என் மலர்
நீங்கள் தேடியது "காதல் திருமணம்"
- குழந்தைகள் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என பெற்றோர்கள் படிக்க வைக்கிறார்கள்
- உங்கள் பெற்றோர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
மதுரை:
திருச்சியை சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவர் சென்னையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு வந்த அந்த பெண் திடீரென மாயமாகி உள்ளார். பணிபுரியும் மருத்துவமனைக்கும் பெண் வராததால் அவருடைய பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் காணாமல் போன தனது மகளை ஆஜர்படுத்த கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், மாயமான பெண்ணை ஆஜார்படுத்த உத்தரவிட்டு வழக்கை இன்று ஒத்தி வைத்து இருந்தனர்.
இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், ஜோதிராமன் அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த பெண் காணொளி காட்சி வாயிலாக ஆஜரானார். நீதிபதிகள் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அந்தப்பெண் நான் உடன் பணி புரியும் மேற்கு வங்கத்தை சேர்ந்த நபருடன் திருமணம் செய்து கொண்டேன் என கூறினார்.
அதற்கு நீதிபதிகள் குழந்தைகள் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என பெற்றோர்கள் படிக்க வைக்கிறார்கள். காதலிக்க அல்ல. காதல் திருமணம் என்பது பங்குச்சந்தை போல ஏற்றமும் உண்டு இரக்கமும் உண்டு.
நீங்கள் விரும்பியவருடன் செல்வது உங்களுடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால் உங்கள் பெற்றோர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். நீங்கள் படித்தவர்கள், பெற்றோரிடம் முறையாக தகவல் தெரிவித்திருக்க வேண்டும். அவர்களை இப்படி நீதிமன்றம் வாயிலாகவா உங்களை காண செய்வது. உங்கள் பெற்றோரை சமாதானம் செய்திருக்கலாம்.
மேலும் தற்போதைய கால கட்டத்தை பெற்றோர்கள் அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு நடந்து கொள்ள வேண்டும்.
பின்னர் நீதிபதிகள் அந்த பெண்ணிடம், உங்கள் கணவருடன் சென்று உங்கள் பெற்றோரை சமாதானம் செய்யுங்கள் என அறிவுரை கூறினார். பின்னர் பெற்றோர்கள் நாங்கள் வயதானவர்கள் எங்களை கவனித்துக் கொள்ள யாரும் இல்லை என கண்ணீர் வடித்தனர். தொடர்ந்து நீதிபதிகள், பெண் திருமணம் ஆகி அவர் கணவர் உடன் சென்று விட்டார் எனக் கூறி இந்த வழக்கை முடித்து வைத்தனர்.
- திருமங்கலம் நகர் போலீஸ் நிலையம் அருகே வந்தபோது மருமகன் அஷ்வந்த் வாகனத்தினை வழிமறித்து கவிராஜன் தகராறு செய்துள்ளார்.
- தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் சோழவந்தான் ரோட்டினை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் அஷ்வந்த்(வயது 25). திருமங்கலம் பழனியாபுரத்தினை சேர்ந்த கவிராஜன் மகள் அனிதா(23). இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தநிலையில் கடந்த 4 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் காதல் திருமணத்தினை அனிதா வீட்டில் ஏற்கவில்லை. அதனால் இரண்டு குடும்பத்திற்கும் முன்விரோதம் ஏற்பட்டது.
போலீஸ் நிலையத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் அனிதா பெற்றோரிடம் செல்ல மறுத்து கணவர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் 2 தரப்பினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து செல்வம் ஏற்கனவே திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்துள்ளார்.
இந்த நிலையில் செல்வத்தின் மூத்த மகள் பிரியதர்ஷினியின் மாமியார் உடல் நலக்குறைவால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று அவரை பார்த்துவிட்டு மீண்டும் திருமங்கலத்திற்கு திரும்பினர்.
திருமங்கலம் நகர் போலீஸ் நிலையம் அருகே வந்தபோது மருமகன் அஷ்வந்த் வாகனத்தினை வழிமறித்து கவிராஜன் தகராறு செய்துள்ளார். இதில் கல்லை எடுத்து எறிந்ததில் செல்வம், அவரது பேத்திக்கு காயம் ஏற்பட்டது. அங்கு இருந்தவர்கள் இவர்களின் தகராறினை தடுத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் செல்வம் அவரது பேத்தியை அழைத்து கொண்டு அனைவரும் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.
இந்தநிலையில் இரவு 11 மணியளவில் திருமங்கலம் எட்டுபட்டரை மாரியம்மன் கோவில் அருகேயுள்ள அஷ்வந்த் சகோதரி பிரியதர்ஷினி வீட்டின் பின்புற ஜன்னல் வழியாக மர்மநபர் ஒருவர் பெட்ரோல் நிரம்பிய பாட்டிலை வீசி தப்பியோடிவிட்டார். அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் இல்லை. அதே நேரத்தில் வீடு முழுவதும் தீ பரவி அங்கிருந்த கட்டில், பீரோ, பிரியதர்ஷினியின் மாமியாரின் மருத்துவ செலவிற்கு வைத்திருந்த ரொக்கபணம் 2 லட்சம் மற்றும் சுமார் 35 பவுன் நகைகள் எரிந்து நாசமாகின.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அரைமணி நேரம் போராடி அணைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து செல்வம் திருமங்கலம் டவுன் போலீசுக்கு புகார் கொடுத்தார். தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பிரியதர்ஷனியின் கணவர் பாலமுருகன் கொடுத்த புகாரில் பெட்ரோல் குண்டு வீசியது கவிராஜன் அவரது மகன் கௌசிக் ஆகியோர் தான் காரணம் என தெரிவித்து உள்ளார். இதன் அடிப்படையில் திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் திருமங்கலத்தில் நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- முதல்ல புடிச்ச பொண்ணு இல்ல பையன் கிட்ட காதலை சொல்லணும்
- திருமணத்துக்கு ரெண்டு பேரோட பெற்றோர்களையும் சம்மதிக்க வைக்கணும்.
சிவகாசி மேயர் சங்கீதா இன்ப இல்ல திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அப்போது பேசிய அவர், "காதல் பண்ணறது EASYனு எல்லாரும் சொல்லுவாங்க ஆனா... இருக்குறதுலயே ரொம்ப கஷ்டமானது இந்த காதல் கல்யாணம்தான். முதல்ல புடிச்ச பொண்ணு இல்ல பையன் கிட்ட காதலை சொல்லணும். அவங்களைச் சம்மதிக்க வைக்கணும். அடுத்து தன்னோட காதல் எவ்ளோ உண்மையானதுன்னு நிரூபிக்கணும். திருமணத்துக்கு ரெண்டு பேரோட பெற்றோர்களையும் சம்மதிக்க வைக்கணும். இது போதாதுன்னு சொந்தக்காரங்க வேற வருவாங்க... அவங்களைச் சமாளிக்கணும். காதல் கல்யாணத்துக்கு இதுமாதிரி பல பிரச்னைகளைத் தாண்ட வேண்டியிருக்கும்" என்று கலகலப்பாக பேசினார்.
- அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டு திருமண வேலைகள் முழுவீச்சில் நடந்து வந்தன.
- காதலனை கரம்பிடிக்க பச்சைக்கொடி காட்டி விட்டதால் அமிர்தாவும் திருமண நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தார்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வரம்பியம் ஊராட்சி கிழக்கு தெருவை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி சித்ரா. இவர்களுடைய மகள் அமிர்தா (வயது 30). எம்.எஸ்சி. பட்டதாரி. புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா மாத்தூரை சேர்ந்த தனக்கோடி- விஜயா தம்பதியின் மகன் சஞ்சய்குமார் (32). பி.பி.ஏ. பட்டதாரி.
இவர்கள் 2 பேரும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த 8 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அமிர்தா, சஞ்சய்குமாரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் சஞ்சய்குமார் வீட்டில் காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
திடீர் திருப்பமாக கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சஞ்சய்குமார் குடும்பத்தை சேர்ந்த சிலரும், அமிர்தாவின் குடும்பத்தாரும் கலந்து பேசி 27.8.2025 அன்று (நேற்று) நாகை மாவட்டம் எட்டுக்குடியில் உள்ள முருகன் கோவிலில் வைத்து சஞ்சய்குமார்- அமிர்தா திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்.
இதற்காக அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டு திருமண வேலைகள் முழுவீச்சில் நடந்து வந்தன. காதலனை கரம்பிடிக்க பச்சைக்கொடி காட்டி விட்டதால் அமிர்தாவும் திருமண நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தார்.
சஞ்சய்குமார் மற்றும் குடும்பத்தினர் திருமணத்துக்காக நேற்று முன்தினம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மணமகளின் வீட்டுக்கு வருவதாக கூறி இருந்தனர். ஆனால் அவர்கள் நேற்று முன்தினம் இரவு வரை வரவில்லை. திருமண நாள் வந்து விட்ட நிலையில் மணமகன் குடும்பத்தார் யாரும் வராததால் அதிர்ச்சி அடைந்த அமிர்தா, சஞ்சய்குமாரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது, செல்போன் சுவிட்ச் ஆப் என வந்தது.
இதனால் பதற்றம் அடைந்த அவர் மணமகனின் சகோதரிகளிடம் பேசியபோது, உறவினர்கள் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சஞ்சய்குமாரை எங்கேயோ அழைத்துச் சென்று விட்டதாக தெரிவித்தனர். சஞ்சய்குமார் திடீரென மாயமானது அமிர்தா மற்றும் குடும்பத்தினரை மிகுந்த பதற்றத்துக்குள்ளாக்கியது.
இதுதொடர்பாக அமிர்தாவின் சகோதரர்கள் கண்ணன், கார்த்தி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கருண் கரட்டிடம் புகார் தெரிவித்தனர். அவர், உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் போலீசார் புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் கிராமத்துக்கு சென்று விசாரித்தபோது சஞ்சய்குமாரை உறவினர்கள் அழைத்துச்சென்றது தெரியவந்தது. நேற்று அதிகாலை கமுதியில் உள்ள உறவினர்கள் வீட்டில் சஞ்சய்குமார் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். அங்கிருந்து அவரை போலீசார் அழைத்து வந்து அவருடைய காதலி அமிர்தா வீட்டில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து திருத்துறைப்பூண்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நேற்று மதியம் சஞ்சய்குமாருக்கும், அமிர்தாவுக்கும் முறைப்படி திருமணம் நடந்தது.
கட்சியின் மாவட்ட செயலாளர் முருகையன், மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் காரல் மார்க்ஸ், நகர செயலாளர் கோபு, சி.ஐ.டி.யூ. பொறுப்பாளர் முரளி ஆகியோர் முன்னிலையில் சஞ்சய்குமார், அமிர்தாவின் கழுத்தில் தாலி கட்டினார்.
திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்துக்கு சென்று தஞ்சம் அடைந்தனர். அங்கு மணமக்கள் அளித்த புகாரில், 'வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதன் காரணமாக திருமணத்துக்கு எதிர்ப்பு உள்ளதால் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்' என கூறி உள்ளனர்.
துணை போலீஸ் சூப்பிரண்டு பவுனியா, இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் போலீசார் புகாரை பெற்றுக்கொண்டு இருதரப்பையும் அழைத்து சமாதானம் பேசினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சண்முகம் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, 'தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணங்கள் செய்துகொள்ள தனி ஏற்பாடு இல்லை. எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம்.
காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே இருக்கின்றன' என கூறினார். இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் காதல் ஜோடியின் திருமணம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- பாஜக அலுவலகத்துக்கும் எத்தனையோ காதல் ஜோடிகள் வந்து தஞ்சம் புகுந்துள்ளனர்.
- ஒரு அரசியல் கட்சியின் அலுவலகத்தில் நியாயம் கிடைக்கும் என நம்பி வருகின்றனர்.
ஆணவக்கொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற தமிழக அரசை வலியுறுத்தி நடந்த கருத்தரங்கில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சண்முகம், "தமிழ்நாடு முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகங்களில் காதல் திருமணங்களை நடத்திக் கொள்ளலாம். தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்ய தனி ஏற்பாடு இல்லை. காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகங்கள் திறந்திருக்கும்" என்று தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகத்தின் இந்த கருத்துக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பதில் அளிக்கும் வகையில் கூறியதாவது:-
பாஜக-வை சேர்ந்தவர்கள் ஆணவக் கொலைகள் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறோம். மிகக் கடுமையான சட்டத்தைக் கொண்டுவந்து யார் தவறு செய்கிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாஜக அலுவலகத்துக்கும் எத்தனையோ காதல் ஜோடிகள் வந்து தஞ்சம் புகுந்துள்ளனர். தனிப்பட்ட முறையில் எனக்கே பலரைத் தெரியும். ஒரு அரசியல் கட்சியின் அலுவலகத்தில் நியாயம் கிடைக்கும் என நம்பி வருகின்றனர்.
நாம் சில இடங்களில் தந்தை, தாயை அழைத்து சொல்கிறோம். சில இடங்களில் பக்கத்தில் இருக்கும் இன்ஸ்பெக்டரைக் கூப்பிட்டு சொல்கிறோம். நீங்கள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறோம்.
ஒரு கட்சி அலுவலகம் என்பது எல்லோருக்கும், எல்லா சாதிக்கும், எல்லா மதத்துக்கும் பொதுவானது. நம்பி வருபவர்களை நாங்கள் வர வேற்கிறோம். பாஜக அலுவலகத்துக்கும் வாருங்கள், நாங்கள் நியாயமாக நடந்து கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
- காதல் திருமணங்களை நம் சமூகம் இன்னும் முழுமையாக அங்கீகரிக்கவில்லை.
- சாதி மாறி காதலிக்கும் ஜோடிகள் ஆணவக்கொலை செய்யப்படும் கொடுமைகள் குறைந்தபாடில்லை.
காதல் திருமணங்கள் முன்பை விட தற்போது அதிகரித்துள்ளன. ஆனாலும் காதல் திருமணங்களை நம் சமூகம் இன்னும் முழுமையாக அங்கீகரிக்கவில்லை. அதே சமயம் சாதி மாறி காதலிக்கும் ஜோடிகள் ஆணவக்கொலை செய்யப்படும் கொடுமைகள் இன்னும் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், சாதி மாறி காதலிக்கும் ஜோடிகள் சிபிஎம் கட்சி அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "தமிழ்நாடு முழுவதும் உள்ள மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகங்களில் காதல் திருமணங்களை நடத்திக் கொள்ளலாம். தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்ய தனி ஏற்பாடு இல்லை. காதலர்களுக்காக மார்க்ஸிஸ்ட் அலுவலகங்கள் திறந்திருக்கும்" என்று தெரிவித்தார்.
- வாதி (25 வயது) மற்றும் மகேந்தர் ரெட்டி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு பாலாஜி ஹில்ஸில் வசித்து வந்தனர்.
- உடல் பாகங்களை ஒரு பிளாஸ்டிக் கவரில் அடைத்து வெளியே எடுத்துச் செல்ல ஆயத்தமானார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கர்ப்பிணி மனைவியை கணவன் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஐதராபாத் புறநகரில் உள்ள மேட்சல், மெடிபள்ளியில் பாலாஜி ஹில்ஸில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விகாராபாத் மாவட்டம், காமரெட்டிகுடாவைச் சேர்ந்த ஸ்வாதி (22 வயது) மற்றும் மகேந்தர் ரெட்டி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
வேலை தேடி வந்த மகேந்தர் கர்ப்பமாக இருந்த மனைவி ஸ்வாதியை அழைத்துக்கொண்டு 28 நாட்களுக்கு முன்பு பாலாஜி ஹில்ஸில் குடியேறி உள்ளார்.
இந்நிலையில் மனைவி ஸ்வாதியை கணவர் மகேந்தர் நேற்று வீட்டில் வைத்து கொலை செய்துள்ளார்.
ஸ்வாதியின் உடலை துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை ஒரு பிளாஸ்டிக் கவரில் அடைத்து முசி நதியில் வீசியுள்ளார். ஸ்வாதியின் தலை, கைகள் மற்றும் கால்கள் வெட்டப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அங்கு ஸ்வாதியின் தலை, கைகள் மற்றும் கால்கள் அற்ற உடலை கண்டு அதிர்ச்சி அடைத்தனர்.
இதைத்தொடர்ந்து மகேந்தரை கைது செய்த போலீசார் கொலைக்கான காரணங்கள் குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருக்கின்றனர்.
- இது தண்டனை அல்ல. மரபுகள் மற்றும் மதிப்புகளை பாதுகாப்பதற்கான ஒரு தடுப்பு நடவடிக்கை.
- நாங்கள் காதல் திருமணத்தையோ, சட்டங்களையோ எதிர்க்கவில்லை.
சண்டிகர்:
பஞசாப் மாநிலம் சண்டிகரில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் மனக்பூர் ஷெரீப் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த கிராமத்தை சேர்ந்த ஒரு காதல் ஜோடி முறை தவறி திருமணம் செய்து கொண்டதாக எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து இனி பெற்றோர் சம்மதம் இல்லாமல் காதல் ஜோடியினர் திருமணம் செய்ய தடை விதித்து கிராம கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்யும் ஜோடி அந்த கிராமத்திலோ அல்லது அருகில் உள்ள பகுதிகளிலோ வசிக்க முடியாது.
அவர்களுக்கு யாராவது அடைக்கலம் கொடுத்தால் அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கிராம தலைவர் தல்வீர் சிங் கூறும்போது, இது தண்டனை அல்ல. மரபுகள் மற்றும் மதிப்புகளை பாதுகாப்பதற்கான ஒரு தடுப்பு நடவடிக்கை ஆகும். நாங்கள் காதல் திருமணத்தையோ, சட்டங்களையோ எதிர்க்கவில்லை, ஆனால் எங்கள் கிராமத்தில் நாங்கள் அனுமதிக்க முடியாது என்று கூறினார்.
கிராம கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
- உள்ளூர் சமூக விதிமுறைகளை மீறி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.
- அப்போது சிலர் அவர்களை அடித்து முள் குச்சிகளால் குத்துவதும் வெளியான வீடியோவில் காணப்பட்டது.
ஒடிசாவில் காதலித்து திருமணம் செய்த இளம் ஜோடியை சிலர் காளைகளைப் போல கலப்பையில் கட்டி வைத்து வயலை உழுத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ராயகடா மாவட்டத்தின் கஞ்சமாஜிரா கிராமத்தில் இளம் பெண்ணும் ஒரு இளைஞனும் உள்ளூர் சமூக விதிமுறைகளை மீறி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.
இதற்கு தண்டனையாக, அவர்கள் நுகத்தடியில் கட்டி வைக்கப்பட்டு காளைகளைப் போல வயலை உளுத்துள்னர். அப்போது சிலர் அவர்களை அடித்து முள் குச்சிகளால் குத்துவதும் வெளியான வீடியோவில் காணப்பட்டது.
இந்த வீடியோ வைரலான நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காததால் திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
- இருவரும் மேஜர் என்பதால், போலீசார் மணமக்களை அனுப்பிவைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் கோவிலை சுற்றி எந்நேரமும் மக்கள் கூட்டம் காணப்படும்
இந்த நிலையில், இன்று காலை திருத்தணி கோவிலில் நடைபெற்ற திருமணம் சினிமா பட பாணியை மிஞ்சும் அளவுக்கு இருந்ததால் அங்கிருந்தவர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. அதுகுறித்து பார்ப்போம்:-
பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த சுந்தரம் என்பவரின் மகன் உமாபதி (21). பொம்மராஜுபேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஹேமாச்சலம் என்பவரின் மகள் ரீட்டா (19). இருவரும் ஆர்.கே.பேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். முதலில் நட்பாக பழகிய இவர்கள் பின்னர் காதலர்களாக மாறினர்.
இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காததால் திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, இன்று காலை, திருத்தணி கோவிலுக்கு வந்த காதல் ஜோடி திருமணத்திற்கு தயாரான போது, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, மணக்கோலத்தில் இருந்த பெண்ணை பார்த்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறியபடி, "எங்களது மகளை கடத்தி வந்து கட்டாயத் திருமணம் செய்யப் பார்க்கிறாய்" என வாலிபரை நோக்கி கூச்சலிட்டனர்.
இதையடுத்து, காதலியை அழைத்து சென்று விடுவார்கள் என்று உணர்ந்து உஷாரான காதலன், பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினார். ஒருபுறம் இரு வீட்டாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த போது திடீரென பெண்ணின் கழுத்தில் தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காததால், திருத்தணி கோயில் சன்னதியில் திருமணம் செய்துக் கொண்டதாக காதல் ஜோடி தெரிவித்தது. இதையடுத்து, இருவரும் மேஜர் என்பதால், போலீசார் மணமக்களை அனுப்பிவைத்தனர்.
- பர்கூர் போலீசார் குழந்தை திருமண வழக்கில் சிறுமியின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
- ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் கணவன், மனைவி உடலை மீட்டனர்.
ஜோலார்பேட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த ஜெகதேவி பகுதியை சேர்ந்த குமார் (வயது 50). இவரது மனைவி கவிதா.
தம்பதியின் 17 வயதுடைய மகள் அதே பகுதியை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்தார். இதனால் இரு வீட்டாரின் சம்மதத்துடன் சிறுமிக்கு வாலிபருடன் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.
காதல் திருமணம் செய்து கொண்ட சிறுமி வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் வாலிபரின் பகுதியில் எதிர்ப்புகள் கிளம்பின. இதன் காரணமாக குழந்தை திருமணம் செய்து வைத்ததாக கூறி பர்கூர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி பூச்சி மருந்து குடித்து கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது.
பர்கூர் போலீசார் குழந்தை திருமண வழக்கில் சிறுமியின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
வழக்கு பதிவு செய்யப்பட்டதால் முன் ஜாமின் பெற சென்னை ஐகோர்ட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு குமார், கவிதா இருவரும் திருப்பத்தூருக்கு வந்தனர்.
மொளகாரன்பட்டி கீழ் குறும்பர் தெரு பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே சென்றனர். விரக்தி அடைந்த தம்பதியினர் ரெயில் தண்டவாளத்தில் நின்றனர். அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்தனர். ரெயில் மோதியதில் குமார், கவிதா ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.
ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் கணவன், மனைவி உடலை மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் திருப்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- காரில் ஏறிய காதல் ஜோடியை இரு வீட்டாரும் சரமாரியாக தாக்கினர்.
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மானுத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அய்யர்சாமி. இவரும் பக்கத்து வீட்டை சேர்ந்த கவினாஸ்ரீ என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 2 பேரும் இளங்கலை பட்டதாரிகள்.
இருவரது குடும்பத்தினருக்கும் இடப்பிரச்சனை தொடர்பாக 15 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வருகிறது. இதுதொடர்பாக அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் இருவரது அய்யர்சாமி-கவினாஸ்ரீ காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து காதல் ஜோடிகள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
தொடர்ந்து உசிலம்பட்டி அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு தஞ்சமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த இருவீட்டாரும் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அவர்களிடம் போலீசார் சமரசம் பேசினர். தொடர்ந்து காதலர்கள் இருவரும் மேஜர் என்பதால் அய்யர்சாமியுடன், கவினாஸ்ரீயை போலீசார் அனுப்பி வைத்தனர்.
காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்து காரில் ஏறிய காதல் ஜோடியை இரு வீட்டாரும் காரிலிருந்து இழுத்து கீழே போட்டு சரமாரியாக தாக்கினர்.
உடனே அங்கிருந்து பொது மக்கள் மற்றும் போலீசார் அவர்களிடமிருந்து காதல் ஜோடியை காப்பற்றினர். இதனால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து 2 குடும்பத்தினரிடம் போலீசார் அறிவுறுத்தல்களை வழங்கினர்.






