என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திடீரென மாயமான வாலிபரை தேடிப்பிடித்து காதலியிடம் ஒப்படைத்த போலீசார்: CPM அலுவலகத்தில் கரம்பிடித்த ஜோடி
- அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டு திருமண வேலைகள் முழுவீச்சில் நடந்து வந்தன.
- காதலனை கரம்பிடிக்க பச்சைக்கொடி காட்டி விட்டதால் அமிர்தாவும் திருமண நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தார்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வரம்பியம் ஊராட்சி கிழக்கு தெருவை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி சித்ரா. இவர்களுடைய மகள் அமிர்தா (வயது 30). எம்.எஸ்சி. பட்டதாரி. புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா மாத்தூரை சேர்ந்த தனக்கோடி- விஜயா தம்பதியின் மகன் சஞ்சய்குமார் (32). பி.பி.ஏ. பட்டதாரி.
இவர்கள் 2 பேரும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த 8 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அமிர்தா, சஞ்சய்குமாரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் சஞ்சய்குமார் வீட்டில் காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
திடீர் திருப்பமாக கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சஞ்சய்குமார் குடும்பத்தை சேர்ந்த சிலரும், அமிர்தாவின் குடும்பத்தாரும் கலந்து பேசி 27.8.2025 அன்று (நேற்று) நாகை மாவட்டம் எட்டுக்குடியில் உள்ள முருகன் கோவிலில் வைத்து சஞ்சய்குமார்- அமிர்தா திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்.
இதற்காக அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டு திருமண வேலைகள் முழுவீச்சில் நடந்து வந்தன. காதலனை கரம்பிடிக்க பச்சைக்கொடி காட்டி விட்டதால் அமிர்தாவும் திருமண நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தார்.
சஞ்சய்குமார் மற்றும் குடும்பத்தினர் திருமணத்துக்காக நேற்று முன்தினம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மணமகளின் வீட்டுக்கு வருவதாக கூறி இருந்தனர். ஆனால் அவர்கள் நேற்று முன்தினம் இரவு வரை வரவில்லை. திருமண நாள் வந்து விட்ட நிலையில் மணமகன் குடும்பத்தார் யாரும் வராததால் அதிர்ச்சி அடைந்த அமிர்தா, சஞ்சய்குமாரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது, செல்போன் சுவிட்ச் ஆப் என வந்தது.
இதனால் பதற்றம் அடைந்த அவர் மணமகனின் சகோதரிகளிடம் பேசியபோது, உறவினர்கள் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சஞ்சய்குமாரை எங்கேயோ அழைத்துச் சென்று விட்டதாக தெரிவித்தனர். சஞ்சய்குமார் திடீரென மாயமானது அமிர்தா மற்றும் குடும்பத்தினரை மிகுந்த பதற்றத்துக்குள்ளாக்கியது.
இதுதொடர்பாக அமிர்தாவின் சகோதரர்கள் கண்ணன், கார்த்தி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கருண் கரட்டிடம் புகார் தெரிவித்தனர். அவர், உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் போலீசார் புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் கிராமத்துக்கு சென்று விசாரித்தபோது சஞ்சய்குமாரை உறவினர்கள் அழைத்துச்சென்றது தெரியவந்தது. நேற்று அதிகாலை கமுதியில் உள்ள உறவினர்கள் வீட்டில் சஞ்சய்குமார் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். அங்கிருந்து அவரை போலீசார் அழைத்து வந்து அவருடைய காதலி அமிர்தா வீட்டில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து திருத்துறைப்பூண்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நேற்று மதியம் சஞ்சய்குமாருக்கும், அமிர்தாவுக்கும் முறைப்படி திருமணம் நடந்தது.
கட்சியின் மாவட்ட செயலாளர் முருகையன், மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் காரல் மார்க்ஸ், நகர செயலாளர் கோபு, சி.ஐ.டி.யூ. பொறுப்பாளர் முரளி ஆகியோர் முன்னிலையில் சஞ்சய்குமார், அமிர்தாவின் கழுத்தில் தாலி கட்டினார்.
திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்துக்கு சென்று தஞ்சம் அடைந்தனர். அங்கு மணமக்கள் அளித்த புகாரில், 'வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதன் காரணமாக திருமணத்துக்கு எதிர்ப்பு உள்ளதால் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்' என கூறி உள்ளனர்.
துணை போலீஸ் சூப்பிரண்டு பவுனியா, இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் போலீசார் புகாரை பெற்றுக்கொண்டு இருதரப்பையும் அழைத்து சமாதானம் பேசினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சண்முகம் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, 'தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணங்கள் செய்துகொள்ள தனி ஏற்பாடு இல்லை. எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம்.
காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே இருக்கின்றன' என கூறினார். இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் காதல் ஜோடியின் திருமணம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.






