search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hanuman"

    • மூலவருக்கு பின்புறம் இருந்த குன்றில் வளர்ந்து கொண்டிருக்கும் நந்தீஸ்வரரும், நாகர்களின் சிலைகளும் காணப்பட்டன.
    • ஸ்ரீ காட்டுவீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் வேங்கடரமண சுவாமி, மகாலட்சுமி தேவி சந்நிதிகள் விசேஷமானவை.

    கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேவசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீகாட்டுவீர ஆஞ்சநேயர் திருக்கோயில். அனுமன் சிறுவயது முதலே காடுகளில் வலம் வந்தமையாலும் , இந்த பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு வனமாக இருந்தமையாலும், மூலவரானவர் 'காட்டுவீர ஆஞ்சநேயர்' என்ற திருநாமம் கொண்டு அழைக்கப்பெறுகிறார்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு காட்டுவீர ஆஞ்சநேயரின் திருக்கோயில் இல்லை. இந்த பகுதி குன்றுகளாகவும் விளைநிலங்களாகவுமே இருந்துள்ளது. இந்த விளைநிலங்கள் யாவும் வெங்கட்ராம செட்டியாருடையது என்கிறது வரலாறு. அப்போது நிலத்தில் உள்ள பாறையின் மீது ஆஞ்சநேயர் திருவுருவம் செதுக்கப்பட்டிருந்தது. இதனைப் பார்த்த மக்கள் ஆஞ்சநேயரை பூசித்து வழிபட்டு வந்தனர். மூலவருக்கு பின்புறம் இருந்த குன்றில் வளர்ந்து கொண்டிருக்கும் நந்தீஸ்வரரும், நாகர்களின் சிலைகளும் காணப்பட்டன. இந்த அதிசயத்தைக் காண நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரித்து கொண்டே சென்றது.


    ஆஞ்சநேயரின் மீது அளவற்ற பக்தியையும் நம்பிக்கொண்டு மக்கள் வழிபட்டு வருவதை கண்ட வெங்கட்ராம செட்டியார், அங்கு ஆஞ்சநேயருக்கு கோயில் ஒன்றை கட்ட வேண்டும் என முடிவு செய்தார். திருக்கோயில் கட்டுவதற்கு தன்விளைநிலத்தில் இருந்து எவ்வளவு அளவு இடம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என ஊர்மக்களிடம் கூறியுள்ளார். பிறகு இதற்கென்று அறக்கட்டளை ஒன்றும் அமைக்கப்பட்டது, திருக்கோயிலானது எழிலுற எழுந்தது.

    மூலவர் ஸ்ரீஅருள்மிகு ஆஞ்சநேயர் ஒற்றைப் பாறையின் மீது செதுக்கப்பட்டிருப்பது வேறு எங்கும் காணமுடியாத சிறப்பு. இந்த சிற்பத்தை செதுக்கியவர் யார் என்பது தெரியவில்லை என்றாலும் வரலாறு செவி வழி செய்தியாக ஒரு தகவலைக் கூறுகிறது. கிருஷ்ணதேவராயர் காலத்தில் மார்கத பிராமணர் என ஒருவர் இருந்தாராம். இவர் அனுமன் மீது மிகுந்த பக்தி கொண்டவர். இதனால் இவர் பல ஊர்களுக்குச் சென்று அங்குள்ள பாறைகளின் மீதும் மலைகளின் மீதும் அனுமன் சிலைகளை செதுக்கி வந்தாராம். இதனால் அனுமனின் மீது பலருக்கும் பக்தி வரும் என்று எண்ணி உள்ளார். அதனால் இதுவும் அவருடைய கைவண்ணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

    ஏனென்றால் அவர் வடிவமைத்த அனுமன் சிற்பங்கள் அனைத்திலும், அனுமன் வலது புறம் திரும்பி நின்றும், தலை மேல் நோக்கியும் , வால் தூக்கி நின்றவாறும், வாலில் சிறிய மணி ஒன்று கட்டியவாறும் இருக்கும். இங்கும் அவ்வாறே உள்ளது. ஸ்ரீ காட்டுவீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் வேங்கடரமண சுவாமி, மகாலட்சுமி தேவி சந்நிதிகள் விசேஷமானவை.


    ராம நாமம் எழுகிறதோ அவ்விடத்தில் நிச்சயம் அனுமன் இருப்பார். இங்கும் ஆஞ்சநேயர் கோயிலின் வலது பக்கம் பொன்மலை எனும் சிறுமலையொன்றுள்ளது. அங்கு ஒரு பெருமாள் கோயில் உள்ளது. மூலவர் அனுமன் வலது புறம் திரும்பி தலை தூக்கி மலைமீதுள்ள பெருமாளைத் துதித்தபடி நின்றிருக்கிறார். இதனை காணக் கண் கோடி வேண்டும்.

    பல ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலையில் இருந்து ஸ்ரீமத் பாலமுருக நரசிம்ம ஸ்வாமி எனும் சித்தர் ஒருவர் காட்டுவீர ஆஞ்சநேயரை தரிசிக்க வந்துள்ளார். அவர், ஹரியும் சிவனும் ஒன்று என்பதை மெய்ப்பிக்கும் சிறப்பை பெற்றுள்ளது இத்திருத்தலம் என கூறியிருக்கிறார். ஹரிக்கு உகந்தவரான அனுமனும், சிவபெருமானுக்கு உகந்தவரான நந்தீஸ்வரரும் ஒரே இடத்தில் எழுந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பது வேறு எங்குமே காணப்படாத அதிசயம் என்றும் கூறியுள்ளார்.

    மூலவருக்கு இடது புறம் பெரிய உருண்டை பாறையின் மீது சிறிய நந்தீஸ்வரர் சிலை ஒன்று உள்ளது. இச்சிலை வளர்ந்து கொண்டு வருவதாக கூறப்படுகிறது. எல்லா அனுமன் கோயில்களிலும் வடைமாலை, வெற்றிலை மாலை, துளசி மாலை, வெண்ணெய் காப்பு, சந்தனக்காப்பு சாத்தி வழிபடுதல் விசேஷம் எனலாம். ஆனால் இங்கு தேங்காய் நேர்த்திக்கடன் விசேஷம். எவரொருவர் ஒரு முழுத்தேங்காயை, மனதார வேண்டி அனுமனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றாரோ, அவருடைய கோரிக்கைகள் மூன்று மாதங்களுக்குள்ளாக நிறைவேறுவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.


    ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாளன்று மூலவருக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, ஆந்திரம், கர்நாடகம் மற்றும் இந்தியாவின் ஏனைய பகுதிகளிலிருந்தும் ஏராளமாகப் பக்தர்கள் இங்கு வந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

    காட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலில் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுவதால் மக்கள் கூட்டம் அலைமோதும். அந்த நாட்களில் அனுமனை வழிபட்டு தேங்காய் கட்டினால் தங்களது வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

    கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஆவின் மேம்பாலம் எனப்படும் சேலம் பைபாஸை ஒட்டிய இடதுபுற சாலையில் அமைந்துள்ள தேவசமுத்திரத்தில் கலையம்சத்துடன் வளர்ந்து நிற்கிறது அருள்மிகு ஸ்ரீ காட்டுவீர ஆஞ்சிநேயர் திருக்கோயில்.

    • இறைவனை விடவும் இறைவனின் நாமம் அதிக வலிமை உடையது.
    • கர்வம் தோன்றினால் கடமைகளும் பொறுப்புகளும் மறந்துவிடும்.

    ஒருநாள் அர்ஜூனன் வனத்தின் வழியாகச் சென்றுகொண்டிருந்தான். அப்போது வழியில் ஓரிடத்தில் ஒரு குரங்கு `ராமநாமம்' ஜெபித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தான். அவனுக்கு நீண்டநாளாகவே ஒரு சந்தேகம் இருந்தது.

    `ராமர் மிகச் சிறந்த வில்லாளி' என்று சொல்கிறார்களே. அப்படி அவர் உண்மையிலேயே வில்லாளி என்றால், `சேதுவுக்கும், இலங்கைக்கும் இடையில் வில்லால் பாலம் கட்டாமல், ஏன் வானரங்களைக் கொண்டு பாலம் கட்டவேண்டும்?' என்பதுதான் அந்த சந்தேகம்.

    தன்னுடைய சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள ஒரு வழி கிடைத்துவிட்டது என்று நினைத்த அர்ஜூனன், அந்த வானரத்திடம் சென்று, "வானரமே! உன் ராமனுக்கு வலிமை இல்லையா? அவன் சிறந்த வில் வீரன் என்று சொல்கிறார்களே. அது உண்மையானால், அவன் ஏன் வில்லால் பாலம் அமைக்காமல், வானரங்களின் உதவியை நாடவேண்டும்?" என்று கேட்டான்.

    அர்ஜூனனின் இந்த ஆணவப் பேச்சால், தியானம் கலைந்தது அனுமனுக்கு. தன் எதிரே நிற்பது அர்ஜூனன் என்பதை அறிந்து கொண்ட அனுமன் , அர்ஜூனனின் அகந்தையை ஒடுக்க முடிவு செய்தார்.

    "சரங்களால் கட்டப்படும் சரப்பாலம் என் ஒருவனின் பாரத்தையே தாங்காது. எனில் ஒட்டுமொத்த வானரங்களின் பாரத்தை எப்படித் தாங்கும்?" என்று அனுமன் கேட்டார். உடனே அர்ஜூனன். "ஏன் தாங்காது, என்னால் முடியும். நான் ஒரு பாலம் கட்டுகிறேன், உன் ஒட்டு மொத்த வானரக் கூட்டங்களையும் அது தாங்கும்" என்றான். மேலும், "பந்தயத்தில் நான் தோற்றால் வேள்வித் தீயில் குதித்து உயிர்துறப்பேன் என்றான். தன் காண்டீபத்தின்மேல் உள்ள நம்பிக்கையால்.

    அனுமனோ, "நான் தோற்றால் என் ஆயுள் முழுவதும் உனக்கு அடிமையாக இருக்கிறேன்" என்கிறார். போட்டி தொடங்கியது.

     அர்ஜூனன் சரப் பாலத்தை கட்டத்தொடங்கினான். அனுமனோ ஓர் ஓரத்தில் அமர்ந்து 'ராம நாமம்' ஜபித்துக் கொண்டிருந்தார். பாலம் கட்டி முடித்தான் அர்ஜூனன்.

    அனுமன் அதன் மீது ஏற ஆரம்பித்தார். முதல் அடியை எடுத்து வைத்த கணமே பாலம் சுக்குநூறானது. அனுமனுக்கோ எல்லையற்ற மகிழ்ச்சி. அர்ஜூனனோ அவமானத்தில் தலை குனிந்தான். "போரில் எப்படியாவது வெல்ல வேண்டும். என் சகோதரர்களை காப்பாற்ற வேண்டும் என்று பாசுபதாஸ்திரத்தை தேடி வந்தேன். ஆணவத்தால் வானரத்திடம் தோற்றுவிட்டேன். கிருஷ்ணா, நீதான் என்னை மன்னிக்க வேண்டும்" என்றவாறு வேள்வித் தீ வளர்த்து அதில் குதிக்கத் தயாரானான்.

    அனுமன் எவ்வளவோ தடுத்தும் அர்ஜூனன் கேட்கவில்லை. அப்போது ஒரு குரல் "இங்கே நடப்பது என்ன"? என்று கேட்டது. குரல் கேட்ட திசையில், இருவரும் பார்த்தனர். அந்தணர் ஒருவர் தென்பட்டார். இருவரின் அருகே வந்து நடந்தவற்றை கேட்டறிந்தார்.

    பின்பு அவர், "எந்தவொரு பந்தயத்திற்குமே சாட்சி என்பது மிக அவசியமானது. சாட்சியே இல்லாமல் நீங்கள் இருவரும் செய்தது ஒருபோதும் பந்தயம் ஆகாது" என்றார். தொடர்ந்து, "நீ பாலம் கட்டு. இப்போது வானரம் அதை உடைக்கட்டும். பின்பு யார் பலசாலி என்பதை முடிவு செய்துகொள்ளலாம்" என்றார். அர்ஜூனனும், அனுமனும் ஒப்புக்கொண்டனர்.

    'போனமுறைதான் தோற்றுவிட்டோம். எனவே இந்த முறை கிருஷ்ணனை நினைத்துக் கொண்டே கட்டுவோம்' என்று முடிவெடுத்தான் அர்ஜூனன். எனவே 'கிருஷ்ணா கிருஷ்ணா' என்று ஜபித்துக் கொண்டே பாலம் கட்டிமுடித்தான். சென்ற முறையே எளிதாக வென்றுவிட்டோம், இந்த முறையும் வென்றுவிடலாம் என்ற கர்வத்தோடு 'ராம நாமம்' சொல்லாமல் பாலத்தில் ஏறினார் அனுமன்.

     பாலம் அப்படியே இருந்தது. ஓடினார், குதித்தார் பாலம் ஒன்றுமே ஆகவில்லை. பரிதாபத்தோடு நின்ற அனுமனைப் பார்த்து அர்ஜூனன் "பார்த்தாயா, எங்கள் கண்ணன் மகிமையை, இப்போது சொல் எங்கள் கண்ணன்தானே வலிமையானவர்?" என்று கேட்டான்.

    அர்ஜூனனின் இந்தக் கேள்வி அனுமனுக்கு மேலும் குழப்பத்தைத் தந்தது. அந்தணர் அருகே வந்து, "யார் நீங்கள்?" என்று கேட்டான். அந்தணரின் உருவம் மறைந்து பரந்தாமன் காட்சி தரவே, இருவரும் அவர் கால்களில் விழுந்து ஆசி பெறுகின்றனர். பகவான் வாய்திறந்தார் "நீங்கள் இருவருமே தோற்கவில்லை வென்றது கடவுள் பக்தியும், நாமஸ்மரணையும் தான்.

    இறைவனை விடவும் இறைவனின் நாமம் அதிக வலிமை உடையது. அர்ஜூனன் முதல்முறை பாலம் கட்டும்போது, தன்னால் முடியாதது எதுவும் இல்லை என்ற ஆணவத்தோடு பாலம் கட்டினான். அனுமனோ எப்படியாவது வெல்ல வேண்டும் என்று ராமநாமத்தை ஜெபித்தான். எனவே அனுமனின் வெற்றி ராமநாமத்தால் உறுதியானது.

    மறுமுறை போட்டி நடந்தபோது, அகந்தை ஒழிந்த அர்ஜூனன் என்னை நினைத்தபடி பாலம் கட்டினான். அனுமனோ தன் பலத்தை நம்பி, இறைவனை நாடாமல் தோற்றான். எனவே இருமுறையும் வென்றது நாம ஸ்மரணையே" என்றார். கர்வம் தோன்றினால் கடமைகளும் பொறுப்புகளும் மறந்துவிடும். எனவேதான் தேவையற்ற சந்தேகம் தோன்றி அனுமனை சீண்டினான் அர்ஜூனன். அப்போதுதான் தான் சீண்டிய வானரம் அனுமன் என்பதை அறிந்தான் அர்ஜூனன். உடனே அனுமனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான்.

     உங்கள் இருவரின் பக்தியும் எல்லையற்றது. ஆனால், இறைவன் ஒருவன் தான் என்பதை உணர மறந்துவிட்டீர்கள். இதை உணர்த்தவே இந்த நாடகம் என்று சொல்லி இருவருக்கும் ஆசி வழங்கி மறைந்தார் பகவான் கிருஷ்ணன்.

    • ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்ய உயரமான இரும்பு ஏணி உள்ளது.
    • வெளிநாட்டு பக்தர்களையும் வியக்க வைக்கும் இந்த கோவில் 1500 ஆண்டுகள் பழமையானது.

    1) நாமக்கல் ஆஞ்சநேயருக்கு கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மாதங்களில் மட்டும் வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

    2) ஆஞ்சநேயர் கோவிலில் புதிய வாகனங்களுக்கு பூஜை போடுவதை நாமக்கல் நகர மக்கள் வாடிக்கையாக கொண்டு உள்ளனர். இரு சக்கர வாகனங்களுக்கு பூஜைபோட கட்டணமாக ரூ.50ம், கார், வேன்களுக்கு ரூ.200ம், பஸ், லாரிகளுக்கு ரூ.500ம் கட்டணமாக வசூலிக்கப் படுகிறது.

    3) வருடந்தோறும் அனுமன் பிறந்த மூல நட்சத்திர நாளில் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 ஆயிரம் வடை மாலைகள் சாத்தப்படுகிறது.

    4) ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் விநாயகர் சன்னதி உள்ளது. இந்த விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய நாட்களில் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

    5) நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் 2009ம் ஆண்டு நடந்தது.

    6) ஆஞ்சநேயர் செய்த வீர, தீர செயல்கள், சீதையிடம் ஆஞ்சநேயர் பேசியது, ராமரின் இதயத்தில் இடம் பெற்றது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் ஓவியங்களாக வடிவமைத்து வைக்கப்பட்டு உள்ளது.

    7) நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அணிவிக்கப்படும் துளசி, வெற்றிலை மாலைகள் மற்றும் பூமாலைகள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

    8) ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்துதல் மற்றும் முத்தங்கி அலங்காரம் உள்ளிட்ட கட்டளைதாரர் சேவைக்கான முன்பதிவு கோவில் அலுவலகத்தில் நடந்து வருகிறது.

    9) நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தங்கத் தேர் உண்டு. பணம் கட்டியவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் மாலை 6.30 மணிக்கு தங்கத்தேரை இழுக்கலாம்.

    10) தமிழ் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறும் அபிஷேகத்தில் சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    11) மார்கழி மாதம் மூல நட்சத்திரமும், அமாவாசையும் இணைந்து வரும் நாளில் ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

    12) அமாவாசை, பவுர்ணமி, ஆடிப்பூரம், வைகாசி விசாகம், வைகுண்ட ஏகாதசி ஆகிய நாட்களிலும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப் படும்.

    13) ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்ய உயரமான இரும்பு ஏணி உள்ளது.

    14) ஆஞ்சநேயருக்கு சாத்தப்படும் வெண்ணெய் பக்தர்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.

    15) நாமக்கல் நரசிம்மரின் அவதாரங்கள் கோவிலின் மேற்கூரையில் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    16) ஆஞ்சநேயர் கோவில் சன்னதி தினமும் காலை 6.30 மணிக்கு திறக்கப்படுகிறது. 9.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

    17) நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தங்க கவசம் அலங்காரமும் முத்தங்கி அலங்காரமும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த அலங்காரத்தில் ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும்.

    18) நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்டால் நவகிரகங்களை வழிபட்டதற்கு இணையானது என்பதால் நவகிரக தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள ஆஞ்சநேய சுவாமியை வழிபட ஆயிரக்கணக்கில் குவிகின்றனர்.

    19) 18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. வெட்ட வெளியில் மழையிலும், வெயிலிலும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    20) வெளிநாட்டு பக்தர்களையும் வியக்க வைக்கும் இந்த கோவில் 1500 ஆண்டுகள் பழமையானது.

    21) நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் விநாயகர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். அவருக்கு நெய் தீபம் மற்றும் நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

    22) ஆஞ்சநேயர் கோவில்களில் ஆஞ்சநேயருக்கு செந்தூர காப்பு செய்வார்கள். ஆனால் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு செந்தூர காப்பு செய்வது கிடையாது.

    23) நாமக்கல் ஆஞ்சநேயரை முத்தங்கி சேவை அலங்காரத்தில் தரிசிப்பதன் மூலம் ராஜயோகம் கிட்டும்.

    25) நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்று 1 லட்சத்து 8 வடை மாலையாக அணிவிக்கப்படுகிறது.

    26) எந்தவித அலங்காரமும் இல்லாமல் சாதாரண தோற்றத்தில் உள்ள ஆஞ்சநேயரை தரிசித்தால் காரியத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.

    27) இச்சா சக்தி (நாமகிரி அம்மன்), கிரியாசக்தி (நரசிம்மர்), ஞானசக்தி (ஆஞ்சநேயர்) ஆகிய மூன்று சக்திகளும் ஒருங்கே அமையப்பெற்ற கோவில் இது.

    28) ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபட்டால் தடைபட்ட காரியங்கள் இன்றே நடக்கும். வேலை வாய்ப்பு, பதவி உயர்வு கிட்டும்.

    29) தமிழக அரசின் அன்னதான திட்டத்தில் நாள் ஒன்றுக்கு அன்னதானம் வழங்க ரூ.2500, ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் அன்னதானம் வழங்க வைப்பு நிதியாக ரூ.25 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    30) ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் நித்திய கட்டளை பூஜையில் கலந்துகொள்ள வைப்பு நிதியில் ரூ.5 ஆயிரம் செலுத்தி அதில் வரும் வட்டியை கொண்டு நித்திய கட்டளை பூஜை நடத்தப்படுகிறது.

    • பீடத்திலிருந்து 22அடியும், பாதத்திலிருந்து 18 அடியும் உயரம் கொண்ட, ஆஞ்சநேயர் முகம் தேஜஸ் ஔியில் மிளிர்கிறது.
    • ஒரே கல்லில் செதுக்கப் பட்ட ஆஞ்சநேயர் சிலை பிரம்மாண்டத்தின் பிம்பமாக நிற்கிறது.

    நாமக்கல் ஆஞ்சநேயர் வானமே கூரையாக திறந்த வெளியில், தொழுத கைகளுடனும், இடுப்பில் கத்தியோடும் ஆஜானுபாகுவாக நின்று சிந்தையை ஈர்க்கும் ஆஞ்சநேயர் சிற்பம், ஒரே கல்லில் செதுக்கப்பட்டது என்பது தனிச்சிறப்பு.

    ஒரே கல்லில் செதுக்கப் பட்ட ஆஞ்சநேயர் சிலை பிரம்மாண்டத்தின் பிம்பமாக நிற்கிறது.

    பீடத்திலிருந்து 22அடியும், பாதத்திலிருந்து 18 அடியும் உயரம் கொண்ட, ஆஞ்சநேயர் முகம் அழகிய தேஜஸ் ஒளியில் மிளிர்கிறது.

    காற்று, மழை, வெயில், புயல் என்று இயற்கை சீற்றங்கள் அனைத்தையும் தாங்கிக் கொண்டு திறந்த வெளியில் தொழுத கைகளோடு நின்று அருட்பாலிக்கிறார் நாமக்கல் ஆஞ்சநேயர்.

    லோகநாயகனான ஸ்ரீநரசிம்மரே (எதிரில் உள்ள ஆலயம்) கிரி உருவில் மேல் விதானம் இல்லாமல் இருப்பதால் தாசனான எனக்கும் விதானம் தேவையில்லை என்று ஆஞ்சநேயர் திறந்த வெளியில் கோபுரம் இல்லாமல் நின்றிருக்கிறார் என்பதும், நாமக்கல் ஆஞ்சநேயர் நாளுக்கு நாள், வளரும் அபூர்வ சக்தி கொண்டவர்.

    அதனால் அவரை ஒரு கட்டுமானத்திற்குள் வைக்காமல் காற்று வெளியில் பிரதிஷ்டை செய்துள்ளனர் என்பதும் பக்தர்களின் கூற்று.

    • ராமர் நலமாக உள்ள விபரங்களைச் சீதையிடம் அனுமன் தெரிவித்தார்.
    • ஆனால் அப்போது சீதைக்கு அட்சதை போன்ற பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.

    இலங்கையில் அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதையைக் கண்டு பிடிக்க அனுமன் புறப்பட்டுச் சென்றார்.

    நீண்ட தேடுதலுக்குப் பிறகு சீதை அசோக வனத்தில் இருப்பதை அவர் கண்டு பிடித்தார்.

    ராமர் நலமாக உள்ள விபரங்களைச் சீதையிடம் அனுமன் தெரிவித்தார்.

    பிறகு ராமர் தந்த மோதிரத்தை சீதா தேவியிடம் வழங்கினார் ஆஞ்சநேயர். சீதாதேவி மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

    பணிவுடன் வணங்கி நிற்கும் ஆஞ்சநேயருக்கு அட்சதை போட்டு ஆசீர்வதிக்க வேண்டும் என்று சீதாதேவி விரும்பினாள்.

    ஆனால் அப்போது சீதைக்கு அட்சதை போன்ற பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.

    இதனால் அருகில் இருந்த வெற்றிலைக் கொடியில் இருந்து அதன் இலைகளைப் பறித்து, அதை அனுமன் மீது தூவி, மனதார ஆசீர்வதித்தாள்.

    அந்த வெற்றிலைகளை மாலையாகவும் கட்டி அனுமனுக்குப் போட்டு மகிழ்ச்சியடைந்தாள்.

    சீதா பிராட்டியார் கையால் கிடைத்த இந்த வெகுமதியை ஸ்ரீ ஆஞ்சநேயரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.

    அன்று முதல் அனுமனுக்கு வெற்றிலை மாலை போடும் வழக்கம் ஏற்பட்டது.

    பொதுவாக, அனைத்து தெய்வங்களுக்கும் வெற்றிலையை சமர்ப்பிக்கும் வழக்கம் உள்ளது.

    என்றாலும் அனுமனுக்கு நாம் படைக்கும் வெற்றிலை சிறப்புக்குரியதாக மாறுகிறது.

    அனுமனுக்கு வெற்றிலை மாலை சமர்ப்பிக்கும் போது வெற்றிலையின் எண்ணிக்கை 2, 4, 6, 8 என்பதாக இரட்டைப்படை எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.

    வெற்றிலையுடன் வைக்கப்படும் பாக்கின் எண்ணிக்கையும் 1, 3, 5, 7 என ஒற்றைப்படை எண்ணிக்கையில் அமைய வேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம்.

    ஆகவே, ஸ்ரீஆஞ்சநேயருக்கு வெற்றிலையை மாலையாகக் கட்டி போடும் போது, இவ்வாறே இரண்டு வெற்றிலை ஒரு பாக்கு அல்லது நான்கு வெற்றிலை மூன்று பாக்கு என்பதாக இருக்க வேண்டும்.

    மேலும் வெற்றிலையை நரம்பில்லாத முன்பகுதி வெளியில் தெரியுமாறு மடித்து, வாழை நார் போன்றவற்றைக் கொண்டு, மாலையாகத் தொடுத்துப் போடலாம்.

    ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபட்டால் தடைபட்ட காரியங்கள் இனிதே நடக்கும், நல்ல வேலை கிடைக்கும்.

    பதவி உயர்வும் கிடைக்கப்பெறும். மேலும் கடன்தொல்லையும் நீங்கும்.

    இதனால் பக்தர்கள் நேர்த்திக்கடனாக நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலையும் அணிவிக்கிறார்கள்.

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், கரூர் மாவட்டம் குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிலை சாகுபடி செய்கிறார்கள்.

    வெற்றிலை விவசாயிகள் தங்களுடைய பயிரில் நோய் வராமல் காத்து நன்றாக வெற்றிலையை அறுவடை செய்தால் வெற்றிலை மாலையை காணிக்கையாக செலுத்துகிறார்கள்.

    • ஒரு காலத்தில் நீர் பெருக்கெடுத்து ஓடி மக்களின் தாகம் தீர்த்தது இந்த குளம்.
    • கமலாலய குளத்தில் ஆஞ்சநேயர் பாதம் அமைந்துள்ளது.

    ஒரு காலத்தில் நீர் பெருக்கெடுத்து ஓடி மக்களின் தாகம் தீர்த்தது இந்த குளம்.

    கமலாலய குளத்திற்கும், நாமகிரித் தாயாருக்கும், நரசிம்ம மூர்த்திக்கும், ஆஞ்சநேயருக்குமான பிணைப்பு வியப்புக்குரியது.

    நாமகிரித் தாயாரும், ஆஞ்சநேயரும் நீராடி வழிபட்ட கமலாலயக் குளத்திற்குள் 7 கிணறுகள் இருப்பது கூடுதல் சிறப்பு.

    ஆஞ்சநேயர் பாதம்

    கமலாலய குளத்தில் ஆஞ்சநேயர் பாதம் அமைந்துள்ளது.

    குளத்தில் தண்ணீர் வற்றும் சமயத்தில் அதை காண முடியும்.


    • நாமக்கல் நகரின் மையப்பகுதியில் ஏறத்தாழ 136 ஏக்கர் பரப்பளவில் ஒரே கல்லினால் ஆன பெரிய மலை உள்ளது.
    • சாலக்கிராமம் என்பது விஷ்ணுவுக்கு உகந்த தெய்வீக கல் ஆகும்.

    லட்சுமி கடாட்சம் அருளும் கமலாலய குளம்

    நாமக்கல் நகரின் மையப்பகுதியில் ஏறத்தாழ 136 ஏக்கர் பரப்பளவில் ஒரே கல்லினால் ஆன பெரிய மலை உள்ளது.

    இந்த மலையின் உயரம் 75 மீட்டர் (246 அடி) ஆகும்.

    சுற்றிலும், கமலாலய குளம், ஜெட்டி குளம், திருப்பாகுளம் ஆகியவை உள்ளன.

    கமலாலய குளம் புராண கால சிறப்புகளை உடையது.

    ராமாயண காலத்தில் ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை எடுத்து கொண்டு இலங்கைக்கு செல்லும் வழியில், நாமக்கல் வந்தார்.

    அப்போது அவருக்கு, சாலக்கிராமம் கிடைக்க பெற்றார்.

    சாலக்கிராமம் என்பது விஷ்ணுவுக்கு உகந்த தெய்வீக கல் ஆகும்.

    அப்போது 'உனக்கு கிடைக்க பெற்றதை எந்த இடத்தில் வைக்கிறாயோ,

    அந்த இடம் மலையாக மாறிவிடும்' என்ற அசரீரி வார்த்தை கேட்டது.

    இந்த தலத்திற்கு ஆஞ்சநேயர் வந்தபோது, சந்தியாவந்தனம் செய்வதற்காக கமலாலய குளத்தில் இறங்கினார்.

    அப்போது சாலக்கிராமத்தை எப்படி கீழே வைப்பது என்று யோசித்த போது, அங்கு மகாலட்சுமி தவம் செய்து கொண்டு இருப்பதை கண்டார்.

    மகாலட்சுமியிடம் தான் தியானம் செய்யும் வரை சாலக்கிராமத்தை கீழே வைத்து விடாமல் கையிலேயே வைத்திருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    நேரம் அதிகமாகவே ஆஞ்சநேயர் மறந்து விட்டார் என நினைத்து மகாலட்சுமி சாலக்கிராமத்தை கீழே வைத்து விட்டார்.

    சந்தியா வந்தனம் முடித்து வந்து பார்த்த போது தனக்கு முன்பு பெரிய மலை உருவாகி இருப்பதை ஆஞ்சநேயர் கண்டார் என்பதும், அந்த மலையே நாமகிரி மலை என்றும் இதன் தல வரலாறு கூறுகிறது.

    மலை அடிவாரத்தில் மகாலட்சுமி வாசம் செய்யும் குளம்தான் கமலாலய குளம்.

    கமலம் என்றல் தாமரை என பொருள். தாமரையில் அமர்ந்தபடி லட்சுமி அருள்பாலிக்கும் குளம் என்பதால் இதை கமலாலய குளம் என்கின்றனர்.

    இந்த குளத்து தீர்த்தம் புண்ணியமிக்கது. லட்சுமி கடாட்சம் அருளக்கூடியது என்கின்றனர் ஆன்மீகவாதிகள்.

    எனவே இந்த தீர்த்த குளத்து நீரை வீடுகளில் தெளித்தால் லட்சுமியின் அருள் கிடைக்கும் என்கிறார்கள்.

    ஒவ்வொரு வருடமும் இத்திருக்கோவில்களில் இவ்விழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    * தமிழ் மாதம் முதல் ஞாயிறு சிறப்பு வடைமாலை அபிஷேகம் பங்குனித் தேர்த்திருவிழா

    * தை வெள்ளி

    * வைகுண்ட ஏகாதசி

    * ஆஞ்சநேயர் ஜெயந்தி

    * நவராத்திரி விழா

    * நரசிம்ம ஜெயந்தி

    * கிருஷ்ணர் ஜெயந்தி

    * ஆடி வெள்ளி

    * ஆவணி அவிட்டம்

    * புரட்டாசி ஐந்து சனிக்கிழமை

    * யுகாதி பண்டிகை

    * திருக்கார்த்திகை தீபம்

    ஒவ்வொரு வருடமும் இத்திருக்கோவில்களில் இவ்விழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    • ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதி-காலை 6.30 முதல் 1.30 மணி
    • மாலை 4.30 முதல் 8.30 மணி

    ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதி

    காலை 6.30 முதல் 1.30 மணி

    மாலை 4.30 முதல் 8.30 மணி

    ஸ்ரீ நரசிம்மர் சன்னதி

    காலை 6.30 முதல்1.30 மணி

    மாலை 4.30 முதல் 8.30 மணி

    ஸ்ரீஅரங்கர் சன்னதி

    காலை 9.00 முதல் முதல் 11.00 மணி

    மாலை 5.00 முதல் 7.00 மணி

    • நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் சன்னதி தினமும் காலை 6.30 மணிக்கு திறக்கப்படுகிறது.
    • பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்படுகிறது.

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் சன்னதி தினமும் காலை 6.30 மணிக்கு திறக்கப்படுகிறது.

    9.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

    அதன் பிறகு 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஆஞ்சநேயர் வடை மாலையுடன் காட்சி அளிப்பார்.

    அதன்பிறகு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.

    முதலில் நல்லெண்ணை காப்பு செய்யப்படுகிறது. பிறகு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யப்படுகிறது.

    பின்னர் சீயக்காய், பால், தயிர், மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், சந்தனம், சொர்ண அபிஷேகம் ஆகிய அபிஷேகங்கள் நடத்தப்படுகிறது.

    ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசி பழம், மாதுளம் பழம், திராட்சை பழம் ஆகியவற்றை கொண்டும் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்படுகிறது.

    அதன்பிறகு உச்சிகால பூஜை நடத்தப்படுகிறது.

    • நாமக்கல்லில் வாயு மைந்தன் அனுமான் வானமே கூரையாக கொண்டு அருள்பாலிக்கிறார்.
    • நாமகிரி தாயார் கோவிலுக்கு பின்னால் உள்ள குடவரைக் கோவில்தான் நரசிம்மர் கோவில் ஆகும்.

    நாமக்கல்லில் வாயு மைந்தன் அனுமான் வானமே கூரையாக கொண்டு அருள்பாலிக்கிறார்.

    இவரது சன்னதியில் கோபுரம், மேற்கூரை கிடையாது...

    சிரஞ்சீவியான ஆஞ்சநேயர் வாயு மைந்தன் என்பதால் காற்று போல எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்பதே இதன் தத்துவமாகும்.

    இவருக்கு கோபுரம் கிடையாது.

    வெயிலிலும், மழையிலும், காற்றிலும் பொலிவு மாறாமல் காட்சி அளிக்கிறார்.

    நரசிம்மர் நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரில்தான் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.

    எதிரில் உள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் ஆஞ்சநேயர் காட்சி தருகிறார்.

    நரசிம்மருக்கு கோபுரம் இல்லை. அவர் அமர்ந்திருக்கும் இடம் மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டது.

    அவருக்கு கோபுரம் இல்லாததால், அவரது தாசனான தனக்கும் கோபுரம் தேவையில்லை என்று ஆஞ்சநேயர் கூறியதாக வரலாற்றுத் தகவல் மூலம் தெரிய வருகிறது.

    நாமகிரி தாயார் கோவிலுக்கு பின்னால் உள்ள குடவரைக் கோவில்தான் நரசிம்மர் கோவில் ஆகும்.

    மலையின் மேற்கு புறம் உள்ள மலைக்கோவிலில் இந்த நரசிம்மர் நாமகிரி தாயார் கோவில் உள்ளது.

    நரசிம்மரின் சிலை மலையைக் குடைந்து வடிக்கப்பட்டு உள்ளது.

    நாமகிரி தாயாரின் கோவில் மலையைக் குடைந்து செய்யப்படாமல் தனியாக உள்ளது. இது ஒரு குடவரைக் கோவில் ஆகும்.

    பல்லவர் காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டது. மலையின் கிழக்கு புறம் அரங்கநாதன் கோவில் உள்ளது.

    இங்கு 5 தலையுடைய பாம்பரசன் கார்கோடகன் மீது படுத்தவாறு திருவரங்கன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    ராமச்சந்திர நாயக்கரால் கட்டப்பட்ட திப்பு சுல்தான் பயன்படுத்திய நாமக்கல் மலைக்கோட்டை தற்போது தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    இதன்மீது ஏறுவதற்கு மலையின் தென்மேற்கு பகுதியில் சிறிய படிக்கட்டு உள்ளது.

    பாறையை செதுக்கி இந்த படிகள் உருவாக்கப்பட்டு உள்ளது.

    நாமக்கல் மலைக்கோட்டையின் கிழக்கில் நேரு பூங்காவும், தெற்கில் செலம்ப கவுண்டர் பூங்காவும் உள்ளது.

    • பிரசாதம் என்பதால் பக்தர்களும் இதனை மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனர்.
    • 20 டிகிரி செல்சியஸ் அளவில் சுவாமி சிலையை குளிர வைக்க வேண்டும்.

    ஒவ்வொரு ஆண்டும் மார்கழி, தை மாதங்களில் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாத்துப்படி அலங்காரம் நடைபெறும்.

    பிரசாதம் என்பதால் பக்தர்களும் இதனை மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனர்.

    இதுபற்றி கோவில் அர்ச்சகர்கள் கூறுகையில், ஆஞ்சநேயருக்கான வெண்ணெய் அலங்காரம் மேற்கொள்ள 10 அர்ச்சகர்கள் பணியில் உள்ளோம்.

    பிற்பகல் 3 மணிக்கு தொடங்கினால் இரவு 7 மணியாகிவிடும்.

    20 டிகிரி செல்சியஸ் அளவில் சுவாமி சிலையை குளிர வைக்க வேண்டும்.

    இதற்காக ஒரு மணிநேரத்திற்கும் மேலாக தொடர்ந்துசிலை மீது தண்ணீரை ஊற்றிக் கொண்டே இருப்போம்.

    குளிர்காலத்தில் மட்டுமே இதனை செய்ய முடியும்.

    அதன்பிறகு 110 கிலோ வெண்ணெய்யை கொஞ்சம், கொஞ்சமாக சாத்தி கட்டளை தாரர்கள் விரும்பும் வகையில் வெண்ணெய் சாத்துப்படி அலங்காரம் செய்யப்படும்.

    குறைந்தபட்சம் 4 மணி நேரம் மட்டுமே வெண்ணெய் அலங்காரம் சிலையில் இருக்கும்.

    பின்னர் உதிரத் தொடங்கி விடும். 110 கிலோவில் சுமார் 10 கிலோ வெண்ணெய் வீணாகி விடும்.

    கட்டளை தாரர்களுக்கு 50 கிலோ, அர்ச்சகர்களுக்கு 40 கிலோ வெண்ணெய் வழங்கப்படும்.

    10 கிலோ வெண்ணெய் கோவில் நிர்வாகம் சார்பில் விற்கப்படும்.

    சுவாமிக்கு சாத்தப்பட்ட வெண்ணெய்யை நெய்யாக உருக்கி வீட்டில் பயன்படுத்தினால் அனைத்து வளமும் கிடைக்கும் என்றனர்.

    ×