என் மலர்
நீங்கள் தேடியது "CPM"
- தலைமை தேர்தல் ஆணையம் ஜனவரி 18, 2026ந் தேதி வரை கால அவகாசம் அளித்திருந்தது.
- தொகுதி வாரியாக பரிசீலிக்கும் போது பல குளறுபடிகள் நடந்திருக்க வாய்ப்பிருப்பதாக கருதுகிறோம்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் பணிகளுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) - CPIM வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டு பணிகளை செய்வதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஜனவரி 18, 2026ந் தேதி வரை கால அவகாசம் அளித்திருந்தது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டியும், தொடர் விடுமுறையின் காரணமாகவும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதால் இப்பணியை ஜனவரி 28, 2026ந் தேதி வரை நீட்டிப்பு செய்திடவும்.
2026 ஜனவரி 24, 25, தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்திடவும், எஸ்.ஐ.ஆர். பணியில் பெயர் நீக்கப் பட்டியலில் உள்ள குளறுபடிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் ஐ. ஆறுமுக நயினார் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அவர்களை இன்று (12.01.2026) நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
இக்கோரிக்கையினை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைப்பதாக அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். (கடிதமும், ஆய்வுக்குழு குறிப்பும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)
இதனை தங்களின் மேலான பத்திரிகை / தொலைக்காட்சி / ஊடகங்களில் செய்தி வெளியிட கேட்டுக் கொள்கிறோம்.
வரைவு வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர்களை சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் ஆகியவற்றிற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஜனவரி 18, 2026ந் தேதி வரை அவகாசம் அளித்திருந்தது. பிப்ரவரி 17. 2026 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிப்பு செய்திருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டியும். தொடர் விடுமுறையின் காரணமாகவும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். எனவே. ஜனவரி 10ந் தேதியிலிருந்து 18ந் தேதி வரை இப்பணிகள் மேற்கொள்வதற்கும். பொதுமக்கள் இந்த நடவடிக்கையில் கலந்து கொள்வதற்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்படும் நிலை உள்ளது. இதனால் பல லட்சம் வாக்காளர்கள் விடுபடும் அபாயம் உள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம், இணைப்பு, ஆட்சேபணைகள் மீது முடிவெடுப்பது ஆகியவற்றிற்கு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள கால அவகாசத்தை குறைந்தபட்சம் 10 நாட்கள் நீட்டித்து 2026 ஜனவரி 28-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இதனைப் பயன்படுத்தி 2026 ஜனவரி 24,25 தேதிகளில் சிறப்பு முகாம் நடத்திட கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணியில் வெளியிடப்பட்டிருந்த வரைவு வாக்காளர் பட்டியலுக்கும். 2025 ஜனவரியில் வெளியிடப்பட்டிருந்த இறுதி வாக்காளர் பட்டியலுக்கும் இடையில் ஒப்பீடு செய்யும் போது நீக்கப்பட்டவர்கள், இணைக்கப்பட்டவர்கள் ஆகிய எண்ணிக்கையும் சேர்த்து பாகம் வாரியாக / தொகுதி வாரியாக பரிசீலிக்கும் போது பல குளறுபடிகள் நடந்திருக்க வாய்ப்பிருப்பதாக கருதுகிறோம்.
அதுகுறித்த எங்களுடைய கணிணி ஆய்வுக்குழு நடந்திய உண்மை காணும் அறிக்கையில் வந்துள்ள விபரங்களை ஒரு குறிப்பாக இத்துடன் இணைத்துள்ளோம். இதன் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கருத்துரிமைக்கு எதிரானது என மற்றவர்கள் எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.
- ஆனால் சம்மந்தபட்ட கதாநாயகன் வாயை திறக்காமல் இருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது.
விஜய் நடித்துள்ள ஜன நாயகன் படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் வழங்காததற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சம்மந்தப்பட்ட ஜன நாயகன் வாயை திறக்காமல் மவுனமாக இருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சண்முகம் கூறியதாவது:-
மத்திய தணிக்கை குழுவிற்கு படத்தை பார்த்து சான்றிதழ் வழங்குவதை விட வேறு வேலை கிடையாது. தணிக்கை குழுவில் U/A சான்றிதழ் கொடுக்கலாம் என 4 பேர் சொல்லும்போது, ஒருவர் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் நீதிமன்றம் செல்லப்பட்டுள்ளது.
பெரும்பான்மையினர் தெரிவிக்கும் சான்றிதழ் கொடுப்பது வழக்கமாக இருந்துள்ளது. இப்படி நடந்து கொண்டால் சினிமாத்துறையால் பிழைக்க முடியுமா? என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறேன்.
அரசியல் சூழ்நிலையில் மத்திய அரசு இதுபோன்ற நிர்ப்பந்தங்களை கொடுத்து விஜயை வளைத்து விடலாம் என்ற நோக்கத்தோடு இத்தகைய தொந்தரவுகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார்களா? என்ற கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கிறது.
இப்படி தொந்தரவு கொடுக்கிறார்கள். அநீதி என்பதெல்லாம் தெரிந்து கொண்டும் ஜன நாயகன் வாயே திறக்கவில்லை. கருத்துரிமைக்கு எதிரானது என மற்றவர்கள் எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் சம்மந்தபட்ட கதாநாயகன் வாயை திறக்காமல் இருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது.
மத்திய அரசின் தூண்டுதல் பேரில்தான் தணிக்கை குழு இப்படிப்பட்ட நெருக்கடி கொடுக்கிறார்கள் என்று சொன்னால் தனக்கு சங்கடமான, பின் விளைவுகளை ஏற்படுத்துமே என்ற காரணத்தினால் அவர் வாய் திறக்காமல் இருக்கிறாரா? என்பது தெரியவில்லை.
இவ்வாறு சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.
- உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள சிஐஎஸ்எஃப் வீரர்களை கூட்டிக்கொண்டு மனுதாரர் தர்காவுக்கு அருகில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
- தமிழ்நாட்டை கலவர காடாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.
கார்த்திகை தீபத் திருவிழாவில் மதுரை திருப்பரங்குன்றத்தில் வழக்கப்படி உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே நேற்று தீபம் ஏற்றப்பட்டது.
ஆனால் திருப்பரங்குன்றம் மலை மீது, வழக்கத்திற்கு மாறாக சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் 15 மீ தொலைவில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
ஆனால் உத்தரவுப்படி தக்ரா அருகே ஏற்றாமல் எப்போதும்போல உச்சி பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்பட்டது.
இதனால் உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள சிஐஎஸ்எஃப் வீரர்களை கூட்டிக்கொண்டு மனுதாரர் தர்காவுக்கு அருகில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் போலீசார் மலை ஏற அனுமதி மறுக்கவே சிஐஎஸ்எஃப் வீரர்கள் திரும்பிச் சென்றனர்.
இதனிடையே மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றாததைக் கண்டித்து பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. அசம்பாவிதங்களை தவிர்க்க அப்பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மலையேற முயற்சித்து போலீசாருடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் தள்ளுமுள்ளலில் ஈடுபட்டனர். மேலும் தடுப்புகளை தூக்கி எறிந்தும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் போலீசார் ஒருவர் காயமும் அடைந்துள்ளார்.
144 தடை உத்தரவு அமலில் உள்ள சூழலில் மலையேற அனுமதி வழங்காததால் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆர்பாட்டக்காரர்கள் மலைக்குச் செல்லும் வழியில் சூடமேற்றி வணங்கிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதற்கிடையே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிரான தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திருந்த நிலையில், நாளை முதல் வழக்காக விசாரிப்பதாக நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் சுவாமிநாதன் நீதிபதியாக இருக்கவே தகுதியற்றவர் என்று சிபிஎம் மாநில செயலாளர் பெ சண்முகம் வீடியோ வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் பேசிய அவர், கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பதுதான் எல்லா மக்களுடைய விருப்பமே தவிர அது குறிப்பிட்ட அந்த இடத்தில் தான் ஏற்ற வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பது என்பது யாராலும் ஏற்கத்தக்க முடியாத ஒரு விஷயம்.
நீதிமன்றதிற்கு பாதுகாப்பு வழங்கி வரும் மத்திய படையினரை திருப்பரங்குன்றம் அனுப்பியது கண்டிக்கத்தக்கது. நீதிபதி சுவாமிநாதன் மாநில அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடிக்கிறார். இந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்பளிப்பதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார்.
அவரது செயல்பாடுகள் மக்களுக்குள் பகைமையை ஏற்படுத்தும் விதமாகவே இருந்து வருகிறது. நீதிபதியாக தொடரவே அவருக்கு தகுதியில்ல்லை.
இப்படி மக்கள் மத்தியிலே மோதலையும் மாநில அரசாங்கத்திற்கும், மத்திய படைக்குமான மோதலை உருவாக்கக்கூடிய வகையில் உத்தரவை வெளியிட்டிருக்கிற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது தலைமை நீதிபதி அவர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டை கலவர காடாக மாற்ற முயற்சிக்கிறார்கள். உறுதியான நிலைப்பாட்டை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்" என்று தெரிவித்துள்ளார்.
- அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டு திருமண வேலைகள் முழுவீச்சில் நடந்து வந்தன.
- காதலனை கரம்பிடிக்க பச்சைக்கொடி காட்டி விட்டதால் அமிர்தாவும் திருமண நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தார்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வரம்பியம் ஊராட்சி கிழக்கு தெருவை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி சித்ரா. இவர்களுடைய மகள் அமிர்தா (வயது 30). எம்.எஸ்சி. பட்டதாரி. புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா மாத்தூரை சேர்ந்த தனக்கோடி- விஜயா தம்பதியின் மகன் சஞ்சய்குமார் (32). பி.பி.ஏ. பட்டதாரி.
இவர்கள் 2 பேரும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த 8 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அமிர்தா, சஞ்சய்குமாரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் சஞ்சய்குமார் வீட்டில் காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
திடீர் திருப்பமாக கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சஞ்சய்குமார் குடும்பத்தை சேர்ந்த சிலரும், அமிர்தாவின் குடும்பத்தாரும் கலந்து பேசி 27.8.2025 அன்று (நேற்று) நாகை மாவட்டம் எட்டுக்குடியில் உள்ள முருகன் கோவிலில் வைத்து சஞ்சய்குமார்- அமிர்தா திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்.
இதற்காக அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டு திருமண வேலைகள் முழுவீச்சில் நடந்து வந்தன. காதலனை கரம்பிடிக்க பச்சைக்கொடி காட்டி விட்டதால் அமிர்தாவும் திருமண நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தார்.
சஞ்சய்குமார் மற்றும் குடும்பத்தினர் திருமணத்துக்காக நேற்று முன்தினம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மணமகளின் வீட்டுக்கு வருவதாக கூறி இருந்தனர். ஆனால் அவர்கள் நேற்று முன்தினம் இரவு வரை வரவில்லை. திருமண நாள் வந்து விட்ட நிலையில் மணமகன் குடும்பத்தார் யாரும் வராததால் அதிர்ச்சி அடைந்த அமிர்தா, சஞ்சய்குமாரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது, செல்போன் சுவிட்ச் ஆப் என வந்தது.
இதனால் பதற்றம் அடைந்த அவர் மணமகனின் சகோதரிகளிடம் பேசியபோது, உறவினர்கள் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சஞ்சய்குமாரை எங்கேயோ அழைத்துச் சென்று விட்டதாக தெரிவித்தனர். சஞ்சய்குமார் திடீரென மாயமானது அமிர்தா மற்றும் குடும்பத்தினரை மிகுந்த பதற்றத்துக்குள்ளாக்கியது.
இதுதொடர்பாக அமிர்தாவின் சகோதரர்கள் கண்ணன், கார்த்தி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கருண் கரட்டிடம் புகார் தெரிவித்தனர். அவர், உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் போலீசார் புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் கிராமத்துக்கு சென்று விசாரித்தபோது சஞ்சய்குமாரை உறவினர்கள் அழைத்துச்சென்றது தெரியவந்தது. நேற்று அதிகாலை கமுதியில் உள்ள உறவினர்கள் வீட்டில் சஞ்சய்குமார் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். அங்கிருந்து அவரை போலீசார் அழைத்து வந்து அவருடைய காதலி அமிர்தா வீட்டில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து திருத்துறைப்பூண்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நேற்று மதியம் சஞ்சய்குமாருக்கும், அமிர்தாவுக்கும் முறைப்படி திருமணம் நடந்தது.
கட்சியின் மாவட்ட செயலாளர் முருகையன், மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் காரல் மார்க்ஸ், நகர செயலாளர் கோபு, சி.ஐ.டி.யூ. பொறுப்பாளர் முரளி ஆகியோர் முன்னிலையில் சஞ்சய்குமார், அமிர்தாவின் கழுத்தில் தாலி கட்டினார்.
திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்துக்கு சென்று தஞ்சம் அடைந்தனர். அங்கு மணமக்கள் அளித்த புகாரில், 'வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதன் காரணமாக திருமணத்துக்கு எதிர்ப்பு உள்ளதால் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்' என கூறி உள்ளனர்.
துணை போலீஸ் சூப்பிரண்டு பவுனியா, இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் போலீசார் புகாரை பெற்றுக்கொண்டு இருதரப்பையும் அழைத்து சமாதானம் பேசினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சண்முகம் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, 'தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணங்கள் செய்துகொள்ள தனி ஏற்பாடு இல்லை. எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம்.
காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே இருக்கின்றன' என கூறினார். இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் காதல் ஜோடியின் திருமணம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- பணம் கொடுக்கல் வாங்கலில் இளையராஜா தன்னை ஜாதிப்பெயர் சொல்லி திட்டியதாக குணசேகரன் சின்னமனூர் போலீசில் புகார் அளித்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து இளையராஜா மற்றும் அவரது உறவினரான புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் செல்வேந்திரன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் தேவாரம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். இவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தேனி மாவட்ட செயலாளர் இளையராஜா என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் பணம் கொடுக்கல் வாங்கலில் இளையராஜா தன்னை ஜாதிப்பெயர் சொல்லி திட்டியதாக குணசேகரன் சின்னமனூர் போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளையராஜா மற்றும் அவரது உறவினரான புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் செல்வேந்திரன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- மதுக்கூர் ராமலிங்கம் சிறந்த எழுத்தாளர், சிறந்த பேச்சாளர் என்பதால் திண்டுக்கல் தொகுதி மக்களை அதிகம் கவர வாய்ப்புள்ளது.
- மதுக்கூர் ராமலிங்கத்தை திண்டுக்கல் தொகுதியில் வேட்பாளராக நிறுத்த பிரகாசமாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை:
தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு திண்டுக்கல், மதுரை ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மதுரை மற்றும் கோவையில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தது.
இந்த முறை கோவை தொகுதியை தி.மு.க. தனக்கு வைத்துக்கொண்டு அதற்கு பதில் திண்டுக்கல் தொகுதியை கொடுத்து இருக்கிறது.
திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி 35 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. கூட்டணியுடன் இணைந்து மீண்டும் போட்டியிட உள்ளது. 1977-ம் ஆண்டு அந்த தொகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டது. அப்போது அ.தி.மு.க. வேட்பாளரிடம் கம்யூனிஸ்டு வேட்பாளர் தோல்வியை தழுவினார்.
1989-ம் ஆண்டு மீண்டும் போட்டியிட்ட போது மீண்டும் தி.மு.க. கூட்டணியில் களம் இறங்கிய கம்யூனிஸ்டுக்கு தோல்வியே கிடைத்தது. கடந்த 2014-ம் ஆண்டு அந்த தொகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு போட்டியிட்டு 1.81 சதவீத வாக்குகளே பெற்றது.
இந்த நிலையில் தற்போது தி.மு.க. கூட்டணியில் 4-வது முறையாக திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி போட்டியிட உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரமாண்டமான வெற்றி பெற்று இருந்தார்.
எனவே இந்த தடவை மிக எளிதான வெற்றியை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி பெற முடியும் என்று தி.மு.க. கூட்டணி தலைவர்கள் நம்புகிறார்கள். அதற்கு ஏற்ப வேட்பாளர்களை தேர்வு செய்ய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
திண்டுக்கல் தொகுதியில் இதுவரை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வெற்றி பெற்றது இல்லை. ஆனால் திண்டுக்கல் சட்டசபை தொகுதியில் 7 தடவை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. எனவே இந்த தடவை நிச்சயம் வெற்றியை அறுவடை செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் உள்ளனர்.
இதற்காக 3 பேர் பெயரை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் வேட்பாளராக தேர்வு செய்து ஆய்வு நடத்தி வருகிறார்கள். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் என்.பாண்டிக்கு வாய்ப்பு கொடுக்கலாமா? என்று ஆலோசிக்கப்பட்டது.
இதற்கிடையே தீக்கதிர் பத்திரிகை ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கத்தை வேட்பாளராக நிறுத்தலாமா? என்று பரிசீலனை செய்யப்படுகிறது. மதுக்கூர் ராமலிங்கம் சிறந்த எழுத்தாளர், சிறந்த பேச்சாளர் என்பதால் திண்டுக்கல் தொகுதி மக்களை அதிகம் கவர வாய்ப்புள்ளது. எனவே மதுக்கூர் ராமலிங்கத்தை திண்டுக்கல் தொகுதியில் வேட்பாளராக நிறுத்த பிரகாசமாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மதுரை தொகுதியில் தற்போது சு.வெங்கடேசன் எம்.பி.யாக உள்ளார். அவரையே மீண்டும் மதுரை வேட்பாளராக நிறுத்தலாமா? என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.
கடந்த 5 ஆண்டுகளில் சு.வெங்கடேசன் எம்.பி. மதுரை தொகுதிக்கு மிக சிறப்பான சேவை செய்திருப்பதாக தி.மு.க. தலைவர்கள் பாராட்டுகிறார்கள். குறிப்பாக முக்கிய பிரச்சனைகளை உடனுக்குடன் வெளியில் தெரிவித்து அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்ப்பதாக சு.வெங்கடேசனுக்கு நல்ல பெயர் உள்ளது.
அவரையே மீண்டும் களம் இறக்குமாறு தி.மு.க. தரப்பில் கூறப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
- தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு திண்டுக்கல், மதுரை என 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
- கடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மதுரை, கோவையில் போட்டியிட்டு வெற்றி பெற்றது.
சென்னை:
தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு திண்டுக்கல், மதுரை ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மதுரை மற்றும் கோவையில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தது.
இந்த முறை கோவை தொகுதியை தி.மு.க. தனக்கு வைத்துக்கொண்டு அதற்கு பதில் திண்டுக்கல் தொகுதியைக் கொடுத்துள்ளது.
திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 35 ஆண்டுக்கு பிறகு தி.மு.க. கூட்டணியுடன் இணைந்து மீண்டும் போட்டியிட உள்ளது.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர்.
அதன்படி, திண்டுக்கல் தொகுதியில் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், மதுரையில் சு.வெங்கடேசன் மீண்டும் போட்டியிடுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பாராளுமன்றத்தில் பலவிதமான மோசமான திட்டங்களை கொண்டு வருவதாக அறிவித்துள்ளனர்.
- தனிநபர் பிரச்சனைக்கு எல்லாம் தமிழக அரசு பொறுப்பு ஏற்க முடியாது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் சி.பி.எம். மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களிடம் அதானி ரூ.2,200 கோடி லஞ்சம் கொடுத்து தான் முதலீட்டை ஏற்றுள்ளார். இது தொடர்பாக அமெரிக்க நீதிமன்றம் அதானி, அவரது மருமகன் உட்பட 7 பேர் மீது பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. இவ்வளவு பெரிய முறைகேடு நடந்ததை அங்குள்ள பங்கு சந்தை நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. ஆனால் இந்தியாவில் உள்ள சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை இதனை கண்டு கொள்ளவில்லை. ஏன் இவ்வளவு பெரிய முறைகேட்டை இவர்கள் கண்டுபிடிக்கவில்லை. அமெரிக்க நிறுவனம் சொன்ன பின்பாவது மத்திய அரசு ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கும், எங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என அந்த நிறுவனம் சார்பில் பதில் கூறப்பட்டுள்ளது. இதனை மோடி அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
அதானி என்பது முகம் தான், பின்னால் இருப்பது நரேந்திர மோடி தான். அவரது பினாமியாக இருப்பதால்தான் அதானி மீது எவ்வளவு பெரிய ஊழல் குற்றச்சாட்டு வந்தாலும் மோடி அரசாங்கம் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பது கிடையாது. அவர்கள் மீது சம்மன் அனுப்புவதில்லை. விசாரணைக்கு கூட அழைப்பது இல்லை. எனவே மத்திய அரசு உடனடியாக அதானியை கைது செய்ய வேண்டியும், முறையான விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்.
இந்த முறைகேடு பட்டியலில் தமிழ்நாடு அரசு இடம் பெற்றுள்ளது. தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, நாங்கள் அதானியுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை எனக் கூறியுள்ளார்.
தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தை மத்திய அரசு வாங்கி, மாநிலங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். நான் தமிழக முதலமைச்சரை கேட்டுக் கொள்வது, தமிழ்நாடு பெயர் அந்தப் பட்டியலில் வந்துள்ளதால் இது சம்பந்தமாக தமிழக அரசு விசாரணையை தெளிவுபடுத்த வேண்டும். முழுமையான விவரங்கள் என்னவென்று தெரிவிக்க வேண்டும்.
பாராளுமன்றத்தில் பலவிதமான மோசமான திட்டங்களை கொண்டு வருவதாக அறிவித்துள்ளனர். அவர்களுக்கு பாராளுமன்றத்தில் அறுதி பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில் கூட ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற சட்டத்தை முன்மொழிவதாக கூறுகின்றனர்.
ஏதோ ஒரு முறைகேடு மூலமாக பாராளுமன்றத்தில் இந்த சட்ட திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு சதி திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற துடிக்கிறது.
தமிழக சட்டமன்றம் விரைவில் கூட உள்ளது. தமிழக சட்டமன்றத்தை 3 அல்லது 4 நாட்கள் நடத்துவதற்கு பதிலாக, எதிர்க்கட்சிகள் தோழமைக் கட்சிகள் கருத்துக்களை பேசுவதற்கும், நாட்டில் உள்ள பல முக்கியமான பிரச்சனைகளை விவாதிப்பதற்கும் உரிய அவகாசத்துடன் சட்டமன்றத்தை நடத்த வேண்டும். முதலமைச்சரும் சபாநாயகரும் சட்டமன்றத்தை போதுமான அவகாசம் கொடுத்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காலி பணி இடங்களை நிரப்ப வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் உள்ள தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யும் அறிவிப்பினை சட்டமன்றத்தில் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
பள்ளியில் ஆசிரியர்கள், நீதிமன்றத்தில் வக்கீல்கள், மருத்துவமனையில் டாக்டர்கள் தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் வன்மையான கண்டனத்துக்குரியது. இது தனிமனித விரோதம் காரணமாக நடைபெறுகிறது. தனிநபர் பிரச்சனைக்கு எல்லாம் தமிழக அரசு பொறுப்பு ஏற்க முடியாது. போதைப்பொருள் ஒழிப்பதில் அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் இந்த விஷயத்தில் மெத்தனமாக உள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிக்கட்டான்பட்டியில் மத்திய அரசு 2000க்கும் மேற்பட்ட இடங்களில் கனிம வளங்களை எடுப்பதற்கு ஏலம் விட்டுள்ளது. அந்த இடத்தை பல்லுயிர் பாதுகாப்பு மையம் என்கின்ற முறையில் தமிழக அரசு 6 மாதத்திற்கு முன்பே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு உடனடியாக அந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும்.
2026 தேர்தலில் கூட்டணிகள் மாறும் என பலர் அவர்கள் யூகத்தின் அடிப்படையில் கூறி வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் உள்ளது. கூட்டணி மாறுவதற்கான முகாந்திரம் இருப்பதாக தெரியவில்லை .
அ.தி.மு.க.வில் உள்ள தலைவர்களுக்கிடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் உள்ளது. அ.தி.மு.க. பாராளுமன்ற தேர்தலில் தோற்றத்துக்கு சரியான கூட்டணி இல்லாதது தான் காரணம் என கூறுகின்றனர்.
மீண்டும் அ.தி.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணிக்கு சென்றால் அ.தி.மு.க. என்ற ஒரு கட்சியே இருக்காது.
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும் போது, கூட்டணி கட்சிகளுக்கு சீட்டு மற்றும் கோடிக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டும் என பேசி உள்ளார். பொத்தாம் பொதுவாக சொல்லாமல் உங்களிடம் யார் பணம் கேட்டார்கள் என பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
யார் பணம் கேட்டார்கள்? நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்தீர்கள்? என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது சச்சிதானந்தம் எம்.பி. மதுக்கூர் ராமலிங்கம் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- மாநாட்டில், தன்னை பதவிகளில் இருந்து விடுவிக்குமாறு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்தார்.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில புதிய செயலாளராக சண்முகம் தேர்வு.
விழுப்புரத்தில் கட்சியின் மாநில மாநாட்டில், தன்னை பதவிகளில் இருந்து விடுவிக்குமாறு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்தார்.
மேலும், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு சட்ட விதிகளின்படி 72 வயதுக்கு மேல் கட்சியில் எந்த பொறுப்புகளிலும் நீடிக்க முடியாது" என குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி, விழுப்புரம் மாநில மாநாட்டில் இன்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில புதிய செயலாளராக தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவரும், கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாட்டில், 80 உறுப்பினர்கள் சண்முகத்தை தேர்வு செய்துள்ளனர்.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில புதிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சண்முகத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) புதிய மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மதிப்பிற்குரிய தோழர் பெ.சண்முகம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பொதுவுடைமைப் பாதையில் ஏழை, எளிய மக்களுக்காகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த, போற்றுதலுக்குரிய தங்களின் பணி, வரும் காலங்களிலும் சமரசமின்றித் தொடரட்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பச்சையப்பன் கல்லூரியில் நடந்த விழாவில் தி.மு.க. எம்.பி. ஆ.ராசா பங்கேற்றார்.
- அப்போது, கம்யூனிச தலைவர்கள் சுயநலவாதிகளாக மாறிவிட்டனர் என்றார்.
சென்னை:
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற தி.மு.க. எம்.பி. ஆ.ராசா பேசுகையில், கம்யூனிச கொள்கை தோற்றுப்போய் விட்டது. கம்யூனிசத்தில் கோளாறு இல்லை, கம்யூனிசம் செம்மையானது. கம்யூனிச தலைவர்கள் சுயநலவாதிகளாக மாறிவிட்டதால் கம்யூனிச தத்துவங்கள் நீர்த்துப் போனது என தெரிவித்தார்.
இந்நிலையில், சி.பி.எம். மாநில செயலாளர் பெ.சண்முகம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு ஆதரவு அளிக்கப்படும்.
கம்யூனிஸ்ட் தலைவர்கள் சுயநலவாதிகள் என தி.மு.க. எம்.பி. ஆ.ராசா பேசியது மிகவும் தவறானது என தெரிவித்தார்.
- தனது அநாகரீகமான பேச்சுக்கு சீமான் மன்னிப்புக்கேட்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
- தந்தை பெரியார், தமிழ்நாடு கண்ட நவீன சீர்திருத்தங்கள் பலவற்றிற்கும் முன்னோடியாக அமைந்தவர்.
தந்தை பெரியார் குறித்த சீமானின் அவதூறு கருத்துகளை வன்மையாகக் கண்டிப்பதுடன், தனது அநாகரீகச் செயலுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சிறந்த சிந்தனையாளர் தந்தை பெரியார் குறித்து, இழிவான ஆதாரமற்ற கருத்துக்களை தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சுக்களை சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
தனது அநாகரீகமான பேச்சுக்கு சீமான் மன்னிப்புக்கேட்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
சுயமரியாதை, சமத்துவம், பெண் விடுதலை, சமூக நீதி, சாதி ஒழிப்பு என பல்வேறு தளங்களிலும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பைச் செலுத்தியிருக்கும் தந்தை பெரியார், தமிழ்நாடு கண்ட நவீன சீர்திருத்தங்கள் பலவற்றிற்கும் முன்னோடியாக அமைந்தவர்.
அவருடைய சிந்தனையால் ஆத்திரமடைந்த பிற்போக்கு சக்திகளும், சங் பரிவார வெறுப்பரசியல் கூட்டமும் அவருடைய சிலையை சேதப்படுத்துவது, அவதூறுகளின் மூலம் இழிவுபடுத்துவது என்று தரம் தாழ்ந்து செயல்பட்டு பரவலான கண்டனத்திற்கு ஆளாகி வந்தனர்.
தற்போது அதே பாதையில், மிக மோசமான அவதூறுகளை வெளிப்படுத்தியிருகிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். தந்தை பெரியாரின் வாழ்க்கையும், அவருடைய பேச்சுக்களும் வரலாற்று ஏடுகளில் பதிவானவை.
ஆய்வாளர்கள், சிந்தனையாளர்களால் தொடர்ந்து வாசிக்கப்பட்டும், ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டும் வரக்கூடியவை. அவருடைய கருத்துக்களின் தொகுப்பு இந்தியாவில் நிலவும் சாதிப் படிநிலைச் சுரண்டலுக்கு எதிரானவை என்பதுடன், சமுதாயத்தில் நிலவும் ஏற்றதாழ்வுகளை ஒழித்து, முற்போக்குத் திசையில் பயணிக்க உதவக்கூடியவை.
அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரோடு உடன்பட்டும், முரண்பட்டும் பயணித்துள்ள பொதுவுடைமை இயக்கமோ அல்லது வேறு பல இயக்கங்களோ கருத்துக்களை விமர்சித்துள்ளோமே அன்றி ஒரு போதும் அவதூறு, இழிவான தாக்குதல்களை செய்ததில்லை.
ஆனால், பெரியாரை வெறுக்கும் பிற்போக்கு சக்திகள், அவர் பேசியதாக பல்வேறு பொய்களை இட்டுக்கட்டியும், அல்லது குறிப்பிட்ட கருத்துக்கள் பேசப்பட்ட பின்னணியை மறைத்தும், திரித்தும் அவதூறுகளை முன்வைக்கின்றனர்.
அதன் மூலம் பெரியாரின் கருத்துக்களை முற்றாக வீழ்த்துவதுடன் தமிழ்நாட்டை பின் நோக்கி இழுத்துச் செல்ல முடியும் என நினைக்கிறார்கள். இதுவரை சங்பரிவாரத்தால் செய்யப்பட்டு வந்த அவதூறுகளை இப்போது சீமானும் முன்னெடுத்திருப்பது கண்டனத்திற்குரியது.
சீமான் வெளியிட்டிருக்கும் அவதூறு கருத்துக்களை சி.பி.ஐ(எம்) தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. தனது அநாகரீகச் செயலுக்காக சீமான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- "அறியாமை பேரின்பமாக இருக்கும் இடத்தில், புத்திசாலித்தனமாக இருப்பது முட்டாள்தனம்"
- தரூர் அரசியல் அனாதையாக விடப்பட மாட்டார் என்று தெரிவித்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும் திருவனந்தபுரம் தொகுதி எம்.பியுமான சசி தரூர் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு குறித்து சசி தரூர் பாராட்டி பேசினார். கேரளாவில் ஆளும் இடது முன்னணி ( எல்.டி.எப் ) அரசின் கொள்கைகளையும் சசி தரூர் பாராட்டி பேசினார். இது காங்கிரஸ் தலைவர்களிடையே முணுமுணுப்பை ஏற்படுத்தியது.

கேரள மாநில காங்கிரஸ் சரியான தலைமை இன்றி தவிப்பதாகவும் அவர் கூறியது உள்ளூர் தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கிடையே கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சசி தரூர் சந்தித்து பேசினார்.
அரை மணி நேர சந்திப்பில் ராகுலிடம் தான் சில முக்கிய பிரச்சனைகளை எடுத்துக்கூறியதாக சசி தரூர் தெரிவித்தார். மேலும் அன்றைய தினம் செய்தியாளர்களிடம் உட்கட்சி பிரச்சனை பற்றி பேச மறுத்துவிட்டார். ''இன்று முக்கிய கிரிக்கெட் மேட்ச். எல்லோரும் சென்று பாருங்கள்'' என்று மட்டும் கூறிவிட்டு நழுவினார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தனியார் செய்தி நிறுவனம் ஒன்றில் நேர்காணலில் பங்கேற்ற சசி தரூர், நான் எப்போதும் அணுகக்கூடியவனாகவே இருக்கிறேன். கட்சிக்காக பணியாற்றத் தயாராக இருக்கிறேன். ஆனால், அவர்களுக்கு விருப்பமில்லை என்றால், எனக்கு வேறு ஆப்ஷன்கள் இருக்கின்றன.
கட்சி மாறுவது குறித்த வதந்திகள் உண்மை இல்லை. என்னை ஒரு அரசியல்வாதியாக நான் ஒருபோதும் நினைத்ததில்லை. புதிய வாக்காளர்களை ஈர்க்க காங்கிரஸ் தனது தளத்தை கேரளாவில் விரிவுபடுத்த வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
கேரளாவில் தேர்தலுக்கு ஒரு ஆண்டு மட்டுமே உள்ளது. அதற்குள் காங்கிரஸ் தனது ஆதரவு மட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். இல்லையென்றால் கேரளாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் காங்கிரஸ் எதிர்க்கட்சியாகவே இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதற்கிடையே சசி தரூரை வரவேற்கத் தயாராக இருப்பதாகக் கேரள மாநில சிபிஎம் கட்சி தெரிவித்துள்ளது. சசி தரூர் அரசியல் அனாதையாக விடப்பட மாட்டார் என்றும் தாங்கள் அவரை வரவேற்போம் என்றும் சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். சசி தரூருக்காக கட்சி எப்போதும் ஒரு கதவைத் திறந்து வைக்கும் என்று சிபிஎம் மாநில பொதுச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் கூறினார்.
சமீபத்தில் சசி தரூரின் எக்ஸ் பதிவு ஒன்றும் வைரலானது. 18 ஆம் நூற்றாண்டின் ஆங்கிலக் கவிஞர் தாமஸ் கிரே எழுதிய ஒரு கவிதையிலிருந்து சில வரிகளை சசி தரூர் பகிர்ந்தார். "அறியாமை பேரின்பமாக இருக்கும் இடத்தில், புத்திசாலித்தனமாக இருப்பது முட்டாள்தனம்" என்று அந்த கவிதை கூறுகிறது. சசி தரூரும் அதையே மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார் என்று தெரிகிறது.






