என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2025 Rewind"

    • வரலாற்றில் இல்லாத வகையில் தங்கம் விலை உயர்ந்து மக்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்தது.
    • தங்கத்திற்கு போட்டியாக நீ மட்டும் தான் ஏறுவீயா... நானும் ஏறுவேன் என்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

    தங்கம்..!

    தங்கத்தின் மீது யாருக்கு தான் ஆசை இருக்காது. அதிலும் பெண்களை கேட்கவே வேண்டாம். புதுப்புது டிசைன்களில் தங்கம் வாங்கி அணியனும்னு என்று ஆர்வம் கொள்வார்கள். இளம்வயது பெண்கள் திருமணத்திற்காக பார்த்து பார்த்து நகை எடுப்பார்கள். திருமணம் ஆன பெண்களோ தனக்கோ அல்லது தன்னுடைய மகளின் எதிர்காலத்திற்கு என நகை வாங்குவார்கள்.

    இப்படி சேமிப்பு, எதிர்கால நலன், அவசர தேவை, திருமணம் போன்றவற்றிற்கு தங்கம் பயன்படும். திருமண வயதில் உள்ள பெண்களுக்கு 20 சவரன், 50 சவரன் என வசதிக்கேற்ப பெற்றோர்கள் நகை அணிவித்து திருமணம் செய்து வைப்பார்கள்.



    இப்படிப்பட்ட தங்கம் இரு விதமாக விற்பனை செய்யப்பட்டது. அதாவது 22 கிராட், 24 கிராட் என்று... (இதனை சாதாரண நகை என்றும் 916 நகை என்றும் சொல்வர்). அரசாங்கம் ஒரு விதிமுறையை கொண்டு வந்தது. அந்த விதியில் இனி சாதாரண நகை என்று சொல்லப்படும் 22 கிராட் நகை விற்கக்கூடாது. 24 கிராட் முத்திரையிடப்பட்ட நகை தான் விற்பனை செய்யப்பட வேண்டும் என்று. இதனால் ஏழை மக்கள் சிரமம் அடைந்தனர்.



    சரி அதுபோகட்டும் என்று பார்த்தால், 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி அன்று தங்கம் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,200-க்கும் கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,150-க்கும் விற்பனையானது. ஆண்டின் தொடக்கத்தில் சற்று தான் உயர்ந்தது என்று பரவாயில்லை என்று தோன்றியது அன்று...



    ஆனால் இன்று அதன் தொடக்கமாக தங்கம் விலை உச்சத்தில் விற்பனையாகிறது. அதாவது வரலாற்றில் இல்லாத வகையில் தங்கம் விலை உயர்ந்து மக்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்தது. தங்கத்திற்கு போட்டியாக நீ மட்டும் தான் ஏறுவீயா... நானும் ஏறுவேன் என்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஆண்டு தொடக்கத்தில் ஒரு கிராம் வெள்ளி 98 ரூபாய்க்கும், பார் வெள்ளி 98 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

    ஒவ்வொரு மாத இறுதியில் விற்பனையான தங்கம் மற்றும் வெள்ளி விலை விவரம்:-


    மாதம் கிராம் சவரன் கிராம் பார் வெள்ளி
    ஜனவரி ரூ.7,730 ரூ.61,840 ரூ.107 ரூ.1,07,000
    பிப்ரவரி ரூ.7,960 ரூ.63,680 ரூ.105 ரூ.1,05,000
    மார்ச் ரூ.8,425 ரூ.67,600 ரூ.113 ரூ.1,13,000
    ஏப்ரல் ரூ.8,980 ரூ.71,840 ரூ.111 ரூ.1,11,000
    மே ரூ.8,920 ரூ.71,360 ரூ.111 ரூ.1,11,000
    ஜூன் ரூ.8,915 ரூ.71,320 ரூ.119 ரூ.1,19,000
    ஜூலை ரூ.9,170 ரூ.73,360 ரூ.125 ரூ.1,25,000
    ஆகஸ்ட் ரூ.9,620 ரூ.76,960 ரூ.134 ரூ.1,34,000
    செப்டம்பர் ரூ.10,860 ரூ.86,880 ரூ.161 ரூ.1,61,000
    அக்டோபர் ரூ.11,300 ரூ.90,400 ரூ.165 ரூ.1,65,000
    நவம்பர் ரூ.11,800 ரூ.94,400 ரூ.192 ரூ.1,92,000

    2025-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதிக்கு பிறகு ஏற்ற, இறக்கங்கள் கண்ட தங்கம் மற்றும் வெள்ளி விலை காலை, மாலை என இருவேளைகளிலும் விலை உயர்ந்து இன்று (06-12-2025) முறையே ஒரு சவரன் தங்கம் ரூ.96,320-க்கும் ஒரு கிராம் ரூ.12,040-க்கும், வெள்ளி ஒரு கிராம் வெள்ளி 199 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



    பொருளாதார மந்த நிலையில், தங்கத்தின் தேவை அதிகரிப்பு, டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்றவற்றால் விலை உயருகிறது என்று பல காரணங்கள் கூறப்பட்டாலும் இனி விலை குறையுமா? என்றால் அது சாத்தியமே இல்லை தான் என்கிறார்கள். மேலும் இனி பிறக்கப்போகும் 2026-ம் ஆண்டில் தங்கம் விலை 15 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்து சவரன் ஒரு லட்சத்து 24 ஆயிரம் வரை விற்பனையாகலாம் என்ற தகவலை சொல்லும் போது இடி இறங்கியது போல் இருந்தது. இதனால் தங்கம் வாங்க நினைப்பவர்கள் சற்று யோசித்தே செயல்படுவதே நல்லது. 

    ×