என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worship"

      திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இறுதி நாளில் திருப்படி திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

      மலை கோவிலுக்கு செல்லும் பாதையில் ஒரு ஆண்டை குறிக்கும் வகையில் உள்ள 365 படிக்கட்டுகளில் பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்வார்கள்.

      அதன்படி இந்த ஆண்டுக்கான படித்திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. திருத்தணி மலையடிவாரத்தில் உள்ள முதல் படிக்கட்டில் சிறப்பு பூஜைகள் நடத்தி விழா தொடங்கப்பட்டது.

      திருப்புகழ், தேவாரம், திருவாசகம் மற்றும் பக்தி பாடல்கள் பாடியபடி பக்தர்கள் ஒவ்வொரு படிகட்டுகளின் வழியாக நடந்து சென்று சுவாமியை வழிபடுகின்றனர்.

      திருப்படித்திருவிழா மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருத்தணி கோவிலில் இன்று இரவு முழுவதும் நடை திறந்திருக்கும். நள்ளிரவு புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடைபெறுகிறது. பக்தர்கள் விடியவிடிய சாமி தரிசனம் செய்யலாம்.

      இன்று காலை உற்சவர் முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் தேர்வீதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

      • பெருமை மிக்க ஸ்ரீரங்கம், ஒருகாலத்தில் அழகிய தீவு போல் அமைந்திருந்ததாகச் சொல்கிறது புராணம்.
      • ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி மாதம் மட்டுமின்றி, ஆடி மற்றும் தை மாதங்களிலும் அரையர் சேவை உண்டு.

      நம் வாழ்க்கையில் என்ன செய்தாலும், எத்தனை நல்லவை செய்திருப்பினும், எவ்வளவு அல்லவை செய்திருந்தாலும், அரங்கனை, ரங்கநாதனை, ரங்கநாதப் பெருமாளை இறுதியில் சரணடைந்துவிட்டால் மோட்சம் நிச்சயம்; வைகுண்டத்தில் சொர்க்கவாசல் நமக்குத் திறக்கப்படும் என்று புராணம் சொல்லிவைத்த மாபெரும் விஷயத்தை மிக எளிதாக உணர்த்தியிருக்கிறார்கள்,

      இத்தனை பெருமை மிக்க ஸ்ரீரங்கம், ஒருகாலத்தில் அழகிய தீவு போல் அமைந்திருந்ததாகச் சொல்கிறது புராணம். காவிரி - கொள்ளிடம் ஆறுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம், இன்றைக்கும் தன் அழகுடன், தனியழகுடன், மிகுந்த சாந்நித்தியத்துடன் அமைந்திருக்கிறது. சயனித்த திருக்கோலத்தில் இருந்தபடி, இந்த உலகுக்கும் உலக மக்களுக்கும் விடியலைத் தந்து சேவை சாதித்துக் கொண்டிருக்கிறார் ரங்கநாதப் பெருமாள். வைகுண்டத்தை திருநாடு என்று போற்றுவார்கள். அந்தத் திருநாட்டிற்குச் செல்பவர்கள் எப்போதும் பெருமாளைத் தரிசிக்கும் பாக்கியம் பெறுவர். அவர்களுக்கு நித்யசூரிகள் என்று பெயர். இவர்களுக்கு பசி, தாகம், உறக்கம் எனும் எந்த உணர்வும் இருக்காது. பேரானந்தத்தில் மூழ்கி இருப்பார்களாம்.

      தமிழகத்தில் ஸ்ரீரங்கம், ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய மூன்று திவ்யதேசங்களில் மட்டும் வைகுண்ட ஏகாதசியையொட்டி அரையர் சேவை நடக்கிறது. வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய பத்துநாட்களை பகல் 10 என்றும், (மார்கழி அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதல் தசமி வரை) வைகுண்ட ஏகாதசிக்கு பிறகு வரும் 10 நாட்களை (ஏகாதசி முதல் பஞ்சமி வரை) ராப்பத்து நாட்களாகவும் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி மாதம் மட்டுமின்றி, ஆடி மற்றும் தை மாதங்களிலும் அரையர் சேவை உண்டு.

      கர்நாடக மாநிலத்தில் உள்ள மேல்கோட்டை ஸ்ரீநரசிம்ம பெருமாள் கோவிலில், அபிநயம் இல்லாமல் தாளத்தோடு மட்டும் அரையர் சேவை இன்றைக்கும் நடந்து வருகிறது.

      ஆழ்வார்கள் பாடிய பாடல்களைத் தொகுத்தவர் நாதமுனிகள். இதுவே நாலாயிர திவ்ய பிரபந்தம் எனப்படுகிறது. இவர் ஒருமுறை கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் மீதான 'ஆராவமுதே' என்று தொடங்கும் திவ்யபிரபந்த பாசுரத்தை சிலர் பாடக்கேட்டு அதில் மெய்மறந்து போனார்.

      அதில் 'ஓராயிரத்துள் இப்பத்தும்' எனும் அடி வந்தது. அவர்களிடம், ''நீங்கள் பாடிய பாடலின் பொருள்படி, ஆயிரத்தில் பத்து பாடல் போக மீதி 990 பாடல்கள் எங்கே?'' என்று கேட்டார். ஆனால், அவர்களுக்குத் தெரியவில்லை. எனவே நாதமுனிகள் ஆழ்வார் திருநகரி சென்று இந்தக் கேள்வியை மதுரகவி ஆழ்வாரின் வம்சாவளியினரிடம் கேட்டார்.அவர்கள் பாசுரங்களைப் பெறுவதற்கு ஒரு வழியைக் கூறினர். மதுரகவி ஆழ்வாரின் பாசுரங்களை 12 ஆயிரம் முறை யார் ஒருவர் பாடுகிறாரோ, அவர் முன் ஆழ்வாரே தோன்றி அருள் செய்வார். அவரிடம் விபரம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார். நாதமுனிகளும் 12 ஆயிரம் முறை மதுரகவி ஆழ்வாரின் பாசுரத்தைப் படித்தார்.

      ஆழ்வாரின் அருளால் ஆழ்வார்கள் பாடிய அனைத்துப் பாசுரங்களையும் பெற்றார்.

      அந்தப் பாடல்களுக்கு தமிழ்ப்பண் அமைப்பில் இசையமைத்து திவ்ய பிரபந்தம் என்று பெயரிட்டார். தனது சீடர்களான உய்யக்கொண்டார், குருகைக்காவலப்பன், மேலையகத்தாழ்வான் மூலம் அந்தப் பாசுரங்களை திவ்யதேசங்கள் எங்கும் பாடச் செய்தார் என்கிறது ஸ்ரீரங்கம் புராணம்.

      மார்கழி மாதத்தில் ஏதேனும் ஒருநாளில், திருச்சி ஸ்ரீரங்கத்துக்கு வந்து ஸ்ரீரங்கரையும் ரங்கநாயகித் தாயாரையும் ஒருமுறை வழிபட்டாலே, நம் பாவங்கள் அனைத்தும் விலகும்; பட்ட கஷ்டங்கள் அனைத்தும் தீரும். அரங்கனின்சந்நிதிக்கு வருவோம்.

      அவனின் பேரருளைப் பெறுவோம்!

      • ஒருநாள் வழக்கம்போல் கிருஷ்ணர் வெண்ணெய் திருடும்போது, அவரது தாயான யசோதை பார்த்து விட்டாள்.
      • கண்ணனும், வேறு வழியில்லாமல் “நீ கேட்டதைத் தந்துவிட்டேன். என்னை விடு" என்றான்.

      குழந்தை பருவத்தில் பல குறும்புகளை செய்து கோபியர்களின் மனதை கொள்ளை கொண்டவர், கிருஷ்ணர். கோகுலத்தில் அவர் செய்த லீலைகள் ஏராளம். கிருஷ்ணருக்கு வெண்ணெய் என்றால் கொள்ளை பிரியம். யமுனைக்கரையில் உள்ள ஆயர் பாடியில் வெண்ணெயை திருடி உண்பது கிருஷ்ணரின் வழக்கம்.

      குழந்தை பருவத்தில் கிருஷ்ணருக்கு நிறைய நண்பர்கள் இருந்தாலும், மிகவும் பிடித்தமான நண்பன் ததிபாண்டன். கிருஷ்ணன் குறும்பு தனம் செய்யும் போதெல்லாம் ததி பாண்டனும் கிருஷ்ணரும் மாட்டிவிட்டு, உடனிருப்பான். ததிபாண்டனை தண்டனையில் இருந்து தப்பித்து கொள்வார்.

      ஒருநாள் வழக்கம்போல் கிருஷ்ணர் வெண்ணெய் திருடும்போது, அவரது தாயான யசோதை பார்த்து விட்டாள். கையும் களவுமாக சிக்கியதால், அவளிடம் அடிவாங்கப் பயந்து கிருஷ்ணர் தப்பி ஓடினார். அப்போது தன்னுடைய நெருங்கிய நண்பனான ததிபாண்டனின் வீட்டுக்குள் சென்று, அவனிடம் "தன்னை தாயிடம் இருந்து காப்பாற்றுபடி" கூறினார்.

      உடனே, ததிபாண்டன் ஒரு தயிர் பானையை கிருஷ்ணன் மீது கவிழ்த்து வைத்துவிட்டான். கண்ணனை தேடி அங்கு வந்த யசோதை, ததிபாண்டனிடம் கிருஷ்ணரை விசாரித்தார். ஆனால் ததிபாண்டன், 'கண்ணன் இங்கு வரவில்லையே' என்று சொல்லிவிட்டான். இதனால் யசோதை அங்கிருந்து சென்றார். உடனே கண்ணன், தன்னை மூடிவைத்திருந்த பானையை எடுக்கும்படி சொன்னார். ஆனால், ததிபாண்டன் மறுத்துவிட் டான். அவன் கண்ணனிடம், "கண்ணா! நீ தெய்வம் என்பதை நான் அறிவேன். எனக்கு நீ பிறப்பற்ற நிலையைத் தந்தால்தான் உன்னை விடுவேன்" என்றான்.

      கண்ணனும், வேறு வழியில்லாமல் "நீ கேட்டதைத் தந்துவிட்டேன். என்னை விடு" என்றான். ஆனால் ததிபாண்டன், 'கண்ணா! நான் மோட்சம் பெறக் காரணமாக இருந்த இந்த பானைக்கும் மோட்சம் கொடு" என்றான். கிருஷ்ணரும் அவ்வாறே பானைக்கும் மோட்சம் அளித்து அருளினார்.

      • போரில் பின்வாங்குவது போன்று நடித்து, ஹிமாவதி என்னும் குகைக்குள் சென்று யோக நித்திரையில் ஆழ்ந்தார்.
      • மகாவிஷ்ணு ஹயக்ரீவர் அவதாரம் எடுத்து, அசுரர்கள் திருடிச் சென்ற வேதங்களை மீட்டு வந்தார்.

      பெருமாளின் அருளை வேண்டி கடைப்பிடிக்கப்படும் விரதங்களில் ஏகாதசி விரதமும் ஒன்று. அனைத்து விரதங்களிலும் மிகவும் உயர்வான விரதமாக ஏகாதசி விரதம் கருதப்படுகிறது. ஏகாதசி விரதம் என்பது ஏகாதசி திதியில் தொடங்கி துவாதசி திதியில் முடியும். இந்த விரதத்தை பய பக்தியுடன் கடைப்பிடிப்பவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

      மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறை என இரண்டு முறை ஏகாதசி வருகிறது. இந்த ஏகாதசியில் விரதம் இருந்து வழிபட்டால் பெருமாளின் அருளைப் பெற முடியும். மாதத்திற்கு 2 முறை என வருடத்திற்கு 24 முறை வரும் ஏகாதசி விரதத்தை கடைப்பிடிக்க முடியாதவர்கள், மகாவிஷ்ணுவுக்கு மிகவும் பிடித்த மாதமான மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்து வழிபட்டால் வருடத்தில் அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்த பலனைப் பெறலாம்.

      ஏகாதசி பிறந்த வரலாறு

      ஒரு சமயம் முரண் என்ற அசுரன், பல ஆண்டுகளாக கடுந்தவம் இயற்றி, இறைவனிடம் இருந்து பல அரிய வரங்களை பெற்றுக்கொண்டான். அதனால் மிகுந்த பலம் பெற்ற அந்த அசுரன், தேவர்களையும், முனிவர்களையும், மக்களையும் மிகவும் துன்புறுத்தினான். இதனால் கவலை அடைந்த தேவர்களும், முனிவர்களும் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். எப்படியாவது முரணை அழித்து, தங்களை காத்தருள வேண்டும் என்று வேண்டினர். மகாவிஷ்ணுவும் அனைவரையும் காக்கும் பொருட்டு அரக்கனை அழிப்பதாக உறுதி அளித்தார்.

      அதன்படி, முரண் அசுரனுடன் போரிட்டார் மகாவிஷ்ணு. பல ஆண்டுகளாக கடுமையாக போரிட்டும் மகாவிஷ்ணுவால் முரணை கொல்ல முடியவில்லை. காரணம், பல வரங்களை பெற்றிருந்த முரண், 'தனக்கு பெண்ணால் மட்டும் தான் மரணம் நிகழ வேண்டும்' என்ற வரத்தையும் கொண்டிருந்தான். இதை அறிந்த மகாவிஷ்ணு, இனியும் போர் புரிந்து பயனில்லை என்பதை உணர்ந்தார்.

      இதையடுத்து போரில் பின்வாங்குவது போன்று நடித்து, ஹிமாவதி என்னும் குகைக்குள் சென்று யோக நித்திரையில் ஆழ்ந்தார். விஷ்ணு இருக்கும் இடத்தை அறிந்து, அவரை கொல்ல குகையை நோக்கி வந்தான் முரண். அப்போது மகாவிஷ்ணுவின் உடலில் இருந்து ஒரு சக்தி தோன்றி, ஒரு அழகான பெண்ணாக மாறியது.

      அந்த பெண் முரணுடன் போரிட்டு கொன்றாள். இதையடுத்து, அசுரனை அழித்த அந்த பெண்ணுக்கு 'ஏகாதசி' என்று மகாவிஷ்ணு பெயர் சூட்டினார். மேலும் இந்த நாளில் தன்னை வழிபடுவோருக்கு வைகுண்ட பதவி அளிப்பதாக வரமளித்தார். அதன்படியே அந்த தினம் வைகுண்ட ஏகாதசி என்ற பெயரில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

      சொர்க்க வாசல்

      ஒரு சமயம் படைக்கும் கடவுளான பிரம்ம தேவருக்கு கர்வம் ஏற்பட்டது. அந்த கர்வத்தை ஒடுக்க நினைத்தார் மகாவிஷ்ணு. பிரம்ம தேவரின் படைப்பு காலம் முடிந்து, ஊழிக்காலம் தொடங்கியதும் எல்லா உயிர்களும் இறைவனிடம் ஒடுங்கிவிடும். அதன்படி ஊழிக்காலம் தொடங்கியதும், பிரம்ம தேவர் மகாவிஷ்ணுவின் தொப்பிள் கொடியில் இருந்த தாமரையில் அடங்கினார். அப்பொழுது, மகாவிஷ்ணுவின் காதுகளில் இருந்து மது, கைடபர் என இரண்டு அசுரர்கள் தோன்றினர். இருவரும் கடும் தவம் புரிந்து இறைவனிடம் இருந்து பல வரங்களை பெற்றுக்கொண்டனர்.

      பிரளயக் காலம் முடிந்து, மீண்டும் உலக உயிர்களை தோன்றுவிக்க பிரம்மன் வந்தார். அப்போது பிரம்மாவிடம் ஒலி வடிவில் இருந்த வேதங்களை மது, கைடபர் அசுரர்கள் திருடி சென்றனர். இதையடுத்து, பிரம்மதேவர் மகாவிஷ்ணுவின் உதவியை நாடினார். மகாவிஷ்ணு ஹயக்ரீவர் அவதாரம் எடுத்து, அசுரர்கள் திருடிச் சென்ற வேதங்களை மீட்டு வந்தார்.

      பின்னர் இரண்டு அசுரர்களும் தேவர்கள், முனிவர்கள் என அனைவரையும் துன்புறுத்தினர். இதனால் மிகவும் வருந்திய தேவர்கள், உலக உயிர்களை காத்து அசுரர்களை அழிக்க வேண்டும் என்று மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். இதையடுத்து மகாவிஷ்ணு, மது, கைடபருடன் போரிட்டு அழித்தார். மகாவிஷ்ணுவின் உடலில் இருந்து தோன்றியவர்கள் என்பதால், இருவரும் வைகுண்டம் செல்லும் பாக்கியம் பெற்றனர். இவ்வாறு அவர்கள் இருவரும் வைகுண்டம் சென்றது மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி ஆகும்.

      வைகுண்டம் சென்ற அவர்கள் மகாவிஷ்ணுவிடம், ''உங்களிடம் இருந்து உருவான எங்களுக்கு உங்கள் கருணையால் இந்த பாக்கியம் கிடைத்தது போன்று, பலரும் இந்த பலனை பெற அருள வேண்டும்'' என வேண்டினர். அதோடு ''மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று, சொர்க்க வாசல் வழியாக வந்து வழிபடுபவர்களுக்கு மோட்சம் கிடைக்க வேண்டும்'' என்று கேட்டனர். அதன்படியே, பகவானும் அருள் வழங்கினார். இதன்பொருட்டே பெருமாள் கோவில்களில் மார்கழி மாதம் வரும் வளர்பிறை ஏகாதசியில் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.

      வைகுண்ட ஏகாதசி விரதம்

      பெருமாளுக்கு மேற்கொள்ளப்படும் விரதங்களில் முதன்மை இடத்தை பிடிப்பது வைகுண்ட ஏகாதசி விரதம் ஆகும். மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினொன்றாம் நாள், வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. இது பகல் பத்து, இரா பத்து என்று இருபது நாள் திருவிழாவாக நடத்தப்படுகிறது.

      வைகுண்ட ஏகாதசி விரதம் மூன்று நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது தசமி திதியில் தொடங்கி, ஏகாதசி திதியில் விரதம் இருந்து, துவாதசி திதியில் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி இன்று (30-12-2025) செவ்வாய்க்கிழமை வருகிறது.

      இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள், ஏகாதசிக்கு முதல் நாளான தசமி அன்று பகலில் மட்டும் உணவருந்த வேண்டும். ஏகாதசி அன்று, அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, இறைவனை வழிபட்டு விரதத்தை தொடங்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் எந்தவித உணவையும் உட்கொள்ளக்கூடாது. ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு இதில் இருந்து விலக்கு உண்டு.

      ஏகாதசி அன்று பெருமாள் கோவில்களில் நடைபெறும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வை தரிசிக்க வேண்டும். மேலும் அன்றைய தினம் இரவு முழுவதும், தூங்காமல் கண் விழித்து இருந்து புராணங்கள், பெருமாளுக்குரிய பாடல்கள், இறைவனின் நாமங்கள் போன்றவற்றை படிக்க வேண்டும். மறுநாளான துவாதசி அன்று இறைவனுக்கு நைவேத்தியங்கள் படைத்துவிட்டு, பின்பு உணவருந்தி விரதத்தை முடிக்க வேண்டும். வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள், வீட்டில் இருந்தோ அல்லது கோவில்களுக்கு சென்றோ விரதத்தை கடைப்பிடிக்கலாம்.

      ஒருவரால் இந்த ஏகாதசி விரதத்தை கடைப்பிடிக்க முடியவில்லை என்றால், அவருக்கு பதிலாக வேறொருவர் இந்த விரதத்தை கடைப்பிடிக்கலாம். இதன்மூலம் இந்த விரதத்தின் முழுபயனும் யாருக்காக அந்த விரதம் இருக்கிறோமோ அவருக்கே போய் சேர்ந்துவிடும்.

      பொதுவாக எந்த விரதமாக இருந்தாலும் தீட்டு காலங்களில் அந்த விரதத்தை மேற்கொள்ளக்கூடாது என்பார்கள். ஆனால் வைகுண்ட ஏகாதசி விரதத்தை தீட்டு காலங்களிலும் மேற்கொள்ளலாம் என்பதே இந்த விரதத்தின் தனிச் சிறப்பாகும்.

      வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு, பாவங்கள், பலவிதமான துன்பங்கள் போன்றவை நீங்கி செல்வ வளம் பெருகும். இந்த பிறவியில் மட்டுமல்ல ஏழு பிறவிகளில் செய்த பாவங்களையும் போக்கலாம். இத்தனை சிறப்புகளை உடைய வைகுண்ட ஏகாதசி தினத்தில் பெருமாளின் நாமத்தை மனதில் நிறுத்தி, வழிபட்டு இறைவனின் முழு அருளையும் பெறுவோம்.

      • திருப்பதி நவநதி மகாதீர்த்தம்.
      • திருவலங்காடு சிவபெருமான் ரத்தின சபா நடனம்.

      30-ந் தேதி (செவ்வாய்)

      * வைகுண்ட ஏகாதசி.

      * விஷ்ணு ஆலயங்களில் பரமபத வாசல் திறப்பு விழா.

      * திருவரங்கம் நம்பெருமாள் முத்தங்கி சேவை.

      * விஷ்ணு ஆலயங்களில் ராப்பத்து உற்சவம் ஆரம்பம்.

      * சங்கரன்கோவில் சுவாமி யானை வாகனத்தில் புறப்பாடு.

      * கீழ்நோக்கு நாள்.

      31-ந் தேதி (புதன்)

      * கார்த்திகை விரதம்.

      * ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர், எல்லாம் வல்ல சித்தராய் காட்சி, இரவு வெள்ளி குதிரையில் சேவகனாய் காட்சி.

      * திருப்பதி நவநதி மகாதீர்த்தம்.

      * மதுரை கூடலழகர் பெருமாள், திருவள்ளூர்

      * வீரராகவப் பெருமாள் தலங்களில் திருவாய்மொழி உற்சவ சேவை.

      * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் புறப்பாடு.

      1-ந் தேதி (வியாழன்)

      * பிரதோஷம்.

      * திருநெல்வேலி கெட்வெல் ஆஞ்சநேயர் ராஜ அலங்காரம்.

      * ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் ரத உற்சவம்.

      * மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி புறப்பாடு.

      * மேல்நோக்கு நாள்.

      2-ந் தேதி (வெள்ளி)

      * ஆருத்ரா அபிஷேகம்.

      * மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் இரவு நடேசர் மகா அபிஷேகம்.

      * திருக்குற்றாலம் குற்றாலநாதர் பவனி.

      * சமநோக்கு நாள்.

      3-ந் தேதி (சனி)

      * பவுர்ணமி.

      * ஆருத்ரா தரிசனம்.

      * ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகருக்கு உபதேசம் செய்தருளிய காட்சி.

      * திருவலங்காடு சிவபெருமான் ரத்தின சபா நடனம்.

      * மேல்நோக்கு நாள்.

      4-ந் தேதி (ஞாயிறு)

      * சிதம்பரம் சிவபெருமான் முத்து பல்லக்கில் புறப்பாடு.

      * திருவரங்கம் நம்பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் தலங்களில் ராப்பத்து உற்சவம்.

      * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.

      * சமநோக்கு நாள்.

      5-ந் தேதி (திங்கள்)

      * திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு.

      * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

      * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம்.

      * திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

      * மேல்நோக்கு நாள்.

      • ஒரு சமயம் மகாலட்சுமி தேவி, துர்வாச முனிவரிடம் மலர் மாலை ஒன்றை அளித்தார்.
      • கருவறையில் இறைவன் ஐராவதேஸ்வரர் லிங்க திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

      மயிலாடுதுறை மாவட்டம் பெருந்தோட்டம் என்ற இடத்தில் அமைந்துள்ளது ஐராவதேஸ்வரர் திருக்கோவில். சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில், சோழர் காலத்தை சேர்ந்ததாக கருதப்படுகிறது. இத்தலத்தில் அருள்பாலிக்கும் இறைவன் ஐராவதேஸ்வரர் என்றும், இறைவி அதிதுல்ய குஜாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

      ஒரு சமயம் மகாலட்சுமி தேவி, துர்வாச முனிவரிடம் மலர் மாலை ஒன்றை அளித்தார். அதனை துர்வாச முனிவர் இந்திரனுக்கு பரிசளித்தார். இந்திரன், அந்த மாலையை தான் அமர்ந்திருந்த ஐராவதம் என்ற வெள்ளை யானையின் மீது வைத்தான். ஆனால் அந்த யானையோ மாலையை தரையில் வீசி காலால் மிதித்தது. இதைக் கண்ட துர்வாச முனிவருக்கு கோபம் தலைக்கேறியது. ஐராவதத்தைப் பார்த்து, ''நான் கொடுத்த மாலையை அவமதித்த உனக்கு தேவலோகத்தில் இருக்க தகுதியில்லை. பூலோகத்தில் காட்டு யானையாக சுற்றி திரிவாய்'' என சாபமிட்டார்.

      அதன்படி பூலோகம் வந்த யானை ஒவ்வொரு சிவாலயமாக சுற்றித் திரிந்தது. ஒரு முறை இத்தலத்திற்கு வந்தபோது, இங்கிருந்த விநாயகர் 'இறைவனை வழிபடக்கூடாது' என வாதிட்டார். அந்த விநாயகர் ஆலயத்தின் வடகிழக்கு திசையில் 'வாதாடும் கணபதி' என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். பின்பு சமாதானம் அடைந்த விநாயகர் யானையை வழிபட அனுமதித்தார். அதன்பிறகே யானைக்கு சாப விமோசனம் கிடைத்தது. ஐராவத யானை வழிபட்டதால் இத்தல இறைவன், 'ஐராவதேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

      இந்த ஆலயம் கிழக்கு நோக்கி காணப்படுகிறது. கோவில் முகப்பை தாண்டியதும் பலிபீடம், நந்தி காட்சி அளிக்கின்றன. அடுத்ததாக உள்ள மகாமண்டபத்தின் தென்திசையில் நால்வர் திருமேனி உள்ளது. வலதுபுறத்தில் அன்னை அதிதுல்ய குஜாம்பிகை நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார். மேல் இருகரங்களில் கும்பத்தையும், தட்டையும் தாங்கி, கீழ் இருகரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரையுடன் நின்ற கோலத்தில் தென் திசை நோக்கி காட்சி அளிக்கிறார். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அன்னைக்கு விதவிதமாக அலங்காரம் செய்வர்.

      மகாமண்டபத்தை அடுத்து அர்த்தமண்டபம் காணப்படுகிறது. கருவறையில் இறைவன் ஐராவதேஸ்வரர் லிங்க திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். தேவக்கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, பிள்ளையார், பிரம்மா, துர்க்கா ஆகியோர் வீற்றிருக்கிறார்கள். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் நான்கு வாரத்துக்கு துர்க்கைக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறும் என்கிறார்கள்.

      திருச்சுற்றில் தல விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். வடகிழக்கு மூலையில் நவக்கிரகங்கள் காட்சி அளிக்கின்றன. இத்தல இறைவனை வழிபட்டு வந்தால் கோபக் குணம் குறைந்து, மனதில் அமைதியும், நிதானமும் நிலவும் என்கிறார்கள்.

      மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு புதன் தலத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.

      • கிறிஸ்துமஸ் குடிலை முதன்முதலாக உருவாக்கியவர் புனித பிரான்சிஸ் அசிசியார்.
      • 7ம் நூற்றாண்டிலிருந்தே இயேசுவின் குடிலைத் தாங்கிய அன்னை மரியின் ஆலயம் என்றழைக்கப்பட்டது.

      கிறிஸ்துமஸ் குடிலை முதன்முதலாக உருவாக்கியவர் புனித பிரான்சிஸ் அசிசியார் ஆவார். புனித பிரான்சிஸ் அசிசியார் இக்குடிலை கி.பி. 1223ஆம் ஆண்டு கிரேஜ்ஜோ என்கிற இடத்தில் இருந்த துறவற மடத்தின் அருகில் இருந்த ஒரு வனப்பகுதியில் அமைந்திருந்த குகையில், செல்வந்தரான ஜியோவான்னி வெலிதா என்பவரின் உதவியுடன் அமைத்தார்.

      ஆனாலும் இயேசுவின் பிறப்பு நிகழ்வு காட்சிகள் திருஉருவங்களாக கி.பி. 1283-ம் ஆண்டு பிரான்சிஸ்கன் துறவற சபையைச் சார்ந்த முதல் திருத்தந்தை நான்காம் நிக்கோலாஸ் முன்முயற்சியால், டஸ்கன் பகுதியைச் சார்ந்த புகழ்பெற்ற சிற்ப கலைஞர் காம்பியோ நகர் அர்னோல்போவால் வடிவமைக்கப்பட்டு, மேற்கத்திய பெத்லகேம் என்றழைக்கப்பட்ட புனித மேரி மேஜர் பெருங்கோவிலில் வைக்கப்பட்டது.

      இந்த பெருங்கோவிலானது 7ம் நூற்றாண்டிலிருந்தே இயேசுவின் குடிலைத் தாங்கிய அன்னை மரியின் ஆலயம் என்றழைக்கப்பட்டது. ஏனென்றால், இங்குதான் இயேசுவைத் தாங்கிய தீவனத் தொட்டியின் ஒரு பகுதியானது வைக்கப்பட்டுள்ளது.

      கிறிஸ்துமஸ் மரம்

      கிறிஸ்துமஸ் மரத்துக்கு என வரலாறு உள்ளது. கிறிஸ்துமஸ் மரம், இயேசு நாதரின் முப்பரிமாணங்களாகிய, தந்தை, மகன் மற்றும் தூய ஆவி ஆகியவைகளைக் காட்டுவதாக கூறப்படுகிறது. 10-ம் நூற்றாண்டில், ஜெர்மனியில் வாழ்ந்த புனித போனிபேஸ் என்கிற பாதிரியார் ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்கையில், ஒரு ஊரில், மக்கள் ஓக் மரத்தை வணங்குவதைக் கண்டு கோபமுற்று, வேர்ப்பகுதியுடன் அதை அடியோடு வெட்டி விட்டுச் சென்றார்.

       

      சில நாட்களில் வெட்டப்பட்ட அந்த மரம் அதே இடத்தில் வளர்ந்து கம்பீரமாக நிற்க, இயேசு நாதரே மீண்டு வந்ததின் அடையாளமாக எண்ணி ஊர் மக்கள் வணங்கினர். சில மாதங்கள் சென்றபின், புனித போனிபேஸ் பாதிரியார் அங்கே வருகையில், அந்த புதிய மரத்தை அதே இடத்தில் கண்டு அதிசயப்பட்டார். அங்கேயே மண்டியிட்டு அமர்ந்து ஜெபிக்க ஆரம்பித்தார். 15-ம் நூற்றாண்டில், ஜெர்மானியப் பாதிரியார், தேவாலய காம்பவுண்டினுள் இருந்த 'பிர்' மரத்தை மெழுகுவர்த்தி ஏற்றிய கூண்டு விளக்குகளால் அலங்கரித்தார். எவர்கிரீன் மரமென 'பிர்' மரம் அழைக்கப்பட்டது. பின்னர் ஓக் மற்றும் பிர் மரங்கள் கிறிஸ்துமஸ் மரங்களாக உபயோகப்படுத்தப்பட்டன. 

      • நரசிம்மர் சன்னிதிக்கு நேர் எதிரே இரண்டு கைகளை கூப்பிய நிலையில் ஆஞ்சநேயர் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார்.
      • நாமகிரி தாயார் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி நரசிம்மரை தரிசித்தவாறு தவம் செய்த கோலத்தில் காணப்படுகிறார்.

      நாமக்கல் நகரில் குன்றின்மீது அமைந்துள்ளது. நரசிம்மர் குடைவரைக் கோவில். இக்கோவிலில் மூலவராக நரசிம்மரும், நாமகிரி தாயாரும் உள்ளனர். கட்டிடக் கலைக்கு பெயர்பெற்ற இந்த கோவில், 8-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

      திருக்கோவிலின் மூலஸ்தானமும், அர்த்தமண்டபமும் குகைக்குள்ளேயே அமைந்துள்ளது சிறப்பாகும்.

      நரசிம்மர், கர்ப்பக்கிரகத்தில் ஒரு காலை மடக்கி, மற்றொரு காலை தரையில் ஊன்றி நான்கு திருக்கரங்களுடன் காட்சி அளிக்கிறார். ஒரு கை ஊதா நிறத்துடன் காணப்படுகிறது. இது இரணிய கசிபுவின் ரத்த சாயல் என்று கூறப்படுகிறது. இங்கு லட்சுமி தேவி வழக்கம் போல நரசிம்மரின் மடியில் இல்லாமல், சுவாமியின் இதயத்தில் இருக்கிறார். சுவாமி உடன் சனகர், சனாதனர், சூரியர், சந்திரர் ஆகியோர் சாமரம் வீச, சிவபெருமானும், பிரம்ம தேவரும் சுவாமியை வணங்கும் கோலத்தில் உள்ளனர்.

      நரசிம்மர் சன்னிதிக்கு நேர் எதிரே இரண்டு கைகளை கூப்பிய நிலையில் ஆஞ்சநேயர் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். பிரமாண்டமாக காட்சி அளிக்கும் ஆஞ்சநேயர் சிலைக்கு மேற்கூரை கிடையாது. இந்த ஆஞ்சநேயர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என இங்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

      நாமகிரி தாயார் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி நரசிம்மரை தரிசித்தவாறு தவம் செய்த கோலத்தில் காணப்படுகிறார். தாயார், கவலைகளைப் போக்கும் கருணை கண்களுடன் அழகுற காட்சி அளிக்கிறார். இங்குள்ள நரசிம்ம தீர்த்தத்தில் நீராடி, தாயாரை பூஜித்தால் சகல செல்வங்களும் வந்துசேரும், தீவினைகள் அகலும், ஞானம், அறிவு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

      ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் நரசிம்மர், ரங்கநாதர், அனுமன் ஆகியோருக்கு தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் வரும் அனுமன் ஜெயந்தி விழாவும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

      • உற்சவர் கரிவரதராஜப் பெருமாள் என்றும், தாயார் கனகவல்லி என்றும் அழைக்கப்படுகின்றனர்.
      • மூலவர் வேங்கட வரதராஜன் என்னும் திருநாமத்துடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

      மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புகளையும் கொண்ட தலமான மாதவரத்தில் உள்ளது, கரிவரத ராஜப்பெருமாள் கோவில். நம் பாவங்களை போக்கி புண்ணியம் தரும் அற்புத தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது.

      நாம் உணவு உண்ணும்போது 'ஜனார்த்தனன்' என்னும் திருநாமத்தையும், உறங்கச் செல்லும்போது 'பத்மநாபன்' என்னும் திருநாமத்தையும், காட்டு வழியில் செல்லும்போது 'நரசிம்மன்' திருநாமத்தையும், மலையேறும்போது 'ரகுநந்தன்' என்னும் திருநாமத்தையும் உச்சரிப்பது விசேஷம். ஆனால் மாதவன் என்கிற திருநாமத்தை எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் சொல்லலாம் என புராணங்கள் கூறுகின்றன.

      அந்த உயர்ந்த திருநாமத்தையே பெயராகக் கொண்டுள்ளது 'மாதவபுரம்' என்னும் சிற்றூர். வியாசர் உள்ளிட்ட மாமுனிவர்கள் இங்கு தவம் செய்து வரம் பெற்ற தலம் என்பதால், 'மகாதவபுரம்' என்று பெயர் பெற்று, அதுவே மருவி 'மாதவரம்' என்றாயிற்று.

      கோவில் 3 நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. உற்சவர் கரிவரதராஜப் பெருமாள் என்றும், தாயார் கனகவல்லி என்றும் அழைக்கப்படுகின்றனர். மூலவர் வேங்கட வரதராஜன் என்னும் திருநாமத்துடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

      திருமலையில் எழுந்தருளி உள்ள திருவேங்கடமுடையான் போல், இடதுகரம் கடிக ஹஸ்தம் கொண்ட கோலத்தில் இருப்பதால், வேங்கடவரதன்' எனவும் வழங்கப்படுகிறார்.

      ஒரு சமயம் இந்த இறைவனுக்கு தேனாபிஷேகம் செய்யும்போது, அர்ச்சகர் சிறிது தேனை உத்தரணி (சிறு கரண்டி)யில் எடுத்து பெருமாளின் வாய் அருகே கொண்டு செல்ல, அதனை பெருமாள் ஏற்றுக் கொண்டாராம். இதனால் இவருக்கு 'தேன் உண்ட பெருமாள்' என்ற பெயரும் உண்டு.

      சென்னை பாரிமுனையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள மாதவரத்தில் இக்கோவில் உள்ளது.

      • ராமா என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் அனுமன் இருப்பது நிச்சயம் என்பது ஐதீகம்.
      • கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

      அனுமன் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் பக்தர்கள் பலரும் விரதம் இருந்து ஆஞ்சநேயரை வழிபடுவார்கள்.

      ராமா என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் அனுமன் இருப்பது நிச்சயம் என்பது ஐதீகம். அனுமன் இருக்கும் இடத்தில் வெற்றியைத் தவிர வேறொன்றும் இல்லை என்பது நம்பிக்கையாகும்.

      அனுமன் ஜெயந்தியான இன்று விரதம் இருப்பவர்கள் அதிகாலை குளித்து, ராம நாமம் சொல்லி வணங்கி, உபவாசம் தொடங்க வேண்டும். அருகில் இருக்கும் ராமர் அல்லது அனுமன் கோவிலுக்குச் சென்று, அனுமனுக்குத் துளசி மாலை, வெற்றிலை மாலை சாத்தி வழிபடலாம். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

      அனுமன் ஜெயந்தி அன்று, அனுமனை வழிபடும்போது அவருக்கு பிடித்த நைவேத்தியப் பொருட்களை படைத்து வழிபட்டால் சிறப்பான பலன்களை பெறலாம்.

      துளசி மாலை - ராமபிரான் கடாட்சம் பெற்று நற்கல்வி, செல்வம் பெறலாம்.

      வெற்றிலை - விருப்பங்கள் நிறைவேறும்.

      மல்லிகை - கெட்ட சக்திகள் விலகும்.

      வடைமாலை - துன்பங்கள் நீங்கும்.

      சந்தனம் - மங்களகரமான வாழ்க்கை அமையும்.

      செந்தூரம் - அறிவும், ஆற்றலும் பெருகும்.

      வீட்டில் அனுமன் படம் வைத்து அஷ்டோத்திரங்கள் சொல்லி பூஜை செய்து, வெண்ணெய், உளுந்துவடை, பொரி, பழம், அவல், கடலை, சர்க்கரை, தேன், பானகம், இளநீர் போன்றவைகளை நைவேத்தியம் செய்யலாம். ஸ்ரீராமஜெயம் என எழுதுவதும் நல்ல பலன்களை அளிக்கும்.

      அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருந்தால் சகல மங்களங்களும் உண்டாகும், நினைத்த காரியம் கைகூடும், வாழ்க்கையில் நலம் பெருகும்.

      • ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பாகும்.
      • ஆஞ்சநேயரை வழிபட்டால் குழந்தை பேறு, புகழ், கல்வி, செல்வம், வீரம், உடல் ஆரோக்கியம் போன்றவற்றை பெறலாம்.

      ராமரின் தீவிர பக்தனான அனுமன் துணிச்சல், வலிமை, அறிவு, ஆரோக்கியம், புகழ், வீரம் ஆகிய அனைத்தையும் ஒன்றாக அமையப் பெற்றவர். மகாவிஷ்ணு ராமராக அவதாரம் எடுத்தபோது, மகாலட்சுமி சீதா தேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும் அவதரித்தனர். அதுபோல, ராமருக்கு உதவி செய்வதற்காக சிவபெருமான் அனுமனாக அவதரித்ததாக கூறப்படுகிறது. எனவே அனுமனை வழிபடுவதன் மூலம் சிவபெருமானையும், பெருமாளையும் சேர்த்து வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அனுமன் அவதரித்த தினமாக கொண்டாடப்படும் அனுமன் ஜெயந்தி நாளான இன்று அனுமன் பற்றிய சில தகவல்களை பார்ப்போம்.

      அனுமன் ஜெயந்தி மார்கழி மாதம் மூல நட்சத்திரமும், அமாவாசையும் சேர்ந்து வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மார்கழியில் மூல நட்சத்திரமும், அமாவாசையும் சேர்ந்து வராவிட்டால் அமாவாசையில் ஆஞ்சநேயர் ஜெயந்தியை கொண்டாடலாம். ஆனால் வட மாநிலங்களில் ஆஞ்சநேயர் ஜெயந்தி வைகாசி மாதத்தில் வளர்பிறையில் வரும் தசமி திதியன்று கொண்டாடப்படுகிறது.

      ஆஞ்சநேயர் என்றால் பளிங்கு போல் களங்கமற்ற மனம் உடையவன் என்று பொருள். பொன் நிறமுடையவன், அஞ்சனை மைந்தன், குண்டலங்களால் ஒளிவிடும் முகத்தை உடையவன், கரங்கூப்பி வணங்கி கொண்டு இருப்பவன் என்ற பொருள்களும் உண்டு.

      திருமாலின் வாகனமாக கருதப்படும் கருட பகவான் 'பெரிய திருவடி' என்று அழைக்கப்படுகிறார். அதுபோல ஆஞ்சநேயர் 'சிறிய திருவடி' என்று போற்றப்படுகிறார்.

      ஆஞ்சநேயரை எல்லா நாட்களிலும் வழிபடலாம். இருப்பினும் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பாகும்.

      ஆஞ்சநேயரை வழிபட்டால் குழந்தை பேறு, புகழ், கல்வி, செல்வம், வீரம், உடல் ஆரோக்கியம் போன்றவற்றை பெறலாம்.

      ஆஞ்சநேயரை மனதில் நினைப்பவர்கள் இந்த பிறவியில் சர்வ காரிய சித்தி பெற்று ஆரோக்கியத்துடன் வாழ்வர். மறு பிறவியில் ராமன் அருளால் முக்தியும் அடைவார்கள்.

      ஆஞ்சநேயர் வாலில் நவக்கிரகங்கள் இருப்பதாக ஐதீகம். எனவே ஆஞ்சநேயரின் வாலுக்கு 48 நாட்கள் சந்தனம், குங்குமம் வைத்து வழிபட்டு வந்தால் நவக்கிரக தோஷங்கள் நீங்கி, நன்மைகள் பல அடையலாம்.

      படிப்பில் பின்தங்கிய குழந்தைகளை 108 அல்லது 1008 முறை 'ஸ்ரீ ராமஜெயம்' எழுத வைத்து, அதை மாலையாக கோர்த்து ஆஞ்சநேயருக்கு அணிவித்தால், அந்த குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

      ஆஞ்சநேயரின் படத்தையும், ராமர் பட்டாபிஷேக படத்தையும் வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடலாம்.

      ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுபவர்களுக்கு, வெண்ணெய் கரைந்து போவதுபோல துன்பங்கள் கரைந்து போகும்.

      சனிக்கிழமைதோறும் அனுமன் கவசம் பாடி வழிபட்டால் எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள்.

      அனுமனுக்கு செந்தூரம் பூசி, வடை மாலை அணிவித்து, வெண்ணெய் சாற்றி, திராட்சை பழம் படைத்து, ஸ்ரீ ராம ஜெயம் எழுதி, அதை காகித மாலையாக அணிவித்து வழிபட்டால் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

      • ஆலயத்தில் கிருஷ்ணர், ருக்மணி சத்யபாமா சமேதராக அருள்பாலிக்கிறார்.
      • தொடர்ந்து ஐந்து செவ்வாய்க்கிழமைகள் இத்தலம் வந்து கனகாசல குமரனுக்கு விளக்கேற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

      ஈரோடு மாவட்டம் எழுமாத்தூரில் பிரசித்தி பெற்ற கனக்கிரி மலை உள்ளது. இந்த மலை உச்சியில் கனகாசல குமரன் கோவில் அமைந்துள்ளது. ஒரு முறை அகத்திய முனிவரின் அறிவுரைப்படி, புலிப்பாணி சித்தர் பத்தரை மாற்று தங்கத்துக்காக இந்த மலையை குடைந்தார். அப்போது முருகப்பெருமானின் அருளால் தங்கம் கிடைத்தது. ஆனால், அது ஏழரை மாற்றுத் தங்கமாக அவருக்கு கிடைத்தது. இதன் காரணமாக இந்த ஊர் 'ஏழரைமாற்றூர்' என்று அழைக்கப்பட்டது. பின்பு ஏழரைமாத்தூர்' என்றாகி, தற்போது மருவி எழுமாத்தூர்' என்றானது.

      இப்பகுதியில் இருந்த மக்கள் இந்த மலையின் சிறப்பையும், முருகப்பெருமானின் மகிமையும் அறிந்து, மலை உச்சியில் கோவில் எழுப்பினர். தங்கத்தை தந்த மலை என்பதால், இங்கு அருள்பாலிக்கும் முருகப்பெருமானுக்கு 'கனகாசல குமரன்' என்று திருநாமம் சூட்டி வழிபட தொடங்கினர்.

      ஆலயத்தில் கிருஷ்ணர், ருக்மணி சத்யபாமா சமேதராக அருள்பாலிக்கிறார். இக்கோவிலின் தல விருட்ச - மாக இலந்தை மரம் உள்ளது. இந்த இலந்தை மரத்தடியில் விநாயகப்பெருமான் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அவருக்கு முன்பாக சிறிய மூசிகம் காணப்படுகிறது. விநாயகரின் அருகில் ராகு, கேது மற்றும் ஏழு கன்னியர்கள் உள்ளனர். இங்குள்ள விநாயகரை வணங்கிவிட்டு, கனகாசல குமரனை மனதார வழிபட்டு வந்தால் பிரார்த்தனைகள் நிறைவேறும், நல்ல வாழ்க்கை அமையும், பொன்னும் பொருளும் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

      தொடர்ந்து ஐந்து செவ்வாய்க்கிழமைகள் இத்தலம் வந்து கனகாசல குமரனுக்கு விளக்கேற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள். மேலும் செவ்வாய்க்கிழமை தோறும் கோ பூஜை சிறப்புற நடைபெறுகிறது. அப்போது இந்தக் கோவிலைச் சேர்ந்த கன்றுக்குட்டிகள் தானாக மலையேறி வந்து, பூஜை செய்யும் காட்சியை பார்ப்பது வியப்பளிக்கிறது.

      ஆலயத்தில் சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், கந்தசஷ்டி, தைப்பூசம், விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை, சிவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

      ×