என் மலர்
நீங்கள் தேடியது "Madras High Court"
- நகைகளை திரும்ப வழங்கக்கோரி கணவர் ஜெயகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
- சுங்க அதிகாரிகளின் இந்த செயல் நியாயமற்றது என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தனுஷிகா இலங்கையில் இருந்து சென்னை வந்துள்ளார். பிரான்ஸில் இருந்து வந்த ஜெயகாந்த் என்பவருடன் தனுஷிகாவுக்கு 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் செய்துகொண்ட ஜெயகாந்த் பிரான்ஸுக்கு திரும்பிச் சென்று அவருடைய மனைவிக்கான விசா ஏற்பாடுகளை செய்தார்.
அதே ஆண்டு நவம்பர் மாதம் அவருக்கு விசா கிடைத்தது. தமிழ்நாட்டில் உள்ள சில கோவில்களுக்கு சென்றுவிட்டு பிரான்ஸ் செல்ல முடிவு தனுஷிகா செய்து இருந்தார். அப்போது சென்னை விமான நிலையம் வந்தபோது அவரது நகை அதிக எடையில் இருப்பதாக அவரின் தாலி உட்பட அனைத்து தங்க ஆபரணங்களையும் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த நகைகளை திரும்ப வழங்கக்கோரி கணவர் ஜெயகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இலங்கையைச் சேர்ந்த பெண்ணிடம் கைப்பற்றிய 216 கிராம் எடை கொண்ட தாலியை உடனடியாக திருப்பி அளிக்கும்படி சுங்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நம்முடைய பழக்கவழக்கங்களின்படி, திருமணமான பெண்கள் அந்த எடையில் தங்கத்தில் தாலி போட்டுக்கொள்வது நடைமுறையில் இருக்கும் ஒன்று. அதிகாரிகள் சோதனை செய்யும்போது அவர்கள் அனைத்து மதத்தின் பழக்கவழக்கங்களையும் மதிக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.
சுங்க அதிகாரிகளின் இந்த செயல் நியாயமற்றது என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரி மீது தகுந்த துறைசார் நடவடிக்கை மேற்கொள்ளும்படியும் அறிவுறுத்தி உள்ளார்.
- மாதவரம்- ரெட்டேரி சந்திப்பு இடையே மெட்ரோ ரெயில் பணி வேகமாக நடந்து வருகின்றன.
- மேலும் வரும் மே 31-ந்தேதிக்குள் காலி செய்யவில்லை எனில் அரசு நடவடிக்கை எடுக்கலாம்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இரண்டு வழித்தடங்களில் சுமார் 55 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதை தொடர்ந்து ரூ.63,246 கோடி மதிப்பில் 118 கிலோ மீட்டர் தொலைவுக்கு 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணி நடைபெறுகிறது.
இந்த திட்டத்தில் கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி வரை 26.1 கிலோ மீட்டர், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ., மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீ. தொலைவுக்கு என 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் உயர்மட்ட பாதை, சுரங்க பாதையில் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதில் மாதவரம் பால்பண்ணை- சோழிங்கநல்லூர் ரெயில் பாதை திட்டத்தில் ஒரு பகுதியான மாதவரம்- ரெட்டேரி சந்திப்பு இடையே மெட்ரோ ரெயில் பணி வேகமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் மெட்ரோ பணிக்காக சென்னை மாதவரம் பால் பண்ணை அருகே உள்ள எம்.எம். காலனியை காலி செய்து கொடுக்க அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி லட்சுமி உள்ளிட்ட 3 பேர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், மெட்ரோ பணிக்காக சென்னை மாதவரம் பால் பண்ணை அருகே உள்ள எம்.எம். காலனியை 4 மாதத்தில் காலி செய்து கொடுக்க வேண்டும்.
மேலும் வரும் மே 31-ந்தேதிக்குள் காலி செய்யவில்லை எனில் அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.
- எங்கள் பகுதி முழுவதும் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படாததால்தான் செப்டிக் டேங்க் கட்டியுள்ளோம்.
- மனுதாரர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒரு தனி நபரின் இறப்புக்கு பொறுப்பாகியுள்ளார்.
சென்னை:
சென்னை விநாயகபுரத்தை சேர்ந்தவர் யோகேஷ்பாபு. இவர், ஐகோர்ட்டில், தாக்கல் செய்து உள்ள மனுவில், "எங்களது பகுதியில் கழிவு நீர் இணைப்பு இல்லை. பல முறை சென்னை மாநகராட்சிக்கு மனுக்கள் அனுப்பியும் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படவில்லை.
இதையடுத்து, எனது வீட்டில் செப்டிக் டேங்க் கட்டினேன். இந்த செப்டிக் டேங்க் நிறைந்துவிட்டது. கழிவுகளை அகற்றுவதற்காக கடந்த 2013-ம் ஆண்டு செம்டம்பர் 30-ந்தேதி மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது, முனுசாமி என்ற ஊழியர் செப்டிக் டேங்கில் இறங்கினார். அப்போது அவர் விஷவாயு தாக்கி இறந்துவிட்டார். தகவல் கிடைத்ததும் வேலை செய்த இடத்தில் இருந்து நான் வீட்டுக்கு சென்றேன். மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தேன். முனுசாமி உடலை வெளியே எடுத்து அவரது குடும்பத்திற்கு ரூ.55 ஆயிரம் வழங்கினேன்.
இந்த நிலையில், முனுசாமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தொகையை வழங்குமாறு சென்னை மாநகராட்சி 3-வது மண்டல அதிகாரி எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
எங்கள் பகுதி முழுவதும் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படாததால்தான் செப்டிக் டேங்க் கட்டியுள்ளோம். முனுசாமியின் இறப்பு துரதிஷ்டவசமானது. அதனால்தான் எனது சொந்த பணத்தை அவரது மனைவிக்கு ரூ.55 ஆயிரம் கொடுத்தேன். இந்த நிலையில் முழு இழப்பீடையும் தருமாறு மண்டல அதிகாரி நோட்டீஸ் அனுப்பியது விதிகளுக்கு முரணானது. எனவே, மண்டல அதிகாரியின் நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. சென்னை மாநகராட்சி தரப்பில், "தனியார் செப்டிக் டேங்கில் விபத்து ஏற்பட்டால் அதற்கு அந்த வீட்டின் உரிமையாளர்தான் பொறுப்பாவார். வீட்டு உரிமையாளர்தான் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு இழப்பீடு தரவேண்டும்.
மாநகராட்சி அந்த தொகையை தந்துவிட்டால் வீட்டு உரிமையாளர் அந்த தொகையை மாநகராட்சியிடம் தர வேண்டும்.
இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை அரசாணை பிறப்பித்து உள்ளது. உரிய விதிகளின் அடிப்படையில்தான் மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று வாதிடப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒரு தனி நபரின் இறப்புக்கு பொறுப்பாகியுள்ளார். உரிய விதிகளின் அடிப்படையில்தான் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை மாநகராட்சி இழப்பீடு தொகையை பாதிக்கப்பட்டவரின் மனைவியிடம் கொடுத்து உள்ளது. எனவே, அந்த தொகையை மனுதாரரிடம் வசூலிக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கலாம்" என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தார்.
- தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நெட்பிளிக்ஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது.
- நடிகர் தனுஷுக்கு எதிராக நெட்பிளிக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை ஏற்க மறுப்பு தெரிவித்தனர்.
நடிகை நயன்தாராவின் வாழ்க்கை சம்பவங்களை தொகுத்து உருவாக்கப்பட்ட இணைய தொடர் 'நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்' என்ற பெயரில் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ்-இல் வெளியானது. இந்த ஆவணத் தொடரின் டிரெய்லரில் தனுஷ் தயாரித்து வெளியான "நானும் ரவுடி தான்" படத்தின் காட்சி சில நொடிகள் வரை இடம் பெற்று இருந்தது.
இந்தக் காட்சியை உரிய அனுமதியின்றி பயன்படுத்தியதாக நயன்தாராவிடம் ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் சார்பில் அவரது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். மேலும், நயன்தாராவுக்கு எதிராக தனுஷின் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த காட்சியை உரிய அனுமதியின்றி பயன்படுத்தியதாக நயன்தாராவிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷின் வொண்டர் பார்ஸ் நிறுவனம் சார்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதனிடையே தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நெட்பிளிக்ஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 22-ந்தேதி சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது.
நெட்பிளிக்ஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆவணப்படம் வெளியான ஒரு வாரம் கழித்து தான் தனுஷ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டதால் இந்த வழக்கை ஆரம்ப கட்டத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
இதற்கு தனுஷின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நானும் ரவுடிதான் படத்தில் பயன்படுத்தப்பட்ட காட்சியில் அனைத்தும் தயாரிப்பாளருக்குத்தான் சொந்தம். இந்தப் படத்துக்கு நயன்தாராவை ஒப்பந்தம் செய்யும்போது அவர் செய்துள்ள சிகை அலங்காரம், உடை அலங்காரத்தில் இருந்து அனைத்தும் நிறுவனத்திற்கே சொந்தமானது என ஒப்பந்தமிடப்பட்டு, அதில் அவரும் கையெழுத்திட்டுள்ளார், படம் தொடர்பாக அனைத்து காட்சிகளும் வொண்டர்பாருக்கு சொந்தமானது என்று வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வொண்டர்பார் நிறுவனத்தின் வழக்கை நிராகரிக்க வேண்டும் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,
நடிகர் தனுஷுக்கு எதிராக நெட்பிளிக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை ஏற்க மறுப்பு தெரிவித்தனர். தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்கக்கோரிய நெட்பிளிக்சின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
மேலும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடியாது எனக்கூறி நெட்பிளிக்ஸ் மனுவை நிராகரித்தனர்.
இதைத்தொடர்ந்து வொண்டர் பார் நிறுவனம் தாக்கல் செய்த பிரதான உரிமையியல் வழக்கை பிப்.5-க்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- ஜாமின் கோரி 4 பேரும் தாக்கல் செய்த மனுவை சென்னை மாவட்ட கோர்ட்டு தள்ளுபடி செய்திருந்தது.
- இந்த வழக்கில் மேலும் ஒரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சன்னி லாய்டு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை:
சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முகமது கவுஸ் என்பவரை கடத்தி 20 லட்சம் ரூபாய் பறித்ததாக திருவல்லிக்கேணி காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜாசிங், வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் ஜாமின் கோரி 4 பேரும் தாக்கல் செய்த மனுவை சென்னை மாவட்ட கோர்ட்டு தள்ளுபடி செய்திருந்தது.
இந்நிலையில், ராஜா சிங் மற்றும் தாமோதரன் ஆகியோர் ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் வழக்கில் விசாரணை இன்னும் நிறைவடையவில்லை. இந்த வழக்கில் மேலும் ஒரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சன்னி லாய்டு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்து வருவதால், ஜாமின் மனு மீதான விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வேலியே பயிரை மேய்ந்தது போல் காவல் துறையினரே குற்ற சம்பவத்தில் ஈடுப்பட்ட இந்த வழக்கினை சாதாரண வழக்காக எடுத்துக்கொள்ள முடியாது.
வழக்கின் விசாரணையை 28-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறேன் என்றார்.
- வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் ஜாமின் வழங்கக்கூடாது என காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
- பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் கழிவறைக்குச் சென்ற எல்.கே.ஜி. மாணவி கழிப்பிட தொட்டியில் விழுந்து உயிரிழந்தது தொடர்பாக அவரது தந்தை புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், சந்தேகம் மரணம், பணியில் அஜாக்கிரதையாக இருப்பது ஆகிய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோம்னிக் மேரி, வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல், ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமின் கோரி மூவரும் தாக்கல் செய்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் விழுப்புரத்தில் பெய்த கனமழையின் காரணமாக தொட்டி பராமரிக்கப்படாமல் இருந்ததால் குழந்தை வழி மாறி சென்றதன் காரணமாக இந்த நிகழ்வு நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.
வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் ஜாமின் வழங்கக்கூடாது என காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பள்ளியின் தாளாளர், முதல்வர், வகுப்பு ஆசிரியர் ஆகிய 3 பேருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கிய நீதிபதி, மூவரும் சென்னையில் ஒரு வாரம் தங்கி இருந்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவிட்டார்.
மேலும், பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
- மது விலக்கு போலீசார் பதிவு செய்யும் வழக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை ஜோடிக்கப்பட்டவை.
- கள்ளச்சாராயம் கள்ளக்குறிச்சியில் தயாரிக்கப்படவில்லை.
சென்னை:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட 18 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி 18 பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம். ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கால தாமதமாக குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதையும், ஆவணங்கள் முறையாக வழங்கப்படவில்லை என்பதையும் முன்வைத்து குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென வாதிட்டனர்.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் ஆறு மாதங்களுக்கு மேல் சிறையில் உள்ள நிலையில் இதற்கு மேலும் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் வைத்திருப்பதில் என்ன தேவை இருக்கிறது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் நீதிபதிகள், "கள்ளச்சாராய விற்பனை பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் மது விலக்கு துறை என்ன செய்து கொண்டிருக்கிறது?
மது விலக்கு போலீசார் பதிவு செய்யும் வழக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை ஜோடிக்கப்பட்டவை. முதன்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில்லை.
கல்வராயன் மலைப்பகுதியில் கள்ளச்சாரயம் தயாரிப்பு மற்றும் விற்பனை பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. மது விலக்கு பிரிவு போலீசார் பல தவறுகளை செய்கின்றனர்.
அவ்வாறு தவறிழைக்கும் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து தெரியவில்லை என்று கருத்து தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல் பி.எஸ். ராமன், இந்த கள்ளச்சாராயம் கள்ளக்குறிச்சியில் தயாரிக்கப்படவில்லை. மாதவரத்தில் இருந்து வந்துள்ளது. இதற்கும் கல்வராயன் மலைக்கும் தொடர்பில்லை. இந்த சம்பவம் தொடர்பான விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் வழக்கின் ஆவணங்கள் இன்று அல்லது நாளை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்படும். 70 பேர் மரணம், நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு என 110 நாட்கள் அந்த கிராமமே அசாதாரண நிலையில் இருந்ததன் காரணமாகவே அனைவரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர் என்று கூறினார்.
இதனையடுத்து, மனுதாரர்கள் தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தனர்.அனைவர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்தும் உத்தரவிட்டனர்.
- சென்னை ஐகோர்ட்டின் முதல் அமர்வு எடுத்துள்ள முடிவை அரசின் கவனத்திற்கு அரசு பிளீடர் கொண்டு வந்துள்ளார்.
- சான்றளிப்பவரின் கையெழுத்து, முத்திரை, பதிவு எண், முகவரி போன்றவை அதில் பதிவு செய்யப்பட வேண்டும்.
சென்னை:
தமிழகத்தின் அனைத்துத் துறை செயலாளர்கள், மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் முருகானந்தம் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னை ஐகோர்ட்டின் 'ரிட்' மனு 9-ம் விதியின்படி, ஒரு மனுவுக்கு ஆதாரமாக இணைக்கப்படும் உறுதிச்சான்று (அபிடவிட்), முறையாக நோட்டரி வக்கீலின் மூலம் சான்றளிக்கப்பட (அட்டஸ்ட்) வேண்டும். ஆனால் அரசு வழக்குகளில் நீண்டகால நடைமுறையாக, சான்றுரைப்பவரும், துணை நிலை அலுவலரும்தான் உறுதிச்சான்றின் ஒவ்வொரு பக்கத்திலும் கையெழுத்திட்டு வருகின்றனர்.
இந்த விஷயத்தில் சென்னை ஐகோர்ட்டின் முதல் அமர்வு எடுத்துள்ள முடிவை அரசின் கவனத்திற்கு அரசு பிளீடர் கொண்டு வந்துள்ளார். அதன்படி, உறுதிச்சான்றுகள், பதில் மனுக்கள், ஆதார மனுக்கள் உள்ளிட்டவற்றை சான்றளிப்பதில் 'ரிட்' மனு 9-ம் விதி கண்டிப்புடன் பின்பற்றப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே அதன் அடிப்படையில் சில உத்தரவுகளை அரசு தற்போது பிறப்பித்துள்ளது. அதன்படி, அரசு, துறைத் தலைவர், கலெக்டர் ஆகியோர், மனுவுக்கு ஆதாரமாக தாக்கல் செய்யும் ஒவ்வொரு உறுதிச்சான்றும், சென்னை ஐகோர்ட்டு, மதுரை ஐகோர்ட்டு கிளை, மற்ற கீழ்க்கோர்ட்டுகளில் உள்ள அரசு வக்கீல்களினால்தான் சான்றளிக்கப்பட வேண்டும். அந்த வழக்கில் ஆஜராகும் அரசு வக்கீல் அதில் சான்றளிக்கக் கூடாது. சான்றளிப்பவரின் கையெழுத்து, முத்திரை, பதிவு எண், முகவரி போன்றவை அதில் பதிவு செய்யப்பட வேண்டும். அரசு பிளீடர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்துதர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- மாணவி வன்கொடுமை வழக்கின் விசாரணையை கண்காணிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
- தமிழக அரசு தானாக முன்வந்து குழு அமைக்க ஒப்புக்கொண்டது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான அறிக்கை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் நடைபெற்றது.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய புலனாய்வு குழுவை சென்னை ஐகோர்ட் அமைத்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையை கண்காணிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு தானாக முன்வந்து குழு அமைக்க ஒப்புக்கொண்டது.
அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
மேலும், மாணவியின் விவரங்கள் வெளியானதால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
- பெண்களுக்கு எப்படி மரியாதை தர வேண்டும் என்பதை சமுதாயம் கற்றுக்கொள்ள வேண்டும்.
- எப்.ஐ.ஆர். லீக் ஆனதில் மாணவியின் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான அறிக்கை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறும்போது,
* மாணவியின் அடையாளத்தை எப்.ஐ.ஆர்-ல் குறிப்பிட்டது சட்டப்படி தவறு. பாதிக்கப்பட்ட மாணவியின் கண்ணியம் காக்கப்படவில்லை.
* ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என போதிப்பதைவிட அவரை கண்ணியத்துடன் நடத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்.
* பெண்களுக்கு எப்படி மரியாதை தர வேண்டும் என்பதை சமுதாயம் கற்றுக்கொள்ள வேண்டும்.
* குற்றம் நடைபெற்றால் பெண்தான் குற்றம்சாட்டப்படுகிறார். ஆண், பெண் இருபாலரும் சமம் என்ற நிலை உருவாக வேண்டும்.
* பெண்கள் மீது குற்றம்சாட்டப்படுவது குற்றவாளிக்கு சாதகமாகி விடும்.
* பெண்களுக்கு இந்த சமுதாயத்தில் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.
* தனிப்பட்ட முறையில் யாருடனும் பேசுவதில் தவறு இல்லை. அது பெண்களுக்கான உரிமை, யாரும் தலையிட முடியாது.
* ஆண் என்பதற்காக பெண்களை தொட உரிமை இல்லை.
* Victim Blaming and Victim Shaming கூடாது.
* பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
* மாணவி தனது படிப்பை தொடர்வதை அண்ணா பல்கலைக்கழகம் உறுதிப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் படிப்புக்கான செலவை இனி அவரிடம் வசூலிக்கக்கூடாது. மாணவி படிப்பு செலவுகளை ஏற்க வேண்டும்.
* எப்.ஐ.ஆர். லீக் ஆனதில் மாணவியின் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
* காவல் ஆணையரின் கீழ் பணிபுரியும் அதிகாரியிடம் இருந்து விசாரணையை மாற்ற வேண்டும். விசாரணையை மாற்ற வேண்டியது தவிர்க்க முடியாதது.
* காவல் ஆணையருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறினர்.
- ஊடக சுதந்திரத்தை தடுக்க முடியாது. ஊடகங்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
- அரசு அதிகாரிகள் நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் இருப்பதில் என்ன சிரமம் உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான அறிக்கை சீலிடப்பட்ட கவரில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை தொடங்கியது.
விசாரணையின்போது, மாணவி தொடர்பான எப்.ஐ.ஆரை பொதுவெளியில் வெளியிட்டது மீடியாதான் என்று அரசு தலைமை வழக்கறிஞர் கூறினார்.
இதுதொடர்பாக ஐகோர்ட் நீதிபதிகள் கூறுகையில்,
* ஊடக சுதந்திரத்தை தடுக்க முடியாது. ஊடகங்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
* ஊடகங்களால் தான் இதுபோன்ற சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன, ஊடகங்கள் எதிரிகள் அல்ல.
* பத்திரிகைகள் தவறாக திரித்து வெளியிட்டு விட்டதாக கூறக்கூடாது.
* அரசு அதிகாரிகள் நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் இருப்பதில் என்ன சிரமம் உள்ளது என கேள்வி எழுப்பினர்.
- 189 ஏக்கர் பரப்பில் உள்ள பல்கலை. வளாகத்திற்கு 8 வழிகள் உள்ளன.
- மாணவி பாதிக்கப்பட்ட சம்பவத்திற்கு பின்னர் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான அறிக்கை சீலிடப்பட்ட கவரில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை தொடங்கியது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒரு நபர் தொடர்ந்து பல்கலை. வளாகத்துக்குள் வரும்போது காவலர்கள் விசாரித்தார்களா? என கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்தது. அதில்,
* பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி பக்கம் நிற்கிறோம்.
* 189 ஏக்கர் பரப்பில் உள்ள பல்கலை. வளாகத்திற்கு 8 வழிகள் உள்ளன. அனைத்து வழிகளிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
* பல்கலைக்கழகம் வரும் அனைவரையும் சரிபார்ப்பது என்பது முடியாத காரியம், காவலர்கள் காரணம் கேட்டு உள்ளே அனுப்புவர்.
* மாதந்தோறும் கேமராக்கள் செயல்படுகிறதா என பரிசோதனை செய்யப்படுகிறது. மொத்தம் 988 கேமராக்களில் 849 செயல்படுகின்றன, மற்றவை செயல்படவில்லை.
* மாணவி பாதிக்கப்பட்ட சம்பவத்திற்கு பின்னர் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
* வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி அண்ணா பல்கலைக்கழகத்திலேயே படிப்பை தொடர்வார்.
* காவல் துறையினரின் விசாரணைக்கு அண்ணா பல்கலைக்கழகம் முழு ஒத்துழைப்பு வழங்குகிறது என்று தெரிவித்தது.