என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உரிமம் ரத்து"

    • உயிரிழந்த குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் டை எத்திலீன் கிளைக்கால் எனப்படும் வேதிப்பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.
    • ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் கடந்த ஆண்டு உரிய ஆய்வு செய்யாத 2 அதிகாரிகள் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்தை உட்கொண்ட 24 பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது அதிர்வலையை ஏற்படுத்தியது. உயிரிழந்த குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் டை எத்திலீன் கிளைக்கால் எனப்படும் வேதிப்பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.

    இது தொடர்பான விசாரணையில், காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் இருமல் மருந்தில், தடை செய்யப்பட்ட ரசாயனம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    விசாரணையில் நச்சுத்தன்மையுள்ள ரசாயனம் கலந்த கோல்ட்ரிப் (coldrif Cough Syrup) என்ற இருமல் மருந்தே குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணம் எனவும், இந்த மருந்தை தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனம் தயாரித்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த அக்.3-ந்தேதி ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் மருந்து தயாரிப்பு ஆலையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மருந்து தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் மாதிரிகள் கைப்பற்றப்பட்டன. அதில் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் அளவுக்கு 48.6% டை எத்திலீன் கிளைக்கால் என்ற வேதிப்பொருள் கலக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அந்நிறுவனத்தின்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் கடந்த ஆண்டு உரிய ஆய்வு செய்யாத 2 அதிகாரிகள் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    இதனையடுத்து தலைமறைவாக இருந்த ஸ்ரீசன் பார்மா நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் சென்னை அசோக் நகரில் கைது செய்யப்பட்டார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரங்கநாதனுக்கு, டிரான்சிட் வாரண்ட் வழங்கியதையடுத்து, மத்திய பிரதேசம் போலீசார் அவரை அம்மாநிலத்துக்கு அழைத்து சென்றனர்.

    இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஸ்ரீசன் நிறுவனத்தின் மருந்து தயாரிக்கும் உரிமங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மாநிலம் முழுவதும் உள்ள மருந்து தயாரிப்பு ஆலையில் முழுமையான விசாரணை, ஆய்வு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

    • நடிகர் மோகன் பாபுவுக்கு திருப்பதியில் சொந்தமாக பல்கலைக்கழகம் ஒன்றும் உள்ளது.
    • நடிகர் மோகன் பாபுவுக்கு சொந்தமான பல்கலைகழகத்திற்கு ரூ.15 லட்சம் அபராதம்.

    தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்பாபு பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். நடிப்பு மட்டுமின்றி இயக்குனர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என இவருக்கு பல முகங்கள் உண்டு.

    இவர் ஆந்திராவில் தொகுதி ஒன்றில் போட்டியிட்டு எம்பி ஆனார். இவர் கிட்டத்தட்ட 500 திரைப்படங்களில் நடித்துள்ளார். பல விருதுகளையும் வென்றுள்ளார்.

    நடிகர் மோகன் பாபுவுக்கு திருப்பதியில் சொந்தமாக பல்கலைக்கழகம் ஒன்றும் உள்ளது. இங்கு ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில், திருப்பதியில் உள்ள நடிகர் மோகன் பாபுவுக்கு சொந்தமான பல்கலைகழகத்திற்கு ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிமத்தை ரத்து செய்யவும் அரசுக்கு மாநில உயர்கல்வி ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

    கடந்த 3 ஆண்டுகளில் மாணவர்களிடமிருந்து ரூ.26 கோடி கூடுதலாக கட்டணம் வசூலித்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

    • விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • மருந்து கலக்கும் பணியின் போது விதிமீறல் நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த திருத்தங்கல்லை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு சொந்தமான இந்துஸ்தான் பட்டாசு தொழிற்சாலை சாத்தூர் அருகேயுள்ள கீழதாயில் பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. 10 ஏக்கர் பரப்பளவிலான நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். 50-க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று பட்டாசு தொழிற்சாலை 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் இயங்கியது. முழுக்க முழுக்க பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படும் இந்த ஆலையில் தொழிலாளர்கள் வந்து வேலையை தொடங்கினர். முன்னதாக மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, உராய்வு காரணமாக திடீரென்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

    இதையடுத்து அருகில் இருந்த அடுத்தடுத்த அறைகளுக்கும் தீ பரவியதுடன், அதிக சத்தத்துடன் வெடித்து சிதறிய பட்டாசுகளால் 16 அறைகள் இடிந்து தரைமட்டமானது. விபத்து நடந்த பட்டாசு ஆலையில் இருந்து பல மீட்டர் உயரத்திற்கு புகை கிளம்பியது. அதே போல் வெடிச்சத்தம் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்டுள்ளது.

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் பட்டாசு ஆலைக்கு திரண்டு வந்தனர். மேலும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். அதன்பேரில் சிவகாசி, தாயில்பட்டி, சாத்தூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து சிதறியதால் அருகில் மீட்பு பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இதில் விபத்து நடந்த அறைகளுக்கு அருகே பலத்த காயங்களுடன் போராடிய ராஜசேகர், ராஜபாண்டி, கண்ணன், கமலேஷ், ராஜேஸ் ஆகிய 5 பேரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதையடுத்து ஜே.சி.பி. எந்திரங்கள் உதவியுடன் இடிபாடுகளை நீக்கி பார்த்தபோது அங்கு பனையடிப்பட்டி பகுதியை சேர்ந்த பாலகுருசாமி என்பவர் சிதறிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    அடுத்தடுத்த அறைகளிலும் மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. அவை முழுமையாக அகற்றப்பட்ட பின்னரே பலியானவர்களின் எண்ணிக்கை தெரியவரும்.

    இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் செண்பகவேலன் மற்றும் போலீசார் அங்கு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மருந்து கலக்கும் பணியின் போது விதிமீறல் நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து பட்டாசு ஆலை போர்மென் லோகநாதனை போலீசார் கைது செய்தனர். அதேபோல் பட்டாசு ஆலையின் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

    கடந்த 1-ந்தேதி சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டியில் கமல்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் பலியானார்கள். அந்த சோகம் அடங்குவதற்குள் சாத்தூர் அருகே மேலும் ஒரு பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையில் அதிகாரிகள் பேக்கரிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
    • உணவு பொருட்களை முழுவதுமாக அகற்றிவிட்டு புதிய பொருட்களை வைத்து சான்றிதழ் பெறவேண்டும்.

    நெல்லை:

    பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பேக்கரியில் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சுடலைமுத்து என்பவர் தனது குழந்தைகளுக்கு பாதாம், முந்திரி, வால்நட் மற்றும் முந்திரி பழங்கள் உட்பட ரூ.2 ஆயிரத்து 198-க்கு பொருட்களை வாங்கி உள்ளார்.

    அதனை வீட்டிற்கு எடுத்துச்சென்று பார்த்தபோது, வாங்கிய முந்திரி பருப்பில் புழுக்கள் நெளிந்துள்ளது. இதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

    உடனடியாக அவர் உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையில் அதிகாரிகள் பேக்கரிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது முந்திரி பருப்பு மற்றும் அத்திப்பழங்களும் கெட்டுப்போன நிலையில் இருந்ததை கண்டறிந்தனர். தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்தனர். அந்த பொருட்களை ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

    அதிகாரிகளின் ஆய்வுக்கு பிறகு, உணவு பொருட்களின் தரத்தில் கடும் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டதால் உடனடியாக அந்த கடை செயல்பட அதிகாரிகள் தற்காலிகமாக தடை விதித்து மூடினர். மேலும் அந்த கடை உரிமையாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளனர். மேலும் தற்காலிகமாக அவர்களின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    உணவு பொருட்களை முழுவதுமாக அகற்றிவிட்டு புதிய பொருட்களை வைத்து சான்றிதழ் பெறவேண்டும். அதன்பின்னரே கடையை திறக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், அந்த கடையில் பொருட்களை வாங்கிய வாடிக்கையாளர் கையில் வைத்திருந்த முந்திரி பருப்பில் வெள்ளை நிற புழுக்கள் நெளிவதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் போலீசார் கண்காணிக்கத் தவறிவிட்டனர் என்று நீதிபதிகள் குற்றம் சாட்டினர்.
    • இந்த வழக்கு வருகிற 21-ந்தேதி மீண்டும் விசாரிக்கப்படுகிறது.

    உத்தரபிரதேசத்தில் குழந்தை கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்து இருந்தனர். இம்மனுக்களை நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் நீதிபதி ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

    அப்போது, ஜாமின் மனுக்களை உயர்நீதிமன்றம் அலட்சியமாகக் கையாண்டது, இதனால் பல குற்றவாளிகள் தலைமறைவாகி உள்ளனர். இந்த குற்றவாளிகள் சமூகத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளனர். ஜாமின் வழங்கும்போது உயர் நீதிமன்றம் குறைந்தபட்சம் ஒவ்வொரு வாரமும் காவல் நிலையத்திற்கு வர வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் போலீசார் கண்காணிக்கத் தவறிவிட்டனர் என்று நீதிபதிகள் குற்றம் சாட்டினர்.

    மேலும், ஒரு மருத்துவமனையில் இருந்து புதிதாகப் பிறந்த குழந்தை கடத்தப்பட்டால், முதல் படியாக அந்த மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்கள், குழந்தை கடத்தல் வழக்குகளில் ஆறு மாதங்களுக்குள் விசாரணைகளை முடிக்க கீழ் நீதிமன்றங்களுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த உத்தரவுகளை அமல்படுத்துவதில் ஏதேனும் மெத்தனம் காட்டினால் அது தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டு நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு வருகிற 21-ந்தேதி மீண்டும் விசாரிக்கப்படுகிறது.

    இதனிடையே, குழந்தை கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவருக்கு ஜாமின் வழங்கியதற்காக அலகாபாத் உயர் நீதிமன்றத்தையும் நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • 26 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    • ஆய்வு செய்வதற்காக மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் 203 நிறுவனங்களை அடையாளம் கண்டுள்ளனர்.

    புதுடெல்லி:

    தரமற்ற, போலி மருந்துகள் தயாரிப்பு மற்றும் விற்பனையை தடுக்கும் வகையில், கடந்த 15 நாட்களாக நாடு முழுவதும் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். மத்திய, மாநில அரசுகளின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் முதற்கட்டமாக 76 மருந்து உற்பத்தி நிறுவனங்களில் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

    ஆய்வின் முடிவில் போலி மற்றும் கலப்பட மருந்துகள் தயாரித்தது தெரியவந்ததையடுத்து 18 நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 26 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் 203 நிறுவனங்களை அடையாளம் கண்டுள்ளனர். இதில் பெரும்பாலான நிறுவனங்கள் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவை. அங்கு மட்டும் 70 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து உத்தரகாண்ட் (45) மற்றும் மத்தியப் பிரதேசம் (23) அடுத்தடுத்த இடங்களில் உள்ளதாகவும், வரும் நாட்களில் இதுபோன்ற ஆய்வுகள் தொடரும் என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர்.

    • அரசு விதிமுறைகளை பின்பற்றா மல் பட்டாசு கடை நடத்தி வந்ததாக 48 கடைகளின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • பட்டாசுக் கடைகளின் உரிமம் இந்திய வெடிப் பொருள் சட்டம் 1884 விதி 138-ன் கீழ் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பழைய பேட்டை நேதாஜி சாலையில் கடந்த மாதம் 29ம் தேதி பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயம் அடைந்தனர்.

    இச்சம்பவத்தை தொட ர்ந்து மாவட்ட கலெக்டர் சரயு உத்தரவின் பேரில், அனைத்து பட்டாசு சில்லரை விற்பனை கடை களில் வருவாய்த்துறையினர் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இதே போல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாகூர் உத்தரவின் பேரில் போலீ சாரும் ஆய்வு செய்து, மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அளித்துள்ளனர். அந்த அறிக்கையின் அடிப்படையில், அரசு விதிமுறைகளை பின்பற்றா மல் பட்டாசு கடை நடத்தி வந்ததாக 48 கடைகளின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து அலுவலர் களிடம் கேட்ட போது, மரக்கடை, வெல்டிங் கடை, குடியிருப்புகள், ஹார்டு வேர்ஸ் கடை, வணிக வளாகங்கள், ஓட்டல்கள், தனியார் மருத்துவனைகள், போக்குவரத்து நிறைந்த, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள், போதிய பாதுகாப்பு மற்றும் அவசர விபத்து காலங்களில் வெளி யேற போதிய வசதிகள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் பின்பற்றாமல் செயல்பட்டு வந்த பட்டாசு சில்லரை விற்பனை கடைகளுக்கு போலீசார் சார்பில் வழங்கப்பட்ட தடையின்மை சான்று ரத்து செய்யப்பட்டு, அறிக்கை அளித்துள்ளனர்.

    அதன் அடிப்படையில், பட்டாசுக் கடைகளின் உரிமம் இந்திய வெடிப் பொருள் சட்டம் 1884 விதி 138-ன் கீழ் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்றனர்.

    மேலும், வருவாய்துறை சார்பிலும் பட்டாசு கடை களில் பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள் குறித்து ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    அரியலூர் மாவட்டத்தில் ஆலோசனை கூட்டம்:விதிமுறைகளை மீறும் பட்டாசு ஆலை, விற்பனையாளர்கள் உரிமம் ரத்து செய்யப்படும்

    அரியலூர்,  

    அரியலூர் மாவட்டத்தில் பட்டாசு உற்பத்தியாளர்கள், பட்டாசு நிரந்தர விற்ப னையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது,

    பட்டாசு உற்பத்தியா ளர்கள் உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவின்படி மட்டுமே வெடி மருந்துகளை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். பட்டாசு தயாரிப்பு தொழிலில் ஈடுபடும் நபர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் வழங்கபட வேண்டும். மேலும் பட்டாசு தொடர்பான பணிகளில் அனுபவமில்லாத உள்ளுர் ஆட்களை எக்காரணம் கொண்டும் ஈடுபடுத்த கூடாது. உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றிட வேண்டும். பட்டாசு தயாரிப்பு தொடர்பான பணிகளில் அனுமதிக்கப்பட்ட அளவு நபர்களை மட்டுமே ஈடுபடுத்த வேண்டும். உரிமத்தில் குறிப்பிட ப்பட்டுள்ள இடஅமைப்பில் மட்டுமே பணிகளை மேற்கொள்ள வேண்டும். தீ அணைப்பான்களை பயன்படுத்தக் கூடிய நிலையில் வைத்திருக்க வேண்டும் முறையாக அதனை தகுந்த காலத்திற்குள் புதுப்பித்தல் செய்திருக்க வேண்டும். உற்பத்தி நிலையத்திற்குள் எந்த ஒரு வாகனத்தினையும் நிறுத்தக் கூடாது உற்பத்தி நிலையத்திற்கு வெளியில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். இதனை தொடர்ந்து கண்கா ணித்திடும் பொருட்டு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு பணிகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.

    உரிமதாரர்கள் உரிமத்தி ல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் கடைபிடிக்க ப்படாமல் மற்றும் மேற்கூடிய நெறிமுறைகளை பின்பற்றாத நேர்வுகளில் உரிமம் ரத்து செய்யப்ப டுவதுடன் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்க ப்படும் எனவும், உரிமம் இன்றி புதுப்பிக்கப்படாமல் உற்பத்தி அலகுகள் மற்றும் விற்பனைக்கடைகள் செயல்படுவது தெரிய வந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.

    இக்கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர்அம்பிகா, அரசு அலுவலர்கள் மற்றும் பட்டாசு உற்பத்தியாளர்கள், நிரந்தர விற்பனையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வருவாய் ஆய்வாளர் சரஸ்வதி மற்றும் அலுவலர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • எந்திரங்கள் மூலமாக கழிவுகள் அகற்றும் உபகர ணங்கள் இல்லாதது தெரிய வந்தது.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதி யில் கமிஷனர் கிருஷ்ண ராஜன் தலைமையில் பொறியாளர் பாரதி, சுகா தார ஆய்வாளர் கோபால கிருஷ்ணன், நகரமைப்பு ஆய்வாளர் சேகர், வருவாய் ஆய்வாளர் சரஸ்வதி மற்றும் அலுவலர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கழிவுகள் அகற்றும் வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தபோது நகராட்சியில் உரிய அனுமதி பெறாமலும், எந்திரங்கள் மூலமாக கழிவுகள் அகற்றும் உபகர ணங்கள் இல்லாதது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வாகன உரிமை யாள ருக்கு அபராதம் விதித்தும், வருங்காலங்க ளில் இது போன்ற நட வடிக்கை யில் ஈடுபட்டால் வாகனம் பறிமுதல் செய்து போலீஸ் நிலை யத்தில் ஒப்படைக்கப்படும் என கடும் எச்சரிக்கை விடுத்த னர்.

    பின்னர் கமிஷனர் கிருஷ்ணராஜன் கூறுகை யில் , நெல்லிக்குப்பம் நகராட்சியில் வீடுகள், கடைகள் வணிக வளா கங்கள் மற்றும் தொழிற்சா லைகளில் கழிவு தொட்டி களை சுத்தம் செய்ய நகராட்சியிடம் அனுமதி பெற்ற வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மனிதக் கழிவு களை மனிதனே அகற்றி னால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது போன்ற செயல்களை தடுக்க நெல்லிக்குப்பம் நகராட்சி சார்பில் 8 பேர் கொண்ட குழுவால் கண்காணிக்கப்படும். இதனை தவிர்த்து யாரே னும் அனுமதி பெறாமல் இது போன்ற நடவடிக்கை யில் ஈடுபட்டால் உரிமம் ரத்து செய்வதோடு, தண்ட னையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • பட்டாசு ஆலை விபத்து குறித்து சாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
    • வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி அறிவிப்பு.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் இன்று காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மேலும், வெடி விபத்தில் 3 அறைகள் சேதமாகியுள்ளதாகவும், சிலர் உள்ளே சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியானது.

    மேலும் பட்டாசு ஆலை விபத்து குறித்து சாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார்.

    வெடி விபத்து சம்பவத்தை தொடர்ந்து, பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.

    • பட்டாசுகளில் தீ பற்றி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
    • 4 பேர் வெடி விபத்தில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியில் அச்சங்குளத்தை சேர்ந்த சகாதேவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்த ஆலையில் தற்போது வெளி மாநில தேவைகளுக்காக பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடந்து வந்தது. நேற்று காலை 4 தொழிலாளர்கள் ஒரு அறையில் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது மருந்துகளில் உராய்வு ஏற்பட்டு தீ பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் பட்டாசுகளில் தீ பற்றி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் ஆலையில் இருந்த 3 அறைகள் இடிந்து தரை மட்டமாயின.

    பணியில் ஈடுபட்டிருந்த அச்சங்குளத்தை சேர்ந்த ராஜ்குமார் (வயது 41), நடுசூரங்குடியை சேர்ந்த மாரிச்சாமி (40), மடத்துப்பட்டி ஆர்.சத்திரப்பட்டியை சேர்ந்த செல்வகுமார் (43), மோகன் (50) ஆகிய 4 பேர் வெடி விபத்தில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த போலீஸ் டி.எஸ்.பி. சுரேஷ்குமார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். தீயில் உடல் கருகி இறந்த 4 தொழிலாளர்கள் உடல்களை மீட்டனர். சம்பவம் தொடர்பாக ஏழாயிரம்பண்ணை போலீசார் மற்றும் தாசில்தார் லோகநாதன் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து ஆலை உரிமையாளர் சகாதேவன், போர்மேன் குருசாமி பாண்டி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 18 கிலோ மெக்னீசியம் சிலிக்கேட் சிந்தடிக் பறிமுதல் செய்யப்பட்டது.
    • மறு உத்தரவு வரும் வரை கடையை திறக்க அனுமதி கிடையாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் சில ஓட்டல்கள் மற்றும் சாலை ஓரங்களில் செயல்படும் பானிபூரி உள்ளிட்ட கடைகளில் பழைய கெட்டுப்போன உணவுகளை பயன்படுத்துவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

    இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி உத்தரவின்பேரில் தூத்துக்குடியில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின்போது தூத்துக்குடியில் உள்ள ஒரு உணவகத்தில் பழைய உணவு எண்ணெய் தூய்மைப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது.

    எனவே 18 கிலோ மெக்னீசியம் சிலிக்கேட் சிந்தடிக் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதை பயன்படுத்தி தூய்மைப்படுத்தப்பட்ட 45 லிட்டர் பழைய உணவு எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் முன்தயாரிப்பு செய்து 12 மணி நேரத்திற்கும் மேலாக பயன்படுத்தாமல் இருந்த 56 கிலோ சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்தியபோது சுகாதாரத்திற்கு கேடு விளைக்கும் வகையில் பழைய பொருட்களை பயன்படுத்திய உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமம் இடைக்கால ரத்து செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    மேலும் மறு உத்தரவு வரும் வரை கடையை திறக்க அனுமதி கிடையாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் உள்ள ஜவுளி கடை வளாகம் மற்றும் சாலை ஓரங்களில் உள்ள பானி பூரி கடை உள்ளிட்ட கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது பானிபூரி கடையில் செயற்கை நிறமிகள் ஏதும் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டறியப்படவில்லை. இருப்பினும் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பானிபூரி மசாலா, உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    ஆய்வறிக்கை வந்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் தெரிவித்தார்.

    ×