என் மலர்
டெல்லி
- பிரதமர் மோடி தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
- மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி பாதியில் கவிழ்ந்ததால் தற்போது பாரதிய ஜனதா ஆட்சியில் உள்ளது.
புதுடெல்லி:
தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடி வடைகிறது.
இதையடுத்து வருகிற டிசம்பர் மாதம் இந்த மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு 5 மாநில தேர்தல் முடிவுகள் ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படுவதால் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது
தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி விட்டது. ஒரு சில மாநிலங்களில் வேட்பாளர்களை அறிவித்து பாரதிய ஜனதா கட்சி தேர்தல் களத்தில் குதித்து விட்டது. பிரதமர் மோடி தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். காங்கிரசுக்கு ஆதரவாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தந்த மாநில கட்சிகளும் சுறுசுறுப்பாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க மறுபுறம் தேர்தல் கமிஷனும் தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகளை தொடங்கி விட்டது. தெலுங்கானா தவிர மற்ற 4 மாநிலங்களிலும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சுற்றுப்பயணம் செய்து ஆலோசனை நடத்தினார்கள்.
தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் அனுப் சந்தி பாண்டே, அருண் கோயல் ஆகியோர் அடங்கிய குழுவினர் அரசியல் கட்சி பிரதிநிதிகள், தலைமை செயலாளர்கள், போலீஸ் டி.ஜி.பி.க்கள், கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் என அனைத்து துறை அதிகாரிகளுடன் தேர்தல் நடத்துவது தொடர்பாக விரிவான ஆலோசனை மேற்கொண்ட னர்.
தெலுங்கானா மாநிலத்தில் இன்று முதல் 3 நாட்கள் அவர்கள் சுற்றுப்பயணம் செய்து ஆலோசனை நடத்த உள்ளனர். தேர்தல் ஆணைய அதிகாரிகள் தேர்தல் தொடர்பாக நடத்தி வரும் ஆலோசனை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
இதனால் இந்த வார இறுதிக்குள் 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி குறித்த அட்டவணை வெளியாகலாம் என தெரிகிறது. தேர்தலை பல கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு இந்த 5 மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணையை அதே ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் நடைபெற உள்ள தெலுங்கானாவில் தற்போது முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சி ஆட்சியில் உள்ளது. இம்முறை 2-வது இடத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சிக்கும், ஆளுங்கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி உள்ளது. தெலுங்கானாவில் தொடர்ந்து 3-வது முறையாக வென்று ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் பாரதிய ராஷ்ட்ரிய சமிதியும், எப்படியும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற வேட்கையில் பாரதிய ஜனதாவும் உள்ளது. இதற்காக பாரதிய ஜனதா புதிய வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது.
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. இங்கு ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் போராடி வருகிறது. ஆனால் பாரதிய ஜனதாவுக்கும் கடந்த தேர்தலை விட இம்முறை செல்வாக்கு அதிகரித்து உள்ளதால் இரு கட்சிகளுக்கும் இடையில் கடும் பலப்பரீட்சை ஏற்பட்டு உள்ளது.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி பாதியில் கவிழ்ந்ததால் தற்போது பாரதிய ஜனதா ஆட்சியில் உள்ளது. இம்முறையும் ஆட்சியை கைப்பற்ற இரு கட்சிகளும் மும்முரமாக உள்ளது. சத்தீஸ்கரில் காங்கிரசும், வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் மிசோரம் தேசிய முன்னணியும் ஆட்சியில் உள்ளது.
இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே பிரசாரம் சூடு பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- நவராத்திரி, தீபாவளி பண்டிகைகளை சீர்குலைக்க குண்டு வெடிப்புகளை நிகழ்த்தவும் சதி திட்டம் தீட்டி இருந்தனர்.
- நாடு முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் பலர் அவர்களுடன் தொடர்பில் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
டெல்லி, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் போலீசார் நேற்று பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதற்காக போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 3 முக்கிய தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் என்ஜினீயரிங் பட்டதாரிகள் ஆவர்.
இவர்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்பதால் இவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஏற்கனவே தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர். அவர்கள் பெயர் முகமது ஷாநவாஸ் ஆலம், முகமது ரிஸ்வான் அஸ்ரப், முகமது அர்ஷத் வர்சி என்று தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் வெடிகுண்டு தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்று கூறப்படுகிறது.
இவர்களில் முகமது ஷாநவாஸ் ஆலம் ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் பகுதியை சேர்ந்தவர். இவர் சுரங்க என்ஜினீயர் என்பதால் அவருக்கு குண்டு வெடிப்பு தொழில்நுட்பங்கள் குறித்து அதிகம் தெரிந்துள்ளது. அவரது மனைவி பிறப்பால் இந்துவாக இருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறியவர்.
முகமது அர்ஷத் வர்சியும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். அவர் அலிகார் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங்கில் பி.டெக். முடித்து உள்ளார். அத்துடன் டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் பி.எச்.டி. பட்டத்தையும் பெற்றுள்ளார்.
முகமது ரிஸ்வான் அஸ்ரப் கணினி அறிவியலில் பிடெக் படித்தவர். உத்தர பிரதேசத்தில் உள்ள அசம்கர் பகுதியை சேர்ந்தவர். மதகுருவாகவும் பயிற்சி பெற்றுள்ளார்.
இவர்களில் முகமது ஷாநவாஸ் ஆலம் என்பவர் தான் என்.ஐ.ஏ. அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில் இருந்துள்ளார். மற்ற இருவரும் அவரது கூட்டாளிகள் ஆவர். இந்நிலையில் கைதான 3 பயங்கரவாதிகள் பற்றியும் பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவின் மூத்த அதிகாரி எச்.ஜி.எஸ். தலிவால் கூறியதாவது:-
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்ட நபர்களில் மிக முக்கியமானவர் முகமது ஷாநவாஸ் ஆலம். இவரை டெல்லியில் வைத்து போலீசார் கைது செய்தனர். இவரது கூட்டாளிகளான முகமது ரிஸ்வான் அஸ்ரப் லக்னோவிலும், முகமது அர்ஷத் வர்சி உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத்திலும் கைது செய்யப்பட்டு உள்ளனர். வட இந்தியா முழுவதும் கடந்த 2 மாதங்களாக 200-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த சோதனையை தொடர்ந்து தற்போது இவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் புனேயில் நடந்த சோதனையின் போது முகமது ஷாநவாஸ் ஆலமை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். எனவே அவரை பற்றி தகவல் தருபவருக்கு ரூ.3 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று கடந்த மாதம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டனர்.
டெல்லியில் முகமது ஷாநவாஸ் ஆலம் பதுங்கி இருந்த இடத்தில் இருந்து துப்பாக்கி, வெடிகுண்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், ரசாயன பொருட்கள், ரிமோட்டுகள், பேட்டரிகள், டைமர்கள் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் ஜிகாதி இலக்கிய புத்தகங்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் குறித்து நாடு முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் பலர் அவர்களுடன் தொடர்பில் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. நன்கு தெரிந்த இடங்களை குறிவைத்து தாக்கி அதிகபட்ச உயிரிழப்புகளை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கமாக இருந்துள்ளது. பண்டிகை காலங்களில் அவர்கள் சதி திட்டத்தை நிறைவேற்ற திட்டமிட்டு இருந்தனர். நவராத்திரி, தீபாவளி பண்டிகைகளை சீர்குலைக்க அயோத்தி, டெல்லி, மும்பை ஆகிய இடங்களில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தவும் சதி திட்டம் தீட்டி இருந்தனர். இதற்காக இறுதிகட்ட பணியில் ஈடுபட்டு வந்தனர். டெல்லியில் அக்ஷர்தாமையும், மும்பையில் சபாத் ஹவுசையும் குறிவைத்து இருந்தனர்.
கைதான 3 பேரும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததுடன், வழக்கமான தகவல்களை அந்த அமைப்புடன் பகிர்ந்து வந்ததும் கண்டறியப் பட்டுள்ளது. வெடிகுண்டுகளை தயாரிப்பதற்காக அவர்களுக்கு தேவையான பொருட்களை அவர்கள் இருக்கும் இடத்திலேயெ வழங்கவும் ஐஎஸ் அமைப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் இவர்கள் டெல்லியை தவிர உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், ஜார்க்கண்ட் மற்றும் மகராஷ்டிராவிலும் முகாம்களை கொண்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒரே ஒரு இ-சிகரெட் வைத்திருப்பதும் குற்றம் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது.
- தடையை மீறுவோர் குறித்து புகார் தெரிவிக்க ஒரு இணையதளத்தையும் சுகாதார அமைச்சகம் தொடங்கி உள்ளது.
புதுடெல்லி:
மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு, மின்னணு சிகரெட் தடை சட்டத்தை கொண்டு வந்தது.
அதன்படி, இ-சிகரெட் எனப்படும் மின்னணு சிகரெட்டுகளை உற்பத்தி செய்தல், ஏற்றுமதி, இறக்குமதி செய்தல், விற்பனை, வினியோகம் செய்தல், இருப்பு வைத்தல், விளம்பரம் செய்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது.
இ-சிகரெட்டின் தனிப்பட்ட பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படுவதாக அதில் குறிப்பிடப்படவில்லை.
இதற்கிடையே, இ-சிகரெட் தடை சட்டத்தில், சிறைத்தண்டனை, அபராதம் போன்ற கடுமையான விதிமுறைகள் இருப்பதையும் மீறி, இ-சிகரெட் சர்வசாதாரணமாக புழங்குவதாக மத்திய அரசுக்கு புகார்கள் வந்தன. குறிப்பாக, இளைஞர்கள் அதை பயன்படுத்துவது, மத்திய அரசுக்கு கவலை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இ-சிகரெட் தடையை உறுதியுடன் அமல்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியது. மேலும், அந்த சிகரெட்டை விற்பனை செய்த 15 இணையதளங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், இ-சிகரெட்டை எந்த வடிவிலும், எந்த எண்ணிக்கையிலும், எந்த முறையிலும் வைத்திருப்பது இ-சிகரெட் தடை சட்டத்தை மீறிய குற்றம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தி உள்ளது. மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு அனுப்பிய கடிதத்தில் இத்தகவலை தெரிவித்துள்ளது.
இதன்மூலம், ஒரே ஒரு இ-சிகரெட் வைத்திருப்பதும் குற்றம் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது.
மேலும், இந்த தடையை மீறுவோர் குறித்து புகார் தெரிவிக்க ஒரு இணையதளத்தையும் சுகாதார அமைச்சகம் தொடங்கி உள்ளது.
- மோனா தடுப்பூசி செலுத்தியதற்கான போலி சான்றிதழையும் உருவாக்கி அவரது குடும்பத்தினரிடம் கொடுத்துள்ளார்.
- ராணா, மோனா பேசுவது போலவே எடிட் செய்யப்பட்ட ஆடியோவை அவரது குடும்பத்தினருக்கு அனுப்பி வந்துள்ளார்.
புதுடெல்லி:
உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் மோனா.
பி.எட். படித்து முடித்துள்ள இவர் அரசு அதிகாரியாக மாற விரும்பி போட்டி தேர்வுகளில் பங்கேற்று வந்தார்.
கடந்த 2014-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்த அவர் டெல்லிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். அங்கு கட்டுப்பாட்டு அறையில் பணியமர்த்தப்பட்டார்.
இதற்கிடையே அவர் சப்-இன்ஸ்பெக்டர் தேர்விலும் வெற்றி பெற்றார். ஆனால் அவருக்கு உத்தரபிரதேசத்தில் பணி கிடைத்தது. அந்த பணியை விரும்பாத அவர் டெல்லியிலேயே தங்கி யு.பி.எஸ்.சி. தேர்வுக்காக படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மோனா திடீரென்று மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரை தொடர்பு கொள்ள முயன்ற போது எந்த பதிலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் மோனா, அரவிந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், இன்னும் 15 நாட்களில் வீட்டுக்கு திரும்புவார் எனவும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து மோனா குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
மோனாவுடன் டெல்லி போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் வேலை பார்த்து வந்த சுரேந்திர ராணா (வயது42) என்ற போலீஸ் ஏட்டு மோனாவை காதலித்து வந்ததும், இதை அறிந்த மோனா காதலுக்கு மறுப்பு தெரிவித்ததோடு ராணாவை எச்சரித்ததும் தெரியவந்தது.
இந்த ஆத்திரத்தில் சுரேந்திர ராணா, மோனாவை கொலை செய்ய முடிவு செய்து கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 8-ந்தேதி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் மோனாவின் உடலை புதைக்க அவரது உறவினர்களான ரவின் (26), ராஜ்பால் (33) ஆகியோர் உதவி செய்துள்ளனர். மேலும் இந்த கொலையை மறைப்பதற்காக மோனா உயிருடன் இருப்பது போன்று நாடகமாடி உள்ளனர்.
அதாவது சுரேந்திர ராணா, மோனாவின் குடும்பத்தினருடன் போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது மோனா அரவிந்த் என்பவரை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொண்டதாகவும், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு வேறு மாநிலத்திற்கு தப்பி சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்.
அதோடு மோனா தடுப்பூசி செலுத்தியதற்கான போலி சான்றிதழையும் உருவாக்கி அவரது குடும்பத்தினரிடம் கொடுத்துள்ளார். அதன்பிறகு மோனாவின் செல்போன் சிம்கார்டை அவரது உறவினரிடம் வழங்கி மோனாவின் காதலன் அரவிந்த் போல பேச செய்து உள்ளார். அவரும் மோனாவின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டு குர்கானில் உள்ளோம். மோனா உங்களிடம் பேச பயப்படுகிறார். நாங்கள் இன்னும் சில தினங்களில் வீட்டுக்கு வருவோம் என கூறியுள்ளார்.
இதை மோனா குடும்பத்தினர் நம்பி உள்ளனர். ஆனால் பல நாட்களாகியும் மோனா வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். அப்போது அவரது செல்போன் எண் அரியானா டேராடூன், ரிஷிகேஷ் என பல இடங்களை காட்டியது. அங்கு சென்று விசாரித்த போது மோனாவின் பெயரில் ஓட்டல்களில் அறை எடுத்து தங்கி இருந்தது தெரியவந்தது.
இதற்கிடையே ராணா, மோனா பேசுவது போலவே எடிட் செய்யப்பட்ட ஆடியோவை அவரது குடும்பத்தினருக்கு அனுப்பி வந்துள்ளார். அவற்றை போலீசார் ஆய்வு செய்த போது அந்த ஆடியோவும் போலியானது என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து நடந்த விசாரணையில் சுரேந்திர ராணா மற்றும் அவரது உறவினர்கள் ராஜ்பால், ரவின் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ராணா தனது காதலை ஏற்க மறுத்த பெண் போலீசை கொலை செய்ததோடு அவர் உயிரோடு இருப்பதாக 2 ஆண்டுகளாக அவரது குடும்பத்தினரை நம்ப வைத்து நாடகமாடியது அம்பலமாகி உள்ளது.
- அகில இந்திய காங்கிரஸ் குழுவின் பொருளாளராக அஜய் மாக்கனை கட்சித் தலைவா் மல்லிகாா்ஜூன காா்கே நியமித்துள்ளாா்.
- பொருளாளராகப் பதவி வகித்து வந்த அகமது படேல் கடந்த 2020-ல் காலமானதையடுத்து, பன்சால் இடைக்கால பொருளாளராக நியமிக்கப்பட்டாா்.
புதுடெல்லி:
காங்கிரசின் புதிய பொருளாளராக கட்சியின் மூத்த தலைவா் அஜய் மாக்கன் நியமனம் செய்யப்பட்டதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சி பொதுச்செயலா் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில், 'அகில இந்திய காங்கிரஸ் குழுவின் பொருளாளராக அஜய் மாக்கனை கட்சித் தலைவா் மல்லிகாா்ஜூன காா்கே நியமித்துள்ளாா். முன்பு இப்பதவி வகித்த பவன் குமாா் பன்சால் ஆற்றிய பங்களிப்புக்காக, கட்சி அவரைப் பாராட்டுகிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி பொருளாளா் பவன் குமாா் பன்சாலுக்கு மாற்றாக, அஜய் மாக்கன் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். பொருளாளராகப் பதவி வகித்து வந்த அகமது படேல் கடந்த 2020-ல் காலமானதையடுத்து, பன்சால் இடைக்கால பொருளாளராக நியமிக்கப்பட்டாா்.
- ரூ.11,895 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட டெல்லி-வதோதரா விரைவு சாலையை மத்திய பிரதேசத்தின் குவாலியரில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
- ரூ.1,880 கோடி மதிப்பிலான 5 சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமர் மோடி ராஜஸ்தானில் ரூ.7,000 கோடி, மத்திய பிரதேசத்தில் ரூ.19,260 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
ராஜஸ்தானில் சித்தூர்களுக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர், மெஹாசானா-பதிண்டா-குர்தாஸ்பூர் எரிவாயு குழாய் இணைப்பைத் தொடங்கி வைக்கிறார். அபு சாலையில் இந்துதாஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் அமைத்துள்ள சமையல் எரிவாயு நிரப்பு நிறுவனத்தை தொடங்கி வைக்கிறார்.
மேலும், ரூ.1,480 கோடி செலவில் அமைக்கப்பட்ட தாரா-ஜலவர்-தீன்தர் பிரிவின் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். ரூ.11,895 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட டெல்லி-வதோதரா விரைவு சாலையை மத்திய பிரதேசத்தின் குவாலியரில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
மேலும் ரூ.1,880 கோடி மதிப்பிலான 5 சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஊரக மற்றும் நகர்புறப் பகுதிகளில் கட்டப்பட்ட வீடுகள், ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
- நாடு முழுவதும் இன்று மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
- காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் இன்று மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவரை தொடர்ந்து காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரும் காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
- செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் தொடர்பான விவரங்களை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
- ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரியாக ரூ.83,633 கோடியும் வசூலாகியுள்ளது,
டெல்லி:
நாடு முழுவதும் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இந்த ஆண்டு செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் தொடர்பான விவரங்களை மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டு உள்ளது.
இந்நிலையில் செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1,62,712 கோடி ஆக உள்ளது. இந்தாண்டில் இதுவரை 4-வது முறையாக ஜிஎஸ்டி வரி வசூல் 1,60 லட்சம் கோடிரூபாயை தாண்டியுள்ளது.
அதன்படி மத்திய சரக்கு சேவை வரியாக (சிஜிஎஸ்டி) ரூ,29,818 கோடியும், மாநில சரக்கு சேவை வரியாக (எஸ்ஜிஎஸ்டி) ரூ.37,657 கோடியும், ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரியாக (ஐஜிஎஸ்டி) ரூ.83,633 கோடியும் வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலலும் தமிழகத்திலிருந்து மொத்தம் 10,481 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது,
- 2014 அக்டோபர் 2 அன்று 'ஸ்வச் பாரத் மிஷன்' திட்டம் தொடங்கப்பட்டது
- 'ஒன்றாம் தேதி, ஒரு மணி நேரம், ஒன்றாக இணைவோம்' என அழைப்பு விடுத்தார்
மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி எனும் பெயரில் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியா முழுவதும் சுகாதாரம் மற்றும் தூய்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த 2014-ல் அக்டோபர் 2 அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி 'ஸ்வச் பாரத் மிஷன்' (SBM) எனும் 'தூய்மை இந்தியா' திட்டத்தை தொடங்கி வைத்தார். கடந்த 8 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் உள்ள கிராமங்கள், மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகியவை முழுவதிலும் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாளை காந்தி ஜெயந்தியையொட்டி 9-வது ஆண்டு தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்க, "ஒன்றாம் தேதி, ஒரு மணி நேரம், ஒன்றாக இணைவோம்" (ஏக் தரீக், ஏக் கண்டா, ஏக் சாத்) என நாட்டு மக்கள் அனைவருக்கும் மோடி அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க. தேசிய செயலாளர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் நாடு முழுவதும் இதில் பங்கேற்றனர்.
இதன் தொடர்ச்சியாக மல்யுத்த வீரர் அங்கித் பையன்புரியாவுடன் இணைந்து பிரதமர், தூய்மை பணியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார்.
தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் இது குறித்து அவர் தெரிவித்ததாவது:
தூய்மையே சேவை இயக்கத்தில் நாடு கவனம் செலுத்தி கொண்டிருக்கிறது. இன்று நான் அங்கித்துடன் தூய்மை பணியில் ஈடுபட்டேன். தூய்மையை தாண்டி உடற்தகுதி மற்றும் நல்வாழ்வு குறித்த கருத்துக்களை பரிமாறி கொண்டோம்.
இவ்வாறு அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
அரியானா மாநிலத்தை சேர்ந்த அங்கித் ஒரு உடற்பயிற்சி ஆர்வலர். இவர் வெளிநாட்டு உபகரணங்களின் உதவி இல்லாமல் இந்திய வழிமுறைகளிலேயே உடற்கட்டையும், உடல் நலத்தையும் பெற முடியும் என வலியுறுத்தி வருபவர். 75 நாட்கள் தொடர்ந்து செய்யும் உடற்பயிற்சியின் மூலம் மன உறுதியையும் கட்டுப்பாட்டையும் வளர்த்து கொள்ள முடியும் என்பது இவரது சித்தாந்தம்.
- மோதல் குறித்து அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
- கொலை செய்யப்பட்ட 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
புதுடெல்லி:
டெல்லி முகுந்த்பூரில் உள்ள கார்கில்காலனி, சம்தாவிகார் காலனியில் இரு கோஷ்டிக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் கத்தியால் குத்தினார்கள். துப்பாக்கியாலும் சுட்டனர்.
இந்த மோதலில் ஆசாத் என்பவர் கத்திக்குத்தில் இறந்தார். ஹிமான்ஷி என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த மோதல் குறித்து அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் போலீசார் சம்பவ இடத்துக்கு வராததால் கொலை செய்யப்பட்ட 2 பேரின் உடல்கள் பல மணி நேரம் ரத்த வெள்ளத்தில் அப்படியே கிடந்தது.
போலீஸ் நிலைய எல்லைப்பிரச்சினை காரணமாக போலீசார் தாமதமாக தான் அங்கு வந்து சேர்ந்தனர். அதன் பிறகு தான் கொலை செய்யப்பட்ட 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.