என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • பாஞ்சாலி, தனது கணவர்கள் பேச்சை கேட்டதில்லை. தனது அன்புத் தோழன் கண்ணனின் பேச்சை மட்டுமே கேட்டு நடந்தவர்.
    • சிறந்த உறவில் கணவன் தோழனாகவும் இருப்பான்.

    கணவனா? தோழனா? என்னும் நம் தலைப்பிலேயே எவ்வளவு அர்த்தங்கள், பொருட்கள் நிறைந்துள்ளன. பெரும்பாலான பெண்களிடம் உங்கள் கணவரா? தோழரா? எனக்கேட்டால், தோழரையே சொல்வார்கள். ஏன் மகாபாரத நாயகி திரௌபதியை கேட்டிருந்தால்கூட தனது தோழர் கிருஷ்ணனைத்தான் கூறியிருப்பார். " ஐந்து ஆண்களுக்கு மனைவியான பாஞ்சாலி தனது கணவர்கள் எவரின் பேச்சையும் கேட்டதில்லை, தனது அன்புத் தோழன் கண்ணனின் பேச்சை மட்டுமே கேட்கவில்லை. நடந்தவர்" என பலரும் சொல்வதே அந்த பதிலுக்கு காரணமாக இருக்கலாம். ஆனால் இந்த பதிலுக்கான உண்மையான காரணம் என்ன?

    குந்தியின் சொல்லோ, அல்லது முன்ஜென்ம வரமோ ஏதோ ஒரு காரணத்தால் திரௌபதி ஐந்து கணவர்களை ஏற்க வேண்டிய சூழல். ஏற்றாள். ஐந்து கணவர்கள் இருந்தும் அவளுக்கு ஆறுதலாக இருந்தது யார்? அவளது தோழன் கிருஷ்ணன்தானே. எப்போதெல்லாம் அவள் மனம் குழப்பத்தில் ஆழ்கிறதோ, எப்போதெல்லாம் அவள் இடரை அனுபவிக்கிறாளோ அப்போதெல்லாம் உறுதுணையாக இருந்து தோள் கொடுத்தவன் கண்ணன் ஒருவன்தானே. தனது மனைவியை சூதாட்டத்தில் வைத்து விளையாடியவர்களா? இல்லை சபையில் தனது துயில் உரியபோது துணி கொடுத்து அவள் மானத்தை காப்பாற்றியவனா? யாரைச் சொல்வாள்?

    தர்மத்தில் சிறந்தவன் யுதிர்ஷ்டன். பலத்தில் சிறந்தவன் பீமன். வில்வித்தையில் சிறந்தவன் அர்ஜுனன். திரௌபதியால் முதலில் மாலை சூட்டப்பட்ட, முதலில் நேசிக்கப்பட்ட கணவன். குதிரைகள் பற்றிய அறிவிலும், அழகிலும் சிறந்து விளங்கியவன் நகுலன். திரௌபதி துயில் உரியப்படுவது உட்பட முக்காலத்தையும் முன்னரே அறிந்தவன் சகாதேவன். இப்படி உலகில் சிறந்திருந்த இவர்களின் தர்மமோ, அறமோ, திறனோ, எதுவாலும் திரௌபதி துயில் உரியப்படுவதை தடுக்க முடியவில்லை. தடுக்கவில்லை. அத்தனை பலம் கொண்ட பீமன், வில்வித்தையில் சிறந்த அர்ஜூனன், ஞானத்திலும், வீரத்திலும், தர்மத்திலும் சிறந்திருந்த பீஷ்மர் உட்பட அரங்கில் சில தர்மர்கள் நினைத்திருந்தால், தடுத்திருந்தால் திரௌபதி அந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கமாட்டாள். தன்னை அர்ப்பணித்த கணவன்மார்களே உதவாதபோது, கையில் சிறிது காயம் பட்டபோது தனது உடையை கிழித்து கண்ணனுக்கு கட்டியதை நினைவுகூர்ந்து, துணியை விட்டு மானம் காத்தான் கிருஷ்ணன். இதில் யார் சிறந்தவர்கள்? யார் திரௌபதி மீது உண்மையான பாசமும், அன்பும், அக்கறையும் கொண்டிருந்தவர்கள்? நட்பின் அடிப்படையில் வந்த ஒருவர் தனக்காக இவ்வளவு செய்யும்போது, காதல், திருமணப் பந்தம் மூலம் வந்த கணவர்கள் பயனற்றதாக இருந்தது ஏன்?


    திரௌபதிக்கு கண்ணன் உதவும் காட்சி

    இந்த பாண்டவர்களைப் போல பல கணவர்மார்கள் உள்ளனர். எப்போது தனது துணைக்கு தேவையோ அப்போது உதவமாட்டார்கள். சிறந்த உறவில் கணவன் தோழனாகவும் இருப்பான். அப்படி இருந்தால்தான் அந்த உறவு சிறக்கும். தோழன் கணவனாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு கணவன் கண்டிப்பாக தோழனாக மாறமுடியும். பெண்களின் பதிலுக்கும் இதுதான் காரணம். தன் உணர்வுகளை மதிக்கும் ஒருவரையே பெண் தேர்ந்தெடுப்பாள். 

    • காதல் மொழிகள் அன்பை வெளிப்படுத்தும் வழிகள்.
    • தொடுதல் மனித வாழ்வுக்கு மிக அவசியமான ஒன்று.

    காதல் ஒருவரை பைத்தியமாக்கும் எனக்கூறுவார்கள். அதற்கு காரணம் காதல் வந்தால் தனிமையில் சிரிப்பார்கள், கூட்டத்தின் மத்தியிலும் தனியாக உணர்வார்கள், ஏதோ ஒரு யோசனையிலேயே இருப்பார்களாம். அதாவது மற்றவர்கள் கூறுவதை செவிகொடுத்து கேட்க அவர்களுக்கு நேரம் இருக்காது. அதனால் அப்படி கூறுவார்களாம். இப்படிப்பட்ட இந்த காதலுக்கு 5 மொழிகள் உள்ளது என்றால் நீங்கள் நம்புவீர்களா? எங்களுக்கு தெரிந்தது எல்லாம் தமிழும், ஆங்கிலமும்தான். அதென்ன 5 மொழிகள் என பலரும் ஆச்சர்யப்படலாம். ஆம் காதலில் 5 மொழிகள் உள்ளனவாம். அதாவது காதலில் உள்ளவர்கள் அன்பை வெளிப்படுத்தும் வழிகள். காதலில் இந்த மொழிகளைத்தான் பெரும்பாலும் பெண்கள் விரும்புவார்கள். 

    வார்த்தை

    நமது காதலரிடமோ அல்லது நமக்கு பிடித்தவர்களிடமோ வார்த்தைகள் மூலம் அன்பை வெளிப்படுத்துதல். நீ அழகாக இருக்கிறாய் எனக்கூறுதல், அவர்களை புகழ்தல், பாராட்டுதல், ஊக்குவித்தல், நான் இருக்கிறேன் என தைரியம் கொடுத்தல் போன்ற அனைத்தும் காதலின் முதல் மொழியாகும். இப்படி செய்யும்போது உண்மையில் உங்கள் அன்புக்குரியவர்கள் உள்ளிருந்து மகிழ்ச்சியடைவார்கள். ஒரு உறவு நீடிக்க தொடர்பு (communication) மிகவும் அவசியமானது. பல உறவுகளுக்கிடையே பேச்சு இல்லாததே அதன் பிரிவுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. 

    நேரம்

    பலரும் தங்கள் துணையோடு நேரம் செலவிட விரும்புவர். பல திருமணங்கள் முடிவுக்கு வரக்காரணமே நேரம் ஒதுக்காமைதான். வேலை, வீடு என சாக்குப்போக்கு கூறாமல் உங்கள் துணைக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். அவர்கள் விரும்புவது அதைத்தான். நேரம் பொன் போன்றது எனக்கூறுவார்கள். நேரத்தை கொடுக்காமல், நீங்கள் பொன்னையே கொடுத்தாலும் அதை பலரும் ஏற்கமாட்டார்கள். 

    தொடுதல்

    தொடுதல் என்பது உடலுறவை குறிப்பது அல்ல. தொடுதல் என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்று. அது காதலரைத்தான் தொடவேண்டும் என்றல்ல. உங்கள் நாய்க்குட்டியை கட்டியணைக்கலாம். நண்பர்களை ஆரத்தழுவலாம். தழுவுதல் மனித வாழ்க்கைக்கு ஒரு ஆறுதலைத் தரும். அதுபோல காதலில் ஒருவரின் கையை ஒருவர் பிடித்து நடப்பது போன்றவை பெண்கள் அதிகம் விரும்பும் ஒன்றாகும். பெண்களின் நகங்களை பிடித்து அவர்களுக்கு நெய்ல்பாலிஷ் போடலாம், மருதாணி போடலாம். அதுபோல பெண்களும் ஆண்களின் கையை பிடித்து அவர்களுக்கு ஆறுதல் கூறலாம். அன்பாக பேசலாம். இந்த தொடுதல் பலருக்கும் பல மனநன்மைகளை தருகிறது. 


    எந்த வழியாக, மொழியாக இருந்தாலும் காதலை வெளிப்படுத்துங்கள்

    துணைக்கு சேவை

    சொல்லைவிட செயலில்தான் ஒருவரின் காதல் வெளிப்படும். உங்களின் காதல் செயல்களாக இருந்தால், நீங்கள் அவர்களுக்காகச் செய்யும் சிறிய விஷயங்களைக்கூட அவர்கள் பெரிதாக எண்ணி மகிழ்ச்சி அடைவார்கள். அதாவது வீட்டில் அதிக வேலை இருந்தால், உங்கள் துணைக்கு ஆதரவாக பாத்திரங்களை சுத்தம் செய்யுதல், வீட்டை பெருக்குதல், குழந்தைகளை கவனித்தல், காதலர்கள் அலுவலக வேலைகளில் உதவுதல் என சின்ன சின்ன உதவிகளை செய்தாலே போதும்.

    பரிசு

    உங்கள் அன்பை பரிசுகள் மூலம் வெளிப்படுத்தலாம். அந்தப் பரிசின் அளவு முக்கியமல்ல, ஆனந்தம்தான் முக்கியம். பெண்கள் பரிசு கொடுத்தால் மகிழ்ச்சி அடைவார்கள் என்ற எண்ணம் பொதுவாகவே ஆண்களிடம் உள்ளது. ஆனால் அது பரிசுக்கான ஆனந்தமோ, மகிழ்ச்சியோ கிடையாது. பரிசு வாங்க அவர்கள் செலவிடும் நேரமும், அவர்களின் அந்த முயற்சியும் ஈர்க்கிறது, மகிழ்விக்கிறது. நமக்காக யோசித்து செய்கிறார்கள் என ஒரு ஆனந்தம். நாம் நேசிக்கும் ஒருவர் கொடுக்கும் பரிசுகள் பொக்கிஷமானவை.  

    இவை மட்டும்தான் காதல்மொழியா?

    இவை மட்டும்தான் காதலை வெளிப்படுத்துவதற்கான வழிகள் என்று இல்லை. அன்பை வெளிப்படுத்தவும், பெறவும் பல்வேறு வழிகள் உள்ளன. இவை அன்பை கட்டமைக்கக்கூடிய சில வழிகளே. வெளிப்படுத்தப்படாமலும் பல காதல்கள் இங்கு வாழ்கின்றன. ஆனால் சொல்லாமல் இருந்தால், அவர்கள் மீதான உங்கள் அன்பு எப்படி அவர்களுக்கு தெரியும்? ஆகையால் உங்கள் காதலை எந்த வழியாக இருந்தாலும் அந்த காதலின்வழி வெளிப்படுத்துங்கள். 

    • அழகோ, அதிகாரமோ, பண பலமோ ஒருவரின் தனித்துவத்தைக் காட்டாது.
    • நாம் நடந்துகொள்ளும் விதமும், நம்மை சுற்றி இருப்பவர்களின் நம் மீதான கருத்தும்தான் நம்மை தனித்துவமாக எடுத்துக்காட்டும்.

    ஒரு அறையில், ஒரு அலுவலகத்தில், ஒரு கல்லூரியில் இப்படி எங்கு இருந்தாலும் நம்மைச்சுற்றி பலர் இருப்பார்கள். எல்லோரும் ஒன்றுதான். ஆனால், "நான் அவர்களிடமிருந்து வேறுபட்டு தனியாக தெரிய வேண்டும்" என பலரும் நினைப்பார்கள். அதுவும் இந்த எண்ணம் பெண்களுக்கு அதிகம் உண்டு.  உங்களுக்கான பதிவுதான் இது. அழகோ, அதிகாரமோ, பண பலமோ ஒருவரை தனித்துவமாக காட்டாது. நாம் ஒருவரிடம் நடந்துகொள்ளும் விதமும், நம்மை சுற்றி இருப்பவர்கள் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதும்தான் நம்மை தனித்துவமாக எடுத்துக்காட்டும். மற்றவர்களிடமிருந்து நீங்கள் வேறுபட்டு தெரியவேண்டுமென்றால் உங்களின் சில செயல்பாடுகளை மாற்றினாலே போதும். 

    பார்வை...

    நாம் யாரிடம் பேசினாலும் அவர்களின் கண்களைப் பார்த்து பேசவேண்டும். பொய் பேசாதவர்கள், நேர்மையானவர்கள் கண்களை பார்த்து பேசுவார்கள் என்ற பேச்சு நீண்டகாலமாக நம்மிடையே உள்ளது. அதனால் ஒருவரின் கண்களை பார்த்து நீங்கள் பேசும்போது உங்கள் வார்த்தைகள்மீது நம்பிக்கை வரும். மேலும் நாம் பேசும்போது நம் கண், நம் உதடுகளை தாண்டி உணர்ச்சிகளை பிரதிபலிக்கும். அதற்காக அதிகம் கண்களால் தொடர்புகொண்டால் சிலர் தவறாக நினைக்கலாம். சிலருக்கு அச்சுறுத்தலாகவும் இருக்கும். எந்த விஷயங்களுக்கெல்லாம் கண்களை பார்த்து பேசவேண்டும் அதற்கு மட்டும் கண்களை பயன்படுத்துங்கள்.   

    தெளிவான பேச்சு

    நாம் சொல்ல நினைப்பதை நேரடியாக சொல்லவேண்டும். தேவையற்ற பேச்சுகளை குறையுங்கள். தெளிவாக பேசவேண்டும். தேவையானவற்றை மட்டுமே பேசவேண்டும் என கடகடவென ஓடவும் கூடாது. மெதுவாக, உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும். நமது பேச்சுத்திறனே ஒருவரை கவரும். 


     நம் வார்த்தைகளைவிட செயல்கள்தான் சத்தமாக பேசும்

    உறுதியாக மாறுங்கள்

    மரியாதை கொடுத்து மரியாதை வாங்கவேண்டும் எனக்கூறுவார்கள். ஆம், நாம் ஒருவரிடம் எவ்வாறு நடந்துகொள்கிறோமோ அதுபோலத்தான் அவர்கள் நம்மை பிரதிபலிப்பார்கள். நீங்கள் ஒருவரை நடத்தும்விதம், மதிக்கும்விதம்தான் உங்களை எவ்வாறு நடத்தவேண்டும் என்பதை அவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறது. உயிர்களிடத்தில் கருணையுடன் நடந்துகொள்ளுங்கள். அதுபோல தேவையான இடத்தில் வேண்டாம் என்பதை சொல்ல பழகுங்கள். ஒரு தெளிவான நிராகரிப்பு என்பது பல இடங்களில் தேவையான ஒன்று. எங்கு வேண்டாமோ அங்கு வேண்டாம் என சொல்வது உங்களுக்கு அமைதி, நன்மையை கொடுப்பது மட்டுமல்லாமல், மற்றவர்களின் மரியாதையையும் பெறச் செய்யும். அதைவிடுத்து என்ன நினைப்பார்களோ என எண்ணி, விருப்பமே இல்லாமல் ஒரு செயலை செய்ய ஒத்துக்கொள்வது உங்களையும் சங்கடத்தில் ஆழ்த்தும். சுற்றியுள்ளவர்களையும் சங்கடத்தில் ஆழ்த்தும். 

    உடை

    நமது உடை பாணியும் பலரை கவரும். மற்றவர்களிடம் நன்மதிப்பு பெற நம்பிக்கையுடன் பேசுவதுபோலவே, தனித்துவமாகவும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு உடை அணிவதும் பலரின் கவனத்தையும் ஈர்க்கும். நேர்த்தியாக உடை உடுத்துவது, சிறந்த தோரணையை வெளிப்படுத்துவது உங்களை இன்னும் தனித்துவமாக காட்டும்.

    "சொல்லைவிட செயலே முக்கியம்"

    வார்த்தையை காப்பாற்ற வேண்டும். அதாவது கொடுத்த வாக்குறுதியை காக்கவேண்டும். நம் வார்த்தைகளைவிட செயல்கள்தான் சத்தமாக பேசும். நாம் சொன்ன செயலை செய்வது, கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவது என்பது மேற்கூறியவற்றை தாண்டி உங்கள்மீது அதிக நம்பிக்கையை பெறச்செய்யும். "ஓ... அவங்களா..., சொன்ன சொல்லை காப்பாத்துவாங்கப்பா" என ஒருவரை சொல்லச்செய்யும். சொன்னநேரத்தில் செய்வது, நேரத்திற்கு இருப்பது போன்ற எதுவாக இருந்தாலும் ஒரு நற்பெயரை பெற்றுக்கொடுக்கும். 

    • துணிகள் உலரப் போட்டிருக்கும் அறையில், ஒரு கிண்ணத்தில் உப்புக்கற்கள் அல்லது பேக்கிங் சோடாவைத் திறந்து வையுங்கள்!
    • துணிகளை அலசும் கடைசித் தண்ணீரில் ஒரு மூடி வெள்ளை வினிகரைச் சேர்ப்பதன் மூலம் பல பிரச்சனைகளை தீர்க்கலாம்.

    மழைக்காலம் வந்தாலே, பெண்களுக்கு சலவைப் பணிகள் ஒரு பெரும் சவாலாக மாறிவிடுகின்றன. வெயிலும், காற்றின் வேகமும் குறையும் போது, துணிகளை உலர்த்துவது மிகவும் கடினமாகிறது. ஈரப்பதம் வெளியேறாமல், துணிகள் சீக்கிரம் காயாமல் பூஞ்சை வாடை வீச ஆரம்பிப்பது பலரது வீட்டிலும் நடக்கும் பொதுவான பிரச்சனை. துர்நாற்றம் மற்றும் பூஞ்சை உருவாகாமல், துணிகளை விரைவாகவும், சுகாதாரமாகவும் உலர்த்துவது எப்படி? அதிகபட்ச நீரை வெளியேற்றுவது முதல், சரியான காற்றோட்டத்தை உருவாக்குவது மற்றும் பூஞ்சை வாடையை அகற்றும் சமையலறை ரகசியம் வரை, மழைக்காலத்தில் சலவை செய்யும் உத்திகள் குறித்து இப்போது விரிவாகக் காணலாம்.

    துணிகளை விரைவாக உலர்த்த

    மழைக்காலத்தில், வெயில் மற்றும் காற்றின் ஈரப்பதம் இல்லாத காரணத்தால் துணிகளை உலர்த்துவது பெரும் சவாலாக உள்ளது. இதனால் துணிகள் சீக்கிரம் காயாமல் பூஞ்சை வாடை வீச ஆரம்பிக்கிறது. இதற்குத் தீர்வாக, முதலில் துணிகளில் உள்ள அதிகபட்ச நீரை வெளியேற்ற வேண்டும்; வாஷிங் மெஷினில் துவைப்பவர்கள் துணிகளை அதிக வேகத்தில் இரண்டு முறை 'சுழற்றுதல் (Spin Cycle)' செய்ய வேண்டும், கைகளால் துவைப்பவர்கள் துணிகளை ஒரு சுத்தமான, உலர்ந்த டவலில் வைத்து இறுக்கமாகச் சுருட்டி அழுத்தி நீரை உறிஞ்சச் செய்யலாம். மேலும், துணிகளை உலர்த்தப் போடும் முன் ஒவ்வொன்றையும் நன்கு உதறி, அதன் இழைகளைப் பிரித்து, துணியின் மேற்பரப்பை அதிகப்படுத்துவதன் மூலம் ஆவியாதல் சீக்கிரமாக நடைபெறும்; குறிப்பாக ஜீன்ஸ் போன்ற கனமான துணிகளை மடிப்பு இல்லாமல் பரப்பிப் போடுவது மிகவும் அவசியமாகும்.


    பூஞ்சை மற்றும் துர்நாற்றத்தை தவிர்க்க கடைசி அலசலின்போது சிறிதளவு வினிகர் சேர்த்துக் கொள்ளலாம்

    உட்புறத்தில் காற்றோட்டமே முக்கியம்

    வீட்டிற்குள் துணிகளை உலர்த்துவதற்குச் சரியான காற்றோட்டமே மிக முக்கியமாகும். துணிகளை உலர்த்த ஒரு மடிப்பு ஸ்டாண்டைப் பயன்படுத்தி, அதை சீலிங் ஃபேன் அல்லது டேபிள் ஃபேன் இயங்கும் அறையில் வைக்க வேண்டும். ஃபேன் காற்று நேரடியாகத் துணிகள் மீது படுமாறு வைத்தால், ஈரப்பதம் வேகமாக ஆவியாகும். முக்கியமாக, துணிகளை நெருக்காமல், ஒவ்வொரு துணிக்கும் இடையில் குறைந்தபட்சம் 3 அங்குலமாவது இடைவெளி விட வேண்டும். துணிகள் ஒன்றோடு ஒன்று தொட்டால், ஈரப்பதம் தங்கிக் கொண்டே இருக்கும், இதனால் துர்நாற்றம் மற்றும் பூஞ்சை உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கும். மேலும், துணிகள் உலரப் போட்டிருக்கும் அறையில், ஒரு கிண்ணத்தில் உப்புக்கற்கள் அல்லது பேக்கிங் சோடாவைத் திறந்து வைத்தால், அவை காற்றில் உள்ள அதிகப்படியான ஈரப்பதத்தை ஈர்த்து, உலர்த்தும் செயல்முறையைத் துரிதப்படுத்த உதவும்.

    பூஞ்சை வாடைக்குத் 'தடா'

    மழைக்காலத்தில் சலவை செய்யப்பட்ட துணிகளில் ஏற்படும் பூஞ்சை வாசனை மற்றும் துர்நாற்றத்தைத் தவிர்க்க ஒரு எளிய, செலவு குறைந்த சமையலறை ரகசியம் உள்ளது. துணிகளை அலசும் கடைசித் தண்ணீரில் ஒரு மூடி வெள்ளை வினிகரைச் சேர்ப்பதன் மூலம் இந்தப் பிரச்சனையையும் கையாளலாம். வினிகர் பூஞ்சை மற்றும் துர்நாற்றத்தை நீக்கும் சக்தி வாய்ந்தது; மேலும், அதன் வாசனை துணி காய்ந்தவுடன் முற்றிலும் ஆவியாகிவிடும். துர்நாற்றம் நீங்கவில்லை எனில், மீண்டும் அலசும் தண்ணீரில் வினிகர் சேர்த்து ஒரு முறை அலசி, பின்னர் உலர வைக்கலாம். இந்த எளிய மற்றும் பயனுள்ள உட்புற நிர்வாக உத்தியின் மூலம், விலை உயர்ந்த இயந்திரங்களைப் பற்றிய கவலை இல்லாமல், எந்தவொரு குடும்பத் தலைவியும் மழைக்காலச் சலவைப் பணிகளை மிகச் சிறப்பாகவும், துர்நாற்றமின்றியும் நிர்வகிக்க முடியும். 

    குற்றங்கள் நடக்க முக்கிய காரணம், சட்டங்கள் கடுமையாக இல்லை என்ற பேச்சு நீண்டகாலமாக தொடர்கிறது.

    கோவை விமான நிலையம் பின்புறம், பிருந்தாவன் நகரில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், நவ.2ம் தேதி இரவு, கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டுருந்தபோது, அங்கு வந்த மூன்று பேர், காரில் இருந்த இளைஞரை தாக்கிவிட்டு, அப்பெண்ணை இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. செய்தித்தாளை திறந்தாலே, ஃபோனை ஆன் செய்தாலே, டிவியை போட்டாலே இதே செய்திதான். இச்செய்தியில் பல விவாதங்கள் எழுகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்ல நாடு முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழும்போது, எப்போதுமே இருவாதம் எழும். அதாவது சட்டம், ஒழுங்கு சரியில்லை; பெண்கள் ஏன் அந்த நேரத்தில் அங்கு சென்றனர்? ஏன் அவரிடம் பேசினர்? இதில் எது சரி? பார்ப்போம்...

    சட்டம், ஒழுங்கு சரியில்லையா?

    சட்டம், ஒழுங்கு என்றால் என்ன? ஏதேனும் ஒரு குற்றம் என்றால் உடனே ஆளும்கட்சியை குறைசொல்ல ஆரம்பித்துவிடுவார்கள் பலரும். ஒரு அரசுதான் குற்றங்கள் அனைத்திற்கும் காரணமா? பொறுப்பா? கொஞ்சம் மக்கள் சிந்தித்து பாருங்கள். ஒரு அரசு மட்டும் என்ன செய்யமுடியும்? 

    பல இடங்களில், அதுவும் பொது இடங்களில் ஒரு கும்பல் சண்டை போடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த சண்டையை சுற்றி இருக்கும் பொதுமக்கள் தடுக்கலாம். ஆனால் உயிர்மீதான பயத்தால் யாரும் தடுக்கமாட்டோம். அப்படி அனைவரும் ஒன்றுக்கூடி தடுத்தால், ஒவ்வொரு இடங்களில் இது நிகழும்போதும் மக்கள்மீது குற்றம் புரிபவர்களுக்கு ஒரு பயம் வரும். ஆனால் நமக்கு என்ன என மக்கள் ஒதுங்கி இருப்போம். என்று, மக்கள்மீது குற்றம் புரிபவர்களுக்கு பயம் வருகிறதோ, அப்போதுதான் குற்றங்கள் குறையும். மற்றொன்று காவல்துறையினர். உண்மையில் காவல்துறையினர் மீது பல விமர்சனங்கள் இருப்பது நிதர்சனமான உண்மை. அதேநேரம் காவல்துறையில் ஒவ்வொரு குடிமகனுக்கும் என தனித்தனியாக ஒரு காவலரை நியமிக்க முடியாது என்பதும் நியாயமான ஒன்றுதானே.

    சுய ஒழுக்கம்

    மறுபக்கம் எளிதாக ஒருவரை குத்திவிட்டு, கொடூரமாக கொலைசெய்து விட்டு, ஒரு பெண்ணின் அழுகை, கதறல் சத்தம்கேட்டும் ஒருவன் குற்றத்தை புரிகிறான். நமக்கு ஒரு எறும்பை மிதித்துவிட்டால் கூட உள்ளம் பதறுகிறது. இங்கு அவனுக்கு மனிதாபிமானம் இல்லையா? இரக்க குணம் இல்லையா? எது இல்லை? சிறுவயதிலிருந்தே ஒருவருக்கு அனைத்து நல் ஒழுக்கங்களையும், மனிதாபிமானம், இரக்கக்குணம் போன்றவற்றையும் பெற்றோர்கள் சொல்லி வளர்க்கவேண்டும். ஒருவரின் உணர்வுகளை புரிந்துக்கொள்ள கற்றுக்கொடுக்க வேண்டும். ஒரு நல்ல வளர்ப்பு, குற்றங்களை தடுக்க உதவும். ஆனால் பல பெற்றோர்களே குழந்தைகள் குற்றவாளிகளாக உருவெடுக்க ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றனர். வளர்த்தலை தாண்டி சுய ஒழுக்கமும் தேவை. ஒரு மனிதன் சுய ஒழுக்கத்துடன் வளருதல் என்பது மிக முக்கியமான ஒன்று. நாம் ஒழுக்கத்துடன் இல்லாமல், சட்டத்தை மட்டும் குறை கூறுவது எப்படி? 

    சட்டங்கள்

    குற்றங்கள் நடக்க முக்கிய காரணம் சட்டங்கள் கடுமையாக இல்லை என்ற பேச்சு நீண்டகாலமாக தொடர்கிறது. இதற்கு காரணம் இந்தியாவில்தான் கொலை செய்தவன், ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்தவன் போன்றோரெல்லாம் ஜாமினில் ஜாலியாக சுற்றுகிறார்கள். 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் இல்லாததால்தான், பல குற்றச் செயல்களுக்கு சிறார்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். எப்போது ஒரு சட்டத்தின் மீது பயம் வருகிறதோ அப்போதுதான் குற்றம் குறையும். இருப்பினும் வெறும் சட்டத்தால் மட்டும் குற்றங்களை குறைக்க முடியாது. 

    எல்லாவற்றிற்கும் அரசுதான் பொறுப்பா?

    மேலே நாம் குறிப்பிட்ட கோவை கல்லூரி பெண் வழக்கு உட்பட தமிழ்நாட்டில் நடக்கும் அத்தனை குற்றங்களுக்கும் அரசுதான் பொறுப்பா? கொஞ்சம் தெளியுங்கள். சொந்த குடும்பத்தை, உறவினர்களை, தான் நேசித்த காதலரை, காதலியை சிலர் கொல்கிறார்கள். இதற்கும் அரசை குறை கூறவேண்டியது. சொந்த குடும்பத்தில் அண்ணன், தனது தம்பியை வெட்டப்போகிறான் என்பது அரசுக்கு எப்படி தெரியும்? தெரிந்தால்தானே ஒரு காவலரை அங்கு முன்கூட்டியே காவல் வைக்கமுடியும். தகாத உறவுகளால் பல கொலைகள் அதுவும் அப்பாவிகள் பலர் கொலை செய்யப்படுகின்றனர்.

    இதற்கும் அரசுதான் காரணம் என்றால், ஒவ்வொருவரும் தங்கள் உறவு குறித்து அரசிடம் பதிவு செய்தால், அதற்கேற்றார் போல ஒரு காவலரை நியமிக்கலாம். இருப்பினும் சில வழக்குகளில் கொலைசெய்துவிட்டு தண்டனை குறித்து தெரிந்தும், காவல் நிலையங்களில் சரணடைகின்றனர். இதற்கு காரணம்? சட்டத்தின் மீது பயம் இல்லாததா? இல்லை. சில இடங்களில் உணர்ச்சிரீதியாக சிலர் பொறுமை இழக்கையில் தனது நெருங்கிய உறவுகளை கூட கொல்ல துணிகின்றனர். கொலை என்பது எல்லாவற்றிற்கும் தீர்வு அல்ல என்பதை இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

    மூன்றாவது கூட்ட நெரிசல். ஆன்மிக நிகழ்ச்சிகள், பெங்களூரு ஆர்பிசி கூட்ட நெரிசல், சமீபத்தில் தவெக கூட்ட நெரிசல் என இவற்றில் சிக்கி ஏராளமானோர் இறந்த செய்தியை அனைவரும் பார்த்திருப்போம். இதற்கு அரசும், காவல்துறையும் பாதுகாப்பு வழங்காததுதான் காரணம் என குற்றம் சொல்பவர்கள் சொல்லலாம். ஆனால் 10 பேர் இருக்கவேண்டிய இடத்தில் 50 பேர் இருந்தால் காவல்துறையும், அரசும் மட்டும் என்ன செய்யும்? இதை ஏன் மக்கள் சிந்திக்கவே மறுக்கிறீர்கள்? உங்களின் சுய ஒழுக்கம், ஒரு பொது அறிவு, பொது புரிதல் எங்கே செல்கிறது? ஒருவர் இருக்கவேண்டிய இடத்தில் பத்துபேர் இருந்தால் மூச்சுவிடுதல் சிரமமாகும். தாகம் எடுக்கும். அங்கு மூச்சும் விட இயலாது. முன்னேற்பாடுகள் இல்லாததால் தண்ணீரும் குடிக்க இயலாது. நிற்பதற்கு இடமும் இல்லாமல், ஒருவரை ஒருவர் நெரித்து மேலே ஏறி மிதிப்பர். ஏனெனில் அவரவர் உயிர்தானே அவரவருக்கு முக்கியம். அதனால் மற்றவர்களை நினைக்கமாட்டார்கள். இப்படி ஒரு உயிர் அங்கு போக அங்கு இருப்பவர்களே காரணமாக இருந்துகொண்டு ஒரு அரசை குற்றம் சாட்டினால் எப்படித்தகும்? 


    சுதந்திரத்திற்கும் கட்டுப்பாடு அவசியம்

    கண்டிப்பாக அரசும் பொறுப்பேற்க வேண்டும். நாட்டில் நடக்கும் குற்றங்களுக்கு கண்டிப்பாக ஆட்சியில் இருக்கும் ஒரு அரசு பொறுப்பேற்க வேண்டும்தான். ஆனால் மக்கள் சுய ஒழுக்கத்துடன், ஒரு பொது புரிதலுடன் இருக்கவேண்டும். அரசை கூறுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். 

    பாதுகாப்பு முக்கியம்!

    கோவை மாணவி வழக்கு உட்பட காதலர்கள் பலரும் இதுபோல தனிமையில் இருக்கும்போது, பலர் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். காதலர்கள் தனிமையில் நேரம் செலவிடவேண்டும் என விரும்புவோம். அது நம் அனைவருக்குள்ளும் எழும் ஒரு இயல்பான உணர்வு. ஆனால் நாம் நேரம் செலவிடுவதற்கு தகுந்த இடம் எது? பலரும் பாதுகாப்பற்ற இடங்களுக்குச் சென்று இதுபோல சிக்கிக் கொள்கின்றனர். பெண்ணை ஒரு ஆண் உண்மையில் நேசிக்கிறான் என்றால், அவன் அந்த பெண்ணின் பாதுகாப்பிற்குத்தான் முதலில் முக்கியத்துவம் கொடுப்பான். உணர்ச்சிகள் மட்டும் காதல் இல்லை. உண்மையான நேசம்தான் காதல் என்பதை மனதில் நிறுத்திக்கொள்வோம். 

    எது பெண் சுதந்திரம்?

    1947-ல் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது. ஆனால் நாம் நினைத்த நேரத்தில், நமக்கு பிடித்ததை, நமக்கு பிடித்த இடத்திற்கு, நமக்கு பிடித்தவருடன் செல்ல முடியவில்லை என்பது என்ன சுதந்திரம் என கேள்வி எழுப்பலாம். அதற்கு அனைத்து உரிமையும் உண்டு. ஆனால் இங்கு நமக்கு பாதுகாப்பு சுதந்திரம் இல்லை என்பதை பெண்கள் உணருங்கள். நினைத்த நேரத்திற்கு வெளியே செல்லலாம் என்பது சுதந்திரம்தான். ஆனால் அதிலும் ஒரு கட்டுப்பாடு தேவை. எதிலும் ஒரு கட்டுப்பாடு இருந்தால்தான் அது நிலையோடு இருக்கும். இதை சொல்வது அபத்தமானது என்று தெரிந்தாலும், நம் நாட்டின் நிலை என்ன? நமக்கு இங்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்பதை பெண்கள் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் உங்கள் காதலரை சந்திப்பது தவறு இல்லை. ஆனால் அந்த சந்திப்பை ஒரு பாதுகாப்பான இடத்தில் நிகழ்த்துங்கள். இந்தியாவில் அம்மாக்களே தங்கள் பெண்பிள்ளைகளைத்தான், ஒழுங்காக உடை அணிய சொல்வார்கள். எப்போதும் தங்கள் ஆண்பிள்ளைகளிடம் சாதரணமாகக்கூட பெண்களை தவறாக பார்க்கக்கூடாது என சொல்லமாட்டார்கள். அப்படி இருக்கையில் இங்கு நாம்தான் நம் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும். அதனால் கிடைக்கும் சுதந்திரத்தை முதலில் அனைவரும் சரியாக பயன்படுத்துகிறோமா என எண்ணுங்கள். இந்தக் கருத்துகள் பெண் சுதந்திரத்திற்கு எதிரானது அல்ல. ஆனால் இங்கு சட்டம், ஒழுங்கு, ஒரு ஆணின் பார்வை, மக்களின் பார்வை எப்போது மாறுகிறதோ அப்போதுதான் பெண்கள் நினைக்கும் சுதந்திரம் கிடைக்கும் என்பதை தெளிவுப்படுத்திக்கொள்வோம்.

    • சட்டப்படி விவாகரத்து செய்யாமல் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.
    • ஒருவர் செய்வது குற்றம் என அறிந்தாலும், பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தால் மட்டுமே, சட்டம் தலையிடும்.

    தமிழ் திரையுலகில் நீண்ட நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசில்டா வழக்கில் இன்று முக்கிய திருப்பம் அரங்கேறியுள்ளது. இதுவரை தன்மீது ஜாய் கிரிசில்டா கூறிய எந்த குற்றச்சாட்டுக்கும் விளக்கமளிக்காத ரங்கராஜ், சமீபத்தில் மகளிர் ஆணையம் நடத்திய விசாரணையில் தான்தான் ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு தந்தை என ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்துக் கொண்டதையும் ஒப்புக் கொண்டுள்ளார். இதனிடையே மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் மற்றும் மகளிர் குற்றத் தடுப்பு துணை ஆணையருக்கு மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. குழந்தைக்கு தந்தை தான் என ஒப்புக்கொண்டதால் டிஎன்ஏ பரிசோதனை தேவையில்லை எனவும், அவர்மீது நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உரிமையியல் நீதிமன்றத்தை ஜாய் கிரிசில்டா நாடும் வரையில், அவருக்கு தற்போது பிறந்துள்ள குழந்தைக்கான பராமரிப்பு செலவை மாதம்பட்டி ரங்கராஜ், மறுப்பு தெரிவிக்காமல் ஏற்கவேண்டும் எனவும் மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இவ்விவகாரத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் கைது செய்யப்படுவாரா என இணையவாசிகள் விவாதம் நடத்தி வருகின்றனர். இப்படி இவர்கள் சொல்வதுபோல மாதம்பட்டி ரங்கராஜை கைது செய்ய இயலுமா? இந்திய சட்டங்கள் என்ன கூறுகின்றன என்பது குறித்து காண்போம். 

    இந்தியச் சட்டப்படி கணவர் விவாகரத்துப் பெறாமல் இரண்டாவது திருமணம் செய்தால், அவர்மீது வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதித்து, சிறை தண்டனையும் விதிக்கலாம். ஆனால் அதற்கு கணவரின் திருமணத்தால் பாதிக்கப்பட்ட முதல் மனைவி புகார் அளிக்கவேண்டும். பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தால் மட்டுமே, சட்டம் தலையிடும். மற்றப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது. மற்றொன்று முதல் மனைவியுடன் விவாகரத்து வாங்கவில்லை என்பதை அறிந்தே, இரண்டாவது திருமணம் செய்துகொண்டால், அப்பெண்ணிண் குற்றச்சாட்டு எடுபடாது. ஆனால் ரங்கராஜின் வழக்கில் மகளிர் ஆணையம் தற்போது உறுதியான நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்துள்ளதால் கைது செய்யப்படலாம் என சிலர் கூறிவருகின்றனர். மற்றொன்று ஜாய் கிரிசில்டா கோரிய பராமரிப்பு தொகை... தனக்கும், தனது குழந்தைக்கும் மாதந்தோறும் ரூ.6.50 லட்சம் பராமரிப்புத் தொகை வழங்கக் கோரி ரங்கராஜுக்கு ஜாய் கிரிசில்டா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. இந்நிலையில் சட்டப்படி திருமணம் செய்யாவிட்டாலும், பராமரிப்புத்தொகை  நிச்சயம் வழங்கப்பட வழிவகை உள்ளது. இதுபோன்ற பல வழக்குகளில் நீதிமன்றங்கள் இரண்டாவது மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டுள்ளது. முதல் மனைவி தடுத்தாலும் போதிய காரணங்கள் இருந்தால் வழங்கலாம். காரணம் கணவரின் தவறு என்பதால் முதல் மனைவி தடுத்தாலும் ஜீவனாம்சம் வழங்கலாம். 


    இரண்டாவது மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன 

    இவர்கள் வழக்கு எப்படி இருந்தாலும், சட்டங்கள் என்ன சொன்னாலும் பெண்கள் மனதில் நிறுத்திக் கொள்ளவேண்டியது ஒன்றுதான். திருமணம் முடிந்திருந்தால், விவாகரத்து செய்யாமல் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளாதீர்கள். அதுபோல நீங்கள் திருமணம் செய்ய உள்ளவர், ஏற்கனவே திருமணம் ஆனவர் எனில், அவருடைய விவாகரத்தை உறுதிசெய்து பின்னர் ஒரு உறவுக்குள் செல்லுங்கள். உங்கள் தரப்பில் உணர்ச்சி ரீதியான நியாயங்கள் முன்வைக்கப்பட்டாலும், சட்டத்தின்படியே அரசு செயல்பட இயலும். படிப்பறிவு இருந்தாலும், நடைமுறையை அறிந்திருந்தாலும் உறவுகளுக்குள் செல்லும்போது சில முடிவுகளை எடுப்பது சிக்கலான ஒன்றுதான். ஆனால் எப்போதும் இந்த சமூகம் பெண்களையே குறைக்கூறும். அதனால் உங்கள் நலனுக்காக எந்த முடிவையும் எமோஷனலாக எடுக்காமல், நடைமுறையோடு ஒப்பிட்டு, ஆராய்ந்து எடுங்கள். 

    • குழந்தை பெற வேண்டுமானால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் தயாராக இருப்பது முக்கியம்.
    • நீங்கள் தவறவிட்ட விஷயங்களை அடைவதற்கான வழி அல்ல குழந்தைப் பெற்றுக்கொள்வது.

    புதிதாக திருமணமான தம்பதிகள் குழந்தை பெற திட்டமிட்டுள்ளீர்கள் எனில், எதற்காக நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள் என்பதில் தெளிவாக இருங்கள். ஏனெனில் குழந்தை வளர்ப்பு என்பது எளிதானது அல்ல. ஒரு குழந்தையை வளர்ப்பதற்கு நாம் முழுமனதோடு தயாராக வேண்டும். நீங்கள் கர்ப்பம் தரிப்பதற்கு முன் மற்றவர்களின் அழுத்தத்தின் காரணமாக குழந்தை பெறக்கூடாது என்பதை தெளிவாக மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள். உண்மையில் ஒரு பெண் ஆசைப்பட்டு அல்லது கணவன், மனைவி இருவரும் விருப்பப்பட்டு ஒரு குழந்தைக்கு தயாராகிறீர்கள் என்றால் பிரச்சனை இல்லை. மாறாக, வேறுசில காரணங்களால் நீங்கள் குழந்தை பெற முயற்சிக்கிறீர்கள் என்றால் அதனை தவிர்த்து விடுங்கள். ஏனெனில் அதனால் பாதிக்கப்படப்போவது நீங்கள் இல்லை. எந்தப் பாவமும் செய்யாமல் இந்த உலகுக்கு வரும் குழந்தைதான். காரணம், மற்றவர்களின் அழுத்தத்தால் ஒரு குழந்தை பெறும்போது நீங்கள் முழு அன்பையும் குழந்தையிடம் வெளிப்படுத்தமாட்டீர்கள். பெற்றோம், வளர்த்தோம் என கடமைக்காக ஒரு செயலை செய்வீர்கள். அதனால் கீழ்க்காணும் காரணங்களுக்காக பெண்கள் குழந்தை பெறுவதை கைவிடுங்கள். 

    "பெற்றோர் பேரக்குழந்தையை பார்க்க விரும்புகிறார்கள்"

    திருமணமானாலே வீட்டில் உள்ள பெரியவர்கள், பேரக்குழந்தையை பார்த்துவிட்டால் நிம்மதியாக சென்றுவிடுவேன். பேரக்குழந்தையை பெற்றுக்கொடுங்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என தொடர்ந்து பேச தொடங்கிவிடுவர். பெற்றோர் விருப்பம், மாமியார் கேட்டார் என ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ளாதீர்கள். உங்களுக்கு எப்போது விருப்பமோ, அப்போது குழந்தை பற்றி யோசியுங்கள். 

    "எங்களை நெருக்கமாக்கும் என்று நினைத்தோம்"

    பெரும்பாலான தம்பதிகள் குழந்தை பிறந்தால் தங்களுக்குள் கூடுதல் நெருக்கம் வந்துவிடும் என நினைப்பார்கள். அது தவறு. உங்களுக்கு நெருக்கம் வேண்டும் என்று நினைத்தால் நேரம் ஒதுக்கி அதிகம் வெளியே செல்லுங்கள். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முயலுங்கள். அதைவிடுத்து குழந்தை பெற்றுக்கொண்டு, நெருக்கம் இல்லாமல் உங்கள் நிலையை இன்னும் மோசமாக்கி கொள்ளாதீர்கள்.


    புதிய தம்பதிகள் கூடுதல் பிணைப்பு வேண்டும் என்று எண்ணினால் ஒன்றாக அதிக நேரம் செலவிடுங்கள்

    ஆண், பெண் என்பதை நிரூபிக்க...

    திருமணமான ஒரு ஆண்டிற்குபின் குழந்தை பெறுவது என்பது கட்டாயம் என்ற விதிமுறை நம் சமூகத்தில் நடைமுறையில் உள்ளது. இதற்கு மாறாக நமது திட்டங்கள் ஏதேனும் இருந்தால், உன்னால் குழந்தை பெத்துக்க முடியாது என பெண்களையும், நீயெல்லாம் ஒரு ஆணா என கணவன்மார்களையும் விமர்சிக்க தொடங்குவர். இந்த பேச்சுகளை நினைத்து பயம்கொண்டே உங்களுக்கு வேறு ஏதேனும் திட்டங்கள் இருந்தாலும் குழந்தை பெற்றுக்கொள்வீர்கள். ஆனால் அப்படி செய்யாதீர்கள். நீங்கள் என்ன செய்தாலும் சமூகம் பேசும். அதனால் உங்கள் கடமைகளை நிறைவேற்றிவிட்டு குழந்தைக்கு நீங்கள் தயார் எனும்போது பெற்றுக்கொள்ளுங்கள்.

    "மற்ற குடும்பங்களிலிருந்து வித்தியாசமாக இருக்க விரும்பவில்லை"

    சமூக அழுத்தம் காரணமாக நிறைய திருமணமான தம்பதிகள் உடனே குழந்தைகளைப் பெறுகிறார்கள். திருமணமான சில மாதங்களிலேயே உங்களைச் சுற்றியுள்ள பெரும்பாலானோர் "நல்ல செய்தி" இருக்கா என கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டுமே என குழந்தைப் பெற்றுக்கொள்ளக்கூடாது. மேலும் எங்களோடு திருமணம் செய்துகொண்டவர்கள் எல்லாம் பெற்றுக்கொண்டார்கள். நாங்கள் இன்னும் பெறவில்லை எனக்கூறி, குழந்தை பெற முயற்சிக்காதீர். குழந்தை பெற வேண்டுமானால் நீங்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் தயாராக இருப்பது முக்கியம்.  

    "நான் பெறாத விஷயங்கள் என் குழந்தைக்கு கிடைக்கவேண்டும்"

    என்னுடைய சிறுவயதில் நான் நிறைய விஷயங்களை தவறவிட்டேன். ஆனால் என் குழந்தைக்கு எல்லாவற்றையும் நான் கொடுக்கவேண்டும். என் குழந்தைக்கு செய்ய தேவையான அனைத்தும் இப்போது என்னிடம் உள்ளது என நீங்கள் தவறவிட்ட விஷயங்களை அடைவதற்கான வழி அல்ல குழந்தைப் பெற்றுக்கொள்வது. அவர்களுக்கு ஒரு தனிப்பட்ட அடையாளம் இருக்கும். ஆகையால் இதுபோன்ற செயல்களை மனதில் வைத்துக்கொண்டு ஒரு குழந்தையை பெறாதீர்கள். நீங்களாக விருப்பப்பட்டு ஒரு குழந்தை பெறும்போது அதற்கு உங்களின் அனைத்துவிதமான அன்பும் கிடைக்கும். நாம் திட்டமிட்டு நடத்துவதைவிட, எதிர்பாராமல் கிடைப்பதில்தான் ஆனந்தம் அதிகம் இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 

    • மழைக்காலங்களில் ஹை ஹீல்ஸ் காலணிகளுக்கு நிச்சயம் விடுமுறை கொடுங்கள்.
    • மழைக்காலத்தில் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள்.

    மாற்றம் தரும் மழைக்காலம் நகரமெங்கும் மென்மையாகப் படர்ந்து, பூமியைத் தழுவும் இந்த இனிய சூழலில், அலுவலகம் செல்லும் பெண்களுக்கான பாதுகாப்பு விதிகளை சற்று மெருகூட்டுவது அவசியம். இது அச்சப்பட வேண்டிய செய்தி அல்ல, மாறாக, அதிக விழிப்புணர்வோடு செயல்பட வேண்டியதன் அறைகூவல் ஆகும்! நம்முடைய நவீனத் தோழிகளுக்காக, மழையை எதிர்கொள்ளும் சில தனித்துவமான, புத்திசாலித்தனமான பாதுகாப்பு மந்திரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை ஒரு செய்தி கட்டுரையாக மட்டும் கருதாமல், உங்கள் அன்றாட வாழ்வில் மிக முக்கியமான பகுதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்.

    அடிப்படைத் தேவைகள்

    முதலில், காலணிகள் விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். உங்கள் விலை உயர்ந்த ஹை ஹீல்ஸ் காலணிகளுக்கு இந்த சீசனில் நிச்சயம் விடுமுறை கொடுங்கள். நீங்கள் எடுக்க வேண்டிய முதல் மற்றும் முக்கிய பாதுகாப்பு நடவடிக்கை என்னவென்றால், வழுக்காத ரப்பர் அல்லது பிளாஸ்டிக் அடிப்பாகம் கொண்ட, நீர்ப்புகாத காலணிகளைத் தேர்ந்தெடுப்பது தான். சாலையில் தேங்கும் சேறு, சகதி ஆகியவற்றில் தடுமாறாமல், உங்கள் பாதங்களுக்கு அசைக்க முடியாத பிடியைக் கொடுக்கும் இந்தக் காலணிகள், உங்களைப் பாதுகாப்பாக நிலத்தில் நிலைநிறுத்த உதவும். இது நாகரிகம் குறைவானது என்று நினைக்க வேண்டாம்; இது விவேகத்தின் மிக முக்கியமான அடையாளம்.

    அடுத்து, உங்கள் குடை ஒரு பாதுகாப்பு சாதனமாகவும் செயல்பட வேண்டும். மழையில் குடை என்பது வெறும் நனைவதில் இருந்து உங்களைக் காக்கும் சாதனம் மட்டுமல்ல; அது உங்கள் பாதுகாப்புக்கான வெளிச்சமாகவும் இருக்க முடியும். அடர் நீலம், நியான் பச்சை, ஆரஞ்சு போன்ற கண்ணைக் கவரும் பிரகாசமான வண்ணங்களில் குடைகளைத் தேர்ந்தெடுங்கள். மழையின் போதும், மப்பும் மந்தாரமுமாக இருக்கும் நேரங்களிலும், வாகன ஓட்டிகள் உங்களை வெகு சுலபமாக கவனிக்க இந்த வண்ணங்கள் உதவுகின்றன. உங்கள் குடை, நீங்கள் பாதுகாப்பாகப் பயணிக்கிறீர்கள் என்பதைப் பறைசாற்றும் ஒரு பிரகாசமான ரேடார் சிக்னலாக இருக்கட்டும்.

    பாதுகாப்பே பிரதானம்

    அலுவலகம் செல்லும் பெண்கள் தங்கள் கைப்பைக்குள் பல அத்தியாவசியப் பொருட்களை வைத்திருப்பார்கள். அந்த வகையில் இந்த மழைக்காலத்தில் உங்கள் பையை ஒரு 'நடமாடும் பாதுகாப்பு மையம்' போல மாற்றுங்கள். உங்கள் அவசரப் பையினுள் கைபேசி, அதன் பவர் பேங்க் இவற்றை மழையிலிருந்து எந்த சூழ்நிலையிலும் பாதுகாக்க ஒரு பிளாஸ்டிக் கவர் மற்றும் சிறிய அளவிலான ஆனால் கூர்மையான பாதுகாப்பு பொருள் ஆகியவற்றை உடனே கைக்கெட்டும் தூரத்தில் வையுங்கள். இவை மற்ற பொருட்களுக்கு அடியில் புதைந்திருக்காமல், அவசர காலத்தில் மின்னல் வேகத்தில் எடுக்கத் தயாராக இருக்க வேண்டும். காரணம் இந்த மழைக்காலத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சில விஷமிகள் நமக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம்.


    கண்ணைக் கவரும் பிரகாசமான வண்ணங்களில் குடைகளைத் தேர்ந்தெடுங்கள்

    அதேபோல் நீங்கள் வெளியே புறப்பட்டவுடன் அல்லது பயணத்தின் கடினமான பகுதி தொடங்கும் முன், உங்கள் மொபைலில் உள்ள 'லைவ் லொகேஷன்' வசதியைத் ஆன் செய்து, உங்கள் குடும்ப உறுப்பினர் மற்றும் ஒரு நெருங்கிய நண்பருக்கு உடனடியாகப் பகிருங்கள். நீங்கள் பத்திரமாக வீடு சென்றடையும் வரை, உங்கள் இருப்பிடத்தை யாரோ ஒருவர் கவனித்து வருகிறார் என்ற உணர்வே உங்களுக்குப் பெரும் பலத்தையும் பாதுகாப்பையும் அளிக்கும்.

    கவனம் மிக அவசியம்

    மழைக்காலத்தில் சாலையில் தேங்கியுள்ள நீரின் ஆழம் தெரியாது. ஆகவே, பார்க்க முடியாத இடத்தில் ஒருபோதும் கால் வைக்காதீர்கள். உங்கள் குடையை ஒரு 'ஊன்றுகோலாக' பயன்படுத்தி, தண்ணீரில் மெதுவாக ஊன்றிப் பார்த்து, அதன் அடியில் பள்ளங்கள், குழிகள் அல்லது திறந்திருக்கும் பாதாளச் சாக்கடைகள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த சிறு முயற்சி உங்களைப் பெரிய விபத்துகளில் இருந்து நிச்சயம் காக்கும். மேலும், மின்சாரக் கம்பிகள் அருகில் தேங்கியுள்ள நீர், கண்ணுக்குத் தெரியாத மின்சாரக் கடத்தியாக இருக்கலாம்; அதைத் துளியும் அண்டாமல் விலகிச் செல்லுங்கள்.

    கடைசியாக, ஆரோக்கியமே உங்கள் கவசம். மழைக்காலம் தொற்றுநோய்கள் பெருகும் நேரம் என்பதால், வெளியில் கிடைக்கும் அசுத்தமான தண்ணீரை நம்பி இருக்காமல், எப்போதும் வீட்டிலேயே தயாரித்த வெண்ணீர் அல்லது மூலிகை தேநீர் நிரப்பப்பட்ட தெர்மோஸ் குவளையை எடுத்துச் செல்லுங்கள். இது உங்களை வெப்பமாக வைத்திருக்க உதவுவதுடன், பிற இடங்களில் கிடைக்கும் சந்தேகத்திற்கிடமான தண்ணீரைத் தவிர்க்க ஒரு நல்ல காரணமாகவும் அமையும். உங்கள் உடலின் ஆரோக்கியமே உங்கள் ஆகப் பெரிய சொத்து. இந்த எளிய, ஆக்கப்பூர்வமான பாதுகாப்பு ஆலோசனைகளைக் கடைப்பிடித்து, மழையின் அழகை விவேகத்துடன் கொண்டாடுங்கள்!

    • 18 வயது ஆனாலும் கூட பெண்கள், பாலியல் ரீதியான உறவுகளில் புரிதல் இல்லாமல்தான் இருக்கின்றனர்.
    • பெற்றோர்கள் பெண்குழந்தைகளிடம் பாலியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    இரண்டு நாட்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவரின் பெரியப்பா செய்தியாளர்களின் முன்பு அழுது, புலம்பும் வீடியோ ஒன்று வைரலானது. அதில் தங்கள் வீட்டுப் பிள்ளையை, அதாவது அவரது தம்பிப் பெண்ணை, இளைஞர் ஒருவர் காதலிப்பாதாக சொல்லி, ஆசைவார்த்தைக் கூறி 18 வயது நிரம்பிய மறுநாளே அழைத்துச்சென்று திருமணம் செய்துகொண்டதாகவும், தற்போதுவரை தங்களிடம் தங்களது மகளை காண்பிக்கவில்லை எனவும், மேலும் அந்த இளைஞர் இதுபோன்று பல பெண்களை ஏமாற்றி உள்ளதாகவும் கதறி புலம்பியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அப்பெண்ணை திருமணம் செய்துகொண்ட இளைஞரின் உறவினர் ஒருவர், பணவசதி இல்லாததால் பெண்ணின் வீட்டார்தான் மிரட்டியதாக தெரிவித்தார். இச்செய்தி கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

    ஒரு பக்கத்தினர் பெண்வீட்டார் பணவசதி இல்லாததால் அப்பையனை ஏற்கவில்லை என கருத்து தெரிவித்து வருகின்றனர். மறுபக்கத்தினர் பெண்பிள்ளைகளை ஏமாற்றி, பெற்றோரின் சொத்தை பறிப்பதே பல இளைஞர்களின் வேலையாக இருக்கிறது என கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதுபோன்ற நிகழ்வுகளின் உண்மை நிலவரம் என்ன? இதுபோன்று இளைஞர்கள், இளம்பெண்கள் செய்வது முறையா? அவர்களின் பெற்றோர் மனநிலை என்ன? அவர்கள் என்ன செய்யவேண்டும்? என்பது குறித்து ஒரு சிறுதொகுப்பை காண்போம்.  

    இளம்பெண்ணின் எதிர்காலம் என்னவாகும்?

    மேற்கூறிய நிகழ்ச்சியையே உதாரணமாக எடுத்துக்கொள்வோம். 18 வயதாகி ஒரு வாரம் கூட அப்பெண்ணுக்கு ஆகவில்லை. அவள் இன்னும் கல்லூரி படிப்பை முடிக்கவில்லை. ஒரு திருமண உறவிற்குள் செல்லும்போது அவளின் படிப்பு கவனம் சிதறி, எண்ண ஓட்டம் மாறும். மேலும் குழந்தை எண்ணத்தை இருவரும் கையிலெடுத்தால், அதனை கையாளும் மனப்பக்குவம் அந்தப் பெண்ணுக்கு இருக்கிறதா? என்பதும் இங்கு கேள்விக்குறிதான். இந்திய திருமணச் சட்டத்தில் பெண்களின் திருமண வயது 18ஆக இருந்தாலும், பல பெண்கள் உடலளவிலும், மனதளவிலும் இன்னும் பாலியல்ரீதியான உறவுகளில் புரிதல் இல்லாமல்தான் இருக்கின்றனர். மேலும் உடலளவிலும் அவர்கள் ஒரு பிரசவத்தை தாங்கும் திடத்துடனும் இருக்கிறார்களா? என்பதும் கேள்விக்குறியே. இதற்காகத்தான் இப்போது பெண்ணின் திருமண வயதை 21ஆக மாற்றவேண்டும் என்ற விவாதம் சென்றுக்கொண்டிருக்கிறது. இதற்கு பலரும் அந்தக்காலத்தில் 14 வயதிலேயே பெண்கள் திருமணம் செய்துக்கொண்டார்கள், குழந்தைப் பெற்றுக்கொண்டார்கள் என அறிவாளித்தனமாக பேசுவார்கள். அப்போது இருந்த நடைமுறையும், அவர்கள் உணவுமுறையும் வேறுப்பட்டது என்பதை நினைவில் வைத்துக்கொண்டு ஆகச்சிறந்த கருத்துக்களை முன்வைக்க வேண்டும்.

    ஈர்ப்பா? காதலா?

    எது நடந்தாலும் 2கே கிட்ஸா இருப்பா என்று 2000த்திற்கு பின் பிறந்தவர்களை பெரும்பாலானோர் ஒரு கேலியுடன் பேசுவார்கள். காரணம் அவர்களின் காதல் விவகாரங்கள், அவர்களின் செயல்முறைகள், நடைமுறைகள் மற்றும் அணுகுமுறைகள். இது எல்லோருக்கும் பொருந்தாது. இருப்பினும் இப்போதைய தலைமுறையினர் பலரும் காதல் என்றால் என்னவென்றே தெரியாமல், எதிர்பாலினத்தவரிடம் வரும் ஈர்ப்பை வேறுபடுத்தி அறியமுடியாமல் ஒரு உறவுக்குள் செல்கின்றனர். இருவருக்கும் இடையே எந்த புரிதலும் இல்லாமல், ஒரு உறவுக்குள் செல்லும்போது அதில் பிரச்சனைகள், வாக்குவாதங்கள், மோதல் என வன்முறை வெடிக்கிறது. பல விவகாரங்கள் கொலைகளில் முடிகிறது. ஆனால் இவை எல்லாம் 2கே கிட்ஸ்க்கு மட்டும் பொருந்தாது. பலருக்கும் பொருந்தும். எதிர்பாலினத்தவரிடம் வரும் ஈர்ப்புக்கும், காதலுக்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

    புரிதல் ஒருபக்கம் இல்லையென்றாலும், இதுபோன்ற தவறுகள் நடக்க எளிதாக துணைநிற்கின்றன சமூக வலைதளங்கள். யாரென்றே தெரியாதவர்களிடம் எளிதில் பழகி, அவர்கள் உண்மையை பேசுகிறார்களா? உண்மையில் தங்களை விரும்புகிறார்களா? என்று தெரியாமல் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்கின்றனர் பல இளைஞர்களும், இளம்பெண்களும். அவர்களின் உண்மைமுகம் தெரியவரும்போது வாழ்க்கையை தொலைத்துவிடுகிறார்கள். அப்படி உண்மையில் நீங்கள் காதல்தான் செய்கின்றீர்கள் என்றால் இருவரும் இணைந்து ஒன்றாக முன்னேற பாருங்கள். உங்கள் படிப்பை முதலில் முடித்துவிட்டு, ஒரு நல்ல வேலைக்கு சென்று பின்னர் வீட்டில் கூறுங்கள். அப்போது அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் காத்திருங்கள். காத்திருப்பதில்தான் உண்மையான காதல் உள்ளது. உங்களை ஒருவர் உண்மையில் காதலித்தால் உங்களுக்காக எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் காத்திருப்பார்கள்.

    சிலவீட்டில் என்ன செய்தாலும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். அந்தச் சூழலில் நீங்கள் திருமணம் செய்துகொள்ளலாம். ஒருவேளை பெண்ணின் வீட்டில் உங்கள் காதல் தெரிந்து, அவர்களை கட்டாயப்படுத்தினால், அந்தப் பெண் திருமணம் செய்து கொள்வதற்கு தயார் என்றால் நீங்கள் திருமணம் செய்துகொள்ளலாம். ஆனால் எந்த காரணத்தாலும் உங்களின் படிப்பு, அதனால் பாதிப்படையாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். உண்மையில் காதலிப்பவர்கள் உங்களின் முன்னேற்றை கருத்தில்கொண்டே ஒவ்வொரும் நடைமுறையையும் மேற்கொள்வர். அப்படி படிக்கும்போதே திருமணம் செய்துகொண்டாலும் படிப்பைத்தொடருங்கள். அதைவிடுத்து படிப்பை நிறுத்தி ஒரு திருமணம் என்பது உங்களின் வாழ்க்கையை கேள்விகுறியாக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

    பெற்றோர் மனநிலை...

    பெற்றோர்கள் பலரும் தங்கள் பிள்ளைகள் ஏதேனும் பிரச்சனையில் சிக்கும்போதே அவர்கள் ஒரு உறவில் இருந்துள்ளனர் என்பதை அறிகின்றனர். சமூக வலைதளங்களில் தங்கள் பிள்ளைகள் என்ன செய்கின்றனர் என்பதை கண்காணிக்க தவறுகின்றனர். மற்றொரு முக்கிய காரணம் பெற்றோர்கள் பாலியல்ரீதியான சில கருத்துகளை பிள்ளைகளிடம் பேசுவது தவறு இல்லை. இந்தியாவில் உள்ள பெற்றோர்கள்தான் இன்னும் பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர். பெற்ற பிள்ளைகளிடம் காதல்ரீதியான வார்த்தைகளை பேசினால் கூட அது அபச்சாரம். பின் எப்படி உங்கள் பிள்ளைகளுக்கு காதலுக்கும், ஈர்ப்புக்கும் வித்தியாசம் தெரியும். ஒருபுறம் நம் பெற்றோர்களுக்கு இதுபோன்ற விஷயங்களில் அந்தளவு புரிதல் இல்லை என்று கூறினாலும், அவர்கள் வளர்ந்த விதமும், சூழலும் எப்படி இருந்தது என்பது நமக்கும் தெரியும். அதனால் அவர்களை சொல்லியும் பலன் இல்லை.


    ஈரப்பால் வரும் உணர்ச்சிகளுக்கு காதல் என பெயர் சூட்டாதீர்

    மற்றொன்று இதில் பிள்ளைகளைவிட, பெற்றோர்களே அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர். தன் மகள் ஒரு நல்லப்பையனை திருமணம் செய்துகொண்டால் பிரச்சனை இல்லை. ஆனால் அவன் ஏமாற்றுபவனாக இருந்தால்? அதன்பின் நடைபெறும் விளைவுகள்? அதற்கு யார் பொறுப்பேற்பது? தங்கள் பெண் தேர்ந்தெடுத்த ஒரு ஆண்மகன் சரியானவாக இல்லாவிட்டால், அந்தப் பெண்ணை தாண்டி ஒரு குடும்பமே அதில் வீழ்கிறது. இது எல்லாக் குடும்பத்தினருக்கும் பொருந்துமா எனத் தெரியாது. ஆனால் உண்மையில் தனது பெண்பிள்ளைகளை அன்பாக வளர்க்கும் ஒவ்வொரு குடும்பத்தினரையும் அது வலுவாக பாதிக்கும். பாதை எப்படி இருந்தாலும் பிடிப்புதான் முக்கியம்.

    அவள் எப்படி திருமணம் செய்துகொண்டால் என்பதை தாண்டி, அவள் யாரை திருமணம் செய்துகொண்டால் என்பது மிக முக்கியமான ஒன்று. ஏனெனில் பல பெண்கள் தாங்கள் தவறான முடிவு எடுத்துவிட்டால் தற்கொலை செய்துகொள்கின்றனர். பலரின் வாழ்க்கை மோசமாக பாதிக்கப்படுகிறது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது யார்? அந்தப் பெண் இறந்துவிட்டால், அவளை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டவன், வேறொரு பெண்ணைத்தேடி சென்றுவிடுவான். ஆனால் பிள்ளையை இழந்த பெற்றோரின் கதி? இறுதியில் பெண்களோ, ஆண்களோ ஒரு காதல் உறவுக்குள் செல்கிறீர்கள் என்றால் உங்களின் துணை, உங்களது கல்வி, வேலை, உங்களது துன்பம், இன்பம் என அனைத்திலும் துணை நிற்பார்களா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஈரப்பால் வரும் உணர்ச்சிக்குள் விழுந்து காதல் என பெயர்வைத்துக்கொண்டு வாழ்க்கையை வீணாக்காதீர்கள். 

    • திருமண உறவில் பெண்களே தங்கள் சுய விருப்பு, வெறுப்புகளை துறந்து வாழ்கின்றனர்?
    • விட்டுக்கொடுப்பதுதான் காதல். ஆனால் அது ஆதிக்கத்தால் நிகழக்கூடாது.

    கணவன், மனைவியோ அல்லது காதலர்களோ தங்களுக்குள் பிரிவு வந்தால் இருவருக்கும் இருக்கும் வேற்றுமைகள்தான் காரணம் என நினைப்பர். ஆனால் ஒரு உறவின் பிரிதலுக்கு அங்கு புரிதல்தன்மை இல்லாததே காரணம் என அறிந்திருக்கமாட்டார்கள். அறிந்தால் அந்த உறவின், பிரிவின் வலியிலிருந்து வெளியேவந்துவிடுவார்கள். இருவரின் விருப்பங்களில் வேற்றுமை இருந்தால் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும். யாரும், யாருக்காகவும் மாறக்கூடாது. அப்படி மாற்றம் நிகழ்ந்தால் அன்பால், காதலால் மட்டுமே நிகழவேண்டும். கட்டாயத்தால் அல்ல. இருவரில் ஒருவரின் செயலோ, விருப்பங்களோ, நடைமுறையோ ஒருவருக்கு பிடிக்கவில்லை என்பதை அறிந்து மாற்றொருவர் தானாக மாறுவதே காதல். ஆனால் நீங்கள் மாறாமலேயே அப்படியே ஏற்றுக்கொள்பவர்தான் உண்மையான காதலர். ஒருவரின் கட்டாயத்தின் பேரில் மாற்றிக்கொள்வது அல்ல. பலதரப்பு மக்களின் வாழ்க்கைமுறையை ஆராய்ந்தால் இந்த மாற்றிக்கொள்ளும் பழக்கம் பெரும்பாலும் பெண்களிடத்தில்தான் நிகழ்கிறது. இதனால் ஆண்களை குறைசொல்லவில்லை. ஆனால் பெண்கள் ஏன் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்? ஒரு பெண்ணின் மனநிலையிலிருந்து...

    எதற்காக மாற்றிக்கொள்ள வேண்டும்?

    ஒரு பெண்ணின் செயல் அவளுடைய காதலனுக்கோ, கணவனுக்கோ பிடிக்கவில்லை என்றால் உடனே மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மாற்றிக்கொள்ள வேண்டிய விஷயங்களை மாற்றிக்கொள்ளலாம் (கோபம், முரண்பாடு, தான் சொல்வதைத்தான் கேட்கவேண்டும் போன்ற எண்ணங்கள்). ஆனால் தங்களுக்கு உரித்தான உரிமைகளை விட்டுக்கொடுக்கவோ அல்லது உங்களுக்கு பிடித்த விஷயங்களை மாற்றிக்கொள்ளவோக்கூடாது. எல்லோரிடத்திலும் பொதுவாக நிலவும் ஒரு கருத்து பெற்றோர்களால் பார்த்து செய்யப்பட்ட திருமணத்தில்தான் பெண்கள், கணவர்களுக்காக தங்களை மாற்றிக்கொள்கிறார்கள் என்று. ஆனால் காதல் திருமணத்திலும் பல பெண்கள் தங்கள் சுய விருப்பு, வெறுப்புகளை துறந்தே வாழ்கின்றனர். அதை என்ன சொல்வது?. இவற்றில் முக்கியமானவை வேலை, ஆடை, பேச்சு சுதந்திரம். 

    வேலை

    திருமணத்திற்கு பின்னரும் வேலைக்கு செல்லலாம் எனக்கூறி பெண்களை திருமணத்திற்கு ஒற்றுக்கொள்ள வைக்கும் பலரும், அதன்பிறகு அவர்களை வேலைக்கு அனுப்புவதில்லை. சில பெண்களும் இரண்டு, மூன்றுமுறை கேட்டுவிட்டு குழந்தை, குடும்பத்தை பார்க்கவேண்டும் என்று இதனை அப்படியே விட்டுவிடுவார்கள். கணவர் அன்பானவராக இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. இல்லையென்றால்? நிதி சுதந்திரம் என்பது எப்போதுமே பெண்களுக்கு ஒரு பாதுகாப்பை தரவல்லது. அதனால் எப்போதும் உங்கள் வேலை விஷயத்தில் விட்டுக்கொடுக்காதீர். இந்த வேலைக்குதான் செல்லவேண்டும், இதற்கு செல்லக்கூடாது என்றால் ஒத்துக்கொள்ளாதீர்கள். அதுபோல காதல் திருமணத்தில் பெரும்பாலும் கணவன், மனைவி பெற்றோரை பிரிந்து தனியாகத்தான் இருப்பார்கள்.


    உண்மையில் உங்களை விரும்பும் ஆண் நீங்கள் அதிகம் பேசுவதையே விரும்புவார்

    இதனால் குழந்தை பிறந்தபின், குழந்தையை யாரிடம் விட்டுவிட்டு வேலைக்கு செல்வது என்ற குழப்பம் நிலவும். இதனால் பெரும்பாலான வீடுகளில் வேலையை விடுபவர்கள் பெண்களாகத்தான் இருப்பார்கள். இருவரும் பேசி முடிவெடுத்து, உண்மையில் உங்களுக்கு விருப்பம் என்றால், உங்கள் குழந்தைக்காக நீங்கள் வேலையைவிடலாம். ஆனால் கணவரால், கணவரின் குடும்பத்தால் கட்டாயப்படுத்தப்பட்டு அல்லது நீங்கள் பெண் என்பதால் அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டால் அதற்கு எப்போதும் சம்மதிக்கக்கூடாது.

    ஆடை

    ஆடை சுதந்திரம் என்பது திருமணத்திற்கு பிறகு முற்றிலும் இல்லை என பல பெண்கள் கூறுவதை நாம் கேட்டிருப்போம். உங்கள் ஆடையை மற்றவர் ஏன் தேர்வு செய்ய வேண்டும்? உங்கள் கணவர் உங்களை உண்மையில் காதலித்தால், உங்களுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கமாட்டார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அதனால் உங்கள் விருப்பத்தை புரிந்துகொள்ளாத ஒருவருக்காக உங்கள் விருப்ப சுதந்திரத்தை எங்கும் விட்டுத்தராதீர்கள்.  

    பேச்சு

    அதிகமாக பெண்கள் பேசினாலே ஆண்களுக்கு பிடிக்காது. அது அந்தப் பெண்களை விரும்பாத ஆண்களுக்கு. உண்மையில் உங்களை விரும்பும் ஆண் நீங்கள் அதிகம் பேசுவதையே விரும்புவார். இதனை எப்போதும் பெண்கள் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். ஏன் சில பெண்களுக்கே பெண்கள் அதிகம் பேசுவது பிடிக்காது. அதனால் உங்களை உங்கள் கணவர் கட்டுப்படுத்தினால் நீங்கள் அவர் சொல்வதை கேட்கவேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதற்காக கணவரின், காதலரின் எல்லாக் கருத்துகளுக்கும் பெண்கள் முரண்பட வேண்டும் என்பது பொருளல்ல. நியாயமான உங்களது விருப்பங்களுக்கு முரண்படுதல் என்பது தேவையான ஒன்று. விட்டுக்கொடுப்பதுதான் காதல். ஆனால் அது ஆதிக்கத்தால் நிகழக்கூடாது.

    கலாரசிகனென்றால் காதல் கொண்டிருக்க வேண்டியது கலை மீதா? மாதவி மீதா?

    இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தில் இடம்பெற்ற கண்ணகி, கோவலன், மாதவி கதாபாத்திரங்கள் இன்றைய காலக்கட்டத்தில் இருந்திருந்தால் எப்படி இருக்கும்?. கதையமைப்புப்படி அவர்களை நியாயப்படுத்தி காட்டியிருப்பது சரிதானா என ஒரு சிறிய கலந்துரையலாடலை காணலாம்.

    கோவலனுக்கெல்லாம் கண்ணகிதான் கிடைப்பார்களோ?

    மனைவி இருக்கும்போது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் காதல்வயப்படுவது என்பது எவ்வளவு பெரிய துயர். அது கண்ணகி காலத்தில் இருந்தாலும் சரி, தற்போதைய 21ம் நூற்றாண்டாக இருந்தாலும் சரி. நாம் அன்பு கொண்டிருக்கும் ஒருவர், வேறு ஒருவர் மீது அன்பு கொண்டிருக்கிறார் என தெரியவந்தால் நம் மனநிலை எப்படி இருக்கும் என்பதை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. நாம் காதல் செய்யும் ஒருவர், நம்மை காதலித்தாக வேண்டும் என்ற அவசியம் இல்லை எனக் கூறலாம். ஆனால் அவர்கள் வேறு ஒருவர் மீது காதல் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிவது? இந்த உணர்வுதான் கண்ணகிக்கும் இருந்திருக்கும். 

    தான் உயிரினும் மேலாக காதல் கொண்டிருந்த தன் கணவன், நாடக மகள்மீது காதல் கொள்வதை கண்ணகி அறிகிறாள். அது 21ஆம் நூற்றாண்டு இல்லை என்பதால், கண்ணகியால் கோவலனிடம் கேள்வி எழுப்பியிருக்க முடியாது. ஆனால் அவளின் மனநிலை?. தன் காதலன் பிரிந்த நாள்முதல் கால்களில் சிலம்பு அணியவில்லை; காதுகளில் தோடு அணிவதில்லை; கண்களில் மை இடுவதில்லை; ஒளிபொருந்திய நெற்றியில் திலகமும் இடுவதில்லை; நீண்ட கருங்கூந்தல் எண்ணெயையும், பூவினையும் மறந்தது; அவள் கண்கள் உறக்கத்தை மறந்தன. வெறுமைத்தன்மை கண்ணகியை சூழ்ந்தது. யாருக்காக? வேறொரு ஒரு மங்கையிடம் காதல்கொண்ட ஒருவனுக்காக... அதாவது தனது கணவனுக்காக. மனது முழுவதும் பாரம். கணவன் வேறு பெண்ணிடம் காதல் கொண்டாலும், அவனை நினைத்தே இல்லறம் நடத்துகிறாள். அவனுடைய உறவினர்களையும் முகம் சுழிக்காமல் வரவேற்கிறாள். புகுந்த இடத்திலும், பிறந்த இடத்திலும் மனதில் இருக்கும் பாரத்தை வெளிக்காட்டாமல், யாருக்கென்றே தெரியாமல் ஒரு வாழ்க்கையை வாழ்கிறாள். தம் மருமகன் வேறு ஒரு பெண்ணுடன் உறவில் இருப்பதை கண்ணகியின் பெற்றோர் அறிகின்றனர். அறிந்து என் செய்வது?

    அவர்கள் அடிக்கடி வந்து தம்செல்வ மகளைக் கண்டுபோயினர். கணவன் வேறு பெண்ணிடம் சென்றாலும், அதை கேட்காமல், அந்த வருத்தத்தை வெளிக்காட்டாமல் இருந்ததால் அவள் கற்புக்கரசி என போற்றப்பட்டால். மாதவியிடம் மனக்கசப்பு எழ கண்ணகியிடம் வருகிறான் கோவலன். ஆனாலும் மாதவியிடம் வரும் சில கடிதங்களை எண்ணி வருந்துகிறான். கண்ணகி கற்புக்கரசியாக இருந்தாலும், மாதவியைத்தான் பிடிக்கும் என சொல்லாமல் சொல்கிறான். பேதை கண்ணகியும் கணவன் வேறு பெண்ணுடன் வாழ்ந்து வந்தாலும் ஏற்றுக்கொள்கிறாள். ஏனெனில், அது அவள் காதல் கொண்டவன் அல்லவா. மற்றொன்று அது 21ம் நூற்றாண்டு இல்லையே. கணவன் வேறு ஒருவரை வைத்திருந்தால் தூக்கி எறிய. ஆயினும் இப்போதும் அதேபோல பல கண்ணகிகள் வாழ்ந்து வந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

    காதல் கொண்டிருக்க வேண்டியது கலை மீதா? மாதவி மீதா?

    நூலின் ஆசிரியர் இளங்கோவடிகள் உட்பட பலரும் மாதவி மீதான கோவலனின் காதலை ஆதரிக்கின்றனர். காரணம் கலாரசிகனான கோவலன், கலைகளின் அரசியான மாதவி மீது காதல் கொள்கிறானாம். மற்றொன்று திருமணத்தின்போது கண்ணகிக்கு வயது 12. அதாவது சிறுபிள்ளை. அவளுக்கு ஒன்றும் தெரியாது. கலாரசிகன் என்றால் கலையின் மீதுதானே காதல் கொண்டிருந்திருக்கவேண்டும். கலையை நிகழ்த்தும் பெண்ணின் மீதுதான் காதல் வருமோ?. கண்ணகி ஏதும் அறியாதவள் என விளக்கம் கொடுப்பவர்கள், அந்த ஏதும் தெரியாதவளை கோவலன் ஏன் மணந்தான்? என கூறமாட்டார்கள். அதற்கு கோவலனும் பதில்கூறமாட்டான். கலையால் ஈர்க்கப்பட்டு, காதல் வயப்பட்டிருந்தால், ஏன் அவள் பாடிய பாடலின் அர்த்தத்தை தவறாக கொண்டு மீண்டும் கண்ணகியிடம் வந்து வாசம் செய்யவேண்டும்?. 


    கணவனுக்காக சிலம்பை கையில் கொண்டு மன்னனிடம் முறையிடும் கண்ணகி

    கற்புக்காக போற்றப்பட்டாளா கண்ணகி?

    இங்கு கண்ணகியின் காதலும் போற்றப்படுகிறது. மாதவியின் காதலும் போற்றப்படுகிறது. ஏனெனில் கோவலன் பிரிந்துவந்த பிறகும் வேறு ஆண்களை எண்ணாமல், கோவலனை எண்ணியே வாழ்ந்து வந்தால் மாதவி. அப்போது இருவரின் காதலும் புனிதம் என்றால் கோவலனின் காதல்? கலைமீது காதல் கொண்டு சென்றிருந்தால், அவளது பாடலை தவறாக புரிந்துகொண்டிருந்தாலும், மாதவி யாரை விரும்பியிருந்தாலும், கோவலன் அவளை விரும்பியிருக்கவேண்டும், கண்ணிகியைப்போல. கோவலன் கங்கையை வைத்து பாடிய பாடலை தவறாக புரிந்துதான் மாதவி அதற்கேற்ற பாடலை பாடினாள். கோவலனின் பாடலில் மாதவி புரிந்துகொண்டது என்ன? அவள் வேறு ஒரு பெண்ணிடம் காதல் கொண்டானோ என்று பயம். அப்போது ஒரு பேதையே, அதாவது கண்ணகியை விட்டு, கோவலன் மாதவியிடம் செல்லும்போது? கண்ணகியின் வலி?. ஆனால், கேட்டால் நாம் மாதவியை குறை கூற இயலாது. ஏனெனில் அது அப்போதைய குலவழக்கம். அவளை குற்றம் சொல்ல இயலாது. கடைசியாக கண்ணகிக்கு வருவோம். கண்ணகி கற்புக்காகத்தான் போற்றப்பட்டாளா? இங்கு கற்பு என்பது என்ன? ஏன் இந்த உலகில் கோவலன் மட்டும்தான் அழகனா என்ன? கோவலன் மாதவியிடம் காதல்கொண்டவாறு, கண்ணகி யாரிடமாவது காதல்கொண்டு கலை என்று கூறியிருக்கலாமே?

    அவள் கற்பை காத்து நல்லவள் என்றால், கோவலனின் கற்பு எங்கு சென்றது? அந்தகாலத்தில் ஆண்களுக்கு கற்பு இல்லை. பெண்களுக்கு மட்டும்தான் கற்பு. ஆனால் இப்போது? கற்பு ஒருவரின் காதலை தீர்மானிக்காது. காதல் கொண்டவரிடத்தில் வைத்திருக்கும் நேசம்தான் அதனை தீர்மானிக்கும். தன் காதலன் வேறொரு பெண்ணிடம் காதல் கொண்டானோ என்று அஞ்சி மாதவி பாடிய பாடல்தான் இருவரும் பிரியக் காரணம். இதுவும் ஒருவகை கோபம்தான். எங்கு தன்னைவிட்டு விலகிவிடுவானோ என அஞ்சி மாதவி வெளிப்படுத்தினால். கோவலன், மாதவி காதல்கொண்டாலோ என அவளை பிரிந்தான். ஆனால் தன் கணவன் தனக்கு எவ்வளவு பெரிய துரோகத்தை இழைத்தும், அவன்மீது கடைசிவரை அன்பு வைத்திருந்தால் கண்ணகி. இங்கு போற்றப்பட்டது அவளின் காதல். கற்பு அல்ல. மேலே முதலில் குறிப்பிட்டுள்ளவாறு இக்காலத்திலும் கண்ணகிகள் வாழ்கிறார்கள். கோவலன்போல மாதவியிடம் செல்லத்தெரியாமல் அல்ல. அதீத அன்பினால். முடிவில் இங்கு காதல்தான் கற்பு என்பதை பலரும் புரிந்துகொள்ளவேண்டும். 

    • பிரேத பரிசோதனை அறையில் கைகளுக்கு க்ளவுஸ் போட்டுக்கொள்வோமே தவிர, முகத்தில் மாஸ்க் அணியமாட்டோம்.
    • நீரில் மூழ்கி உயிரிழந்து அழுகிய உடல்கள் வரும்போது, அதனை பரிசோதிப்பது சிரமமாக இருக்கும்.

    விபத்து, இரத்தம், கொலை, தற்கொலை... இதுபோன்ற சம்பவங்கள் பெண்கள், ஆண்கள் என்ற வித்தியாசமின்றி அனைவரின் மனநிலையையுமே சற்று பாதிக்கும். அதிலும் சில பெண்களுக்கு சொல்லவே வேண்டாம்... இதுபோன்ற சம்பவங்களை கடந்துவர மிகவும் சிரமப்படுவார்கள். ஆனால் இதையெல்லாம் ஆராய்வதையே தொழிலாக கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அதுபோன்ற துறைகளில் பெண்களின் எண்ணிக்கை கொஞ்சம் குறைவாகவே இருக்கும் சூழலில், தடயவியல் பிரேத பரிசோதனை அறுவை சிகிச்சை நிபுணராக தைரியத்துடன் பணியாற்றிவரும் இளம்பெண் மருத்துவரான நிவ்யாழினி, அண்மையில் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறார். அவர் சில தினங்களுக்கு முன் பேட்டி ஒன்று அளித்துள்ளார். 

    அதில் பிரேத பரிசோதனை செய்யும் போது தாங்கள் எதிர்கொள்ளும் தயக்கங்கள், அருவருப்பு, முக சுளிப்புகள், பிரேத பரிசோதனையின் போது எதிர்கொள்ளும் சவால்கள், கொலையுண்டவருக்கு எதிர்தரப்பிலிருந்து வரும் கொலைமிரட்டல்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பகிர்ந்துள்ளார் மருத்துவர் நிவ்யாழினி. தனக்கு இதுவரை கொலைமிரட்டல்கள் எதுவும் வந்ததில்லை எனவும், ஆனால் தன்னுடன் பணியாற்றிய சிலருக்கு பிரேத பரிசோதனை அறிக்கை தகவலை மாற்ற சொல்லி கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் கொலைக்கும், உயிரை மாய்த்துக்கொள்வதற்கும் உள்ள வித்தியாசங்களை எவ்வாறு கண்டுபிடிப்பார்கள், சந்தேக மரண வழக்குகளில் அவை கொலை என எப்படி உறுதிப்படுத்துகிறார்கள் உள்ளிட்ட பல தகவல்களை பகிர்ந்தார். மேலும் 8 மாத குழந்தை ஒன்றின் கொலை பற்றியும் பேசியிருந்தார். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு முன், உடல்களை எப்படி கையாள்வது குறித்த தகவல்களையும் பகிர்ந்துகொண்டார்.


    நிகழ்ச்சி ஒன்றில் நிவ்யாழினி

    பிரேத பரிசோதனை என்றால்? என்ன செய்வீர்கள்?

    தற்கொலை செய்து உயிரிழந்த உடல் ஒன்று வருகிறது என்றால், முதலில் ஃபோட்டோ எடுப்போம். அனைத்து பக்கங்களில் இருந்தும் எடுப்போம். முதலில் ஆடையுடனும், பின்னர் ஆடைகளை நீக்கிவிட்டும் அந்த புகைப்படங்களை எடுப்போம். பின்னர் கழுத்தில் மார்க் இருக்கிறது என்றால் அதனை ஆராய்வோம். உடல் உறுப்புகள் அனைத்தையும் வெளியே எடுத்துவிட்டு ஆராய்வோம். எப்படி என்றால், கழுத்திலிருந்து தொப்புளுக்கு முன்புவரை கத்தியால் கிழித்து, உறுப்புகளை ஒவ்வொன்றாக வெளியே எடுப்போம். பின்னர் அந்த உறுப்புகளை கழுவி, அதனை வெட்டி ஆராய்ச்சி செய்வோம். இதயம், நுரையீரல், கிட்னி என அனைத்து உறுப்புகளையும் ஆராய்வோம். பின்னர் அந்த உறுப்புகள் அனைத்தையும் ஒரு கவரில் போட்டு, உடலுக்குள் வைத்து தைத்து, உடலை முழுமையாக கொடுத்துவிடுவோம். உறுப்புகளை ஆராய்ச்சி செய்ததில் கிடைத்த தகவலின் அடிப்படையில், அந்த நபரின் இறப்பு இயற்கையானதா? கொலையா? தற்கொலையா? என கண்டுபிடிப்போம். 

    முதல்முதலில் நீங்கள் பார்த்த கேஸ் எது? அந்த அனுபவம் எப்படி இருந்தது?

    நான் முதலில் பார்த்த கேஸ், ஹேங்கிங்தான். முதல் அனுபவம் சற்று சிரமமாகத்தான் இருந்தது. அதிலும், ஸ்மெல்தான் எனக்கு கஷ்டமாக இருந்தது. வயிற்று பகுதியை ஆராயும்போது, அவர் இறுதியாக என்ன சாப்பிட்டார் என்று தெரிந்துகொள்ள, அதனை முகர்ந்து பார்க்க வேண்டும். முதலில் கஷ்டமாக இருந்தாலும், பிறகு பழகிவிட்டது. அது நான் விரும்பி ஏற்றுக்கொண்ட தொழிலல்லவா... தைரியமாக அனைத்தையும் பழகிக்கொண்டேன். ஒரு விஷயத்தை நான் இங்கு உங்களிடம் சொல்கிறேன், பிரேத பரிசோதனை அறையில் கைகளுக்கு நாங்கள் க்ளவுஸ் போட்டுக்கொள்வோமே தவிர, முகத்தில் மாஸ்க் அணியமாட்டோம். அதனால், நீரில் மூழ்கி உயிரிழந்து அழுகிய உடல்கள் வரும்போது, அதனை பரிசோதிப்பது சிரமமாக இருக்கும். 

    எப்படி இவ்வளவு தைரியம்?

    நான் ஏற்கனவே சொன்னதைப்போல ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும், இப்போது பழகிவிட்டது. கொலையானவர்களின் உறவினர்கள் அழும்போது அதனை பார்க்கும்போது கவலையாக இருக்கும். முதலில் எல்லாம், யுவனின் ஒரு பாடலை கேட்டுவிட்டுதான் நான் உடல்களை பரிசோனை செய்ய அறைக்குள் செல்வேன். இப்போது நிறைய கேஸ்களை பார்த்துவிட்டேன்.

    இந்த துறைக்கு செல்ல குடும்பத்தினர் எப்படி ஒப்புக்கொண்டார்கள்?

    பொதுவாக எல்லாவற்றுக்குமே எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும். நாம்தான் அதனை சரியாக செய்து நம்மை நிரூபிக்க வேண்டும்.  இந்த துறையில் எனக்குத் தெரிந்து பெண்கள் மிகவும் திறமையாக செயலாற்றுகிறார்கள். பெண்களால் செய்ய முடியாதது எதுவுமே இல்லை. 

    ×