என் மலர்
நீங்கள் தேடியது "டொனால்டு டிரம்ப்"
- காமேனி, அவரின் மகள், பேரன்,மருமகள், மருமகன் உயிரிழந்தனர்.
- அமெரிக்கா-இஸ்ரேல் சிவப்பு கோட்டை மீறிவிட்டது.
உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மரணத்திற்குப் பிறகு பழிவாங்கும் தாக்குதல்களை ஈரான் தொடங்கியுள்ளது.
அணுசக்தி பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, நேற்று அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஆபரேஷன் லயன்ஸ் ரோர் என்ற பெயரில் ஈரான் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
இதில் ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தாக்குதல்கள் நிகழ்ந்தன.
இதில் தெஹ்ரானில் உச்ச தலைவர் அயதுல்லா காமேனியின் வீடு மற்றும் அலுவலகம் அமைந்த வளாகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் காமேனி, அவரின் மகள், பேரன்,மருமகள், மருமகன் உயிரிழந்தனர்.
இதற்கிடையே நேற்று முதல் இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வந்த நிலையில் காமேனியின் மரணத்திற்கு பிறகு மேலும் அதிகரித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத் ஆகியவற்றின் மீது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.
உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் சர்வதேச விமான நிலையம் தாக்கப்பட்டு, தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
குவைத்தின் அப்துல்லா முபாரக் பகுதியில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளம் 4 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 12 டிரோன்களால் தாக்கப்பட்டது.
இதில் அங்குள்ள உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாகவும், ஏராளமான அமெரிக்க வீரர்கள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
துபாயின் ஜெபல் அலி கடல் பகுதியில் அமெரிக்கக் கப்பல்களுக்கு வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற ஒரு கப்பல், 4 ஈரானிய டிரோன்களால் தாக்கப்பட்டது.
மேலும், இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கக் கப்பல்களுக்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற போர்க்கப்பல், ஈரான் ஏவுகணைகளால் தாக்கப்பட்டது.
கத்தாரின் தலைநகர் தோஹாவிலும் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
137 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 209 டிரோன்கள் மூலம் தங்கள் நாட்டை ஈரான் தாக்கியதாக ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
அவற்றில் 132 ஏவுகணைகள் வானில் அழிக்கப்பட்டதாகவும், 195 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், மீதமுள்ளவை கடலிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விழுந்தன என்று தெரிவித்துள்ளது.
ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் டெலிகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கள் இமாமின் (காமேனி) கொலைகாரர்களைப் பழிவாங்குவோம்.
ஈரானிய தேசத்தின் கரம் அவர்களை விடாது. அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகளுக்கு எதிராக வரலாற்றிலேயே மிகக் கடுமையான தாக்குதலைத் தொடங்கியுள்ளோம். எதிரிப் படைகளுக்காக நரகத்தின் வாயில்களை நாங்கள் திறந்து வைப்போம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ், இந்த மோதல்கள்கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார். உடனடியாகப் போரை நிறுத்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
இரு தரப்பினரும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரவும், போரைத் தவிர்க்கவும் ரஷியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கிடையே டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில்,"ஈரான் இன்று முன்பை விட கடுமையாகத் தாக்கும் என்று கூறுகிறது. அவர்கள் அதைச் செய்யாமல் இருப்பது நல்லது.
அவர்கள் துணிந்தால், உலகம் இதற்கு முன் பார்த்திராத வகையில் அவர்கள் மீது பலத்தைப் பயன்படுத்துவோம்" என்று எச்சரித்துள்ளார்.
- அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்.
- காமெனியின் 2-வது மகனான மொஜ்தபா காமேனி.
நேற்று அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்.
கொல்லப்பட்டதை அடுத்து தலைமை மதகுரு பதவியான ஈரானின் அடுத்த உச்ச தலைவராக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
ஈரானின் அரசியலமைப்பின்படி, 88 உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர்கள் சபை உச்ச தலைவரைத் தேர்ந்தெடுக்கும்.
இந்த அமைப்பிற்கான வேட்பாளர்கள் கார்டியன் கவுன்சிலால் சரிபார்க்கப்படுகிறார்கள். அதன் உறுப்பினர்கள் உச்சத் தலைவரால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நியமிக்கப்படுகிறார்கள்.
தற்போது அயதுல்லா அலி காமேனியின் 2-வது மகனான மொஜ்தபா காமேனி (வயது 56) உச்ச தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இவர் ஈரான் புரட்சிகர காவல்படை மற்றும்துணை ராணுவப் படையுடன் வலுவான தொடர்புகளை கொண்டுள்ளவர்.
அதேபோல் மூத்த அரசியல்வாதியும்,புரட்சிகர காவல்ப டையின் முன்னாள் தளபதியுமான அலி லாரிஜானியும் உச்ச தலைவர் போட்டியில் உள்ளார்.
தற்போது இவர் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின்செயலாளராக உள்ளார். மேலும் அயதுல்லா அலி காமேனிக்கு ஆலோசகராக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கமேனியின் மகள், மருமகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தை கொல்லப்பட்டனர்.
- கமேனியை வரலாற்றில் மிகவும் தீய மனிதர்களில் ஒருவர் என்று டிரம்ப் குறிப்பிட்டார்.
ஈரானிய அரசுத் தொலைக்காட்சி மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான IRNA, கடந்த 35 ஆண்டுகளாக ஈரானை வழிநடத்தி வந்த அயதுல்லா அலி காமேனி (86 வயது) இயற்கை எய்தியதாக அறிவித்துள்ளது.
முன்னதாக, நேற்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில் ஈரான் பிரதிநிதிகள் அதை மறுத்தனர்.
கமேனியை வரலாற்றில் மிகவும் தீய மனிதர்களில் ஒருவர் என்று குறிப்பிட்ட டிரம்ப் அவரது மரணம் ஈரானிய மக்கள் தங்கள் நாட்டைத் திரும்பப் பெறுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பு என்று தெரிவித்துள்ளார். மேலும் குண்டுவெடிப்பு தடையின்றி தொடரும் என்றும் டிரம்ப் மேலும் கூறினார்.
இந்நிலையில் ஈரான் அரசு ஊடகத்தில் அவர் உயிரிழந்த செய்தி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானில் 40 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளதாவதும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஈரானிய தேசிய பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காமேனியின் தியாகம், கொடுங்கோலர்களுக்கு எதிரான ஒரு மிகப்பெரிய மக்கள் எழுச்சியின் தொடக்கமாக அமையும்" என்று எச்சரித்துள்ளது.
மேலும், நேற்றைய தாக்குதல்களில் கமேனியின் மகள், மருமகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தை கொல்லப்பட்டதாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடைய ஈரானிய செய்தி நிறுவனமான ஃபார்ஸ் தெரிவித்துள்ளது.
தெஹ்ரானில் காமேனியின் இல்லம், அலுவலகம் அமைந்துள்ள வளாகம் முற்றிலும் அளிக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
காமேனியின் உடலை புகைப்படம் எடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஆகியோரிடம் காண்பிக்கப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காமேனியுடன் சேர்த்து ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அஜிஸ் நசிர்சாதே, இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் தரைப்படை தளபதி முகமது பாக்பூர் உள்ளிட்டோரும் கொல்லப்பட்டனர்.
- டெஹ்ரானில் அயத்துல்லா காமேனியின் அலுவலகம், இல்லத்தைக் குறிவைத்து தாக்குதல் நடந்தது.
- ஈரான் தலைவர் காமேனி உயிரோடு இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை என்றார் இஸ்ரேல் பிரதமர்.
வாஷிங்டன்:
அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா நேற்று காலை முதல் ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.
டெஹ்ரானில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனியின் அலுவலகம் மற்றும் இல்லத்தைக் குறிவைத்தும் தாக்குதல் நடந்தது.
இதற்கிடையே, ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உயிரோடு இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக ஊடகங்கள் மூலம் உறுதிப்படுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
வரலாற்றில் மிகவும் தீய மனிதர்களில் ஒருவரான காமேனி உயிரிழந்துவிட்டார். இது ஈரான் மக்களுக்கு மட்டுமின்றி உலகளவில் காமேனியின் ரத்தவெறி கும்பலால் கொல்லப்பட்ட மக்களுக்குமான நீதி.
அமெரிக்காவின் உளவுத்துறை மற்றும் அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளில் இருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை.
இஸ்ரேலும் நெருக்கமாகப் பணியாற்றியதால், அவராலும், அவருடன் கொல்லப்பட்ட மற்ற தலைவர்களாலும் எதுவும் செய்ய முடியவில்லை. ஈரானிய மக்கள் தங்கள் நாட்டைத் திரும்பப் பெறுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பு இது.
தேச பக்தர்களுடன் ஈரானின் புரட்சிகர காவல்படை மற்றும் பாதுகாப்புப் படையினர் ஒன்றிணைந்து, நாட்டை மகத்துவமாக்க செயல்படும் என நம்புகிறோம். அந்தச் செயல்முறை விரைவில் தொடங்க வேண்டும். காமேனியின் கொலை மட்டுமல்ல, நாடே ஒரே நாளில் சுத்தம் செய்யப்பட்டது.
மத்திய கிழக்கில் முழு அமைதி என்ற நோக்கத்தை அடையும்வரை துல்லியமான தாக்குதல்கள் தொடரும் என தெரிவித்துள்ளார்.
- நிறுவனத்தின் ஏஐ தொழில்நுட்பத்தை ராணுவ பயன்பாட்டுக்கு முழுமையாக அனுமதிக்க வேண்டும் என அரசு கோரியது.
- தார்மீக ரீதியாக சரியல்ல என்று ஆந்த்ரோபிக் சிஇஓ டாரியோ அமோடி மறுத்துவிட்டார்.
அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு துறையில் கோலோச்சும் ஓபன் ஏஐ (சாட்ஜிபிடி), கூகுள் (ஜெமினி), எக்ஸ் (குரோக்) ஆகியவற்றுக்கு மத்தியில் ஆந்த்ரோபிக் (Claude ஏஐ) குறிப்பிடத்தகுந்த போட்டியாளராக உருவெடுத்துள்ளது.
முன்பு ஓபன் ஏஐ நிறுவனத்தில் துணைத் தலைவர்களாக பணியாற்றிய டேரியோ அமோடி மற்றும் அவரது சகோதரி டேனியலா அமோடி ஆகியோர் 2021ல் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி ஆந்த்ரோபிக் என்ற நிறுவனத்தை தொடங்கினர்.
ஓபன் ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மேன் ஏஐ பாதுகாப்பை விட வணிக லாபத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று குற்றம் சாட்டியே அவர்கள் வெளியேறினர்.
தற்போது ஓபன் ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக் இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.
இதற்கிடையே டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசுக்கும் ஆந்த்ரோபிக் நிறுவனத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை(பென்டகன்) உள்ளிட்ட முக்கிய துறைகள் ஆந்த்ரோபிக் உடைய Claude ஏஐ சேவையை பயன்படுத்தி வந்தது.
அண்மையில், அந்திரோபிக் நிறுவனத்தின் ஏஐ தொழில்நுட்பத்தை ராணுவ பயன்பாட்டுக்கு முழுமையாக அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத் கோரினார்.
ஆனால் அந்திரோபிக் நிறுவனம் இதற்கு வெளிப்படையாகவும், முழுமையாகவும் மறுத்துவிட்டது.
மனிதத் தலையீடு இல்லாத ஆயுதங்கள் மற்றும் மக்கள் மீதான கண்காணிப்பு போன்றவற்றுக்குத் தங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தார்மீக ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் சரியல்ல என்று ஆந்த்ரோபிக் சிஇஓ டாரியோ அமோடி மறுத்துவிட்டார்.

எனவே பென்டகன் உடனான அந்திரோபிக் ஒப்பந்தம் ரத்தாகி உள்ளது.
மேலும் அந்திரோபிக் உடைய பிடிவாதம் டிரம்ப் உடைய கோபத்தையும் சம்பாதித்துள்ளது.
அனைத்து கூட்டாட்சி முகமைகளும் ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட டிரம்ப், "ஆந்த்ரோபிக் தொழில்நுட்பம் எங்களுக்குத் தேவையில்லை, அதை நாங்கள் விரும்பவில்லை. இனி அந்த நிறுவனத்துடன் எந்த வணிகமும் செய்யப் போவதில்லை" என்று தெரிவித்துள்ளார்.
ராணுவம் எப்படிப் போராட வேண்டும் என்று ஒரு தனியார் நிறுவனம் கட்டளையிடுவதைச் சகித்துக்கொள்ள முடியாது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரும் பாதுகாப்புத் துறை போன்ற அமைப்புகள், அடுத்த ஆறு மாதங்களுக்குள் அதனை முழுமையாக நீக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத், ஆந்த்ரோபிக் நிறுவனத்தை 'தேசிய பாதுகாப்பு விநியோகச் சங்கிலிக்கு அச்சுறுத்தல்' (Supply chain risk) என்று அறிவித்துள்ளார்.
அந்த நிறுவனத்தின் முடிவு, அதன் அகங்காரத்தையும் துரோகத்தையும் காட்டுவதாக அவர் விமர்சித்துள்ளார்.
இந்தத் தடையின் காரணமாக, ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் போட்டியாளர்களான, ஓபன் ஏஐ பென்டகன் ஒப்பந்தத்தை இறுதி செய்யும் தருவாயில் உள்ளது.
- தாக்குதல் நடந்த நேரத்தில் பள்ளியில் 170 பெண் மாணவிகள் இருந்தனர்.
- கொல்லப்பட்ட சிறுமிகள் 7 முதல் 12 வயதுக்குட்பட்டவர்கள்
பயங்கரவாதிகளிடம் அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாது என கூறி அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது இன்று காலை முதல் தாக்குதல் நடத்தி வருகிறது.
தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடந்து வருகிறது.
இந்நிலையில் தெற்கு ஈரானில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் குறைந்தது 51 சிறுமிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெற்கு ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள மினாப் நகரில் உள்ள ஷஜாரே தயேபே பள்ளி இன்று காலை தாக்குதலுக்கு உள்ளானது.
பள்ளியின் மீதான வான்வழித் தாக்குதலில் கட்டிடத்திற்குள் இருந்த பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடந்த நேரத்தில் பள்ளியில் 170 பெண் மாணவிகள் இருந்தனர். கொல்லப்பட்ட சிறுமிகள் 7 முதல் 12 வயதுக்குட்பட்டவர்கள் என்று ஈரானின் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதுவரை குறைந்தது 45 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய புரட்சிகர காவல்படை சமூக வலைதளத்தில் வெளியிட்ட காட்சிகள், பள்ளியின் இடிபாடுகளை உள்ளூர்வாசிகள் தோண்டி எடுப்பதைக் காட்டுகின்றன.
சுற்றியுள்ள கட்டிடங்களில் இருந்து புகை எழுவதையும், சிதைந்த கார் தெருவில் கிடப்பதையும் காணலாம். மக்கள் அலறி அழுது புலம்புவதையும், மற்றவர்கள் அதிர்ச்சியில் இருப்பதையும் காணலாம்.
தெஹ்ரான் மட்டுமின்றி புனித நகரமான கோம், கராஜ், இஸ்ஃபஹான் மற்றும் கெர்மன்ஷா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.
ஈரானிய ஊடகங்கள் இன்னும் ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கையை வழங்கவில்லை, ஆனால் ஈரானிய உச்ச தலைவர் அலி கமேனி பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானிய ஆட்சியின் அச்சுறுத்தல்களை நீக்குவதன் மூலம் அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என்று இந்த தாக்குதல் குறித்து டிரம்ப் கூறியுள்ளார்.
ஈரான் அணு ஆயுதத்தைப் பெறாமல் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம். இது மிகவும் எளிமையான செய்தி என்று அவர் கூறினார்.
- இந்தியா இஸ்ரேலுடன் நிற்கிறது என்று மோடி அறிவித்தார்.
- அவ்வாறு சொன்னதற்காக ஒரு விருதையும் பெற்றுக்கொண்டார்.
பயங்கரவாதிகளிடம் அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாது என கூறி அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது இன்று காலை முதல் தாக்குதல் நடத்தி வருகிறது.
தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடந்து வருகிறது. இதில் சாமானிய மக்கள் பலர் உயிரிழந்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
பதிலடியாக இஸ்ரேல் மீதும், அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் ஈரான் புரட்சிகர ராணுவ படையினர் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஈரான், இஸ்ரேல் மற்றும் பதற்றம் ஏற்பட்டுள்ள பிற நாடுகளில் உள்ள இந்தியர்கள் பத்திரமாக இருக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், " அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் விரோதப் போக்கு மிகவும் கவலையளிக்கிறது.
மத்திய கிழக்கு முழுவதும் உள்ள ஒவ்வொரு இந்திய குடிமகனின் பாதுகாப்பும் நமது மிக உயர்ந்த முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
நமது மக்களைப் பாதுகாக்க உடனடி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில், "பிரதமர் மோடி தனது இஸ்ரேல் பயணத்தைக் கொண்டாடிய இரண்டு நாட்களுக்குப் பிறகு, இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீதான தங்களின் கூட்டுத் தாக்குதலைத் தொடங்கியுள்ளன.
கடந்த சில மாதங்களாக அவர்களின் ராணுவக் குவிப்பை வைத்துப் பார்க்கும்போது இது முற்றிலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.
இருப்பினும், பிரதமர் மோடி இஸ்ரேலுக்குச் செல்லத் தீர்மானித்தார், அங்கு அவர் மிக உயர்ந்த அளவிலான தார்மீக கோழைத்தனத்தைக் காட்டினார்.
இந்தியா இஸ்ரேலுடன் நிற்கிறது என்று அவர் அறிவித்தார், அவ்வாறு சொன்னதற்காக ஒரு விருதையும் பெற்றுக்கொண்டார்.
இந்த இஸ்ரேல் பயணம் வெட்கக்கேடானது, பிரதமர் மோடியின் 'நல்ல நண்பர்கள்' இருவரால் தொடங்கப்பட்டுள்ள இந்தப் போரின் பின்னணியில் இது இன்னும் அவமானகரமானது.
பல வாரங்களாக அதிபர் டிரம்ப், ஈரானுடன் ராஜதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தை நடத்துவது போன்ற ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்.
அவர் ஆட்சி மாற்றத்தை நோக்கமாகக் கொண்டு ஒரு ராணுவத் தாக்குதலைத் தொடங்கியுள்ளார்.
இந்திய தேசிய காங்கிரஸ் இந்தத் தாக்குதலைக் கண்டிக்கிறது மற்றும் மோதல்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர உதவுமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறது.
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் மில்லியன் கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதிப்படுத்த மத்திய அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்." என்று வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக கடந்த பிப்ரவரி 25 இல் இஸ்ரேல் சென்று திரும்பிய 48 மணிநேரத்தில் இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரான் மீதான தாக்குதலை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் பாராளுமன்றத்தில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
- ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனியின் அலுவலகம் மற்றும் இல்லம் இலக்கு வைக்கப்பட்டது.
- உங்கள் அரசாங்கத்தை கைப்பற்றுங்கள், இது உங்களுக்கான நேரம் என்று ஈரான் மக்களுக்கு டிரம்ப் அழைப்பு.
அணுசக்தி திட்டத்தை மேம்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று ஈரானுக்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது. இது தொடர்பாக ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமென்றாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவி வந்தது.
இதற்கிடையே அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம். மேலும், இஸ்ரேல் மீதும் தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இந்த சூழலில் அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரானை சுற்றிவளைத்து கடல் வழியாகவும், வான் வழியாகவும் என 30-க்கும் மேற்பட்ட இடங்களை குறிவைத்து தாக்குதல் நடைபெற்று வருகிறது.
தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் ராணுவம் வான்வெளி தாக்குதலை நடத்தி வருகிறது. நகரில் பல பகுதிகளில் வெடிச்சத்தம் கேட்டுவருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனியின் அலுவலகம் மற்றும் இல்லத்தை இலக்காகக் கொண்டும் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் அங்கு இருந்தாரா என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல் இல்லை. ஈரானில் இணைய சேவை முழுவதுமாக துண்டிக்கப்பட்டது.
உங்கள் அரசாங்கத்தை கைப்பற்றுங்கள், இது உங்களுக்கான நேரம் என்று ஈரான் மக்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கிடையே பதிலடி தாக்குதலாக ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை, இஸ்ரேல் மீது டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி உள்ளது. இதனால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் ஈரான் எல்லைகளைத் தாண்டி மற்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது. அங்குள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தலைநகர் அபுதாபி, குவைத் மற்றும் கத்தாரின் தோஹாவிலும் வெடிச்சத்தங்கள் கேட்டதாக செய்தி நிறுவனம் AFP தெரிவித்துள்ளது.
பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5வது படைப்பிரிவுத் தலைமையகம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.
குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ மையத்திலும், கத்தாரிலும் பெரிய அளவிலான வெடிச்சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு காரணங்களுக்காக ஈராக் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் தங்களது வான்வெளியை மூடியுள்ளன. ஜோர்டானில் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
ஏர் இந்தியா உள்ளிட்ட பல சர்வதேச விமான நிறுவனங்கள் மேற்கு ஆசியாவிற்கான தங்களது விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளன.
ஈரான், இஸ்ரேல் மற்றும் கத்தாரில் உள்ள இந்தியத் தூதரகங்கள் அங்குள்ள இந்தியர்களை வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும், தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளன.
இந்தத் தாக்குதல் மத்திய கிழக்கில் ஒரு முழு அளவிலான போராக உருவெடுக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பாகிஸ்தானுக்கு முழு உரிமை உண்டு.
- 290 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் தெரிவித்தது.
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள முழு அளவிளான மோதல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "பாகிஸ்தானுடன் நான் மிக மிக நன்றாகப் பழகுகிறேன். அவர்களுக்கு ஒரு சிறந்த பிரதமர் (ஷெபாஸ் ஷெரீப்) மற்றும் ஒரு சிறந்த ராணுவத் தளபதி (ஜெனரல் அசிம் முனீர்) உள்ளனர். நான் மிகவும் மதிக்கும் இருவர் அவர்கள்.
பாகிஸ்தான் தற்போது மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக நான் கருதுகிறேன்" என்று கூறி இந்த மோதலில் இப்போதைக்கு தலையிடப்போவதில்லை என தெரிவித்தார்.
தாலிபான் தாக்குதல்களில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளப் பாகிஸ்தானுக்கு முழு உரிமை உண்டு என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
பாக்-ஆப்கான் மோதல்:
பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 6 இல் இஸ்லாமாபாத் ஷியா மசூதியில் நடந்த தற்கொலைப்படை தாக்குகளில் 31 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான் மீது பாகிஸ்தான் குற்றம்சாட்டியது.
தொடர்ந்து இந்த வார தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்கியதில் 20 பயங்கரவாதிகளை கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது.
இதற்கு பதிலடியாக நேற்று பாகிஸ்தான் எல்லைப் புறங்களில் உள்ள ராணுவ முகாம்கள் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தியது. தாக்குதலில் 55 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், பலர் கைது செய்யப்பட்டு முகாம்கள் கைப்பற்றப்பட்டதாகவும் ஆப்கானிஸ்தான் கூறியது.
பதிலடியாக ஆப்கானிஸ்தானின் காபூல் மற்றும் கந்தஹார் நகரங்கள் மீது நடத்திய வான்வழித் தாக்குதலில் 27 தாலிபான் ராணுவ நிலைகள் அழிக்கப்பட்டதாகவும் 290 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் தெரிவித்தது.
- ஒருவேளை நான் கொஞ்சம் குறைவான செல்வாக்குள்ள தலைவராக இருந்திருக்கலாமோ என்னவோ?
- எப்ஸ்டீன் கோப்புகள் தொடர்பாக அரசாங்கத்தின் மீது கடும் கோபத்தில் இருந்தான்.
அமெரிக்காவின் புளோரிடாவில் அதிபர் டிரம்ப் உடைய இல்லத்திற்குள் கடந்த பிப்ரவரி 22 அதிகாலை 1:30 மணியளவில் இளைஞர் ஒருவன் ஷாட்கன் துப்பாக்கி மற்றும் பெட்ரோல் கேனுடன் நுழைய முயன்றான்.
எச்சரிக்கை விடுத்தும், அவன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதால், சீக்ரெட் சர்வீஸ் ஏஜெண்டுகள் அவனைச் சுட்டுக்கொன்றனர்.
இந்த சம்பவத்தின் போது டிரம்ப் மற்றும் அவரது மனைவி வெள்ளை மாளிகையில் இருந்தனர்.
அந்த இளைஞன் 21 வயதான ஆஸ்டின் டக்கர் மார்ட்டின் என்று அடையாளம் காணப்பட்டான்.
இந்தச் சம்பவம் குறித்து வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப்,
"நான் இன்னும் எவ்வளவு காலம் உயிருடன் இருப்பேன் எனத் தெரியவில்லை. எனக்காகத் துப்பாக்கியுடன் எத்தனை பேர் காத்திருக்கிறார்கள் என்று பார்த்தீர்களா?" என்று நகைச்சுவையாக வினவினார்.
மேலும், "ஆபிரகாம் லிங்கன், கென்னடி போன்ற மிகப்பெரிய செல்வாக்குள்ள தலைவர்களையே இதுபோல இலக்கு வைப்பார்கள்.
ஒருவேளை நான் கொஞ்சம் குறைவான செல்வாக்குள்ள தலைவராக இருந்திருக்கலாமோ என்னவோ? கொஞ்ச காலம் ஒரு சாதாரண அதிபராக இருக்க முயற்சிப்போம்" என்றும் அவர் கிண்டலாகப் பேசினார்.
கொல்லப்பட்ட இளைஞன் மார்ட்டின், சமீபத்தில் வெளியான எப்ஸ்டீன் கோப்புகள் தொடர்பாக அரசாங்கத்தின் மீது கடும் கோபத்தில் இருந்தது அவனது குறுஞ்செய்திகள் மூலம் தெரியவந்துள்ளது.
டிரம்ப் மீது ஏற்கனவே இரண்டு முறை கொலை முயற்சிகள் நடந்துள்ள நிலையில், இந்த மூன்றாவது முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- டிரம்பின் வரி விதிப்புக் கொள்கைகளுக்கு 64% மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
- குடியேற்றக் கொள்கைகளில் 58% பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க உச்ச நீதிமன்றம் டிரம்பின் இறக்குமதி வரி கொள்கைகளை ரத்து செய்வதற்கு முன்னதாக இந்தச் சர்வே நடத்தப்பட்டது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது அரசு குறித்து அந்நாட்டு மக்களிடம் அண்மையில் சர்வே நடத்தப்பட்டது.
ஏபிசி நியூஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் இணைந்து இந்த கருத்துக்கணிப்பை நடத்தியது.
இதன்படி, 65% அமெரிக்கர்கள் டிரம்ப் பணவீக்கத்தைக் கையாள்வதில் தோல்வியடைந்துள்ளதாக கருதுகின்றனர்.
டிரம்பின் வரி விதிப்புக் கொள்கைகளுக்கு 64% மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 34% பேர் மட்டுமே இதை ஆதரிக்கின்றனர்.
டிரம்பின் சர்வதேச உறவுகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை 62% மக்கள் அங்கீகரிக்கவில்லை.
குடியேற்றக் கொள்கைகளில் 58% பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
குடியேற்றக் கொள்கைகளுக்காக ராணுவத்தைப் பயன்படுத்தும் அவரது திட்டத்திற்கு 54% மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, மினியாபோலிஸ் நகரில் கடந்த மாதம் நடந்த அமலாக்க நடவடிக்கைகளின் போது இரு அமெரிக்கக் குடிமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு இந்த அதிருப்தி அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்தப் பொருளாதார நிர்வாகத்தில் 57% மக்கள் அதிருப்தி கொண்டுள்ளனர்.
நாட்டின் பிரச்சனைகளைத் தீர்க்க எந்தக் கட்சி சிறந்தது என்ற கேள்விக்கு, டிரம்ப் உடைய குடியரசுக் கட்சி கட்சி என 33% பேரும், ஜனநாயகக் கட்சி என 31% பேரும், யாருமில்லை இல்லை என 31% பேரும் தெரிவித்துள்ளனர்.
Yahoo மற்றும் YouGov நடத்திய மற்றொரு சமீபத்திய ஆய்வில், அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான அதிபராக டிரம்ப்-ஐ 40% அமெரிக்கர்கள் தேர்வு செய்துள்ளனர்.
டிரம்ப்பின் ஒட்டுமொத்த அங்கீகார விகிதம் 39% ஆகக் குறைந்துள்ளது. வெறும் 12% பேர் மட்டுமே அவரை ஒரு சிறந்த அதிபர் என்று கருதுகின்றனர்.
- அமெரிக்காவுக்கு பெரும் சலுகைகளை வாரி வழங்கும் ஒரு வர்த்தக ஒப்பந்த பொறியில் விழ அவசரப்பட்டது ஏன்?
- பல அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு பூஜ்ஜிய வரிகள்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அதிகார வரம்பை மீறி பல்வேரு நாடுகள் மீது விதித்தவரிகள் செல்லாது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பளித்தது. இதனால் இந்தியா - அமெரிக்கா இடையே அண்மையில் ஏற்பட்ட வர்த்தக ஒப்பந்தம் பாதிக்கும் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில் அவசர கதியில் அமெரிக்காவுடன் இந்தியா ஏன் ஒப்பந்தம் செய்தது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திறனற்ற வெளியுறவு கொள்கையா அல்லது சரணடைதலா? மோடி அரசு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் வரிகள் தொடர்பான தீர்ப்புக்காக காத்திருக்காமல், அமெரிக்காவுக்கு பெரும் சலுகைகளை வாரி வழங்கும் ஒரு வர்த்தக ஒப்பந்த பொறியில் விழ அவசரப்பட்டது ஏன்?
இந்தியாவிற்கான பல அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு பூஜ்ஜிய வரிகள், கிட்டத்தட்ட அமெரிக்க பொருட்களுக்கு இந்தியாவின் விவசாயத்தைத் திறந்து விடுதல், 500 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அமெரிக்க பொருட்களை இறக்குமதி செய்யும் திட்டம், நமது எரிசக்தி பாதுகாப்பைப் பாதிக்கும் ரஷிய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதற்கான உறுதிப்பாடு மற்றும் டிஜிட்டல் துறையில் பல வரிச் சலுகைகள் பற்றி அமெரிக்க - இந்திய வர்த்த ஒப்பந்த கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோடி ஜி இந்தியர்கள் முன் நின்று உண்மையைச் சொல்ல வேண்டும். இந்தியாவின் தேசிய நலன் மற்றும் சுயாட்சியை சமரசம் செய்ய உங்களுக்கு என்ன அல்லது யார் அழுத்தம் கொடுத்தார்கள்? அது எப்ஸ்டீன் கோப்புகளா?
மத்திய அரசு, அதன் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து 140 கோடி இந்தியர்களின் சுயமரியாதையையும் நமது விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகங்கள் மற்றும் வர்த்தகர்களின் நலனையும் பாதுகாக்கும் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தை வழங்குமா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.






