என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RN Ravi"

    • மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
    • மோப்ப நாய்களுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த மிரட்டலை அடுத்து, ஆளுநர் மாளிகை வளாகத்தில் போலீசார் மோப்ப நாய்களுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

    இதனால் இந்த மிரட்டல் புரளி என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் போலீசாரின் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

    • இயற்கை வேளாண்மையில் நம்மாழ்வார் சிறந்த முதுகலை ஆராய்ச்சி விருதை அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன்.
    • பல்கலைக்கழகத்தின் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் இந்த விருது வழங்கப்படும்.

    சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது.

    இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பேசியதாவது:-

    இந்தியாவில் நடைபெற்ற பசுமை புரட்சி, விவசாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

    தொடர்ந்து விவசாயிகள் ரசாயனம் கலந்த உரங்களை தவிர்த்து, இயற்கை முறைக்கு மாற தொடங்கினர். இதனால், உணவு உற்பத்தி அதிகரித்து நாடு முழுவதும் இயற்கை வளம் செழித்தது.

    இந்தியாவில் உற்பத்தியாகும் உணவுகள் நமக்கு மட்டுமின்றி, மற்ற நாடுகளின் பசியையும் போக்குகின்றன. எனவே நாம் விவசாயிகளை மறந்து விடக்கூடாது.

    நானும் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவன்தான். உயர்கல்வி படிக்கும்போது விவசாயம் செய்து உள்ளேன். எனவே பொதுமக்கள் அனைவரும் இயற்கை முறைக்கு மாற வேண்டும்.

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இயற்கை வேளாண்மையில் நம்மாழ்வார் சிறந்த முதுகலை ஆராய்ச்சி விருதை அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன்.

    சிறந்த வேளாண் விஞ்ஞானியும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான மறைந்த டாக்டர் ஜி.நம்மாழ்வாரின் நீடித்த பாரம்பரியத்தையும், இயற்கை வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையில் அவரது முன்னோடி பணிகளையும் முன்னெடுத்து செல்வத ற்காக இந்த விருது நிறுவப்பட்டுள்ளது.

    இந்த விருது இயற்கை வேளாண்மையை முன்னேற்ற ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்தியாவின் நிலையான விவசாய முன்னேற்றத்தையும், உலகளாவிய இயற்கை வேளாண்மைத்துறையில் அதன் வளர்ந்து வரும் இருப்பையும் ஆதரிக்கிறது.

    இந்த விருது ஆண்டுதோறும் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் இயற்கை வேளாண்மையில் சிறந்த குறிப்பிடத்தக்க ஆராய்ச்சியை மேற்கொண்ட மாணவருக்கு வழங்கப்படும். பல்கலைக்கழகத்தின் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் இந்த விருது வழங்கப்படும்.

    இந்த விருது ரூ.50 ஆயிரம், தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டுப்பத்திரம் ஆகியவற்றை கொண்டிருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும், ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் பேரணி நடைபெறுகிறது.
    • பேரணியில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள் எம்பிக்கள், பொது மக்கள் பங்கேற்றுள்ளனர்.

    சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்று வருகிறது.

    இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழலில், இந்தியப் படைகளுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் பேரணியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள் எம்பிக்கள், பொது மக்கள் ஆகியோர் கையில் தேசியக் கொடி ஏந்தி பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், பேரணி நடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பாகிஸ்தானிய ராணுவ ஆக்கிரமிப்பு செயல்களுக்கு எதிராக நாட்டை துணிச்சலுடனும் வெற்றிகரமாகவும் பாதுகாக்கும் இந்திய ஆயுதப் படைகளுடன் நமது 8 கோடி தமிழ்நாட்டு மக்களின் தெளிவான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இன்று மாலையில் பிரம்மாண்டமான மக்கள் பேரணியை நடத்துவதற்காக மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

    நமது ஆயுதப் படைகளுடன் நமது தேசம் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் துணைநிற்பது, பயங்கரவாதத்தின் அனைத்து முனைகளையும் அழித்தொழித்து நமது தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான நமது ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஸ்டாலின் ஆட்சி சமூகநீதி ஆட்சியாக, சமத்துவ ஆட்சியாக இருக்கும் என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
    • சுயாட்சியை பொறுத்தவரை வாக்காளர்கள்தான் நாயகர்கள்.

    சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு விழா என்ற தலைப்பில் துணை வேந்தர்கள், பேராசிரியர்கள், சுயநிதி பொறியியல் கல்லூரி கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

    இந்த பாராட்டு விழாவில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி பிரதிநிதிகள், தனியார் கலை கல்லூரி கூட்டமைப்பினர் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    பொதுவாக எனக்கு பாராட்டு விழா என்றால் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்.

    விழாவுக்கு ஒப்புக் கொண்டதே தமிழகத்திற்கு உச்சநீதிமன்றம் அளித்த வரலாற்று தீர்ப்புதான்.

    ஸ்டாலினின் ஆட்சி சமூக நீதி ஆட்சியாக, சமத்துவ ஆட்சியாக இருக்கும். சுயாட்சியை பொறுத்தவரை வாக்காளர்கள்தான் நாயகர்கள்.

    மக்களின் அன்புக்கும், நம்பிக்கைக்கும் தகுதிப்படுத்திக் கொள்ள கடுமையக உழைப்பேன்.

    ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக் கெடு நிர்ணயித்தது முக்கியத்துவம் வாய்ந்தது. இனி மசோதாவை நிறுத்தி வைத்தால் மாநில அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என தீர்ப்பு அளித்தது.

    முதலமைச்சராகி மக்களுக்குத் தேவையான திட்டங்களை தீட்டினால், After all மத்திய அரசின் ஏஜெண்டாக நியமிக்கப்பட்ட, Temporary-அ தங்கி இருக்கிற ஒரு ஆளுநர் அவைகளை தடுத்து நிறுத்த முடியும் என்றால், மக்கள் போடுகிற ஓட்டுக்கு என்ன மரியாதை ?

    பிரதமரின் உரிமைகளை குடியரசுத் தலைவர் எடுத்துக் கொண்டால் சும்மா இருப்பார்களா ?

    ஆளுநர் தமிழ்நாட்டிலேயே தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆளுநர் பதவி என்பது ரப்பர் ஸ்டாம்ப் போஸ்ட்.

    திராவிட மாடல் அரசு இளைஞர்களுக்கான அரசு, இளைஞர்கள் சிறந்த வேலை வாய்ப்பை பெற உழைக்கிறோம்.

    அறிவியலை மட்டுமே பயிற்றுவிக்க வேண்டும், மூட நம்பிக்கைகளை கற்றுத் தரும் இடமாக கல்விக்கூடம் இருக்கக்கூடாது.

    இளைஞர்கள் தங்கள் ரோல் மாடலை சமூக வலைத்தளங்களில் தேட வேண்டாம்.

    படிக்காமலேயே பெரிய ஆளாகிவிடலாம், யூடியூப் உள்ளிட்டவற்றில் சம்பாதிக்கலாம் என சொல்வார்கள் அந்த வலையில் சிக்கிவிடாதீர்கள்.

    கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து. உலகம் மிகப்பெரியது. அதைப்பார்க்க கல்வி என்ற கண்ணாடி வேண்டும். சாதி, மதம் என்று சுருங்கி விடாதீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • துணை வேந்தர்களை பங்கேற்கவிடாமல் செய்தது அவசரகால நாட்களை நினைவூட்டுகிறது.
    • துணை வேந்தர்களை தடுக்க காவல்துறையை முதல்வர் மு.க. ஸ்டாலின் பயன்படுத்தி உள்ளார்.

    தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் 2 நாட்கள் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துகிறார். இந்த மாாநடு இன்று தொடங்கியது.

    இந்த மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மிரட்டப்பட்டதாக ஆளுநர் புகார் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் துணை வேந்தர்களை பங்கேற்கவிடாமல் செய்தது அவசரகால நாட்களை நினைவூட்டுகிறது. துணை வேந்தர்களை தடுக்க காவல்துறையை முதல்வர் மு.க. ஸ்டாலின் பயன்படுத்தி உள்ளார். தமிழகத்தில் காவல்துறை ராஜ்ஜியமா நடக்கிறது? மாநிலத்திற்குள் கல்வி மாநாட்டில் பங்கேற்க துணைவேந்தர்களுக்கு கல்வி சுதந்திரம் இல்லையா? என ஆளுநர் ஆர்.என். ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.

    • தனியார் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா, தமிழ்நாடு பொது கட்டிட உரிம திருத்த மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்.
    • மசோதா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கவர்னரை கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    தனியார் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா, தமிழ்நாடு பொது கட்டிட உரிம திருத்த மசோதா ஆகிய இரண்டு மசோதாக்கள் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.

    இந்த மசோதாக்களை தமிழக அரசு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்திருந்தது. தற்போது இந்த இரண்டு மசோதாக்களுக்கும் கவர்னர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

    மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கவர்னர் நிலுவையில் வைத்திருப்பது சட்ட விரோதம் என ஏப்ரல் 8ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. தீர்ப்பளித்த அடுத்த நாளே இரண்டு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

    • தன்னை பாஜககாரராக காட்டிக் கொள்கிறார் ஆளுநர்
    • அதிமுக - பாஜக கூட்டணியை 2 முறை தோற்கடித்துள்ளோம்

    "ஆளுநரின் அதிகாரம் என்பது ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே தபால்காரராக இருப்பது மட்டுமே" என்று ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    கே: கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான சுப்ரீம் கோர்ட்டின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு குறித்து உங்கள் பதில் என்ன?

    பதில்: ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசுதான் சட்டமியற்றும் அதிகாரம் மிக்கது. நியமனப் பதவியான கவர்னர் பதவி என்பது ஒரு கவுரவப் பதவிதான். சட்டமன்றத்தின் அதிகாரத்தை முடக்க முடியாது என்பதை உச்சநீதிமன்றம் இத்தீர்ப்பின் வாயிலாக தெளிவுபடுத்தி-மத்திய-மாநில உறவுகளில் அதற்குரிய அதிகாரம், ஒரு தபால்காரருக்குரியதுதான் என்பதைத் தொடர்ந்து தி.மு.க சொல்லி வருகிறது. அது உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டி ருக்கிறது.

    கே: கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டிலேயே தொடர வேண்டும் என்று நீங்கள் இன்னும் நினைக்கிறீர்களா?

    பதில்: அவருக்குரிய பதவிக்காலம் முடிந்தபிறகும் தமிழ்நாட்டில்தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். எங்களைப் பொறுத்தவரை தமிழுக்கு எதிராகவும், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எதிராகவும், தமிழ்நாடு என்ற பெயருக்கு எதிராகவும் செயல்படும் ஆளுநர், பச்சையான பா.ஜ.க. காரராகவே வெளிப்படுத்திக் கொள்கிறார்.

    அவருடைய அத்தனை செயல்பாடுகளும் மக்களால் வெறுக்கப்படுவதால், அவர் பதவியில் இருக்கும்வரை பா.ஜ.க.வின் மக்கள் விரோத செயல்பாடுகளை இன்னும் அதிகமாக மேற்கொண்டு, தி.மு.க.வுக்கு மறைமுகமாக உதவி செய்வார்.

    என்று தெரிவித்தார்.

    • நீதிபதிகள் சூப்பர் நாடாளுமன்றமாகச் செயல்படுவதாக தெரிவித்தார்.
    • உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காமல் கிடப்பில் போடப்பட்டதற்கு, ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

    குடியரசுத் தலைவர் மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்காத பட்சத்தில் அதை எதிர்த்து மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும் என தெரிவித்திருந்தனர்.

    இந்த தீர்ப்பு குறித்து பேசிய ஜெகதீப் தன்கர், நீதிபதிகள் சூப்பர் நாடாளுமன்றமாகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டியதுடன், ஜனாதிபதிக்கு நீதிமன்றம் அறிவுறுத்த முடியாது எனவும் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் பலவும் கண்டனம் தெரிவித்தன.

    இந்த நிலையில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார்.

    ஆளுநர், ஜனாதிபதி அதிகாரங்கள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது இவர்களின் சாந்திப்பு நிகழ்ந்துள்ளது.

    • ஆளுநர் ஆர்.என்.ரவி மாலை 4.30 மணிக்கு விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார்.
    • ஆளுநர் ஆர்.என்.ரவி சில மத்திய அமைச்சர்களை சந்திக்க திட்டம்.

    தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மூன்று நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.

    அதன்படி, இன்று மாலை 4.30 மணிக்கு விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்ற ஆளுநர், ஞாயிறு அன்று சென்னை திரும்புவார் எனவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி சில மத்திய அமைச்சர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • சைவம், வைணவம் குறித்து அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    தமிழக வனத்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி, நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் பெண்கள் மற்றும் இந்து மதம் குறித்து பேசியது சர்ச்சையாகியிருந்தது. இதற்கு திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

    இதனால் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பொன்முடியை துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கினார். ஆனால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தோ, அமைச்சர் பதவியில் இருந்தோ நீக்கவில்லை.

    பொன்முடியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ஆளுநரை சந்திக்கிறார். அப்போது பொன்முடியை அமைச்சர் பதவியில் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை நீக்க வேண்டும் என்று சி.பி.ஐ.எம் வலியுறுத்தி உள்ளது.
    • ஆளுநர் என்ற மதச்சார்பற்ற அரசியல் சாசன உயர்பொறுப்பில் நீடிக்கும் தகுதி இவருக்கு சிறிதும் இல்லை.

    மதுரை தியாகராஜர் கல்லூரி விழாவில் மாணவர்களிடையே ஜெய்ஸ்ரீராம் என ஆளுநர். ஆர்.என்.ரவி கோஷம் எழுப்ப வைத்த நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின், அரசியல் சாசன மாண்புக்கு முரணான திட்டமிட்ட அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

    மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது உரையின் முடிவில் ஜெய் ஸ்ரீராம் என்று மூன்று முறை கூறியதோடு, மாணவர்களையும் கூறுமாறு நிர்ப்பந்திந்துள்ளார். உயர்கல்வி நிலையங்களை அவற்றின் மதச்சார்பற்ற தன்மைக்கு மாறாக, இந்துத்துவ கூடமாக மாற்ற முயலும் ஆர்.என்.ரவியின் போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

    தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்டமுன்வரைவுகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காதது சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் ஓங்கி கொட்டிய பின்பும், அரசியல் சாசனக் கடமைகளை மறுத்து ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் போலவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

    வள்ளலார், ஸ்ரீவைகுண்ட சாமிகள் உள்ளிட்ட சமூக சீர்திருத்த செம்மல்கள் மற்றும் திருவள்ளுவரை மனுவாதக் குடுவைக்குள் அடைக்க முயலும் இவர், மதச்சார்பின்மை, அறிவியல், பகுத்தறிவின் வாசல்களாகத் திகழ வேண்டிய கல்விக்கூடங்களை காவி கூடாரமாக மாற்ற முயல்வதை சகித்துக் கொள்ள முடியாது.

    ஆளுநர் என்ற மதச்சார்பற்ற அரசியல் சாசன உயர்பொறுப்பில் நீடிக்கும் தகுதி இவருக்கு சிறிதும் இல்லை என்பது தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது.

    எனவே, ஆளுநர் பொறுப்பிலிருந்து இவரை நீக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கல்லூரியில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட்டார்.
    • ஆர்.எஸ்.எஸ்-ன் Bunch of Thoughts எனும் நஞ்சை மனதில் சுமந்து நடக்கும் ஆளுநர் எப்படி அரசியல் சட்டத்தை மதிப்பார்?

    துரை தியாகராஜர் கல்லூரி விழாவில் மாணவர்களிடையே ஜெய்ஸ்ரீராம் என ஆளுநர். ஆர்.என்.ரவி கோஷம் எழுப்ப வைத்த நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    கல்விக் கூடங்களில் கம்பர் என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டி பரிசளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.

    அப்போது, நான் சொல்கிறேன்; நீங்களும் திரும்ப செல்லுங்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவி ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட்டார்.

    மதச்சார்பற்ற கல்வி நிறுவனத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களையும் ஜெய்ஸ்ரீராம் என கோஷம் போட வைத்ததால் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், ஆளுநருக்கு இந்த செயலுக்கு திமுக எம்.எல்.ஏ. மனோ தங்கராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தினை கால் தூசு அளவிற்கு கூட ஆளுநர் மதிக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ்-ன் Bunch of Thoughts எனும் நஞ்சை மனதில் சுமந்து நடக்கும் ஆளுநர் எப்படி அரசியல் சட்டத்தை மதிப்பார்?

    பல மத நம்பிக்கைகள் உடைய கல்லூரி மாணவர்கள் மத்தியில் அவர்களிடம் ஒரு குறிப்பிட்ட மதத்தை திணிக்கும் நோக்கில் தனது அதிகாரத்தை தவறாகக் கையாண்டிருக்கிறார். இப்பேர்பட்ட நஞ்சை சுமக்கும் நாகரீகமற்றவர்கள் எப்படி நடுநிலையுடன் மக்களுக்கு சேவை ஆற்ற முடியும். உச்சநீதிமன்ற தீர்ப்பால் விரக்தியில் இருக்கம் ஆளுநரே திரும்ப போ" என்று பதிவிட்டுள்ளார். 

    ×