search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஏற்காட்டில் தொடர்ந்து 40 மணி நேரமாக பெய்யும் சாரல் மழை- வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்
    X

    ஏற்காட்டில் தொடர்ந்து 40 மணி நேரமாக பெய்யும் சாரல் மழை- வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்

    • சுற்றுலா பயணிகள் இல்லாமல் ஏற்காட்டின் அனைத்து சுற்றுலா தளங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது.
    • புறநகர் பகுதிகளான எடப்பாடி, தலைவாசல், தம்மம்பட்டி, கரியகோவில் உள்பட பல பகுதிகளில் மழை பெய்தது.

    சேலம்:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    இதற்கிடையே கடந்த சில மாதங்களாக ஏற்காட்டில் பெய்த தொடர் மழையால் ஏற்காடு மலைப்பாதையில் எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. இதனால் அங்கு கடும் குளிர் நிலவி வருகிறது.

    இந்த நிலையில் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக பனி பொழிவு அதிகமாக உள்ளது. இதனால் மேலும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் மாலை தொடங்கிய சாரல் மழை தொடர்ந்து இன்று காலை வரை பெய்து வருகிறது.

    40 மணி நேரத்திற்கும் மேலாக ஏற்காட்டில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவி வருகிறது. ஏற்கனவே பனி பொழிவும் அதிகரித்துள்ளதால் பொது மக்கள் வீட்டில் முடங்கி உள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் இல்லாமல் ஏற்காட்டின் அனைத்து சுற்றுலா தளங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    ஏற்காட்டில் தொடர்ந்து பனி மற்றும் மழை பெய்து வருவதால் காபி கொட்டைகளை காய வைக்க முடியாத சூழல் உள்ளது.

    இதே போல மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான எடப்பாடி, தலைவாசல், தம்மம்பட்டி, கரியகோவில் உள்பட பல பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சேலம் மாநகரில் இன்று காலையும் சாரல் மழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு செல்வோர் அவதிப்பட்டனர்.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 22.8 மி.மீ. மழை பெய்துள்ளது . எடப்பாடி 16, தலைவாசல் 15, தம்மம்பட்டி 12, கரியகோவில் 12, ஆனைமடுவு 6, சங்ககிரி 2.2, ஆத்தூர் 1, ஓமலூர் 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 88 மி.மீ. மழை பெய்துள்ளது.

    Next Story
    ×