என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    • ஜம்மு காஷ்மீர் தாக்குதல் குறித்து சத்குரு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்புப் படைகள், அவர்களின் கடமைகளைச் செய்ய அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என சத்குரு கூறியுள்ளார்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள இந்தத் தாக்குதல் குறித்து சத்குரு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பயங்கரவாதத்தின் நோக்கம் போர் அல்ல, ஆனால் ஒரு சமூகத்தை அச்சத்தால் முடக்குவது, பீதியைப் பரப்புவதும், சமூகத்தைப் பிளவுபடுத்துவதும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தடம் புரளச் செய்வதும், ஒவ்வொரு மட்டத்திலும் சட்டமின்மையை உருவாக்குவதும் தான் அதன் நோக்கமாகும்.

    நம் தேசத்தின் இறையாண்மையை பாதுகாக்கவும், வளர்க்கவும் விரும்பினால், பயங்கரவாதத்தை இரும்புக் கரத்துடன், உறுதியான நீண்டகால தீர்மானத்துடனும் கையாள வேண்டும்.

    கல்வி, பொருளாதாரம், சமூக நலன் என அனைத்து மட்டங்களிலும் அனைவருக்கும் சம பங்கீடு வழங்குவது நீண்ட கால தீர்வை கொடுக்கும்.

    ஆனால், இப்போதைக்கு, மதம், சாதி, அல்லது அரசியல் தொடர்புகள் ஆகியவற்றின் அனைத்து குறுகிய பிளவுகளுக்கும் அப்பால் ஒரு தேசமாக ஒன்றாக நிற்பதும், நமது பாதுகாப்புப் படைகளுக்கு அவர்களின் கடமைகளைச் செய்ய அனைத்து மட்டங்களிலும் ஆதரவளிப்பதும் மிகவும் முக்கியமானது.

    இங்கு தாக்குதலில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்த அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்.

    இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

    • விடுதிகள், லாட்ஜ்களில் அதிரடி சோதனை.
    • பொதுமக்கள் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு.

    கோவை:

    ஜம்மு-காஷ்மீரில் உள்ள பகல்ஹாம் தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் நேற்றிரவு முதல் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

    மாநகரில் போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் 1000 போலீசாரும், புறநகரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் 1000 போலீசார் என மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மாநகரில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் முன்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், கடைவீதிகள், மால்கள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படு த்தப்பட்டுள்ளது.

    மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் போலீசார் வாகனங்களில் அடிக்கடி ரோந்து சென்றும் கண்காணித்து வருகின்றனர். சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிபவர்களை பிடித்து விசாரித்தும் வருகின்றனர். பஸ் நிலையங்களில் நிற்கும் பஸ்களில் ஏறியும் சோதனை மேற்கொண்டனர்.

    இதுதவிர கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி மீனாட்சிபுரம், வாளையார் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகளிலும் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    சோதனை சாவடிகள் வழியாக வரும் அனைத்து வாகனங்களுமே தீவிர சோதனைக்கு உட்படுத்துகின்றனர். வாகனங்களில் வருபவர்கள் எதற்காக கோவைக்கு வருகின்றனர். அவர்களின் முகவரி, அடையாள அட்டை உள்ளிட்டவற்றை எல்லாம் சோதித்து பார்த்து விட்டு மாவட்டத்திற்குள் அனுமதித்து வருகின்றனர்.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள விடுதிகள், லாட்ஜ்கள், ஓட்டல்களிலும் போலீசார் அடிக்கடி சென்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    அப்போது அங்கு உள்ள வருகைப்பதிவேடு உள்ளிட்டவற்றை பார்த்து ஆய்வு செய்தனர். மேலும் யாராவது சந்தேகத்திற்கிடமாக வந்து தங்கியிருந்தால் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

    இதேபோல் கோவை ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்த ப்பட்டுள்ளது. ரெயில்வே போலீசார் ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகள், தண்டவா ளங்களில் சோதனை மேற்கொண்டனர்.

    ரெயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பயணிகளின் உடமைகளையும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது.

    ஈரோடு

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பல்காம் மாவட்டத்தில் நேற்று தீவிரவாதிகள் ஊடு ருவி சுற்றுலா பயணிகளின் மீது கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 27-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையடுத்து உளவுத் துறை உஷார் படுத்தப்பட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டுத்தலங்கள் போன்ற பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன்படி நேற்று இரவு முதல் தமிழகம் முழுவதும் பலத்த பாது காப்பு போடப்பட்டுள்ளது.

    அதன்படி ஈரோடு மாவட் டத்தில் நேற்று இரவு முதல் போலீசார் உஷார் படுத்தப்பட்டு இரவு முதல் காலை வரை விடிய விடிய தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வாகன சோதனையை தீவிர படுத்தினர்.

    ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள சோதனைச் சாவடி, லட்சுமி நகர் சோதனை சாவடி, தாளவாடி அடுத்த காரை பள்ளம் சோதனை சாவடி என மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் இரவு நேரங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    ஈரோடு மாநகர பகுதியில் உள்ள கோவில்கள், மசூ திகள், கிறிஸ்தவ தேவால யங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட் டிருந்தது. இதேபோல் ஈரோடு பஸ் நிலையம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீ சார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இதேபோல் வ.உ.சி காய்கறி மார்க்கெட் பகுதியிலும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில், பெருமாள் கோவில், மகிமாலீஸ்வரர் கோவில், பெரிய மாரியம்மன் கோவில், திண்டல் முருகன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஈரோடு ரெயில் நிலை யத்தில் நேற்று இரவு முதல் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஈரோடு ரெயில்வே நுழைவு பகுதியில் ரெயில்வே போலீசார் பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் கருவிகள் கொண்டு சோதனை செய்தனர். மோப்பநாய் பவானி வரவழைக்கப்பட்டு ஒவ்வொரு நடைமேடையாக சென்றது.

    ரெயில் நிலையத்தில் தேவையின்றி சுற்றி திரிந்த நபர்களை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். ரெயில் நிலைய பார்சல் பகுதி, டிக்கெட் கவுண்டர் பகுதி ரெயில்வே பணிமனை பகுதி என அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர்.

    இதைப்போல் விடுதிகளையும் போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். இதேபோல் சமூக வலைதளங்களையும் போலீசார் கண்காணிக்கின்றனர்.

    இதேபோல் பஸ் நிலையம், சந்தை, பொதுமக்கள் கூடும் கடைவீதிகள் ஆகிய வற்றில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 


    மதுரை

    ஜம்முகாஷ்மீர் மாநிலம் பஹல்காலம் எனும் இடத்தில் சுற்றுலா சென்ற பயணிகள் மீது தீவிர வாதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியால் கண் மூடித்தனமாக சுட்டதில் 26 பயணிகள் பலியானார்கள். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

    தீவிரவாத தாக்குதலை யடுத்து நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பாது காப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் உளவுத்துறையினர் உஷார்படுத்தப்பட்டு பல்வேறு அமைப்புகள், சந்தேகப்படும் நபர்களை கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் டி.ஜி.பி. உத்தரவுப்படி கோவில்கள், மசூதிகள், தேவலாயம், விமானம், ரெயில் நிலை யங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    அதன்படி மதுரை மாநகரிலும் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். உலக பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று வழக்கத்தை விட கூடுதல் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். 5 நுழைவு வாயில்களில் பக்தர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கோவிலுக்குள் அனும திக்கப்பட்டனர்.

    இதேபோல் மதுரை ரெயில் நிலையத்தில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். நகரின் முக்கிய இடங்களில், பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள் என பெரும்பாலான பகுதிகளில் 1,200 போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். 

    • அந்த பெண், பல தவணைகளாக ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் கொடுத்துள்ளார். மேலும் 8 ½ பவுன் தங்க நகையையும் கொடுத்திருக்கிறார்.
    • பெண் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    கோவை:

    கோவை மாவட்டம் காரமடை பகுதியைச் சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவர் கோவையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும், கோவை பூ மார்க்கெட் தியாகராஜா தெருவைச் சேர்ந்தவர் பாக்கிய அருண் (26 ) என்பவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பாக்கிய அருண், அந்த பெண்ணை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் ஆசை வார்த்தை கூறி இருக்கிறார்.

    இதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்து அவருடன் பழகி வந்துள்ளார். அப்போது பாக்கிய அருண், புதிய தொழில் தொடங்க பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

    இதற்காக அந்த பெண், பல தவணைகளாக ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் கொடுத்துள்ளார். மேலும் 8 ½ பவுன் தங்க நகையையும் கொடுத்திருக்கிறார்.

    பணம்- நகையை பெற்றுக்கொண்ட பாக்கிய அருண், அந்த பெண்ணை சந்திப்பதை தவிர்த்துள்ளார். அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவரிடம் வற்புறுத்தி இருக்கிறார். ஆனால் அவர் திருமணம் செய்ய மறுத்ததுடன் நகை- பணத்தையும் திரும்ப கொடுக்க மறுத்துள்ளார்.

    சம்பவத்தன்று பீளமேடு அருகில் பாக்கிய அருணை சந்தித்த அந்த பெண், நகை- பணத்தை கேட்டுள்ளார். அதற்கு பாக்கிய அருண், அந்த பெண்ணை அவதூறாக பேசியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அந்த பெண் பீளமேடு போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கந்தசாமி வழக்கு பதிவு செய்து பாக்கியஅருணை கைது செய்து சிறையில் அடைத்தார். பாக்கிய அருண் சமீபகாலமாக கோவை ரெட்பீல்ட் பகுதியில் வசித்து வந்துள்ளார். 

    • கொடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்த தினேஷ்குமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • கர்சன் செல்வத்திடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாட்டில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது.

    இதுதொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் ஜாமினில் உள்ளனர்.

    இந்த வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை 300க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்துள்ளது.

    இந்த நிலையில் கொடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்த தினேஷ்குமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான வழக்கையும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த வழக்கு தொடர்பாக விசாரிப்பதற்காக கோத்தகிரியை சேர்ந்த கர்சன் செல்வம் என்பவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்ட சி.பி.சி.ஐ.டி போலீசார் அவருக்கு இன்று ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்தனர்.

    அதன்படி கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் கர்சன் செல்வம் இன்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த முக்கிய குற்றவாளியான சயானுக்கும் வருகிற 24-ந் தேதி நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

    • எளிமையான 2 தலைவர்களை அவமதிக்கும் கோவை மாநகராட்சியின் இந்த செயலுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • கழிப்பறையில் எழுதப்பட்டிருந்த இரு தலைவர்களின் பெயர்களையும் பெயிண்ட்டால் அழித்து நடவடிக்கை எடுத்தனர்.

    கோவை:

    கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் உள்ள 95-வது வார்டில் உள்ள சில்வர் ஜூப்ளி பகுதிக்குட்பட்ட அண்ணா நகரில் கழிவறை ஒன்று உள்ளது.

    சமீபத்தில் இந்த கழிவறை புதுப்பிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டது. வர்ணம் பூசி முடித்தும், அந்த கழிவறை சுவற்றில் கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்: 95, தியாகி கக்கன் ஜி, பேரறிஞர் அண்ணா நினைவு நவீன கழிப்பிடம் என எழுதப்பட்டிருந்தது.

    இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    முன்னாள் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையும் தனது கண்டனத்தை பதிவு செய்தார். முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை மற்றும் பெருந்தலைவர் காமராஜர் அமைச்சரவையில் பணியாற்றிய நேர்மையான தலைவர் கக்கன் ஆகியோர் பெயரை கழிவறைக்கு வைத்திருக்கிறார்கள்.

    எளிமையான 2 தலைவர்களை அவமதிக்கும் கோவை மாநகராட்சியின் இந்த செயலுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கழிப்பறையில் இருந்து தலைவர்கள் பெயரை அழிக்க வேண்டும். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டு இருந்தார்.

    இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று மாநகராட்சி நிர்வாகம் இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளது.

    அதன்படி உதவி கமிஷனர் குமரன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி பொறியாளர் சரண்யா ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் 95-வது வார்டு அண்ணா நகர் பகுதிக்கு சென்றனர்.

    அங்கு கழிப்பறையில் எழுதப்பட்டிருந்த இரு தலைவர்களின் பெயர்களையும் பெயிண்ட்டால் அழித்து நடவடிக்கை எடுத்தனர்.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, இது புதிதாக எழுதப்பட்டது அல்ல. பல ஆண்டுகளாகவே இதில் அப்படி தான் இருந்துள்ளது. புதிதாக அதில் பெயிண்ட் அடித்ததால் பளிச்சென தெரிந்து சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. தற்போது பெயிண்ட் ஊற்றி அதனை அழித்து விட்டோம் என்றனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை புலியகுளம் பகுதியில் 2 பேர் ஒரே அறையில் அமர்ந்து பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்ட கழிவறை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. தற்போது கழிப்பறையில் தலைவர்கள் பெயர் இடம்பெற்று சர்ச்சையாகி உள்ளது.

    • அரசின் உடனடி நடவடிக்கையை அவர்கள் எதிர்பார்த்து அவர்கள் காத்திருக்கின்றனர்.
    • விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு விரைந்து செயல்பட வேண்டும்.

    கோவை:

    கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு கேட்டு கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து விசைத்தறியாளர்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    அதன்படி விசைத்தறியாளர்கள் கருமத்தம்பட்டி அடுத்த சோமனூர் பகுதியில் தங்கள் குடும்பத்தினருடன் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கோவையில் நடந்த விழாவுக்கு வருகை தந்த பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், சோமனூரில் போராட்டத்தில் ஈடுபட்டு விசைத்தறியாளர்களை நேரில் சந்தித்தார்.

    அப்போது அவர் தரையில் அமர்ந்து விசைத்தறியாளர்களுடன் பேசினார். அவர்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்த அவர், நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி போராடும் உங்களுக்கு பா.ஜ.க உறுதுணையாக இருக்கும் என கூறி தங்களது ஆதரவை தெரிவித்தார்.

    பின்னர் அவர் விசைத்தறியாளர்கள் மத்தியில் பேசியதாவது:-

    விசைத்தறியாளர்களின் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் தங்களின் உரிமைக்காக போராடி வருகின்றனர்.

    எனவே விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு விரைந்து செயல்பட வேண்டும்.

    ஒரு மாத காலமாக நடந்து வரும் இந்த போராட்டம் விசைத்தறி தொழிலாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    அரசின் உடனடி நடவடிக்கையை அவர்கள் எதிர்பார்த்து அவர்கள் காத்திருக்கின்றனர். எனவே விசைத்தறியாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து முதலமைச்சர் பரிசீலனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழ்நாட்டில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி அமைத்துள்ளது.
    • பா.ஜ.க. மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி அமைத்துள்ளது. இதனை சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிப்படுத்தினார்.

    இதனையடுத்து, பா.ஜ.க. மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றார். இந்நிலையில், நயினார் நாகேந்திரனுக்கு கோவையில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். வேடத்தில் பாஜக கொடியுடன் ஒருவர் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலையுள்ளது.

    அதிமுக கட்சியை உருவாக்கிய எம்.ஜி.ஆர். வேடத்தில் இருந்த இருந்த நபர் பாஜக கொடியுடன் நடனமாடிய விவகாரம் அதிமுக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • புவனேஷ் மரணம் தொடர்பாக தூத்துக்குடியில் வசிக்கும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பேரூர்:

    தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி தாளமுத்து நகரை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் புவனேஷ் (வயது 18). கட்டிட தொழிலாளி.

    இவர் கடந்த 17-ந்தேதி நண்பர்கள் முத்துக்குமார், ஹரிஹரசுதன் ஆகியோருடன் கோவை மாவட்டம் வெள்ளியங்கிரிக்கு மலையேறுவதற்காக வந்தார்.

    மலை உச்சியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்து விட்டு பின்னர் அவர்கள் மீண்டும் கீழே இறங்கி வந்தனர். 7-வது மலை உச்சியில் இருந்து கீழே வந்த போது புவனேசுக்கு எதிர்பாராதவிதமாக கால் இடறியது. நிலை தடுமாறிய புவனேஷ் 10 அடி ஆழமுடைய பள்ளத்தில் விழுந்தார்.

    இதில் அவரது இடது காது மற்றும் தலையின் பின்பகுதியில் பலத்த அடிபட்டு உயிருக்கு போராடினார். அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சுமை தூக்கும் பணியாளர்கள் டோலியுடன் அவசர, அவசரமாக மலையேறி சென்றனர். புவனேசை டோலி மூலம் மீட்டு அடிவாரத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் ஆம்புலன்சில் ஏற்றி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி புவனேஷ் பலியானார்.

    புவனேஷ் மரணம் தொடர்பாக தூத்துக்குடியில் வசிக்கும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிரசவ வலியுடன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
    • ஆஸ்பத்திரியில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண் சிறுமி போல் இருந்ததால் அவரது வயதை டாக்டர்கள் விசாரித்தனர்.

    கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிரசவ வலியுடன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

    அந்த பெண் சிறுமி போல் இருந்ததால் அவரது வயதை டாக்டர்கள் விசாரித்தனர். அப்போது அவருக்கு 16 வயது மட்டுமே ஆவது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள், சிறுமிக்கு குழந்தை பிறந்தது குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துள்ளார். அவரும், அதே பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 22) என்பவரும் காதலித்துள்ளனர்.

    கோபாலகிருஷ்ணன் மாணவியை திருமணம் செய்து முடிவு செய்துள்ளார். இதையடுத்து 2 பேரின் பெற்றோர் சம்மதத்துடன் அங்குள்ள கோவிலில் அவர்கள் மாலை மாற்றி திருமணம் செய்துள்ளனர். கோபாலகிருஷ்ணன் வீட்டில் மாணவி வசித்துள்ளார். அதன்பிறகும் அவர் பள்ளிக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே மாணவி கர்ப்பம் ஆனதால் அவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். வயிறு வலி வந்ததைத் தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பிரசவம் நடந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கோபால கிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவரை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிகளவிலான பக்தர்கள் வந்துள்ளனர்.
    • வனத்துறையினர், மலையேற வரும் பக்தர்களை தீவிர சோதனைக்கு பின்னரே மலையேற அனுமதித்து வருகிறார்கள்.

    வடவள்ளி:

    கோவை பூண்டியில் தென் கைலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது.

    இந்த கோவில் அடிவாரத்தில் இருந்து 6 மலைகளை கடந்து 7-வது மலையில் சுவாமி சுயம்பு வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    இந்த சுயம்பு லிங்க சுவாமியை மலையேறி தரிசிக்க ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் இந்த ஆண்டு, கடந்த பிப்ரவரி 1-ந் தேதி முதல் வெள்ளியங்கிரி மலையேறுவதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    அன்று முதல் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவிலான பக்தர்கள் வந்து வெள்ளியங்கிரி மலையேறி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    தற்போது தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் கடந்த சில நாட்களாக வெள்ளியங்கிரி மலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிகளவிலான பக்தர்கள் வந்துள்ளனர். அவர்கள் அடிவாரத்தில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்து விட்டு, தங்கள் மலைப்பயணத்தை தொடங்குகின்றனர்.

    கைகளில் குச்சிகளை வைத்து கொண்டு அதன் உதவியுடன் மலையேறி சென்று சுயம்பு வடிவிலான வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்து வருகின்றனர்.

    நேற்று அதிகளவிலான கூட்டம் இருந்தது. கிரிமலையில் அதிகாலை நேரத்தில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சூரிய தரிசனம் முடிந்து பலகாரம் மேடையில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு அடிவாரத்தை நோக்கி கீழே இறங்கி வந்தனர்.

    10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 50 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் ஆர்வத்துடன் மலையேறுகின்றனர். இதய பலவீனமானவர்கள், நோயால் பாதிக்கப்பட்டோர் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மலையேறும் பக்தர்களிடம் பிளாஸ்டிக் பைகள், மது, புகையிலை, பீடி, சிகரெட், தீப்பெட்டி, எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    வனத்துறையினர், மலையேற வரும் பக்தர்களை தீவிர சோதனைக்கு பின்னரே மலையேற அனுமதித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு மலையடிவாரத்தில் ஒற்றை காட்டு யானை கோவில் வளாகத்தில் நுழைந்தது. அங்கிருந்த பிரசாத கடையை அடித்து நொறுக்கி அங்கிருந்த அரிசியை ருசிபார்த்தது.

    யானையை பார்த்த பக்தர்கள் சத்தம் போடவே, யானை வனத்திற்குள் சென்று விட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஊட்டி மற்றும் குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மட்டுமே உருளைக்கிழங்கு வருகிறது.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையத்தில் 70க்கும் மேற்பட்ட உருளைக் கிழங்கு மண்டிகள் உள்ளன.

    இந்த மண்டிகளுக்கு ஊட்டி, கர்நாடகா, குஜராத் உள்பட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 100க்கும் மேற்பட்ட லாரிகளில் உருளைக்கிழங்கு கொண்டு வரப்படும்.

    அவ்வாறு கொண்டு வரப்படும் உருளைக்கிழங்குகள் தரம் பிரித்து ஏலம் வாயிலாக விற்பனை செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது கர்நாடகாவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த வேலை நிறுத்தம் காரணமாக மேட்டுப்பாளையம் உருளைக் கிழங்கு மண்டிக்கு கர்நாடகாவில் இருந்து வரும் உருளைக்கிழங்கு வரத்து குறைந்துவிட்டது.

    ஊட்டி மற்றும் குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மட்டுமே உருளைக்கிழங்கு வருகிறது. அதுவும் குறைந்த அளவிலேயே உருளைக்கிழங்கு வருவதால், மண்டிகளில் அதன் விலையும் உயர்ந்து காணப்படுகிறது.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டி வியாபாரிகள் கூறியதாவது:-

    ஊட்டி உருளைக்கிழங்கு சீசன் மே மாதம் கடைசி வாரம் தொடங்கும். தற்போது ஒரிரு லாரிகளில் மட்டுமே ஊட்டியில் இருந்து உருளைக்கிழங்கு வருகிறது.

    கர்நாடக மாநிலத்தில் வேலை நிறுத்தம் நடந்து வருவதன் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து வரும் லாரிகள், ஆந்திர மாநிலம் வழியாக வருகின்றன.

    அதிலும் குறைவான அளவிலேயே உருளைக்கிழங்குகள் வருகின்றன. 200-ல் இருந்து 250 டன் அளவிலான உருளை கிழங்குகளே வருகிறது.

    கடந்த வாரம் கோலார் உருளைக் கிழங்கு 45 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ.750-க்கு விற்பனையானது. நேற்று அதே 45 கிலோ கொண்ட ஒரு மூட்டை குறைந்த பட்சம் ரூ.900-த்திற்கும், அதிகபட்சம் ரூ.1000-த்திற்கும் ஏலம் போனது.

    இதே நிலை தொடர்ந்தால், உருளைக்கிழங்கு விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • பா.ஜ.க மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து.
    • மேள, தாளங்கள் முழங்க பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்படுகிறது.

    கோவை:

    தமிழக பா.ஜ.க மாநில தலைவராக நெல்லை தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ.வாக இருக்கும் நயினார் நாகேந்திரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு பதவியேற்றார்.

    பா.ஜ.க மாநில தலைவராக பதவியேற்ற நயினார் நாகேந்திரனுக்கு பல்வேறு பா.ஜ.க மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் நயினார் நாகேந்திரன் தலைவராக பதவியேற்ற பின்பு முதல் முறையாக நாளை (19-ந்தேதி) கோவைக்கு வருகை தர உள்ளார்.

    கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட பா.ஜ.க. சார்பில் கோவை காளப்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் புதிதாக பதவியேற்ற நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு விழா நடக்கிறது.

    இந்த விழாவில் பங்கேற்பதற்காக அவர் நாளை கோவைக்கு வருகிறார். கோவை வரும் அவருக்கு கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் சார்பில் மேள, தாளங்கள் முழங்க பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்படுகிறது.

    வரவேற்பை ஏற்றுக்கொண்டதும், அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டு விழா நடைபெறும் காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்திற்கு செல்கிறார்.

    அங்கு நடக்கும் பாராட்டு விழாவில் அவர் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

    விழாவுக்கு கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் ரமேஷ்குமார் தலைமை தாங்குகிறார். இந்த விழாவில் மத்திய மந்திரி எல்.முருகன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., மற்றும் பலர் பங்கேற்று பேச உள்ளனர்.

    ×