search icon
என் மலர்tooltip icon

    கடலூர்

    • சென்னையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்றபோது விபத்து.
    • விழுப்புரம்- நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் இந்த கோர விபத்து நடந்துள்ளது.

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே விழுப்புரம்- நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் லாரியும் காரும் நேருக்குநேர் பயங்கரமாக மோதிக்கொண்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு காரில் வரும்போது கடலூர் மாவட்டம் சிதம்பரம் பி.முட்லூர் கிராமம் அருகே கண்ணிமைக்கும் நேரத்திற்குள் லாரியும் காரும் மோதிக்கொண்டன. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கின. காரில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர். விபத்து ஏற்பட்டதும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடல்களை மீட்டு அரசு மருத்துவனைக்கு உடல்பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், தப்பியோடிய லாரி டிரைவர் தேடிவருகின்றனர்.

    உயிரிழந்தவர்கள் அபனான் (4), அராபத் நிஷா (27), யாசர் அராபத் (38), முகமது அன்வர் (55), ஷாகிதா பேகம் (60) எனத் தெரியவந்துள்ளது.

    • 123 ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.
    • பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நெய்வேலி:

    என்.எல்.சி. 2-வது சுரங்கத்தை தனியார் ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகையில் ஈடுப்பட்டனர்.

    கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு மொத்தம் 3 சுரங்கள் உள்ளது. இதில் 2-வது சுரங்கம் மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ளது.

    இந்த சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியை என்.எல்.சி.நிறுவனம் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் டெண்டர் விட்டுள்ளது. இங்கு தனியார் நிறுவனம் சார்பில் 123 ஒப்பந்த தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக வேலை செய்து வருகின்றனர்

    இந்த தனியார் ஒப்பந்தம் நேற்றுடன் முடிவடைந்து விட்டது. இதனால் இதில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் வேலைக்கு வரவேண்டாம் என தனியார் நிறுவனம் கூறியதாக தெரிகிறது. இதனால் வேதனையடைந்த தொழிலாளர்கள் இன்று 2-வது சுரங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

    என்.எல்.சி. நிறுவனமே எங்களை ஒப்பந்த தொழிலாளர்களாக நியமிக்க வேண்டும் என அவர்கள் கோஷம் எழுப்பினார்கள்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    போராட்டத்தில் ஈடுப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுடன் என்.எல்.சி. உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • பெண்கள் முன்னேறினால் தான் அந்த நாடு முன்னேறும்.
    • பெண்கள் நன்கு கல்வி கற்று சிறந்து விளங்க வேண்டும் அறிவுரைகளை வழங்கினார்.

    பண்ருட்டி:

    தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பல்வேறு மாவட்டங்களுக்கு அவ்வப்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு மேல் நிலைப்பள்ளி இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

    முன்னதாக அவரை பண்ருட்டி நகர் மன்ற தலைவர் ராஜேந்திரன், பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஜேப்பியார் ஸ்டீல்ஸ் ஜாகிர் உசேன்,பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ஆடிட்டர் தியாகராஜன் மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மாணவர்கள் வரவேற்றனர்

    இதில் மாவட்ட, நகர தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து பண்ருட்டி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஆய்வுசெய்தார். அப்போது பெண்கள் முன்னேறினால் தான் அந்த நாடு முன்னேறும். எனவே பெண்கள் நன்கு கல்வி கற்று சிறந்து விளங்க வேண்டும் அறிவுரைகளை வழங்கினார்.

    பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நகர் மன்ற தலைவர் ராஜேந்திரன் அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கினார்.

    • 350 மனுக்களின் நகல்களை மூட்டையாக கட்டி மனு அளிக்க வந்தார்.
    • அக்கடவல்லி ஊராட்சியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த அக்கடவல்லியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர் ஊராட்சி மன்ற 1-வது வார்டு உறுப்பினராக உள்ளார்.

    இன்று காலை இவர் ஏற்கனவே அளித்த 350 மனுக்களின் நகல்களை மூட்டையாக கட்டி கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அளிக்க வந்தார்.

    அந்த மனுவில், அக்கடவல்லி ஊராட்சியில் கடந்த 1.5.2011 முதல் 28.4.2021 வரை ரூ.9 கோடி வரை முறைகேடு நடைபெற்றுள்ளது.

    இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகம், முதலமைச்சரின் தனிப்பிரிவு, லஞ்ச ஒழிப்புத்துறை என பல்வேறு துறை அதிகாரியிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    மேலும் கடந்த 2021-ம் ஆண்டு கடலூர் வந்த முதல்-அமைச்சரிடம் மனு கொடுத்ததன் அடிப்படையில், எங்கள் பகுதிக்கு விசாரணை நடத்த வந்த அதிகாரிகளும் ஊராட்சியில் முறைகேடுகள் அதிக அளவில் நடைபெற்றுள்ளது. அதனால் இதனை எங்களால் விசாரிக்க முடியாது என்று கூறிவிட்டு சென்று விட்டனர்.

    அதன் பிறகு தற்போது வரை விசாரணை நடைபெறவில்லை. அதனால் முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ராஜகோபுரத்தில் சுதந்திர தின விழா தேசிய கொடி ஏற்றப்பட்டது.
    • நடராஜன் திருவடிகளில் வைத்து பூஜைகள் செய்யப்பட்டு ஏற்றப்பட்டது.

    சிதம்பரம்:

    உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் கீழரத வீதியில் உள்ள 142 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தில் சுதந்திர தின விழா தேசிய கொடி ஏற்றப்பட்டது.

    நடராஜர் கோவில் சித் சபையில் முதற்கால பூஜை நடைபெற்று முடிந்த பின்னர் தேசியக் கொடியானது நடராஜன் திருவடிகளில் வைத்து பூஜைகள் செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க பொது தீட்சிதர்கள் செயலர் வெங்கடேச தீட்சதர் தலைமையில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு ராஜ கோபுரத்தில் கொடி யேற்றப்பட்டது.

    சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழா வருடத்திற்கு இரண்டு முறை இந்திய தேசியக்கொடி சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கீழ் கோபுரத்தில் ஏற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆற்றில் நூற்றுக்கணக்கான முதலைகள் உள்ளன.
    • ஆற்றங்கரை பகுதிகளில் கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுக்கூடலூர், பழைய நல்லூர், அகர நல்லூர், வல்லம்படுகை, வேளக்குடி, வையூர், கண்டியாமேடு உள்ளிட்ட கிராம பகுதிகளை ஒட்டி கொள்ளிடம் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் நூற்றுக்கணக்கான முதலைகள் உள்ளன.

    குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாகவே பழைய கொள்ளிடம் ஆற்றுக்கு குளிக்க செல்பவர்கள், கால் கழுவச் செல்பவர்களை, முதலைகள் கடித்து இழுத்து செல்கின்றன. இதனை தடுக்கும் வகையில் முதலை நடமாட்டம் உள்ள பகுதிகளில் கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றின் கரையில் உள்ள காட்டுக்கூடலூர் கிராம மக்களை பெரிய முதலை ஒன்று அச்சுறுத்தி வந்தது.

    இந்த நிலையில் ஆற்றின் கரையில் கால் கழுவ சிறுவன் சென்றான். அப்போது ஆற்றங் கரையில் பெரிய முதலை ஒன்று படுத்து கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவன் கூச்சலிட்டபடியே அலறி அடித்து ஓடினான்.

    தகவல் அறிந்த கிராம மக்கள் கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு வந்தனர். அங்கிருந்த சுமார் 400 கிலோ எடையும் 12 அடி நீளமும் கொண்ட முதலையின் கால்கள் மட்டும் வாயை கட்டினர். பின்னர் முதலையை தூக்கி மினி லாரியில் வைத்து எடுத்து சென்று வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    பொதுமக்கள் கொண்டு வந்து கொடுத்த முதலையை சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி நீர் தேக்கத்தில் வனத்துறையினர் பாதுகாப்பாக விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • போலீசார் விசாரணை நடத்தி கடந்த பிப்ரவரி மாதம் அருண்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • வழக்கில் படூரை சேர்ந்த சதீஷ் தான் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார்.

    கடலூர்:

    பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த மாதம் அவரது வீட்டின் அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான திருவேங்கடம், போலீஸ் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு கடிதம் ஒன்று வந்தது. அதில், தனது நண்பனை இந்த கொலை வழக்கில் சிக்க வைத்துள்ளதாகவும். அவனை விடுவிக்காவிட்டால் உங்கள் குடும்பத்தையே காலி செய்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.

    இந்த கடிதத்தை எழுதியவர் கேளம்பாக்கத்தை அடுத்த படூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த சதீஷ் என்று எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து செம்பியம் போலீசார், படுரில் இருந்த சதீஷை. பிடித்து நடத்திய விசாரணையில் சதீஷ் அப்பாவி என்பதும், தனியார் பள்ளி ஒன்றில் வேன் டிரைவராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் யார் என்று கூட தெரியாத படூரை சேர்ந்த சதீஷ் பெயரை ஏன் பயன்படுத்த வேண்டும் என்ற கோணத்தில் கேளம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், போலீசாருக்கு அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தது.

    அதில், செங்கல்பட்டை சேர்ந்த ரோஸ் நிர்மலா என்பவர் கடலூர் மாவட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக சில ஆண்டுகளுக்கு முன்பு பணிபுரிந்தபோது அவரிடம் கடலூரை சேர்ந்த, தனியார் நர்சரி பள்ளி தாளாளர் அருண்ராஜ் பள்ளி அங்கீகாரம் தொடர்பாக மனு அளித்த போது, அதை ரோஸ் நிர்மலா நிராகரித்துள்ளார். பின்னர், அந்த பதவியில் இருந்து ரோஸ் நிர்மலா ஓய்வும் பெற்றுவிட்டார். இந்நிலையில், தனது பள்ளிக்கு அங்கீகாரம் வழங்க மறுத்ததால் அவரை பழி வாங்குவதற்காக அருண் ராஜ் பல்வேறு செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

    ரோஸ் நிர்மலாவின் செங்கல்பட்டு வீட்டின் முன்பும், அவரது மகள் வசிக்கும் படூர் வீட்டின் முன்பும் பல்வேறு அருவருக்கத்தக்க தகவல்களை போஸ்டர்களாக ஒட்டி வந்துள்ளார்.

    மேலும், ரோஸ் நிர்மலாவின் மகள் குறித்தும் அவரது வீடு, கடை ஆகிய பல்வேறு இடங்களிலும் போஸ்டர்களை ஒட்டி அசிங்கப்படுத்தி வந்துள்ளார். இதுகுறித்து ரோஸ் நிர்மலா அப்போதைய தாம்பரம் போலீஸ் கமிஷ்னர் அமல்ராஜிடம் புகார் மனு அளித்ததை தொடர்ந்து, கேளம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி கடந்த பிப்ரவரி மாதம் அருண்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் படூரை சேர்ந்த சதீஷ் தான் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். இதனால் சாட்சிகளை கலைக்கவும், மிரட்டவும் அருண்ராஜ் இந்த வேலையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால், அருண்ராஜை பிடிக்க கேளம்பாக்கம் போலீசார் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதிக்கு விரைந்து வந்தனர். அங்கு அருண்ராஜை கைது செய்து சென்னை அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • தி.மு.க.ஆட்சி வந்த பிறகு முதலமைச்சர் உத்தரவின் பேரின் முதற்கட்டமாக 1850 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
    • மாணவர்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய பள்ளிகளுக்கு நேரில் சென்று அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வாசல் கிராம வெள்ளாற்றில், கடந்த 2015-ம் ஆண்டு அ.தி.மு.க.ஆட்சியில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்தது.

    இதனால், தங்கள் பகுதியில் நீர் ஆதாரம் பாதிப்பதாக குவாரியை மூடக்கோரி, ஆற்றின் மறுகரையில் உள்ள அரியலூர் மாவட்டம், சன்னாசி நல்லூர் கிராம மக்களுடன் அப்போதைய குன்னம் தி.மு.க. எம்.எல்.ஏ வாக இருந்து வந்த சிவசங்கர் தலைமையில், அனைத்துக் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டு கிராம மக்கள் தடையை மீறி குவாரிக்குள் நுழைந்து அங்கிருந்த வாகனங்களைத் சேதப்படுத்தியதால் போலீசார் தடியடி நடத்தினர். இச்சம்பவத்தில் தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு கடலூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை தொடர்பாக இன்று காலை கடலூர் நீதிமன்றத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேரில் ஆஜரானார். விசாரணை வருகிற 22-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    கோர்ட்டில் ஆஜரான போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்ததாவது-

    தமிழகத்தில் தாழ்தள பஸ்கள் இயக்காமல் மாற்றுத்திறனாளிகளுக்கு பாதிப்பு இருந்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த நிலையில் முதற்கட்டமாக முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் மாற்றுத்திறனாளிகளுக்காக தாழ்த்தள பஸ்சை சென்னை மாநகராட்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

    அடுத்த கட்டமாக கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய பகுதிகளுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனைத் தொடர்ந்து பிற பகுதிகளுக்கு தாழ்தள பேருந்து இயக்க வேண்டுமானால் அந்த பகுதிகளில் உள்ள சாலையை ஆய்வு செய்து படிப்படியாக இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். போக்குவரத்து ஊழியர்களின் ஊதியம் தொடர்பாக இந்த மாதம் கடைசியில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெறும். பின்னர் முழு பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கு பணப்பலன் கிடைக்கவில்லை. ஆனால் தி.மு.க.ஆட்சி வந்த பிறகு முதலமைச்சர் உத்தரவின் பேரின் முதற்கட்டமாக 1850 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த கட்டமாக நிதி வழங்க நிதிதுறையிடம் அனுமதி கேட்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் மாணவர்கள் பாதுகாப்பாக பஸ்சில் பயணம் மேற்கொள்வதற்கு போக்குவரத்து துறை மற்றும் வட்டார போக்குவரத்து சார்பில் அதிகாரிகள் அந்தந்த பள்ளிகளுக்கு நேரில் சென்று உரிய முறையில் அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

    வருங்காலங்களில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜெய்ஸ்ரீராம் சொல்லுவார். அமைச்சர்களும் ஜெய் ஸ்ரீ ராம் என சொல்ல ஆரம்பித்து விடுவார்கள் என அண்ணாமலை தெரிவித்து இருந்தார். அண்ணாமலை சரியான முறையில் அப்டேட் ஆகவில்லை. ஏனென்றால் பிரதமர் நரேந்திர மோடி ராமரை கைவிட்டு விட்டார்.

    அதற்கு மாறாக தற்போது ஜெய் ஜெகநாத் என்பவரை கைபிடித்து உள்ளார். மேலும் பதவி ஏற்பதற்கு முன்பு பிரதமர் உள்ளிட்ட அனைவரும் ஜெய் ஸ்ரீ ராம் என கூறினார்கள். தற்போது பதவி ஏற்புக்கு பிறகு பிரதமர் மோடி ஜெய் ஸ்ரீ ராமை விட்டுவிட்டு ஜெய் ஜெகநாத் என முழக்கம் ஏற்படுத்தி கட்சி தாவி விட்டார். ஆகையால் அண்ணாமலை சரியான முறையில் அப்டேட் ஆன பிறகு அதற்கான பதில் தெரிவிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மழையில் நனைந்த நெல்மணிகள் அனைத்தும் முளைக்கும் தருவாயில் உள்ளது.
    • நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுகிராமம், குடுமியான் குப்பம், அங்குசெட்டிப் பாளையம், சிறுவத்தூர், ஏரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் அதிகமாக பயிரிடப்படுகிறது. இந்த பகுதியில் அறுவடை செய்யப்படும் நெல் சேமக் கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் பண்ருட்டி பகுதியில் நள்ளிரவு வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக சேமக்கோட்டை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழை நீர் குளம் போல் தேங்கி விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 500 மூட்டை நெல்மணிகள் நனைந்து சேதம் அடைந்தது.

    தற்போது மழையில் நனைந்த நெல்மணிகள் அனைத்தும் முளைக்கும் தருவாயில் உள்ளது. இதனைக் கண்டு செய்வதறியாமல் தவித்த விவசாயிகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் மழை நீரை வடிகட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு பகல் பாராமல் உழைத்து நெல்மணிகளை அறுவடை செய்து விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட இடத்தில் நனைந்து சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    மேலும் பாதுகாப்பான இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கார், முன்னாள் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி:

    சென்னையை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பண்ருட்டிக்கு நேற்று வந்தனர். இவர்கள் முத்தாண்டிகுப்பம் கருப்பசாமி கோவிலுக்கு சென்றனர். அங்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற நள்ளிரவு பூஜையில் பங்கேற்று வழிபட்டனர்.

    பின்னர் இன்று அதிகாலை முத்தாண்டிக்குப்பத்தில் இருந்து பண்ருட்டிக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பம் கிராமம் அண்ணா பல்கலைக்கழகம் அருகில் ஆட்டோ வந்து கொண்டிருந்தது. அப்போது சிதம்பரத்திலிருந்து பண்ருட்டிக்கு வந்து கொண்டிருந்த காரின் டயர் திடிரெனவெடித்தது.

    இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னாள் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி கவுரி (வயது 56), பண்ருட்டி சூரகுப்பத்தை சேர்ந்த அஞ்சாபுலி (40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மேலும், சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தை சேர்ந்த பரமேஸ்வரி (65), பண்ருட்டி திருவள்ளுவர் நகர் நிலவழகி (45), பண்ருட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த மணிகண்டன் (35), ஆட்டோ டிரைவர் பண்ருட்டி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் (63), சென்னை மயிலாப்பூரை சேர்ந்த லில்லி (52) ஆகிய 5 பேர் படுகாயமடைந்தனர்.

    அவ்வழியே சென்றவர்கள் படுகாயமடைந்து கிடந்த 5 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பலராமன், சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர்.

    விபத்தில் இறந்த 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆடி அமாவாசை வழிபாடு முடிந்து திரும்பிய 2 பேர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • ஆடி அமாவாசையும் ஆடி பெருக்கும் பூச நட்சத்திர தினத்தன்று வந்ததால், வழக்கத்தை விட திரளான பக்தர்கள் ஜோதி தரிசனத்தில் பங்கேற்றனர்.
    • வள்ளலார் சித்திபெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகையில், நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு வழிபாடும், மவுன தியானமும் நடைபெற்றது.

    வடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபை உள்ளது. இங்கு மாதந்தோறும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுவது வழக்கம். அதன்படி ஆடி மாத பூச நட்சத்திர தினத்தையொட்டி நேற்று இரவு 7.45 மணிக்கு 6 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் திரளானோர் கலந்து கொண்டு அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி என்ற வள்ளலாரின் மகாமந்திரத்தை உச்சரித்தவாறு ஜோதி தரிசனம் மேற்கொண்டனர்.

    ஆடி அமாவாசையும் ஆடி பெருக்கும் பூச நட்சத்திர தினத்தன்று வந்ததால், வழக்கத்தை விட திரளான பக்தர்கள் ஜோதி தரிசனத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து வள்ளலார் சித்திபெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகையில், நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு வழிபாடும், மவுன தியானமும் நடைபெற்றது.

    • 7200 புதிய அரசு பஸ்கள் வாங்க நடவடிக்கை.
    • அரசியல் கட்சியினர் புகார்.

    கடலூர்:

    போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கடலூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக நேரில் ஆஜரானேன். இன்று எங்களுக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டுள்ளது. அடுத்த வாய்தா ஆகஸ்டு 3-ந்தேதி நடைபெற உள்ளது.

    போக்குவரத்து துறை எக்காரணத்தைக் கொண்டும் தனியார்மயமாக்கபடாது. ஏனென்றால் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் தற்போது 7200 புதிய அரசு பஸ்கள் வாங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    இதில் முதற்கட்டமாக ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டங்களாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

    ஆனால் தனியார் மயமாக்க மாற்ற எண்ணினால் குறைந்த காலத்தில் அனைத்து பஸ்களும் வாங்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிரைவர், கண்டக்டர் பணிக்கு 685 பேர் பணிக்கு எடுத்து அவர்கள் பணியில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

    மேலும் மற்ற போக்குவரத்து பணிமனைக்கும் பணியாளர்கள் தேர்வு செய்யும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது.

    அரசியல் காரணங்களுக்காக ஏதேனும் ஒரு புகார் தெரிவிக்க வேண்டும் என்பதால் அரசியல் கட்சியினர் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    கடந்த அ.தி.மு.க.ஆட்சி காலத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் காலம் 58 வயதில் இருந்து 60 வயதாக உயர்த்தி விட்டனர். ஏனென்றால் ஓய்வு காலத்தில் சரியான முறையில் அவர்களுக்கு சேர வேண்டிய பண பலன்கள் உள்ளிட்ட எந்த ஒரு பலன்களும் அவர்களுக்கு வழங்க முடியாத நிலையில் அ.தி.மு.க. அரசு செயல்பட்டு இருந்தது.

    கடந்த மே மாதம் அதிகளவில் போக்குவரத்து துறையில் ஊழியர்கள் ஓய்வு பெற்று உள்ளனர். இதனை சமாளிக்கும் விதமாக இடைக்கால நிவாரணமாக ஒப்பந்த அடிப்படையில் டிரைவர் மற்றும் கண்டக்டர் நியமிக்கப்பட்டனர்.

    இதன் காரணமாக கடந்த கோடைகாலத்தில் வழக்கத்தை விட அதிக அளவில் பஸ்கள் இயக்கப்பட்டு அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு அதிக அளவில் மக்கள் சென்று வருவதால், தற்போது பஸ்கள் இயக்கம் அதிகரித்து வருகின்றது.

    மேலும் சென்னை நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதி தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவதால் அந்தந்த பகுதிகளுக்கு தேவையானபஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

    இது மட்டுமின்றி தற்போது மின்சார ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டு வருகின்றது. மேலும் விழுப்புரம் கோட்டத்தில் இருந்து செல்லக்கூடிய பஸ்கள் தாம்பரம் வரை செல்லாமல் தற்போது கூடுதலாக பல்லாவரம் வரை இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    போக்குவரத்து துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் , கடந்த ஒரு மாதத்திற்கு முன்புடி.டி.வி. தினகரன் போக்குவரத்து துறை தனியார் மயமாக்கப்படுகின்றது என தெரிவித்து இருந்தார்.

    அதனை பார்த்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தானும் சொல்லாமல் இருக்க கூடாது என்ற நோக்கில் போக்குவரத்து துறை தனியார் மயமாக்க பட முயற்சி செய்கின்றனர் என தெரிவித்து உள்ளார்.

    டி.டி.வி.தினகரன் அரசு தொடர்பாக என்ன நடைபெறும் என தெரியாமல் பேசி உள்ளார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி முதல்-அமைச்சராக இருந்து உள்ள நிலையில் கடந்த ஆட்சி காலத்தில் ஒரு ஓட்டுனர், நடத்துனர் புதிதாக பணிக்கு எடுக்கவில்லை.

    ஆனால் தற்போதைய திமுக ஆட்சிக்காலத்தில் 685 அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் பணியாளர்கள் எடுக்கப்பட்டு உள்ளோம். ஆகையால் எடப்பாடி பழனிச்சாமி அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இது போன்று பேசி வருகிறார்.

    மேலும் இந்த அறிக்கைகள் வந்து ஒரு மாதம் கழித்து தூங்கி எழுந்து பேசுவது போல் சீமான் போக்குவரத்து துறை தனியார் மயமாக்கப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.

    அவருக்கு தெரிந்தது இலங்கை மற்றும் ஈழத்தில் நடக்கும் பிரச்சனை மட்டுமே. தமிழகத்தில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து பேச வேண்டுமானால் அதற்கு முன்பாக ஆட்சியில் என்னென்ன நடக்கின்றது என்பதனை தெரிந்து கொண்டு பேச வேண்டும்.

    தற்போது ஒரு சில தொழிற்சங்கங்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதால் தனியார் மயமாக்கப்படுகின்றது என தொடர்ந்து குற்றச் சாட்டை வைத்து வருகின்றனர். அதன் அடிப்படையில் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ×