என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police investigation"

    • 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சிறுவனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
    • ரெயில் நிலையம் அருகில் சிறுவன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை பஸ் நிலையம் அருகில் தங்கம் உருக்கும் தொழில் கூடம் உள்ளது. இதனை மகாராஷ்டிராவை சேர்ந்த சுஹாஷ் என்பவர் கடந்த 30 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இவரிடம் அதே மாநிலத்தை சேர்ந்த ஓம்கார் என்ற 17 வயது சிறுவன் கடந்த வாரம் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

    இந்த நிலையில், சுஹாஷ் மற்றும் ஓம்கார் மட்டும் நேற்று கடையில் இருந்துள்ளனர். அப்போது சுமார் 1½ கிலோ தங்க நகைகளை உருக்கி, அதனை தங்க கட்டியாக மாற்றிய சுஹாஷ், அதனை எடை போட்டு எடுத்து வருமாறு சிறுவன் ஓம்காரிடம் கொடுத்துள்ளார். அதனை எடுத்துக்கொண்டு கடையின் முகப்பு பகுதிக்கு வந்த ஓம்கார், திடீரென மனம் மாறி தங்க கட்டியை தூக்கிக்கொண்டு அங்கிருந்து ஓடி தலைமறைவானார். இதன் மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.

    உடனடியாக இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.தொடர்ந்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் சம்பவ இடத்துக்கு நேரில் விரைந்து விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து, 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சிறுவனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து, ரெயில் நிலையம் அருகில் சிறுவன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுவனை லாவகமாக மடக்கி கைது செய்தனர்.

    மேலும், அவரிடம் இருந்த 1½ கிலோ தங்க கட்டியையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவரை மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தஞ்சாவூர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    • தலை, கை, கால் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு ஆதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • தலைமறைவானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் ரவுடி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த தோழியை காண்பதற்காக வந்த ரவுடி ஆதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தலை, கை, கால் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு ஆதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    ரவுடி ஆதியை வெட்டிக்கொன்றது தோழி சுசித்ராவின் உறவினர்கள் மூன்று பேர் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    தலைமறைவான சுசித்ராவின் உறவினர்களாக சூர்யா, அலிபாய் மற்றும் கார்த்திக் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். 

    • கடந்த மாதம் 23-ந்தேதி இருவரும் வெவ்வேறு கார்களில் சென்றனர்.
    • விபத்தை ஏற்படுத்திய காரை கண்டுபிடித்து, அதனை ஓட்டியது அஜாஸ் என்பதை போலீசார் கண்டு பிடித்தனர்.

    காதலில் விழுந்தவர்கள் அதில் வெற்றி பெற பல்வேறு யுக்திகளை கையாளுவது சகஜமான விஷயம் தான். அதிலும் ஆண்களை எடுத்துக் கொண்டால் காதலிக்கும் பெண்ணை மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினரின் மனதையும் கவர வேண்டும் என்று நினைப்பர்.

    அப்படி நினைத்த ஒருவர், தான் காதலித்த பெண்ணின் மீது நண்பன் மூலமாக மோதச்செய்து விபத்தை ஏற்படுத்தி உள்ளார். போலீசார் நடத்திய தீவிர விசாரணையால், விபத்தை வாலிபர் திட்டமிட்டு அரங்கேற்றிய விவரம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. அது பற்றிய விவரம் வருமாறு:-

    கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் கோன்னி மம்மூத்து பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் ராஜன்(வயது24). இவர் ஒரு இளம்பெண்ணை காதலித்துள்ளார். அதுகுறித்து அந்த பெண்ணிடம் ரஞ்சித்ராஜன் தெரிவித்திருக்கிறார். ஆனால் அந்த பெண்ணோ பெரிய அளவில் விருப்பம் காட்டாமல் இருந்ததாக தெரிகிறது.

    இதனால் அந்த பெண்ணின் குடும்பத்தினரின் மனதை கவர்ந்து, அதன் மூலமாக இளம்பெண்ணை காதலிக்க வைத்துவிடலாம் என்று நினைத்தார். தான் காதலிக்கும் பெண்ணின் குடும்பத்தினரை கவர, விபத்து நாடகத்தை சினிமா பாணியில் அரங்கேற்ற திட்டமிட்டார்.

    அதாவது தான் காதலிக்கும் பெண்ணை ஏதாவது ஒரு வாகனத்தை விட்டு மோதச்செய்து, அவரை காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்ப்பதன் மூலம் பெண்ணின் குடும்பத்தினரிடம் நல்ல பெயர் வாங்குவதே அவரது திட்டம் ஆகும்.

     

    கைதானவர்கள்

    இதுகுறித்து தனது நண்பரான கோன்னி பையனமான் பகுதியை சேர்ந்த அஜாஸ்(19) என்பவரிடம் தெரிவித்தார். அதற்கு அவரும் சம்மதித்தார். இதையடுத்து விபத்தை எங்கு வைத்து நடத்துவது? எப்படி அரங்கேற்றுவது? என்று இருவரும் திட்டமிட்டனர்.

    ரஞ்சித் ராஜன் மற்றும் அஜாஸ் வெவ்வேறு கார்களில் செல்வதும், அஜாஸ் தனது காரால் ரஞ்சித் ராஜன் காதலிக்கும் பெண்ணின் மீது மோதி விபத்தை ஏற்படுத்துவதுமே அவர்களது திட்டமாகும். அதன்படி கடந்த மாதம் 23-ந்தேதி இருவரும் வெவ்வேறு கார்களில் சென்றனர். பின்பு இருசக்கர வாகனத்தில் சென்ற ரஞ்சித்ராஜன் காதலிக்கும் பெண்ணை, அஜாஸ் தனது காரில் பின்தொடர்ந்து சென்றார். பத்தினம்திட்டா அருகே உள்ள வாழமுட்டம் பகுதிக்கு சென்றதும் அந்த பெண்ணின் இருசக்கர வாகனத்தின் மீது காரால் அஜாஸ் மோதினார்.

    பின்பு அவர் சம்பவ இடத்தில் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுவிட்டார். கார் மோதிய வேகத்தில் அந்த பெண் தூக்கிவீசப்பட்டார். அதில் அவரது கை உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் மற்றொரு காரில் ரஞ்சித் ராஜன் விபத்து நடந்த இடத்துக்கு வந்தார்.

    அவர் காயமடைந்து கிடந்த தான் காதலிக்கும் பெண்ணை மீட்டு, தனது காரில் கொண்டு சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்தார். இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். விபத்தை ஏற்படுத்திய காரை கண்டுபிடித்து, அதனை ஓட்டியது அஜாஸ் என்பதை போலீசார் கண்டு பிடித்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் விபத்தில் சிக்கி காயமடைந்த பெண்ணை காப்பாற்றிய ரஞ்சித்ராஜனின் நண்பர் என்பது தெரியவந்தது. மேலும் விபத்து நடந்தவுடன் சம்பவ இடத்துக்கு ரஞ்சித் ராஜன் உடனடியாக வந்தது எப்படி? என்ற கேள்வி போலீசாருக்கு எழுந்தது.

    இதனால் இந்த விபத்து தற்செயலாக நடந்திருக்காதோ? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அஜாஸ் மற்றும் ரஞ்சித் ராஜன் ஆகியோரிடம் தனித்தனியாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.

    இறுதியில் ரஞ்சித்ராஜன் தனது நண்பருடன் சேர்ந்து விபத்தை திட்டமிட்டு அரங்கேற்றியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ரஞ்சித்ராஜன் மற்றும் அஜாஸ் ஆகிய இருவரையும் போலிசார் கைது செய்தனர். காதலித்த பெண்ணின் குடும்பத்தினரை கவருவதற்காக, திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்தி இளம் பெண்ணின் மீது காரால் மோதச்செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விரைந்து வந்த போலீசார், சிறுவனின் தாயை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • பொழுது விடிந்தபிறகு சாலைக்கு சென்று வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்டுள்ளான்.

    ஒடிசாவின் தியோகர் மாவட்டத்தின் காட்டுப்பகுதியையொட்டி செல்லும் சாலை ஒன்றில் நேற்று முன்தினம் காலையில் 5 வயது சிறுவன் ஒருவன் அழுதவாறே அந்த வழியாக செல்லும் வாகனங்களை நிறுத்தி உதவி கேடடுக்கொண்டு இருந்தான். அவனுக்கு அருகே ஒரு மோட்டார் சைக்கிளும் நிறுத்தப்பட்டு இருந்தது.

    இதைப்பார்த்து வாகன ஓட்டிகள் சிலர் அவனிடம் விவரம் கேட்டனர். அப்போது அவர்களை அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு அவன் அழைத்து சென்றான்.

    அங்கு சென்று பார்த்தபோது சிறுவனின் தந்தை இறந்து கிடந்தார். அருகே அவனது தாய் மயங்கிய நிலையில் கிடந்தார்.

    உடனே அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், சிறுவனின் தாயை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தாயும் உயிரிழந்தார்.

    பின்னர் இது குறித்து விசாரித்தபோது, அவர்கள் ஜியானந்தபள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. கடந்த 27-ந் தேதி மூவரும் வெளியே சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்தபோது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    உடனே அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மூன்று பேரும் சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்து அடர்ந்த காட்டுக்குள் சென்றனர். பின்னர் அங்கே விஷம் குடித்துள்ளனர். சிறுவனுக்கும் அவர்கள் விஷம் கொடுத்துள்ளனர்.

    ஒரு சில மணி நேரத்தில் கணவர் உயிரிழந்தார். மனைவி மயங்கி விழுந்து உயிருக்குப்போராடியவாறே இருந்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக தப்பிய சிறுவன், அடர்ந்த காட்டுக்குள் இரவு முழுவதும் கடும் குளிரில் தனது தந்தையின் உடலுக்கும், மயங்கி கிடந்த தாய்க்கும் காவல் இருந்துள்ளான். பின்னர் பொழுது விடிந்தபிறகு சாலைக்கு சென்று வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்டுள்ளான்.

    நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவத்தில் தாய்-தந்தையை பறிகொடுத்த சிறுவனை அவனது தாத்தா-பாட்டியிடம் போலீசார் சேர்த்துள்ளனர்.

    • பெண் மேலாளருக்கு காரில் லிப்ட் தருவதாக அந்த நிறுவனத்தின் பெண் உயர் அதிகாரி கூறினார்.
    • தன்னை காரில் அழைத்து சென்றபோது வழியில் சிகரெட் போன்ற ஒரு பொருளை வாங்கி எனக்கு கொடுத்தனர்.

    ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தனியார் ஐ.டி. நிறுவன தலைமை செயல் அதிகாரியான ஜிதேஷ் சிசோடியா தனது பிறந்தநாளையொட்டி விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். இதில் அந்த நிறுவனத்தின் பெண் மேலாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மதுபானம் பரிமாறப்பட்டதாக தெரிகிறது.

    இந்த விருந்து நிகழ்ச்சி நள்ளிரவு வரை நடந்தது. அப்போது பெண் மேலாளருக்கு காரில் லிப்ட் தருவதாக அந்த நிறுவனத்தின் பெண் உயர் அதிகாரி கூறினார். இதையடுத்து காரில் பெண் மேலாளர் ஏறினார். காரில் தலைமை செயல் அதிகாரி ஜிதேஷ் சிசோடியா மற்றும் பெண் உயர் அதிகாரியின் கணவர் சரோஹி ஆகியோரும் இருந்தனர்.

    அப்போது மயக்க நிலையில் இருந்த பெண் மேலாளரை ஜிதேஷ் சிசோடியா, சரோஹி ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அவரை வீட்டில் இறங்கிவிட்டுள்ளனர். மறுநாள் மயக்கம் தெளிந்த பின், தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை உணர்ந்த பெண் மேலாளர், போலீசில் புகார் செய்தார்.

    அதில் தன்னை காரில் அழைத்து சென்றபோது வழியில் சிகரெட் போன்ற ஒரு பொருளை வாங்கி எனக்கு கொடுத்தனர். அதை உட்கொண்ட பிறகு நான் மயக்கமடைந்தேன். பின்னர் என்னை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்று தெரிவித்து உள்ளார். இதையடுத்து ஜிதேஷ் சிசோடியா, சரோஹி மற்றும் உடந்தையாக இருந்த பெண் உயர் அதிகாரி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • எஸ்.பி. சுரேஷ்பாபு தலைமையில் 4 பேர் கொண்ட போலீஸ் அதிகாரிகள் இன்று திண்டுக்கல் ராம்நகருக்கு வந்தனர்.
    • பாலசுப்பிரமணி நிதிநிறுவனம் மற்றும் தங்கநகை உருக்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

    திண்டுக்கல்:

    கேரள மாநிலம் சபரிமலையில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் புதிதாக தங்கத்தகடுகள் பதிக்கும் பணி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அப்போது கிலோ கணக்கில் தங்கநகை மாயமானது. இந்த வழக்கில் உன்னிகிருஷ்ண போற்றி என்பவர் முதல் குற்றவாளியாக கண்டறியப்பட்டார். அவரை தொடர்ந்து மேலும் பலர் கைது செய்யப்பட்டனர்.

    இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையிலும் சிலைகள் மாயமாகின. இதுதொடர்பாக கேரள மாநிலம் எஸ்.ஐ.டி. என்ற அமைப்பின் டி.ஒய்.எஸ்.பி. சுரேஷ்பாபு தலைமையில் அதிகாரிகள் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் அப்போது பதவியில் இருந்த சபரிமலை தேவஸ்தான அதிகாரிகள் உட்பட பலர் சிக்கியுள்ளனர்.

    இந்த நகை திருட்டு வழக்கில் வெளிநாடு வாழ் இந்தியருக்கு தொடர்பு இருப்பது தெரியவரவே அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இந்த விசாரணையில் சபரிமலை நம்பூதிரி, திண்டுக்கல் ராம்நகரை சேர்ந்த மணி (எ) பாலசுப்பிரமணி உட்பட 3 பேர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    அதன் பேரில் எஸ்.பி. சுரேஷ்பாபு தலைமையில் 4 பேர் கொண்ட போலீஸ் அதிகாரிகள் இன்று திண்டுக்கல் ராம்நகருக்கு வந்தனர். அவர்களுடன் திண்டுக்கல் போலீசாரும் விசாரணைக்கு சென்றனர். பாலசுப்பிரமணி நிதிநிறுவனம் மற்றும் தங்கநகை உருக்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். பாலசுப்பிரமணிக்கு சொந்தமான அடுக்குமாடி கட்டிடத்தில் வைத்து கேரள போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவில் நகை திருட்டு வழக்கில் திண்டுக்கல் வியாபாரியிடம் விசாரணை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வீட்டின் பூட்டு உடைக்கப்படவில்லை. பீரோவும் உடைக்கப்படவில்லை.
    • இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    குனியமுத்தூர்:

    கோவை குனியமுத்தூர் அடுத்த பி.கே.புதூர் அய்யப்பா நகரை சேர்ந்தவர் ராஜன்(வயது65).

    இவர் அந்த பகுதியில் சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெபமார்ட்டின். இவர்களுக்கு ரூபா என்ற மகள் உள்ளார்.

    இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். ரூபா தனது பெற்றோரின் வீட்டின் அருகேயே வசித்து வருகிறார். ராஜனின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம்.

    இந்த நிலையில் ராஜன் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்காக தனது மனைவி மற்றும் மகள் ரூபாவுடன் சாத்தான்குளத்திற்கு சென்றார். அங்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி விட்டு இன்று காலை கோவைக்கு வந்தார்.

    பின்னர் ரூபா அவரது வீட்டிற்கு சென்று வீட்டின் கதவை திறக்க முயன்றார். அப்போது கதவு தானாகவே திறந்து கிடந்தது. இதை பார்த்ததும் பதறிப்போன அவர் வீட்டிற்குள் சென்று பீரோவை திறந்து பார்த்தார்.

    ஊருக்கு செல்வதற்கு முன்பாக ரூபா தனது வீட்டில் மொத்தம் 103 பவுன் நகைகளை பீரோவில் பூட்டி வைத்து சென்றிருந்தார். இன்று காலை வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 103 பவுன் நகைகளும் கொள்ளை போய் இருந்தது.

    இதுகுறித்து அவர் குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தகவல் அறிந்ததும் கோவை தெற்கு உதவி கமிஷனர் கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரித்தார்.

    மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி உள்ள தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது.

    இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையில் ஈடுபட்டவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீட்டின் பூட்டு உடைக்கப்படவில்லை. பீரோவும் உடைக்கப்படவில்லை. இதனால் தெரிந்தவர்கள் யாரோ இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. மேலும் போலி சாவி தயாரித்து, வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகையை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த கோணங்களிலும் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

    கோவையில் தனியார் பள்ளி ஆசிரியையின் வீட்டில் 103 பவுன் நகை கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மகேந்திரா சிட்டி அருகே உள்ள சிக்னலில் நின்று கொண்டு இருந்த ஒரு அரசு பஸ்சின் பின்னால் மாணவர்கள் தங்களது மோட்டார் சைக்கிளில் காத்திருந்தனர்.
    • விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வண்டலூர்:

    காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தவர் லோகேஷ் (வயது22) நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்.

    இதே கல்லூரியில் வந்தவாசியை சேர்ந்த சாஹித் பாரான்(22) என்பவரும் படித்து வந்தார். நண்பர்களான இருவரும் தனியாக வீடு எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வந்தனர்.

    நேற்று இரவு லோகேசும், சாஹித் பாரானும் மகேந்திரா சிட்டி அடுத்து உள்ள வணிக நிறுனத்திற்கு சென்று விட்டு ஒரே மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தனர். மகேந்திரா சிட்டி அருகே உள்ள சிக்னலில் நின்று கொண்டு இருந்த ஒரு அரசு பஸ்சின் பின்னால் மாணவர்கள் தங்களது மோட்டார் சைக்கிளில் காத்திருந்தனர்.

    அப்போது பின்னால் திண்டிவனத்தில் இருந்து மாதவரம் நோக்கி வந்த மற்றொரு பஸ் மாணவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இழுத்து செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் நின்று கொண்டு இருந்த அரசு பஸ்சுக்கும், மோதிய அரசு பஸ்சுக்கும் இடையே சிக்கிக் கொண்டது. இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் லோகேசும், சாஹித் பாரானும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    பொத்தேரி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு அறைக்குள் சென்ற பிறகு எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.
    • என்னிடம் தவறாக நடந்து கொண்ட டாக்டர் தற்போது அதுபோன்று எதுவும் நடக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்து வருகிறார்.

    சென்னை:

    சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவி மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய பரபரப்பான தகவல்கள் வருமாறு:-

    சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.சி. பிசியோதெரபி படித்து வருகிறார். 4-ம் ஆண்டு மாணவியான இவர் பெரம்பூரில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் பயிற்சி பெற்று வந்தார்.

    அந்த ஆஸ்பத்திரியில் ரூ.4 ஆயிரம் சம்பளத்துடன் பயிற்சி பெற்ற மாணவி அந்த ஆஸ்பத்திரியின் உரிமையாளரான டாக்டர் ஒருவர் மீதுதான் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி இருக்கிறார்.

    இது தொடர்பாக மாணவி அளித்துள்ள புகாரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்பத்திரி உரிமையாளரான டாக்டர் எனக்கு காலை 6.30 மணிக்கு போன் செய்து நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது. நேரில் வா என்று கூறினார்.

    இதைத் தொடர்ந்து பகல் 1 மணி அளவில் நான் ஆஸ்பத்திரிக்கு சென்றேன். இதன் பிறகு டாக்டர் தனது காரில் பெண் ஒருவருக்கு மசாஜ் செய்ய வேண்டி உள்ளது என என்னிடம் தெரிவித்தார். இதை நம்பி நான் அவருடன் கொளத்தூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு காரில் சென்றேன்.

    அப்போது டாக்டர் என்னிடம் நீ, காபி, டீ எதுவும் சாப்பிடுகிறாயா? என்று கேட்டார். நான் அந்த பழக்கம் இல்லை என்று கூறினேன். இதையடுத்து காரில் இருந்த குளிர்பானத்தை எனக்கு கொடுத்தார். அதனை குடித்ததும் நான் மயக்கம் ஆகிவிட்டேன்.

    அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு அறைக்குள் சென்ற பிறகு எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. நீண்ட நேரம் கழித்து கண்விழித்து பார்த்தபோது எனது உடலில் ஆடைகள் எதுவும் இல்லை.

    என்னை காரில் அழைத்து சென்ற டாக்டரும் ஆடை எதுவும் இன்றி படுக்கையில் எனது அருகில் படுத்து இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் அவரை தள்ளி விட்டு விட்டு உடைகளை அணிந்துக் கொண்டு அங்கிருந்து அச்சத்துடன் வீட்டுக்கு வந்து விட்டேன். பயந்து போய் யாரிடமும் சொல்லாமல் இருந்தேன்.

    பின்னர் இதுபற்றி எனது அக்காவிடம் கூறினேன். இதற்கு பிறகு அவரும், எனது உறவினர்களும் ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டரிடமும், அவரது மனைவியிடமும் இதுபற்றி கேட்டு சண்டை போட்டனர்.

    என்னிடம் தவறாக நடந்து கொண்ட டாக்டர் தற்போது அதுபோன்று எதுவும் நடக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்து வருகிறார். எனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து என்னுடன் தகாத உறவில் ஈடுபட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மருத்துவ மாணவி முதலில் இந்த புகார் மனுவை செம்பியம் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ளார். அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் கொளத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதைத் தொடர்ந்து மகளிர் போலீசார் மாணவி அளித்த புகார் மீது தீவிர விசாரணை நடத்தினார்கள்.

    மாணவி புகாரில் கூறி இருப்பது பற்றிய தகவல்கள் தொடர்பாக கூடுதல் விவரங்களையும் சேகரித்தனர். இதில் மாணவியின் பாலியல் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து டாக்டர் கார்த்திகேயனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பிசியோதெரபிஸ்ட் டாக்டரான இவர் சொந்தமாக ஆஸ்பத்திரியை நடத்தி வரும் நிலையில்தான் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளார்.

    பிசியோதெரபிஸ்ட் படித்து வந்த கொடுங்கையூர் மாணவியை அடைவதற்கு திட்டமிட்டுள்ளார். இதற்காக நோயாளி ஒருவருக்கு பிசியோதெரபி செய்ய வேண்டும் என்று ஏமாற்றி மாணவியை தனது காரில் அழைத்துச் சென்றிருப்பது போலீஸ் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.

    இதையடுத்து கொளத்தூர் ஜெயந்தி நகர் 2-வது தெருவில் உள்ள சர்வீஸ் அடுக்குமாடி குடியிருப்புக்கு மாணவியை அழைத்துச் சென்ற போதுதான் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார். இதற்காக கோககோலா குளிர்பானத்தை வாங்கி அதில் மயக்க மருந்தை கலந்து தயாராக வைத்திருந்து உள்ளார்.

    இதைதான் மாணவிக்கு கொடுத்து மயக்கம் அடைய செய்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கற்பழித்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    பிசியோதெரபிஸ்ட் டாக்டரான கார்த்திகேயன் மீது 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டு உள்ளது. பி.என்.எஸ். 123-குற்றம் செய்யும் நோக்கத்துடன் விஷம் அல்லது தீங்கு விளைவிக்கும் பொருளை சாப்பிட கொடுத்தல், பி.என்.எஸ். 63-கற்பழிப்பு, பி.என்.எஸ். 64-கற்பழிப்புக்கான தண்டனையை உறுதி செய்யும் பிரிவு ஆகிய 3 சட்டப் பிரிவுகளின் கீழ் டாக்டர் கார்த்திகேயன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர்.

    இந்த பாலியல் சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தீயை அணைக்க 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தீவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பி.எஸ்.என்.எல் அலுவலகத்தின் 2 முதல் 4-ம் தளம் வரை தீ பரவிய நிலையில் தீயை அணைக்க 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தீவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கடந்த 2 நாட்களாக அவர்கள் தங்கியிருந்த அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்தது.
    • கணவன், மனைவி மற்றும் அவர்களது 2 மகள்கள் என 4 பேரும் இறந்த நிலையில் கிடந்தனர்.

    திருச்சி:

    108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் ஸ்ரீரங்கத்திற்கு ஆண்டின் அனைத்து நாட்களிலும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் தங்குவதற்காக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அறை வசதிகள், தங்கும் விடுதிகள், உணவகம் மற்றும் வாகன நிறுத்துமிடங்களுடன் கூடிய யாத்ரி நிவாஸ் கட்டப்பட்டது.

    இன்று ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியுள்ளதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் 21 நாட்களும் கண்டுகளிக்கும் வகையில் இந்த யாத்ரி நிவாசில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்த சுவாமிநாதன் (வயது 67) மற்றும் அவரது மனைவி செண்பகவல்லி (65) ஆகியோர் தங்களது 2 மகள்களுடன் கடந்த 10-ந்தேதி ஸ்ரீரங்கம் வருகை தந்தனர்.

    பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தும் வகையில் அவர்கள் ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாசில் அறை எடுத்து தங்கியிருந்தனர். இதற்கிடையே கடந்த 2 நாட்களாக அவர்கள் தங்கியிருந்த அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து நிவாஸ் ஊழியர்கள் அந்த அறைக்கு முன்பாக நின்றுகொண்டு பலமுறை கதவை தட்டியும் உள்ளே இருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை. அத்துடன் அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது.

    இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் உடனடியாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு கணவன், மனைவி மற்றும் அவர்களது 2 மகள்கள் என 4 பேரும் இறந்த நிலையில் கிடந்தனர்.

    உணவில் விஷம் கலந்து அவர்கள் தற்கொலை செய்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    • காயமடைந்த பெண்ணை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
    • சம்பவம் தொடர்பாக சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை பகுதியில் மேட்டு தெரு அருகே உள்ள கடையில் பணியாற்றி வரும் 24 வயதுடைய பெண்ணும், நாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை (வயது26) என்ற வாலிபரும், கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    சம்பவத்தன்று காலை மதுபோதையில் வந்த அண்ணாமலை கடையில் வேலை பார்த்து கொண்டிருந்த தனது காதலியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் அந்த பெண்ணின் தந்தைக்கு போன் செய்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து ஆத்திரம் அடைந்த அண்ணாமலை தான் மறைத்து வைத்திருந்த சூரி கத்தியால் காதலி கன்னத்தில் வெட்டி கீறினார். இதில் அவர் வலி தாங்காமல் அலறினார். அவர் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை அறிந்து அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்று உள்ளார்.

    இதனை தொடர்ந்து காயமடைந்த அந்த பெண்ணை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இச்சம்பவம் தொடர்பாக சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×