என் மலர்
நீங்கள் தேடியது "மத்திய அரசு"
- மத்திய அரசு நிதி வழங்காத நிலையில், மேற்கு வங்க அரசு தனது சொந்த நிதியைக் கொண்டு 2024-இல் 'கர்மஸ்ரீ' திட்டத்தைத் தொடங்கியது.
- மத்திய அரசு நிதி வழங்காவிட்டாலும், எங்கள் சொந்த நிதியில் மக்களுக்கு வேலை வழங்குவோம். நாங்கள் பிச்சைக்காரர்கள் அல்ல மம்தா பேசினார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநில அரசின் வேலைவாய்ப்பு உறுதித் திட்டமான 'கர்மஸ்ரீ' க்கு மகாத்மா காந்தியின் பெயரைச் சூட்டப்போவதாக அறிவித்துள்ளார்.
மத்திய அரசு தனது தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிவிட்டு, அதற்கு "விபி ஜி ராம் ஜி" எனப் பெயர் மாற்றியுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக மம்தா பானர்ஜி இந்த முடிவை எடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய மம்தா, "தேசியத் தலைவர்களுக்குச் சில கட்சிகள் மரியாதை செலுத்தத் தவறினால், நாங்கள் அதைச் செய்வோம். தேசத் தந்தையின் பெயரையே நீக்குவது மிகுந்த அவமானமாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.
முன்னதாக முறைகேடுகளைக் காரணம் காட்டி 2022-ஆம் ஆண்டு முதல் மேற்கு வங்கத்திற்கான ஊரக வேலை வாய்ப்பு திட்ட நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனால் சுமார் 58 லட்சம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 6,919 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது.
மத்திய அரசு நிதி வழங்காத நிலையில், மேற்கு வங்க அரசு தனது சொந்த நிதியைக் கொண்டு 2024-இல் 'கர்மஸ்ரீ' திட்டத்தைத் தொடங்கியது.
இது கிராமப்புற குடும்பங்களுக்கு ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 50 நாட்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்கிறது.
மத்திய அரசு நிதி வழங்காவிட்டாலும், எங்கள் சொந்த நிதியில் மக்களுக்கு வேலை வழங்குவோம். நாங்கள் பிச்சைக்காரர்கள் அல்ல மம்தா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நேற்று மேற்கு வங்கம் வந்த பிரதமர் மோடி, மேற்கு வங்கத்தில் காட்டு ராஜ்ஜியம் விரைவில் அகற்றப்படும் என பொதுக்கூட்டத்தில் சூளுரைத்துச் சென்றார்.
- டிசம்பர் 26-ந் தேதி முதல் ரெயில் கட்டணம் உயர்த்தப்படுவதாக ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
- கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி தேதி ரெயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில் ஒரே ஆண்டில் 2வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் டிசம்பர் 26-ந் தேதி முதல் ரெயில் கட்டணம் உயர்த்தப்படுவதாக ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதன்படி, 215 கி.மீ.க்கு மேல் பயணிக்கும் தூரத்திற்கு 1 கிலோ மீட்டருக்கு 1 பைசா வீதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
215 கி.மீ.க்கு மேல் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிக்க 1 கிலோ மீட்டருக்கு 1 பைசா கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏசி அல்லாத பெட்டிகளில் பயணிக்க 1 கி.மீ.க்கு 2 பைசா உயர்த்தப்படும்.
500 கி.மீ தூரம் ஏசி அல்லாத பெட்டியில் பயணிக்கும் பயணிகள் கூடுதலாக 10 ரூபாய் செலுத்த வேண்டும்.
உதாரணமாக சென்னையில் இருந்து மதுரை மற்றும் கோவைக்கு செல்லும் ரெயில்களில் ரூ10 கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டும்.
இதுதவிர்த்து அனைத்து ஏசி வகுப்புகளுக்கும் 1 கிலோமீட்டருக்கு 2 பைசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேநேரம், 215 கி.மீ வரை பயணிக்க கட்டண உயர்வு இல்லை. மேலும் புறநகர் ரெயில்கள் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு மூலம் ரெயில்வே ரூ.600 கோடி கூடுதல் வருவாயை ஈட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ரெயில்வே ஊழியர் ஊதியச் செலவு ரூ. 1,15,000 கோடியாகவும், ஓய்வூதியச் செலவு ரூ. 60,000 கோடியாகவும் அதிகரித்துள்ளதால் 2024-25 நிதியாண்டில் மொத்த ரெயில்வே துறையின் செலவு ரூ. 2,63,000 கோடியாக உயர்ந்துள்ளது.
எனவே இந்த செலவுகளை சமாளிக்க பயணிகளுக்கான கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளதாக ரெயில்வே தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி தேதி ரெயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில் ஒரே ஆண்டில் 2வது முறையாக ரெயில்வே கட்டணங்களை உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நேற்று ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார்.
- யாருக்கு வேலை, எங்கே, எப்படி? என்பது குறித்த முடிவுகள் இனி டெல்லியில் இருந்துதான் எடுக்கப்படும்.
ஊரக வேலைத்திட்ட புதிய சட்டத்தை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று சோனியா காந்தி அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியில் மகாத்மா காந்தி பெயரில் கொண்டு வரப்பட்ட 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை மாற்றி, அதற்கு பதிலாக 'வி.பி. ஜி ராம் ஜி' என்ற 125 நாள் வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றியது. இதனை எதிர்க்கட்சிகள் இன்னும் எதிர்த்து வருகின்றன.
இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நேற்று ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார்.
அதில் அவர்," கிராமப்புற ஏழைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இந்த திட்டம் வேண்டுமென்றே பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்தை மோடி அரசு முற்றிலுமாக ஒழித்துவிட்டது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றத்தின் ஒருமித்த கருத்துடன் இயற்றப்பட்டது. கோடிக்கணக்கான கிராமப்புற குடும்பங்களுக்கு, குறிப்பாக ஏழைகள், ஓரங்கட்டப்பட்ட மற்றும் சமூகத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு வேலைவாய்ப்பு மற்றும் கண்ணியத்தை வழங்கும் ஒரு புரட்சிகரமான நடவடிக்கையாக அது இருந்தது.
அந்த சட்டம் கிராமப்புற குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பை பெறுவதற்கான சட்டப்பூர்வ உரிமையை வழங்கியது. மக்கள் தங்கள் சொந்த கிராமங்களில் வாழ்வாதாரத்தை ஈட்ட உதவுவதன் மூலம் துன்பகரமான இடம்பெயர்வைத் தடுக்க உதவியது. மேலும் மகாத்மா காந்தியின் கிராம சுயராஜ்ஜியக் கண்ணோட்டத்தை நனவாக்குவதற்கான ஒரு உறுதியான படியாக மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டம் இருந்தது.
ஆனால் கடந்த 11 ஆண்டுகளாக, கிராமப்புற வேலையற்றோர், ஏழைகள் மற்றும் விளிம்புநிலை சமூகங்களின் நலன்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தன. கொரோனா காலத்தில் பல லட்சக்கணக்கானவர்களுக்கு உயிர்நாடியாக இருந்தது. ஆனால் சமீபத்தில் அந்த திட்டத்தை புல்டோசர் கொண்டு தாக்கி விட்டது.
மகாத்மா காந்தி சட்டத்தின் கட்டமைப்பில் செய்யப்பட்ட மாற்றங்கள் பற்றி எதிர்க்கட்சிகளிடம் கலந்துரையாடல் நடத்தப்படவில்லை. மகாத்மா காந்தியின் பெயர் கூட இந்த திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. யாருக்கு வேலை, எங்கே, எப்படி? என்பது குறித்த முடிவுகள் இனி டெல்லியில் இருந்துதான் எடுக்கப்படும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தைக் கொண்டு வந்து செயல்படுத்தியதில் காங்கிரஸ் முக்கிய பங்கு வகித்தாலும், இந்த திட்டம் ஒருபோதும் எந்தவொரு கட்சியை பற்றியதாகவும் இல்லை. மாறாக தேசிய மற்றும் பொது நலனைப் பற்றியதாகவே இருந்தது. தற்போது அந்த சட்டத்தை பலவீனப்படுத்தி இருப்பது, கோடிக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நிலமற்ற கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தின் மீதான தாக்குதலுக்கு சமம்" என்றார்.
மேலும், இந்த புதிய சட்டத்தை கருப்புச் சட்டம் என அழைத்த அவர், அதனை எதிர்த்து போராடுவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் தலைவர்களும், லட்சக்கணக்கான தொண்டர்களும் உறுதுணையாக நிற்பதாகவும் கூறினார்.
ஏற்கனவே இந்த விவகாரத்தை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதனை ஏற்று தற்போது சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
- புதிய விதிகளின் கீழ் விருதுகள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் அதனபடிதான் விருது வென்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கம் விரும்புகிறது.
- தன்னாட்சி அமைப்பின் செயல்பாடுகளை மத்திய அரசு முடக்குவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
தமிழ் உட்பட இந்திய மொழிகளில் படைக்கப்ட்ட இலக்கியத்திற்காக ஒவ்வோர் ஆண்டும் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சாகித்ய அகாடமி என்பது மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விருதுகள் நேற்று அறிவிக்கப்பட இருந்த நிலையில் மத்திய கலாச்சார அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி விருது வென்றவர்களின் பெயர்கள் அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறையில் அமைச்சகம் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தன்னாட்சி அமைப்பின் செயல்பாடுகளை மத்திய அரசு முடக்குவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
விருது பெற்றவர்களின் பட்டியலை நிர்வாகக் குழு அங்கீகரித்த நிலையில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறவிருந்த சில நிமிடங்களுக்கு முன்பு, அரசு பிரதிநிதிகள் சாகித்ய அகாடமி அதிகாரிகளுக்கு விருது வென்றவர்களின் பட்டியலை அறிவிக்க வேண்டாம் என்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து பேசிய சாகித்ய அகாடமி உறுப்பினர் ஒருவர் "நிர்வாகக் குழு பரிசு பெற்றவர்களின் பட்டியலை அங்கீகரித்த பிறகு, அரசாங்கப் பிரதிநிதிகள் அறிவிப்பை நிறுத்தி வைக்குமாறு பரிந்துரைத்தனர். பரிசு பெற்றவர்களைச் சரிபார்க்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்" என்று தெரிவித்தார்
புதிய விதிகளின் கீழ் விருதுகள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் அதனபடிதான் விருது வென்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கம் விரும்புவதாகக் கூறப்படுகிறது. கடைசி நிமிடத்தில் சாகித்ய அகாடமி விருது செயல்பாடுகளை முடக்கியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
- இதில் இரண்டு ஓடுபாதைகள், ஒரு சிறப்பு சரக்கு முனையம் மற்றும் நவீன வசதிகள் இருக்கும்.
- சென்னை மெட்ரோவின் 4வது கட்டத்தை பரந்தூர் விமான நிலையத் தளம் வரை நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் இட நெருக்கடி அதிகரித்து விட்டது. பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களை கையாள்வது, பயணிகளை வருகையை சமாளிப்பது, புதிய வழித்தடங்கள் மற்றும் விமான நிறுவனங்களை வரவேற்பது போன்றவற்றில் சிக்கல்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன. அதுமட்டுமின்றி சென்னை மாநகர் படிப்படியாக விரிவடைந்து கொண்டே செல்கிறது.
இதுபோன்ற காரணங்களால் சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதையொட்டி பரந்தூர் பகுதியில் பல்வேறு கிராமங்களில் இருந்து நிலத்தை கையகப்படுத்தி விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள 5,747 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி மிகவும் பிரம்மாண்டமான பசுமைவெளி சர்வதேச விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது.
இந்த திட்டத்திற்குத் தேவையான மொத்த நிலத்தில் 1,000 ஏக்கருக்கும் அதிகமான நிலம் கையகப்படுத்தப்பட்டு, நில உரிமையாளர்களுக்கு ரூ.400 கோடிக்கும் அதிகமான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஆனால் இதற்கு ஏகனாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் தங்களின் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படும். இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பூர்வீக நிலத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழல் வரும் என வேதனை தெரிவிக்கின்றனர். இதை சுட்டிக் காட்டி பல மாதங்களாக தொடர் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். நீதிமன்ற வழக்குகள், அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு என பரந்தூர் விமான நிலைய திட்டம் தொடர்ந்து இழுபறியாக சென்று கொண்டிருக்கிறது.
இருப்பினும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முதல் கட்டப் பணிகள் 2029 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அல்லது 2030 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தத் திட்டமும் நான்கு கட்டங்களாக, 2046 ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாபெரும் திட்டத்தின் மொத்த மதிப்பீடு சுமார் ரூ.29,150 கோடி ஆகும்.

இந்த விமான நிலையம் தனது முழுத் திறனை எட்டும்போது ஆண்டுக்கு 100 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக இருக்கும். இதில் இரண்டு ஓடுபாதைகள், ஒரு சிறப்பு சரக்கு முனையம் மற்றும் நவீன வசதிகள் இருக்கும்.
தற்போதுள்ள சென்னை விமான நிலையத்திலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள இந்த புதிய இடம், வரவிருக்கும் சென்னை-பெங்களூரு விரைவுச்சாலைக்கு அருகில் உள்ளது. மேலும், சென்னை மெட்ரோவின் 4வது கட்டத்தை பரந்தூர் விமான நிலையத் தளம் வரை நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் கடன் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையில் ரூ.29,150 கோடி செலவில் புதிய விமான நிலையம் தேவை தானா அதுவும் விளைநிலங்களில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டியதன் தேவை என்ன என்பவை முடிவில்லா முகவரியாகுமோ என்ற அச்சம் கலந்த கேள்வியை கேட்க தவறவில்லை!
- தமிழகத்தில் சராசரியாக ஆண்டுக்கு 30 கோடி மனித சக்தி நாட்கள் உருவாக்கப்பட்டு ரூ.12 ஆயிரம் கோடி ஊதியமாக வழங்கப்படுகிறது.
- குறைவான மக்கள்தொகை கொண்ட தமிழகத்திற்கு குறைவான நிதி தான் ஒதுக்கப்படும்.
தமிழகத்தில் 100 நாள் திட்டம் என்று அழைக்கப்படும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு விபி-ஜி ராம் ஜி என பெயர் மாற்றம் செய்து, அடுத்த நிதியாண்டு முதல் நடைமுறைப்படுத்த உள்ளது. அதோடு, இந்த சட்டத்தின் மூலம் இனி 100 நாட்களுக்கு பதில் 125 நாட்கள் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்து இருக்கிறது. ஆனால் இந்த திட்டத்தின் இதர அம்சங்கள், இந்த திட்டத்தையே முடக்கி போட்டு விடும் என்று எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். உதாரணமாக முன்பு இந்த திட்டத்தில் இந்த திட்டத்திற்கான நிதி உதவி, அதாவது ஊழியர்களுக்கான சம்பளம் முழுவதும் மத்திய அரசு வழங்கியது. அதே நேரத்தில் சொத்துகளை உருவாக்குதல் திட்டத்தின் கீழ் பொருட்களுக்கான செலவில் மத்திய அரசு 75 சதவீதமும், மாநில அரசின் பங்கு 25 சதவீதமூம் இருந்தது.
ஆனால் புதிய திட்டத்தில் ஊழியர்கள் சம்பளம் மற்றும் பொருட்களுக்கான செலவில் மத்திய அரசின் பங்கு 60 சதவீதமும், மாநில அரசின் பங்கு 40 சதவீதமும் இருக்கும். இது மாநிலங்களுக்கு பெரும் நிதி சுமை ஏற்படுத்தும். குறிப்பாக இந்த திட்டத்தால் மற்ற மாநிலங்களை விட தமிழகத்திற்கு மிக அதிக பாதிப்பு ஏற்பட உள்ளது. ஏனென்றால் இந்தியாவிலேயே, இந்த திட்டத்தால் அதிகம் பலன் பெற்ற மாநிலமாக தமிழ்நாடு தான் முன்னணியில் இருக்கிறது.தமிழ்நாட்டில், இந்த திட்டத்தின் கீழ் வேலை செய்ய மொத்தம் 88 லட்சத்து 56 ஆயிரம் பேர் பதிவு செய்து இருக்கின்றனர். ஆனால் இந்த எண்ணிக்கையை விட பீகார், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகம் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் அதிகம் நிதி பெறுவதில் தமிழ்நாடு தான் முன்னணியில் இருக்கிறது.
தமிழகத்தில் சராசரியாக ஆண்டுக்கு 30 கோடி மனித சக்தி நாட்கள் உருவாக்கப்பட்டு ரூ.12 ஆயிரம் கோடி ஊதியமாக வழங்கப்படுகிறது. இந்த தொகை மற்ற மாநிலங்களை விட மிக அதிகம். ஆனால் அதே மதிப்பில் இந்த திட்டத்தை வரும் ஆண்டிலும் தமிழக அரசு செயல்படுத்தினால், அதாவது குறைந்தபட்சம் ரூ.4 ஆயிரத்து 600 கோடி தமிழக அரசு ஒதுக்க வேண்டி வரும். ஒரே ஆண்டில் இவ்வளவு பெரிய தொகையை நிச்சயம் ஒதுக்க முடியாது. எனவே இந்த திட்டத்தின் செலவை குறைக்க மாநில அரசு முற்படும். அப்படி செய்தால் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விடும். இது தவிர இந்த புதிய திட்டத்தால் தமிழக அரசுக்கு ஏற்படும் மற்ற பாதிப்புகள் விவரம் வருமாறு:-
* பழைய திட்டத்தில் தமிழக அரசு, ஒரு நிதியாண்டிற்கு எவ்வளவு திட்டங்களை செயல்படுத்த போகிறோம் என்று கூறி மத்திய அரசுக்கு உத்தேச அறிக்கை கொடுப்பார்கள். பின்னர் திட்டங்களை கூடுதலாக செயல்படுத்தினாலும், அந்த தொகையையும் மத்திய அரசு கொடுத்து விடும். ஆனால் இனி அது போல் நடக்காது. கூடுதலாக மேற்கொள்ளப்படும் திட்டத்திற்கான நிதியை 100 சதவீதம் மாநில அரசு மட்டுமே ஏற்கவேண்டும்.
* இந்த திட்டத்தின் கீழ் எந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதனை கிராம ஊராட்சிகளும், மாநில அரசும் முடிவு செய்தது. ஆனால் இனி மத்திய அரசும் அதனை முடிவு செய்து ஒப்புதல் வழங்கும்.
* முன்பு தமிழக அரசு எவ்வளவு ரூபாய் மதிப்பீட்டுக்கு திட்டம் வகுத்தாலும், அதனை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும். ஆனால் இனி நிதி ஒதுக்கீட்டினை மத்திய அரசு தான் முடிவு செய்யும். அதாவது மக்கள்தொகை போன்ற அம்சங்களை கவனத்தில் கொண்டு தான் மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். எனவே குறைவான மக்கள்தொகை கொண்ட தமிழகத்திற்கு குறைவான நிதி தான் ஒதுக்கப்படும்.
* கிராமப்புறங்களில் இந்த திட்டத்தின் கீழ் கட்டப்படும் பஞ்சாயத்து அலுவலகம், அங்கன்வாடி மையம், ரேஷன் கடை மற்றும் சிமெண்ட் ரோடு ஆகியவற்றுக்கும் 100 நாள் திட்டத்தின் வேலை உழைப்பு நாட்கள் பயன்படுத்தப்பட்டது. மேலும் இதற்கான பொருட்கள் செலவில் மத்திய அரசு 75 சதவீதம் வழங்கியது. ஆனால் இனி 60 சதவீதம் தான் வழங்கும். எனவே அதற்கும் தமிழக அரசுக்கு கூடுதல் நிதி சுமை ஏற்படும்.
- தமிழ்நாட்டுக்கான வேலை நாட்களைக் குறைக்கப் போகிறார்கள் என நான் சுட்டிக்காட்டியிருந்ததை வசதியாக மறந்துவிட்டார் எதிர்க்கட்சித் தலைவர்.
- துணிச்சலாக, வெளிப்படையாக #VBGRAMG-யைப் பழனிசாமி அவர்களால் ஆதரிக்க முடியுமா? சவால் விடுகிறேன்...
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மக்களைக் காக்கக் குரல்கொடுக்கச் சொன்னால், டெல்லியைக் குளிர்விக்க அறிக்கை விட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்!
நாம் தட்டி எழுப்பிய பின் துயில்கலைந்து, #MGNREGA திட்டத்தின் பெயர் மாற்றத்தை மட்டும் கைவிடக் கோரிப் 'பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்' தனது ஸ்டைலில் 'அழுத்தம்' கொடுத்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி!
அத்தோடு, 100 நாள் வேலைத்திட்டம் 125 நாட்களாக உயரவுள்ளதாகவும் ஒரு பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார். 125 வேலை நாட்கள் என்பது பேப்பரில் மட்டுமே இருக்கப் போகிறது என அனைவருமே சுட்டிக்காட்டியும் அறியாத அப்பாவியா அவர்?
மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் சாதனை படைத்ததற்காக, தொகுதி நிர்ணயம் மூலமாகத் தமிழ்நாட்டின் தொகுதிகளைக் குறைக்கப் பார்ப்பதைப் போலவே, வறுமை ஒழிப்பில் நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்ததற்குத் தண்டனையாகத் தமிழ்நாட்டுக்கான வேலை நாட்களைக் குறைக்கப் போகிறார்கள் என நான் சுட்டிக்காட்டியிருந்ததை வசதியாக மறந்துவிட்டார் எதிர்க்கட்சித் தலைவர்.
ஒன்றிய அரசின் நிதியில் செயல்படுத்திய #MGNREGS திட்டத்தைச் சிதைத்து, நிதிச் சுமையை மாநிலங்களின் தலையில் #VBGRAMG கட்டுவதைப் பற்றியும் வாய்திறக்க அவருக்கு வலிக்கிறது போலும்.
தனது 'Owner' பா.ஜ.க. செய்வது சரி என்றால், துணிச்சலாக, வெளிப்படையாக #VBGRAMG-யைப் பழனிசாமி அவர்களால் ஆதரிக்க முடியுமா? சவால் விடுகிறேன்... என பதிவிட்டுள்ளார்.
- 2025-ம் ஆண்டு விரைவில் முடிவடைய உள்ளதால், இந்த உதவித் தொகைக்கான விண்ணப்ப காலம் விரைவில் முடிவடையும்.
- இந்த வாய்ப்பை தவறவிட்டால் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது என்ற வாசகங்களுடன் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சென்னை:
சமீபகாலமாக டிஜிட்டல் மோசடி குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மோசடிக்காரர்கள் வங்கி அதிகாரிகள் போல் பேசி, கடவு சொற்களை பெறுவதும், சிறிது நேரத்திலேயே கணக்கில் இருந்த பணத்தை சூறையாடுவதும் தொடர்கதையாகி விட்டது. இதை தடுக்க 'சைபர்' கிரைம் போலீசாரும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதுடன், விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தி வருகிறார்கள்.
ஆனாலும், திரை மறைவில் கொள்ளையர்கள் இருந்துகொண்டு செல்போனுக்கு போலியான குறுஞ்செய்திகளை அனுப்புகிறார்கள். அந்த லிங்கை தொட்ட சில கணங்களில் அவர்களது வங்கி கணக்கில் பணம் இல்லாமல் முற்றிலும் துடைத்து எடுக்கப்படுகிறது.
இந்த நிலையில், "மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். 2025-ம் ஆண்டு விரைவில் முடிவடைய உள்ளதால், இந்த உதவித் தொகைக்கான விண்ணப்ப காலம் விரைவில் முடிவடையும். எனவே தயவுசெய்து கீழே உள்ள லிங்கை உடனடியாக அழுத்தி உங்கள் தொகையைப் பெறுங்கள். இந்த வாய்ப்பை தவறவிட்டால் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது" என்ற வாசகங்களுடன் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதனை பலரும் பகிர்ந்து வருவதோடு, உதவிதொகை பெற விண்ணப்பிக்குமாறு தங்கள் குடும்பத்தினரையும் வற்புறுத்துகிறார்கள். இது தூண்டில் போட்டு மீனை பிடிப்பதுபோல, வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை லாவகமாக எடுக்க கையாளப்படும் முயற்சியாகும் என சிலர் லிங்கை தொடுவதை தவிர்த்து வருகின்றனர். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "மத்திய அரசின் சார்பில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30 ஆயிரம் வழங்கும் திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. இது போலியானச் செய்தி. வதந்தியைப் பரப்பாதீர்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
- தமிழக அரசின் மீது சுமை கூடுகிறது.
- ஏழைகளுக்கு சேர வேண்டிய பணம், உதவி, நலத்திட்டங்கள் எல்லாம் குறைகிறது.
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, பாராளுமன்றத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. இதில் உங்களின் பங்களிப்பு எப்படி இருந்தது? கருத்து என்ன? என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு கமல்ஹாசன், இதில் கருத்து தான் சொல்ல முடியும். காந்தியார் அவர்களின் பெயரை காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை. இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் தமிழக அரசின் மீது சுமை கூடுகிறது. ஏழைகளுக்கு சேர வேண்டிய பணம், உதவி, நலத்திட்டங்கள் எல்லாம் குறைகிறது. அதை மீட்கவும், காக்கவும் தான் முயற்சி செய்ய வேண்டும். அதை விட்டு வேறு இடத்தில் விளையாட கூடாது என்று தான் என்னுடைய தாழ்மையான கருத்து என்றார்.
தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தலையொட்டி பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டவர்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் வருகை தர உள்ளனர். இது அவர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு அதை நான் எப்படி சொல்லமுடியும்? மக்கள்தான் சொல்லமுடியும் என்றார்.
2026 தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா? என்ற கேள்விக்கு கண்டிப்பாக உண்டு என்று கூறினார்.
- சட்டங்கள் என்பவை நாட்டையும் மக்களையும் முன்னேற்றுவதற்கானதாக இருக்க வேண்டும்
- கார்ப்பரேட்களுக்கு ஆதரவாகச் சட்டங்களை இயற்றுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காகவே மக்கள் விரோதச் சட்டங்களை நிறைவேற்றுவது வன்மையான கண்டனத்திற்குரியது. சட்டங்கள் என்பவை நாட்டையும் மக்களையும் முன்னேற்றுவதற்கானதாக இருக்க வேண்டுமே தவிர, கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சாதகமாக இருக்கக் கூடாது.
அணுசக்தித் துறையில் தனியாரை அனுமதிப்பது என்பது மக்களுக்கும் நாட்டிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். நாடாளுமன்ற ஜனநாயகத்தையும், தங்களுக்குள்ள பெரும்பான்மையையும் பயன்படுத்தி கார்ப்பரேட்களுக்கு ஆதரவாகச் சட்டங்களை இயற்றும் ஒன்றிய அரசின் இந்த அணுகுமுறை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்துள்ளார்.
- வறுமையை ஒழித்த சாதனைக்குத் தண்டனையாக தமிழ்நாட்டில் நூறு நாள் வேலைத்திட்டமே நின்றுபோகும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளோம்.
- உங்கள் தலைவி அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டிருப்பாரா?
சென்னை:
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு, மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா?
கிராமப்புற ஏழை மக்களின் வயிற்றிலேயே அடிக்கும் #VBGRAMG குறித்து எதிர்க்கட்சி அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன?
#ThreeFarmLaws, #CAA போல இதிலும் அமித்ஷாவுக்கு ஆமாம் சாமி போட்டு ஆதரவு தரப்போகிறாரா திருவாளர் பழனிசாமி?
#MGNREGA-வில் காந்தியடிகளின் பெயரை அகற்றிவிட்டு, சொன்னால் வாய் சுளுக்கிக் கொள்ளும்படி இந்தியில் பெயரிட்டிருக்கிறார்கள். இந்தித் திணிப்பை எதிர்த்து வென்ற பேரறிஞர் அண்ணாவின் பெயரைக் கட்சியின் பெயரில் வைத்துக்கொண்டு, இதை எதிர்க்கக் கூடவா தயக்கம்?
திட்டத்துக்கான நிபந்தனைகள் எல்லாம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்! நிதிக்கு மட்டும் மாநில அரசு பங்களிக்க வேண்டும் என்பதை அதிமுக எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்கிறதா? உங்கள் தலைவி அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டிருப்பாரா?
வறுமையை ஒழித்த சாதனைக்குத் தண்டனையாக தமிழ்நாட்டில் நூறு நாள் வேலைத்திட்டமே நின்றுபோகும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளோம். இதற்கு, எப்படி முட்டு கொடுக்கப் போகிறார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்?
இவ்வளவு குனிந்து கும்பிடு போடும் உங்களது கட்சிக்கு, "அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற பெயர் எதற்கு?
நான் கேட்கவில்லை; தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள்! என்று கூறியுள்ளார்.
- இந்தத் திட்டத்தின்படி வேலை வழங்கப்படும் நாள்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
- இந்த இரு அம்சங்களும் ஏற்கனவே இருந்தவாறே தொடர மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியா முழுவதும் 20 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்வதற்கான சட்ட முன்வரைவு நாடாளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த சட்ட முன்வரைவில் வரவேற்கத்தக்க பல அம்சங்கள் இருந்தாலும், திட்டத்தின் பெயரையும், நிதிப்பகிர்வு முறையையும் மாற்றுவது நியாயமானது அல்ல.
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாகவும், வறுமை ஒழிப்பு ஆயுதமாகவும் திகழும் இந்தத் திட்டத்தின்படி 100 நாள்கள் வேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் கூட, மொத்த பயனாளிகளில் 5 விழுக்காட்டினருக்குக் கூட முழு நாள்கள் வேலை வழங்கப்படவில்லை. அதனால், இந்தத் திட்டத்தின்படி வேலை வழங்கப்படும் நாள்களின் எண்ணிக்கையை 150 நாள்களாக உயர்த்த வேண்டும்; 50 % பயனாளிகளுக்காவது முழுமையாக 150 நாள்கள் வேலைவழங்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது. இத்தகைய சூழலில் இந்தத் திட்டத்தின்படி வேலை வழங்கப்படும் நாள்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இது பயனாளிகளுக்கு அதிக நாள்கள் வேலை கிடைக்க வகை செய்யும்.
அதேபோல், நடவு, அறுவடை போன்ற விவசாயப் பணிகள் நடைபெறும் நாள்களில் இந்தத் திட்டப்பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று அறிவிக்கப்பட்டிருப்பதும் பயனளிக்கும் விஷயமாகும். இதன் மூலம் வேளாண் பணிகளுக்கு தடையில்லாமல் ஆள்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
ஆனால், இந்தத் திட்டத்தின் பெயரில் இருந்து மகாத்மா காந்தியடிகளின் பெயர் நீக்கப்பட்டு, இந்தியில் பெயர் வைக்கப்பட்டிருப்பதும், திட்டச் செலவில் இதுவரை இருந்த 10%க்கு பதிலாக 40 விழுக்காட்டை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விதிகள் மாற்றப்பட்டிருப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த இரு அம்சங்களும் ஏற்கனவே இருந்தவாறே தொடர மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். மேலும், இந்தத் திட்டத்தின்படி எங்கு, எந்த நேரத்தில், என்ன பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரமும் மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கே வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.






