search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rain"

    • போக்குவரத்து சாலைகளில் மரங்கள் விழுந்தும், மண்சரிவு ஏற்பட்டும் வருகிறது.
    • மலைப்பாதை பகுதியில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றன.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த ஒருவாரமாக ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

    இதனால் அங்குள்ள போக்குவரத்து சாலைகளில் மரங்கள் விழுந்தும், மண்சரிவு ஏற்பட்டும் வருகிறது. மேலும் ஆற்றில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சூறாவளி காற்றுடன் சாரல் மழை பெய்வதால் அங்கு கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே குன்னூர் அடுத்த உபதலை-பழத்தோட்டம் சாலையில் நேற்று ராட்சத மரம் மின்கம்பி மீது விழுந்ததால் அந்த வழித்தடத்தில் உடனடியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் மற்றும் தீயணைப்புத்துறை ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்து மின்வாளால் சாலையில் கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. மேலும் அங்குள்ள பெரும்பாலான விளைநிலங்களில் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

    ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை மழையின் தாக்கம் சற்று குறைந்து மேகமூட்டம், பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பாதை பகுதியில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றன.

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை முதல் 26-ந் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    தென் தமிழக கடலோரம், வங்கக்கடலில் அதிகபட்சமாக 65 கி.மீ. வரை காற்று வீசும். 23-ந்தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • மழை வேண்டி ஒப்பாரி வைக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
    • மழைச்சோறு மற்றும் நவதானிய உணவுகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை அடுத்த பெருந்தொழுவு ஊராட்சி கவுண்டம்பாளையத்தில் மழைச்சோறு எடுத்து வழிபாடு நடத்தும் நிகழ்வு நடைபெற்றது.

    இதையொட்டி கவுண்டம்பாளையத்தில் உள்ள தேவேந்திர சுவாமி திடலில் இருந்து பெண்கள் கோபித்துக் கொண்டு மழை இல்லாததால் நாங்கள் ஊரை விட்டு செல்கிறோம் என வெங்கமேடு பகுதிக்கு சென்றனர்.

    அவர்களை அந்த ஊரை சேர்ந்த கன்னிப்பெண்கள் கலசம், நவதானியங்களை எடுத்துக்கொண்டு சென்று அவர்களுக்கு படையிலிட்டு இனிமேல் பஞ்சம் வராது, ஊருக்கு திரும்பி வாருங்கள் என அழைத்து வந்தனர்.

    அதன்பின்னர் ஒவ்வொரு வீடாக மழைச்சோறு பிச்சை எடுக்கும் நிகழ்வும், மழை வேண்டி ஒப்பாரி வைக்கும் நிகழ்வும் நடைபெற்றது. பின்னர் அந்த மழைச்சோறு மற்றும் நவதானிய உணவுகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அந்த ஊரை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு மழைச்சோறு எடுத்து வழிபாடு நடத்தினர். பின்னர் ஊருக்கு வெளியே உருவ பொம்மை கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்பட்டது.

    • காற்றழுத்த தாழ்வு பகுதி பூரி, கோபால்பூர் மற்றும் பாரதீப் ஆகிய பகுதிகளுக்கு அருகில் நிலை கொண்டுள்ளது.
    • தெலுங்கானா, மத்திய மகாராஷ்டிரா, கடலோர கோவா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி செவ்வாய்க்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஒடிசாவை நோக்கி நகர்ந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பூரி, கோபால்பூர் மற்றும் பாரதீப் ஆகிய பகுதிகளுக்கு அருகில் நிலை கொண்டுள்ளது. மேலும் வடமேற்கு-மேற்கு பகுதிகளை நோக்கி மெதுவாக நகர்கிறது.

    இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வடமேற்கு நோக்கி நகர்ந்து ஒடிசா கடற்கரையை பூரிக்கு அருகில் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதன்பிறகு மேற்கு-வடமேற்கு நோக்கி ஒடிசா - சத்தீஸ்கர் முழுவதும் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கும்.

    காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தெலுங்கானா, மத்திய மகாராஷ்டிரா, கடலோர கோவா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில், ஒடிசா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், கடலோர ஆந்திரா, கட்ச் மற்றும் சவுராஷ்டிரா ஆகிய பகுதிகளில் இன்றும் நாளையும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • தொடர்ந்து சில நாட்களாக நீலகிரி மற்றும் சுற்று வட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
    • பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    நீலகிரி மற்றும் சுற்று வட்ட மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

    கனமழை காரணமாக நீலகிரியின் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுக்காக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    நீலகிரி மாவட்டத்தில் இன்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

    • காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு.
    • காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை ஒடிசா கடற்கரை அருகே கடக்க வாய்ப்பு.

    வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாறியது.

    இந்த ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஒடிசா கடற்கரை அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு அமையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்ன், தூத்துக்குடி துறை முகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கன முதல் அதி கனமழையும், கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வரும் 21 முதல் 25 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    தமிழகத்தில் இன்றும் நாளையும் 30-40 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசும்.

    தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை காரைக்காலிலும் 25-ந்தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

    தென் தமிழக கடலோரம், குமரிக்கடல், வங்கக்கடலில் 23-ந்தேதி வரை அதிகபட்சமாக 65 கி.மீ. வரை காற்று வீசும். காற்று வீசும் பகுதிகளில் 23-ந்தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • அணையின் உள்பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை ஆகாயத்தாமரை முழுவதும் ஆக்கிரமித்துள்ளது.
    • அணையில் இருந்து திறந்து விடப்பட்ட வெள்ளம் நொய்யல் ஆற்றில் ஆர்ப்பரித்து சென்றது.

    சென்னிமலை:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பரவலாக பெய்து வருகிறது.

    குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை, நீலகிரி, கோவை மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துவருவதை அடுத்து கோவை, திருப்பூர் வழியாக வரும் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.17-ம் தேதி காலை நிலவரப்படி ஒரத்துப்பாளையம் அணையில் தண்ணீர் தேக்கம் இல்லை. அப்போது அணைக்கு வினாடிக்கு 59 கன அடி தண்ணீர் மட்டுமே நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 59 கன அடி தண்ணீர் நொய்யல் ஆற்றில் திறந்து விடப்பட்டது. அப்போது அணைக்கு வந்த தண்ணீரில் இருந்த உப்புத்தன்மை (டிடிஎஸ்) 1640 இருந்தது.

    இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை, நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருவதால் நேற்று முன்தினம் நள்ளிரவு நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. நேற்று காலை நிலவரப்படி அணையில் 9 அடி தண்ணீர் தேங்கி நின்றது. அணையின் உள்பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை ஆகாயத்தாமரை முழுவதும் ஆக்கிரமித்துள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 393 கன அடி தண்ணீர் நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 229 கன அடி தண்ணீர் நொய்யல் ஆற்றில் வெளியேற்றப்பட்டது. நேற்று பகலில் மீண்டும் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அப்போது அணைக்கு வினாடிக்கு 676 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 418 கன அடி தண்ணீர் நொய்யல் ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

    அணையில் இருந்து திறந்து விடப்பட்ட வெள்ளம் நொய்யல் ஆற்றில் ஆர்ப்பரித்து சென்றது. நேற்று மாலை அணையில் 11.6 அடி தண்ணீர் தேங்கி நின்றது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் இன்னும் ஒரிரு நாளில் அதிக அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நொய்யல் ஆற்றை யாரும் கடந்து செல்ல வேண்டாம் என்று பொது பணித்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    • மரம் மின்கம்பம் மீது விழுந்ததால் மின் வினியோகமும் பாதிக்கப்பட்டது.
    • ஊட்டியில் பல்வேறு குடியிருப்புகளுக்கு அருகே தடுப்புச்சுவர்கள் இடிந்து விழுந்தன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

    நேற்றும் கூடலூர், பந்தலூர், ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    மாவட்டம் முழுவதும் பரவலாகவே அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. தொடர் மழையால் நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக நீலகிரியில் பல இடங்களிலும் மரங்கள் முறிந்து விழுந்து வந்தன.

    நேற்று பெய்த மழைக்கும் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

    ஊட்டியில் இருந்து முத்தோரை பாலடா செல்லும் சாலையில் முள்ளிக்கொரை பகுதியில் அடுத்தடுத்து 5 மரங்கள் சாய்ந்து நடுரோட்டில் விழுந்தன.

    அந்த சமயம் அந்த வழியாக வந்த கார் ஒன்று மரங்களுக்கு இடையே சிக்கி கொண்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மரங்களை வெட்டி அகற்றினர். அதனை தொடர்ந்து கார் அங்கிருந்து சென்றது. மேலும் அந்த வழியாக வந்த மற்றொரு வாகனத்தின் மீதும் மரம் விழுந்தது.


    ஊட்டியில் இருந்து பிங்கர் போஸ்ட், கால்ப் லிங்ஸ் செல்லும் சாலையில் மரம் விழுந்தது. மரம் மின்கம்பம் மீது விழுந்ததால் மின் வினியோகமும் பாதிக்கப்பட்டது.

    ஊட்டி, குந்தா உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சாலையோரங்களில் நின்றிருந்த சிறு, சிறு மரங்கள் பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு முறிந்து ரோட்டில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நெடுஞ்சாலைத் துறையினர் அந்த மரங்களை உடனுக்குடன் வெட்டி அகற்றி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    ஊட்டி தாசபிரகாஷ் சாலையிலும் ராட்சத மரம் முறிந்து நடுரோட்டில் விழுந்தது. அத்துடன் அந்த வழியாக சென்ற மின் கம்பிகள் மீது விழுந்ததில் அவை அறுந்தன.

    உடனடியாக அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு, ஊழியர்கள் விரைந்து வந்து அதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    கூடலூரில் இருந்து மைசூரு மற்றும் கேரளா செல்லும் சாலைகளில் பல்வேறு இடங்களில் அதிகளவில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்பட்டது.

    ஓவேலி, தேவர்சோலை சுற்றுவட்டாரத்தில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் துண்டிக்கப்பட்டு, அந்த பகுதிகள் இருளில் மூழ்கின.

    கூடலூர்-மைசூர் சாலையில் மாக்கமூலா பகுதியில் பலத்த காற்றுக்கு சாலையின் குறுக்கே மூங்கில் புதர் விழுந்தது.

    நாடுகாணி வனச்சரக எல்லைக்குட்பட்ட புளியம்பாறை கோழிக்கொல்லியில் சாலையோரம் இருந்த மரங்கள் கனமழையால் முறிந்து சாலையில் விழுந்தது.

    பிதர்காடு வனச்சரகத்திற்குட்பட்ட பாட்டவயல் சாலையில் அய்யங்கொல்லி பகுதியில் மரம் விழுந்தது. இந்த பகுதிகளில் தீயணைப்பு துறையினர் விரைந்து மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    பந்தலூர் அத்திகுன்னாவில் இருந்து அத்திமாநகர் செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டதால் மரமும் முறிந்து விழுந்தது. அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து மரத்தை வெட்டி அகற்றினர்.

    ஊட்டியில் பல்வேறு குடியிருப்புகளுக்கு அருகே தடுப்புச்சுவர்கள் இடிந்து விழுந்தன. ஒரு சில பகுதிகளில் வீடுகளின் சுவரும் இடிந்தது.

    உப்பட்டி, சேலக்குன்னாவில் வசித்து வரும் கூலித்தொழிலாளி சுசீலா என்பவரின் வீட்டின் பக்கவாட்டு சுவர், குந்தலாடி பூதானகுன்னுவில் உள்ள உதயகுமாரின் வீடு, பந்தலூர் பகுதியில் ஒரு வீடும் மழைக்கு சேதம் அடைந்தது.

    மழையுடன், கடும் குளிரும் நிலவி வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

    • தொடர் மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
    • ஹாவேரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடலோர மாவட்டங்கள், மலை மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள நீர்நிலைகளும் நிரம்பி வருகிறது. தொடர் மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    ஹாவேரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் வீடுகளின் சுவர்கள் ஈரப்பதமாக காணப்படுகிறது. ஹாவேரி மாவட்டம் சவனூர் தாலுகா காரடகி அருகே உள்ள மாதப்பூர் என்ற கிராமத்தை சேர்ந்த சன்னம்மா தொட்டபசப்பா ஹரகுனி (35) என்பவர் தனது குழந்தைகள் அமுல்யா முத்தப்பா ஹரகுனி (2), அனுஸ்ரீ முத்தப்பா ஹரகுனி ஆகியோருடன் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். இன்று அதிகாலை பெய்த மழையின் காரணமாக அவர்களது வீட்டின் சுவர் இடிந்து தூங்கி கொண்டு இருந்த அவர்கள் மீது விழுந்தது.

    இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி தாய் மற்றும் 2 குழந்தைகளும் பரிதாமாக இறந்தனர். இதுப்பற்றி தெரியவந்ததும் போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களின் உடல்களை மீட்டனர்.

    • மத்திய மற்றும் அதையொட்டிய வடக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலையில் உருவானது.
    • தமிழகத்தில் இன்று ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சிமலை மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்கிறது.

    திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் 24-ந்தேதி வரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையில் மத்திய மற்றும் அதையொட்டிய வடக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலையில் உருவானது. இது வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடா ஒடிசா மற்றும் அதையொட்டிய வடக்கு ஆந்திரா கடற்கரையில் நிலவி வருகிறது.

    இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவுக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். அதன்பிறகு அது தொடர்ந்து வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை ஒடிசா கடற்கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் இன்று ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

    நீலகிரியில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

    கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • சென்னையில் 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    நீலகிரி மாவட்டத்துக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் ஒரு சில பகுதிகளில் இன்று மிக கனமழை முதல் அதிகனமழை பெய்யும்.

    திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவையில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    நீலகிரியில் நாளை மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்.

    தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை காரைக்காலிலும் 24-ந்தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னையில் 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னையில் 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸ் பதிவாகும்.

    தென் தமிழக கடலோரம், குமரிக்கடல், மத்திய, தென் வங்கக்கடலில் 22-ந்தேதி வரை அதிகபட்சமாக 65 கி.மீ. வரை காற்று வீசும்.

    காற்று வீசும் பகுதிகளில் 22-ந்தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    ×