என் மலர்
திருவள்ளூர்
- மனவளர்ச்சி குன்றி உடல் ரீதியாக மகள் கஷ்டப்பட்டு வருவதை கண்டு மனம் கலங்கிய சுலோச்சனா மகளை தீவைத்து எரித்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
- மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பூந்தமல்லி:
மாங்காடு அடுத்த கொளப்பாக்கத்தை சேர்ந்தவர் நடராஜன். கார்பெண்டர். இவரது மனைவி சுலோச்சனா (வயது48). இவரது மகள் மீனாட்சி(18). இவர் பிறந்தது முதல் மனவளர்ச்சி, உடல் வளர்ச்சி குன்றி இருந்தார். மகன் தினேஷ்.
மனவளர்ச்சி குன்றிய மீனாட்சியை சுலோச்சனா மற்றும் அவரது கணவர் கவனித்து வந்தனர். மகள் மனவளர்ச்சி குன்றி கஷ்டப்பட்டு வந்ததால் பெற்றோர் மிகவும் மனவேதனை அடைந்தனர். இதுபற்றி அவர்கள் அடிக்கடி பேசி வருத்தப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த சுலோச்சனாவின் கணவர் நடராஜன், மகன் தினேஷ் ஆகியோர் வெளியேசென்று இருந்தனர். வீட்டில் சுலோச்சனா, அவரது மகள் மீனாட்சி மட்டும் இருந்தனர்.
ஏற்கனவே மனவளர்ச்சி குன்றி உடல் ரீதியாக மகள் கஷ்டப்பட்டு வருவதை கண்டு மனம் கலங்கிய சுலோச்சனா மகளை தீவைத்து எரித்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
இதையடுத்து வீட்டில் இருந்த மண்எண்ணையை நடக்கப்போகும் விபரீதத்தை அறியாமல் இருந்த மகள் மீனாட்சி மீது ஊற்றி சுலோச்சனா தீவைத்தார். மேலும் அவர் தனது உடல் மீதும் மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்தார்.
இதில் அவர்கள் 2 பேரும் தீயில் கருகி அலறி துடித்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது சுலோச்சனாவும் அவரது மகள் மீனாட்சியும் தீயில் கருகுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தீயை அணைத்து அவர்கள் 2 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சுலோச்சனா பரிதாபமாக இறந்தார். அவரது மகள் மீனாட்சிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலைமையும் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
மகளை சரிவர பராமரிக்க முடியாததால் சுலோச்சனா இந்த விபரீத முடிவை எடுத்து இருப்பது தெரியவந்து உள்ளது.
மனவளர்ச்சி குன்றிய மகளை பராமரித்து வந்த தாயே மன உளைச்சலில் மகளை தீவைத்து எரித்து விட்டு தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாங்காடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக செந்தாமரைக்கண்ணன் பணியாற்றி வருகிறார்.
- உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த செந்தாமரைக்கண்ணன் வீட்டில் இருந்தபோது திடீரென இறந்தார்.
பொன்னேரி:
மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் செந்தாமரைக்கண்ணன் (வயது59).
உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த அவர் வீட்டில் இருந்தபோது திடீரென இறந்தார். அவரது உடலுக்கு போலீஸ் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
- 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
- வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அனைவருக்கும் பரவி வருவதாக கூறினார்கள்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட உப்பளம், பரிக்கப்பட்டு ஆகிய கிராமங்களில் கடந்த 3 வாரத்திற்கு மேலாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 5 பேருக்க டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஒரு வாரத்திற்கு உடல்வலியும், கை, கால் மூட்டு வலியும் அதிகம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவித்து உள்ளனர். மேலும் வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அனைவருக்கும் பரவி வருவதாக கூறினார்கள்.
இதைத்தொடர்ந்து காய்ச்சல் பரவிய உப்பளம், பரிக்கப்பட்டு கிராமங்களில் சுகாதாரப் பணி மாவட்ட துணை இயக்குனர் ஜவகர்லால், மீஞ்சூர் வட்டார மருத்துவர் மகேந்திரவர்மன் தலைமையில், 4 மருத்துவர்கள், 5 செவிலியர்கள் மருத்துவ முகாமிட்டு பரிசோதனை செய்து வருகிறார்கள். அதிக காய்ச்சல் பாதிப்பு இருப்பவர்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. கொசு ஒழிப்பு பணியாளர்கள் கொசு மருந்து அடித்தல், வீடு வீடாக சென்று பிளாஸ்டிக் பொருட்களில் தேங்கி உள்ள தண்ணீரை அகற்றுதல், பிளீச்சிங் பவுடர் தெளித்தல், தெருக்களை சுத்தம் செய்தல் உள்ளிட்ட சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் இதுவரை எந்த வகையான வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளது என்று கண்டறியப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரப் பணி மாவட்ட துணை இயக்குனர் ஜவகர்லால் கூறியதாவது:-
பொதுமக்கள் சேமித்து வைக்கின்ற தண்ணீரை மூடி வைக்க வேண்டும். வாரம் இரு முறை தண்ணீரை மாற்ற வேண்டும். குளிர்சாதன பெட்டியின் பின்பக்கம் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற வேண்டும். இதனை சரியாக செய்யாததே அதிகமான வீடுகளில் காய்ச்சல் பரவுவதற்கு காரணமாக உள்ளது. காய்ச்சல் பாதித்த பொதுமக்கள் அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். தன்னிச்சையாக கடைகளில் மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிடக்கூடாது. பொன்னேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் டாக்டரின் பரிந்துரை இல்லாமல் மாத்திரைகள் கொடுத்தால் சம்பந்தப்பட்ட மருந்து கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனுப்பப்பட்ட ரத்த மாதிரிகளில் அனைத்து வகை பரிசோதனையும் செய்யப்படும். மேலும் மலேரியா நிபுணர் குழுவும் ஆய்வு செய்து வருகிறது. கிராமங்களில் காய்ச்சல் பரவாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோபம் அடைந்த சங்கர் உள்பட 3 பேரும் சேர்ந்து ராமமூர்த்தி வளர்த்து வந்த நாயை கத்தியால் குத்தினர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கர், பிரபாகரன், ரோகித் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. டிரைவர். இவர் நாய் ஒன்று வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் அந்த நாய் அடிக்கடி சாலையில் செல்வோரை குரைத்து மிரட்டி அச்சுறுத்திவந்ததாக தெரிகிறது.மேலும் வாகனங்களில் செல்லும் போது அதன் முன்பு நின்றும் குரைத்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி அதே பகுதியைசேர்ந்த சங்கர், பிரபாகரன், ரோகித்த ஆகியோர் ராமமூர்த்தியிடம் கூறினர். அப்போது அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் கோபம் அடைந்த சங்கர் உள்பட 3 பேரும் சேர்ந்து ராமமூர்த்தி வளர்த்து வந்த நாயை கத்தியால் குத்தினர். மேலும் அதன் கழுத்தையும் அறுத்ததாக தெரிகிறது. இதில் பலத்த காயம் அடைந்த நாய் இறந்து போனது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராமமூர்த்தி மீஞ்சூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கர், பிரபாகரன், ரோகித் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பொன்னேரி பாஜாரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.
- ஆரணி ஆற்றின் அருகில் சுடுகாட்டின் அருகே கொட்டப்படும் குப்பைகளை அகற்ற வேண்டும்.
பொன்னேரி:
பொன்னேரி தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி நகர பாஜக சார்பில் சிறப்பு செயற்குழு கூட்டம் நகரத் தலைவர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மத்திய அரசின் நலத்திட்ட மாவட்ட பொறுப்பாளர் கஜேந்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பொன்னேரி பாஜாரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். நகராட்சி சாலை சீரமைக்க வேண்டும். ஆரணி ஆற்றின் அருகில் சுடுகாட்டின் அருகே கொட்டப்படும் குப்பைகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்ட செயலாளர் மற்றும் பொறுப்பாளர் நந்தன் மாவட்ட செயலாளர் கோட்டி நகரப் பொதுச் செயலாளர் ரமேஷ் கோகுல் பொருளாளர் பாலாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- கல்லூரி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- ஊக்கத்தொகை பெற்றுக்கொண்ட மாணவர்கள் ஜே எஸ் டபிள்யூ நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தனர்.
பொன்னேரி:
மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஜே எஸ் டபிள்யூ ஃபவுண்டேசன் சார்பில் மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள 44 கல்லூரி மாணவர்களுக்கு 9,70,602 ரூபாய் மதிப்பில் 2022 -23 ஆண்டிற்கான கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய சேர்மன் ரவி தலைமையில் நடைபெற்றது.
இதில் ஜே எஸ் டபிள்யூ பொது மேலாளர் முரளி, மனிதவள மேம்பாட்டு அதிகாரி பழனியப்பன், சிஎஸ்ஆர் பொறுப்பாளர் முரளி, வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், கவுன்சிலர் கதிரவன், அனுப்பம்பட்டு கூட்டுறவு சங்கத் தலைவர் சார்லஸ் மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் ஊக்கத்தொகை பெற்றுக்கொண்ட மாணவர்கள் ஜே எஸ் டபிள்யூ நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தனர்.
- மணலி புதுநகர் வழியாக வரும் கனரக வாகனங்கள் சர்வீஸ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் அதிக அளவில் நிறுத்தப்படுகின்றன.
- சர்வீஸ் சாலையில் வைக்கப்பட்டு உள்ள தடுப்பு கற்களை அகற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
பொன்னேரி:
திருெவாற்றியூர்-மீஞ்சூர் இடையே மணலி புதுநகர் வழியாக வரும் கனரக வாகனங்கள் சர்வீஸ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் அதிக அளவில் நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன.
இதனை தடுக்க சர்வீஸ்சாலை பிரியும் இடங்களான கொண்டக்கரை, நாபாளையம், வல்லூர், மணலி புதுநகர், ஆண்டார் மடம் உள்ளிட்ட இடங்களில் சிமெண்டு தடுப்பு கற்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் கனரக வாகனங்கள் சர்வீஸ் சாலையில் நிறுத்தப்படுவது தடுக்கப்பட்டது.
எனினும் அந்த தடுப்பு கற்களை சிலர் நகர்த்தி விட்டு கனரக வாகனங்களை தற்போது நிறுத்தி வருகின்றனர். இதையடுத்து செங்குன்றம் போக்குவரத்து உதவி கமிஷனர் மலைச்சாமி போக்குவரத்து ஆய்வாளர் சோபிராஜ் ஆகியோர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். சர்வீஸ் சாலையில் வைக்கப்பட்டு உள்ள தடுப்பு கற்களை அகற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
கடந்த சில நாட்களாக திருவொற்றியூர் முதல் மீஞ்சூர் வரை நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு பாதிப்பாக விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த இரும்பு தடுப்பில் மோதியது.
- விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பூந்தமல்லி:
கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது64). இவரது மகன் பிரகாஷ். இவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்தவாசியில் நடந்த திருவிழாவில் கலந்து கொள்ள குடும்பத்துடன் சென்று இருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை தந்தை-மகன் இருவரும் வந்தவாசியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.
கோவூர் அருகே தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த இரும்பு தடுப்பில் மோதியது.இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த செல்வராஜிம், அவரது மகன் பிரகாசும் தூக்கி வீசப்பட்டனர். தலையில் பலத்த காயம் அடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே மகன் கண்முன் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்து போனார்.
அவரது மகன் பிரகாஷ் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினார்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து பலியான செல்வராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பலியான செல்வராஜின் மகள் தீபா என்பவர் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. அவர் விபத்து நடந்த இடத்திற்கு வந்து தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
இந்த விபத்தால் தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் சுமார் ஒரு மணிநேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- புள்ளிமானை நாய்கள் துரத்தி வந்த நிலையில் பள்ளி வகுப்பறையில் புகுந்த மானை பத்திரமாக அப்பகுதி மக்கள் மீட்டனர்.
- மாதவரம் வனத்துறையினர் மானை மீட்டு வனபகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த வேன்பாக்கம் அரசு மேல் நிலைப் பள்ளி அருகே காட்டுப்பள்ளி வனப்பகுதியில் இருந்து தண்ணீருக்காக வந்த புள்ளிமானை நாய்கள் துரத்தி வந்த நிலையில் பள்ளி வகுப்பறையில் புகுந்த மானை பத்திரமாக அப்பகுதி மக்கள் மீட்டனர்.
கும்முடிப்பூண்டி அடுத்த மாதவரம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் மாதவரம் வனத்துறையினர் மானை மீட்டு வனபகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
- மாணவனின் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
- டிராக்டர் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பார்த்திபனை போலீசார் தேடிவருகிறார்கள்.
திருவள்ளூர்:
பூந்தமல்லி அடுத்த சித்துக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் நித்திஷ் (வயது11). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் கடந்த 25-ந் தேதி காலை வீட்டின் அருகே உள்ள சிவன்கோவில் பகுதிக்கு சென்றார். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர் மோதியதில் மாணவன் நித்திசின் உடல் இரண்டு துண்டாகி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுபற்றி போலீசுக்கு தெரிவிக்காமல் மாணவன் நித்தீசின் உடலை பெற்றோர் மற்றும் உறவினர்கள் புதைத்துவிட்டனர்.
இதுகுறித்து வெள்ளவேடு போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாணவனின் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து பூந்தமல்லி தாசில்தார் மாலினி மற்றும் வெள்ளவேடு போலீசார் சித்துக்காடு கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் ஓட்டி வந்த டிராக்டர் மோதியதில் சிறுவன் நித்தீஷ் பலியானது தெரிய வந்தது. பின்னர் பூந்தமல்லி தாசில்தார் மாலினி, பூந்தமல்லி உதவி கமிஷனர் ஜவஹர், வெள்ளவேடு காவல் ஆய்வாளர் லில்லி, உதவி ஆய்வாளர் செந்தில் நாதன், வி.ஏ.,ஓ., பிரகாஷ் பாலாஜி மற்றும் வெள்ளவேடு போலீசார் அப்பகுதிக்கு சென்று புதைக்கப்பட்ட சிறுவன் நித்தீசின் உடலை தோண்டி எடுத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து மீண்டும் அதே இடத்தில் உடல் புதைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிராக்டர் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பார்த்திபனை போலீசார் தேடிவருகிறார்கள்.