என் மலர்
நீங்கள் தேடியது "Su Venkatesan"
- கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
- இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இது நிறுத்தப்பட்டது
திருவண்ணாமலை, ஆறுபடை வீடுகள் உள்பட அனைத்து கோவில்களிலும் கார்த்திகை தீப விழா கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலை மீது, வழக்கத்திற்கு மாறாக சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் 15 மீ தொலைவில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
திருப்பரங்குன்றம் மலை மீது தீபத்தூணில் ஆண்டாண்டு காலமாக கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்ததாகவும் ஆனால், ஆங்கிலேயர் காலத்தில் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இது நிறுத்தப்பட்டது என்றும் கூறி இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர் அளித்த மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், இதுகுறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
கார்த்திகை தீபத்தை கலவர தீபமாக மாற்ற மதவெறி சக்திகள் எல்லாவகையிலும் முயலுகிறார்கள். மதவெறி அரசியலை எந்த நாற்காலியில் அமர்ந்து அமல்படுத்தினாலும் அதை முறியடிக்கும் வலிமை தமிழ்நாட்டின் மதச்சார்பற்ற சக்திகளுக்கு உண்டு.
இந்துத்துவா மதவெறி அரசியலை எதிர்கொள்ள குன்றென நிமிர்ந்து நிற்போம்." என்று கூறியுள்ளார்.
- பாஜக ஆளும் மாநிலங்களுக்கு பல்லாயிரம் கோடி.
- ரயில்வே துறையில் தமிழ்நாடும், கேரளாவும் தொடர்ந்து புறக்கணிப்படுகிறது.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில், நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தில், இன்று (நவ.25) ரயில்வேதுறை ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் எம்பி சு. வெங்கடேசன் கலந்துகொண்டநிலையில், தமிழ்நாடு ரயில்வே வளர்ச்சி, பொதுமக்கள் வசதி, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை வலியுறுத்தி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் ரயில்வே துறையில் தமிழ்நாடும், கேரளாவும் தொடர்ந்து புறக்கணிப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகம் என தலைப்பிட்டு, "2024-25 ஆம் ஆண்டில் புதிய வழித்தடத்திற்கு ரூ. 31,458 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் தெற்கு இரயில்வேக்கு ஒதுக்கப்பட்டதோ வெறும் ரூ. 301 கோடி. அதவாது ஒரு சதவிகிதம் மட்டுமே. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு பல்லாயிரம் கோடி. தமிழ்நாடு, கேரளாவுக்கு பட்டை நாமம்." எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் முன்வைத்த கோரிக்கைகளையும் அறிக்கை வடிவில் பதிவிட்டுள்ளார்.
- கோவையில் 3 நாள் இயற்கை வேளாண் மாநாடு இன்று தொடங்கியது.
- பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார்.
கோவை கொடிசியாவில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் 3 நாள் இயற்கை வேளாண் மாநாடு இன்று தொடங்கியது. முதல் நாள் மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர்," தமிழை கற்றுக்கொண்டிருக்கலாமே என்று நான் அடிக்கடி நினைத்தது உண்டு. சிறு வயதிலேயே தமிழ் கற்றுக்கொடுத்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
பிரதமர் மோடியின் இந்த கருத்திற்கு, மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறத்து சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் அவர்களே!
நீங்கள் தமிழ் கற்காதது பிரச்சனையில்லை.
இந்திய குழந்தைகள் அனைவரும் இந்தி கற்க வேண்டும் என்ற உங்கள் அரசின் மொழிக்கொள்கை தான் பிரச்சனை.
"இந்தியை திணிக்க மாட்டோம்" என்று நீங்கள் இந்தியில் கூட சொல்லுங்கள். அது எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அனுமன்தான் முதன் முதலில் விண்வெளிக்கு போனது என்று அனுராக் தாகூர் கண்டறிந்துள்ளது சாதாரண விசயமல்ல...
- பிஎம் ஶ்ரீ பள்ளிகளுக்கான சுற்றறிக்கையை தர்மேந்திர பிரதானிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கலாம்.
உலகின் முதல் விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் கிடையாது என்றும் முதன் முதலில் விண்வெளிக்கு சென்றது அனுமன்தான் எனவும் பள்ளி மாணவர்கள் மத்தியில் பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாகூர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், மதுரை பாராளுமன்ற தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
முப்பத்தி முக்கோடி தேவர்கள் விண்வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது அனுமன்தான் முதன் முதலில் விண்வெளிக்கு போனது என்று அனுராக் தாகூர் கண்டறிந்துள்ளது சாதாரண விசயமல்ல,
பா.ஜ.க.வினரின் அறிவு செயல்பாடு நாளுக்கு நாள் அபாரமாகிக் கொண்டிருக்கிறது.
நீல் ஆம்ஸ்டிராங் பெயரை அறிவியல் பாடத்திலிருந்து நீக்க பிஎம் ஶ்ரீ பள்ளிகளுக்கான சுற்றறிக்கையை தர்மேந்திர பிரதானிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.
- ராஜினாமா செய்த தன்கரை அனுப்பிவைக்கப் போனது எத்தனை ஒன்றிய அமைச்சர்கள்?
- அதே இடத்திற்கு புதியவரையும் அனுப்பிவைக்க மாட்டோம் என்று குறைந்தபட்சம் அவரிடமாவது சொன்னீர்களா?
மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஏற்கனவே குடியரசு துணைத்தலைவராக இருந்தவர் திடீரென இராஜினாமா செய்தார்.
அதன் பிறகு அவர் பற்றிய எந்த விபரமும் கிடைக்கவில்லை. அவரை யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரும் பா.ஜ.க.வை சேர்ந்தவர்தான். அக்கட்சியால்தான் அந்நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டார்.
அவ்வளவு பெரிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து பகல் 2 மணிக்கு புறப்பட்டுப் போனவர் என்னவானார் என்று இதுவரை நாட்டுக்குத் தெரியவில்லை.
இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரை வரவேற்க டில்லி விமான நிலையத்திற்கு நான்கு ஒன்றிய அமைச்சர்கள் சென்றுள்ளனர்.
ராஜினாமா செய்த தன்கரை அனுப்பிவைக்கப் போனது எத்தனை ஒன்றிய அமைச்சர்கள்? எங்கே அனுப்பிவைத்தீர்கள்?
அதே இடத்திற்கு புதியவரையும் அனுப்பிவைக்க மாட்டோம் என்று குறைந்தபட்சம் அவரிடமாவது சொன்னீர்களா?
பல லட்சம் வாக்காளர்களோடு சேர்த்து குடியரசு துணைத்தலைவரையும் கண்டறியும் பொறுப்பு எதிர்கட்சிக்கு மட்டுமே உரியதாகிறது.
ஆளையே காணோம் என்ற பதட்டத்தில் நாடு இருக்க இதில் கூசாமல் ஆதரவு கேட்கிறது ஒரு கூட்டம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பாராளுமன்ற விவாதத்தில் ஆபரேஷன் சிந்தூர் பற்றி மட்டுமே அமைச்சர்கள் பேசினார்கள்.
- மூத்த ராணுவ அதிகாரிகளை பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் கொண்டுவந்து அமர்த்தியுள்ளது என்றார்.
சென்னை:
மதுரை எம்.பி.யான சு.வெங்கடேசன் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரை கூட்டச் சொன்னோம். அரசு அதனை செய்யவில்லை. வழக்கம்போல் கூடுகிற மழைக்கால கூட்டத்தொடரிலும் விவாதப் பொருளில் அது சேர்க்கப்படவில்லை.
எதிர்க்கட்சிகளின் தீவிரமான போராட்டத்திற்கு பின்பே "பஹல்காம் தீவிரவாத தாக்குதல்-ஆபரேஷன் சிந்தூர்" குறித்து விவாதம் நடத்த அரசு ஏற்றுக்கொண்டது.
அந்த விவாதத்தில் கூட ஆபரேஷன் சிந்தூர் பற்றி மட்டுமே அமைச்சர்கள் பேசினார்கள். பஹல்காம் தாக்குதல், அதில் உயிரிழந்தவர்கள், பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்ட எல்லையோர மக்கள் குறித்து பா.ஜ.க. அரசு ஒரு வார்த்தை பேசவில்லை.
இந்திய ராணுவத்தை எப்படிப் பயன்படுத்தியிருக்க வேண்டுமோ அப்படிப் பயன்படுத்தவில்லை என்று நாங்கள் குற்றம்சாட்டினோம். தாக்குதலை முடிவுக்கு கொண்டு வருவதாக அமெரிக்க அதிபர் அறிவித்ததைப் பற்றி கேள்வி எழுப்பினோம். ஆனால் அது பற்றி எந்த பதிலும் சொல்லவில்லை.
பாகிஸ்தானுக்குள் 100 கிலோமீட்டர் நுழைந்து தாக்குதல் தொடுக்கப்பட்டதாக சொன்னது அரசு. அது சார்ந்த அரசியல் கேள்விகளுக்கு பதில் சொல்ல பிரதமரால் மாநிலங்களவைக்கு வந்து சேர முடியவில்லை.
தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூரைத் தனது விளம்பர வெறிக்காக மட்டுமே பயன்படுத்தி வரும் அரசு, இன்று மேலும் ஒரு படி கீழிறங்கி மூத்த ராணுவ அதிகாரிகளை பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் கொண்டு வந்து அமர்த்தியுள்ளது.
எப்படித் தாக்குதல் நடந்தது? தீவிரவாதிகளுக்கு உதவியவர்கள் யார்? எத்தனை பேரைக் கைது செய்தீர்கள்? பாதுகாப்புக் குறைபாடுகளுக்கு யார் பொறுப்பு? என நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இன்று வரை பா.ஜ.க.வால் பதிலளிக்க முடியவில்லை என பதிவிட்டுள்ளார்.
- இடிபாடுகளில் சிக்கிய அனைவரையும் அரசு துரிதமாக மீட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
- நிலச்சரிவு அபாயமிக்க பகுதிகள், ஆற்றங்கரைகளில் ஆக்கிரமிப்புகளை மேலும் அனுமதிக்கக் கூடாது.
சென்னை:
மதுரை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் ஏற்பட்ட பெருமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அதிர்ச்சியளிக்கிறது. இடிபாடுகளில் சிக்கிய அனைவரையும் அரசு துரிதமாக மீட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
அறிவியலாளர்களின் எச்சரிக்கைகளுக்கு மாறாக சூழல் கூருணர்வு மிக்க பகுதிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்.
நிலச்சரிவு அபாயமிக்க பகுதிகள், ஆற்றங்கரைகளில் ஆக்கிரமிப்புகளை மேலும் அனுமதிக்கக் கூடாது.
காலநிலை மாற்றம் கொண்டு வரும் பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
- ஜெகதீப் தன்கர் ராஜினாமா கடிதம் வெளியாகி பல மணிநேரம் கடந்துவிட்டது.
- அதிகாலையிலேயே தனது அலுவல் பணிகளைத் தொடங்குவதாகக் கூறிக்கொள்ளும் பிரதமருக்கு இன்னுமா செய்தி சென்றடையவில்லை?
மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்துள்ளார்.
அவர் ராஜினாமா கடிதம் வெளியாகி பல மணிநேரம் கடந்துவிட்டது. அதிகாலையிலேயே தனது அலுவல் பணிகளைத் தொடங்குவதாகக் கூறிக்கொள்ளும் பிரதமருக்கு இன்னுமா செய்தி சென்றடையவில்லை?
பிரதமரும் அமைச்சரவைச் சகாக்களும் இன்னும் மெளனம் காப்பது ஏன்?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பத்து குழிகள் மட்டுமே தோண்டியுள்ளனர். அதற்குள் சரஸ்வதி நதியை கண்டுபிடித்து விட்டனர்.
- கீழடியில் 102 குழிதோண்டி பகுப்பாய்வு நடத்தி அறிக்கை சமர்பித்தால், ஆதாரம் போதவில்லை என்கிறார்கள்.
சு. வெங்கடேசன் எம்.பி. எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
ராஜஸ்தானில் உள்ள பஹஜ் என்ற இடத்தில் ஐந்து மாதங்கள் மட்டுமே அகழாய்வு நடந்துள்ளது. பத்து குழிகள் மட்டுமே தோண்டியுள்ளனர். அதற்குள் சரஸ்வதி நதியை கண்டுபிடித்து விட்டனர். இதே முறையில் ஹரியானாவிலும் இமாச்சல பிரதேசத்திலும் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளார்கள்.
கீழடியில் 102 குழிதோண்டி, 88 கார்பன் மாதிரிகளையும், 5700 தொல் பொருட்களையும் கொண்டு அறிவியல் முறை பகுப்பாய்வு நடத்தி அறிக்கை சமர்பித்தால், ஆதாரம் போதவில்லை என்கிறார்கள்.
ஆனால் ஒரு கார்பன் மாதிரி கூட கண்டறியாமல், நதியையே கண்டறிந்து உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது பாஜக அரசு.
இவ்வாறு சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
- தொல்லியல் அதிகாரி அமர்நாத் இராமகிருஷ்ணன் இப்பொழுது மீண்டும் இடமாற்றம்.
- ஒன்றிய அரசின் வஞ்சக செயல்களுக்கு தமிழக மக்கள் உரிய முறையில் பதில் அளிப்பார்கள்.
மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழின் தொன்மையையும், கீழடி உண்மையையும் வெளிக்கொண்டு வருவதில் உறுதியாக செயல்பட்ட தொல்லியல் அதிகாரி அமர்நாத் இராமகிருஷ்ணன் இப்பொழுது மீண்டும் இடமாற்றம்.
கண்டறியப்பட்ட உண்மைக்காக இடைவிடாமல் வேட்டையாடப்படுகிறார் அமர்நாத் இராமகிருஷ்ணன்.
ஒன்றிய அரசின் வஞ்சக செயல்களுக்கு தமிழக மக்கள் உரிய முறையில் பதில் அளிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஆயிரம் ஆண்டு பழமையான திருப்பரங்குன்றம் மலை” என்கிறார் அமித்ஷா.
- பரங்குன்றம் என்பது மூவாயிரம் ஆண்டு பழமையான தமிழ் சொல்.
மதுரைக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்கு நடைபெற்ற பாஜக கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "முருகனின் திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என திமுக அரசு சொல்கிறது. பிரிவினைவாதத்தை தூண்டுவதிலேயே திமுக அரசு முனைப்பாக இருக்கிறது. . ஜூன் 22-ல் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு கலந்து கொண்டு நமது வலிமையை காட்ட வேண்டும்" என்று விமர்சனம் செய்திருந்தார்.
அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு மதுரை சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பான அவரது பதிவில், "ஆயிரம் ஆண்டு பழமையான திருப்பரங்குன்றம் மலை" என்கிறார் அமித்ஷா.
பரங்குன்றம் என்பது மூவாயிரம் ஆண்டு பழமையான தமிழ் சொல். அதனை ஆயிரம் ஆண்டு என சுருக்குவதில் தான் சனாதனத்தின் சதி இருக்கிறது.
சமஸ்கிருதத்தை பல்லாயிரம் ஆண்டு என்று சொல்லிக்கொண்டே தமிழை ஆயிரம் ஆண்டுக்குள் அடக்குவது தான் கீழடி துவங்கி திருப்பரங்குன்றம் வரை அவர்கள் நடத்திக்கொண்டிருக்கும் அரசியல்.
- ரிசர்வ் வங்கி முழுமையான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
- ரூ.2.5 லட்சம் வரை கடன்களுக்கு கடன் தகுதி மதிப்பீடு தேவையில்லை.
தங்கக் கடன் பிரச்சனையில் நிபந்தனைகளை தளர்த்தி விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது என்றும் அது எங்கள் கோரிக்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றும் மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
தங்கக் கடன் பிரச்சனையில் நிபந்தனைகளை தளர்த்தி ரிசர்வு வங்கி விதிமுறைகளை வெளியிட்டது மகிழ்ச்சியளிக்கிறது.
இப்பிரச்சனை சம்பந்தமாக ஒன்றிய நிதியமைச்சரிடம் நேரில் சந்தித்து தந்த கடிதத்தின் பல அம்சங்கள் ஈடேறி உள்ளன என்பது மகிழ்ச்சி. ரிசர்வ் வங்கி கவர்னருக்கு நான் எழுதிய கடிதத்திற்கும் எனது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாக பதில் வந்தது. இப்பொழுது ரிசர்வ் வங்கி முழுமையான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எமது கோரிக்கைகள்:
1. தங்க நகைக்கான உடமைக்கு கடன்தாரரின் சுய அறிவிப்பு மட்டுமே போதும். நகைக்கான ரசீது தேவையில்லை.
2. ரூ.2.5 லட்சம் வரை கடன்களுக்கு கடன்-பிணை மதிப்பு (Loan to Value) விகிதம் 85% ஆக உயர்த்தப்படும்.
3. ரூ.2.5 லட்சம் வரை கடன்களுக்கு கடன் தகுதி மதிப்பீடு தேவையில்லை.
4. முன்னுரிமைத் துறை கடன் நிபந்தனைகளின் நன்மையை பெறாதவர்களுக்கு தங்கக் கடனின் இறுதிப் பயன்பாட்டைப் பற்றி கடன் வழங்கும் நிறுவனங்கள் கண்காணிக்க தேவையில்லை.
இது எளிய மக்கள் நலனுக்கான குரலுக்கு கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியாகும்.
முழுமையான விதிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை ஆராய்ந்து கூடுதல் தகவல்கள் மற்றும் கோரிக்கைகளை பகிர்ந்து கொள்வேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






