என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Thirumavalavan"
- சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை தமிழக அரசு ஏற்க கூடாது.
- சம்பவம் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் அனைத்தும் பழையது தான், புதியது அல்ல.
சென்னை:
சென்னை மூலக்கொத்தளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி அறிக்கை ஏமாற்றத்தை தருகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் மீதே வழக்குப்பதிவு செய்திருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
* வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த அரசு துணையாக இருக்கும் என நம்புகிறோம்.
* சிபிசிஐடி அறிக்கையை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. வேங்கைவயலில் போராட்டம் நடத்திய கிராமத்தினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீசார் அச்சுறுத்தி கைது செய்துள்ளனர்.
* சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை தமிழக அரசு ஏற்க கூடாது.
* சம்பவம் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் அனைத்தும் பழையது தான், புதியது அல்ல.
* தமிழ்நாடு காவல்துறை மீது நம்பிக்கை இழந்ததால் சிபிஐ விசாரணை கேட்கிறோம்.
* தமிழ்நாட்டில் பெரியாருக்கு எதிராக அவதூறு பரப்புவதை வன்மையாக கண்டிக்கிறேன். பெரியாருக்கு எதிரான விமர்சனத்தை அம்பேத்கருக்கு எதிரான விமர்சனமாகவே விடுதலை சிறுத்தைகள் பார்க்கிறது, கண்டிக்கிறது என்றார்.
- காவல்துறையின் குற்றப் பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக்கூடாது.
- வழக்கை சிபிஐ விசாரணைக்குத் தமிழ்நாடு அரசே ஒப்படைக்கவேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், முட்டுக்காடு ஊராட்சி தலைவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குடிநீரில் மனிதக் கழிவு கலப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சுதர்சன், முத்துகிருஷ்ணன், முரளிராஜா ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், காவல்துறையின் குற்றப் பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக்கூடாது. இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்குத் தமிழ்நாடு அரசே ஒப்படைக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
வேங்கை வயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மூவரை குற்றவாளிகள் எனக் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. காவல்துறையின் குற்றப்பத்திரிக்கையை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளக் கூடாது; மேல்விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
வேங்கை வயல் வழக்கில் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு காவல்துறையின் சி.பி.சி.ஐ. டி சார்பில் இன்று பிரமாண பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் இந்த வழக்கில் கடந்த 20ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும், மூன்று பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முரளி ராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் குற்றவாளிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூவரும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
பட்டியல் சமூகத்தினர் குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்ததாகத்தான் வழக்கு. அந்த வழக்கில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களே குற்றவாளிகள் என்று காவல்துறை கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. இது ஏற்கத்தக்கதாக இல்லை.
எனவே, சி பி சி ஐ டி சமர்ப்பித்திருக்கும் குற்றப் பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக் கூடாது எனவும் மேல்விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.
வேங்கை வயலில் குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட குற்றம் நிகழ்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆரம்ப நிலையிலேயே இந்த வழக்கில் காவல்துறை பட்டியல் சமூகத்தினருக்கு எதிராக நடந்து கொள்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதனால்தான் சிபிஐ விசாரணை வேண்டுமென்று கோரிக்கைகள் எழுந்தன.
அந்தச் சூழ்நிலையில்தான் இந்த வழக்கை 14.01.2023 அன்று சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு ஆணையிட்டது. சிபிசிஐடி இந்த வழக்கில் விசாரணையை மேற்கொண்ட நிலையில்கூட கடந்த இரண்டு ஆண்டுகளாகக் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் மெத்தனமாகவே இருந்தது. உயர் நீதிமன்றம் ஒவ்வொரு முறையும் இதில் கடுமையாக அறிவுறுத்திய பிறகும்கூட குற்றவாளிகள் யார் எனக் காவல்துறை கூறவில்லை.
தற்போது இது தொடர்பாக சிபிஐ விசாரணை கேட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் , சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுவிடுமோ என்ற அய்யத்தில், அதைத் தடுப்பதற்காகவே இந்தக் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகக் கருத வேண்டியுள்ளது.
உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கோடு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. எனவே, இந்த வழக்கை விசாரித்து வரும் விசாரணை நீதிமன்றம் சி பி சி ஐ டி தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிக்கையை ஏற்கக் கூடாது என வலியுறுத்துகிறோம்.
அத்துடன், தமிழ்நாடு அரசே முன்வந்து இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தலித் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருகிறோம்.
- கர்நாடகாவில் விரைவில் கட்சி அலுவலகம் திறக்கப் பட உள்ளது.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கி பானை சின்னத்தையும் சமீபத்தில் ஒதுக்கியது. இதையடுத்து விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு பாராட்டு விழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
சென்னை அசோக் நகர் கட்சி தலைமை அலுவலகத்தில் 24-ந் தேதி மாலை 4 மணிக்கு இந்த விழா நடை பெறுகிறது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பாலசிங்கம் கூறியதாவது:-
விடுதலை சிறுத்தைகள் கட்சி 1990-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 10 ஆண்டுகள் வரை தேர்தலை புறக்கணித்து மக்கள் பணியில் மட்டும் ஈடுபட்டு வந்தது.
1999-ம் ஆண்டு முதல் தேர்தல் களத்தில் விடுதலை சிறுத்தை கட்சி இறங்கியது. தமிழகத்தில் கடந்த 26 ஆண்டுகளாக மக்கள் பிரச்சினைகளுக்காக போராட்டம் நடத்தி ஒரு பிரதான அரசியல் கட்சிகளுக்கு இணையாக பணியாற்றி வருகிறது.
1990-ம் ஆண்டு ஜனவரி 21-ந் தேதி கட்சியின் தலைவர் பொறுப்பை திருமாவளவன் ஏற்றுக் கொண்டார். அந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது விடுதலை சிறுத்தை கட்சி வெளி மாநிலங்களிலும் பரவி வருகிறது.
மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தலித் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருகிறோம். கர்நாடகாவில் விரைவில் கட்சி அலுவலகம் திறக்கப் பட உள்ளது.
தென் இந்தியாவில் தலித் தலைமையிலான ஒரு அரசியல் கட்சி தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெற்று இருப்பது இதுவே முதல் முறையாகும். திருமாவளவனின் தலைமையை ஏற்று அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பும் பாராட்டு விழாவும் நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உலகத் தமிழர் யாவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்
- தந்தை பெரியாரின் பெருவழியில், சமத்துவ இலக்கை எட்டுவதற்கு இந்நன்னாளில் உறுதியேற்போம்.
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருவிழாவாக பொங்கல் விழாவைக் கொண்டாடுவோம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தமிழினத்தின் பாரம்பரிய பண்பாட்டுப் பெருவிழாவாம் பொங்கல் திருவிழாவையொட்டி உலகமெங்கும் பரவி வாழும் தமிழ்ச் சொந்தங்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழர் திருநாளாய்ப் போற்றப்படும் இப்பெருநாள் சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக விளங்கும் நனிசிறந்த நன்னாளாகும். சாதி, மத அடையாளங்களைக் கடந்து அனைத்துத் தரப்பாரும் தமிழர்களாய் உணர்ந்து, ஒருங்கிணைந்து பொங்கலைக் கொண்டாடுவதற்கான சகோதரத்துவம் மலர வழிகாட்டும் உன்னத நாளாகும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இனிய பொங்கல் விழா வெறும் கொண்டாட்டத்திற்கான பண்டிகையாக மட்டும் இல்லாமல்; தமிழ்ச்சமூகத்தின் உயரிய மாண்புகளை மென்மேலும் செழுமைப் படுத்துவதற்கான "பண்பாட்டுக் கூடலாகவும்" விளங்குகிற ஒன்றாகும்.
தமிழினத்தின் மாண்புகளில் உயரியது " யாதும் ஊரே; யாவரும் கேளிர்" என்னும் சிந்தனை முதிர்ச்சியாகும். அத்தகைய பக்குவம் , முதிர்ச்சி மென்மேலும் பல்கிப் பெருக வேண்டும். சாதி, மதம், மொழி, இனம் , பால் போன்ற அடையாளங்களின் பெயரால் ஒருவருக்கொருவர் வெறுப்பை உமிழ்வது, வெறுப்பு அரசியலை விதைப்பது, ஆதாயநோக்கில் அதனைப் பரப்புவது போன்றவற்றைத் தவிர்ப்பது தமிழினத்தின் மாண்புகளுக்குப் பெருமை சேர்க்கும்.
அத்தகைய பரந்த பார்வையோடு தமிழினத்தின் தலைநிமிர்வுக்காக தன் வாழ்நாளை முழுமையாக ஒப்படைத்துக் கொண்ட மாமனிதர் தந்தை பெரியாரின் பெருவழியில், சமத்துவ இலக்கை எட்டுவதற்கு இந்நன்னாளில் உறுதியேற்போம்.
தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் நமது பாரம்பரிய பண்பாட்டு அடையாளங்களையும் அவற்றின் நீண்ட நெடிய வரலாற்றுச் சிறப்புகளையும் பாதுகாக்கும் மகத்தான பேரரண் பெரியார் என்பதை மீள் உறுதி செய்வோம்.
தன்மானத்தையும் தலைநிமிர்வையும் தமிழர்களுக்கு மீட்டளித்த தந்தை பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருவிழாவாக பொங்கல்விழாவைக் கொண்டாடுவோம்" என்று பதிவிட்டுள்ளார்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை தேர்தல் சின்னமாக அதிகாரப்பூர்வமாக இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன்.
சென்னை:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்னும் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன்.
அன்புச் சகோதரர் திருமாவளவனின் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாக இதை எண்ணிப் பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள்
— M.K.Stalin (@mkstalin) January 11, 2025
கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன்.
அன்புச் சகோதரர் திரு. @thirumaofficial அவர்களின் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாக இதை எண்ணிப் பாராட்டுகிறேன். https://t.co/zl3hcdvaYH
- வாய் புளித்ததோ மாங்கா புளித்ததோ என்கிற வகையில் விமர்சனங்களை வைப்பது ஏற்புடையது அல்ல.
- காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவிற்கும் இடையிலான நட்புறவு எவ்வாறு இருக்கிறது என்பதற்கு சான்று.
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கருத்தியல் விமர்சனங்களை வைப்பது அரசியலில் வழக்கமான ஒன்றுதான். ஆனால் ஒரு எல்லையை மீறுவது அரசியல் நாகரீகம் அல்ல. பெரியார் தமிழ்நாட்டு மக்களின் பெருமதிப்பிற்குரிய ஒரு அடையாளம். இன்னும் சொல்லப்போனால் சமூக நீதிக்கான ஒரு தேசிய அடையாளம். இன்றைக்கு விளிம்பு நிலை மக்களால் போற்றக்கூடியவர். அவர் மீது வாய் புளித்ததோ மாங்கா புளித்ததோ என்கிற வகையில் விமர்சனங்களை வைப்பது ஏற்புடையது அல்ல. இந்த போக்கை சீமான் தவிர்ப்பது அவருடைய எதிர்காலத்திற்கும் அவருடைய அரசியலுக்கும் நல்லது.
சனாதன சக்திகள் கடந்த 10 ஆண்டுகளாக பெரியார் என்கிற பிம்பத்தை உடைப்பதற்கு நொறுக்குவதற்கு பகிரங்க முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களுக்கு வலுசேர்க்கும் வகையில் அல்லது துணை போகின்ற வகையில் சீமானின் வாதம் அமைகிறது. அதுவும் ஆதாரமில்லாத விமர்சனங்களாக இருக்கின்றன. இந்த போக்கை அவர் கைவிடவேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்.
இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அங்கீகாரம் பெற்றிருக்கிறது என்று அறிவித்துள்ளது அத்துடன் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தையும் ஒதுக்கி உள்ளது. இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை வழங்கி இருக்கிறார்கள். இத்தகைய அங்கீகாரத்தை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றியை உரிதாக்குகிறோம்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் காங்கிரஸ் திமுக-விற்கு அந்த வாய்ப்பை வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது. காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவிற்கும் இடையிலான நட்புறவு எவ்வாறு இருக்கிறது என்பதற்கு சான்று. திமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர் பெரும்பான்மையான வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார். அவரது வெற்றிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தீவிரமாக பணியாற்றும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்.
- அண்ணாமலையை அவர் சார்ந்து இருக்கும் சங் பரிவார அமைப்புகள் ஆதரிக்கும்.
மதுரை:
டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி அரிட்டாபட்டி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட வலியுறுத்தி மேலூர் பஸ் நிலையத்தில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்பதற்காக விமான மூலம் சென்னையில் இருந்து மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டங்ஸ்டன் எதிர்ப்பு தொடர்பாக மத்திய மந்திரி கிஷன் ரெட்டியிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நேரில் சந்தித்து திட்டத்தை கைவிட வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளோம். மீண்டும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். இத்திட்டத்தை முழுவதுமாக கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
பல்கலைகழக மானியக்குழு அண்மையில் வெளியிட்டுள்ள புதிய விதிகள் மாநில உரிமைகளை பறிப்பது போன்று உள்ளது. உயர் கல்வி அனைத்தையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக்கூடிய விதிகளை கொண்டிருக்கிறது.
துணைவேந்தர் நியமனம், பேராசிரியர்கள் நியமனம் போன்றவற்றுக்கு மாநில அரசுக்கு எந்த அதிகாரம், உரிமை இல்லை என்பது போல் கொண்டு வந்துள்ளது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. புதிதாக கொண்டு வரப்பட்ட இந்த விதிகளை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். அதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தீவிரமாக தேர்தல் பணி ஆற்றும்.
அண்மைக்காலமாக பெரியார் மீது ஆதாரமில்லாத அவதூறுகள் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது. நீண்ட காலமாகவே சங்பரிவார் அமைப்புகள் இந்த சதி வேலைகளை செய்து வருகிற சூழலில் மொழியின் பெயரால் இனத்தின் பெயரால் அரசியல் செய்துவரும் அமைப்புகளும் பெரியாரை குறி வைத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
சீமானின் பேச்சு நாகரீகத்தின் எல்லையை மீறியதாகவும் குதர்க்க வாதமாகவும் உள்ளது. அவர் பேசுகிற அரசியலுக்கு அவருக்கு எதிராக போய் முடியும். தேசிய அளவிலான மத வழி தேசியம் இந்திய அளவில் பேசப்படுகிற மத வழி தேசியம், பா.ஜ.க. உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் பேசுகிற மதவழி தேசியம் தான் மொழி வழி தேசியத்தின் முதன்மையான எதிரியாக இருக்க முடியும். தமிழ் தேசியத்தின் உண்மையான எதிரியாகவும் இருக்க முடியும்.
அதை விடுத்து தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும், தமிழ்நாட்டிற்காகவும் தனது இறுதி மூச்சு வரை தீவிரமாக களப்பணியாற்றிய தமிழ்நாட்டு மக்களின் பெருமதிப்பிற்குரிய சமூக நீதியின் தேசிய அடையாளமாக இருக்கிற தந்தை பெரியாரை கொச்சைப்படுத்துவது ஏற்புடையது அல்ல. இந்த போக்கை சீமான் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
அண்ணாமலையை அவர் சார்ந்து இருக்கும் சங் பரிவார அமைப்புகள் ஆதரிக்கும். அந்த அரசியலை தான் சீமான் பேசுகிறாரா? என்பதை அவர் சுய பரிசோதனை செய்ய வேண்டும். தந்தை பெரியார் தமிழ் மீதும், தமிழ் மக்கள் மீதும் கொண்டுள்ள அக்கறையின்பால் சில விமர்சனங்களை வைத்திருக்கிறார். அதில் புதுமை இல்லை, அறிவியல் சொற்கள் உள்வாங்கப்பட வில்லை. தொன்மை காலத்து சொற்களே உள்ளன. தமிழின் தொன்மையை பேசுவதற்காக பெரியார் அதை குறிப்பிட்டு இருக்கிறார்.
அது காலத்திற்கு ஏற்ப நவீன அறிவியல் வளர்ச்சிக்கேற்ப, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதிய புதிய சொற்களை உள்வாங்கிக் கொண்டு வளர்ச்சி பெற வேண்டும், வலுப்பெற வேண்டும் என்ற நோக்கில் சொன்னதை சிலர் திரித்து பேசுகின்றனர். பெரியாரின் தியாகத்தை கொச்சைப்படுத்துகிறார்கள். அது ஏற்புடையதல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெரியார் மீதான நன்மதிப்பை நொறுக்கிட வேண்டுமென்கிற கிரிமினல் உத்தியைக் கையாண்டு வருகின்றனர்.
- சாதி ஒழிப்பு என்னும் இலக்கே தந்தை பெரியாரையும், புரட்சியாளர் அம்பேத்கரையும் ஒருங்கிணைக்கும் கருத்தியல் புள்ளி ஆகும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
அண்மைக் காலமாகத் தமிழ்நாட்டில் தந்தை பெரியாருக்கு எதிரான அவதூறுகள் பெருமளவில் திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பெரியாரின் சாதிஒழிப்புக் கருத்தியலில், சமூகநீதி அரசியலில் உடன்பாடில்லாத சனாதன சங்கப் பரிவாரங்கள் இத்தகைய பரப்புரைகளைச் செய்து வருகின்றன. அதற்கு முதன்மையான காரணம் தமிழ்நாட்டு அரசியலில் அவர்களால் காலூன்ற இயலாத இறுக்க நிலையே ஆகும்.
இம்மண்ணில் அவர்கள் வேரூன்றுவதற்குப் பெரும் தடையாக இருப்பது பெரியாரின் சமத்துவச் சிந்தனைகள் தான் என்பதால், பெரியார் மீதான நன்மதிப்பை நொறுக்கிட வேண்டுமென்கிற கிரிமினல் உத்தியைக் கையாண்டு வருகின்றனர். அதனால் அவர்மீது ஆதாரமில்லாத அவதூறுகளைப் பரப்புகின்றனர். அத்துடன், பெரியாரின் கொள்கைகளைப் பேசும் இயக்கங்களைக் குறிவைத்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இவ்வாறு தமிழ்நாட்டு அரசியலில் தொடர்ந்து பதற்றத்தையும் குழப்பங்களையும் உருவாக்கி அதன் அமைதிச் சூழலை சீர்குலைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தகைய சதி வேலைகளில் சங் பரிவார்கள் நேரடியாக மட்டுமின்றி, மறைமுகமாகவும் ஈடுபட்டுவருகின்றனர். சாதி, மதம் மற்றும் மொழி, இன அடையாளங்களின் பெயர்களில் இயங்கும் அமைப்புகளின் பின்னால் ஒளிந்துகொண்டு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சனாதன சக்திகள் பேசும் பிற்போக்கு அரசியலுக்குத் துணைநிற்கும் வகையில், இவர்கள் சமூகநீதி கோட்பாட்டு அரசியலின் அடையாளமாக விளங்கும் தந்தை பெரியாருக்கு எதிரான தாக்குதல்களில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர். எனவே, தமிழ்நாட்டு மக்கள் இத்தகையோரை அடையாளம் கண்டு அவர்களின் சனாதன ஃபாசிச அரசியல் சதிகளை முறியடிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
முத்தமிழறிஞர் கலைஞர், செல்வி ஜெயலலிதா ஆகியோரின் மறைவுக்குப் பிறகு தமிழ்நாட்டைக் கைப்பற்றி விடலாம் என்று கனவு கண்ட சனாதனப் பாசிசவாதிகள், அக்கனவு நிறைவேறாத நிலையில் தற்போதைக்குத் திராவிடக் கட்சிகளுள் ஒன்றான அதிமுகவைப் பலவீனப்படுத்தி, தாங்களே தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய சக்தி என நிலைநாட்ட முயற்சிக்கின்றனர்.
அத்துடன், ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் தலைமையிலான கூட்டணி கட்சிகளை எதிர்வரும் 2026-சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் வீழ்த்திட வேண்டும் என்கிற வெறியுடன் செயல்படுகின்றனர். ஆதலால், தமிழ்நாட்டின்மீது பல்வேறு முனைகளிலிருந்து தாக்குதலை தொடுத்துள்ளனர்.
அதாவது, தமிழ்நாடு அரசுக்கு அளிக்க வேண்டிய நிதியைத் தராமல் மறுப்பது; மாநில உரிமைகளைப் பறிப்பது ; ஆளுநர் மூலம் தமிழ்நாடு அரசைச் செயல்பட விடாமல் முடக்குவது போன்ற நெருக்கடிகளின் மூலம் தமிழ்நாட்டின் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்துகின்றனர்.
அத்துடன், திராவிட அரசியல் எதிர்ப்பு சக்திகளை ஏவி, எளிய மக்களின் கவனத்தைத் திசை திருப்புவது, சமூகநீதி அரசியலுக்கான வாக்கு வங்கியைச் சிதறடிப்பது என தொடர் தாக்குதலைத் தொடுத்து வருகின்றனர். எனினும், திராவிடக் கருத்தியலின் ஓர்மை மற்றும் சனநாயக சக்திகளின் ஒற்றுமை ஆகியவற்றின் காரணமாக சனாதனிகளின் பித்தலாட்டங்கள், சூது- சூழ்ச்சிகள் இங்கே எடுபடவில்லை.
எனவே, அந்தக் கருத்தியல் ஓர்மையையும் ஒற்றுமையையும் சிதைக்கும் நோக்கில் தந்தை பெரியாருக்கு எதிராக அவதூறுகள் பரப்புவது, அதன் மூலம் பொதுமக்களிடையே பகைமூட்டிச் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்துவது போன்ற அரசியல் தந்திரங்களைக் கையாளுகின்றனர்.
ஆரிய சனாதனத்தின் அடிப்படையாக இருப்பது பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு என்னும் பாகுபாடே ஆகும். அதற்கு நேர் எதிராக சமத்துவத்தை முன்மொழிந்தது தான் தந்தை பெரியாரின் சிந்தனையாகும். அதாவது, சாதி ஒழிப்பே அவரது சிந்தனைகளின் அடிப்படையாகும். சாதி ஒழிப்பு என்னும் இலக்கே தந்தை பெரியாரையும், புரட்சியாளர் அம்பேத்கரையும் ஒருங்கிணைக்கும் கருத்தியல் புள்ளி ஆகும்.
அத்தகைய சாதி ஒழிப்பையும், சமூக நீதியையும், பகுத்தறிவு சிந்தனையையும் முன்னிறுத்தி தனது இறுதிமூச்சு வரையில் தீவிரமாகக் களமாடிய தந்தை பெரியாரை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஒருபுறம் தந்தை பெரியாரை எதிர்த்து அவதூறு செய்து கொண்டே இன்னொரு புறம் அவரைப்போலவே சனாதனத்தை எதிர்த்துப் போராடிய புரட்சியாளர் அம்பேத்கரையும் அயோத்திதாசப் பண்டிதரையும் மாவீரன் ரெட்டைமலை சீனிவாசனையும் தங்களுக்கானவர்கள் என தம்வயப்படுத்த அவர்கள் முயற்சிக்கின்றனர். இது எளிய மக்களை ஏமாளிகளாக்கும் சூழ்ச்சி மிகுந்த தந்திரமேயாகும். அத்துடன், சனாதன ஆதிக்கத்துக்குத் தமிழ்நாட்டின் அனைத்துக் கதவுகளையும் திறந்து விடும் துரோகமாகும்.
இந்நிலையில், தமிழ்நாட்டின் மீது பலமுனைத் தாக்குதலைத் தொடுத்திருக்கும் சனாதன ஃபாசிச சக்திகளையும் அவர்களுக்குத் துணைபோகும் பிற்போக்கு சக்திகளையும் அடையாளம் கண்டு அவர்களை அம்பலப்படுத்துவோம்!
சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றின் அடிப்படையிலான புரட்சியாளர் அம்பேத்கர் - தந்தை பெரியார் ஆகியோரின் முற்போக்கான அரசியலை நிலைப்படுத்துவோம்! என்று தெரிவித்துள்ளார்.
- கவர்னர் உரையை படிக்காமல் புறக்கணித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
- கவர்னர் தொடர்ந்து சராசரி அரசியல்வாதி போல் செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று தலைமை செயலகத்திற்கு வந்தார். அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து ரவிக்குமார் எம்.பிக்கு விருது கொடுத்தற்கு நன்றியும் தெரிவித்தார். பின்னர் சட்ட மன்ற வளாகத்தில் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்ட மன்றத்தில் கவர்னர் உரையை படிக்காமல் புறக்கணித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தேசியகீதம் என்பது நிகழ்ச்சியின் இறுதியில்தான் பாடப்படும். இதை தெரிந்தும் தெரியாதவர் போல் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.
கவர்னர் தொடர்ந்து சராசரி அரசியல்வாதி போல் செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. அரசுக்கு எதிராக தொடர்ந்து ஏதாவது பிரச்சனைகளை கிளப்பி வருகிறார். அவரை திரும்ப பெற வேண்டும்.
பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் ஆட்சிக்கு தலைவலி கொடுக்கும் கவர்னர்களையே மத்திய அரசு நியமிக்கிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொறுத்த வரை எதிர்க்கட்சியாக செயல்பட முடியாது. தோழமை கட்சியாகத்தான் செயல்படும். அதே நேரம் சுட்டிக்காட்ட வேண்டியதை சுட்டிக்காட்டுவோம். கண்டிக்க வேண்டியதை கண்டிப்போம்.
கூட்டணி என்ற பெயரில் ஆளும் கட்சி எங்களுக்கு எந்த விதமான அழுத்தமும் கொடுக்கவில்லை. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் எல்லோரது எண்ணம்.
ஆனால் எதிர்க்கட்சிகள் குறிப்பாக அ.தி.மு.க. இதில் அரசியல் செய்வது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அநீதி செய்வதாக முடிந்து விடும். உண்மையை கண்டறிய சிறப்பு புலனாய்வு குழு உருவாக்கப்பட்டு உள்ளது.
ஐகோர்ட்டும் விசாரணை நடத்தி வருகிறது. தங்களது புகார்களை அங்கு சென்று முறையிடலாம். அதற்காக தொடர்ந்து அரசை குற்றம் சொல்வது சரியல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
- யார் அந்த சார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்படவேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
- திருமாவளவன் பேசிய இந்த வீடியோவை பகிர்ந்து அதிமுக கட்சியின் ஐடி விங் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைதான ஞானசேகரன் சம்பவத்தன்று 'சார்' என்று குறிப்பிட்டு பேசியதாக கூறப்படுகிறது. இதனால் யார் அந்த சார்? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு அப்படி யாரும் இல்லை, மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்வதாக தி.மு.க. அமைச்சர்கள் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், யார் அந்த சார்? என்பது தொடர்பாக நேர்மையான விசாரணை நடத்தப்படவேண்டும் என விசிக தலைவர் திருமாவளவனும் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன், "அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் யார் அந்த சார்? என்று நேர்மையான விசாரணை தேவை. பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அரசியல் உள்நோக்கமின்றி போராட வேண்டும். பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்ட யாராக இருந்தாலும் கடும் தண்டனை தரப்பட வேண்டும். விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகளின் பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும். பொதுவாக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்த அனுமதி தரப்பட வேண்டும். பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளியை சிறையில் வைத்தே புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும். கைதிக்கு உடனே ஜாமின் வழங்க கூடாது" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து திருமாவளவன் பேசிய இந்த வீடியோவை பகிர்ந்து அதிமுக கட்சியின் ஐடி விங் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
அந்த பதிவில், "யார் அந்தSIR என்ற சந்தேகம் இருப்பதால் நேர்மையான விசாரணை தேவை என்று கோரியுள்ளார் விசிக தலைவர் திருமாவளவன். பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் யார் அந்த SIR என்ற கேள்வி ஒலிக்கும்" என்று பதிவிடப்பட்டுள்ளது.
#யார்_அந்த_SIR என்ற சந்தேகம் இருப்பதால் நேர்மையான விசாரணை தேவை என்று கோரியுள்ளார் விசிக தலைவர் @thirumaofficial !பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை மாண்புமிகு புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் #யார்_அந்த_SIR என்ற கேள்வி ஒலிக்கும்!#SaveOurDaughters pic.twitter.com/dqGaWV7jYp
— AIADMK IT WING - Say No To Drugs & DMK (@AIADMKITWINGOFL) January 2, 2025
- பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்ட யாராக இருந்தாலும் கடும் தண்டனை தரப்பட வேண்டும்.
- விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகளின் பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைதான ஞானசேகரன் சம்பவத்தன்று 'சார்' என்று குறிப்பிட்டு பேசியதாக கூறப்படுகிறது. இதனால் யார் அந்த சார்? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு அப்படி யாரும் இல்லை, மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்வதாக தி.மு.க. வை சேர்ந்த அமைச்சர்கள் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், யார் அந்த சார்? என்பது தொடர்பாக நேர்மையான விசாரணை நடத்தப்படவேண்டும் என திருமாவளவனும் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் யார் அந்த சார்? என்று நேர்மையான விசாரணை தேவை. பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அரசியல் உள்நோக்கமின்றி போராட வேண்டும். பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்ட யாராக இருந்தாலும் கடும் தண்டனை தரப்பட வேண்டும். விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகளின் பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும். பொதுவாக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்த அனுமதி தரப்பட வேண்டும். பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளியை சிறையில் வைத்தே புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும். கைதிக்கு உடனே ஜாமின் வழங்க கூடாது என்றும் கூறினார்.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் திமுகவிற்கும் இடையே அடிக்கடி சச்சரவுகள் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் யார் அந்த சார் என்பதெல்லாம் கிடையாது. எதிர்க்கட்சிகள் இவ்விவகாரத்தில் அரசியல் செய்து வருதாக தி.மு.க. கூறி வரும் நிலையில் தற்போது யார் அந்த சார்? என்ற விவகாரத்தில் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திருமாவளன் கூறியிருப்பது மீண்டும் கூட்டணியில் புயலை கிளப்பும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
- பெண்களை இழிவுபடுத்தும் வகையில் எந்த ஒரு வார்த்தையும் தாமாக கூறவில்லை.
- மனுஸ்மிருதியில் பெண்கள் எவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தே பேசியதாக திருமாவளவன் விளக்கம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தலைவர் திருமாவளவன் மீது இந்து பெண்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கடந்த 2020-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது.
இந்து பெண்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.
மனுஸ்மிருதியில் பெண்கள் எவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தே பேசியதாக உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் விளக்கம் அளித்திருந்தார். மேலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் எந்த ஒரு வார்த்தையும் தாமாக கூறவில்லை எனக் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
மனுதாரருக்கு வெறுப்புணர்வை ஏற்படுத்தும் எந்த நோக்கமுல் இல்லை எனத் தெரிவித்த நீதிபதி வேல்முருகன் வழக்கு ரத்து செய்து உத்தரவிட்டார்.