவர்களுக்கு பள்ளிகளில் முட்டை வழங்கப்பட்டது. மத்திய சமையல் கூடத்தில் முட்டை அவிக்கப்பட்டு 293 பள்ளிகளில் உள்ள 50 ஆயிரம் மாணவர்களுக்கு ஒரு லட்சம் முட்டை அனுப்பும் பணி இன்று மீண்டும் தொடங்கியது.

    இதற்கான பணியை பள்ளி கல்வித்துறை துணை இயக்குனர் கொஞ்சிமொழி குமரன் நேரில் பார்வையிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    வாரத்தில் 2 நாட்கள் முட்டை வழங்கப்படுகிறது. முதல் நாள் 147 பள்ளி மாணவர்களுக்கும் அடுத்து 146 பள்ளி மாணவர்களுக்கும் என சுழற்சி முறையில் கொடுக்கப்பட உள்ளது.

    இதேபோல கொரோனா முடிவுற்று பள்ளி தொடங்கிய பிறகு மாணவர்களுக்கு இயக்கப்படும் ஒரு ரூபாய் கட்டண பஸ் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி மாணவர்கள் கட்டணம் செலுத்தி பள்ளி, கல்லூரிக்கு சென்று வந்தனர். பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என அரசியல் கட்சிகள், இயக்கங்கள் வலியுறுத்தி வந்தன.

    இதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டணமின்றி இலவச பஸ் இயக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார். இதன்படி இன்று முதல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் இயக்கப்படுகிறது.

    இந்த இலவச பஸ் சேவையை பிற்பகலில் கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார். அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பஸ்களில் இலவச பயணம் செய்யலாம்.

    நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், சாய்.ஜெ.சரவணன்குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • இந்திய துணைத் தூதரின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை.
    • திருச்சி விமான நிலையத்திலிருந்து 90 ஆயிரம் முட்டைகள் அனுப்பி வைப்பு

    மலேசியாவில் தற்போது நிலவி வரும் முட்டை தட்டுப்பாட்டை சமாளிக்க உதவுமாறு கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகத்திடம், மலேசிய உணவு பாதுகாப்பு அமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார். இதன் அடிப்படையில், இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்ய மலேசிய அரசு தயாராக உள்ளதாக கோலாலம்பூரில் உள்ள இந்திய துணைத் தூதர், மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார். 


    இதையடுத்து நாமக்கல்லில் இருந்து முதல் முறையாக மலேசியாவிற்கு முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டதாக வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய மண்டல தலைவர் ஷோபனா குமார் தெரிவித்துள்ளார்.

    திருச்சி விமான நிலையத்திலிருந்து சுமார் 90 ஆயிரம் முட்டைகள் விமானத்தில் ஏற்றப்பட்டு மலசியாவிற்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த முட்டைகள் சோதனைக்கு பிறகு அங்கீகரிக்கப்படும் என்றும், அதன் பின்னர் நாமக்கல்லில் இருந்து மலேசியாவிற்கு முட்டை ஏற்றுமதி தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

    ×