என் மலர்
நீங்கள் தேடியது "கோவை விமான நிலையம்"
- கோவை விமான நிலையத்தில் ஜனவரி மாதத்தில் மொத்தம் 1,871 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.
- கடந்தாண்டு ஜனவரி மாதத்தை காட்டிலும் 8.3 சதவீதம் குறைவாகும்.
கோவை:
கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஐதராபாத், புனே, கோவா ஆகிய உள்நாட்டு பகுதிகளுக்கும், சிங்கப்பூர், ஷார்ஜா, அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே கோவை விமான நிலையத்தில் விமானங்கள் இயக்கம், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற விமான போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து குறித்த விவரங்களை விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதன்படி கோவை விமான நிலையத்தில் ஜனவரி மாதத்தில் மொத்தம் 1,871 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இது கடந்தாண்டு ஜனவரி மாதத்தை காட்டிலும் 8.3 சதவீதம் குறைவாகும்.
இந்த மாதத்தில் கோவை விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டு நகரங்களுக்கு 26 ஆயிரத்து 733 பேர் பயணம் செய்துள்ளனர். இது கடந்தாண்டை விட 9.3 சதவீதம் குறைவாகும். அதேசமயம் உள்நாட்டு நகரங்களுக்கு 2 லட்சத்து 82 ஆயிரத்து 731 பேர் பயணம் செய்துள்ளனர். இது கடந்தாண்டை விட 7.4 சதவீதம் அதிகமாகும்.
ஜனவரி மாதத்தில் மொத்தம் 3 லட்சத்து 9 ஆயிரத்து 464 பேர் பயணம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 5.7 சதவீதம் அதிகமாகும். விமான இயக்கங்களின் எண்ணிக்கை குறைந்து இருந்தாலும், விமான பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
இதேபோன்று கோவை விமான நிலையத்தில் வெளிநாட்டு நகரங்களுக்கு 130.5 மெட்ரிக் டன் சரக்குகளும், உள்நாட்டு நகரங்களுக்கு 830 மெட்ரிக் டன் சரக்குகளும் என மொத்தம் 960.5 மெட்ரிக் டன் சரக்குகளும் கையாளப்பட்டுள்ளது.
- கோவை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.
- 7-வது நாளாக கோவையில் இருந்து செல்லும் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
கோவை:
நாடு முழுவதும் விமானிகள் மற்றும் பணிப்பெண்கள் உள்ளடக்கிய கேபின் க்ரு ஓய்வு நேரத்தை 36-ல் இருந்து 48 மணி நேரமாக அதிகரித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டது. இதனால் உள்நாட்டில் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
கோவை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவை திரும்ப பெற்ற நிலையிலும் விமானங்கள் சேவை ரத்து செய்யப்படுவது தொடர்ந்தது. நேற்று கோவையில் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இன்று 7-வது நாளாக கோவையில் இருந்து செல்லும் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
கோவையில் இருந்து சென்னைக்கு செல்லும் 2 விமானம் உள்பட 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் மாற்று பயணம் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய இங்களுக்கு சென்றனர்.
இதற்கிடையே இன்று காலை கோவை விமான நிலையத்திற்கு அபுதாபியில் இருந்து வந்த விமான பயணிகள் வெளியில் செல்லும் வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது பயணி ஒருவரின் சூட்கேட்ஸ் அறை கண்ணாடி கதவில் பட்டு கண்ணாடி கதவு உடைந்தது.
இதுகுறித்து மத்திய தொழில்பாதுகாப்பு படை மற்றும் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பயணி அவசரமாக வெளியில் செல்ல முயன்ற போது எதிர்பாராத விதமாக சூட்கேஸ் பட்டதால் கண்ணாடி கதவு உடைத்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு ரூ.500 அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
- பயணிகள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அறைக்கு அழைத்து சென்றனர்.
- ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கோவை:
கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு சிங்கப்பூரிலிருந்து விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.
இந்த விமானத்தில் கோடிக்கணக்கான மதிப்பிலான உயர்ரக போதை பொருட்கள் பயணிகள் மூலம் கடத்தி வரப்படுவதாக கோவை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கோவை விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மற்றும் வான் சுங்க இலாகா துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்த உத்தரவிட்டனர்.
இதனை தொடர்ந்து அந்த விமானம் கோவை விமான நிலையத்தில் தரையிறங்கியதும், அந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
பயணிகள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அறைக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவர்கள் வைத்திருந்த பைகள் உள்ளிட்ட உடைமைகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது 2 பயணிகள் கொண்டு வந்த பைகளில் 6.713 கிலோ கிராம் எடையுள்ள உயர்ரக கஞ்சா(தண்ணீரில் வளரக்கூடியது) போதை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கஞ்சாவை கடத்தி வந்த கேரளா மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த பகத்மான் முஜீப் மற்றும் சுகைல் உபயதுல்லா ஆகிய 2 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்த ஹைட்ரோபோனிக்ஸ் எனப்படும் போதை பொருள் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து கைதான கேரள பயணிகள் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் நடைபெற்ற சில நிமிடத்தில் அதே விமானத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த தமிழரசி ஜெயமாணிக்கம், பாண்டித்துரை சுப்பையா என்ற 2 பயணிகள் ரூ.18.67 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் சுங்க இலாகாவிற்கு வரி செலுத்தாமல் அவற்றை ரகசியமாக கடத்தி வந்தது தெரிய வந்தது.
இந்த 2 சம்பவங்களால் நேற்று இரவு கோவை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து அனைத்து விமான பயணிகளும் தீவிர சோதனைக்கு பிறகு பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
அதேபோன்று வெளிநாடுகளில் இருந்து வந்த அனைத்து விமான பயணிகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
- பெண் ஒருவரின் உடைமைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
- சரளாவின் பைக்குள் துப்பாக்கி தோட்டாக்கள் இருப்பது தெரியவந்தது.
பீளமேடு:
கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று காலை வழக்கம் போல பயணிகள் வந்தனர். அப்போது அவர்களின் உடைமைகளை விமான நிலைய பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர்.
அங்கு வந்த பெண் ஒருவரின் உடைமைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் அவரது பைக்குள் துப்பாக்கி தோட்டாக்கள் இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக விமான நிலைய இருப்பிட மேலாளர் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின்பேரில் அதிகாரிகள் விரைந்து சென்று அந்த பெண்ணிடம் இருந்த துப்பாக்கி தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதில் அந்த பெண் கோவையை சேர்ந்த சரளா என்பதும், பெங்களூருவுக்கு செல்வதற்காக விமான நிலையத்துக்கு வந்ததும் தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் இன்ஸ்பெக்டர் அர்ஜூன்குமார் தலைமையிலான போலீசார் உடனடியாக விமான நிலையத்துக்கு விரைந்து சென்று அந்த பெண்ணை பீளமேடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
கோவை பெண்ணிடம் துப்பாக்கி தோட்டா எப்படி வந்தது, அவர் இதனை யாருக்காக எடுத்து சென்றார் என்பது குறித்து போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாக்களுடன் ஒரு பெண் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- விமானத்தில் வந்த பயணிகள் அனைவரையும் வான்வழி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர்.
- கேரளாவை சேர்ந்த பயணி ஒருவரின் உடமைகளை சோதனை செய்தனர்.
கோவை:
கோவை விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், சார்ஜா, கொழும்பு, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள இயக்கப்பட்டு வருகின்றன.
வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் தங்கம், போதைப் பொருள்கள் உள்ளிட்டவை கடத்தப்படுவதை தடுக்க, சுங்க இலாகா அதிகாரிகள் மற்றும் வான்வழி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று அதிகாலை சிங்கப்பூரில் இருந்து ஹாங்காக் வழியாக கோவை விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வந்தது.
இந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரையும் வான்வழி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர். அவர்களது உடைமைகள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அப்போது கேரளாவை சேர்ந்த பயணி ஒருவரின் உடமைகளை சோதனை செய்தனர். அதில் உயர் ரக கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.5 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவர் சிங்கப்பூரில் இருந்து ஹாங்காங் வழியாக அதை கடத்தி வந்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மாலை 3 மணிக்கு பூத் கமிட்டி மாநாடு தொடங்குகிறது.
- அதிகளவில் கூடிய தொண்டர்களால் விமான நிலையமே ஸ்தம்பித்தது.
2026-ம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்வதற்கும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக கிராமப்புறங்களிலும் பூத் கமிட்டியை பலப்படுத்துவதில் விஜய் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக தமிழகம் முழுவதும் ஒரு பூத்துக்கு ஒரு ஆண், ஒரு பெண் என 2 பேர் வீதம் 35 ஆயிரம் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 70 ஆயிரம் பூத் கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பூத் கமிட்டி பணிகள் நிறைவடைந்ததும், பூத் கமிட்டி மாநாடு நடத்துவதற்கான பணிகளில் தமிழக வெற்றிக்கழகம் தீவிரம் காட்டியது. இந்த மாநாட்டை மொத்தமாக இல்லாமல், மண்டலங்கள் வாரியாக பிரித்து நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி தமிழகத்தை 5 மண்டலங்களாக பிரித்து தற்போது மாநாடு நடத்த உள்ளனர். அதன்படி, முதல்கட்டமாக கொங்கு மண்டல பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான மாநாடு இன்றும், நாளையும் கோவையில் நடக்கிறது.
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள குரும்பபாளையத்தில் உள்ள எஸ்.என்.எஸ் கல்லூரியில் உள்ள அரங்கத்தில் மாலை 3 மணிக்கு பூத் கமிட்டி மாநாடு தொடங்குகிறது. இந்த மாநாட்டில் கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கரூர் ஆகிய 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பூத் கமிட்டி நிர்வாகிகள் 16 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.
மாநாட்டில் பங்கேற்க ஏற்கனவே அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மூலம் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டு இருந்தன. அடையாள அட்டை வைத்திருந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
இந்த மாநாட்டில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக கோவைக்கு வந்தார். கோவை விமான நிலையம் வந்த விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிகளவில் கூடிய தொண்டர்களால் விமான நிலையமே ஸ்தம்பித்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- சர்வதேச விமானங்களில் 23 ஆயிரத்து 641 பயணிகளும், உள்நாட்டு விமானங்களில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 37 பயணிகளும் என மொத்தம் 2 லட்சத்து 80 ஆயிரத்து 678 பேர் பயணம் செய்துள்ளனர்.
- தமிழ்நாட்டில் அதிக பயணிகளை கையாளும் 2-வது பரபரப்பான விமான நிலையமாக கோவை விமான நிலையம் இருந்து வருகிறது.
கோவை:
கோவை விமான நிலையத்தில் இருந்து தினமும் சராசரியாக 30 விமானங்கள் சேவை வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் விமான இயக்கங்கள் மற்றும் சரக்கு போக்குவரத்தின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற விமான போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து குறித்த விவரங்களை விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதன்படி கோவை விமான நிலையத்தில் இருந்து பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 179 சர்வதேச விமானங்களும், 1,651 உள்நாட்டு விமானங்களும் என மொத்தம் 1,830 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.
இது கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 21.43 சதவீதம் அதிகமாகும்.
சர்வதேச விமானங்களில் 23 ஆயிரத்து 641 பயணிகளும், உள்நாட்டு விமானங்களில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 37 பயணிகளும் என மொத்தம் 2 லட்சத்து 80 ஆயிரத்து 678 பேர் பயணம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை விட 31.23 சதவீதம் கூடுதலாகும்.
இதேபோல சர்வதேச விமானங்களில் 180.1 மெட்ரிக் டன் சரக்குகளும், உள்நாட்டு விமானங்களில் 764.7 மெட்ரிக் டன் சரக்குகளும் என மொத்தம் 944.8 மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 19.52 சதவீதம் அதிகமாகும்.
தமிழ்நாட்டில் அதிக பயணிகளை கையாளும் 2-வது பரபரப்பான விமான நிலையமாக கோவை விமான நிலையம் இருந்து வருவதாகவும், அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப விமான நிலைய முனையத்தை விரைவாக மறுசீரமைப்பு செய்ய வேண்டும் எனவும் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- கோவை சர்வதேச விமானநிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
- நேற்றுமுன்தினம் இரவு சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் 167 பயணிகள் வந்து இறங்கினர்.
கோவை:
சீனா உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க அதிதீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சீனாவில் இருந்து விமானங்களில் வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்ய அனைத்து விமான நிலையங்களிலும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கோவை சர்வதேச விமானநிலையத்திலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் 167 பயணிகள் வந்து இறங்கினர். அவர்களில் சேலத்தை சேர்ந்த பயணி ஒருவரின் பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது அவர் சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவை விமானநிலையம் வந்ததும், அவரை போன்று மற்றொருவரும் சீனாவில் இருந்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து இவருக்கு கோவை விமானநிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவு நேற்று வந்தது. அதில் சேலத்தை சேர்ந்த பயணிக்கு கொரோனா உறுதியானது.
மேலும் இவருக்கு எந்தவகையான கொரோனா என்பது குறித்தும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். இதுகுறித்து சேலம் மாவட்ட சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கொரோனா பாதிப்புக்குள்ளானவரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அத்துடன் அவருடன் விமானத்தில் கோவை வந்த 166 பயணிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களை சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அவர்களிடம் தனிமைப்படுத்தி கொள்ளவும் கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனே சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தி உள்ளனர்.
- கொரோனா தொற்று பரவல் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளில் உடல் வெப்ப பரிசோதனை முக்கியமாக கருதப்படுகிறது.
- சளி, இருமல் உள்ளிட்ட இதர அறிகுறிகளையும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை:
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் விமான நிலையங்களில் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் பரிசோதனை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
கோவை விமான நிலையத்திலும் கொரோனா பரிசோதனை மையம் திறக்கப்பட்டு வெளிநாடுகளில் இருந்து வரும் பயனிகளிடம் பரிசோதனை செய்யப்படுகிறது.
தானியங்கி உடல் வெப்ப பரிசோதனை எந்திரம் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் பரிசோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் சிலர் காய்ச்சலுக்கான மருந்துகளை உட்கொண்டு பயணிப்பதாகவும், அவர்கள் விமான நிலைய வளாகத்தில் பரிசோதனையில் இருந்து தப்பி செல்வதையே நோக்கமாக கொண்டு செயல்படுவதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கொரோனா தொற்று பரவல் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளில் உடல் வெப்ப பரிசோதனை முக்கியமாக கருதப்படுகிறது. இதுதவிர சளி, இருமல் உள்ளிட்ட இதர அறிகுறிகளையும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2 சதவீதத்தினருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
ஒருசில பயணிகள் தங்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் அதை மறைக்க காய்ச்சலுக்கான மருந்துகளை உட்கொண்டு பயணிக்கின்றனர்.
அவர்களின் நோக்கம் பரிசோதனைகளில் இருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்பது தான். ஆனால் வீட்டுக்கு சென்ற உடல்நிலை மேலும் மோசமடைந்து அதற்கு பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதுபோன்று பரிசோதனையில் சிக்காமல் வெளியேறும் நபர்கள் சமுதாயத்தில் நோய் பரவல் ஏற்பட முக்கிய காரணமாக அமைந்து விடுகின்றனர்.
எனவே வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் ஒவ்வொருவரும் தங்களின் பொறுப்பை உணர்ந்து நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வளைகுடா நாடான ஷார்ஜாவில் இருந்து கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு தினசரி ஏர் அரேபியா விமானம் இயக்கப்படுகிறது.
- வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 11 பயணிகளிடம் இருந்து மொத்தம் 6.62 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்தனர்.
கோவை:
கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும், மும்பை, டெல்லி, ஐதராபாத் போன்ற பிற மாநிலங்களுக்கும், சென்னைக்கும் தினசரி விமானங்கள் இயக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் இருந்தும் விமானத்தில் வரும் பயணிகள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வருவது வாடிக்கையாக உள்ளது. இதனை அதிகாரிகள் கண்காணித்து நகைகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
வளைகுடா நாடான ஷார்ஜாவில் இருந்து கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு தினசரி ஏர் அரேபியா விமானம் இயக்கப்படுகிறது. இந்த விமானத்தில் கோவைக்கு வரும் பயணிகள் சிலர் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வருவதாக உளவுப்பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து கோவை விமான நிலைய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஷார்ஜாவில் இருந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.
அப்போது அந்த விமானத்தில் வந்த 11 பயணிகள் தங்களது பேண்ட் பைகள், மலக்குடல், காலணிகள் மற்றும் ஜீன்ஸ் பேண்டில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.
வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 11 பயணிகளிடம் இருந்து மொத்தம் 6.62 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.3.8 கோடி ஆகும்.
இந்த சோதனையில் ½ கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகளை கடத்தி வந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த அர்ஜூன் (43) என்பவரை மட்டும் அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து மற்ற பயணிகளிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வாரந்தோறும் 6 டன் எடையிலான மாம்பழங்கள் கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
- கோவை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 250 டன் சரக்குகள் கையாளும் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளது.
கோவை:
கோவை சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைந்துள்ளது ஒருங்கிணைந்த சரக்கக வளாகம்.
இங்கிருந்து உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் கோவையில் இருந்து சரக்குகள் விமானங்களில் அனுப்பி வைக்கப்படுகிறது.
நேரடி விமான சேவை இல்லாத ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கும் பாண்டட் டிரக் சேவை மூலம் சாலை வழியாக கொச்சி, பெங்களூரு உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஏற்றுமதியாகின்றன.
மாதந்தோறும் உள்நாட்டு பிரிவில் 700 டன், வெளிநாட்டு பிரிவில் 150 டன் சரக்குகள் கையாளப்படுகின்றன.
தற்போது மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதால் கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு வாரந்தோறும் 6 டன் மாம்பழம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-
வழக்கமாக பொறியியல் உற்பத்தி பொருட்கள், வார்ப்படம், காய்கறிகள், பழங்கள் மற்றும் சிப்ஸ் உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகள் புக்கிங் செய்யப்பட்டு கொண்டு செல்லப்படும்.
சிங்கப்பூர் விமானத்தில் சரக்குகள் புக்கிங் மிகவும் குறைவாக உள்ளதால் அரை டன் அல்லது ஒரு டன் மட்டுமே சரக்குகள் கையாளப்படுகின்றன.
ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்கள் விமான சேவை வழங்கப்படும் நிலையில், ஒவ்வொரு முறையும் 3 டன் எடையிலான சரக்குகள் கொண்டு செல்லப்படுகிறது.
கோடை காலத்தில் மாம்பழம் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படும். தற்போது சீசன் தொடங்கி உள்ளதால் கேரளா மற்றும் பொள்ளாச்சியில் இருந்து மாம்பழங்கள் அதிகளவு ஷார்ஜா விமானத்தில் கொண்டு செல்லப்படுகின்றன.
வாரந்தோறும் 6 டன் எடையிலான மாம்பழங்கள் கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கோவை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 250 டன் சரக்குகள் கையாளும் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளது.
சர்வதேச நாடுகளுக்கு விமான சேவை அதிகரித்தால் சரக்குகள் கையாளப்படும் அளவும் கணிசமாக அதிகரிக்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- விமானம் சிறிது நேரத்தில் தனது ஓடுபாதையில் இருந்து மேல் நோக்கி பறக்க ஆரம்பித்தது.
- வானில் பறக்க தொடங்கிய சில நிமிடங்களிலேயே, விமானத்தின் என்ஜின் மீது பறவை மோதியது.
கோவை:
கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் சுமார் 23 விமானங்கள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.
இதுதவிர வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகிறது. அதன்படி ஷார்ஜாவிற்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு ஷார்ஜாவில் இருந்து 175 பயணிகளுடன் விமானம் கோவை விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்று விட்டனர்.
அதனை தொடர்ந்து கோவையில் இருந்து ஷார்ஜாவிற்கு இன்று அதிகாலை 4 மணிக்கு, விமானம் புறப்பட்டது.
இந்த விமானத்தில் 175 பயணிகள் ஷார்ஜாவுக்கு செல்ல தயாராக இருந்தனர். விமானம் சிறிது நேரத்தில் தனது ஓடுபாதையில் இருந்து மேல் நோக்கி பறக்க ஆரம்பித்தது.
வானில் பறக்க தொடங்கிய சில நிமிடங்களிலேயே, விமானத்தின் என்ஜின் மீது பறவை மோதியது.
இதனை அறிந்து கொண்ட விமானி உடனடியாக கோவை விமான நிலையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். பின்னர் அவர்கள் கொடுத்த அறிவுரையின்படி அந்த விமானம் மீண்டும் கோவை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும், அதில் இருந்த பயணிகளை பத்திரமாக கீழே இறக்கினர். அவர்களில் கோவையை சேர்ந்தவர்களை வீட்டிற்கும், மற்றவர்களை ஓட்டலிலும் தங்க வைத்தனர்.
இதனை தொடர்ந்து விமான நிலைய பொறியாளர்கள் உடனடியாக விரைந்து சென்று, விமானத்தில் ஏறி ஆய்வு செய்தனர்.
விமானத்தில் தற்போது பராமரிப்பு பணிகளையும் பொறியாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். பணிகள் அனைத்தும் முடிந்த பின்னர் மீண்டும் விமானம் எப்போது கோவையில் இருந்து புறப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்படும்.
விமானி பறவை மோதியது பார்த்து உடனே தகவல் கொடுத்ததால் 175 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் பெரும் அசம்பாவிதமும் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






