search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coimbatore airport"

    • பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டபிறகே அவர்கள் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
    • ரெயிலில் வரும் பார்சல்கள் மோப்பநாய் கொண்டு சோதனை செய்யப்படுகிறது.

    கோவை:

    குடியரசு தின விழா நாளை மறுநாள் (26-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதற்கான கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் களை கட்டத் தொடங்கி உள்ளன.

    கோவை வ.உ.சி. மைதானத்தில் கலெக்டர் கிராந்திகுமார்பாடி தேசியக் கொடியேற்றி வைக்கிறார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.

    தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் மருத்துவத்துறை அலுவலர்களுக்கு சான்றிதழ் வழங்குகிறார். மேலும் காவல்துறையில் சிறப்பாக வேலை பார்த்த போலீசாருக்கு பதக்கங்களும் வழங்கப்படுகின்றன.

    குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மாநகர அளவில் 1500 போலீசாரும், மாவட்ட அளவில் 1000 போலீசாரும் என மொத்தமாக 2500 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    அவர்கள் தற்போது மாவட்டத்தில் உள்ள கோவில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை பீளமேடு விமானநிலையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அங்கு துப்பாக்கி ஏந்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    மேலும் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டபிறகே அவர்கள் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    கோவை ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. நுழைவு வாயிலில் மெட்டல் டிடெக்டர் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ரெயிலில் வரும் பார்சல்கள் மோப்பநாய் கொண்டு சோதனை செய்யப்படுகிறது. தண்டவாளங்களிலும் மெட்டல் டிடெக்டர் கொண்டு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல பஸ் நிலையங்கள், மக்கள் அதிகம் இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    • விமானம் சிறிது நேரத்தில் தனது ஓடுபாதையில் இருந்து மேல் நோக்கி பறக்க ஆரம்பித்தது.
    • வானில் பறக்க தொடங்கிய சில நிமிடங்களிலேயே, விமானத்தின் என்ஜின் மீது பறவை மோதியது.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் சுமார் 23 விமானங்கள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.

    இதுதவிர வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகிறது. அதன்படி ஷார்ஜாவிற்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு ஷார்ஜாவில் இருந்து 175 பயணிகளுடன் விமானம் கோவை விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்று விட்டனர்.

    அதனை தொடர்ந்து கோவையில் இருந்து ஷார்ஜாவிற்கு இன்று அதிகாலை 4 மணிக்கு, விமானம் புறப்பட்டது.

    இந்த விமானத்தில் 175 பயணிகள் ஷார்ஜாவுக்கு செல்ல தயாராக இருந்தனர். விமானம் சிறிது நேரத்தில் தனது ஓடுபாதையில் இருந்து மேல் நோக்கி பறக்க ஆரம்பித்தது.

    வானில் பறக்க தொடங்கிய சில நிமிடங்களிலேயே, விமானத்தின் என்ஜின் மீது பறவை மோதியது.

    இதனை அறிந்து கொண்ட விமானி உடனடியாக கோவை விமான நிலையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். பின்னர் அவர்கள் கொடுத்த அறிவுரையின்படி அந்த விமானம் மீண்டும் கோவை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும், அதில் இருந்த பயணிகளை பத்திரமாக கீழே இறக்கினர். அவர்களில் கோவையை சேர்ந்தவர்களை வீட்டிற்கும், மற்றவர்களை ஓட்டலிலும் தங்க வைத்தனர்.

    இதனை தொடர்ந்து விமான நிலைய பொறியாளர்கள் உடனடியாக விரைந்து சென்று, விமானத்தில் ஏறி ஆய்வு செய்தனர்.

    விமானத்தில் தற்போது பராமரிப்பு பணிகளையும் பொறியாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். பணிகள் அனைத்தும் முடிந்த பின்னர் மீண்டும் விமானம் எப்போது கோவையில் இருந்து புறப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்படும்.

    விமானி பறவை மோதியது பார்த்து உடனே தகவல் கொடுத்ததால் 175 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் பெரும் அசம்பாவிதமும் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • வாரந்தோறும் 6 டன் எடையிலான மாம்பழங்கள் கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    • கோவை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 250 டன் சரக்குகள் கையாளும் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளது.

    கோவை:

    கோவை சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைந்துள்ளது ஒருங்கிணைந்த சரக்கக வளாகம்.

    இங்கிருந்து உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் கோவையில் இருந்து சரக்குகள் விமானங்களில் அனுப்பி வைக்கப்படுகிறது.

    நேரடி விமான சேவை இல்லாத ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கும் பாண்டட் டிரக் சேவை மூலம் சாலை வழியாக கொச்சி, பெங்களூரு உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஏற்றுமதியாகின்றன.

    மாதந்தோறும் உள்நாட்டு பிரிவில் 700 டன், வெளிநாட்டு பிரிவில் 150 டன் சரக்குகள் கையாளப்படுகின்றன.

    தற்போது மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதால் கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு வாரந்தோறும் 6 டன் மாம்பழம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

    வழக்கமாக பொறியியல் உற்பத்தி பொருட்கள், வார்ப்படம், காய்கறிகள், பழங்கள் மற்றும் சிப்ஸ் உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகள் புக்கிங் செய்யப்பட்டு கொண்டு செல்லப்படும்.

    சிங்கப்பூர் விமானத்தில் சரக்குகள் புக்கிங் மிகவும் குறைவாக உள்ளதால் அரை டன் அல்லது ஒரு டன் மட்டுமே சரக்குகள் கையாளப்படுகின்றன.

    ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்கள் விமான சேவை வழங்கப்படும் நிலையில், ஒவ்வொரு முறையும் 3 டன் எடையிலான சரக்குகள் கொண்டு செல்லப்படுகிறது.

    கோடை காலத்தில் மாம்பழம் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படும். தற்போது சீசன் தொடங்கி உள்ளதால் கேரளா மற்றும் பொள்ளாச்சியில் இருந்து மாம்பழங்கள் அதிகளவு ஷார்ஜா விமானத்தில் கொண்டு செல்லப்படுகின்றன.

    வாரந்தோறும் 6 டன் எடையிலான மாம்பழங்கள் கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கோவை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 250 டன் சரக்குகள் கையாளும் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளது.

    சர்வதேச நாடுகளுக்கு விமான சேவை அதிகரித்தால் சரக்குகள் கையாளப்படும் அளவும் கணிசமாக அதிகரிக்கும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • கொரோனா தொற்று பரவல் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளில் உடல் வெப்ப பரிசோதனை முக்கியமாக கருதப்படுகிறது.
    • சளி, இருமல் உள்ளிட்ட இதர அறிகுறிகளையும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கோவை:

    கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் விமான நிலையங்களில் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் பரிசோதனை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    கோவை விமான நிலையத்திலும் கொரோனா பரிசோதனை மையம் திறக்கப்பட்டு வெளிநாடுகளில் இருந்து வரும் பயனிகளிடம் பரிசோதனை செய்யப்படுகிறது.

    தானியங்கி உடல் வெப்ப பரிசோதனை எந்திரம் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் பரிசோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.

    இந்த நிலையில் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் சிலர் காய்ச்சலுக்கான மருந்துகளை உட்கொண்டு பயணிப்பதாகவும், அவர்கள் விமான நிலைய வளாகத்தில் பரிசோதனையில் இருந்து தப்பி செல்வதையே நோக்கமாக கொண்டு செயல்படுவதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கொரோனா தொற்று பரவல் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளில் உடல் வெப்ப பரிசோதனை முக்கியமாக கருதப்படுகிறது. இதுதவிர சளி, இருமல் உள்ளிட்ட இதர அறிகுறிகளையும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தற்போது வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2 சதவீதத்தினருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    ஒருசில பயணிகள் தங்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் அதை மறைக்க காய்ச்சலுக்கான மருந்துகளை உட்கொண்டு பயணிக்கின்றனர்.

    அவர்களின் நோக்கம் பரிசோதனைகளில் இருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்பது தான். ஆனால் வீட்டுக்கு சென்ற உடல்நிலை மேலும் மோசமடைந்து அதற்கு பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

    இதுபோன்று பரிசோதனையில் சிக்காமல் வெளியேறும் நபர்கள் சமுதாயத்தில் நோய் பரவல் ஏற்பட முக்கிய காரணமாக அமைந்து விடுகின்றனர்.

    எனவே வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் ஒவ்வொருவரும் தங்களின் பொறுப்பை உணர்ந்து நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கோவை சர்வதேச விமானநிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
    • நேற்றுமுன்தினம் இரவு சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் 167 பயணிகள் வந்து இறங்கினர்.

    கோவை:

    சீனா உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க அதிதீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சீனாவில் இருந்து விமானங்களில் வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்ய அனைத்து விமான நிலையங்களிலும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    கோவை சர்வதேச விமானநிலையத்திலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் 167 பயணிகள் வந்து இறங்கினர். அவர்களில் சேலத்தை சேர்ந்த பயணி ஒருவரின் பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது அவர் சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவை விமானநிலையம் வந்ததும், அவரை போன்று மற்றொருவரும் சீனாவில் இருந்து வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து இவருக்கு கோவை விமானநிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவு நேற்று வந்தது. அதில் சேலத்தை சேர்ந்த பயணிக்கு கொரோனா உறுதியானது.

    மேலும் இவருக்கு எந்தவகையான கொரோனா என்பது குறித்தும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். இதுகுறித்து சேலம் மாவட்ட சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கொரோனா பாதிப்புக்குள்ளானவரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    அத்துடன் அவருடன் விமானத்தில் கோவை வந்த 166 பயணிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களை சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    அவர்களிடம் தனிமைப்படுத்தி கொள்ளவும் கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனே சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தி உள்ளனர்.

    • சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்த 6 பயணிகளை பிடித்து அவர்களது உடமைகளை அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர்.
    • 2 பயணிகள் உள்ளாடைகள், பாக்கெட்கள், பேன்ட் ஆகியவற்றில் 5.6 கிலோ தங்க நகைகளை மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.

    கோவை:

    கோவை விமான நிலையம் வழியாக வெளிநாடுகளில் இருந்து அடிக்கடி தங்கம் கடத்தி வரப்படுகிறது. இதனை அதிகாரிகள் கண்காணித்து தங்கத்தை கடத்தி வரும் பயணிகளை மடக்கி பிடித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்த 6 பயணிகளை பிடித்து அவர்களது உடமைகளை தீவிர சோதனை செய்தனர். அதில் 2 பயணிகள் உள்ளாடைகள், பாக்கெட்கள், பேன்ட் ஆகியவற்றில் 5.6 கிலோ தங்க நகைகளை மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து ரூ.2.94 கோடி மதிப்பிலான 5.6 கிலோ தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அதிகாரிகள் தங்கம் கடத்தி வந்த 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் சென்னையை சேர்ந்த முகமது அப்சல் (வயது 32) மற்றும் திருச்சியை சேர்ந்த கிருஷ்ணன் (66) என்பது தெரியவந்தது.

    இதில் முகமது அப்சல் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான தங்கத்தை கடத்தி வந்ததால், அவர் மீது வழக்குப்பதிவு செய்து வருவாய் புலனாய்வு துறையினர் கைது செய்தனர்.

    பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த கிருஷ்ணனை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.

    மேலும் தங்கம் கடத்தலில் வேறு ஏதாவது தொடர்பு உள்ளதா என அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றனர். 

    • கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் பன்னாட்டு போக்குவரத்து பிரிவில் முறையே 119.97 டன், 150.19 டன் சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
    • 2 மாதங்களில் மட்டும் 25.18 சதவீதம் வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் சரக்குகள் புக்கிங் செய்யப்பட்டு பார்சல்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

    கோவையில் இருந்து முன்பு ஷார்ஜா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய 3 வெளிநாடுகளுக்கு விமான சேவை இருந்தது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து, இலங்கைக்கான விமான சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    2 நாடுகளுக்கு மட்டுமே விமானங்கள் இயக்கப்படும் போதும், பிணைக்கப்பட்ட டிரக் சேவை மூலம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கும் சரக்குகள் பதிவு செய்யப்பட்டு, பன்னாட்டு ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    கொரோனா தொற்று ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து விமான நிலையம் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்த நிலையில் சரக்கு போக்குவரத்து நிலையான வளர்ச்சியை அடைந்துள்ளது.

    இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

    கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் பன்னாட்டு போக்குவரத்து பிரிவில் முறையே 119.97 டன், 150.19 டன் சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்த 2 மாதங்களில் மட்டும் 25.18 சதவீதம் வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் ஜூன், ஜூலை மாதங்களில், 688.40 டன், 833.28 டன் சரக்கு பதிவு செய்யப்பட்டு 21.05 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.

    கொரோனா தொற்று மிக வேகமாக பரவிய காலகட்டத்திலும் கோவை விமான நிலையத்தில், சரக்கு போக்குவரத்து பிரிவு தொடர்ந்து செயல்பட்டு வந்தது. குறிப்பாக உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசி மற்றும் நோய் தொற்று பரவல் தடுப்புக்கு உதவும் முகக் கவசம், பாதுகாப்பு கவச உடை உள்ளிட்ட பல உபகரணங்கள் தொடர்ந்து கையாளப்பட்டன.

    இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • விமானத்தின் அனைத்து செயல்பாடுகளும் இயல்பு நிலையில் இருப்பதாக பைலட் தெரிவித்தார்.
    • விமானத்தை தொடர்ந்து இயக்கலாம் என்று பொறியாளர்கள் தெரிவித்தனர்.

    கோவை:

    பெங்களூருவில் இருந்து மாலி நாட்டுக்கு 92 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த தனியார் விமானத்தில் இருந்து திடீரென அலாரம் ஒலித்தது. விமானத்தில் இருந்து புகை வந்ததற்கான எச்சரிக்கை அலாரம் ஒலித்ததையடுத்து, விமானம் கோயம்புத்தூர் விமான நிலையம் நோக்கி திருப்பி விடப்பட்டது.

    கோயம்புத்தூர் விமான நிலையத்தை அடைந்ததும் தரையிறங்க அனுமதி கேட்கப்பட்டது. அனுமதி கிடைத்ததும் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது விமானத்தின் அனைத்து செயல்பாடுகளும் இயல்பு நிலையில் இருப்பதாக பைலட் தெரிவித்தார்.

    எனினும், பொறியாளர்கள் விமானத்தை ஆய்வு செய்தனர். அப்போது, விமானத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. எச்சரிக்கை அலாரம் பழுதடைந்ததால் அலாரம் ஒலித்ததும் தெரியவந்தது. அத்துடன் விமானத்தை தொடர்ந்து இயக்கலாம் என்று பொறியாளர்கள் தெரிவித்தனர். அதன்பின்னர் விமானம் புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு உதவும் வகையில் 2 ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
    • புதிதாக நிறுவப்பட்டு உள்ள இந்த ரோபோக்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.

    கோவை:

    கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடான ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, பெங்களூர், டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

    தினசரி 20-க்கு மேற்பட்ட விமானங்களில் ஏராளமான பயணிகள் பயணித்து வருகின்றனர். கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு உதவ தனி உதவி மையம் உள்ளது. அந்த உதவி மையத்தை செல்போன் மூலம் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான தகவல்களை பயணிகள் பெற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு உதவும் வகையில் தானியங்கி ரோபோக்கள் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அதிநவீன ரோபோக்கள் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்டது. இதன் மூலம் பயணிகளுக்கு தேவையான தகவல்களை எவ்வித உதவியும் இன்றி தானாக வழங்க முடியும்.

    இதுகுறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு உதவும் வகையில் 2 ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    இன்று மாலை 3 மணி முதல் ரோபோக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. ஒரு ரோபோ விமான புறப்பாடு முனையத்திலும், மற்றொரு ரோபா விமான வருகை முனையத்திலும் நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த ரோபோக்கள் யாருடைய உதவியும் இல்லாமல் தானாக நகரும் தன்மை கொண்டது.

    ரோபோ விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை வரவேற்று, அவர்களுக்கு தேவையான தகவல்களை அளிக்கும். இதற்காக அந்த ரோபோக்களில் செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்டு உள்ளது. பயணிகள் உதவி மையத்தை தொடர்பு கொள்ள விரும்பினால், ரோபோ உடனடியாக உதவி மையத்தை தொடர்பு கொண்டு தகவல்களை அளிக்கும்.

    இந்த ரோபோக்கள் பயணிகள் விமானத்திற்கு செல்ல வேண்டிய வழி, பாஸ்போர்ட் சரிபார்ப்பு இடம் உள்ளிட்ட இடங்களுக்கான வழிகளை பயணிகளுக்கு தெரிவிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதிதாக நிறுவப்பட்டு உள்ள இந்த ரோபோக்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.

    தமிழக அரசை மத்திய அரசு இயக்குவதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். #TNGovt #ThambiDurai #BJP #Centalgovt
    பீளமேடு:

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது-

    மத்திய அரசு வாக்கு வங்கி அரசியலுக்காக பொருளாதார இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்துள்ளது. ரூ. 8 லட்சம் வருமானம் என்பது மாத வருமானம் ரூ. 70 ஆயிரம் என நிர்ணயம் செய்து பொருளாதார அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகும்.

    இதனை அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கிறது. 37 எம்.பி.க்களை சஸ்பெண்டு செய்து விட்டு இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

    பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கொண்டு வந்தால் நாட்டில் லஞ்சம், ஊழல் அதிகரிக்கும். தமிழகத்தில் ஜாதி ஒழிய வேண்டும் என பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். போன்ற பல தலைவர்கள் போராடினார்கள்.

    ஜாதி வேற்றுமை நீங்க வேண்டும். மனிதன், மனிதனாக வாழ வேண்டும் என திராவிட கட்சிகள் தொடர்ந்து போராடி வருகிறது. நாம் அனைவரும் சூத்திரர்கள் தான்.

    சமத்துவத்தை கொண்டு வர பல போராட்டங்கள் நடத்தி இட ஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளனர். பொருளாதாரம் என்பது தொடர்ந்து மாறுபடும். அதை நிர்ணயித்து இட ஒதுக்கீடு செய்தது தவறு.

    இந்த மசோதாவை அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கிறது. இது தொடர்பாக எனது கண்டன உரையை பாராளுமன்றத்தில் பதிவு செய்து உள்ளேன்.

    காவிரி, மேகதாது உள்ளிட்ட பல திட்டங்களுக்கு தமிழக அரசு மத்திய அரசை தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வருகிறது. சில திட்டங்களுக்கு மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

    மத்திய அரசும், மாநில அரசும் தொடர்ந்து சுமூகமாக இருக்க வேண்டும் என்பதற்காகதான் சில திட்டங்களை ஆதரித்துள்ளோம்.

    தமிழகத்திற்கு தீங்கு விளைவிக்கும் திட்டங்களை அமல்படுத்தினால் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.

    மத்திய அரசிடம் நட்புவேறு. மண்டியிடுவது வேறு. தமிழக அரசை மத்திய அரசு இயக்கவில்லை. இது தவறான குற்றச்சாட்டு. தமிழக மக்கள் வாக்களித்து எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் நடத்தி வருகிறோம்.


    பாதுகாப்பு துறை ஊழல் பற்றி பேசினால் நாட்டின் பாதுகாப்பு பற்றி பேசக்கூடாது என்கிறார்கள். அகஸ்தா விமானம் வாங்க முடிவு செய்தது பாரதிய ஜனதா. அதனை வாங்கியது காங்கிரஸ்.

    ரபேல் விமானத்தை வாங்க முடிவு செய்தது காங்கிரஸ். அதனை வாங்கியது பாரதிய ஜனதா. ஊழலில் இரு கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNGovt #ThambiDurai #BJP #Centalgovt
    கோவை விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாக்களுடன் சிக்கிய திமுக முன்னாள் எம்பியை ஒரிஜனல் லைசென்சை எடுத்து வரும்படி போலீசார் எழுதி வாங்கி அனுப்பினர். #DMK
    கோவை:

    தூத்துக்குடியை சேர்ந்த தி.மு.க. முன்னாள் எம்.பி. ஜெயதுரை. இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

    நேற்று கோவை வந்த இவர் இரவு 9 மணி அளவில் சென்னை செல்வதற்காக விமான நிலையம் வந்தார்.அவர் கையில் ஒரு சூட்கேஸ் வைத்திருந்தார்.

    விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் சூட்கேசை சோதனை செய்தனர். அப்போது சூட்கேசில் இருந்து சத்தம் கேட்டது.சூட்கேசை திறந்து பார்த்த போது அதில் கைத்துப்பாக்கி தோட்டாக்கள் 5 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கைப்பற்றிய போலீசார் ஜெயதுரையிடம் விசாரித்தனர்.

    கைத்துப்பாக்கி வைத்திருப்பதற்காக லைசென்சு தன்னிடம் இருப்பதாக கூறிய அவர் தவறுதலாக தோட்டாக்களை சூட்கேசில் எடுத்து வந்து விட்டதாக கூறினார்.

    இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் பீளமேடு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது துப்பாக்கி லைசென்சுக்கான ஜெராக்சை காட்டினார். ஒரிஜனல் லைசென்சை இன்று கொண்டு வந்து காட்டுவதாக கூறினார். அவரிடம் போலீசார் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பினர். #DMK
    தி.மு.க. போன்ற கட்சிகள் மத்திய அரசுடன் இணைந்து ஆட்சியில் இருக்கும் போது ஊழல் குற்றச்சாட்டில் பதவி விலகினார்களா? என்று தமிழிசை சவுந்தரராஜன் கேள்வியெழுப்பியுள்ளார். #BJP #Tamilisaisoundararajan
    கோவை:

    கோவை விமான நிலையத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது எழுந்த ஊழல் குற்றச்சாட்டை சி.பி.ஐ. விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை மேல் முறையீடு செய்ய உள்ளதாக அவர்கள் கூறி உள்ளனர். ஆகவே அவர்கள் சட்ட ரீதியாக எப்படி அணுகுகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.

    யார் மீது ஊழல் குற்றச்சாட்டு வந்தாலும், அது விசாரிக்கப்பட வேண்டும். ஆனால் குற்றச்சாட்டு வந்ததினால் பதவி விலக வேண்டும் என்று சிலர் சொல்வது தவறு.

    தி.மு.க. போன்ற கட்சிகள் மத்திய அரசுடன் இணைந்து ஆட்சியில் இருக்கும் போது ஊழல் குற்றச்சாட்டு வந்தது. அப்போது அவர்கள் பதவி விலகினார்களா? இல்லை.

    எனவே ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் எந்த விதத்திலும் ஒப்புக்கொள்ள முடியாத ஒன்று. அது நிச்சயமாக விசாரிக்கப்பட வேண்டும். சட்டம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். துணை வேந்தர்கள் நியமனத்தில் எழுந்துள்ள ஊழல்கள் குறித்து கவர்னர் மறுக்கவில்லை. அவர் பல கல்வியாளர்களை சந்திக்கும் போது தான் எனக்கு இப்படிப்பட்ட தகவல்கள் கிடைத்தது என்று தான் கூறினார்.

    ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை சம்பந்தமாக சட்ட விதிகளுக்கு உட்பட்டு கவர்னர் நடவடிக்கை எடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் சேலத்தில் இன்று நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டு சென்றார். #BJP #Tamilisaisoundararajan
    ×