search icon
என் மலர்tooltip icon

  உலகம்

  • காரில் சென்றபோது அவரை மர்ம நபர்கள் சுட்டுக்கொன்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
  • சிராஜ் அந்தில் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சி நடந்து வருகிறது.

  ஒட்டாவா:

  அரியானா மாவட்டம் சோனிபட் மாவட்டத்தை சேர்ந்தவர் சிராஜ் அந்தில் (வயது 24). இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு உயர்படிப்புக்காக கனடா நாட்டுக்கு சென்றார். அங்கு அவர் எம்.பி.ஏ. படித்து முடித்த பின் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

  சிராஜ் அந்தில் கனடா நாட்டின் வான்கூர் நகரில் வசித்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது சொகுசு காரில் வெளியில் சென்றார்.

  இந்த நிலையில் அவர் காருக்குள் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக கனடா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

  இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

  காரில் சென்றபோது அவரை மர்ம நபர்கள் சுட்டுக்கொன்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருந்தபோதிலும் அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  சிராஜ் அந்தில் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சி நடந்து வருகிறது. இதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

  சிராஜ் அந்தில் சகோதரர் ரோஹித் கூறும்போது எனது அண்ணனுக்கு யாருடனும் பகை கிடையாது. எல்லோரிடமும் அவர் பாசமாக தான் பழகுவார். அவருடன் நான் தினமும் செல்போனில் பேசுவேன். சம்பவத்தன்று இரவு கூட நான் பேசினேன். அதற்குள் இப்படி நடந்து விட்டது என சோகத்துடன் தெரிவித்தார்.

  • இஸ்ரேல் தொடர்புடைய கப்பல் என ஈரான் சிறைப்பிடித்துள்ளது.
  • சிறைப்பிடித்த கப்பலில் 17 இந்தியர்கள் உள்ளனர்.

  சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியதில் இரண்டு முக்கிய ஈரான் தளபதிகள் கொல்லப்பட்டனர். இதனால் ஈரான் பயங்கர கோபம் அடைந்தது. இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது. தெரிவித்ததுபோல் நேற்று டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது.

  முன்னதாக ஓர்முஸ் ஜலசந்தியில் போர்ச்சுக்கல் நாட்டு கொடியுடன் சென்ற சரக்கு கப்பலை ஈரான் ராணுவத்தின் கப்பற்படை வீரர்கள் சுற்றிவளைத்து சிறைப்பிடித்தனர். இந்த கப்பலில் இந்தியா, பிலிப்பினோ, பாகிஸ்தான், ரஷியா மற்றும் எஸ்டோனியா நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் இருந்தனர். இவர்களில் 17 பேர் இந்தியர்கள்.

  இவர்களை மீட்பதற்கு இந்திய வெளியுறவுத்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஈரானின் வெளியுறவுத்துறை மந்திரி அமிர்-அப்டோலாஹியன் உடன் டெலிபோன் மூலம் பேசினார்.

  அப்போது சிறைப்பிடித்து வைத்துள்ள கப்பலில் உள்ள 17 இந்தியர்களை உடனடியாக விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

  "சிறைப்பிடித்துள்ள கப்பல் தொடர்பான விவரங்களை நாங்கள் பின்பற்றி வருகிறோம். கப்பலில் உள்ள இந்தியர்களை இந்திய அரசின் பிரதிநிதிகளுடன் பேசுவதற்கு விரைவில் அனுமதிப்போம்" என ஈரான் மந்திரி தெரிவித்தார்.

  அப்போது இந்தியர்கள் குறித்து ஜெய்சங்கர் தனது கவலையை தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக ஈரானிடம் உதவி கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.

  • கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் சிரியா மீது நடத்திய தாக்குதலில் ஈரான் தூதரகம் பலத்த சேதம் அடைந்தது.
  • இரண்டு தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் சூளுரைத்திருந்தது.

  இஸ்ரேல் ராணுவம் சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அவர்களது இருப்புகளை கண்டறிந்து துல்லியமாக தாக்கி அழித்து வருகிறது. அந்த வகையில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியபோது எதிர்பாராத விதமாக சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் தாக்கப்பட்டது.

  இதில் இரண்டு ஈரான் தளபதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தெரிவித்திருந்த நிலையில், நேற்று ஈரான் நேரடியாக டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. 300-க்கும் மேற்பட்ட டிரான்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது.

  இஸ்ரேல் ஏற்கனவே வான் எல்லைகளில் எதிரி ஏவுகணைகள் தாக்கி அழிக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. மேலும் ஈரான் தாக்குதல் நடத்தும் என எதிர்பார்த்ததால் அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவி செய்தது.

  இதனால் நேற்று நூற்றுக்கணக்கான ஏவுகணைகள், டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும் இஸ்ரேல் சிறப்பாக எதிர்கொண்டு தடுத்ததாக கூறப்படுகிறது. இஸ்ரேலின் பாதுகாப்பு நடவடிக்கைக்கு தாங்கள் உதவியாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஈரானின் 80 பாலிஸ்டிக் ஏவுகணைகளை தாக்கி அழித்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

  ஈரான் மற்றும் ஏமனில் இருந்து ஏவப்பட்ட குறைந்தபட்சம் ஆறு பாலிஸ்டிக் ஏவுகணைகள், 80-க்கும் மேற்பட்ட ஒரு வழி தாக்குதல் ஆளில்ல ஏரியல் வாகனங்கள் (OWA UAV) ஆகிய தடுத்து அழிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

  மேலும், ஈரானின் தொடர்ச்சியான இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையிலான, மோசமான மற்றும் பொறுப்பற்ற நடத்தை பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் அமெரிக்க மற்றும் கூட்டணிப் படைகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளது.

  • 30 சதவீத மூளையை பகிர்ந்தவாறு பிறந்த இவர்கள் உயிர்பிழைப்பது கடினம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
  • இருவரும் பட்டப்படிப்பு படித்து வெவ்வேறு துறைகளில் வேலை பார்த்தவர்கள்.

  வாஷிங்டன்:

  அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்தவர்கள் லோரி மற்றும் டோரி என்கிற ஜார்ஜ் (வயது 62). கடந்த 1961-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி அன்று பென்சில்வேனியா மாகாணத்தில் இரட்டை சகோதரிகளாக ஒட்டிபிறந்தனர்.

  பகுதியளவு இணைந்த மண்டை ஓடுகள், முக்கிய ரத்த நாளங்கள் மற்றும் 30 சதவீத மூளையை பகிர்ந்தவாறு பிறந்த இவர்கள் உயிர்பிழைப்பது கடினம் என டாக்டர்கள் தெரிவித்தனர். இருப்பினும் 62 ஆண்டுகள் வாழ்ந்த இவர்கள் உடல்நிலை கோளாறு காரணமாக தற்போது உயிரிழந்தனர்.

  இருவரும் பட்டப்படிப்பு படித்து வெவ்வேறு துறைகளில் வேலை பார்த்தவர்கள். மேலும் கடந்த 2007-ம் ஆண்டில் உலகின் மிக வயதான ஒட்டிபிறந்த இரட்டை சகோதரிகள் என்ற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரர்களானார்கள். இவர்களுடைய இறப்புக்கு கின்னஸ் நிறுவனம் உள்பட உலக அமைப்புகள் இரங்கல் தெரிவித்து வருகின்றன.

  • சூ மெங் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் சீனா இன்டர்நேஷனல் போட்டியில் 4-வது இடத்தை பிடித்த அழகி ஆவார்.
  • திருமண செய்தி இணையத்தில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் சூ மெங்கை விமர்சித்து பதிவிட்டனர்.

  சீனாவை சேர்ந்த பிரபல ஓவியர் பேன் ஜெங். 85 வயதான இவருக்கு 3 முறை திருமணம் ஆகி உள்ளது. மூன்றாவது மனைவியான ஜாங் குய்யுன் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார்.

  இந்நிலையில் பேன் ஜெங் அந்த நாட்டை சேர்ந்த முன்னாள் மாடல் அழகியான சூ மெங் (வயது 35) என்பவரை நான்காவதாக திருமணம் செய்து கொண்டதாக அறிவித்திருப்பது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி உள்ளது.

  பேன் ஜெங் ஏற்கனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அதில் இருந்து மீண்டார். அவரது ஓவியங்கள் ஒவ்வொன்றும் பல கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. சீனாவின் கோடீஸ்வரர்களில் ஒருவராக திகழும் பேன் ஜெங் சமீபத்தில் ஓவியம் வரைவதை போன்ற ஒரு படத்தையும், நீண்ட கருப்பு முடியுடன் ஒரு இளம்பெண் அதனை பார்ப்பது போன்ற படத்தையும் இணையத்தில் வெளியிட்டிருந்தார். அதனுடன் அவரது பதிவில், சூ மெங்கின் உன்னிப்பான கவனிப்பு என்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் முழுமையாக மீட்டெடுக்க உதவியது என்று கூறி இருந்தார்.

  சூ மெங் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் சீனா இன்டர்நேஷனல் போட்டியில் 4-வது இடத்தை பிடித்த அழகி ஆவார். பல சர்வதேச நிறுவனங்களுக்கு சர்வதேச பிராண்ட் மாடலாக இருந்த இவர் தற்போது தன்னை விட சுமார் 50 வயது அதிகமான கோடீஸ்வரரை திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமண செய்தி இணையத்தில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் சூ மெங்கை விமர்சித்து பதிவிட்டனர்.

  • இத்தாலியில் பணம் செலுத்தியும் அல்லது இல்லாமலும் வாடகைத்தாய் முறை சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
  • ல் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்று கொள்பவர்களுக்கு தண்டனை விவரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

  ரோம்:

  இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியோ மெலோனி, வாடகைத் தாய்மை முறை மனிதாபிமானமற்றது என தெரிவித்துள்ளார். தலைநகர் ரோமில் இளைஞர்களுக்கான மாநாடு நடந்தது.

  இதில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது, "வாடகைத் தாய் ஒரு மனிதாபிமானமற்ற நடைமுறை என நான் நம்புகிறேன். இது சர்வதேச குற்றமாக ஏற்றுக்கொள்ளப்படும் வரை நான் இதற்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்" என்றார்.

  ஏற்கனவே இத்தாலியில் பணம் செலுத்தியும் அல்லது இல்லாமலும் வாடகைத்தாய் முறை சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்று கொள்பவர்களுக்கு தண்டனை விவரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.8 லட்சத்து 36 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுவதற்கான புதிய சட்டமசோதா அமலுக்கு வந்துள்ளது.

  • ஹமாஸ் அமைப்பினர் 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துள்ளனர்.
  • 100 பேர் ஏழு நாட்கள் போர் நிறுத்தத்தின்போது விடுவிக்கப்பட்டனர்.

  ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் ஆறு மாதங்கள் முடிவடைந்து ஏழாவது மாதமாக தொடர்ந்து நீடித்து வருகிறது.

  ஒரே ஒருமுறை மட்டும் ஏழுநாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டு சுமார் 100 பிணைக்கைகள் விடுவிக்கப்பட்டனர். அதன் பின்னர் இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடையவில்லை.

  கத்தார், அமெரிக்கா போன்ற பல நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டும் பலன் அளிக்கவில்லை இந்த நிலையில் தற்போது புதிய திட்டம் ஒன்றை ஹமாஸ் அமைப்பு முன்மொழிந்துள்ளது.

  ஆறு வாரங்கள் தாக்குதலை நிறுத்தினால் பிணைக்கைதிகளை விடுவிக்க தயார் என புதிய முன்மொழிவை ஹமாஸ் வெளியிட்டுள்ளது.

  ஆனால் எந்த முடிவை இஸ்ரேல் ஏற்குமா? எனத் தெரியவில்லை. காசா மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஈரானை எதிர்கொள்வதற்கு ஆயத்தம் ஆகி வருகிறது இஸ்ரேல்.

  இதனால் தனது பார்வையை ஈரான் மீது பதித்துள்ள இஸ்ரேல், இதற்கு சம்மதம் தெரிவிக்குமா என்பது தெரியவில்லை.

  கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுக்கொன்ற அவர்கள், 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர்.

  இதனைத்தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் இந்த தாக்குதலில் காசா முனையில் உள்ள 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றவர்களில் 100 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். சிலர் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். ரஃபா மீது தங்கள் தாக்குதல் நடத்தினால்தான் ஹமாஸ்க்கு எதிரான இலக்கு நிறைவடையும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரஃபா பகுதியில் 10 லட்சம்திற்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் வசித்து வருகின்றனர். ரஃபா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

  • வீடியோவில் கால் பாதங்களால் காரின் கதவை திறக்க முயற்சிப்பதை காண முடிகிறது.
  • கார் கதவு பூட்டப்பட்டு இருந்ததால் கரடியால் திறக்க முடியவில்லை.

  வன விலங்குகள் உணவு தேடி ஊருக்குள் வருவது உலகம் முழுவதும் உள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் உணவு தேடி நெடுஞ்சாலைக்கு வந்த கரடி ஒன்று சிற்றுண்டிக்காக அங்கு நிறுத்தப்பட்டிருந்த, ஒரு போலீஸ் வாகனத்தின் கார் கதவை உடைக்க முயன்ற வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

  அந்த வீடியோவில், கரடி சிற்றுண்டியை தேடி அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தை நெருங்குகிறது. பின்னர் அந்த கரடி வாயால் கார் கதவை திறக்க முயல்கிறது. மேலும் கால் பாதங்களால் காரின் கதவை திறக்க முயற்சிப்பதை காண முடிகிறது. ஆனால் அதன் முயற்சி பலனளிக்கவில்லை. கார் கதவு பூட்டப்பட்டிந்ததால் கரடியால் திறக்க முடியவில்லை.

  இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலான நிலையில், பயனர்கள் பலரும் வனவிலங்குகள் உணவு தேடி ஊருக்குள் வருவதை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பதிவிட்டனர்.


  • இந்திய வம்சாவளி தம்பதியினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர்.
  • வணிக வளாகத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானிஸ் இரங்கல் தெரிவித்தார்.

  சிட்னி:

  ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வணிக வளாகத்தில் புகுந்த ஆண் ஒருவர் காட்டுமிராண்டித்தனமாக அங்கிருந்தவர்களை கத்தியால் குத்தினார். இதில் 5 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். பச்சிளம் குழந்தை உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். பின்னர் போலீஸ் அவரை பிடித்து சுட்டுக்கொன்றது. இதனிடையே கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டவரின் அடையாளம் தெரியவந்துள்ளது.

  அவருடைய பெயர் ஜோயல் காச்சி (40) என்பதும் குயின்ஸ்லாந்து மாகாணத்தை சேர்ந்த அவர் மனநோய்க்காக சிகிச்சை எடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதனால் இந்த சம்பவத்தில் எவ்வித பயங்கரவாத தாக்குதலோ, திட்டமிட்ட சதியோ கிடையாது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

  இதனிடையே தாக்குதலில் ஈடுபட்ட கொலையாளியை பெண் போலீஸ் அதிகாரி எமி ஸ்காட் சம்பவ இடத்தில் லாவகமாக மடக்கி பிடித்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சமயோசிதமாக செயல்பட்டு பலி எண்ணிக்கையை கட்டுப்படுத்திய எமி ஸ்காட்டுக்கு பிரதமர் அந்தோணி அல்பானிஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

  இந்த தாக்குதலில் இந்திய வம்சாவளி தம்பதியினரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர். சிட்னி நகரை சேர்ந்த டெபாஷிஸ் சக்ரபர்த்தி-ஷாய் கோஷல் தம்பதி சம்பவம் நடந்தபோது வணிக வளாகத்தில் இருந்துள்ளனர். தாக்குதலின்போது அங்குள்ள சேமிப்பு கிட்டங்கியில் மறைந்திருந்து தங்களுடைய உயிரை காப்பாற்றி கொண்டுள்ளனர்.

  இந்தநிலையில் வணிக வளாகத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானிஸ் இரங்கல் தெரிவித்தார். சம்பவம் நடந்த வணிக வளாக கட்டிடத்திற்கு நேரடியாக வந்த அவர், வணிக வளாகம் முகப்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

  • மருந்தை குடித்த குழந்தைகள் பலருக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டது.
  • இருமல் மருந்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவிலான வேதிப்பொருட்கள் இருந்துள்ளது.

  கேப்டவுன்:

  தென்னாப்பிரிக்கா, கென்யா, நைஜீரியா, ருவாண்டா, தான்சானியா உள்ளிட்ட நாடுகளில் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சனின் இருமல் மருந்து விற்கப்பட்டு வந்தது. குறிப்பாக 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த மருந்தை டாக்டர்கள் பரிந்துரைந்து வந்தனர்.

  இந்தநிலையில் இந்த மருந்தை குடித்த குழந்தைகள் பலருக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த மருந்தை அந்தந்த நாடுகளின் சுகாதாரத்துறை அமைச்சகங்கள் சோதித்தன.

  அதில் இருமல் மருந்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவிலான வேதிப்பொருட்கள் இருந்துள்ளது. இதனால் அதை குடிக்கும் குழந்தைகளின் உடலில் நச்சுத்தன்மை உண்டாகி உடல்நலக்கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா, கென்யா, தான்சானியா உள்ளிட்ட 6 ஆப்பிரிக்க நாடுகளில் இந்த மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவனம் விற்ற அனைத்து மருந்து பாட்டில்களையும் திரும்ப பெற உத்தரவிடப்பட்டுள்ளன.