என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Strike"

    • இலங்கை கடற்படையினரின் கைது செய்யும் படலம் தொடர்ந்து நடந்து வருகிறது.
    • மத்திய அரசு இதுவரை கண்டனம் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நேற்று அதிகாலை தெற்கு மன்னார் கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி டேவிட் என்பவரின் படகில் இருந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. கடந்த 5 நாட்களில் மட்டும் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த 34 மீனவர்களை இலங்கை கடற்படை எல்லைதாண்டி வந்ததாக கூறி கைது செய்திருப்பது மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த 21-ந் தேதி மீனவர்களை விடுவிக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று பாம்பன் மீனவர்கள் கைதை கண்டித்து இன்று பாம்பனில் மீனவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பாம்பன் துறைமுகம், மீன்பிடி இறங்கு தளங்களில் 100-க்கும் மேற்பட்ட விசை படகுகள் கடலுக்குள் செல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளன. திடீர் வேலைநிறுத்தம் காரணமாக பாம்பனில் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையினரின் கைது செய்யும் படலம் தொடர்ந்து நடந்து வருகிறது. மத்திய அரசு இதுவரை கண்டனம் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது. இதனால் எங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே மத்திய அரசு இந்த விவகாரத்தை உரிய நடவடிக்கை எடுத்து மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

    • கோவையில் இருந்து கேரளாவுக்கு வேலைக்கு செல்வோர் தினமும் இந்த பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர்.
    • கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

    கோவை:

    மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் இன்று காலைமுதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்திற்கு கேரள அரசு போக்குவரத்து ஊழியர்கள் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பொதுபோக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    கோவை காந்திபுரத்தில் இருந்து கொச்சி, எர்ணாகுளம், திருச்சூர், திருவனந்தபுரம், கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு 12 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதேபோன்று, உக்கடத்தில் இருந்து குருவாயூர், பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 20-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    கேரளாவில் இருந்து கோவைக்கு வேலைக்கு வருவோர், கோவையில் இருந்து கேரளாவுக்கு வேலைக்கு செல்வோர் தினமும் இந்த பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் தொழிற்சங்கங்களின் போராட்டத்துக்கு கேரள போக்குவரத்து ஊழியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் அங்கு பஸ்கள் ஓடவில்லை. இதன் காரணமாக கேரளாவில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் அனைத்து பஸ்களும் இன்று ஓடவில்லை. உக்கடம் பஸ் நிலையத்தில் கேரள பஸ்கள் நிறுத்தி வைக்க கூடிய இடம் இன்று பஸ்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    கேரள போக்குவரத்து கழகத்தின் சார்பில் கோவையில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் பஸ்கள் ஓடவில்லை. இதனால் கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

    சிலர் ரெயில்கள் மூலமாக கேரளாவுக்கு சென்றனர். இதனால் கேரளாவில் இருந்து கோவை வந்த ரெயில்களில் முன்பதிவு இல்லா பெட்டிகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    தமிழக-கேரள எல்லையான வாளையாறு சோதனை சாவடி வரை கோவையில் இருந்து டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. 

    • போராட்டத்திற்கு கேரள அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் முழு ஆதரவு.
    • தொழிலாளர்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன் - ராகுல் காந்தி

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் மற்றும் போராட்டம் நடத்தி வருகிறது.

    29 பழைய தொழிலாளர் சட்டங்களை நீக்கிவிட்டு நவம்பர் 2025-இல் அறிவிக்கப்பட்ட நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும், அணுசக்தி துறையை தனியாருக்கு திறந்து விடும் SHANTI சட்டம், மின்சாரத் திருத்த சட்டம், விவசாயிகளை பாதிக்கும் வரைவு விதை மசோதா ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும், வி.பி.ஜி ராம் ஜி சட்டத்தை ரத்து செய்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீண்டும் பழையபடி அமல்படுத்த வேண்டும்.

    அமெரிக்காவுடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை கைவிட வேண்டும் மற்றும் விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய வேண்டும், விக்சித் பாரத் - கிராமின் மிஷன் 2025 சட்டத்தை ரத்து செய்து, இளைஞர்களுக்கு முறையான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

    போராட்டத்திற்கு கேரள அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் முழு ஆதரவு அளித்துள்ளதால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.   

    இந்நிலையில் போராட்டத்திற்க்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இன்று, நாடு முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் விவசாயிகளும் தங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.

    புதிய நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளும் தங்கள் உரிமைகளைப் பலவீனப்படுத்தும் என்று தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர்.

    வர்த்தக ஒப்பந்தம் தங்கள் வாழ்வாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

    மேலும் MNREGA-வை பலவீனப்படுத்துவது அல்லது நீக்குவது கிராமங்களுக்கான கடைசி ஆதரவையும் பறித்துவிடும்.

    அவர்களின் எதிர்காலம் குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டபோது, அவர்களின் குரல்கள் புறக்கணிக்கப்பட்டன.

    மோடிஜி இப்போது கேட்பாரா? அல்லது அவர் மீதான பிடி இன்னும் அதிகமாக உள்ளதா? தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் போராட்டங்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.   

    • ஆன்லைன் டாக்சிகள் மற்றும் தனியார் வாகனங்களை மட்டுமே சாலைகளில் காண முடிந்தது.
    • போராட்டம் காரணமாக இன்று நடக்க இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு.

    தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தது.

    அதன்படி தொழிற் சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று நடந்தது. கேரள மாநிலத்தில் தொழிற்சங்கங்களின் 24 மணி நேர வேலை நிறுத்தம் நள்ளிரவில் தொடங்கியது. ஐக்கிய விவசாயிகள் முன்னணி, விவசாய தொழிலாளர் அமைப்புகள், சி.பி.எம். மற்றும் சி.பி.ஐ. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

    கேரள அரசு போக்குவரத்து கழகத்தில் இடதுசாரி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் அரசு பஸ்கள் ஓடவில்லை. அது மட்டுமின்றி தனியார் பஸ்களும் இயங்கவில்லை.

    ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் ஆட்டோ, வாடகை கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் இயக்கப்படவில்லை. மேலும் பெரும்பாலான கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன. இதனால் மாநிலம் முழுவதும் பொதுமக்களின் இயல்பு கடுமையாக பாதிக்கப்பட்டது.

    கொச்சியை பொருத்த வரை அரசு மற்றும் தனியார் பஸ்கள் எதுவும் ஓடவில்லை. வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் பல இடங்களில் பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஒருசில ஓட்டல்கள் மட்டும் திறந்திருந்தன. ஆன்லைன் டாக்சிகள் மற்றும் தனியார் வாகனங்களை மட்டுமே சாலைகளில் காண முடிந்தது.

    திருவனந்தபுரம் தம்பானூர் பஸ் நிலையத்தில் இருந்தும் எந்த பஸ்களும் இயக்கப்படவில்லை. அங்கு ஏராளமான அரசு பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. வேலைநிறுத்த போராட்டம் தொடங்குவதற்கு முன்பு புறப்பட்ட சில பஸ்கள் மட்டும் இன்று அதிகாலை பஸ் நிலையத்திற்கு வந்தன. அதன்பிறகு அந்த பஸ்கள் அங்கேயே நிறுத்தப்பட்டன.

    திருவனந்தபுரம், கொச்சியை போன்று கோழிக்கோடு உள்ளிட்ட மாநிலத்தின் பல இடங்களிலும் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. மருத்துவ சிகிச்சைக்காக வெளி யூர்களில் இருந்து ரெயில்களில் திருவனந்தபுரத்திற்கு வந்த நோயாளிகள் பலர், மருத்துவமனைகளுக்கு செல்ல வாகனம் கிடைக்கா மல் தவித்தனர்.

    ரெயில் நிலையத்தின் முன் தவித்தபடி நின்ற பல நோயாளிகளை, மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்சு வாகனத்தை போலீசார் ஏற்பாடு செய்து கொடுத்தனர். வேலை நிறுத்த போராட்டம் காரணமாக இன்று நடக்க இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மாணவ-மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் பஸ் நிலையங்களில் தவித்த படி நின்றனர்.

    • இந்த பாரத் பந்த் போராட்டத்தில் சுமார் 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பார்கள்
    • இந்திய விவசயிகளை பாதிக்கும் இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து மத்திய அரசு விலக வேண்டும்.

    மத்திய அரசின் விவசாயம், தொழிலாளர் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து இன்று (வியாழக்கிழமை) நாடு தழுவிய 'பாரத் பந்த்' வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

    INTUC, AITUC, HMS, CITU உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு சையுக்த கிசான் மோர்ச்சா உள்ளிட்ட விவசாய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

    இந்த பாரத் பந்த் போராட்டத்தில் சுமார் 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என்றும், நாடு முழுவதும் 600 மாவட்டங்களில் இதன் தாக்கம் இருக்கும் என்றும் AITUC பொதுச் செயலாளர் அமர்ஜீத் கவுர் தெரிவித்துள்ளார். 

    கோரிக்கைகள்:

    29 பழைய தொழிலாளர் சட்டங்களை நீக்கிவிட்டு நவம்பர் 2025-இல் அறிவிக்கப்பட்ட நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும், அணுசக்தி துறையை தனியாருக்கு திறந்து விடும் SHANTI சட்டம், மின்சாரத் திருத்த சட்டம் (Electricity Amendment Bill), விவசாயிகளை பாதிக்கும் வரைவு விதை மசோதா (Draft Seed Bill) ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும். 

    வி.பி.ஜி ராம் ஜி சட்டத்தை ரத்து செய்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீண்டும் பழையபடி அமல்படுத்த வேண்டும்.

    அமெரிக்காவுடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை கைவிட வேண்டும் மற்றும் விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய வேண்டும், விக்சித் பாரத் - கிராமின் மிஷன் 2025 சட்டத்தை ரத்து செய்து, இளைஞர்களுக்கு முறையான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

    சேவைகள் பாதிப்பு:

    வேலைநிறுத்தம் மற்றும் போராட்டத்தால் இன்று, போக்குவரத்து மற்றும் அரசுத் துறை சேவைகளில் பாதிப்பு ஏற்படும். மேலும் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA) உள்ளிட்ட வங்கி அமைப்புகள் இதில் பங்கேற்பதால், பொதுத்துறை வங்கிகளின் சேவையில் பாதிப்பு ஏற்படக்கூடும்.

    ஆனால் வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது. ஊழியர்கள் வராததால் சில சேவைகள் பாதிக்கும். மேலும் வழக்கம்போல இயங்கும் பேருந்துகள், பள்ளிகள், பிற சேவைகளில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. 

    • 2013-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மாற்றி அமைக்காமல் இருப்பது வேதனையானது.
    • கட்டணத்தை மாற்றி புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாடு ஆட்டோ-கால் டாக்சி ஓட்டுனர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த போராட்டம் இன்று நடைபெற்றது.

    ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும், டூரிஸ்ட் கேப் , மேக்ஸி கேப் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவியை அரசு செலவில் பொருத்த வேண்டும், ஓலா, உபர், ராபிடோ, போர்ட்டர் போன்ற வாகனங்களை அக்ரிகேட்டர் சட்டத்தின் கீழ் முறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடந்தது.

    சென்னையில் 30 ஆயிரம் பேர் இந்த வேலை நிறுத்தத் தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கூட்டமைப்பு சங்கங்களின் தலைவர் ஜாகிர் உசேன் கூறியதாவது:-

    13 ஆண்டுகளாக மீட்டர் கட்டணத்தை உயர்த்தாமல் அரசு கிடப்பில் போட்டுள்ளது. இதனால் ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மாற்றி அமைக்காமல் இருப்பது வேதனையானது.

    எனவே கட்டணத்தை மாற்றி புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள வாகனங்களை முறைப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் பிரதான கோரிக்கையாகும்.

    இவற்றை உடனடியாக இந்த அரசு செய்ய வேண்டும் என வலியுறுத்தி பொது வேலை நிறுத்தம் நடக்கிறது. மாலை 4 மணி அளவில் கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொள்கிறார்கள் என்றார். 

    • சுமார் 25 கோடி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
    • தபால் துறை, இன்சூரன்ஸ், வங்கிகள், தணிக்கை துறை உள்ளிட்ட பல்வேறு துறை ஊழியர்கள் இதில் கலந்துகொள்ள தயாராகி வருகின்றனர்.

    சென்னை:

    மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் வருகிற 12-ந்தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

    மத்திய தொழிற்சங்கங்கள் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஐ. என்.டி.யூ.சி, எல்.பி.எப். உள்ளிட்ட 12 தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

    தொழிலாளர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களை கண்டித்து போராட்டம் நடக்கிறது. தொழிலாளர் நலச் சட்டம் அனைத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக 4 ஆக சுருக்கி லேபர் கோடு என்று அமைக்கப்பட்டு சட்டங்கள் இருப்பதை கண்டிக்கும் வகையில் போராட்டத்தை தொழிலாளர்கள், விவசாயிகள் நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

    சுமார் 25 கோடி தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

    தபால் துறை, இன்சூரன்ஸ், வங்கிகள், தணிக்கை துறை உள்ளிட்ட பல்வேறு துறை ஊழியர்கள் இதில் கலந்துகொள்ள தயாராகி வருகின்றனர்.

    தொழிலாளருக்கு விரோதமாக கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர் சங்கங்கள் உள்ளிட்ட சில சங்கங்களும் இப்போராட்டத்திற்கு ஆதரவளித்து களத்தில் இறங்க உள்ளன.

    12-ந்தேதி அண்ணா சாலையில் உள்ள தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடத்த திட்டமிட்டு இருப்பதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • வங்கிகளுக்கு மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
    • வாரத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோருகின்றனர்.

    இன்று (ஜனவரி 27) நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

    வங்கிகளில் வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை முறையை உடனடியாக அமல்படுத்தக் கோரி இந்த வேலை நிறுத்தம் நடத்தப்பட உள்ளது.

    தற்போது வங்கிகளுக்கு மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

    வாரத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும், அதற்கு பதிலாக வார நாட்களில் தினமும் 40 நிமிடங்கள் கூடுதல் நேரம் பணியாற்றவோம் என வங்கி சங்கங்கள் தெரிவித்தன.

    இந்நிலையில் ஜனவரி 23 அன்று மத்திய தொழிலாளர் ஆணையருடன் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்படாததால், வங்கி சங்கங்களின் கூட்டமைப்பான 'யுனைடெட் போரம் ஆஃப் வங்கி யூனியன்ஸ்' இன்று வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

    ஸ்டேட் பேங்க், பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் கனரா வங்கி உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகளின் கிளைகளில் பணியாற்றும் ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.

    இதனால் பணம் டெபாசிட் செய்தல், பணம் எடுத்தல் உள்ளிட்ட வங்கி சேவைகள் பாதிக்கப்படும்.

    அதெல்லாம், HDFC, ICICI, Axis போன்ற தனியார் வங்கி ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. எனவே தனியார் வங்கிச் சேவைகள் வழக்கம் போல் இயங்கும்.  

    • எங்கள் கோரிக்கைகளை 6 மாத காலத்திற்குள் நிறைவேற்றுவதாக கடந்த 2024-ம் ஆண்டு இந்திய வங்கிகள் சங்கம்உறுதி அளித்தது.
    • கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட போராட்டம், அரசின் உறுதிமொழியை ஏற்று ஒத்திவைக்கப்பட்டது.

    சென்னை:

    அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    எல்.ஐ.சி. நிறுவனத்தில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை வழங்கிய மத்திய அரசின் முடிவை ஏற்க முடியாது. மேலும், வங்கி ஊழியர்களுக்கு வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை, வேலை நேரத்தை முறைப்படுத்துதல், ஓய்வூதியத்தை உயர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நாங்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறோம். எங்கள் கோரிக்கைகளை 6 மாத காலத்திற்குள் நிறைவேற்றுவதாக கடந்த 2024-ம் ஆண்டு இந்திய வங்கிகள் சங்கம் (ஐ.பி.ஏ.) உறுதி அளித்தது. ஆனால், இதுவரை அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

    கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட போராட்டம், அரசின் உறுதிமொழியை ஏற்று ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அரசுடன் எந்த முன்னேற்றமும் இல்லாததால், வருகிற ஜனவரி 27-ந்தேதி ஒரு நாள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • பொங்கல் முடிந்த பிறகு உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவை அறிவிப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

    சென்னை:

    அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (போக்டா) சார்பாக தொடர் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    அரசு டாக்டர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 354 அரசாணையை மறுவரையறை செய்ய வேண்டும் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு படி ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி இந்த போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

    இதுகுறித்து அரசு ஜனநாயக டாக்டர்கள் சங்கங்க ளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பி பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    நீண்ட காலமாக நாங்கள் முன் வைத்துள்ள கோரிக்கையை அரசு இதுவரை பரிசீலிக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினோம். அவர் 19-ந்தேதி இதுகுறித்து நிதித்துறை செயலாளர் இடம் பேசி முடிவு அறிவிப்பதாக கூறியுள்ளார்.

    19-ந்தேதி எங்களது கோரிக்கை பரிசீலிக்கப்படாவிட்டால் 20-ந்தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம். முதல் கட்டமாக 48 மணி நேரம் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளப்படும், பின்னர் புறநோயாளிகள் புறக்கணிப்பு போராட்டம், அதனைத் தொடர்ந்து சாகும் வரை போராட்டம், காலவரையற்ற வேலை நிறுத்தம் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    எனவே பொதுமக்கள் நலன் பாதிக்காத வகையில் அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும். பொங்கலுக்குள் எங்களுக்கு தீர்வு கிடைக்குமா? என்று பார்ப்போம். ஆனால் பொங்கல் முடிந்த பிறகு உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவை அறிவிப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 18 நாட்களுக்கு பிறகு மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து சேவை தொடங்கியது.
    • போக்குவரத்துத்துறை அமைச்சர் உறுதிமொழியை அடுத்து ஸ்டிரைக் வாபஸ்.

    சாலை வரி பிரச்சனை தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில், 18 நாட்களுக்கு பிறகு மாநிலங்களுக்கு இடையிலான ஆம்னி பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளது.

    போக்குவரத்துத்துறை அமைச்சர் உறுதிமொழியை அடுத்து ஸ்டிரைக் வாபஸ் பெற்றுள்ளதாக ஆம்னி பேருந்து சங்கம் தெரிவித்துள்ளது.

    மேலும், சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் பேருந்து சேவை தொடங்கியுள்ளது.  

    • சென்னையில் சேப்பாக்கம் எழிலகம் வளாகத்திலும் மற்ற மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகம் அருகிலும் இப்போராட்டம் நடைபெற்றது.
    • சேப்பாக்கம் அரசு அலுவலக பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    சென்னை:

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ ஜியோ) சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    திருச்சியில் நடைபெற்ற உயர்மட்டக்குழு கூட்டத்தில் நவம்பர் 18-ந்தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கும் மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பினை 5 சதவீதமாக குறைக்கப்பட்டதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக வழங்கிட வேண்டும். 21 மாத ஊதியமற்ற நிலுவைத் தொகை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசுப்பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளதை வழங்க வேண்டும்.

    2002-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களின் பணிக் காலத்தை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன் முறைப்படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும்.

    1.4.2003-க்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.

    சென்னையில் சேப்பாக்கம் எழிலகம் வளாகத்திலும் மற்ற மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகம் அருகிலும் இப்போராட்டம் நடைபெற்றது. வேலைநிறுத்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்கக்கூடாது, அது அங்கீகரிக்கப்படாத விடுப்பாக கருதப்படும் என்றும் வேலை செய்யாத நாளுக்கு ஊதியம் இல்லை எனவும் போராட்ட விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நட வடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்து உள்ளது.

    ஆனாலும் அதனை மீறி சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களி லும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் இப்போராட் டம் நடந்தது.

    சென்னையில் தலைமை செயலகம், எழிலகம், குறளகம், வணிக வரி அலுவலகம், சைதாப்பேட்டை பனகல் மாளிகை, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு துறை அலுவலகங்களில் ஊழியர்கள் குறைவாகவே பணிக்கு வந்தனர். இதனால் அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டன. இதேபோல ஆசிரியர்களும் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்செயல் விடுப்பு கடிதம் கொடுக்காமல் பெரும்பாலானவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை எழிலகத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேசன், சுரேஷ், காந்திராஜன் ஆகியோர் தலைமையில் அரசு ஊழியர்கள் திரண்டு கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் சேப்பாக்கம் அரசு அலுவலக பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மெரினா காமராஜர் சாலை நுழைவு பகுதியில் முன் எச்சரிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளரும் தலைமை செயலக சங்க தலைவருமான வெங்கடேசன் கூறியதாவது:-

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது. பல்வேறு கட்ட போராட்டங்கள், பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரையில் எந்த பயனும் இல்லை. இன்றைய போராட்டத்தில் சுமார் 6 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள்.

    இதனால் அரசு அலுவலக பணிகள், பள்ளிகளில் கற்றல் பணி பாதிக்கக்கூடும். எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் தீவிரமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×