என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவண்ணாமலை கோவில்"

    • வனத்துறையினரிடம் அனுமதி பெறாமல் தடை மீறி மலை உச்சி வரை சென்று வந்துள்ளார்.
    • அவர் மலை ஏறி இறங்க மிகவும் சிரமம் அடைந்ததாகவும், இருள் சூழ்ந்து விட்டதால் மிகவும் அச்சம் அடைந்து விட்டதாக குறிப்பிட்டு உள்ளார்.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் கிரிவலம் செல்கின்றனர். இந்த மலை பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மலையில் ஏற வனத்துறையினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சின்னத்திரை நடிகையான அர்ச்சனா ரவிச்சந்திரன் என்பவர் ஓரிரு தினங்களுக்கு முன்பு வனத்துறையினரிடம் அனுமதி பெறாமல் தடை மீறி மலை உச்சி வரை சென்று வந்துள்ளார்.

     

    இதுகுறித்து அவர் தனது புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். மேலும் அவர் மலை ஏறி இறங்க மிகவும் சிரமம் அடைந்ததாகவும், இருள் சூழ்ந்து விட்டதால் மிகவும் அச்சம் அடைந்து விட்டதாக குறிப்பிட்டு உள்ளார். மேலும் அவர் மலையேற்றம் செய்கிறீர்கள் என்றால் சீக்கிரமாகவே தொடங்குங்கள், எப்போதும் சூரிய அஸ்தமனத்திற்கு முன் இறங்குவதை திட்டமிடுங்கள் என்று குறிப்பிட்டு உள்ளார்.

    மலைக்கு தடையை மீறி சென்று வந்த அவர் பிறரையும் மலை ஏற ஊக்குவிப்பது போன்று சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

    அந்த வகையில், தை மாதம் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை அருணாசலேஸ்வரர் கோவில் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தை மாதம் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரமாக வருகிற 1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.13 மணிக்கு தொடங்கி 2-ந்தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 4.45 மணியுடன் நிறைவடைகிறது.

    இந்த நேரங்களில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பவுர்ணமி கிரிவலத்தையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • நடராஜர் திருமஞ்சன கோபுரம் வழியாக மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
    • அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று ஆருத்ரா தரிசனம் விழா நடைபெற்றது.

    ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு இன்று அதிகாலை சிவகாமசுந்தரி தாயார் சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து அருணாசலேஸ்வரர் கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில் அலங்கார ரூபத்தில் எழுந்தருளிய சிவகாமசுந்தரி தாயார் சமேத நடராஜருக்கு அண்ணாமலை உச்சியில் 11 நாட்கள் எரிந்த மகா தீப கொப்பரையில் இருந்து எடுக்கப்பட்ட மகா தீப மை சாத்தப்பட்டது.

    பின்னர் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தபடி வந்த நடராஜர் திருமஞ்சன கோபுரம் வழியாக மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

    ஆங்கில புத்தாண்டின் முதல் பவுர்ணமி என்பதால், ஆருத்ரா தரிசனம் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கார்த்திகை தீப திருவிழாவிற்கு நெய் காணிக்கை கொடுத்த பக்தர்களுக்கு 2 ஆயிரத்து 668 உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்ட மகா தீப கொப்பரையில் இருந்து சேகரிக்கப்பட்ட மகா தீப மை விநியோகம் தொடங்கியது. சில தினங்களில் மகா தீப மை முழுமையாக வழங்கப்படும் என தெரிவித்தனர்.

    • கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவண்ணாமலை:

    மார்கழி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி வருகிற 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6.45 மணிக்கு பவுர்ணமி தொடங்கி, 3-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 4.43 மணிக்கு நிறைவு பெறுகிறது.

    இந்த நேரத்தில் மலையே சிவனாக வணங்கப்படும் 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள அண்ணாமலையை பக்தர்கள் வலம் வரலாம் என அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்

    • சந்திரசேகரர் தெப்பலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • அண்ணாமலையார் கிரிவலத்தை ஏராளமான பக்தர்கள் பார்த்து பரவசத்துடன் வழிபட்டனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவில் நேற்று முன்தினம் மகா தீபம் ஏற்றப்பட்டது.

    தீப தரிசன நாளில் அதிகாலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபமும், மாலையில் அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது.

    அதனை தொடர்ந்து நேற்று இரவு திருவண்ணாமலை அய்யங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

    சந்திரசேகரர் தெப்பலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று அதிகாலை உண்ணாமலை சமேத அண்ணாமலையார் கிரிவலம் சென்றார்.

    பவுர்ணமி தினத்தில் அண்ணாமலையார் கிரிவலம் வந்தது கூடுதல் சிறப்பாகும். அண்ணாமலையார் கிரிவலத்தை ஏராளமான பக்தர்கள் பார்த்து பரவசத்துடன் வழிபட்டனர்.

    கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட பிறகு மற்றும் பொங்கல் பண்டிகைக்கு பிறகு என அண்ணாமலையார் ஆண்டுக்கு 2 முறை கிரிவலம் வருவது வழக்கமாகும்.

    • 11 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
    • நாளை இரவு ஸ்ரீபராசக்தியம்மன் தெப்பல் உற்சவமும், நாளை மறுதினம் இரவு ஸ்ரீசுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெறுகின்றன.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவையொட்டி நேற்று மகாதீபம் ஏற்றப்பட்டது.

    அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தரும்.

    தினசரி மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் தீபம் மறுநாள் காலை 6 மணிக்கு குளிர்விக்கப்படும். மகாதீபத்தை வருகின்ற 13-ந் தேதி வரை தரிசிக்கலாம்.

    11 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இதைத் தொடர்ந்து ஆயிரம் கால் மண்டபத்தில் தீப கொப்பரை பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் நாளில் நடராஜ பெருமானுக்கு திலகமிடப்பட்ட பின்னர் பிரசாதமாக வழங்கப்படும்.

    நேற்று நள்ளிரவு பல்வேறு வாகனங்களில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீ உண்ணா முலையம்மன் சமேத ஸ்ரீஅருணாச லேஸ்வரர், ஸ்ரீபரா சக்தியம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் பவனி நடைபெற்றது.

    தீபத்திருவிழாவின் தொடர் நிகழ்வாக, இன்று இரவு ஸ்ரீசந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், நாளை இரவு ஸ்ரீபராசக்தியம்மன் தெப்பல் உற்சவமும், நாளை மறுதினம் இரவு ஸ்ரீசுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெறுகின்றன. 

    • இன்று மாலை 6 மணி அளவில் அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படவுள்ளது.
    • தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    வங்கக் கடலில் உருவான 'டிட்வா' புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னைக்கு 100 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், கார்த்திகை தீப விழா நடைபெறும் திருவண்ணாமலையில் தற்போது மிதமான மழை பெய்து வருகிறது

    மழை பெய்து வரும் நிலையில் திருவண்ணாமலையில் குடையுடன் பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். இன்று மாலை 6 மணி அளவில் அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படவுள்ளது.

    • திருவண்ணாமலை கோவில் மலையில் இன்று மாலை மகாதீபம் ஏற்றப்படுகிறது.
    • உற்சவர் அருணாசலேசுவரரும், உண்ணாமுலையம்மனும் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

    கார்த்திகை தீப திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலை கோவில் மலையில் இன்று மாலை மகாதீபம் ஏற்றப்படுகிறது.

    இந்த விழாவின்போது உற்சவர் அருணாசலேசுவரரும், உண்ணாமுலையம்மனும் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். வீதியுலா வரும்போது சுவாமிக்கும், அம்மனுக்கும் சாற்றப்படும் அலங்கார மாலைகள் காஞ்சிபுரத்தில் உள்ள ஜவுளி வியாபாரிகள் சங்கத்தினரே அனுப்பி வைத்து வருகிறார்கள். இந்த மாலைகளே சுவாமிகளுக்கு சாற்றப்படுகின்றது.

     

    இந்த நிலையில் காஞ்சிபுரம் காந்தி ரோட்டில் உள்ள ஜவுளிக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் 163-வது ஆண்டாக அலங்கார மாலைகளை திருவண்ணாமலை கோவிலுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சங்கத்தின் தலைவர் கே.கே.சிவகுமாரன் குத்து விளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக மாலைகள் அனைத்தும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு தீபாராதனைகள் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிக்கு சாத்தப்படும் மாலைகளை வணங்கி சென்றனர்.

    • அதிகாலை 4 மணியளவில் கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
    • கோவில் கொடிமரம் எதிரே உள்ள அகண்டத்தில் தீபம் ஏற்றப்படும்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரசித்து பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 29-ந் தேதி வெள்ளி தேரோட்டம் 30-ந் தேதி மகா தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது.

    இந்த நிலையில் தீபத்திருவிழா உற்சவத்தின் 10-வது நாளான இன்று மகா தீப பெருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது.

    விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை நேரங்களில் பிரகாரத்தில் சாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.

    10-ம் திருநாளான இன்று அதிகாலை அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை, சிறப்பு ஹோமம் ஆகியவை நடந்தது.

     

    இதைத்தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அர்த்த மண்டபத்தில் யாகம் வளர்த்து அதிலிருந்து பரணி தீபத்தை சிவாச்சாரியார்கள் ஏற்றினர்.

    பரணி தீபம் சன்னதியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு வைகுண்ட வாசல் வழியாக மகா தீப மலைக்கு காட்டப்பட்டது. பிறகு, பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் பரணி தீபம் மூலம் 5 விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது. ஒவ்வொரு சன்னதியாக கொண்டு செல்லப்பட்டு அங்கு தீபம் ஏற்றப்பட்டது.

    மூலவர் சன்னதி வழியாக உண்ணாமலை அம்மன் சன்னதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் "அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா" என்று கோஷம் விண்ணதிர எழுப்பி வணங்கினர்.

    இதைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணி அளவில் அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

    கோவில் வளாகத்தில் சரியாக மாலை 6 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் தனி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார். இதே நேரத்தில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

    அப்போது கோவில் கொடிமரம் எதிரே உள்ள அகண்டத்திலும் தீபம் ஏற்றப்படும். மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிக்கும். 40 கிலோ மீட்டர் வரை மகா தீப ஜோதி தரிசனத்தை பார்க்க முடியும்.

    பரணி தீபத்தை முன்னிட்டு 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோவில் வளாகம் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோவில் வளாகத்தில் செய்யப்பட்டு இருந்த மின்விளக்கு அலங்காரமும் பக்தர்கள் மனதை வெகுவாக கவர்ந்தது.

    விழாவை முன்னிட்டு சம்பந்த விநாயகருக்கு இன்று தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    பரணி தீபம் ஏற்றப்பட்டதையடுத்து பக்தர்கள் கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலையில் இன்று அதிகாலை வரை மழை பெய்ததால் காலையில் பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது.

    நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே இருந்தது. கிரிவலப்பாதையில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    24 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 4764 சிறப்பு பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது. இதேபோல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. 130 இடங்களில் கார் நிறுத்த இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆந்திர முன்னாள் மந்திரி நடிகை ரோஜா, நீதியரசர் மகாதேவன், ஐ.ஜி. அஸ்ரா கார்க், டி.ஐ.ஜி.தர்மராஜன், கலெக்டர் தர்ப்பகராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், முன்னாள் நகர மன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், கோவில் தக்கார் மீனாட்சி சுந்தரம், டாக்டர் சேஷாத்ரி, அ.தி.மு.க. மாமன்ற உறுப்பினர் டாக்டர் பழனி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கொட்டும் பனி மற்றும் சாரல் மழையிலும் பரணி தீப தரிசனம் கண்டு மனம் உருக வழிபட்டனர்.

    வழக்கத்தைவிட இந்த ஆண்டு தீபத்திருவிழா கூடுதல் உற்சாகத்துடன் நடக்கிறது. இதுவரை எந்த ஆண்டும் இல்லாத அளவில் மகா தீபத்தை தரிசிக்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர். 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மகா தீபத்தை தரிசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சிவபெருமானின் நெருப்பு வடிவத்தை கண்ட தேவர்கள் அனைவரும், அவரை இத்தலத்திலேயே தங்கும்படி வேண்டினர்.
    • கார்த்திகைத் தீபத் திருநாள், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வெகுவிமரிசையாக நடைபெறும்.

    கார்த்திகை தீபம் என்றாலே நம் நினைவுக்கு வருவது திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மகாதீபம் தான். ஆன்மிக பூமி, சித்த பூமி, நினைத்தாலே முக்தியை தரும் அற்புதத் தலம் என பல்வேறு சிறப்புகளை கொண்டது, உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருத்தலம்.

    திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இந்த மகாதீபத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். திருவண்ணாமலை மகாதீபத்தை தரிசிப்பது மகா புண்ணியம் என்பார்கள். இந்த தீபத்தை தரிசிப்பவர்களின் பாவங்கள் நீங்கும், முக்தி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த ஆண்டுக்கான மகாதீபம் இன்று ஏற்றப்படுகிறது.

    திருக்கார்த்திகை திருநாள் பற்றி பல புராணக் கதைகள் கூறப்படுகின்றன. இருப்பினும், சிவபெருமான் ஜோதி வடிவாக மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் காட்சி அளித்த நாளே, திருக்கார்த்திகை திருநாள் எனப் பலராலும் போற்றப்படுகிறது.

    ஒரு முறை மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும் 'யார் பெரியவர்?' என்ற போட்டி ஏற்பட்டது. இதற்கு முடிவு காண, சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். அப்போது சிவபெருமான் "என்னுடைய முடியையும், அடியையும் யார் முதலில் கண்டு வருகிறார்களோ, அவர்களே பெரியவர்" என்று பதிலளித்தார். பின்னர், சிவபெருமான் விண்ணுக்கும் மண்ணுக்குமாக மிகப்பெரிய நெருப்புப் பிழம்பாக மாறி நின்றார்.

    இதையடுத்து பிரம்மதேவர், அன்னப் பறவை வடிவம் கொண்டு, சிவபெருமானின் முடியைக் காணவும், திருமால் வராக (பன்றி) வடிவம் எடுத்து ஈசனின் அடியைக் காணவும் புறப்பட்டனர். ஆனால் பல கோடி ஆண்டுகள் ஆகியும் அவர்களால் ஈசனின் அடியையும், முடியையும் காண முடியவில்லை. திருமால், தன்னால் அடியைக் காண இயலவில்லை என்பதை ஈசனிடம் தெரிவித்தார்.

    ஆனால் பிரம்மனோ, தான் ஈசனின் முடியைக் கண்டுவிட்டதாக பொய் கூறியதுடன், அதற்கு சாட்சியாக சிவனின் தலையில் இருந்து விழுந்த தாழம்பூ ஒன்றையும் அழைத்து வந்திருந்தார். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், பிரம்மனுக்கு பூலோகத்தில் கோவில் இருக்காது என்றும், தாழம்பூவை இனி சிரசில் சூடமாட்டேன் என்றும் சாபம் அளித்தார்.

    சிவபெருமானின் நெருப்பு வடிவத்தை கண்ட தேவர்கள் அனைவரும், அவரை இத்தலத்திலேயே தங்கும்படி வேண்டினர். இதையடுத்து சிவபெருமான் மலையாக உருமாறினார். பின்பு வழிபடுவதற்கு ஏற்றவாறு சுயம்பு லிங்கமாக மலையடிவாரத்தில் தோன்றினார். அந்த சுயம்புலிங்கத்தை மையமாக வைத்தே, தற்போதைய அண்ணாமலையார் ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது.

    சிவபெருமான் மலையாக வீற்றிருக்கும் காரணத்தால், திருவண்ணாமலை சிறப்புக்குரியதாக இருக்கிறது. பல யுகங்களை தாண்டி நிற்கும் இந்த மலையில் முனிவர்களும், சித்தர்களும் வலம் வந்து வழிபட்டிருக்கிறார்கள். சிவபெருமான் அக்னி ஜோதியாக தேவர்களுக்கு காட்சியளித்த நாளே, திருக்கார்த்திகை திருநாள் என்று கூறப்படுகிறது. எனவே கார்த்திகைத் தீபத் திருநாள், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வெகுவிமரிசையாக நடைபெறும்.

    கார்த்திகை தீபத் திருநாள் அன்று, அதிகாலையில் அண்ணாமலையார் சன்னிதியில் பரணி தீபம் ஏற்றப்படும். அந்த தீபத்தில் இருந்து மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றுவார்கள். பின்னர் அந்த தீபங்களை ஒன்றாக்கி, அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். பரம்பொருளான சிவபெருமான் பல வடிவங்களாக இருக்கிறாா், அவரே பரம்பொருள் என்ற ஒருவராகவும் உள்ளார் என்பதே இதன் தத்துவம்.

    பின்னர் அண்ணாமலையார் அருகில் வைக்கப்பட்ட தீபம் மலைக்கு கொண்டு செல்லப்படும். மாலையில் கோவில் கொடிமரம் அருகில் உள்ள மண்டபத்திற்கு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள்வர். அப்போது மூலஸ்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வெளியே வருவார். இந்த ஒருநாள் மட்டுமே அர்த்தநாரீஸ்வரர் தரிசனத்தைக் காண முடியும். மற்ற நாட்களில் அவர் சன்னிதியை விட்டு வெளியே வருவதில்லை. அவர் முன்பாக அகண்ட தீபம் ஏற்றப்படும்.

    அதன்பிறகே, 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். தீபம் ஏற்றுவதற்காக, 7½ அடி உயர கொப்பரையில், ஆயிரம் கிலோ காடா துணி, 3 ஆயிரம் கிலோ நெய், 2 கிலோ கற்பூரம் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. மகா தீபம் ஏற்றும் உரிமை, பர்வதராஜ குலத்தினருக்கு உரியது. இந்த மகா தீபம், தொடர்ச்சியாக 11 நாட்கள் எரியும். மலை உச்சியில் ஏற்றப்படும் இந்த தீபமானது, மலையை சுற்றியுள்ள சுமார் 30 கிலோமீட்டர் தூரத்துக்கும் தெரியும் என்கிறார்கள். எரிந்த தீபத்தில் இருந்து எடுக்கப்படும் கருப்பு நிற மையானது, ஆருத்ரா தரிசனத்தின்போது பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும்.

    • கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் இங்குள்ள மகா தீபமலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். மேலும் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.

    அதன்படி, இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 7.58 மணிக்கு தொடங்குகிறது. வெள்ளிக்கிழமை காலை 5.37 மணிக்கு முடிகிறது. அந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • திருவண்ணாமலை நகரில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் வரை மகாதீபம் தெரியும்.
    • மகா தீபம் ஏற்ற 4 ஆயிரத்து 500 கிலோ நெய் பயன்படுத்தப்படும்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மகாதீப தரிசன விழா நாளை நடைபெற உள்ளது.

    அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். நாளை அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும்.

    மாலை 6 மணிக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு ஆனந்த நடனத்துடன் எழுந்தருள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

    நாளை முதல் 11 நாட்களுக்கு அண்ணாமலை உச்சியில் சிவபெருமான் தீப்பிழம்பாய் காட்சி தருவார். திருவண்ணாமலை நகரில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் வரை மகாதீபம் தெரியும்.

    அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் மகா தீப கொப்பரைக்கு இன்று அதிகாலை அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    அதனை தொடர்ந்து 2 ஆயிரத்து 668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சிக்கு மகாதீப கொப்பரை கொண்டு செல்லப்பட்டது. மகா தீபம் ஏற்ற 4 ஆயிரத்து 500 கிலோ நெய் பயன்படுத்தப்படும்.

    மலையே சிவனாக வணங்கப்படும் அண்ணாமலையை வலம் வருவதற்காகவும், மகா தீபத்தை தரிசிக்கவும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.

    மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள், சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. பக்தர்களின் பாதுகாப்பிற்காக 15 ஆயிரம் போலீசார் திருவண்ணாமலையில் முகாமிட்டுள்ளனர்.

    கிரிவலப்பாதையில் போலீசார் சார்பில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    அவசர கால உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு மீட்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. மின்சார வாரியம் சார்பில் தடையில்லா மின்சாரம் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    மாநகராட்சி நிர்வாகம் சார்பில் திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவல பாதையை தூய்மையாக பராமரிக்க ஆயிரத்து 200 தூய்மை காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    தீபத்திருவிழாவை முன்னிட்டு கிரிவலப்பாதை அரசு கலைக்கல்லூரி அருகில் மாட்டு சந்தை அமைக்கப்பட்டுள்ளது. மாட்டு சந்தையில் மாடுகள், குதிரைகள், ஒட்டகம் ஆகியவை விற்பனைக்காக நிறுத்தப்பட்டுள்ளது.

    தீப தரிசனம் காண திருவண்ணாமலை நகருக்கு வரும் 9 பிரதான சாலைகள் வழியாகவும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

    ×