என் மலர்
இமாச்சல பிரதேசம்
- பஸ் திடீரென சாலையை விட்டு விலகி அருகில் உள்ள 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
- இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 14 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
சிம்லா:
இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் இருந்து குப்வி என்ற இடத்திற்கு ராஜ்கார் வழியாக தனியார் பஸ் நேற்று சென்றது.
இந்த பஸ் சிர்மோர் மாவட்டம், ஹரிபுர்தார் கிராமத்திற்கு அருகே நேற்று வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பஸ் திடீரென சாலையை விட்டு விலகி அருகில் உள்ள 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது.
இந்த விபத்தில் 14 பேர் பலியானார்கள். 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன், விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சமும், படுகாயம் அடைந்தோருக்கு 50 ஆயிரமும் நிவாரணம் அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.
மாநில முதல் மந்திரி சுக்விந்தர் சிங் சுகுவும் பலியானோர் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
- பகைமையை மறந்து அமைதியாக வாழ வேண்டும் என்றும் ஒருவர் விரும்புவது எந்த விதத்திலும் தேசத்துரோகம் ஆகாது.
- மதப் பாகுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், போர் வேண்டாம் என்று பேசுவது அமைதிக்கான குரலே தவிர, நாட்டைத் துண்டாடும் செயல் அல்ல.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பகைமை முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புவது தேசத்துரோகமாகக் கருதப்படாது என இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பேஸ்புக்கில் பாகிஸ்தான் கொடி மற்றும் தடை செய்யப்பட்ட ஆயுதங்களின் படங்களை பதிவேற்றியதாகக் கூறி அபிஷேக் சிங் பரத்வாஜ் என்பவர் மீது இமாச்சலப் பிரதேச போலீசார் தேசத்துரோக வழக்குப் பதிவு செய்தனர்.
அவர் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை விமர்சித்ததாகவும், பாகிஸ்தான் நபருடன் உரையாடியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. கடந்த மே மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கில் தற்போது அபிஷேக் சிங்கிற்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்போது பேசிய நீதிபதிகள், "இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் வீணானது என்றும், இரு நாடுகளும் பகைமையை மறந்து அமைதியாக வாழ வேண்டும் என்றும் ஒருவர் விரும்புவது எந்த விதத்திலும் தேசத்துரோகம் ஆகாது.
குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சட்டவிரோதமான பொருட்கள் எதுவும் சிக்கவில்லை.
மேலும், அவரது சமூக வலைதளப் பதிவுகளில் இந்திய அரசுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் அல்லது வன்முறையைத் தூண்டும் கருத்துக்கள் எதுவும் இல்லை.
மதப் பாகுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், போர் வேண்டாம் என்று பேசுவது அமைதிக்கான குரலே தவிர, நாட்டைத் துண்டாடும் செயல் அல்ல" என்று தெரிவித்தனர்.
- மாணவி இறப்பதற்கு முன்பு கண்ணீர் மல்க பேசிய வீடியோ ஒன்று நேற்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- புவியியல் துறை உதவிப் பேராசிரியர் அசோக் குமார் என்னை தொடர்ந்து பாலியல் ரீதியாகவும் மன ரீதியாவும் துன்புறுத்தினார்.
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்த தலித் மாணவி, பேராசிரியர் மற்றும் சீனியர் மாணவிகளின் துன்புறுத்தலால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இமாச்சல பிரதேசம் தர்மசாலாவில் உள்ள அரசு கல்லூரியில் பயின்ற 19 வயது தலித் மாணவி, ராகிங், பாலியல் துன்புறுத்தல் மற்றும் மன உளைச்சலால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த டிசம்பர் 26ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முன்னதாக அந்த மாணவி இறப்பதற்கு முன்பு கண்ணீர் மல்க பேசிய வீடியோ ஒன்று நேற்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி தனது மரணத்திற்கு முன் வெளியிட்ட வீடியோவில், புவியியல் துறை உதவிப் பேராசிரியர் அசோக் குமார் என்னை தொடர்ந்து பாலியல் ரீதியாகவும் மன ரீதியாவும் துன்புறுத்தினார்.
கடந்த செப்டம்பர் 18ம் தேதி ஹர்ஷிதா, ஆக்ரிதி, கோமோலிகா ஆகிய மூன்று சீனியர் மாணவிகள் என்னை ராக்கிங் செய்து கொடூரமாக தாக்கினர்.
இதுபற்றி வெளியே சொன்னால் விளைவுகள் மோசமாக இருக்கும் என மிரட்டினர்' என்று தெரிவித்திரிருந்தார்.
மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையிலும், மாணவி பேசிய வீடியோவின் அடிப்படையிலும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
உதவிப் பேராசிரியர் அசோக் குமார் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் ஜாமீன் பெற்று வெளியில் உள்ளார்.
முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவின் உத்தரவைத் தொடர்ந்து கல்வித்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
மூன்று சீனியர் மாணவிகள் மீது ராகிங் தடுப்புச் சட்டம் மற்றும் தாக்குதல் நடத்தியதற்கான வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க பல்கலைக்கழக மானியக் குழு (UGC) தானாக முன்வந்து 5 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.
- இதனைத் தட்டிக்கேட்ட நோயாளி, மரியாதையாகப் பேசுங்கள் என்று மருத்துவரை கடிந்துள்ளார்.
- அங்கிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்தனர்.
இமாச்சல பிரதேசத்தில் நோயாளி ஒருவரை மருத்துவர் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஷிம்லா மாவட்டத்தின் குப்வி பகுதியைச் சேர்ந்த நோயாளி ஒருவர், சுவாசக் கோளாறு காரணமாகச் ஞாயிற்றுக்கிழமை ஷிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவரிடம் தனது உடல்நிலை குறித்து விளக்கியுள்ளார்.
அந்த சமயத்தில், மருத்துவர் மிகவும் அநாகரீகமாக பேசியதாக தெரிகிறது.
இதனைத் தட்டிக்கேட்ட நோயாளி, மரியாதையாகப் பேசுங்கள் என்று மருத்துவரை கடிந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மருத்துவர், நோயாளியைத் தாக்கியுள்ளார். இதை அங்கிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து வெளியிட்ட நிலையில் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த நோயாளியின் உறவினர்கள், மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நோயாளி மீது தாக்குதல் நடத்திய மருத்துவரை உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் ஹர்திக் பாண்ட்யா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
- இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்ட்யா 100 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
தர்மசாலா:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 தொடரின் 3-வது போட்டி தர்மசாலாவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 117 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. கேப்டன் மார்க்ரம் 61 ரன்கள் அடித்தார்.
இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய இந்தியா 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் எடுத்த ஒரு விக்கெட்டையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்ட்யா இதுவரை வீழ்த்திய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது. இவர் ஏற்கனவே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1,939 ரன்களும் அடித்துள்ளார்.
இந்நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1,000+ ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் என்ற உலக சாதனையை ஹர்திக் பாண்ட்யா படைத்துள்ளார்.
இதற்கு முன் சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களான ஷகிப் அல் ஹசன், முகமது நபி மற்றும் சிக்கந்தர் ராசா ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.
டி20 கிரிக்கெட்டில் 1,000+ ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
மேலும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட் வீழ்த்திய 3-வது இந்திய வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.
- டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
- அதன்படி முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தர்மசாலா:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது டி போட்டி இமாசலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் இன்று இரவு நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவரில் 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேப்டன் மார்கிரம் தனி ஆளாகப் போராடி அரை சதம் கடந்து 61 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி சார்பில் வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
இதையடுத்து, 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடி 18 பந்தில் 35 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு அபிஷேக் சர்மா- சுப்மன் கில் ஜோடி 60 ரன்கள் சேர்த்தது.
அடுத்து இறங்கிய திலக் வர்மா நிதானமாக ஆடினார். சுப்மன் கில் 28 ரன்னில் வெளியேறினார். சூர்யகுமார் யாதவ் 12 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், இந்திய அணி 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன் டி20 தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது.
- இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
- இரு போட்டிகளின் முடிவில் டி20 தொடர் 1-1 என சமனில் உள்ளது.
தர்மசாலா:
இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்தியாவும், 2வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வென்றன. இதனால் டி20 தொடர் 1-1 என சமனில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி தர்மசாலாவில் இன்று நடைபெற உள்ளது.
கேப்டன் சூர்யகுமார் கடந்த 17 சர்வதேச டி20 போட்டியில் 201 ரன்கள் எடுத்துள்ளார். கேப்டன் என்பதால் நீக்க முடியாது. மீண்டும் 3வது இடத்தில் களமிறங்கி விளாச வேண்டும்.
துணை கேப்டன் சுப்மன் கில் இடம் தான் கேள்விக்குறியாக உள்ளது. கடந்த 14 போட்டியில் 263 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
சஞ்சு சாம்சனை பின்வரிசைக்கு அனுப்பிவிட்டு, தொடக்க வீரர் வாய்ப்பை சுப்மன் கில்லுக்கு கொடுத்தனர். தற்போது இவரும் சோபிக்கவில்லை.
அபிஷேக் சர்மா அவசரப்படக் கூடாது. கடந்த போட்டியில் அரைசதம் விளாசிய திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா நல்ல பார்மில் இருப்பது பலம். கடைசி கட்டத்தில் ஷிவம் துபே கைகொடுக்க வேண்டும்.
வேகப்பந்து வீச்சில் பும்ரா தடுமாறுகிறார். அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக பாண்ட்யாவை பயன்படுத்தலாம். குல்தீப் யாதவை சேர்க்கலாம்.
தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் மார்க்ரம், குயின்டன் டி காக், பிரேவிஸ், பெரேரா, மில்லர், யான்சென் என அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
நோர்ஜியா, யான்சென், லுங்கி நிகிடி, பார்ட்மென், சிபாம்லா போன்ற வேகங்களுக்கு சாதகம். சுழலில் கைகொடுக்க மகராஜ் உள்ளார்.
இரு அணிகளும் வெல்ல போட்டி போடும் என்பதால் ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்கும் என ரசிகர்கள் தெரிவித்தனர்.
- வானில் வட்டமடித்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
- இவர் இமாச்சல பிரதேசத்தில் கான்ங்ரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.
துபாயில் நேற்று நடைபெற்ற விமான கண்காட்சியின்போது வானில் பறந்த இந்திய போர் விமானம் தேஜஸ் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. வானில் வட்டமடித்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
விமான கண்காட்சியின் போது தேஜஸ் விமானத்தை இயக்கிய விமானி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அறிவித்தது. கண் இமைக்கும் நேரத்தில் தேஜஸ் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்ததால் அதனை இயக்கிய விமானி தப்ப முடியாமல் போனது.
சர்வதேச விமான கண்காட்சிக்காக துபாய் சென்ற தேஜஸ் விமானம் கோவை சூலூரில் இருந்து சென்றுள்ளது.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தது, விமானப்படை விங் கமாண்டர் நமான் சயால் என்பது தெரியவந்துள்ளது. இவர் இமாச்சல பிரதேசத்தில் கான்ங்ரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.
அவரின் மறைவுக்கு இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், "நாடு ஒரு துணிச்சலான, அர்ப்பணிப்பு கொண்ட விமானியை இழந்துவிட்டது. துயரமடைந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமன் சியால் ஜியின் தைரியம் மற்றும் தேச சேவைக்கான அர்ப்பணிப்புக்கு எனது மனமார்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, துபாய் ஏர் ஷோவில் நடந்த விபத்துக்கான காரணம் குறித்து விமானப்படை விசாரணை நடத்தும் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
- காவல்துறை இந்த புகாரை விசாரித்து முடித்து வைத்தது.
- மாநில மகளிர் உரிமை ஆணையம் காவல் கண்காணிப்பாளரிடம் இந்த விவகாரம் குறித்து அறிக்கை கோரியுள்ளது.
இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண், தன்னை சிறுவயதில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக பாஜக எம்எல்ஏ ஹன்ஸ் ராஜ் மீது புகார் அளித்த நிலையில், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மூன்றாவது முறையாக எம்எல்ஏவாக உள்ள ஹன்ஸ்ராஜ் இமாச்சலப் பிரதேச சட்டசபையின் முன்னாள் துணை சபாநாயகரும் ஆவார்.
ஹன்ஸ்ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் கடந்த ஆண்டு தன்னை சிறு வயதில் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புகார் அளித்தார். காவல்துறை இந்த புகாரை விசாரித்து முடித்து வைத்தது.
இந்நிலையில் கடந்த நவம்பர் 2ஆம் தேதி பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்ட அப்பெண், எம்எல்ஏ தனது குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுப்பதாகவும் மீண்டும் புகார் அளிக்காமல் இருக்கும்படியும் அழுத்தம் கொடுப்பதாக குற்றம் சாட்டினார்.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் எம்எல்ஏவின் தனிப்பட்ட உதவியாளர் மற்றும் நெருங்கிய கூட்டாளி மீது கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார் எம்எல்ஏ ஹன்ஸ் ராஜ் மீதே போக்ஸோ வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எம்எல்ஏ ஹன்ஸ் ராஜ் இந்த குற்றச்சாட்டுகளை அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த பெண் அப்பகுதியில் மத நல்லிணக்கத்தைக் கெடுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மாநில மகளிர் உரிமை ஆணையம் காவல் கண்காணிப்பாளரிடம் இந்த விவகாரம் குறித்து அறிக்கை கோரியுள்ளது.
- பாலக்வா பஞ்சாயத்தில் கமர்பூர் என்ற கிராமம் அமைத்துள்ளது.
- கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு வயலில் சிறுத்தை ஒன்று புகுந்தது.
இமாச்சலப் பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் பாலக்வா பஞ்சாயத்தில் கமர்பூர் என்ற கிராமம் அமைத்துள்ளது.
அண்மையில் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு வயலில் சிறுத்தை ஒன்று புகுந்தது.
அப்போது கிராம வாசிகள் சிறுத்தையைச் சுற்றி வளைத்து குச்சிகள் மற்றும் பிற ஆயுதங்களால் தாக்கினர்.
சிறுத்தை திரும்பி தாக்கியதில் 4 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவரின் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதன்பின் சிறுத்தை அங்கிருந்து தப்பிச் சென்றது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
- நிலச்சரிவில் சிக்கிய ஆம்னி பஸ் முழுவதையும் மண் மூடியது.
- மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சிம்லா:
இமாச்சல பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டம் மொரோடன் நகரில் இருந்து குலு மாவட்டம் கலல் நகருக்கு இன்று மாலை ஆம்னி பஸ் சென்றுகொண்டிருந்தது. அதில் 20-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
பிலாஸ்பூரின் பாலு நகரில் உள்ள பாலம் அருகே மலைப்பாங்கான பகுதியில் பஸ் சென்றுகொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் ஆம்னி பஸ் சிக்கிக்கொண்டது. பாறைகள் விழுந்து பஸ் முழுவதும் மண் மூடியது.
தகவலறிந்த மீட்புக் குழுவினர் விரைந்து சென்றனர். அவர்கள் நிலச்சரிவால் மண்ணுக்குள் சிக்கிய பஸ்சில் இருந்தவர்களை மீட்க முயற்சித்தனர்.
இந்த சம்பவத்தில் பஸ்சில் பயணம் செய்த 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
- அட்டர் சிங் கையெழுத்திட்ட அந்த காசோலையில் 7,616 ரூபாய் என எழுதப்பட்டது.
- அந்த காசோலையை யாரோ புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
சிம்லா:
இமாச்சல பிரதேச மாநிலத்தில் பள்ளி தாளாளர் ஒருவர் காசோலையில் 7,616 ரூபாய் என்பதை ஆங்கில எழுத்து வடிவில் எழுதியது சமூக வலைதளத்தில் வைரலானது.
அரசு பள்ளி தாளளர் கையெழுத்திடப்பட்ட காசோலையில் எழுதப்பட்டிருந்தது அனைவரையும் வினோதத்தில் ஆழ்த்தியுள்ளது.
அட்டர் சிங் கையெழுத்திட்ட அந்த காசோலையில் 7,616 ரூபாய் என எழுதப்பட்டுள்ளது. அதற்கு ஆங்கிலத்தில் seven thousand six hundred and sixteen என்பதற்குப் பதிலாக, Saven Thursday six harendra sixty Rupees Only என எழுதியுள்ளார்.
Seven-க்குப் பதிலாக saven எனவும், Thousand என்பதற்கு பதிலாக Thursday எனவும் எழுதப்பட்டுள்ளது. hundred என்பதற்கு பதிலாக, harendra என எழுதப்பட்டுள்ளது.
அந்தக் காசோலையை யாரோ புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு விட்டனர். இதனால் அட்டர்சிங், நெட்டிசன்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளானார்.
இத்தகவல் பள்ளி கல்வி இயக்குனரகத்தின் கவனத்துக்குச் சென்றது. பள்ளி முதல்வர், ஆசிரியர் அட்டர் சிங் ஆகியோரிடம் இயக்குனரகம் விரிவான விளக்கம் கேட்டது. பள்ளி கல்வி இயக்குனர் ஆஷிஷ் கோஹ்லி முன்பு ஆஜராகுமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
இந்நிலையில், நேரில் ஆஜரான அட்டர் சிங் கவனக்குறைவால் தெரியாமல் தவறு செய்து விட்டதாக ஒப்புக்கொண்டார். ஆனால் அவரது விளக்கத்தை இயக்குனர் ஏற்றுக்கொள்ளவில்லை. அட்டர் சிங்கை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.






