search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    • திருமணஞ்சேரியில் திருமணம் செய்துகொண்டனர்.
    • வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பிரச்சனை.

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே தீதான் விடுதி கிராம த்தைச் சேர்ந்தவர் வீரையன் மகன் சுந்தரபாண்டியன் (வயது 23). விழுப்புரம் மாவட்டம் சேந்த நாடு புதுக்காலணியை சேர்ந்த விஜயன் மகள் விஜய தர்ஷினி(19).

    இவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். அப்போது வர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்றிருந்த விஜய தர்ஷினி நேற்று முன்தினம் இரவு திருப்பூருக்கு வேலைக்கு செல்வதாக பெற்றோரிடம் தெரிவித்துவிட்டு கறம்பக்குடிக்கு வந்தார்.

    தொடர்ந்து சுந்தரபாண்டியனும், விஜய தர்ஷனியும் கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் இருவரும் திருமண கோலத்தில் கறம்பக்குடி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    காதல் ஜோடி இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்தில் பிரச்சனை ஏற்படும் என கருதி காவல் நிலையம் வந்ததாக கூறினார்.

    • விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் புறவழிச் சாலையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
    • தி.மு.க. இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைக்கின்றார்.

    விழுப்புரம்:

    தமிழக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மாவட்டங்களில் வளர்ச்சி பணிகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். கடந்த மாதம் இறுதியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு துறை சார்பில் ஆய்வு மேற்கொண்டு அந்தந்த மாவட்டங்களில் வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்துவதற்கு உத்தரவிட்டார்.

    அதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை (செவ்வாய்கிழமை) தமிழக துணை முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக வருகை புரிய உள்ளார் . விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை சரியாக மதியம் 2 மணிக்கு வரும் தமிழக துணை உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க விழுப்புரம் வடக்கு மாவட்டம் மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் புறவழிச் சாலையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அமைச்சர் பொன்முடி தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார். அதனை தொடர்ந்து வடக்கு மாவட்ட தி.மு.க.சார்பில் முன்னாள் அமைச்சரும் செஞ்சி தொகுதி எம்.எல்.ஏ.வுமான செஞ்சி மஸ்தான், மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் சேகர், முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் தொண்டர்கள் வரவேற்கின்றனர்.

    அதனைத் தொடர்ந்து சரியாக 4 மணி அளவில் விழுப்புரம் தெற்கு மாவட்ட சார்பில் மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான டாக்டர் பொன். கவுதமசிகாமணி தலைமையில் விக்கிரவாண்டி டோல்கேட் அருகே சிறப்பான வரவேற்பளிக்கப்படுகிறது. இதில் அமைச்சர் பொன்முடி, எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் லட்சுமணன் அன்னியூர் சிவா, மாவட்ட சேர்மனும் அவை தலைவருமான ஜெயச்சந்திரன் மற்றும் மாவட்ட ஒன்றிய உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்கின்றனர் .

    அதனைத்தொடர்ந்து சரியாக 5 மணி அளவில் திருவெண்ணெய்நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வெண்கல திருவுருவ சிலையை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இரவு விழுப்புரத்தில் தங்குகிறார். 6-ந் தேதி காலை 10 மணி அளவில் விழுப்புரம் புதுவை சாலையில் தி.மு.க. இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைக்கின்றார். காலை 11 மணியளவில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ள பல்வேறு துறைகளில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார். அப்போது தற்போது நடைபெறும் பணிகள், புதிய திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில் கலெக்டர் பழனி மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

    • கடத்தல்காரன் காரை மோதவிட்டு வேகமாக தப்பி சென்றான்.
    • போதைப் பொருட்களின் மதிப்பு ரூபாய் 10 லட்சம் இருக்கும்.

    திருக்கோவிலூர்:

    விழுப்புரம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் கண்டாச்சிபுரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு குட்கா கடத்தலை தடுக்க சென்ற கண்டாச்சிபுரம் சப்-இன்ஸ்பெக்டரை கடத்தல்காரன் காரை மோதவிட்டு வேகமாக தப்பி சென்றான்.

    கண்டாச்சிபுரம் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக் டர்கள் சரவணன், கந்தன், உதவி ஆய்வாளர் காத்த முத்து மற்றும் போலீசார் கடத்தல்காரன் காரை இருசக்கர வாகனத்தில் சேசிங் செய்து கொண்டிருந்தனர்.


    போலீசார் சுற்றிவளைப் பதை உணர்ந்த கடத்தல்காரன் கண்டாச்சிபுரம் அடுத்த அடுக்கம் வனப்பகு தியில் காரை விட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளான்.

    கடத்தல் காரனை போலீசார் வலைவீசி தேடி வருகின்ற நிலையில் காரில் சுமார் 41 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது கண்டு பிடிக்கப் பட்டது.

    காயமடைந்த போலீசார் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடத்தப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு ரூபாய் 10 லட்சம் இருக்கும் என தெரிகிறது.

    • பல குடியிருப்புகளை ஒட்டியுள்ள படிக்கட்டுகளில் மழைநீர் அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டி குடியிருப்புகளுக்குள் புகுந்தது.
    • மாவட்ட நிர்வாகம் சார்பில் 456 முகாம்கள் தயார் நிலையில் உள்ளது

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு பெய்த கனமழையால் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. பல இடங்களில் மரங்கள் முறிந்து மின்வினியோகம் பாதிக்கப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று இரவு 2-வது நாளாக அங்கு கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியது. மாடல்ஹவுஸ் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் அங்கு வசித்தவர்கள் இரவில் தூங்க முடியாமல் சிரமத்துக்கு ஆளானார்கள். அவர்கள் வீடுகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு இரவை கழித்தனர்.

    பல குடியிருப்புகளை ஒட்டியுள்ள படிக்கட்டுகளில் மழைநீர் அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டி குடியிருப்புகளுக்குள் புகுந்தது. நேற்று இரவும் சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மரங்களும் முறிந்து விழுந்தன. அதிகபட்சமாக குன்னூரில் 9.6 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    மழை காரணமாக குன்னூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டது. நேற்று இரவு 10 மணியில் இன்று காலை வரை குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.

    குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குறும்பாடி, சப்ளை, டிப்போ, காட்டேரி, வண்ணாரப்பேட்டை , வண்டிச்சோலை மவுண்ட் பிளசென்ட் உள்ளிட்ட மரங்கள் முறிந்து விழுந்தும், மண் சரிவும் ஏற்பட்டன. தீயணைப்புத் துறையினர் உடனடியாக சென்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கனமழையை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதுவரை 16 இடங்களில் மரம் விழுந்தும், 7 வீடுகள் இடிந்தும் உள்ளன. மாவட்ட நிர்வாகம் சார்பில் 456 முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. நான்கு மண்டலமாக மீட்பு குழுவினர் பிரிக்கப்பட்டு 3500 பேர் மீட்பு பணியில் ஈடுபடுகின்றனர் என தெரிவித்தார்.

    குன்னூர் அருகே உள்ள யானை பள்ளம் ஆதிவாசி கிராமத்துக்கு செல்லும் சாலையில் பாறைகள் உருண்டு விழுந்ததுடன் மண் மற்றும் மரங்களும் சரிந்து விழுந்தது. இதனால் இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் அத்தியாவசிய தேவைக்கு கூட மக்கள் கிராமத்தை விட்டு வெளியேற இயலாமல் பாதிப்புக்குள்ளாகினர்.

    இதனை தொடர்ந்து குன்னூர் தாசில்தார் கனி சுந்தரம் தலைமையில் வருவாய் ஆய்வாளர் செங்கோடன், தீயணைப்பு துறை நிலை அலுவலர் குமார், நெடுஞ்சாலைத்துறை பாலச்சந்திரன் மற்றும் உலிக்கல் பேரூராட்சி அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடத்துக்கு சென்று ஜே.சி.பி எந்திரம் உதவியுடன் பாறைகள், மண் குவியல்கள் மற்றும் மரங்களை அப்புறப்படுத்தினர்.

    குன்னூர்-மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதையில் இந்திரா நகர் என்ற இடத்தில் நேற்று மாலை திடீரென பாறை உண்டு விழுந்தது. இதனை ஜே.சி.பி. உதவியுடன் அகற்றினர். மேலும் காட்டேரி , கரும்பாலம் இடையே ஏற்பட்ட மண் சரிவை குன்னூர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மேற்பார்வையில் அப்புறப்படுத்தப்பட்டது. ஆப்பிள் பி பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு பொதுமக்கள் வெளியே நடந்து செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. 

    • பெட்டிக்கடையை திறப்பதற்காக வந்தபோது கணேசனை வழிமறித்த மர்ம நபர்கள் வெட்டி சாய்த்துவிட்டு தப்பி ஓட்டம் பிடித்தனர்.
    • தீபாவளி பண்டிகையில் இருந்து அடுத்தடுத்து நடந்த 3 கொலைகளால் சிவகங்கை மாவட்ட மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    சிவகங்கை மாவட்டம் நாட்டாகுடி கிராமத்தை சேர்ந்த அதிமுக கிளை செயலாளர் கணேசன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

    காலையில் பெட்டிக்கடையை திறப்பதற்காக வந்தபோது கணேசனை வழிமறித்த மர்ம நபர்கள் வெட்டி சாய்த்துவிட்டு தப்பி ஓட்டம் பிடித்தனர்.

    தீபாவளி பண்டிகையில் இருந்து அடுத்தடுத்து நடந்த 3 கொலைகளால் சிவகங்கை மாவட்ட மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    ஏற்கனவே நடந்த 2 கொலைகளை ஒருவரே செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கும் நிலையில் தற்போது 3-வது கொலை நடந்துள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
    • 8-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கிய விழாவான கந்த சஷ்டி திருவிழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு யாக பூஜை தொடங்கி,12 மணிக்கு தீபாராதனையும், 12.45 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் வந்து அங்கு தீபாராதனைக்குப்பின மாலை 4.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று வருகிறது.

    கந்த சஷ்டி திருவிழா 3-ம் நாளான இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

    3-ம் நாளான இன்று பக்தர்கள் வருகை அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ஏராளமான பக்தர்கள் கோவில் பிரகாரங்களில் அங்க பிரதட்சனை செய்தும், பஜனை பாடல்கள் பாடியும், கோலாட்டம் ஆடி விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 7-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 4.30மணிக்கு கடற்கரையில் நடக்கிறது. சூரபத்மனை வதம் செய்த பின்னர் கடற்கரையில் அமைந்துள்ள சந்தோஷ மண்டபத்தில் சுவாமி ஜெயந்தி நாதருக்கு அபிஷேகம் நடைபெற்று கோவில் சேர்தல் நடக்கிறது. அன்று இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் நடைபெற்று சஷ்டி தகடு கட்டுதல் நடக்கிறது.

    8-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று இரவு 11 மணிக்கு மேல் கோவில் அருகில் உள்ள திருக்கல்யாண மேடையில் சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • தங்கம் விலை கடந்த மாதம் 31-ந் தேதி வரை விலை அதிகரித்து வந்தது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை

    சென்னை:

    தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) 31-ந் தேதி வரை விலை அதிகரித்து வந்தது. அன்றைய தினம் ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 455-க்கும், ஒரு பவுன் ரூ.59 ஆயிரத்து 640-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சமாக இது பார்க்கப்பட்டது.

    மேலும் விலை அதிகரித்து ரூ.60 ஆயிரத்தையும் தாண்டிவிடுமோ? என்று நினைத்த நேரத்தில், தங்கம் விலை குறைந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினமும் தங்கம் விலை குறைந்தது. ஒரு சவரன் தங்கம் ரூ.59 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

    இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் எதுவும் இல்லை. சவரன் ரூ.58 ஆயிரத்து 960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராம் ரூ.7,370-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையிலும் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.106-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    03-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,960

    02-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,960

    01-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 59,080

    31-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 59,640

    30-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 59,520

     கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    03-11-2024- ஒரு கிராம் ரூ. 106

    02-11-2024- ஒரு கிராம் ரூ. 106

    01-11-2024- ஒரு கிராம் ரூ. 106

    31-10-2024- ஒரு கிராம் ரூ. 109

    30-10-2024- ஒரு கிராம் ரூ. 109

    • இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்தது.
    • சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    மேலும் கடந்த சில நாட்களாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.

    இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

    இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    பின்னர் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்றவாறு காவிரி ஆற்றை கண்டு ரசித்தனர். மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • பல ஆண்டுகளாக வெயில், மழையால் சேதமடைந்து இருப்பதால், அதற்கு பதிலாக புதிய கொடிமரம் வைக்க முடிவு.
    • இதற்காக நேற்று கொடி மரத்திற்கு படையல் செய்து வழிபட்டனர்.

    சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி அமைந்துள்ளது. இங்கு பிரமோற்சவம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த சூழலில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் உள்ள கொடிமரம் பல ஆண்டுகளாக வெயில், மழையால் சேதமடைந்து இருப்பதால், அதற்கு பதிலாக புதிய கொடிமரம் வைக்க வேண்டும் என்று கோவில் நிர்வாக அறங்காவலர் சுதர்சன் மற்றும் பட்டாச்சாரியார்கள் முடிவு செய்தனர். இதற்காக நேற்று கொடி மரத்திற்கு படையல் செய்து வழிபட்டனர்.

    இதுபற்றி அறிந்ததும் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் ஒன்று திரண்டு, தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் நிர்வாகிகளிடம் இக்கோவிலில் பிரமோற்சவம் நடத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் இங்குள்ள கொடி மரத்தை புதுப்பிக்கவோ, மாற்றவோ கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    இதுபற்றி அறிந்ததும் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில், சிதம்பரம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பட்டாச்சாரியர்கள் மற்றும் தீட்சிதர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

    இச்சம்பவத்தால் நடராஜர் கோவில் வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    கோவிந்தராஜ பெருமாள் கோயில் கொடி மரத்தை, தற்போது உள்ளதைப் போலவே மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை எனவும், கொடி மரத்தில் புதிதாக வளையம் போன்றவற்றை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தீட்சிதர்கள் தெரிவித்தனர்.

    • நேற்று இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகளின் மூலம் 79,626 பேர் பயணம் செய்துள்ளனர்.
    • செங்கல்பட்டு பரனூர் சுங்கச் சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    தீபாவளி விடுமுறை முடிந்த நிலையில், சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் மீண்டும் சென்னைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதனால் பேருந்து நிலையம், ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

    குறிப்பாக தென்மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சென்னை நோக்கி படையெடுத்ததால், செங்கல்பட்டு பரனூர் சுங்கச் சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    இதே போல ஒரே நேரத்தில் அதிக அளவில் பயணிகள் வருகை தந்துள்ளதால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக சொந்த ஊர்களில் இருந்து ஏராளமான மக்கள் சென்னை திரும்பும் பொருட்டு கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு வந்து இறங்கினர். இதனால், பஸ் நிலையம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

    நேற்று இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகளின் மூலம் 79,626 பேர் பயணம் செய்துள்ளனர். முன்பதிவு செய்து பயணித்த பயணிகளின் எண்ணிக்கையில் இது அதிகபட்ச உச்சமாகும். சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 2,561 சிறப்புப் பேருந்துகளும், பல்வேறு இடங்களிலிருந்து வழக்கமாக இயங்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 3,912 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. 

    • தெலுங்கானா, குஜராத், கோவா, புதுச்சேரி, தாதர், நாகர்ஹவேலி, டையு, டாமன், லட்சத்தீவுகள் சேர்ந்தவர்களுக்கு முகாம்.
    • 5 மணிக்கு முகாம் என்பதால் நேற்று இரவு முதல் வரத்தொடங்கி சாலையோரம் ஓய்வெடுத்தனர்.

    இந்திய ராணுவத்தில் 174 ராணுவ வீரர்கள், 50 கிளார்க் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதையொட்டி ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி (பி.ஆர்.எஸ்.) மைதானத்தில் இன்று காலை தொடங்கியது.

    இன்று காலை 5 மணிக்கு தெலுங்கானா, குஜராத், கோவா ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி, தாதர், நாகர்ஹவேலி, டையு, டாமன், லட்சத்தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்களுக்கும் முகாம் நடக்கிறது.

    இன்று தொடங்கும் முகாமில் பங்கேற்க தெலுங்கானா, கோவா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் கோவைக்கு வந்தனர். காலை 5 மணிக்கு முகாம் தொடங்குவதால் அதற்கு முன்னதாக வர வேண்டும். எனவே வெளிமாநில வாலிபர்கள் நேற்றிரவவே கோவைக்கு வந்தனர். மேலும் நள்ளிரவில் வந்து சேர்ந்தனர். அவர்கள் தங்குவதற்கு வசதி ஏதும் இல்லாததால் சாலையோரத்தில் தங்கும் நிலை ஏற்பட்டது.

    மேலும் அதிகாலையில் வரும் இளைஞர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சாலையோரம் படுத்து தூங்கி ஓய்வெடுத்தார். இதனால் அவர்களுக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது.

    வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கழிப்பிடம் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லாத நிலை உள்ளது. இதனால் அவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

    நாளை (செவ்வாய்க்கிழமை) ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும், நாளை மறுநாள் (6-ந்தேதி) ராஜஸ்தான், மராட்டியம் மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கான முகாம் நடக்கிறது.

    7-ந்தேதி தமிழகத்தில் உள்ள அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், கரூர், கிருஷ்ண கிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்ப லூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கான முகாம் நடைபெறுகிறது.

    8-ந்தேதி சென்னை, கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, சேலம், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருச்சி, திருவண்ணாமலை, நெல்லை, திருப்பூர், விருதுநகர் மாவட்டங்களுக்கும், 9-ந் தேதி கேரள மாநிலம் ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, கண்ணூர், காசர்கோடு, கொல்லம், கோட்டயம் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு முகாம் நடத்தப்படுகிறது.

    10-ந் தேதி கேரள மாநிலத்தை சேர்ந்த கோழிக்கோடு, திருச்சூர், மலப்புரம், பாலக்காடு, பத்தினம்திட்டா, திருவனந்தபுரம், வயநாடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும் முகாம் நடைபெறுகிறது.

    11-ந் தேதி முதல் 16-ந்தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவை நடைபெறுகிறது. இதில் ஓட்டம், கயிறு ஏறுதல் உள்ளிட்ட உடற்தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.

    • கோவில் வளாகம் முழுவதும் நேரில் சுற்றி பார்த்து அங்கு பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
    • விடுதியில் உள்ள அலுவலரிடம் விடுதியில் பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதி புகழேந்தி நேற்று ஆய்வு செய்தார். அவர் கோவில் வளாகம் முழுவதும் நேரில் சுற்றி பார்த்து அங்கு பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது, கோவில் வளாகத்தில் விரதம் இருக்கும் பக்தர்கள் தங்குவதற்காக ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகைகளுக்கு நேரில் சென்று அங்கு தங்கியுள்ள பக்தர்களிடம் குடிதண்ணீர், சுகாதார வளாக வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அதேபோல் சாமி தரிசனத்திற்காக வரிசையில் நின்ற பக்தர்களிடம் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் கோவில் வளாகத்தில் தற்போது புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள விடுதிகளுக்கு சென்று அதில் தங்கியுள்ள பக்தர்களிடம் வாடகை குறித்தும், வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். அந்த விடுதியில் உள்ள அலுவலரிடம் விடுதியில் பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    ஆய்வின்போது, திருச்செந்தூர் சப்-கோர்ட்டு நீதிபதி செல்வபாண்டி, நீதித்துறை நடுவர் வரதராஜன், கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

    ×