search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "snow"

    • குல்மார்க்கில் உள்ள பைன் பேலஸ் பிளாட்டினம் என்கிற ஓட்டலில் தீ விபத்து.
    • தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாக போலீசார் தகவல்.

    வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குல்மார்க்கில் உள்ள ஓட்டல் ஒன்றில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    குல்மார்க்கில் உள்ள பைன் பேலஸ் பிளாட்டினம் என்கிற ஓட்டலில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்த வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே, தீ கொழுந்துவிட்டு எரிவதை கண்ட அங்கிருந்த மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பனிக்கட்டிகளை தூக்கி எரிந்து தீயை அணைக்க முயன்றனர். இதன் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    இந்நிலையில், தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • உறைபனியால் வாகனங்களை இயக்குவதிலும் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் இருந்தது.
    • பல இடங்களில் காஷ்மீரை போன்று பனி கட்டி, கட்டியா படர்ந்து காணப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உறைபனியின் தாக்கம் அதிகமாக காணப்படும்.

    ஆனால் இந்த ஆண்டு சற்று தாமதமாக ஜனவரி மாத தொடக்கத்திலேயே உறைபனியின் தாக்கம் ஆரம்பித்தது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலுமே உறைபனியின் தாக்கம் உள்ளது. உறைபனியுடன் அவ்வப்போது நீர்ப்பனியும் சேர்ந்து கொட்டி வந்தது.

    இதுதவிர காலை நேரங்களிலேயே மேக கூட்டங்கள் அதிகளவில் திரண்டு காலை 11 மணி வரை பகல் நேரமே இரவாக காட்சியளிக்கிறது. அதன்பிறகு குறைந்து வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

    மாலையில் மீண்டும் உறைபனியின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விடுகிறது. இப்படி தினந்தோறும் காணப்படும் உறைபனியால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஊட்டியில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை கடுமையான உறைபனி காணப்பட்டது. காந்தல், தலைகுந்தா, பிங்கர் போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    உறைபனி காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள புல்தரைகள், குதிரை பந்தய சாலையில் உள்ள புல் தரைகள் மற்றும் சாலையோரங்களில் உள்ள செடிகள், கொடிகள், புல் தரைகள் மீதும் உறைபனி படர்ந்து காணப்பட்டது.

    இதனால் அந்த பகுதிகள் முழுவதும் புற்கள் இருந்த தடமே மறைந்து வெள்ளை கம்பளிஆடை போர்த்தியது போன்று வெண்மை நிறத்தில் காட்சியளித்தன. இதுதவிர வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள், கார்கள் மீதும் உறைபனி கொட்டியிருந்தது. இதனை வாகன உரிமையாளர்கள் அகற்றினர். உறைபனியால் வாகனங்களை இயக்கு வதிலும் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் இருந்தது.

    காஷ்மீரில் தான் அதிகளவு குளிர் காணப்படும். ஆனால் தமிழகத்தில் உள்ள ஊட்டியிலும் தற்போது உறைபனியின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக கடுமையான குளிர் நிலவுகிறது. இதனால் ஊட்டி தற்போது மினி காஷ்மீராகவே மாறி காணப்பட்டது. பல இடங்களில் காஷ்மீரை போன்று பனி கட்டி, கட்டியா படர்ந்து காணப்பட்டது.

    உறைபனியின் தாக்கம் அதிகமாக இருந்ததுடன் கடும் குளிரும் காணப்பட்டது இதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியில் வர முடியாத நிலை காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்கள் பொதுமக்கள் வீட்டிற்கு ள்ளேயே முடங்கினர். வீட்டிற்குள்ளும் குளிர் வாட்டியதால் தீ மூட்டி குளிர் காய்ந்தனர்.

    பள்ளி, கல்லூரி செல்லும் குழந்தைகள் மற்றும் அதிகாலையில் வேலைக்கு செல்வோர், தேயிலை தோட்ட பணிக்கு செல்வோர் குளிரை தாங்கும் ஆடைகளை அணிந்து கொண்டு சென்றனர். சில இடங்களில் பொது மக்கள், ஆட்டோ, சுற்றுலா வாகன டிரைவர்கள் குளிரில் இருந்து தப்பிக்க ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். ஊட்டியில் இன்று அதிகபட்ச வெப்பநிலையாக 23.2 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 0.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகி உள்ளது.

    மேலும் மாவட்டத்தின் பல இடங்களில் காலை முதலே பனிமூட்டமும் காணப்படுகிறது. இதனால் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை.

    வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே வாகனத்தை இயக்கி செல்கின்றனர். தொடர்ந்து உறைபனியின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்வதால், தேயிலை, மலைக்காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களும் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • கடும் பனியால் மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காலை 9 மணிக்கு முன்பு எந்த பள்ளியும் திறக்கப்பட கூடாது.

    புதுடெல்லி:

    வடஇந்திய பகுதிகளில் கடுமையான குளிர்கால சூழல் காணப்படுகிறது. இதனால், டெல்லி, பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் கடும் குளிரான சூழலில் அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்படுகின்றன.

    இதுபற்றி டெல்லி கல்வி துறை வெளியிட்ட செய்தியில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளின் மாணவர்கள் அனைவரும் இன்று (15.01.2024) முதல் அவர்களுடைய பள்ளிகளுக்கு வரவேண்டும். இதில், நர்சரி, தொடக்க பள்ளிகளும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    எனினும், கடுமையான பனிபடர்ந்த சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காலை 9 மணிக்கு முன்பு எந்த பள்ளியும் திறக்கப்பட கூடாது. மாலை 5 மணிக்கு பின்னர் எந்த வகுப்பும் கூடாது. அடுத்த உத்தரவு வரும்வரை இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என அந்த உத்தரவு தெரிவிக்கின்றது.

    குளிரான சூழல் அதிகரித்து வரும் நிலையில், உத்தர பிரதேசத்தின் கவுதம புத்த நகரின் கல்வி துறை, நர்சரி முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் நாளை (16-ந்தேதி) வரை மூடப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    • போகி பண்டிகை எதிரொலியால் இன்று அதிகாலை முதல் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது.
    • வட தமிழ்நாடு முதல் டெல்டா மாவட்டங்கள் வரை பனி பனிமூட்டம் நீடிக்கும்.

    தமிழகத்தில் போகி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகையை முன்னிட்டு மக்கள் பழைய பயனற்ற பொருட்களை எரித்து போகி பண்டிகையை வரவேற்று வருகின்றனர்.

    அதன்படி போகி பண்டிகை எதிரொலியால் இன்று அதிகாலை முதல் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடும் பனிமூட்டத்தால் திணறிவரும் வாகன ஓட்டிகள் அதிக புகைமூட்டமும் கூடியதால் அவதியடைந்தனர்.

    இந்நிலையில் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கடும் பனிமூட்டம் நீடிக்கும்.

    அதேபோல் வட தமிழ்நாடு முதல் டெல்டா மாவட்டங்கள் வரை பனிமூட்டம் நீடிக்கும் என்று கூறியுள்ளார்.

    • விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகளையும் மோசமாக பாதிப்பு.
    • பனிப்பொழிவு இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது.

    குளு குளு பனி பொழிவுக்கு பெயர்போன காஷ்மீரில், இந்த குளிர்காலத்தில் பள்ளத்தாக்கு உள்பட எங்கும் பனிப்பொழிவு இல்லாதது சுற்றுலா பயணிகளை ஏமாற்றம் அடையச் செய்தது. இதனால், பயணிகள் சோகத்துடன் வீடு திரும்பினர்.

    சுற்றுலா மட்டுமல்லாமல், பனி சார்ந்த செயல்பாடுகளும் குறிப்பாக, விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகளையும் மோசமாக பாதித்துள்ளது.

    புத்தாண்டு தினத்தன்று குல்மார்க் பகுதியில் பனிச்சறுக்கு மற்றும் பிற பனி தொடர்பான செயல்பாடுகளை அனுபவிக்கும் நம்பிக்கையில் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனர். ஆனால், பனிப்பொழிவு இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது.

    இதுகுறித்து டெல்லியை சேர்ந்த பங்கஜ் சிங் என்பவர் கூறுகையில்"குல்மார்க்கில் பனியை ரசிப்பதற்காக ஜனவரி 3 முதல் ஜனவரி 9 வரை ஏழு நாள் பேக்கேஜை முன்பதிவு செய்து வந்தோம். ஆனால் இங்கு பனி இல்லை. பெரும்பாலான இடங்களில் வெள்ளை நிலப்பரப்பை நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அது வடக்கின் மற்ற பகுதிகளைப் போல பழுப்பு நிறத்தில் இருந்தது. " என்று ஏமாற்றத்துடன் கூறினார்.

    • சுற்றுலா பயணிகள் இல்லாமல் ஏற்காட்டின் அனைத்து சுற்றுலா தளங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது.
    • புறநகர் பகுதிகளான எடப்பாடி, தலைவாசல், தம்மம்பட்டி, கரியகோவில் உள்பட பல பகுதிகளில் மழை பெய்தது.

    சேலம்:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    இதற்கிடையே கடந்த சில மாதங்களாக ஏற்காட்டில் பெய்த தொடர் மழையால் ஏற்காடு மலைப்பாதையில் எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. இதனால் அங்கு கடும் குளிர் நிலவி வருகிறது.

    இந்த நிலையில் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக பனி பொழிவு அதிகமாக உள்ளது. இதனால் மேலும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் மாலை தொடங்கிய சாரல் மழை தொடர்ந்து இன்று காலை வரை பெய்து வருகிறது.

    40 மணி நேரத்திற்கும் மேலாக ஏற்காட்டில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவி வருகிறது. ஏற்கனவே பனி பொழிவும் அதிகரித்துள்ளதால் பொது மக்கள் வீட்டில் முடங்கி உள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் இல்லாமல் ஏற்காட்டின் அனைத்து சுற்றுலா தளங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    ஏற்காட்டில் தொடர்ந்து பனி மற்றும் மழை பெய்து வருவதால் காபி கொட்டைகளை காய வைக்க முடியாத சூழல் உள்ளது.

    இதே போல மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான எடப்பாடி, தலைவாசல், தம்மம்பட்டி, கரியகோவில் உள்பட பல பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சேலம் மாநகரில் இன்று காலையும் சாரல் மழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு செல்வோர் அவதிப்பட்டனர்.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 22.8 மி.மீ. மழை பெய்துள்ளது . எடப்பாடி 16, தலைவாசல் 15, தம்மம்பட்டி 12, கரியகோவில் 12, ஆனைமடுவு 6, சங்ககிரி 2.2, ஆத்தூர் 1, ஓமலூர் 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 88 மி.மீ. மழை பெய்துள்ளது.

    • கடும் பனிப்பொழிவால் 760 விமான சேவை பாதிக்கப்பட்டன.
    • 40 செ.மீ. அளவிற்கு பனிப்பொழிவு இருந்துள்ளது.

    தெற்கு ஜெர்மனியில் நேற்று கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. விமான நிலைங்கள் மூடப்பட்டன. இதனால் விமான போக்குவரத்து தடைப்பட்டது. அத்துடன் ரெயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டன.

    பேயர்ன் முனிசி- யூனியன் பெர்லின் ஆகிய அணிகளுக்கு இடையில் நடைபெற இருந்த கால்பந்து போட்டி ரத்து செய்யப்பட்டது. மேலும், பல போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    கடும் பனிப்பொழிவால் 760 விமான சேவை பாதிக்கப்பட்டன. ஜெர்மனியின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான முனிச்  மூடப்பட்டது. வெள்ளிக்கிழமையில் இருந்து சனிக்கிழமை வரை 40 செ.மீ. அளவிற்கு பனிப்பொழிவு இருந்துள்ளது. பொதுமக்கள் வீட்டிற்குள்ளே இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    பனிப்பொழிவு மற்றும் குறைந்த வெட்பநிலை ஆகியவற்றால் ஜெர்மனியின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிரமத்திற்கு உள்ளாகியுள்ளன.

    • தை மாதம் நிறைவுற்ற நிலையில் சமீப காலமாக மாலை முதல் காலை நேரம் வரையிலும் அதிக பனிப்பொழிவு நிலவுகிறது.
    • பனிமூட்டம் சாலைகளில் நிறைந்து காணப்படுவதால் சாலைகளில் செல்வோர் விளக்குகளை எரிய விட்டபடியே வாகனங்களில் செல்கின்றனர்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டுகளை விட மிக குறைவாகவே பெய்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் நெற்பயிர்கள் சாகுபடி பணிகள் நடைபெறவில்லை.

    பனிப்பொழிவு அதிகரிப்பு

    அதற்கு மாறாக இந்த 2 மாவட்டங்களிலும் கடந்த கார்த்திகை, மார்கழி மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது. தொடர்ந்து தை மாதம் நிறைவுற்ற நிலையில் சமீப காலமாக மாலை முதல் காலை நேரம் வரையிலும் அதிக பனிப்பொழிவு நிலவுகிறது.

    நெல்லை சுற்றுவட்டா ரங்களில் வென்பா எனப்படும் அதிக பனிப்பொழிவு காலை நேரத்தில் அதிக அளவு காணப்படுவதால் வாகனங்களில் செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வண்ணா ர்பேட்டை பைபாஸ் சாலை, நயினார்குளம் சாலை, ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் வாகனங்களில் செல்வோர் தொலை தூரத்தில் வரும் வாகனங்களை சரியாக அறிய முடியாத அளவுக்கு பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது.

    விவசாயிகள் வேதனை

    பனிமூட்டம் சாலைகளில் நிறைந்து காணப்படுவதால் சாலைகளில் செல்வோர் விளக்குகளை எரிய விட்டபடியே வாகனங்களில் செல்கின்றனர். வயல்களில் நிறைந்திருக்கும் நெல் மணிகள் பனிப்பெருக்கோடு காட்சியளிக்கின்றன.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மழையால் விளைய வேண்டிய பயிர்கள், பனியால் பாதிக்கப்படும் நிலையில் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர். அதேநேரத்தில் பனி காரணமாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சீதோஷ்ண நிலை மாற்றத்தின் காரணமாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து பெரும்பாலான ஆஸ்பத்திரி களில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன.

    • பல்வேறு நாடுகளிலிருந்து 294 வகையான பறவைகள் வந்து செல்கின்றன.
    • கடல் காகம் என 200-க்கும் மேற்பட்ட வகை, வகையான பறவைகள் வந்துள்ளன.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளிலிருந்து 294 வகையான பறவைகள் வந்து செல்கின்றன.

    இந்த ஆண்டு பறவைகள் சரணலாயத்திற்கு லட்சக்கணக்கான பறவைகள் வந்தன.

    அந்த பறவைகளை கணக்கெடுக்கும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது.

    திருச்சி மண்டல தலைமை வனபாதுகாவலர் சுரேஷ், நாகை வனஉயிரின காப்பாளர் யோகேஸ்குமார்மீனா, கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் மற்றும் கல்லூரி மாணவர்கள், வனத்துறையினர் என 12 குழுவினர் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனர்.

    சரணாலயத்தில் உள்ள கோவை தீவு, இரட்டை தீவு, பம்பு ஹவுஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.

    இந்த ஆண்டு கோடியக்கரைக்கு பூநாரை, செங்கால் நாரை, கூழைகிடா நாரை, 40 வகையான உள்ளான், கடல் காகம் என 200-க்கும் மேற்பட்ட வகை, வகையான பறவைகள் வந்துள்ளன. 2 நாட்கள் நடந்த கணக்கெடுக்கும் பணியில் கல்லூரி மாணவர்கள், வனத்துறையினர் இணைந்து பறவகைளை கணக்கெடுத்தனர்.

    இந்த ஆண்டு போதுமான மழை பெய்ததால் பறவைகளுக்கு ஏற்ற சூழல் கோடியக்கரையில் நிலவுகிறது.

    தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக பறவைகள் சொந்த நாட்டுக்கு முன்கூட்டியே திரும்ப தொடங்கி விட்டதாக கோடியக்கரை வன அலுவலர் அயூப்கான் தெரிவித்தார். பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களுக்கு வன அலுவலர் சான்றிதழ் வழங்கினார்.

    • காலை நேரங்களில் பனிப்பொழி வின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
    • நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ. 1,500 வரை விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.2,500 முதல் ரூ‌.3,000 வரை விற்பனை ஆகிறது.

    நெல்லை:

    நெல்லையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை பரவலாக மழை பெய்து வந்தது.

    இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்த நிலையில், தற்போது 2 நாட்களாக மழை பெய்யவில்லை. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் அடித்து வருகிறது.

    ஆனாலும் காலை நேரங்களில் பனிப்பொழி வின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். காலை 8 மணி வரையிலும் பனி மூட்டத்துடன் சாலைகள் காணப்படுவதால் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்கள் செல்கின்றன. தொடர்ந்து பனிப்பொழிவு அதிகரித்து வருவதால் மல்லிகை மற்றும் பிச்சி பூக்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் மார்க்கெட்டு களில் அந்த 2 பூக்களின் விலையும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ. 1,500 வரை விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.2,500 முதல் ரூ.3,000 வரை விற்பனை ஆகிறது.

    அதேபோல் பிச்சி பூக்கள் ஒரு கிலோ ரூ.1,250 வரை நேற்று விற்கப்பட்டது. இன்று அவற்றின் விலை ரூ.2,000 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் ரோஜாப்பூ உள்ளிட்ட மற்ற பூக்களின் விலைகளில் மாற்றம் எதுவும் இல்லை.

    • இரவு நேரத்தில் குளிர் மிக அதிகமாக இருப்பதால் வெப்பநிலை சரிந்து 68 டிகிரிக்கும் கீழ் பதிவாகிறது.
    • சாலைகளில் 30 அடி தூரத்துக்கு முன்பாக வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருக்கிறது.

    திருப்பூர் : 

    கடந்த வருடங்களை காட்டிலும் தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு பருவ மழையானது காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் புயலால் சராசரி அளவை காட்டிலும் சற்று கூடுதலாக மழை பொழிவு பதிவாகியுள்ளது.

    இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக குளிரான கால நிலை நிலவி வருகிறது. பகலில் வெப்பநிலை உயர்ந்து காணப்படும் நிலையில், மாலை 6 மணி அளவில் மிகவும் குளிரான காலநிலை நிலவுகிறது. இதனால் இரவில் இரு சக்கர வாகனத்தில் பயணிப்பது சிரமமாக உள்ளது. மேலும் இரவு நேரத்தில் குளிர் மிக அதிகமாக இருப்பதால் வெப்பநிலை சரிந்து 68 டிகிரிக்கும் கீழ் பதிவாகிறது.

    மாவட்டத்தில் பல்லடம் பொங்கலூர், காங்கேயம், குண்டடம், தாராபுரம், மூலனூர், அவிநாசி, ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக பனிப்பொழிவு அதிக அளவில் உள்ளதால், குளிர் மிகவும் கடுமையாக உள்ளது. தொடர் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்கள் பலருக்கும் சளி, தலைவலி உள்ளிட்ட உடல் நல கோளாறுகளும் ஏற்படுவதால் மருத்துவமனைகளில் சளி தொந்தரவால் நோயாளிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. குழந்தைகளும் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளனர்.

    அவினாசி பகுதியில் காலை 8 மணி வரை பனி மூட்டம் அதிக அளவில் சூழ்ந்து காணப்பட்டதால், சாலைகளில் வாகனங்களில் செல்வோர் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றனர். மேலும் முக்கிய சாலைகளில் 30 அடி தூரத்துக்கு முன்பாக வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்ததால் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

    ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்ட பகுதியில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை மீட்ட ராணுவ வீரர்கள் சுமார் 2½ கி.மீ சுமந்து சென்று காப்பாற்றினர். #Pregnantwoman #Snowfall
    ஜம்மு:

    கா‌ஷ்மீரில் கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இந்த நிலையில் வடக்கு கா‌ஷ்மீர் பந்திபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலியால் துடிப்பதாகவும், அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல உதவும்படியும் பந்திபூர் ராணுவ முகாமுக்கு தொலைபேசி மூலம் தகவல் வந்தது.

    இதனை தொடர்ந்து ராணுவ வீரர்கள் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் ஆம்புலன்ஸ் மூலம் அந்த கிராமத்துக்கு விரைந்தனர். ஆனால் சாலைகள் முழுவதும் பனித்துகள்களால் மூடப்பட்டு இருந்ததால் ஆம்புலன்சை வீட்டின் அருகே கொண்டு செல்ல முடியவில்லை. எனினும் மனம் தளர்ந்துவிடாத வீரர்கள், அந்த பெண்ணை தூக்குப்படுக்கையில் சுமார் 2½ கி.மீ தூரத்துக்கு இடுப்பளவு பனித்துகள்களுக்கு மத்தியிலும் சுமந்து சென்றனர்.

    பின்பு அங்கு தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலம் அவரை மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பெண் சிகிச்சைக்காக ஸ்ரீநகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. தக்க நேரத்தில் உதவி புரிந்த ராணுவ வீரர்களுக்கு அந்த பெண் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். #Pregnantwoman #Snowfall
    ×