என் மலர்
ஆந்திர பிரதேசம்
- 2 குளிர்சாதன பெட்டிகளில் தீப்பற்றியதில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
- எக்ஸ்பிரஸ் ரெயிலின் B1, M1 பெட்டிகள் முழுமையாக எரிந்து சேதமடைந்தன.
ஜார்கண்ட் மாநிலம், டாடா நகரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் டாடா நகர் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் துவ்வாடா அருகே வந்தபோது ரெயிலின் பேன்ட்ரி காருக்கு அருகில் இருந்த பி1 மற்றும் எம்2 ஏசி பெட்டிகளில் புகை வந்தது,
இதனை கவனித்த லோகோ பைலட்டுகள் உடனடியாக ரெயிலை எலமஞ்சிலி ரெயில் நிலையத்தில் ரெயிலை நிறுத்தினர். புகை தீயாக மாறியது. அதில் இருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கினர்.
இந்த சம்பவத்தில் பி1 பெட்டியில் இருந்த ஒருவர் உயிருடன் எரிந்து உயிரிழந்தார். இறந்தவர் விஜயவாடாவைச் சேர்ந்த சந்திரசேகர் சுந்தர் (வயது 70) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்து காரணமாக, எலமஞ்சிலி ரெயில் நிலையம் புகையால் நிரம்பியது.
அனகப்பள்ளி எலமஞ்சிலி மற்றும் நக்கப்பள்ளி ஆகிய இடங்களிலிருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க முயன்றனர். 2 பெட்டிகளிலும் இருந்த பயணிகளின் அனைத்து உடமைகளும் எரிந்தன.
மூத்த ரெயில்வே அதிகாரிகள் நிலையத்திற்கு வந்து நிலைமையை ஆய்வு செய்தனர். ஆம்புலன்ஸ்கள் விரைந்தன. சுமார் 2000 பயணிகள் குளிரில் ரெயில் நிலையத்தில் சிக்கித் தவித்தனர். இந்த விபத்தைத் தொடர்ந்து, விசாகப்பட்டினம் விஜயவாடா வழித்தடத்தில் செல்லும் அனைத்து ரெயில்களும் நிறுத்தப்பட்டன.
அதிகாலை 3.30 மணிக்குப் பிறகு எரிந்த 2 பெட்டிகளையும் ரெயில்வே அதிகாரிகள் அகற்றினர். பயணிகளை மற்ற பெட்டிகளுக்கு மாற்றி ரெயிலை அனுப்ப ஏற்பாடு செய்தனர்.
இந்த விபத்து காரணமாக விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடா செல்லும் பல ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. சில ரெயில்கள் விசாகப்பட்டினம் அனகப்பள்ளி மற்றும் துனி நிலையங்களில் நிறுத்தப்பட்டன.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் விஜயவாடாவில் நடந்தது.
- பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் தன்வி பத்ரி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தார்.
விஜயவாடா:
87-வது தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்தது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தன்வி பத்ரி, சூர்யா கரிஷ்மா தமிரி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சூர்யா கரிஷ்மா தமிரி 17-21, 21-12, 21-14 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் விஜயவாடாவில் நடந்து வருகிறது.
- பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் தன்வி பத்ரி அரையிறுதியில் வென்றார்.
விஜயவாடா:
87-வது தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் தன்வி பத்ரி, சுருதி முன்டாடா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய தன்வி பத்ரி 18-21, 21-12, 21-15 என்ற புள்ளிக்கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
- திருமணம் முடிந்த நிலையில் மணகன் சொந்த ஊருக்கு ரெயிலில் அழைத்துச் சென்றார்.
- ரெயில் இருந்த இறங்கி மாயமான நிலையில், அத்தையுடன் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம், இச்சாபுரம் நகர் கர்ஜி தெருவை சேர்ந்த இளம்பெண் முத்திரெட்டி வாணி (19). இவருக்கும் கர்நாடகாவை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீகாகுளத்தில் உள்ள துர்கா தேவி கோவிலில் திருமணம் நடந்தது.
பின்னர் மணமகன் வாணியை தன் சொந்த ஊருக்கு ரெயிலில் அழைத்து சென்றார். விசாகப்பட்டினம் ரெயில் நிலையம் வந்ததும் கழிவறைக்கு செல்வதாக கூறி ரெயிலில் இருந்து இறங்கிய வாணி மீண்டும் அந்த ரெயிலில் ஏறவில்லை.
இதையடுத்து மனைவியை காணாததால் பதறிய வாலிபர் ரெயிலுக்குள் வாணியை தேடி அலைந்தார். அவர் எங்கு தேடியும் கிடைக்காததால் விரக்தி அடைந்தார்.
மணமகன் வீட்டார் வாணியின் குடும்பத்துக்கு திருமண செலவுக்காக ஒரு லட்சம் ரூபாய், பணம் கொடுத்திருந்தனர். அந்தப் பணத்தையும் நகையையும் எடுத்துக்கொண்டு வாணி தப்பிச் சென்றுவிட்டது தெரிந்தது. இதனால் அவர்கள் கடும் கோபம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து மணமகன் குடும்பத்தினருக்கு இச்சாபுரத்தில் உள்ள தனது அத்தை சந்தியா என்பவர் வீட்டில் வாணி இருக்கும் தகவல் கிடைத்தது.
வாணியை தேடி அங்கு சென்ற அவர்கள் சந்தியாவிடம், தங்களது பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டனர். ஆனால், அவர் பணத்தை திருப்பி தர முடியாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து மணமகன் குடும்பத்தினர் போலீசில் வழக்கு தொடர்ந்தனர். போலீஸ் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
சிறுவயதிலேயே தாயை இழந்த வாணி, தந்தையை பிரிந்து, உறவினர்களிடம் வளர்ந்து வந்துள்ளார். இதன் காரணமாக அத்தை சந்தியா வாணியை சிறுவயதிலேயே தன் வலையில் விழ வைத்துள்ளார்.
திருமணமாகாத அப்பாவி இளைஞர்களை திருமணம் செய்து, அவர்களிடம் நகை, பணத்தை பறித்து விட்டு, இருவரும் தப்பி விடுவார்கள். இதுவரை கர்நாடகா, ஒடிசா, கேரளா மாநிலங்களில் திருமணம் ஆகாத 8 இளைஞர்களை, இவர்கள் ஏமாற்றி உள்ள தகவல் போலீஸ் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வாணி திருமணம் முடிந்த சில நாட்களிலேயே நகை மற்றும் பணத்துடன் தப்பி ஓடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தற்போது 9-வது திருமணத்தில்தான் வசமாக சிக்கி அவரது வண்டவாளங்கள் வெளியே தெரிய வந்துள்ளது.
போலீசார் விசாரணைக்கு பயந்து வாணியும், அவரது அத்தை சந்தியாவும் தலைமறைவாகி உள்ளனர். இவர்களை தனிப்படை போலீசார் வலைவீசித் தேடிவருகின்றனர்.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் தேடுவது குறித்து தகவல் அறிந்த வாணியால் ஏற்கனவே ஏமாற்றப்பட்ட நாகிரெட்டி, கேசவரெட்டி ஆகியோர் போலீசில் புகார் அளித்து உள்ளனர். அவர்கள் வாணியுடன் எடுத்த தங்கள் திருமண போட்டோக்கள், வீடியோ ஆதாரங்களையும் தந்துள்ளனர்.
அதை கைப்பற்றிய போலீசார் வாணியை தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 19 வயது இளம் பெண் 9 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உண்மைகளை நிலைநாட்டுவதற்காக அறிவியல் பரிசோதனை மற்றும் மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய அனுபவங்களைச் சார்ந்துள்ளது.
- ஆன்மீகம் உள்அனுபவங்களை மூலம் அதே கொள்கையை பின்பற்றுகிறது.
திருப்பதியில் நடைபெற்ற பாரதிய அறிவியல் சம்மேளனம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், அறிவியலுக்கும் ஆன்மீகம் அல்லது தர்மத்திற்கு இடையில் முரண்டுபாடு இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மோகன் பகவத் கூறியதாவது:-
தர்மம் மதம் அல்ல. இது படைப்புகள் இயங்குவதற்கான விதியாகும். இதை ஏற்றுக் கொள்ளலாம் அல்லது ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் இதற்கு வெளியே யாராலும் இயங்க முடியாது. தர்மத்தில் உள்ள சமநிலையின்மை அழிவுக்கு வழிவகுக்கும்.
அறிவியல் ஆய்வில் தர்மத்திற்கு இடமில்லை என்ற அனுமானத்தின் காரணமாக, அறிவியல் வரலாற்று ரீதியாக தர்மத்திலிருந்து விலகியே இருந்தது. அத்தகைய நிலைப்பாடு அடிப்படையில் தவறானது.
அறிவியலுக்கும் தர்மத்திற்கும் அல்லது ஆன்மீகத்திற்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை. அணுகுமுறைகள் வேறுபடலாம். ஆனால் இலக்கு ஒன்றேதான். அது உண்மையை அறிவது.
உண்மைகளை நிலைநாட்டுவதற்காக அறிவியல் பரிசோதனை மற்றும் மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய அனுபவங்களைச் சார்ந்துள்ளது. ஆன்மீகம் உள்அனுபவங்களை மூலம் அதே கொள்கையை பின்பற்றுகிறது. நேரடி அனுபவத்தை வலியுறுத்துகிறது. மேலும், அனுபவிக்கப்படும் எதுவாக இருந்தாலும், அது அனைவராலும் அடையக்கூடியதாக இருக்க வேண்டும் என்றும் கூறுகிறது.
- விபத்தில் காரில் இருந்த 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
- இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 6 பேர் காரில் திருப்பதி வந்தனர். திருப்பதியில் தரிசனம் செய்து விட்டு நேற்று இரவு ஐதராபாத் நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.
ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டம் நல்லகட்லா-பட்டலூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் கார் சென்று கொண்ருடிந்தது.
அப்போது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதி எதிர் திசையில் சாலையில் கார் அந்தரத்தில் பாய்ந்தது. ஐதராபாத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற பஸ் மீது மோதியது.
இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களையும், இறந்தவர்களின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நந்தியால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- உள்ளூர் டிரைவர்களுக்கு உறுதியான வேலைவாய்ப்பை உருவாக்குவதன் மூலமும் சுற்றுலாவை மேம்படுத்துவதாகும்.
- உள்ளூரில் பதிவு செய்யப்பட்டு, போக்குவரத்துத் துறையால் சாலைக்கு ஏற்றதாக சான்றளிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
ஆந்திர அரசு, ஜனவரி முதல் வாரத்தில் விஜயவாடா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான டாக்ஸி மற்றும் ஆட்டோ முன்பதிவு தளமான "ஆந்திரா டாக்ஸி"-ஐத் தொடங்க உள்ளது.
தனியார் நிறுவனங்களால் வசூலிக்கப்படும் அதிகப்படியான கட்டணங்களைக் கட்டுப்படுத்தும் அதே வேளையில், மலிவு, பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான போக்குவரத்து சேவைகளை வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.
கனகதுர்கா கோவில், பவானி தீவு மற்றும் கிருஷ்ணா நதிக்கரையோரக் கோவில்கள் போன்ற முக்கிய இடங்களுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு சேவை செய்யும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிக்கனமான பயண விருப்பங்களை வழங்குவதன் மூலமும், உள்ளூர் டிரைவர்களுக்கு உறுதியான வேலைவாய்ப்பை உருவாக்குவதன் மூலமும் சுற்றுலாவை மேம்படுத்துவதாகும். உள்ளூரில் பதிவு செய்யப்பட்டு, போக்குவரத்துத் துறையால் சாலைக்கு ஏற்றதாக சான்றளிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
பயணிகள் பாதுகாப்பில், குறிப்பாக பெண்களுக்கு, சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பயணம் மற்றும் வாகனத் தரவுகள் உள்ளூர் போலீஸ் நிலையங்களுடன் பகிரப்பட்டு, மாநில தரவு மையத்திற்கு அனுப்பப்படும், அதிகாரிகள் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பை உறுதி செய்வார்கள் என தெரிவித்தனர்.
- கிராமங்களுக்கு மொபைல் போன், அதிவேக இணையதள சேவைகளை வழங்க இது உதவும்.
- இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இஸ்ரோ செய்து வருகிறது.
அமராவதி:
அமெரிக்காவைச் சேர்ந்த ஏ.எஸ்.டி. நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக 6,500 கிலோ எடையில், புளூ பேர்ட் செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது. இது தொலைதூர கிராமங்களுக்கு மொபைல் போன், அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும். இந்த செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வுமைய ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 8:54 மணிக்கு LVM 3 ராக்கெட் வாயிலாக புளூ பேர்ட் செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
ராக்கெட்டிற்கு தேவையான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்து, ஏவுதளத்தில் ராக்கெட் தயார் நிலையில் உள்ளது. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இம்மாதம் 15 மற்றும் 21-ம் தேதிகளில் புளூபேர்ட் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட இருந்த நிலையில், அத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 128 ரன்கள் எடுத்தது.
விசாகப்பட்டினம்:
இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இரு அணிகள் இடையிலான இரண்டாவது டி20 போட்டி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி வீராங்கனைகள் சிறப்பாக பந்து வீசி இலங்கை அணியை கட்டுப்படுத்தினர்.
இதையடுத்து, 129 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. அதிரடியாக ஆடிய ஷபாலி வர்மா 34 பந்தில் 69 குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், இந்திய பெண்கள் அணி 11.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.
- இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
- சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் ஸ்மிருதி மந்தனா 4,000 ரன்கள் எடுத்தார்.
விசாகப்பட்டினம்:
இந்தியா, இலங்கை பெண்கள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில், இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக ஸ்மிருதி மந்தனா 153 போட்டிகளில் விளையாடி 4,000 ரன்கள் எடுத்துள்ளார்.
இதன்மூலம், சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் 4,000 ரன்கள் குவித்த முதல் இந்திய வீராங்கனை என்ற உலக சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.
சர்வதேச அளவில் 2வது வீராங்கனை ஆவார். இதற்கு முன் நியூசிலாந்தைச் சேர்ந்த சுசி பேட்ஸ் மட்டுமே 4000 ரன்களைக் கடந்துள்ளார்.
மேலும், சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்கள் அடித்த முதல் ஆசிய வீராங்கனை என்ற வரலாற்றையும் ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.
- டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 121 ரன்கள் மட்டுமே எடுத்தது.
விசாகப்பட்டினம்:
இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில், இரு அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 121 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி வீராங்கனைகள் சிறப்பாக பந்து வீசி இலங்கை அணியை கட்டுப்படுத்தினர்.
இதையடுத்து, 122 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஷபாலி வர்மா 9 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 25 ரன்னும் எடுத்தனர்.
ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்து அரை சதம் கடந்தார்.
இறுதியில், இந்திய பெண்கள் அணி 14.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஜெமிமா 69 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது.
- கணவன், மனைவி இருவரும் ரெயிலின் வாசல் அருகே நின்று கொண்டு பயணம் செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், பார்வதிபுரம் மன்யம் மாவட்டம், கருகுபில்லி அடுத்த ராவ் பள்ளியை சேர்ந்தவர் சிம்மாசலம் (வயது 25). இவரது மனைவி பவானி (19). இருவரும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
சிம்மாசலம் உள்ள ஜகத்கிரி குட்டாவில் தங்கியிருந்து ரசாயன தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு விஜயவாடாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக செகந்திராபாத்தில் இருந்து மச்சிலிப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறினர்.
கணவன், மனைவி இருவரும் ரெயிலின் வாசல் அருகே நின்று கொண்டு பயணம் செய்தனர். ரெயில் புவனகிரி அடுத்த வாங்க பள்ளி ரெயில் நிலையத்தை கடந்து சென்றது.
அப்போது எதிர்பாராத விதமாக கணவன், மனைவி இருவரும் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 2 பேரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






